கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 5,320 
 
 

(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பட்டு திரை விலகியது.

செரீனா புடைவை ஆலை முதலாளி அல்ஹாஜ் ஜெப்பார் ஜே.பி. பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளியே வருகிறார். ஹாஜியாரின் அந்தரங்க செயலாளர் பளீல் நின்கிறான்.

“வா பளீல், வா! ஒன்னத்தான் நெனச்சன். எங்கயன் இவ்வளவு நாளும் போன? ஆளை காணவில்லையே….” சாய்வு நாற்காலியில் அமர்கிறார்.

“நாலு குதிரகள் செலக்ஷன் பண்ண நேரம் போன. பாருங்கோ ஹாஜியார், இண்டைக்கு ராணி கப்டனெலியோ? நான் சுவர் ‘வின்’ புடிச்ச…” என்கிறான்.

“நீ புடிச்சா செல்ல வேண்டுமோ, இங்க தா தாளப் பார்க்க, ஸ்…..ஷ்….. ஜாதி குதிர. நாலும் நூறு நாறாக நானூறு ரூவா அடிச்சி. இன்னும் நூறு போட்டா சுவர் பதினையாயிரம் தான்.” பொய்ப்பல் முப்பத்திரண்டும் வெளியே தெரிய சிரிக்கிறார்.

“இந்தாங்கோ… சல்லி…. – நான் சென்ன மாதிரி ஜெமாலுக்கிட்ட போட்டுட்டன். இன்னொரு செய்தி ஹாஜியார்… எனக்கு…” என தலையைச் சொரிகிறான். “ஒங்கட பொடவ மோல்ல ஒரு வேள வேணும்.

“பைத்தியமோ ஒணக்கு….? எண்டக்கும் இல்லாம்…. – எனத்துக்கன் ஒனக்கு வேள…”? என்றவாறே கல… கல… எனச் சிரிக்கிறார்.

“எனக்கல்ல ஹாஜியார்….. ஏண்ட தங்கச்சிக்கு….”

“ஓண்ட தங்கச்சியோ…? அது தாரன்…?” ஹாஜியார் ஆச்சரியத்துடன் கேட்கிறார்.

“நான் சென்னெலியோ…. மாப்புள மௌத்தான தங்கச்சி ஒண்டு இருச்சியண்டு, அதுக்குத்தான். இவ்வளவு காலமும் தாத்தா ஊட்டுல இருந்த, போன கிழமதான் இங்க வந்த..”

“அப்படியோ! நீ சென்ன வேலய நான் இல்ல எண்டு சொல்லி இருச்சியோ? கூட்டிக்கொண்டு வாவே.”

“இப்ப கூட்டிக்கொண்டு வரவோ….?”

“சரி…. சரி… போ…”

பளீல் போகிறான். ஹாஜியாரின் யோசனை பலமாக சுழல்கிறது. ஊரில் அவர் வேலைகளை சாதாரண ஒருவன் செய்தால் கல்லால் அடித்துத் துரத்துவார்கள். ஹாஜியார், ஜே.பி. நாமங்களுக்கும் அதற்கும் மேலாக பணமும் கௌரவத்தையும் அந்தஸ்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

“ஹாஜியார்… ஹாஜியார்…”

வாசலில் பளிலும் அவன் தங்கையும் நின்று கொண்டிருந்தனர்.

“வா…. பளில்… வாங்கோ!” என தன் பொய்ப் பற்களெல்லாம் வெளியே தெரிய வாசலிலே வந்து வரவேற்றார். ஹாஜியாரின் கழுகுக் கண்கள் அவளையே வட்டமிட்டன.

கண்களை இமைக்காது பார்த்துக்கொண்டே இருந்தார். அவர் பார்வையை தாங்க முடியாத நபவி பளீலின் பின்னால் போய் மறைந்து கொண்டாள்.

“வெட்கப்பட வேணாம் புள்ள…பளீலையும், என்னையும் வேறாக நெனச்ச வேணாம்…இப்படி இறீங்கோ …” என அசடாக சிரித்தபடியே –

ஹாஜியார் கூறுகிறார்.

“ஹாஜியார் இதுதான் என் தங்கச்சி” என்றான்.

“பார்த்தா தெரியவில்லையோ…? லட்சணமாக இருக்கிறா – நீ சரியான மடையன். இந்த நேரத்தில் இப்படி கூட்டிக்கொண்டு வாரோ? வௌன காட்டியும் கூட்டிக்கொண்டு வந்தா சரிதானே….” – இடத்துக்கு தக்கவாறே பேசுகிறார்.

“நீங்க தானே ஹாஜியார் கூட்டிக்கொண்டு வரச் சென்ன…? அதுக்கு தான் இப்ப கூட்டிக்கொண்டு வந்த.”

“நான் சொன்ன தான். எல்லாருக்கும் செல்லிய போல நான் சென்னா நீயும் கூட்டிக்கொண்டு வரவேணுமோ? சரியான ஆள். நாளைக்கு போயா நாளெலியோ…. நாளண்டைக்கு கூட்டிக்கொண்டு வா…

“அப்ப… நாங்க….. போய்திட்டு வாரோம் ஹாஜியார்.”

“சரி…. சரி…. பளீல் நீ இவங்கள உட்டுட்டு, சுருக்கா , வா… ஒனக்கிட்ட ஒரு செய்தி பேச வேணும். கட்டாயம் சொனங்காம வா.’

“நல்லம் ஹாஜியார்.” பளீல் தன் தங்கையை அழைத்துக் கொண்டு வெளியேறுகிறான். நபவியின் சதைப்பிடிப்பான அங்கங்களில் உன்மத்தம் பிடித்த ஹாஜியார், வாயைப் பிளந்தபடியே சாய்வு நாற்காலியில் சாய்கிறார்.

அடுத்த அரை மணி நேரத்துக்கெல்லாம் பளீல் வந்துவிட்டான். “எனத்துக்கன் ஹாஜியார் சுருக்கா வரச்சென்ன…?”

“ஒன்றுமில்லை … பளீல்…. ஒரு சின்ன விஷயம்…. இங்க வா…” அழைத்துச் சொல்கிறார். “ஒனக்கிட்ட செல்ல கூச்சம்” என ஆரம்பித்த ஹாஜியார் சிலிர்ப்புடன் முற்றுப் பெறாத தொனிச் சிரிப்பையும் சிரித்து வைத்தார்.

“சும்மா சொல்லுங்க ஹாஜியார்… எனக்கு தெரியாத ரகசியமோ..?” என்றான் பளீல்.

“இல்ல….ஓண்ட தங்கச்சி சின்ன வயசு. எத்தனை புள்ளையள்? இந்த வயசுல தொழில் செய்ய வேணுமோ? பேசாம ஒரு கலியாணத்த முடிச்சு கொடே.

“நானும் எத்தனையோ தரம் சென்ன. கேட்க இல்லை அவள்ட ஒரு புள்ளையையும் வளர்த்துக்கொண்டா போதுமாமம்.”

“அப்படியோ….கொஞ்சம் காலம் போனா புரியப்படும். நல்ல பசுந்தா இருச்சிய…ஹாஜியாரின் மிடுக்கிழந்த குரல், அப்படியே தொடராமல், நின்றது. கண்கள் அசையாது பளீலை நோக்கின.

ஹாஜியார் ‘நல்ல பசுந்து’ என்றால் போதுமா, அதற்கொரு காரணமில்லாமலில்லை. இதை பளீல் அன்றி யாரும் புரிந்துகொள்ளவும் மாட்டார்கள்.

“ஹாஜியார்…அது ஏண்ட தங்கச்சி…” என்றான் பளீர்.

“அதனால்தான் சென்ன. தலைபோற காரியமல்ல; பெறகு பேசாம ஒரு கலியாணத்தையும் முடிச்சு கொடுத்திடுவோம்… செலவு எல்லாத்தையும் நான் பாத்துக்கொல்லியன்…. ஓண்ட செலவுக்கு இப்பவுக்கு இத வெச்சுக்கோ….” என்றவாறே ஐம்பது ரூபா தாள் ஐந்தைக் கொடுக்கிறார். எந்த நாளும் ஐந்து, பத்துக்கு மேல் கொடுக்காதவர் இண்டைக்கு ஐம்பது ரூபா ஐந்தைக் கொடுத்ததும் அவனுக்கு தலைகால் புரியவில்லை … பணத்துக்காக பாசத்தையும் விலை கூற துணிந்துவிட்டான்.

“சரி…. ஹாஜியார்…நான் எப்படி…?

“நீ இதுக்கு தூது போக வேணாம். நான் பாத்துக்கொல்லியன். நாளக்கு போயா எலியோ..நான் ஐடியா செல்லியன்” என்றவாறே அந்தரங்கமான இடத்திலேயும் அவன் காதில் இரகசியமாகக் கூறுகிறார்.

அடுத்த நாள்….. காலை நேரம். – அப்பொழுதுதான் காலை ஆகாரத்தை முடித்துக்கொண்ட பளீல், திண்ணையில் தன் குழந்தைக்கு தலை சீவிக் கொண்டிருந்த நபவியைப் பார்த்து “தங்கச்சி நீயும் வாரோ…?” என்றான்.

“எங்கைக்கண் நாநா…?”

“இண்டைக்கு நல்லொரு பைசிகோப் – போட்டிருச்சியாம். மதினி ஒரே கரச்சல், பத்துமணி ஷோ பாக்கோம் எண்டு. நீயும் வாரோ…?” வ “எனக்கு என்ன சந்தோஷம் நாநா…? நீங்க பெய்த்திட்டு வாங்கே.”

பளீல் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு – நபவியின் பிள்ளையுடன் வெளியேறுகிறான். சிறிது நேரத்தில் வாசலில் “பளீல்….. பளீல்….” என்ற சப்தம் கேட்டு குசினியில் வேலை செய்து கொண்டிருந்த நபவி “வாறன்…” என்றவாறே வாசலுக்கு வருகிறாள்.

வாசலில் தன் அழகிய பல்லு செட்டைக் காட்டியபடி, கம… கம… என செண்டின் நறுமணம் வீச “பளீல் இல்லையோ….?” என்கிறார் ஹாஜியார்.

ஹாஜியாரைக் கண்டதும் தலையில் முக்காட்டைப் போட்டு, உடம்பையும் புடைவையால் மூடிக்கொண்டு… “இல்ல…… வெளியே போன” என்கிறாள்.

“அப்படியோ….” எனக் கூறியவாறே அழையா வீட்டுக்குள் நுழைந்த விருந்தாளி மாதிரி உள்ளே வந்து உட்கார்ந்து கொள்கிறார்.

“புள்ள.. இப்படி வெக்கப்பட வேணாம்…. நாளைக்கு எனக்கிட்ட வேலைக்கு வார நீங்க இப்படி இருக்கசடு எலியோ….. ஒங்கட வேல விஷயமாகத்தான் பேச வந்த, பளில் இல்ல; அவன் இல்லாம இருந்தது மிச்சம் நல்லம். இத நீங்க வெச்சிக்கொங்க….. பத்து ரூபா நோட்டை நீட்டியவாறே எழுந்து அவள் கையைப் பிடிக்கிறார். அவளுக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. தன் உடல் பதற வெடுக்கென கையைத் தட்டிவிடுகிறாள்.

“இதுக்கெல்லாம் பயப்பட வேணுமோ புள்ள? இங்க ஒருத்தரும் இல்ல; எனக்கும், ஒனக்கும் தெரிஞ்சதுதான். நான் ஒனக்கு சல்லி, தங்க ஓடம் எல்லாம் தாரன்” எனக் கூறியவாறே அவளை நெருங்குகிறார்.

அவளுக்கோ வெட… வெடவென்று உடல் நடுங்கிற்று. இருதயமே விண்டு வெடித்து விடும் போல நாடி நரம்புகள் எல்லாம் பதறித்துடித்தன. தன்னை நெருங்கி வரும் ஹாஜியாரின் கன்னத்தில் “பளார்” என அறைந்து விட்டு அந்த வேகத்தில் “சீ…. நீயும் ஒரு ஹாஜியார்…” என்றவாறே வெளியே பாய்ந்து விடுகிறாள்.

– காமவெறி தலைக்கேறிய ஹாஜியாருக்கு அவள் கொடுத்த அறை ஆத்திர வெறியை கிளப்புகிறது. அவமான உணர்ச்சி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறது. வெளியேறியபடியே… “சீ… பிச்சைக்கார நாய்களின் திமிரைப் பாக்காட்டி, ஏண்ட உப்ப திண்டிட்டு எனக்கே வெளாடப் பார்க்கிறாங்க. அவன் வரட்டும் நான் கேட்டுக் கொல்லியன்” எனக் கூறுகிறார்.

‘அவன் வரட்டும் நான் கேட்டுக் கொல்லியன் என கடைசியாக ஹாஜியார் கூறிவிட்டுச் சென்ற வார்த்தை அவள் எண்ணச் கழலில் சுழல்கிறது. பணத்துக்காக பண்பை இழக்கக் கூடியவன் பளீல் என்பதை கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் இன்று பணத்துக்காக பாசத்தையும் விலை கூறத் துணிந்துவிட்டானே….. யா…. அல்லாஹ் என்றவாறு கட்டிலில் போய் விழுகிறாள் நபவி. விரும்பிய மட்டும் அழுதாள். கண்ணீர் அவள் ஆத்திரத்தைக் கழுவவில்லை. எதற்கும் ஒரு முடிவோடு எழுந்து நிற்கிறாள்.

பிற்பகல் — காலைக்காட்சி பார்த்து விட்டு வீடு திரும்பிய பளீலுக்கு ஆச்சரியமாக இருந்தது. குற்றமுள்ள மனம் அல்லவா? அவன் பேச்சில் அவசரம் தொனித்தது.

“தங்கச்சி ஏத்தியன் ஒரு மாதிரி இருச்சிய…?” என்றான்.

“ஒன்றுமில்லை நானா…..”

ஒன்றுமில்லையோ…. ஆசரி . நான் போனப் பொறகு தாரு சரி வந்தோ? ”

“இல்ல.. ”

“ஹாஜியார் வர இல்லையோ…..?”

இந்த வார்த்தை அவளுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போலிருந்தது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு….. “ஓ…. நாநா’ என்கிறாள்.

“ஏத்தியன் சென்ன….?”

“இதுதான் சென்ன” – பழைய செருப்பால் அவன் கன்னத்தில் விளாசுகிறாள். பளீலும் அவன் மனைவியும் விக்கித்து நிற்கின்றனர்.

“சீ…. நீயும் ஒரு நாநா….” எனத் தன் பிள்ளையை கையால் பிடித்த படி வெளியேறுகிறாள் நபவி.

அவள் நடந்து கொண்டே இருந்தாள்….துணிவைக் கைவிடாமல்!

– இன்ஸான் – 1968, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

என்னுரை அன்பும் அருளும் விழுமிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்...... இனிய உள்ளம் கொண்ட வாசக பெருமக்களே, உள்ளே புகுந்து சுவைக்க முன், என் உள்ளத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நீண்டகால அவாவொன்று இன்று நிறைவேறுவதையிட்டு முதற்கண் என்னைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனுக்கே நன்றி நவில்கின்றேன். தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு நாலு தசாப்த காலம் நான் எழுதிய சிறு கதைகளுள் பலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதையிட்டு என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *