அறுவடைக்காலம் கடந்துவிட்டால் போதும், சாந்திமதிக்கு மட்டும், பஞ்சம் தலை விரித்து ஆடிவிடும். அந்தக்கோபத்தில் சமையலறையில் உள்ள சாமான்களை, கதறக் கதற வைப்பதும் எடுப்பதுமாக இருப்பாள். அப்படி ஏகப்பட்ட சட்டி, பானைகள் அவளிடம் உதை வாங்கி இருக்கிறது. அதை ஊர்பார்த்து மெச்ச, குழாயடியிலும் குடங்களை உருட்டுவாள்.

கூட்டுக் குடும்பமாக இருந்தபோது, வறுத்து, கொட்டிக் கவிழ்த்த வற்றலைக் கூட, தேடினாலும் கிடைக்காத திரவியம்போல், அவ்வப்போது வாய்ப்பந்தல் போடடுக் காட்டுவாள்.
“என்னது, இனிப்பே இல்லாம சப்புன்னு இருக்கு”என, கணவன் காபியில் குறை சொன்னதுதான் போதும், “இழவு கொடுப்பானுக்கு வாக்கப்பட்டு, ஓட்டமேயொழிய நடககவே முடியலை” என முறுக்கிக் கொண்டாள்.
பஞ்சம் உண்டோ இல்லையோ, எப்போதும் பிச்சைப் பாத்திரத்துடன் திரியும் சந்நியாசி ஒருவன், வயிற்றுக்கு வஞ்சனை செய்யாத உடம்புடன், வீட்டு வாசலில் நின்றுகொண்டு “அம்மா பிச்சைப் போடுங்கம்மா என, அவள் வரும்வரை, அதே யாசகத்தை பல்லவியாகப் பாடிக் கொண்டிருந்தான்.
“விடிஞ்சா எந்திரிச்சா வீட்டுக்குள்ளேயும், வெளியிலேயும், உங்க தொந்தரவு தாங்க முடியலை”என்று சொல்லியவள், கணவனை ஜாடையாக பார்த்தபடி, பழைய சோற்றை ஒரு தட்டில் எடுத்து வந்து, சந்நியாசிக்குப் பிச்சையாகப் போட்டாள்.
“அம்மா.. அரிசி, பணமிருந்தா ஏதாவது போடுங்க தாயே, உங்களுக்கு புண்ணியமாப் போகும்”
“அது கிடந்திட்டுப் போகட்டும்சாமி, எங்களுக்கே மாடு முக்கிவர, வீடு நக்கிவர இருக்கு, இதிலே காலங்காத்தாலே, நீங்கவேற குலையை உருவுறீங்க”என, வாய்க் கொழுப்பு சேலையில் வடிய, எரிச்சலைக் காட்டிவிட்டு , அவளது பிரதான இடமான சமையலறைக்குள் நுழைந்தாள்.
“இனி என்ன யாசகம் செய்தாலும் இதுதான்”என புத்தியில் உறைக்க, ‘கொடுக்காதவங்க, சினை ஆட்டைக் காமிச்சமாதிரி’, இந்தம்மா சொல்லிட்டுப் போகுது”என, சோரம் போகாத காதுகளுக்கு கேட்கும் குரலில், முனகிக் கொண்டே, அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் சந்நியாசி.
சாந்திமதி பெரிய குடும்பத்தில் பிறந்தவளதான். தலையில் முடியிருந்த அளவுக்கு, மூளை கொஞ்சம் சிறுத்துப் போனதால், கிட்ட வராத படிப்பு… ‘எனக்கென்ன’ என, எட்டத்தில் நின்றது. இதனால் எட்டிய தூரத்தில் இருந்த, அடுக்களையே உசிதம் என, வேறு வழியின்றி சமையலறையைக் கையாண்டாள். அவள் நுழைந்த அடுக்களையில், உப்பில்லை, புளியில்லை என்ற வறுமை இலலாததால், வேலைப்பளு தெரியவில்லை.
இருந்தாலும், அதே வளாகத்தில், எதிரே இருந்த பங்காளி வீட்டில், அவ்வப்போதுகூட, பஞ்சப்பாட்டு கேட்காததால், நிறையவே நொந்து போயிருந்தாள். போக்கற்றவனாக இருந்தாலும், தனது கணவனை ஒரு அமைச்சர் அந்தஸ்துக்கு உருவாக்க வேண்டும் என்ற ஆசை, ரொம்பக் காலமாக, அவள் உள்ளக் கிடக்கையில் இருந்ததுபோலும்… பாவம், அரசியல் தலைமைகள், அவளது ஆசைக்கு செவி மடுக்காத்தால், நிதர்ஷனமாகவில்லை. யாரைக் குற்றம் சொல்ல முடியும்?
“ஊர்மாடு பால் கறக்கிறது, நீ கொடுக்கிறாய், நா குடிக்கிறேன்”என, ‘சிவனே’ என, காலத்தை கழித்துக் கொண்டிருந்தான், அந்த நாதியற்றுப் போனவன். இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல், அவன் பெருமைகளை கட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள் சாந்திமதி. நல்லவேளை… அதைச் சிலர் நம்பினார்கள். அவள் சொல்லும்போது கண்களை விரித்து”அப்புடியா”என அவ்வப்போது உச்சுக்கொட்டி, அவளது ஆதங்கத்தையும், குறைகளையும் கேட்டு, அவளையும் ஒரு மனுஷியாக சிலர் மதித்தார்கள்.இதில் அவளுக்கு ஒரு ஆறுதல். அபிமானம்..
அடுத்தநாள் காலையில், மொத்த குணாம்சங்களிலும் முழுமையாக மாறிப்போனவளைப்போல, கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளைக் கேட்டுக்கேட்டு செய்தாள். அப்போது செல்போன் அலறியது. எதிர் முனையில் பேசியவன்”கணேசன் போய்ச் சேந்திட்டான்”என கரகரத்துப்போன குரலில் சொன்னான்.
“சாந்தி இங்கே வா, ஏ.பி.பி பையன் செத்துப் போனானாம், போய்ட்டு வந்துடலாமா?”
“பாத்தியளா கொடுமையை, இந்த வயசுல, தொங்கத் தொங்கப் போட்ருந்த,அவ தாலிய, அறுத்திட்டானே பாவிப்பய…நம்ம புள்ளைக்கு, அவளைக் கல்லாணம் பண்ணி வெக்க, எவ்ளோ போராடுனோம்..கேட்டாளுகளா, இப்ப யோசிக்கட்டும். சரி வாங்க போவோம்”என, புறப்பட்டுச் சென்றார்கள்.
அந்தி சாய்ந்த நேரத்தில் வந்த அவர்கள், காபி குடித்தார்கள். இது அலைச்சலுக்கான அசதியைப் போக்குமாம்.இப்போது பங்காளிகள் மடியில், கை வைக்கும் உத்தி பற்றி கேட்டாள் சாந்திமதி.
“என்னாச்சுங்க நாம அன்னைக்கு பேசிக்கிட்டது?”
“எல்லா வேலையும் நடந்துக்கிட்டிருக்கு.. வாத்தியானும், ஜேபாலு பையனும் இதுலெ உறுதியா இருக்காங்கே, நீ வேற சொல்லிட்டே… அந்தப்பயலுக, நாம கேக்குற போதெல்லாம், கைமாத்து கொடுதது உதவுறாங்கே…அதனாலே உன்னோட பங்காளிகளை பதற விட்றலாம், அதுக்கான வேலையைப் பாக்கத்தான், உடம்புக்குச் சுகமில்லாத இந்த நேரத்துலேயும், வயித்தை தூக்கிட்டு அலைஞ்சின்டு இருக்கேன்”
“சரிங்க ஏதாவது பண்ணிடுங்க, நாங்க சரியா இருக்கோம், போனவாரம் வந்திட்டுப்போன, பேச்சியம்மாட்டே கூட இதைபத்தி பேசுனேன். பெரிய வீடு நமக்குத் தேவை இல்லைனு சொல்லிட்டேன், அவளும் சரின்னு ஒத்துக்கிட்டா, நமக்கு ஏங்க, இங்கே வீடு. நம்ம புள்ளைங்க மெட்ராஸ்லே, டாட்டா பிர்லாமாதிரி இருக்காங்கே, அந்த தைரியத்துலேதான் அப்புடிச் சொன்னேன்”
“அப்டியா.. முடிச்சிடலாம். வீடு வேண்டான்னா, நீ உன்னோட புள்ளைக வீட்டுக்கு போய்டுவே, அப்போ நா என்ன செய்றது?
“நீங்களுந்தான்.. உங்களை விட்டிட்டா போகப்போறேன்?”
“சரி, பெரிய பையன் எவ்ளோ பேரை வச்சுத் தாங்குவான் . ஏற்கனவே, அவனோட மாமனும், மாமியாளும், அங்கே டேரா போடுறாங்க, நாம எப்புடி அங்கே போறது?”
“ஏங்க.. மாமனுக்கும் ஐத்தைக்கும் பிரயாசைப்பட்டு, காலு கழுவி விடுற புள்ளை, நமக்கு பைப்புலே வர்ற தண்ணிய, எறச்சுக் கூடவா விட மாட்டேன்னு சொல்லப் போறான்”
“நீஞ்சொல்றது சரிதான். நாம கெளம்புவோம், இப்ப உன்னோட சின்னாத்தா வீட்டுக்கு கொடுக்கப்போற சிக்கல்ல, யாரும் குறுக்க வரமாட்டாங்கள்ல”
“இப்ப இருக்குற சின்னாத்தா பசங்க ரெண்டு பேருக்கும், காபியும், உப்புமாவும் கொடுத்தா போதும்.. தேனாமிர்தமா இருக்குன்னு சொல்லுவாங்கே, அதோட அந்தப் பசங்களைக் கவுத்திடலாம். இன்னோன்னு இருக்கு…மெட்ராஸ்ல இருந்து இங்கெ வந்து கெடக்கான்ல, அவனை லூசுன்னு சொல்லி, ஊரோட நம்ப வச்சுட்டேன்”
“சரியான கில்லாடியா இருக்கியே, இதை எப்போ நடத்துனே?”
“நம்புறதுக்கு ஆளு இருக்கும்போது, சொல்ல வேண்டியதுதானே, அந்தப்பய காலைலேயும், சாய்ங்காலமும் வயலே கதின்னு கெடக்குறாங்க, இவனாலே ஒரு காசு செலவில்லை அவளுகளுக்கு, இன்னோன்னு, நேத்து மத்தியானம், மருதுழவந்தான் வயல்ல, அவங்களோட பனைமரத்துலை தீயைப் போட்டுக்கிட்டு இருந்தேன், கொஞ்ச நேரம் விட்டிருந்தா, மளமளன்னு புடிச்ச தீயில, மரம் விழுந்திருக்கும்.. அந்த நேரம் பாத்து, அங்கே வந்த அந்தப்பய, மண்ணைப்போட்டு அணைச்சுட்டாங்க… இப்படியிருந்தா யாருக்குததான் கோபம் வராது, மரந்தானே எரியட்டுமுன்னு விட்ருந்தா, புத்தியோட இருக்கான்னு சொல்லலாம்.. அந்த தீயை அணைச்சுதுனாலே, அவனுக்கு லூசுன்னு ஒரு பட்டத்தைக் கட்டிட்டேங்க”
“படிச்சிருந்தா உன்னோட லெவலே வேற மாதிரி இருந்திருக்கும்போல.. குடும்பங்கலக்குறதுலெ, இவ்வளவு புத்திசாலியா இருக்கியே எப்படி அது?”
“பாகப்பிரிவினை வரும்போது, வித்து சாப்புடறதுக்காக அம்மத்தாவோட ( அம்மாச்சி), வெள்ளிச் சாமானயெல்லாம், மொத்தமா ஆட்டையப் போட்டேன். தம்பி ராசுப்பயலை கையில வச்சிக்கிட்டு, சொத்தையும் நமக்கு, கூடுதலா பிரிச்சுக்கிட்டோம். இதோட சும்மாவா இருந்தேன். அந்தப் போக்கத்த சிறுக்கி சாந்தா மூலமா, மிளகாய் கொல்லையிலேவேற பிரச்சினையை உண்டு பண்ணிருக்கேன். இதுக்கெல்லாம், என்னோட தம்பி ராசுக்கு, நாஞ்சொன்ன ஐடியாதாங்க.. சும்மாயில்லை.. நாங்களும் பெரிய டுப்பா டக்கருங்க””என, முகத்தை ஆட்டி, விசிறிய முடி முன்னால்விழ, வேலு நாச்சியார் போன ற வீராப்பைக் காட்டினாள்.
“அப்புடியா, உங்க அக்கா எப்படி, இந்த விசயத்துலே உன்னோட சேரலையா?”
“ஏங்க அதையும் சேத்திருந்தா, இப்ப நமக்குள்ளே தனியா உலை வைக்கும்போது, பிரச்சினைதா வந்திருக்கும், அக்கா மக்களும், அககா மாதிரியே முடுமையாத்தான்(முட்டாளா) இருக்காளுக, அப்படி இருக்கிறவரை நமக்குப் பாதகம் இல்லேன்னு, நாம நிம்மதியா இருக்க வேண்டியதுதாங்க”
இதைச் சொல்லத் தொடங்கியபோது, சாந்திமதியிடம் லூசு( பைத்தியம்) என்ற அரிய பட்டததைப் பெற்ற, பங்காளி வீட்டுப் பையன், “பாதகம் இருக்காதுங்க”என சொல்லி முடிக்கும் போது, “”அடி ஆத்தி”என, சாந்திமதி வீட்டு வாயிலை கிராஸ் செய்தான்.
பத்தடி நடப்பதற்குள் ,என்ன நினைத்தானோ தெரியவில்லை. திரும்ப வந்தவன், வாயிற்படியில் உட்கார்ந்து தண்ணீர் அருந்திவிட்டுச் சென்றான். திருஷ்டி கழிப்புக்கான ஆஷாட அனுஷ்டானம்போல… ம்ம்.. ஹூம்ம்..
பங்காளி வீடு மட்டுமல்லாமல், பெற்ற மகள்கள் இரண்டு பேரில், பாரபடசம் பார்க்கும், ஒரு குடும்பத்தலைவி சாந்திமதி். அவளது பழிவாங்கும் போக்கில், முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து, சோரம் போய்க் கொண்டிருக்கிறது. சம்பாதிக்கவும் சேமிக்கவும் துப்பில்லாத அவளிடம், குடும்ப விவகாரங்களை யாரும் இப்போது சொல்வதில்லை. அவளது முகத்தில் விழிக்கவே அஞ்சி ஒதுங்குகிறார்கள். அப்போது பார்த்தும் பார்க்காததுமாகச் சென்ற பெண்களை, சாந்திமதியின் கணவன், “என்ன இந்தப் பக்கம் திரும்பாமே போறீங்க”என்றான்.
“ஒண்ணுமில்லே அவசரமாப் போறோம் என்றாள் ஒருத்தி. பக்கத்தில் சென்றவள், “அவருக்கென்ன, வேலையத்த ராமரு அவரு, கழுதையப் போட்டுககூட சிரைப்பாரு, யாரும் கேட்க மாட்டாங்க.. நாம அப்படியா..? வேலை பாத்தாத்தான் கஞ்சி, வாங்கடி போலாம்….
“அதுவொரு பேச்சுப்புடிச்ச நாயிடி, அதுனாலதான் வேட்டைக்கு உதவாம இருக்கு, கோட்டாளா வீட்டு சோத்தைச் சாப்புட்டுத் திரியிறவரு, அந்த வீட்டுக்கே உலை வசசுண்டு இருக்காரு, வாக்கப்பட்டு வந்தவரு வைக்கிற உலைதானே, அப்டீனு அவங்களும் பெருந்தன்மையா இருக்காங்கபோல”
“என்னடி புதுசா எதையோ கிளப்புறே?”
“இந்தாளு கிட்டத்தட்ட நாதியத்துப் போனவராம்டி… அங்கே ஒண்ணுமில்லையாம், ஆனா வயிறு பெருசா இருக்கவும், நாங்க பெரிய எடமுன்னு சொல்லிக்கிட்டு திரியிறாரு. அதையும் இங்கே இருக்கிற விதியத்த செம்மங்க இன்னும் நம்புறாங்கே”
“என்னடி செய்யமுடியும், சண்டைக்கா போக முடியும், ஏதோ புதுசு புதுசா சொல்றியே என்னது. அது?”
“அவரோட பொண்டாட்டி ஒரு பைத்தியக்காரிடி..அவ பேச்சைக் கேட்டுக்கிட்டு, இந்தாளு ஏதோ, இங்கே பொறந்தவன்மாதிரி, பண்றானாம்டி. ‘கோழி களவாணிப்பய,குடங்கெடச்சா விடுவானா’, அதான் அழகம்மாளோட சொத்தையெல்லாம், கொஞ்சம் கொஞ்சமா சூறையாடிட்டு இருக்கானாம்”
“பெரிய வயித்தெரிச்சலா இருக்கேடி, கேக்க ஆளில்லையா..?
“இந்தாளு உடம்புக்குச் சரில்லாம இருக்காருடி, கேக்கும்போது சண்டை வந்து, ஏதாவது ஆயிட்டா, பிரச்சினைதானடி, அதான், ஏதோ பண்ணட்டுமுன்னு, விட்ருக்காங்கே போல’ என, உச்சுக் கொட்டிக் கொண்டே நடந்தார்கள்.
“இந்த ஊர்க்காரங்கெ எப்பவுமே, அந்த வீட்டோட முட்டிட்டுத்தான் குனிவாங்கே, இப்பவும் அப்டித்தான் நடக்கும்போல.. பாக்கலாம்.. இந்தப் பிரச்சினையை பேசி, நாம பொழுதைப் போக்கலாம்ல”என நடந்து கொண்டே, ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
ஏனென்றால், அவர்கள் உழைத்துச் சம்பாதிப்பவர்கள்.பணம் , அங்குலம் அங்குலமாக சேர்த்த சொத்தின் அருமை தெரியும் அவர்களுக்கு. அதனால் அனைவரின் முகத்திலும், சிரிப்பு இருந்ததே தவிர, இந்த விவகாரத்தில் மனம் புழுங்கியதற்கான ஆதங்க ரேகை இழையோடியது. சாந்திமதி கெட்ட எண்ணத்தில் கவனமாக இருக்கிறாளே தவிர, முக்கியத்துவததில் இல்லை. அவளுக்குப் பிறகு, பிறந்த இடத்தில், பேரன் பேத்திகளின் எதிர்காலம்தான், கேள்விக்குறியாக நிற்கிறது. மரித்துப்போனபிறகு சமாதி உண்டோ இல்லையோ, போட்டோவைப் பார்த்துககூட நினைவுபடுத்திக் கொள்ள இயலாத அளவுக்குச் செய்து கொண்டிருக்கிறாள் துரோகததை. தன்னையறியாமல், தன் வழி வாரிசுகளை வஞ்சித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு,’ நாம் மரணத்தை வென்ற மார்க்கண்டேயி அல்ல’ என்பதுமட்டும் விளங்கவில்லை.
அவளுடன் இந்தக் குடும்பம் அழிய வேண்டும் என்ற, வைராக்கியத்தை வரித்துக் கொண்டதைப்போல, நிலைமை எல்லை மீறிவிட்டது.
ஒருநாள் சாந்திமதியிடம் பேசிக் கொண்டிருந் உறவுக்காரப் பெண் ஒருத்தி, “நித்தம் சாவாருக்கு யாரு அழப்போறா”என்று, பேச்சுவாக்கில் யாரையோ சொன்னாள். சாந்திமதியின், குழந்தைகள் காதில் விழுந்த இந்தச் சொலவடை, கஷ்டங்கள் சூழும் பொழுதெல்லாம், அசரீரியாக கேட்கிறதாம். இது யாருக்கு என்று…? இருக்கட்டும், ஆனால் அவர்களும், அப்பன், ஆத்தாளின் குணத்தை அப்படியே, பின்பற்றுவது போல, அவர்கள் செய்யும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கவில்லை. சொத்தைச் சேர்த்து வைத்துவிட்டு, மாண்டுபோனவர்களின் ஆத்மா கேட்கட்டும் என்றுகூட இருக்கலாம். பாவம்…சின்னஞ்சிறுசுகள்..!!
If you think, that there are some lives like this, life is bitter. I have heard many similar problems. Good story
Hi,
Similar incidents are happening in my village too. Heard through my brother. True story is as depicted. Thanks to short story site for, publishing this story
JamunaRajesh