பேய்க்கொட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2024
பார்வையிட்டோர்: 162 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கள்ளிக்காட்டில் இருந்தது சித்தி வீடு. நமசு ஊரில் இருந்து காகம் பறக்கும் தூரத்தில் இரண்டு மைல். சைக்கிளில் போவதென்றால் அரைமணிக்கூர் ஆகாது. நமசுக்கு சைக்கிள் ஓட்டத்தெரியாது, பதினொன்றாம் கிளாஸ் படிக்கும் பையன் என்றாலும்.

நடந்து போனால் ஒன்றேகால் மணிநேரத்தில் போய்விடலாம். ஊரில் இருந்து அரை மைல் தெற்கு நோக்கிப்போனதும் முடவன் பாலம் தாண்டி, இடதுகைப் பக்கம் பத்துக் காட்டின் வாய்க்கால் ஓரம் பெரிய வரப்பில் அகன்ற காலடித்தடம், நேரே போனால் முள்ளிக்குளம் பிராமணக்குடியின் புறவாசலில் கொண்டுவிடும்.

சுடலைமாடன் கோயில் கொடை பார்க்க நமசு வியாழக்கிழமை புறப்பட்டபோது வெயில் முகத்துக்கு நேராக அடித்துக் கொண்டிருந்தத்து. அறுவடை முடிந்துவிட்ட வயற்காடுகள் கோடைக் காய்ச்சலுக்குக் கிடந்தன. ஊரை அடுத்த பத்தில் உளுந்து விதைத்து நான்கு இலைகள் வந்திருந்தன.

இடது கையில் இருந்த காகிதத் துணிப் பையை வலது கைக்கு மாற்றிக் கொண்டு நமசு பிராமணக்குடி தெருவில் ஏறினான்.பையில் ஒரு நிக்கரும் அரைக்கை உடுப்பும் மடித்துச் செருகி இருந்தான்.

பிராமணக் குடி, பெருமாள் கோயிலின் இருபுறமும் சடாயு சிறகுகள் போல் நீண்ட அகலமான தெரு. காலை நேரத்தில் பிராமணாள் வீடுகளிலிருந்து வரும் பருப்பு தாளிக்கும் மணம், தேங்காய் எண்ணெயில் பப்படம் வறுக்கும் வாசனை போன்றவை சாயங்கால நேரத்தில் இல்லை. அடுத்தது வெள்ளாங்குடி விறுவி றென்று நடந்து வடக்குத் தெரு வழியாக நாடாக்குடி தாண்டி ரோட்டில் ஏறினான்.

இடதுகைப் பக்கம் முள்ளிக்குளத்தின் தண்ணீரலைகள் ரோட்டின் கரையை நனைத்தன. கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலும் குளத்தில் நிறையத் தண்ணீர் கிடந்தது. வலது புறம் ஓடையும், ஓடையைத் தாண்டிய வயற்காடும். குளம் முடியுமுன் கள்ளிக்காட்டுக்குப் போகும் ஒற்றையடிப் பாதை வலப் பக்கம் இறங்கும். ஓடையில் இறங்கிக் கால் நனைத்துக் கரையேறி வரப்போடு நடக்கும்போது முதலில் வருவது கள்ளிக்காட்டின் மயானம் சித்தியுடனோ, அப்பாவுடனோ நடக்கும்போதே பயம் காட்டும் அந்த சுடலைமாடன் சிலையும் கழுமாடனும்.

கொடைக்குக் கால் நாட்டிய அன்று செய்த பூசையின் அடையாளங்கள் மயானத்துச் சுடலைமாடன் கழுத்தில் கிடந்தன. கழுமாடன் பீடத்துக்குச் சிலை கிடையாது. ஒரு கழு மரம் மட்டும். கழு மரத்தின் கழுத்துப் பகுதியில் கூட்டல் குறி போல் ஒரு மரச்சட்டம். மரச்சட்டத்தின் மணிகள் காற்றில் அசைந்தன. கழுவின் உச்சியில் செருகியிருந்த எலுமிச்சம் பழம் மஞ்சள் காய்ந்து உலர்ந்திருந்தது.

கிழக்குப் பார்த்து நின்ற சுடலைமாடனுக்கும் கழுமாடனுக்கும் எதிரே முப்பதடி தள்ளி மயானக்குழி. சமுதாயப் பிணம் விழும்போது மட்டும் புதுக்கப்படும் குழி. குழியில் இருந்து பறித்துப் போட்ட சாம்பல் பொடி, எலும்புப் பொடி, கரித்தூளில் செழித்து வளர்ந்திருந்த வேப்ப மரம் நிழல் குலுக்கி நின்றது. அம்மா சொன்ன கணக்கில், கிளைகளில் இப்போதும் அகாலத்தில் செத்தவர் பேய்கள் வெளவால்கள் போல் தொங்கிக் கிடக்கும் மனிதர் கண்ணுக்குப் புலப்படாமல். மயானத்தைச் சுற்றி இடுப்பளவு உயரத்துக்குக் கைப்பிடிச் சுவர். சுவரெல்லாம் வெள்ளையும் காவியும் அடிக்கப்பட்டிருந்தது.

நமசின் பின்னால் நீண்டு விழுந்துகொண்டிருந்தது நிழல். மயானத்தைப் பார்க்கப் பிரியப்படவில்லை மனம். என்றாலும் அவசர அவசரமாகப் பார்த்துப் பெயர்ந்தன கண்கள். அங்கிருந்து பார்த்தபோது கள்ளிக்காட்டின் தென்கோடியில் தெரிந்த சுடலைமாடன் கோயிலில் ஆளரவம். பத்துக் காட்டில் இருந்து ஏறிய ஓடைக் கரை வரப்பு கோயிலின் முன்னால் சென்று நின்றது.

நல்ல அகன்ற திண்ணை கொண்டகோயில். முன்புறம் மட்டும் மரச் சட்டமிட்ட அழியும் சுற்றிலும் சுவர்களும் மேலே ஓட்டுப் பணியும் உள்ளே பெரும் முற்றமுமாக, புதிய மராமத்தில் பொலிவாகக் கிடந்தன.

மொத்தம் இருபத்தேழு பீடங்கள் அந்தப் பேய்க் கோயிலில், சுடலைமாடனுக்கும் பேச்சியம்மனுக்கும் கல்லில் வடித்த சிலைகள். எண்ணெய் மினுக்கும் முறுக்கும் கொண்டிருந்த உடல்கள். பேச்சியம்மனின் முலைகளிலும் சுடலைமாடன் மீசைகளிலும் துடித்து நின்றன உயிர்கள். நமசு அழிவழியாகப் பார்த்தபோது தென்பட்ட பீடங்களின் கழுத்தில் அரளி மாலைகள், நெற்றியில் சாத்தியிருந்த களபம், மஞ்சணை, முன்னால் கமுகம் பூக்குலைகள்.

கோயிலின் முன்னால் தாமரைக்குளம். கூம்பிய மொட்டுக் களும் விரிந்திருந்த செந்தாமரைகளும் மணிக்காய்களும். ஊடே சில அல்லிக் கொடிகள். தண்ணீர் தெரியாதபடிக்குத் தாமரை இலைகள் மூடிக் கிடந்தன. காற்றடிக்கும்போது தாமரை இலைகள் புரண்டதில் செம்பச்சை நிறக் கலங்கல். கோயிலில் இருந்து இறங்கும் இடத்தில் மட்டும் தண்ணீர் கோர, குளிக்க, இடம் விட்டு வெளி வாங்கி இருந்தன தாமரைக் கொடிகள். அந்தத் தண்ணீருக்கு ஒரு பாசி வாசனை உண்டு.

கோயிலின் முன்னால் வழக்கமாகக் காடடைந்து கிடந்த பூச்சி முட்புதர்கள், தொட்டாவாடிக் கொடிகள், அறுகந்திரடு, எருக் கலை மூடு, குருக்கு எல்லாம் செதுக்கி ஆற்று மணல் பரத்தி, படுத்து உருளலாம்போல இருந்தது. முன்னால் போடப்பட்டிருந்த தட்டுப் பந்தலின் கீழ் நடக்கும் போது வேற்றூர்க்காரக் கூச்சம் அவன் கால்களைப் பற்றிக்கொண்டது.

“ஒத்தையிலேயா மக்கா வந்தே?” என்றாள் சித்தி.

“ம்” என்று பதிலளித்தான்.

சித்திக்குப் பிள்ளைகள் கிடையாது.

“சாப்பிடுகியாலே மக்கா?” என்றாள்.

பள்ளிக்கூடம் விட்டு வந்து சாப்பிடுகிற நேரம்தான்.

சித்தி வீட்டில் ஆட்டுப் பால் காப்பி. நமசுக்கு அந்த வாசனை அவ்வளவாகப் பிடிக்காது. ஒரு உலும்பு வாடை.

பக்கத்து வீட்டில் சித்தியின் சம்மந்தி கொடியாள். அந்த அத்தைக்கு மூன்றும் பெண் பிள்ளைகள்.

“மூத்த மைனியைத் தவிர யாரைண்ணாலும் கெட்டிக்கோ” என்பது அடிக்கடி கேட்கும் பரிகாசம்.

“அதுக்கென்ன? ஏழு புளியங்கொட்டையை முழுங்கினா சரியாப் போகும் வயசு. நானே கெட்டிக்கிடுகேன்” என்பாள் மதனி. இதெல்லாங் கருதித்தான் அடிக்கடி இங்கு வராதது. நமசுக்கு எதெடுத்தாலும் கூச்சம்தான்.

ஆனால் மூன்று வருசம் முந்தியே மதனிக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. மாப்பிள்ளைக்காரன் வடக்கே எங்கேயோ என்றார் கள். மதனி நல்ல பஸ்காரமாக இருந்தாள் இப்போது.

கோயிலில் லவுட் ஸ்பீக்கர் போட்டுவிட்டனர். நமசுக்கு வில்லுப் பாட்டு கேட்கப் பிடிக்கும். வில்லிசையாளரை இமை ஆடாமல் பார்த்துக் கொண்டிருப்பான். கணியான் ஆட்டத்தில் மகுடம் வாசிப்பது கேட்கப் பிடிக்கும். நையாண்டி மேளத்தில் முரசுச் சத்தம் பிடிக்கும்.

வாசலில் வந்து நின்றபோது மதனி தெருநடையில் உட்கார்ந் திருந்தாள். ஆறு மணி ஆகி இருந்தாலும் வெயில் இறங்கி இருக்க வில்லை. காற்று தூசு பரத்தியது. மதனி மாலையில் முகம் கழுவி, தலை சீவி, இரட்டைச் சடை போட்டு, பிச்சிப் பூ வைத்து, துலக்க மாக இருந்தாள். அவ்வளவு நீளமில்லாத சுருட்டை சுருட்டையான அடர்த்தியான முடி சித்தி வீட்டு வாசப்படியில் நமசு உட்கார்ந்தான். மதனி வழக்கமான பரிகாசத் தொனியுடன் கேட்டாள்.

“அத்தானுக்கு பரிச்சை எல்லாம் முடிஞ்சிற்றா?”

பாட்டுச் சத்தம் நின்று, கொட்டுச் சத்தம் கேட்டது. நையாண்டி மேளக்காரர்கள் நாளை மாலை வருவார்கள். இது உள் கோயிலில் வரத்துக்கும் ஆராசனைக்கும் வாசிக்கும் தவில், முரசு, நாதசுரம். வந்ததும் வாத்தியங்களின் உறைகளைக் கழற்றி ஒரு சுற்று வாசித்து ஓய்வார்கள்.

அண்ணாச்சி கொடைக்கு வருவாளா?” என்றான் மதனியிடம்.

“போன மாசம்தான் வந்திற்றுப் போனா. இனி அடுத்த வருசந்தான்.”

அண்ணாச்சிக்கு நல்ல சுபாவம். போன ஆண்டு விடுமுறையில் வந்தபோது பார்த்தது. நமசைப் பாட்டுப் படிக்கச் சொல்லிக் கேட்டார்.

அவனுக்கு “தாமரை பூத்த தடாகமடி”, “உண் கண்ணில் நீர் வழிந்தால்” எல்லாம் நல்ல ராகமாகப் பாடவரும். பாடி முடிந்ததும் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார்.ரொம்பக் கூச்சமாக இருந்தது. மதனி, “அத்தான் வாருங்கோ, நானும் ஒண்ணு தாறன்” என்றாள். நமசு சித்தி வீட்டுக்கு ஒடிவிட்டான்.

அவர் வந்திருந்தால் கொடை பார்க்கத் தோதாக இருக்கும். போன முறை பனைவிளைக்குக் கூட்டிக் கொண்டு போய் நுங்கு சீவிப்போட்டு மாலைப் பதனீர் வாங்கித் தந்தார். அனந்தன் ஆற்றுச் சானல் மடைக்குக் குளிக்கக் கூட்டிப் போனார். பெரிய குளத்தில் மறுகரைக்கு நீச்சலடித்துப் போய் மல நீஞ்சல் போட்டுத் திரும்பினார்கள்.

அண்ணாச்சி இருக்கும்போது மதனி முகத்தில் ஒரு விகாசம் இருந்தது.

“ஒன்னால ஒங்க மைனியைத் தூக்கமுடியுமாடே?” என்றார் ஒருநாள்.

“யம்மா – என்னால முடியாது.”

“தூக்கித்தான் பாரேன்..”

“வேண்டாம்மா, யானைக்குட்டி மாரியில்லா இருக்கா.”

“இன்னா பாரு நான் தூக்குகேன்.”

மதனிக்கு சிரிப்பாணி தாங்கவில்லை. “அத்தானும் தூக்குவாரு, கொஞ்ச நாளு போனா” என்றாள் சிரிப்பின் ஊடே

முரசும் தவிலும் அதிர்ந்து கொண்டிருந்தன. நமசு எழுந்தான்.

“அத்தான், எங்க புறப்படுகே?”

“கோயிலுக்கு”

“இன்னைக்கும் நாளைக் காலம்பறயும் பாத்துக்கோ… நாளைக்கு ராத்திரி சின்னப்பிள்ளையோ போகப்பிடாது. நடுச்சாமத்திலே பரணுக்கு மேலே பண்ணிக்கு நெஞ்சை வகுந்து ஒரு குலை மட்டிப்பழம் உரிச்சுப் போட்டு சொள்ளமாடன் உதிரம் குடிக்கச்சிலே சின்னப் பிள்ளையோ தும்முனா எட்டாங் கொடைக்கு முன்னால ரெத்தம் கக்கிச் செத்துப் போவா-அதுமாரி கிடாவெட்டச்சிலேயும் இருமவோ தும்மவோ பிடாது.”

மதனி ஒரு தீவிர பாவத்துடன் சொன்னாள். இதெல்லாம் ஊரில் ஏற்கனவே அம்மா ஒரு முறை சொன்னதுதான். “திசைபலிக்குப் போகும் போதோ வரும்போதோ எதுப்பு போகப்பிடாது. படப்புச் சோறு போடச்சிலே துப்பினி எறக்கப்பிடாது. மயானத்துக்கு பூசைக்குப் போகும்போதோ வரும்போதோ கழுமாடன் கொண்டாடி கையில் இருக்கும் குந்தத்தை எத்தனை முறை குத்துவாரோ தரையிலே, எட்டாங் கொடைக்குள்ளே அத்தனை பேர் சாவார்கள்.”

கோயில் வாசலில் அதிகக் கூட்டமில்லை. கோயிலுக்கு இடதுபுறம் இருந்த அறுத்தடிப்புக் களத்தில் பெரிய பன்றி ஒன்றைப் பிணைத்துப் போட்டிருந்தனர். சின்ன யானை போல் நின்றது. நேர்ச்சைக்காரர் பன்றியின் கழுத்தில் நேரியல் கட் டி நெற்றியில் சந்தனமும் குங்குமமும் அப்பப்பட்டிருந்தது.கடைவாய் ஓரம் தந்தங்கள் நீண்டிருந்தன. இதை எப்படி மார் பிளக்கும்முன் உயிருடன் பரண்மேல் ஏற்றுவார்கள் என்று தெரியவில்லை. சற்றுத் தள்ளி வெள்ளாட்டுக் கடா ஒன்று கொம்பு முறுக்கி நின்றது. ஆட்டுக்கு இத்தனை பெரிய விதைப்பையை நமசு இதற்கு முன் பார்த்ததில்லை. களம் பூரா ஆட்டுக்கடாவின் கோரோசனை வீச்சம். மயானத்தில் கழுமாடன் விளையாடி, தூக்கிப்போட்டு குந்தத்தில் செருகும் துள்ளுமாறி நாளைதான் கொண்டு வருவார்கள். சுடலைமாடனுக்கு அறுக்கவும் கழுமரத்தில் செருகவும் இரண்டு சிவப்புச் சேவல்கள். கொண்டைகள் வளர்ந்து சாய்ந்து கிடந்தன. சுடலைமாடன் வரத்துப் பாடக் கருங்குளம் நாராயணனை விட்டால் ஆளில்லை என்று பேசிக்கொண்டனர்.

சித்தப்பா வந்து சாப்பிடக் கூப்பிட்டுப்போனார். சாப்பிட்டு விட்டு மதனி வீட்டில் எட்டிப் பார்த்தான். சாப்பாட்டு ஏனத்தின் முன்னால் இருந்தாள்.

“எவ்வளவு முருங்கக்கோரு. எல்லாம் மைனி மூஞ்சினதா?” சாய்வாக ஒரு பார்வை பார்த்தாள் மதனி.

வீடுகள் தோறும் விருந்தினர்கள்.

பானைக்குள்ளிருந்த பாச்சை உருண்டை வாசம் வீசும் வெள்ளாவித்துணிமணிகள். எல்லா வீட்டு முற்றங்களும் தூத்துத் தெளித்து, சாணிப் பால் மெழுகி பெரிய பெரிய கோலங்கள். தெருக்களில் வழக்கமாய்க் கிடக்கும் குப்பை கூளங்கள் காணோம். ஓரங்களில் நிற்கும் சக்கடா வண்டிகள் எல்லாம் களங்களினுள் கிடந்தன.

வில்லுப்பாட்டுக்கு ஆர்மோனியம் இழுக்க ஆரம்பித்தவுடன் போய் உட்கார்ந்து கொண்டான் நமசு. சற்று நேரம் போக வேண்டும், குடம் அடிப்பவரும் கட்டைத் தாளம் அடிப்பவரும் லயித்து வாசிக்க, கோயிலைச் சுற்றிக் களபம், சந்தனம், மஞ்சணை, விபூதி, சாம்பிராணிப் புகை, பிச்சிப் பூவின் கலவை வாசனையாக இருந்தது. சிலர் உள் படிப்புரையில் ஓரத்தில் உட்கார்ந்து பூக்கட்டிக் கொண்டிருந்தனர். அரளிப்பூ, மஞ்சணத்தி இலை, பிச்சிப்பூ, தாமரை, வாடாமல்லி, கொழுந்து, செவந்தி எல்லாம் குப்பம் குப்பமாகக் கிடந்தன. கமுகம் பூக்குலைகள் உரிக்கப்படாமலும் தாழம்பூக் குலைகள் பிரிக்கப் படாமலும் ஓரமாய்க் கிடந்தன.

ஏழு மணிக்கு வீட்டுக்குப் போனபோது, சித்தி இட்டிலி தின்னச் சொன்னாள். மதியச் சாப்பாடே மூன்றரை மணிக்குத்தான் ஆகி இருந்தது. சரியாகப் பசி இருக்கவில்லை. – அதனால பொறவு சாப்புடறேன் என்றேன்.

“பொறவுண்ணா எப்பம்? நான் கோயிலுக்குக் கொடை பார்க்கப் போயிருவேன்” என்றாள் சித்தி.

“தொறவாலை மைனி வீட்டில் குடுத்திட்டுப் போறன். இட்டிலி அவிச்சு மூடி வச்சிருக்கேன். மொளவாடி இருக்கு. மத்தி யானம் வச்ச சாம்பார் இருக்கு. பசிக்கச்சிலே வந்து திண்ணுக்கோ என்னா? என்னைத் தேடமாட்டயே?”

சாத்தாங்கோயில் திடலில் தனியாகக் கும்பம் ஆடிக் கொண்டிருந்தது. நமசு சற்று நேரம் கணியான் ஆட்டம் பார்த்தான்.

இனி பத்து மணிக்குமேல் தான் வில்லு வைப்பார்கள். வைத்தால் சாமி வந்து ஆராசனை ஆகி படப்புப் போட்டு பூ எடுக்கும்வரை நெரிபிரியாக இருக்கும். சுப்புக்குட்டி கணியான் இடது கையால் காதைப் பொத்திக் கொண்டு வலது கையை நீட்டிப் பாடிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் ஒரு மகுடம், தப்பட்டை இரண்டு கணியான்கள் பெண் வேடம் தரித்து, கண்டாங்கி வரிந்து கட்டி, திருப்பன் வைத்துக் கட்டிய கொண்டையில் ஊசிகள் செருகி, முலைக் குமிழ்கள் வைத்து இறுக்கமாக ஜெம்பர் போட்டு, வாய் நிறைய வெற்றிலை போட்டு நீள வட்டத்தில் ஆடிக் கொண்டிருந்தனர்.

குளத்தங்கரையை அடுத்த வேப்பமர மூட்டில் சிறு தீ மூட்டி அதில் ஒருவர் தப்பட்டையின் தோலை வாட்டுவதும் லேசாகச் சுண்டிப் பார்ப்பதுமாக இருந்தார். பசிப்பது போலிருந்தது நமசுக்கு. சித்தி கூட்டத்தில் எங்காவது இருப்பாள், அல்லது கோயில் படிப்புரையில் வசதியாய் இடம் பிடித்து ஆராசனை பார்க்கும் தோதில் உட்கார்ந்திருப்பாள். சித்தி வீடு ஊரில் வடக்குக் கோடியில் ஒரு முடுக்கில் இருந்தது. சித்திவீடு தாண்டினால் நல்ல தண்ணீர்க் குளத்துக்குப் போகும் தடம் ஆரம்பித்துவிடும். கணியானின் குரல் காதைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இருபத்தோரு நாட்கள் விரதம் இருந்து பாடும் குரலில் விசேடமான தொரு துடிப்பு. நாளை மதியம் உச்சிக்கொடைக்கு வலது முன்கையில் கீறி, தண்ணீர் தெளித்துத் துடைத்த இருபத்தேழு கன்னித் தலை வாழை இலைகளில் மூன்று சொட்டு ரத்தம் வீதம் படைக்க வேண்டும். வில்லுப் பாட்டுக்காரருக்கும் கிடாவெட்டும் இசக்கி முத்துக்கும்கூட விரதங்கள் இருக்கும்.

வழக்கத்துக்கு மாறாக எல்லாத் தெரு விளக்குகளும், வீடுகளின் முன் விளக்குகளும் எரிந்தன. எங்கும் வெளிச்சமே நிறைந்து கிடந்ததுபோல். பங்குனி மாதக் காற்று பதைப்பின்றி அலைந்து கொண்டிருந்தது. முடுக்கில் மதனி வீட்டில் விளக்கு வெளியில் தெரிந்தது. எதிர் வரிசையில் வீடுகள் இல்லை. களத்துச் சுவர் நீண்டு கிடந்தது.

மங்களாவில் கட்டிலில் படுத்து மதனி படித்துக் கொண் டிருந்தாள். இந்த ஆரவாரத்திலும் என்னதான் படிக்கிறாளோ? அரவம் உணர்ந்து எழுந்து உட்கார்ந்தாள். முட்டுக்கு மேல் கிடந்த சாரியைக் கரண்டைக்கு இறக்கினாள்.

“அத்தான்! என்ன வந்திற்றயோ?”

“வயிறு பசிக்கு, இட்டிலி திண்ணுற்றுப் போலாம்னு வந்தேன்.”

“தொறவலு இருக்கா?” என்றாள் சிரிப்புடன்.

முன் கதவை ஒருச்சாய்த்துவிட்டு வந்து கதவைத் திறந்தாள்.

தட்டத்தை எடுத்து நாலு இட்டிலி எடுத்து வைத்தாள். நமசு மிளகாய்ப் பொடி பரணியையும் நல்லெண்ணெய்க் கிண்ணத் தையும் எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.

“சாம்பார் ஊத்தல்லியா?” என்றாள். எதிர்த்தாற்போல் குத்துக் காலிட்டு அமர்ந்தாள். நமசுக்குக் கூச்சமாக இருந்தது.

“ஒத்தையிலேதான திங்கே? சாப்பிடுகியாண்ணு ஒரு வார்த்தை கேட்டயா?”

“கேக்கதுக்கு என்ன இருக்கு? ஒரு தட்டம் எடுத்து வச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதானே!” என்றான்.

“ஏன், ஒந்தட்டத்திலேருந்து எடுத்து திங்கப்பிடாதா?”

“ஐயே, எச்சியில்லா?”

மதனி அதைப் பொருட்படுத்தவில்லை. இட்ட எடுத்துப் பிட்டுத் தின்ன ஆரம்பித்தாள். ஒரு துண்டை எடுத்து மிளகாய்ப்பொடி முக்கி அவன் வாயருகில் நீட்டினாள். நமசு முகத்தைத் திருப்பினான்.

“சும்ம வாங்கிக்கோ, நீ சின்னப் பிள்ளையா இருக்கச்சிலே நா இடுப்பிலே தூக்கிச் செமந்து இட்டிலி புட்டுத் தந்திருக்கேன்.”

“அப்பம் இடுப்பிலே வச்சம்ணுட்டு இப்பம் தூக்கி வச்சுக்கிட முடியுமா?”

“ஆசையா இருக்குண்ணா சொல்லு- தூக்கிக்கிட்டு கொஞ்சம் நடக்கே..”

“யம்மா- நீ செய்தாலும் செய்வே!”

தட்டத்தை அங்கணத்தில் போட்டு, பரணியை, கிண்ணத்தை மூடி வைத்துவிட்டு கைகழுவி வெளியே வந்தான்.

மதனி வீட்டைப் பூட்டிக்கொண்டு வந்தாள்.

“நீங்க கொடை பாக்க வரல்லியா?” என்றான், மதனி வீட்டினுள் நுழைந்ததும்.

“எனக்கு அந்தக் கூட்டத்திலே போயி நிக்கப் பிடிக்காது.”

“அப்பம் விளக்கை அணைச்சுக்கிட்டு உறங்குங்கோ.”

“இரி, போலாம். ஒரு பறத்தம் புடிச்சவன்…”

காற்றில் வில்லுப்பாட்டு ஓசை காதில் மோதிக் கொண்டிருந்தது.

சீவலப்பேரி ஆற்றில் குளித்து கோயிலை வலம் வந்து கொண் டிருந்தார் சுடலைமாடன். புடை சூழப் பேச்சி அம்மன், சங்கிலி பூதத்தான், புலைமாடன், கழுமாடன், பட்டன், முண்டன், வண்டி மலச்சி அம்மன், முப்பிடாரி, சந்தனமாரி, மாடன் தம்பிரான், இசக்கி அம்மன்..

இனி பாட்டும் மேளமும் நல்ல ஈர்ப்புடன் இருக்கும். ஏதோ பேசிக் கொண்டிருந்த மதனி எழுந்து போனாள். சற்று நேரத்தில் உள்ளே இருந்து குரல் கேட்டது.

அறையினுள் இருள் சேமித்து வைத்திருந்தார்கள் போலும். மூக்கருகில் உராய்ந்த மதனியின் கன்னம் மிருதுவாக இருந்தது. மாலையில் பூசிய பவுடரின் லேசான மணம். தழுவலில் கிளர்ந்த மெல்லிய வீறொன்று வளர்ந்து பல்கிப் பெருகி உடலும் மனமும் ஆகித் துடித்தது. பிச்சிப் பூவின் விரிந்த வாசனை கவிந்து மூடிக் கொண்டிருந்தது.

நேரத்தை அனுமானிக்க முடியவில்லை. வில்லுப்பாட்டின் சத்தம் துடிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தது. பூ எடுப்புக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருக்கும்போல. நையாண்டி மேளத்தின் ஒலி தூரத்தில் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தது.

அயர்வாக இருந்தது. நூதனமானதோர் கூச்சம். மதனி முகத்தில் மெல்லிய பூந்தென்றல். கன்னத்தில் தட்டி, “மொகத்தைக் களுவீட்டுப் போ” என்றாள். “போட்டீ மூதி” என்று மனதில் திட்டி னான், எரிச்சலில். சற்றுப் பதட்டமாக இருந்தது. தெருவில் இறங்கி நடக்கையில் காற்றும் குளிர் சுமந்து வந்தது. கால்களில் புகுந்த அச்சம் நடையைத் துவளச் செய்தது.

நமசு கோயிலை அடைந்தபோது வில்லின் முறுகிய நாண்டங்காரம் செய்துகொண்டிருந்தது.அருகில் முரசொன்று முழங்கிக் கொண்டிருந்தது. கோயிலுக்குள் நுழைவது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது.

உட்புகுந்தபோது காட்சி தெளிவாகிக் கொண்டு வந்தது.

குளத்தில் குளித்து ஈரவேட்டியை மடித்து அதன் மேல் துவர்த்தை முறுக்கிக் கட்டி நெற்றியில் திருநீறு பூசி அவரவர் பீடத்துக்கு முன்னால் சாமி கொண்டாடிகள் கைகூப்பிக் கண் மூடி நின்றுகொண்டிருந்தனர். சுடலைமாடன், பேச்சியம்மன் சிலை களுக்குச் சந்தனக்காப்பு. வெள்ளியால் கண், வாய், மூக்கு – கமுகம் பூவின் வெள்ளைப் பிஞ்சுகளினால் கோரத் தந்தம். அழகும் அச்சமூட்டும் கவர்ச்சியும்.

வில்லா, வீசுகோலா, பானையா, முரசா, தவிலா, நாதசுரமா என்று பிரித்தறிய முடியா ஒலிக்கலவை. முதலில் சுடலைக்கும் பிறகு மற்ற சாமிகளுக்கும் தீபாராதனை ஆகியது.

முரசு கால்களைப் பறித்துக்கொண்டிருந்தது.

“ஓயேவ்..” என்றறொரு சத்தம்.

உள்வாங்கிய ஒலியில் சில முக்காரங்கள். சில உடல் முறுகிய குலுங்கல்கள்.

“ஓயேவ்…” என்று மற்றொரு சத்தம்.

கற்பூரம் எரியும் வாசனை, சாம்பிராணிப் புகை…

உடம்பை முறுக்கி, பற்களால் சுண்டைக் கடித்து, கைகளை வான் நோக்கி விரித்து, பிரபஞ்ச வெளியின் இயக்கங்களை அசைவுகளினால் ரேகைப்படுத்துவது போல..

இரட்டைத் தவில்களும் முரசுகளும் நாதசுரங்களும் தீவிர கதியில் இயங்கிக்கொண்டிருந்தன.சுடலையை இரண்டு பேர் ஆவி சேர்த்துக் கட்டிப் பிடித்து மணிகள் கோத்த சல்லடம் மாட்டி அதன் மேல் கச்சையை இறுக்கிக்கொண்டிருந்தனர். மாரின் குறுக்கே பாச்சக்கயிறு. தலையில் குஞ்சம் வைத்துக் கட் டி, தாழம்பூக் குருத்துச் செருகி, கைக்கு வெள்ளிக் கங்கணங்கள் பூட்டி, கழுத்தில் மாலை சூட்டி, கையில் வெள்ளி வெட்டுக் கத்தி கொடுத்து..

சுடலைமாடன் பீடத்தைப் பார்ப்பதும் முறுவலிப்பதும் வானவெளியை வெறிப்பதும் வெட்டுக் கத்தியைத் தோளில் சாத்திக்க கொண்டு லயம் வைத்து ஆடுவதுமாய்..

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லயம். ஒவ்வொரு சுவடு. ஒவ்வொரு பிளிறல். ஒவ்வொரு ஆயுதம். ஒவ்வொரு முகக்குறி..

சாமிகளை வரத்தி நிறுத்தியதுடன் வில்லோசை நின்று விட்டது. முரசுக்காரர்கள் வியர்த்து வழிந்து கொண்டிருந்தனர். அவர்களே வாத்தியங்கள் ஆகிவிட்டது போல அல்லது வாத்தியங் கள் தம்மையே வாசித்துக் கொள்வதைப்போல..

ஒரு சாமி கொண்டாடி அதிக அரவம் இன்றி கமுகம் பூக்குலையுடன் கொஞ்சிக் கொண்டிருந்தார். ஒருத்தர் பனை யோலைக்கொட்டான் கொட்டானாக மஞ்சணை அள்ளி விழுங்கிக் கொண்டிருந்தார். ஒருத்தர் வெள்ளி வாளால் இரண்டு தோள் களிலும் மளார் மளார் என்று மாறி மாறி அறைந்து கொண் டிருந்தார்.

நாதசுரங்கள் இரண்டும் கழுமாடன் காதுகளைப் பிளந்து கொண்டிருந்தன. இருபத்தேழு பீடங்களிலும் கழுமாடனுக்குத் தான் கடைசியாக ஆராசனை வரும். வந்தால் அதிக ஆட்டமில்லை. ஒரு பிளிறல், சிறுதுள்ளல், ஒரு முக்காரம். பாய்ந்து சென்று பீடத்தில் இருந்து குந்தம் எடுத்து ஒரு சாட்டம். பிறகு அவர் ஆராசனை முடிந்து அடங்கும் போதுதான் குந்தத்தை சாமி பீடத்தில் வைப்பது. அதன் இடையில் நிலத்தில் ஊன்றினால் அது வரப்போகும் சாவுக்கு முன்கூறல். கழுமாடன் ஆராசனை நெடுநேரம் நிலைத்து நிற்பது மில்லை.

கழுமாடனுக்கு ஆராசனை வந்ததும். கோயில் நடைக்கு நேரே சுடலைமாடன் பீடத்துக்கு நேரே ஆளொதுங்கியது. கழுத்தில் துவர்த்துப் போட்டு முறுக்கிப் பிடித்தபடி ஆட்டுக்கடாவை இழுத்து வந்தனர்.

சட்டென நின்றன மேளங்கள். கூட்டத்தின் தள்ளலில் விழுந்து விடாமல் ஒரு தூணைப் பிடித்தபடி உன்னிப் பார்த்தான் நமசு.சுடலை மாடன் சிலையின் கழுத்தில் கிடந்த மாலை ஒன்றைக் கழற்றி வந்து கடாவின் கழுத்தில் சூட்டினார் பூசாரி.

எல்லாத் துடிப்புகளும் நின்று ஒரு அனக்கமும் இல்லை. கடாவின் தலை சுடலையின் பீடத்துக்கு நேராக… கோளாறு இல்லாமல் வளர்ந்திருந்தன கொம்புகள். இசக்கிமுத்து முரசைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, சிவப்புத் துணி சுற்றி வைத்திருந்த வெட்டுக் கத்தியை எடுத்தார். ஒரு பாகம் நீளம் இருந்தது. நல்ல சுத்தமான இரும்பில் பருவம் பிடித்துத் தீட்டிய சுடர் ஒளி பாய்ச்சியது.

பூசாரி செம்பில் நீர் கொண்டுவந்து கடாவின் தலையில் தெளித்தார். நெற்றியில் திருநீறு அப்பினார். நேர்ச்சைக்காரர் ஆட்டுக்கு முன்னால் குத்துக் காலிட்டு அமர்ந்து கமுகம் பூவை நீட்டினார். கடா எந்தக் கவலையும் இன்றி, பரக்கப் பரக்கப் பார்த்துக்கொண்டு நின்றது. கடா உடை கொடுக்காவிட்டால் பலியை வாங்கச் சுடலைக்குச் சம்மதம் இல்லை யென்று அர்த்தம்.

முரசுக்காரர் பளபளக்கும் வெட்டுக் கத்தியைக் கையில் பிடித்தபடி சுடலைமாடன் கொண்டாடி முன்னால் போய்க்குனிந்து நின்றார். சுடலைமாடன் கொப்பரையில் இருந்து திருநீற்றை அள்ளி வானோக்கி எறிந்து இசக்கிமுத்து தலையில் தூவி நெற்றியில் பூசினார். பூசாரி மறுபடியும் செம்புத் தண்ணீரை ஆட்டின் தலையில் தெளித்தார். ஒரு சிலிர்ப்பும் இன்றி ஆடு, சிவனே என்று நின்றது.

சூழ்நிலையில் இறுக்கம் அதிகரித்துக் கொண்டு போனது. மெளனம் அடர ஆரம்பித்தது. நேர்ச்சைக்காரர் முகத்தில் கலவரத் தின் சாயம். வரப்போகும் பெருந்துக்கத்தின் அச்சாரம். திடீரெனக் கழுமாடன் “ஓயேவ்…” என்று பிளிறினார். நமசின் கால்கள் வெடவெடவென நடுக்கம் கண்டன. நெஞ்சப் படபடப்பைப் பக்கத்தில் இருப்பவர் கேட்கலாம் போல.

“ஓயேவ்…” என்று சுடலைமாடன் மறு பிளிறல், நமசுக்குத் திகைப்பாக இருந்தது. பயம் பயங்கரமாய் நெருக்கியது. பக்கத்தில் நின்றிருந்தவரின் மூக்குப் பொடி நமசு மூக்கில் ஒரு தீவிரமான நெருக்கடியை ஏற்படுத்தியது.

“ஓயேவ்..”

“ஓயேவ்..”

சடாரென ஆடு தலையை ஒரு சிலுப்புச் சிலுப்பியது.

“சதக்” கென்று வெட்டுக்கத்தி ஆட்டின் கழுத்தில் ஓடி இறங்கும் ஓசையும் “நச்” சென்று நமசின் தும்மலும்.

“வெட்டாங்கிடு வெட்டாங்கிடு வெட்டாங்கிடு’ என்று ஒற்றை முரசின் கம்பீரம். முரசின் அதிர்வுபோல் ஆட்டின் உடல் கிடந்து பதைத்தது. நமசுக்குப் பரபரப்பாக இருந்தது.

மறுபடியும் ஆராசனைக்காரர்களின் ஆட்டத்துக்குத் தோ தான முரசொலி ‘டண்டணக்கு டண்டணக்கு டண்டணக்கு..’

சுடலைமாடனும் கழுமாடனும் திசைபலி செய்யவும் மயானப் பூசைக்கும் போனார்கள். கூட ஒற்றை முரசு இசக்கிமுத்து, ஆராசனைக்காரர்களைப் பாய்ச்சல் கயிறு போட்டுப் பிடிக்கும் திடம் கொண்டவர்கள், தீவட்டி, எண்ணெய் ஊற்றுபவர், திசைப்பலிப் பொருட்கள் கொண்ட பனையோலைக் கடவம் சுமந்தவர்.

சுற்றிலும் கூட்டம் தளர்ந்த தொய்வு. நமசுக்கு அங்கு நிற்கப் பிடிக்கவில்லை. மனம் திகில் அடர்ந்திருந்தது. தீட்டுடன் கோயி லுக்குப் போயிருக்கக்கூடாது என்று தோன்றியது.

சித்தி வீட்டுக்கு வந்து படுத்தபோது நெடு நேரம் உறக்கம் வரவில்லை. மனம், வெட்டுப்பட்ட ஆட்டின் உடல் போல் பதைத்துக் கொண்டிருந்தது. மதனி மேல் கோபம் வந்தது. உறக்கம் சூழ்ந்தபோது கனவுகளாய் வந்தன.

சுடலைமாடன் பீடத்துக்கு நேராய், ஆட்டின் உடல் கொண்டு, ஓங்கிய வெட்டுக் கத்திக்குத் தலை சாய்த்து நிற்பதைப் போல மதனி துரத்த பெரிய விதைப்பையுடன் சேம்புப் பூப்போல எட்டிப் பார்க்கும் குறியுடன் கொம்புகளை உதறி ஓடுவது போல- வயறு பிளந்து பரண் மேல் பன்றியாய் மதனி கிடப்பதைப் போல. காய்ச்சல் பொங்கிப்பொங்கி வந்தது. நினைவும் பிறழலுமாய்- ஊரெங்கும் இறைச்சிக் கறி மணம். தலைமாட்டில் உறுத்துப் பார்த்துக்கொண்டு, மூக்குப் பொடி வாசம் வீசும் சுடலைமாடன்.

குந்தம் எத்தனை முறை நிலத்தில் ஊன்றியது என்று யாரோ உரத்துக் கேட்பது…”போலே அசத்து” என்று மதனி செல்லமாய் அதட்டு வது-தணுப்பான கையொன்று சூடான சாம்பலை நெற்றியில் பூசி விட்டுப் போனது.. “எட்டாங் கொடை கழியணும்!” என்றார்கள் யாரோ. காய்ச்சலும் மயக்கமும் போதையாக இருந்தது நமசுக்கு.

– நன்றி: https://nanjilnadan.com/2011/05/01/பேய்க்கொட்டு/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *