கதை ஆசிரியர்: ஜெயமோகன்.
கோமல் வீட்டை மறுபடியும் தவறவிட்டுவிட்டேன்.இது என்னுடைய ஏழாவது அல்லது எட்டாவது வருகை. முதல்முறை வந்தபோது என் பையிலிருந்து பணம் திருடப்பட்டது நினைவுக்கு வந்தது. அன்று பெரிய கல்கத்தா ஜிப்பா போட்டிருந்தேன். கீழே இறங்கிப் பையில் கையை விட்டதும் தெரிந்தது, பணம் இல்லை. ஜிப்பாதேசிய உடையாவதை பிக்பாக்கெட்காரர்கள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்ததை மற்ற வணிக எழுத்தாளர்கள் கொண்டாடியது என்ற சுந்தர ராமசாமியின் வரி நினைவுக்கு வந்தது. என்ன இது இந்நேரத்திலும் மேற்கோள் என்று மண்டையை தட்டிக்கொண்டேன். கோமலின் வீடு தெரியவில்லை, அவரைப்பார்க்காமல் திரும்பிச்செல்ல காசும் இல்லை
இன்னொரு பைக்குள் ஐம்பது பைசா இருந்தது. நல்லவேளையாகச் சிறிய தாள்துண்டில் எழுதப்பட்ட கோமலின் வீட்டு எண்ணும் இருந்தது. டீக்கடை ஓரத்து தொலைபேசியை கையிலெடுத்தபோது கிலியாக இருந்தது. அது வழக்கம்போல ஒரு ஹலோவுடன் துண்டித்துக்கொண்டால் கடைசி ஐம்பதுபைசாவையும் இழந்தவனாவேன். நல்லவேளையாகக் கோமலே எடுத்தார். ‘ஹலோ’ என்றபின் கனமான மெல்லிய முனகலுடன் அசைந்தார். ‘நான்தான் கோமல்’ என்றார்.
நான் என்னைத் தடுமாறும் சொற்களால் அறிமுகம் செய்துகொண்டேன். என் கதைகள் அவருக்கு நன்றாக நினைவிருந்தன. உற்சாகமாக ‘அட…’ என்றார் ‘வாங்க’ என்றார் . ‘சார் வீட்டுக்கு வழி சொல்லுங்க. வந்திடறேன்’. ’என்னத்தைச் சொன்னாலும் நீங்க வந்துகிட மாட்டேள். எனக்கு உங்களத் தெரியும். பேசாம ஒரு ஆட்டோபுடிச்சு வந்திடுங்கோ, அட்ரஸ் சொல்றேன்’ என்றார். ‘சார்’ என்று தயங்கி ‘எங்கிட்ட பைசா இல்லை’ ‘ஏன் என்னாச்சு?’ ‘பிக்பாக்கெட் அடிச்சிட்டான் சார்’ கோமல் மெல்லச் சிரித்து ‘ஆட்டோ புடிச்சு வந்து சேருங்கோ…நான் குடுக்கறேன்’ என்றார். நான் விலாசத்தை குறித்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டேன். ஒரேமாதிரி இருந்த வீடுகள் கொண்ட ஒரேமாதிரி தெருக்களில் ஒன்றில் எண்பதுகளில் கட்டப்பட்ட கான்கிரீட் வீடு. பெரிய வீடுதான்.
கோமலின் மகள் வெளியே வந்து ‘அப்பா உள்ள அழைச்சிண்டு வரச்சொன்னார்…உள்ள வாங்கோ’ என்றாள். அவளே ஆட்டோவுக்கு ஏழு ரூபாய் கொடுத்து அனுப்பிவிட்டு ‘பிக்பாக்கெட் அடிச்சுட்டானா? இந்த ரூட்லே ரொம்ப ஜாஸ்தி’ என்றாள். நான் உள்ளே சென்றேன். கூடத்தில் இருந்து பக்கவாட்டில் சென்ற அறைக்குள் கட்டிலில் கோமல் இருபக்கமும் பெரிய தலையணைகள் நடுவே அமர்ந்திருந்தார். இடதுபக்க சன்னலின் ஒளி முகத்தின் பக்கவாட்டில் விழுந்திருந்தது. அவரது மடிமேல் காகிதங்களும் குறிப்பேடும் இருந்தன. ‘வாங்கோ’ என்று அழகிய பல்வரிசை தெரியச் சிரித்து ‘எவ்ளவு பணம் போச்சு’ என்றார். ‘எம்பது ரூபா சார்’ ‘பாவம்’ என்றார். ‘பரவால்லை’ என்றேன். ‘நான் அவனைச்சொன்னேன், அவ்ளவு ஒழைச்சிருக்கான்…ஒருநாள்கூலியாவது தேறியிருக்கணும்ல?’
கோமலின் சிரிப்புடன் நானும் கலந்துகொண்டேன். இருபக்கமும் தோளுக்குச் சரிந்த நரைமயிர்க்கற்றைகள் அவரை ஒரு கலைஞனாக எழுத்தாளனாக அல்லது இன்னும் என்னென்னவோ ஆகக் காட்டி, அவர் லௌகீகன் அல்ல என்று அடையாளம் சொல்லின. அதேபோல எனக்கும் ஓர் அடையாளம் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புபவன். ஆனால் தக்கலையில் அந்த தோற்றத்துடன் அலுவலகம்சென்றால் நாய் துரத்திவரும். யாருடனும் எங்கும் கலந்துவிடும் பாவனைகள், பஞ்சப்படி பயணப்படி ஆசாமிகளுக்கான மனக்கணக்குப் பேச்சுக்கள், மங்கிய ஆபீஸ்நிற உடைகள் என்றுதான் என்னால் வாழமுடியும். ஆகவேதான் அலுவலகமில்லாத நாட்கள்ல் இந்த ஜிப்பாவை அணிகிறேன். பேருந்துகளில் ‘நான் வேறு’ என்று சொல்லிக்கொள்கிறேன்.
இப்போதும் குழம்பி ஒரே மாதிரி வீடுகள் கொண்ட தெருக்களில் அலைந்தேன். நல்லவேளையாக வெயில் இல்லை. கோமலின் வீட்டுக்குச் செல்லும் வழியை இப்போது கோமலிடம் கேட்கமுடியாது. அவர் உடம்பு மேலும் சரியில்லாமல் ஆகிவிட்டிருந்தது. நான் பரீக்ஷா ஞானியை தொலைபேசியில் அழைத்தேன். அவர் சொன்ன அடையாளங்கள் எல்லாமே எனக்குத் தெரிந்தவை என அவர் சொல்லித்தான் ஞாபகம் வந்தது. எளிதாக அவர் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். ’வாங்கோ’ என்று சோர்ந்த முகத்துடன் அவரது பெண் வரவேற்றாள். உள்ளே கோமலுடன் வேறு யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். ‘பாவைச் சந்திரன்… குங்குமத்திலே இருந்தாரே’ என்றார் அவர் மனைவி. நான் ‘ஓ’ என்றேன். ‘பாக்கறீங்களா?’ ‘இல்லை வேணாம், மூட் இல்லை’
அவர் சென்றபின் நான் உள்ளே சென்றேன். அவர் கட்டிலில் அதேபோல மல்லாந்து படுத்திருந்தார். இன்னும் மெலிந்து இன்னும் கன்னங்கள் ஒட்டி அதனாலேயே மூக்கும் பற்களும் உந்தி கழுத்துக்குக் கீழே சதை தொங்க முதியவராக இருந்தார். அவர் சிரிக்கும்போது அவரது உதடுகள் வலப்பக்கமாக கொஞ்சம் வளையும், அது அவர் குறும்பாக சிரிப்பதாகத் தோற்றம் கொடுக்கும். குறும்பாகச் சிரித்தே அந்த வளைவு நிரந்தரமாக ஆகிவிட்டிருக்கலாம். அப்போது அந்த குறும்புச்சிரிப்பு மெல்லிய படபடப்பை அளித்தது. நான் மோடாவை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டேன்.
‘பாவையப் பாத்திருக்கீங்கள்ல?’ ‘இல்லை…லெட்டர் போட்டிருக்கேன்’ ‘ஓ’ என்றார் ‘நல்ல மனுஷன்…’ நான் அவரை கூர்ந்து பார்ப்பதை தவிர்க்க எண்ணினேன். ஆனாலும் அவரது முகத்தில் கண்களில் எதையோ பார்வை பரபரவென்று தேடிக்கொண்டே இருந்தது. திருவண்ணாமலைக்கு உற்சாகமாக பஸ்ஸில் வந்திறங்கி, வரவேற்க வந்த பவா செல்லத்துரை கும்பலுடன் உரக்கச்சிரித்துப் பேசி, ஒவ்வொருவரையாக கட்டிப்பிடித்து கன்னங்களை கிள்ளி, வராதவர்களை எல்லாம் பெயர்சொல்லி விசாரித்து, விடுதியறைக்கு வந்து ஜிப்பாவைக்கூடக் கழற்றாமல் கட்டிலில் தலையணையைத் தூக்கி மடிமேல் வைத்துக்கொண்டு நாடகம் பற்றியும் இலக்கியம் பற்றியும் பேச ஆரம்பித்த கோமல். இரண்டுநாள் இரவும் பகலும் கோயிலிலும் ரமணாசிரமத்திலும் சாலைகளிலும் ஓட்டல்களிலும் பவா செல்லத்துரையின் வீட்டிலும் பேசிப்பேசி தீராமல் நள்ளிரவில் பஸ்ஸுக்காக காத்து சாலையோர கல்வெர்ட்டில் இருக்கும்போதும் பேசி பஸ் வந்து நின்றதும் பேச்சை அப்படியே விட்டு விட்டு ஓடிப்போய் ஏறிக்கொண்டவர்.
கோடைகால ஆற்றைப்பார்க்கையில் இதில் எப்போதாவது வெள்ளம் வந்ததா என்றே தோன்றும். கோமல் தனக்குள் ஆழ்ந்து சன்னலையே பார்த்துக்கொண்டிருந்தார். நோய் முற்றியபின் அவரிடம் மௌனம் அதிகரித்தபடியே வந்தது. உண்மையில் திருவண்ணாமலைக்கு வந்தபோதே அவருக்கு முதுகெலும்புப் புற்றுநோய் தீர்க்கமுடியாத கட்டத்தை அடைந்துவிட்டது. எட்டாண்டுகள் இரு அறுவைசிகிழ்ச்சைகள் மூலம் அதைத் தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். முதல் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர்தான் நெருக்கமான நண்பர்களுக்கே அவருக்குப் புற்றுநோய் என்று தெரியும். வெட்டி வீசப்பட்டு எஞ்சிய முதுகெலும்புடன் மாதம் இருபது ஊர்களில் நாடகம் போட்டிருக்கிறார். திரைக்கதைகள் எழுதினார். இரு சினிமாக்களை இயக்கினார்.
ஏதோ ஒருகட்டத்தில் மேலும் நாடகம் போடவேண்டாம் என்று டாக்டர்கள் கடிந்துகொண்டபின்னர்தான் குழுவைக் கலைத்தார். அவரது பள்ளி நண்பர் ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் தியாகராஜனிடம் பேசி பெண்கள் இதழாக இருந்த சுபமங்களாவை பெற்றுக்கொண்டு நடத்த ஆரம்பித்தார். நாலைந்து மாதத்தில் அது ஓர் அலையாக, இயக்கமாக ஆகி அவரை இன்னமும் பரபரப்பாகியது. மூத்த எழுத்தாளர்களும் இளம் எழுத்தாளர்களும் வாசகர்களுமாக ஒரு பெரிய வட்டம் திடீரென்று அவரைச்சுற்றி உருவானது. நாடகப்பித்து அவரை மேலும் துரத்தியது . நாடக விழாக்களை ஒருங்கிணைத்தார். நாடகப்பட்டறைகளும் இலக்கியச்சந்திப்புகளும் ஒருங்கமைத்தார். முன்னைவிடப் பரபரப்பாக அலைய ஆரம்பித்தார்.
குற்றாலம் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின் சட்டைகளை கழற்றி தோளில் மாட்டிக்கொண்டு பேரருவிக்கு குளிப்பதற்காகச் செல்லும்போது நான் கேட்டேன் ‘வலிக்கலையா சார்?’ ‘ஜெயமோகன், இப்ப வலி ஒரு கைக்குழந்தை மாதிரி ஆயிட்டுது. எப்ப பாத்தாலும் மூக்கு ஒழுகிண்டு நைநைன்னு அழுதுண்டு இடுப்பிலே ஒக்காந்திருக்கு. ராத்திரியிலே திடீர்னு முழிச்சுண்டு படுத்தி எடுத்திரும். ஆனா இது என்னோட வலி. என் உடம்பிலே இருந்து வந்தது. அப்ப எனக்கு அதுமேலே ஒரு பிரியம் வரத்தானே செய்யும். சனியன் இருந்துண்டு போறது. வளத்து ஆளாக்கிருவோம், என்ன?’
ஆனால் மெல்லமெல்ல அவரது நடமாட்டங்கள் குறைந்தன ஏழெட்டுமாதம் முன்னால் நான் கூப்பிட்டபோது ‘இப்ப எங்கியும் போகலை. ஆபீஸ்போகக்கூட முடியாது. வீட்டிலேயே இருக்கேன். இங்கியே எல்லா வேலையையும் பாத்துக்கறேன்’ நான் ‘வலி எப்டி இருக்கு?’ என்றேன். ‘வளந்துட்டா…இப்ப அவளுக்கு தனியா அஜெண்டா இருக்கு. எங்கியோ போகணும்னு துடிக்கறா…என்னையும் கூட்டிண்டுதான் போவான்னு நெனைக்கறேன்’ என்றார். முதல்முறையாக அப்போதுதான் அவரை ஒரு நோயாளியாக உணர்ந்தேன்.
கோமல் என்னை நோக்கித் திரும்பினார். புன்னகை செய்து ‘ஸாரி , நீங்க இருக்கறதை மறந்துட்டேன். இப்பல்லாம் மனசு அதுபாட்டுக்கு எங்கேயோ போய்ண்டே இருக்கு. ஒரு ஆர்டரே கெடையாது. ஒருமணிநேரம் கழிச்சு எதைப்பத்தி சிந்திச்சேன்னு பாத்தா ஒரு டிராக்கும் கெடையாது. எத்தனை ஆயிரம் பறவைகள் பறந்தாலும் வானத்திலே ஒரு தடம்கூட இல்லேன்னு ஒரு கவிதை இருக்கே, அதைமாதிரி…’
நான் மெல்ல ‘வலி எப்டி இருக்கு?’ என்றேன். ’முந்தாநாள் ஞாநி வந்திருந்தார். இதையேதான் கேட்டார். அந்த கதவை திறந்து இடுக்கிலே கட்டைவிரலை வை. அப்டியே கதவை இறுக்கமூடி அழுத்தமா புடிச்சுக்கோ. அப்டியே நாளெல்லாம் வச்சுக்கோ. அப்டி இருக்குன்னேன். பாவம், முகம் வெளுத்துப்போச்சு…’ என்று கோணலாக சிரித்து ‘என்னை பாத்தா நாடகக்காரனுக்கெல்லாமே கிலி. ஏன்னா அவன் தன்னையும் என்னையும் சேத்து பார்த்துக்கறான். எனக்கு வந்தது அவனுக்கும் வரலாமில்லியா? அதுவும் அவரு என்னை மாதிரியே முற்போக்கு வேற…’
கோமலின் மனைவி உள்ளே வந்து டீபாயில் காபி கொண்டு வைத்தார். சுவர் ஓரமாக நின்றுகொண்டு ‘நீங்களாவது சொல்லுங்கோ. வயசு மூத்தவா பெரியவா எல்லாரும் சொல்லியாச்சு…சின்னவா சொல்லியாவது கேக்கறாரா பாப்போம்’ என்றார். நான் ‘என்ன?’ என்றேன். ‘சொல்றேன்’ என்றார் கோமல். ‘அடம்புடிக்கறார். எல்லாத்துக்கும் ஒரு நியாயம் இருக்கணுமில்லியா?’ என்றார் அவர் மனைவி. ‘நான் சொல்லிக்கறேன் அவர்ட்ட..நீ உள்ள போ’ என்றார் கோமல். அவர் உள்ளே சென்றார்
’என்னசார்?’ என்றேன் .நாடகம் ஏதும் போடுவேன் என்கிறார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் ’நான் கைலாசமலைக்கு ஒரு யாத்திரை பண்ணலாம்னு நினைக்கிறேன்’ என்றார். ‘சார்?’ ‘அதான்யா, இமயமலைக்கு யாத்திரை…கைலாசமலைக்கு முன்னாடி போயி நிக்கணும்னு ஒரு ஆசை…கடைசி ஆசைன்னு வச்சுக்கோ’. நான் பயத்துடன் ‘சார், உங்களால எந்திரிக்கவே முடியாது’ . ‘சரி தவழ்ந்து போறேன். காரைக்காலம்மையார் மாதிரி… இப்ப என்ன?’ என்றார். ‘நடக்காத விஷயங்கள சொல்லாதீங்க…நீங்க இங்கேருந்து கெளம்பினா கால்வாசிபோறதுக்குள்ள — ‘ ‘போய்டுவேன், அதானே. போனாப்போறது. இங்க படுத்துண்டு ரயிலுக்காக வெயிட்பண்றதுக்கு தண்டவாளத்தில கையக் காட்டி நிப்பாட்டி ஏறிக்கறது பெட்டர்’. ‘சார்- ‘ ‘ஸீ, நான் முடிவு பண்ணியாச்சு’
மேற்கொண்டு நான் ஒன்றும் பேசவில்லை. ‘என்ன?’ . ‘ஒண்ணுமில்லை சார்’. ‘இந்த அளவுக்கு ரிலிஜியஸா இருக்கானே, இவன்லாம் எப்டி முற்போக்குஎழுத்தாளர் சங்கத்திலே இருந்தான்னு நினைச்சுக்கறே. இல்ல?’ ‘இல்லசார்’ என்றேன். ’அப்டித்தான் நினைச்சுக்கிட போறாங்க. பரவாயில்லை. எனக்கு இனிமே அதையெல்லாம் யோசிக்கறதுக்கு டைம் இல்லை. ஆனா நீயாவது புரிஞ்சுக்கணும்னு நினைக்கறேன். என்னைக்காவது நீ இதை எழுதிருவே…’ நான் தலையசைத்தேன்
‘இது வழக்கமான சாமிகும்பிடுறது கெடையாது. நான் ஒரு ஹிண்டு. அதிலே எனக்கு எந்த ஒளிவு மறைவும் கெடையாது. ஆனா வைதீகன் இல்லை. எந்தச் சடங்கும் நான் பண்றதில்லை. கோயிலிலே போயி கும்பிட்டுட்டு நிக்கறதில்லை. ஹானஸ்டா சொல்றேனே நான் இதுவரை எதையுமே சாமிக்கிட்ட வேண்டினதில்லை. ஒரு கட்டத்திலே கையிலே பைசாவே இல்லாம இந்த சிட்டியிலே குழந்தைங்களோட நின்னிருக்கேன், அப்பக்கூட சாமிகும்பிட்டதில்லை. ஏன் இப்ப, இந்த நோய்னு தெரிஞ்சப்பகூட சாமிகிட்ட வேண்டிகிட்டதில்லை. இந்த வலிய குறைக்கணும்னு கும்பிடாம எப்டி இருக்கேன்னு எனக்கே தெரியலை.’
நான் அவரது முகம் கொண்ட மலர்ச்சியை ஆச்சரியத்துடன் பார்த்தேன். ‘ரொம்பநாள் முன்னாடி குமுதம் அட்டையிலே ஒரு கலர் ஃபோட்டோ வந்தது. சுவாமி சாரதானந்தான்னு ஒருத்தர் எடுத்தது… இமயமலைப்படம்..’ என்று ஆரம்பித்தார். நான் மலர்ந்து அவரை மறித்து ‘எனக்கே ஞாபகமிருக்கு சார்… இமயமலைச்சரிவிலே பனியாபடர்ந்திருக்கும். அதிலே ஒரு காட்டெருமைக் கன்னுக்குட்டி படுத்திருக்கும். அது முடியெல்லாம் பனி படர்ந்து சிலிர்த்துட்டு நிக்கும்…. அப்ப ரொம்ப புகழ்பெற்ற படம் அது’
’அதேதான்’ என்றார் கோமல். ‘நான் அன்னைக்கு சிவகங்கையிலே ஒரு நாடகம் போட்டுட்டு ட்ரூப்பை அனுப்பிட்டு மறுநாள் நாடகத்துக்கு சாத்தூருக்கு நான் மட்டும் காரிலே போனேன். கார் வழியிலே எங்கேயோ நின்னுடுத்து. ரெண்டுபக்கமும் பெரிய பொட்டல். மேமாசம் வேற. அப்டியே காய்ஞ்சு தீய்ஞ்சு கண்ணுக்கெட்டின வரைக்கும் உயிரில்லாத மண்ணு. சருகுமேலே காத்து மண்ணை அள்ளிக்கொட்டற சத்தம் மட்டும் கேட்டுண்டே இருக்கு. டிரைவர் பஸ்ஸிலே ஏறி மெக்கானிக்கை கூட்டிவர்ரதுக்கு போய்ட்டான். காரிலே ஒக்கார முடியலை. இறங்கி கொஞ்ச தூரம் நடந்து ரோட்டோரமா இடிஞ்சு கிடந்த ஒரு பழைய கட்டிடத்திலே ஏறி உக்காந்து அந்த வெந்த மண்ணை பாத்துண்டே இருந்தேன். என்னன்னு தெரியாம கண்ணுலே தண்ணி கொட்ட ஆரம்பிச்சுடுத்து. அழுதிண்டே இருக்கேன். அப்ப எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எந்தத் துக்கமும் இல்லை. ஆனா அப்டி ஒரு வெறுமை உணர்வு.
‘கொஞ்சநேரம் கழிஞ்சு தோணிச்சு எதுக்காக அழறேன்னு. அந்த மண்ணோட வெறுமை மனசுக்குள்ளே பூந்துட்டுதா? அப்டி இருக்க முடியாது. மனசுக்குள்ள அந்த வெறுமை கொஞ்சமாவது இருந்தாத்தானே வெளிய இருக்கறதை அது அடையாளம் காணும். வெளிய இருக்கறது என்ன? மௌனி சொல்றாப்ல அகத்தின் வெளிவிளக்கம்தானே வெளியே. பாழ்ங்கிற சொல் மேலே மௌனிக்கு அப்டி ஒரு பிரியம், கவனிச்சிருப்பேள். பாழ்னா அவரு வீண்ங்கிற அர்த்ததிலே சொல்றதில்லை. புரிஞ்சுகிடமுடியாத பெரிய வெறுமையைத்தான் அப்டிச் சொல்றார். அவரோட பாதிக்கதையிலே அந்த அனுபவம்தான் இருக்கு.
’கொஞ்சநேரம் கழிச்சு தண்ணி குடிக்கலாம்னுட்டு காருக்குள்ள வந்தேன். முன் சீட்டிலே தண்ணி வச்சிருந்தான். கீழே இந்த குமுதம் விழுந்து கிடந்திச்சு. நான் அதை எடுத்ததுமே என் கை நடுங்க ஆரம்பிச்சிடுத்து. அந்த நேரத்திலே அந்த எடத்திலே எப்டி ஒரு நிமித்தம் பாத்தேளா? பெரிய ஒரு மெஸேஜ் மாதிரி. ஒரு அழைப்பு மாதிரின்னு கூட சொல்லலாம். அதையே பாத்துண்டு எவ்ளவு நேரம் ஒக்காந்திருந்தேன்னு எனக்கே தெரியாது.
’பின்னாடி அந்த நாளை நெறைய யோசிச்சு ஒருமாதிரி வார்த்தைகளா மாத்தி வச்சுகிட்டேன். எனக்குள்ள ஒரு பெரிய வெறுமை இருக்கு மோகன். நான் எப்பவுமே எக்ஸ்ட்ராவெர்ட். ஏகப்பட்டபேரு சுத்தி இருப்பாங்க. பேச்சு சிரிப்பு கும்மாளம்னு இத்தனை நாளையும் கடத்திட்டேன். ஆனா உள்ளுக்குள்ள ஒரு மிகப்பெரிய தனிமை இருக்கு. அந்த தனிமையைத் தொடாம அப்டியே வச்சுண்டிருக்கேன். தொட்டா என்னமோ ஆயிடும்னு பயந்து வச்சிண்டிருக்கேன்னு தோணறது. அன்னிக்கு அந்தச் சின்ன எருமைக்குட்டிய பாத்தப்ப என் மனசிலே வந்த வார்த்தை இதான், தனிமை. தனிமையோட மூர்த்தரூபமா அது அங்க ஒககந்திண்டிருந்தது.
’மனுஷன் உட்பட எல்லா ஜீவனுக்கும் இயற்கை குடுத்திருக்கிறது தனிமையத்தானே? மத்த எல்லாம் நாம குளிருக்கு போத்திக்கறது. கையிலே கிடைச்ச அத்தனையும் எடுத்து மேலே போட்டுக்கறோம். பொண்டாட்டி, புள்ளைங்க, நண்பர்கள், கட்சி, கழகம், கலை, இலக்கியம் …எல்லாமே. எல்லாத்தையும் கழட்டி போட்டுட்டு தனிமையிலே போய் நிக்கணும்னு அன்னிக்கு தோணித்து. அப்ப என்னோட உள்ளுக்குள்ள பொத்தி வச்சிருக்கிற தனிமை வெளியெ வந்து பூதம் மாதிரி முன்னாடி நிக்கும்னு நினைச்சேன். அந்த பூதத்துகிட்ட கேக்கவேண்டிய பல கேள்விகள் இருக்கு எங்கிட்ட’
நான் ’அந்தப்பூதம் கங்கை வார் விரிசடைமேல் கரந்த இளநிலவோட இருக்குமோ?’ என்றேன். ‘பாத்தீங்களா, மாட்டி விடத்தான் நினைக்கறீங்க’ நான் கவலையுடன் ‘ ஆனா நீங்க எப்டி போகமுடியும்? அசைஞ்சாலெ உங்களுக்கு வலி தாங்கலைன்னு பெட்பான் வச்சிருக்காங்க. எவ்ளவு தூரம்…இங்கேருந்து ஃப்ளைட்டிலே போலாம்னாக்கூட ஏறி எறங்கி மறுபடி வண்டியிலே ஏறி… மேலே எப்டி போவீங்க? தூக்கிட்டு போக ஆளிருக்குன்னு கேட்டிருக்கேன்’
கோமல் ‘நடந்தேதான் போகப்போறேன்’ என்றார். நான் மூச்சிழந்தேன். ‘வலிக்கும்தான். ஆனா முதுகெலும்பு ஒண்ணும் ஒடஞ்சுபோயிடதுல்ல? பாப்போம். எப்டியும் ஒரு ஒண்ணர லட்சம் காலடி எடுத்து வைக்கணும்னு நினைக்கறேன். அப்ப காலெடுத்து வைக்கிறப்ப ஒருவாட்டி, திரும்ப எடுக்கிறப்ப ஒருவாட்டின்னு மொத்தம் மூணு லட்சம் வாட்டி சுத்தியலால அடிக்கிறது மாதிரி. மூணு லட்சம் நாமாவளி சொல்றதுன்னு வச்சுக்குங்கோ. எதுவானாலும் கணக்கு வச்சுகிட்டோம்னா ஒருமாதிரி ஒரு நிம்மதி வந்திடுது.. இவ்வளவுதானேன்னு தோணிடுது.’
‘எனக்கு பயமா இருக்கு…நல்ல ஆரோக்கியம் இருந்தாலே போறது கஷ்டம்’ என்றேன் ‘நல்ல ஆரோக்கியமிருக்கிறவங்க போறது கஷ்டம்தான். அவங்களுக்கு போய்ட்டு வரணும்னு இருக்கும். திரும்பி வரவேணாம்னு நினைச்சா எங்க வேணுமானாலும் போய்டலாம்…’ நான் கொஞ்சநேரம் அவரையே பர்த்துக்கொண்டிருந்தேன். ’வாத்யார் ராமனுக்கும் இளையபாரதிக்கும் எல்லாம் சொல்லியிருக்கேன். உங்க மேட்டரெல்லாம் நேரா வா.ரா டேபிளுக்கு போய்டும். எல்லாத்தையும் போட்டிருங்கன்னு சொல்லிட்டேன்’
நான் அன்று திரும்பிச்செல்லும்போது எனக்குள் ஆழ்ந்து நடந்து மூன்றுநான்கு இடங்களில் வழி தவறினேன். இரு ஆட்டோரிக்ஷாக்காரர்கள் என்னை வசைபாடினார்கள். அந்த எருமைக்குட்டியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். நான் ஏழாம் வகுப்பிலோ எட்டாம் வகுப்பிலோ படிக்கும்போது குமுதத்தில் அந்த புகைப்படம் வந்தது. அந்த படம் இப்போது எனக்குள் ஒரு அழியா நிலக்காட்சியாக, ஒரு கனவாக நிலைகொண்டுவிட்டது. நானே அதனால்தான் இமயமலைக்கு கவர்ந்திழுக்கப்பட்டேன். அந்த மலைச்சரிவுகளில், பனிமலைகளில் எத்தனையோமுறை நடந்திருக்கிறேன்.
அந்த எருமை இப்போது இருக்காது. அதை எடுத்த சாரதானந்தா கூட இருக்க நியாயமில்லை. அந்த பனிவெளியும் இல்லாமலாகியிருக்கலாம். இமயமலை இருக்கிறது. மலைமகளின் பிறந்தவீடு. ஈசன் கோயில் கொண்ட முடி. காளிதாசன் பாடிய மலைகள். வெள்ளிப்பனிமலை மீதுலவுவோம்… மீண்டும் அங்கே செல்லப்போகிறேன் என்றோ. தன்னந்தனிமையில் அந்தி ஒளியில் பொன்னொளிர எழுந்த கைலாயத்தின் அடியில் நின்று கொண்டு நான் என்னை பார்க்கப்போகிறேன். என்ன மிச்சம் என்று. எரிசிதை அடங்கிய சாம்பலா? அதை விபூதியாக அணிந்துகொண்டு அங்கே எங்கோ குகையொன்றில் அடங்கி அமைவேனா? கைலாயம் என்பது ஒரு மாபெரும் விபூதி மலை.
கோமல் திரும்பி வந்துவிட்டார் என்று சுபமங்களா அலுவலகத்தில் சொன்னார்கள். ‘எப்படி இருக்கார்?’ என்றேன். ‘நல்லாத்தான் இருக்கார்’ ‘நடமாடுறாரா?’ ‘இல்லை, ஆனா ஒக்காந்து பேசிட்டிருக்கார்’ அவரை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.என் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ஸ்னேகா பதிப்பகத்தில் அச்சில் இருந்தது, மண். அதை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். அது அச்சானால் ஒரு பிரதியைக் கொண்டு சென்று அவருக்குக் கொடுக்க வேண்டும். அவர் இமயமுடிகளில், கைலாயத்தில் என்ன கண்டார் என்று கேட்கவேண்டும். சொல்லக்கூடும், அல்லது சென்று வந்த பெரும்பாலானவர்களைப்போல ‘சொல்லமுடியாது, நீயே போய்க்க வேண்டியதுதான்’ என்று சொல்லவும் ஆகும்.
ஒருமாதம் கழித்துத்தான் சென்னைக்குச் செல்லமுடிந்தது. ஸ்னேகா பிரசுரத்தில் தொகுப்பு அச்சாகவே இல்லை. ‘வந்திரும் சார்’ என்றார்கள். கோமல் வீட்டுக்கு கூப்பிட்டேன். யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. செல்வதா வேண்டாமா என்று தயங்கியபின் கிளம்பினேன்.வீட்டு முன் யாரும் இல்லை. சிலமுறை கூப்பிட்டபோது கோமலின் மனைவி வந்து எந்த ஆர்வமும் இல்லாமல் ‘வாங்க’ என்றார். கோமலின் மகள் மெல்லிய புன்னகையுடன் கடந்து சென்றாள். அந்த வீடுமுழுக்க மரணம் அமைதியின் வடிவில் பரவி விட்டிருந்தது.
வீட்டுக்குள் நுழைந்ததும் டிவியிலோ எங்கோ கேட்பதாக நான் நினைத்த விசித்திர ஒலி கோமலின் குரல் என்று தெரிந்து என் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. முழுக்கமுழுக்க தன்னிலை மறந்து எழும் வலியின் ஒலி அது. எந்த மிருகமும் அந்த ஒலியைத்தான் எழுப்பும். முற்றிலும் கைவிடப்பட்டு, எந்த மனிதனிடமும் எதுவும் முறையிடுவதற்கற்று போய், கண்ணுக்குத்தெரியாத ஒன்றை மட்டும் நோக்கி எழும் அழுகை. மன்றாட்டு அல்லது வசை அல்லது தன்னிரக்கம் அல்லது பிரார்த்தனை. அந்த வலியில் அவர் தன்னந்தனிமையாகவே இருக்க முடியும். அவரை ஆசிரியராக எண்ணுபவர்கள், அவரோடு தோள்சேர்ந்து நடந்த தோழர்கள், மனைவி, குழந்தைகள் அத்தனைபேரும் வேறெங்கோ, வேறேதோ உல்கில் வேறேதோ காலத்தில் நின்றுகொண்டு அவரைப் பார்க்கமுடியும் அவ்வளவுதான்.
‘பாக்கணுமானா பாருங்கோ’ என்றார் அவரது மனைவி. பேசாமல் திரும்பி விடலாமா என்றுதான் நினைத்தேன். திரும்புவதொன்றே உகந்ததும்கூட. ஆனால் ஒருவேளை அவர் என்னைத் தேடக்கூடும் என்று தோன்றியது. அப்படியென்றால் அவரைச் சந்திக்காமல் சென்றதைப்பற்றி நான் வருந்தக்கூடும். எழுந்து மெல்லக் கதவைத் திறந்தேன். அன்றுவரை அந்த அறையில் நான் உணராத ஒரு நாற்றம். மருந்துகளுடன் கலந்து எழுந்தது அது. படுக்கையில் கோமல் படுத்திருந்தார். முதல்பார்வையில் அது அவரல்ல என்று என் பிரக்ஞை மறுத்தது. அவரது பிடரிமயிர் முற்றிலும் உதிர்ந்துவிட்டிருந்தது. பஞ்சுபோல கொஞ்சம் மயிர் பக்கவாட்டில் தெரிந்தது.
நான் அவரைப்பார்த்துக்கொண்டு அப்படியே நின்றேன். அவரது முகம் மிக நன்றாக ஒடுங்கி பற்கள் மிகவும் வெளியே உந்தி தெரிந்தன. தொண்டை புடைத்து அதிர்ந்துகொண்டிருந்தது. அவரிலிருந்துதான் அந்த வலிமுனகல் எழுந்து கொண்டிருந்தது என்பதை என்னால் நம்ப முடியவில்லை, அந்த அறைக்குள் கண்ணுக்குத்தெரியாத வேறெவரோ இருக்கிறார்களா என்ன?
அவர் என்னைப் பார்த்தார். சிவந்த கண்களில் காய்ச்சல் தெரிந்தது. என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்பதுபோல் இருந்தது. நான் அருகே சென்று மோடாவில் அமர்ந்தேன். மெல்லிய முனகலுடன் ‘யாரு…மோகனா?’ ‘ஆமா சார்’ ’நல்லா இருக்கீங்களா?’ ’ஆமாசார்…’ ‘இமயமலை பயணத்தைப்பத்தி எழுதறேனே வாசிச்சீங்களா?’ ’ஆமாசார்…’ என்றேன். ‘நெறைய எழுதணும்…சொல்லிச்சொல்லி கொஞ்சமா எழுதவச்சேன்…பாப்போம்’ ‘சரியாயிடுவீங்க சார்..அவ்ளவுதூரம் போயிருக்கீங்க…’ அவர் புன்னகைசெய்தார். என் சொற்களை நான் உபச்சாரமாகச் சொல்லவில்லை. என் நெஞ்சின் ஆழத்தில் இருந்து எழுந்த பிரார்த்தனையாகத்தான் சொன்னேன்.
’வலி இருக்கு இல்லசார்?’ அபத்தமான, ஒருவேளை குரூரமான, கேள்வி. ஆனால் அதைத்தவிர அங்கே என்ன பேசுவது? ‘ஊழிற்பெருவலி யாவுள?’ என்று சொல்லி உதடுகோண புன்னகை செய்தார். அவரை கோமல் என்று அகம்நம்பியது அச்சிரிப்பைக் கண்ட பிறகுதான். ‘பெருவலின்னு சொல்றார் பார்த்தீங்களா? தமிழிலே இப்டி நெறைய சிக்கல்கள் இருக்கு. வலிமைக்கும் வலிக்கும் என்ன சம்பந்தம்? வலி இல்லென்னா வலிமை கெடையாதா? இல்ல வலிமை ஜாஸ்தியா இருந்தா வலி ஜாஸ்தியா? ஆனா அந்த வார்த்தை பிடிச்சிருக்கு. பெருவலி…நெறையவாட்டி அதைச் சொல்லிட்டே இருக்கேன்..’
முனகி முனகிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொண்டிருந்தார். பேசவேண்டாம் என்று கேட்டுக்கொள்ள நினைத்தேன். ஆனால் அவர் பேசுவதை விரும்பினார் என்று தோன்றியது. ‘வலிமரப்புக்கு ஊசி ஒண்ணும் போடலையா?’ ‘எல்லாம் போட்டாச்சு. மடைன்னா அடைக்கலாம். உடைப்புன்னா ஒண்ணும் பண்ண முடியாதுல்ல’ அவரது தஞ்சைப் பின்னணி எப்போதாவதுதான் வார்த்தைகளில் வரும். ‘உங்களுக்கு கிரா தெரியுமா, இவரு ராஜநாராயணன் இல்லை. கி. ரா.கோபாலன்.’ ‘கேள்விப்பட்டிருக்கேன். கலைமகளிலே இருந்தார் இல்ல?’ ஆமா. ஆரம்பத்திலே திருலோக சீதாராமோட பத்திரிகையிலே இருந்தார். அப்றம் மணிக்கொடி. கடைசியா கலைமகள். மணிக்கொடி கோஷ்டியிலே இவரும் உண்டு…’
‘அவர் திடீர்னு ஒருநாள் காணாம போயிட்டார், எல்லாம் அறுபதுகளிலே. எங்கெங்கோ தேடிப்பார்த்து விட்டுட்டாங்க. அப்றம் மறுபடி பத்து வருஷம் கழிச்சு ஒருநாள் நான் காசியிலே போய்ண்டிருக்கறச்ச திடீர்னு ஒருசாமியார் வந்து என் தோளை தொட்டார். எங்கியோ பாத்த முகம். நான் தான் கிரான்னார். சார்னேன். சாமீன்னு கூப்பிடுன்னார். என்ன சாமி எப்டி இருக்கீங்கன்னேன். நல்லா இருக்கேன். நீ எப்டி இருக்கேன்னார். என்ன பண்றீங்கன்னேன். சாமியாரா ஆயிட்டேன். ஆயி எதை கண்டுபுடிச்சீங்கன்னேன். தூரத்திலே ஒரு மலை தெரியுது. பொன்மலை. கைலாசம். அதைப்பாத்து போய்ட்டே இருக்கேன். இப்பவும் தூரத்திலேதான் இருக்கு, வரட்டுமான்னு சொல்லிண்டு போய் கூட்டத்தோட சேர்ந்துக்கிட்டார்’
‘இந்த டிராவல் முழுக்க கிரா ஞாபகமாகவே இருந்தது. எங்கியாவது அவர் குறுக்கே வந்திடுவார், ஏதாவது ஒண்ணு சொல்லுவார்னு. யார் யாரோ எதுவோ கண்டுபுடிக்கலாம். ஒரு இலக்கியவாதி கண்டுபுடிச்சுச் சொன்னாத்தானே அதுக்கு மரியாதை என்ன?’ என்றார் கோமல் ‘ஆனா கடைசி வரைக்கும் அந்த நம்பிக்கை இருக்கலை. பத்ரிநாதிலே இருந்து கேதார்நாத் போய் அங்கேருந்து கைலாசயாத்திரை ஆரம்பிச்சப்ப சட்டுன்னு அவ்ளவுதான் கிரா இப்ப கெடையாதுன்னு தோணிட்டுது. எங்கோ அவரு விழுந்து மட்கி மண்ணாயாச்சு. அப்டி எத்தனையோ பேர் வீட்டையும் சொந்தங்களையும் விட்டுட்டு வந்திருக்காங்க . எதையோ தேடி எதையெதையோ கண்டுபிடிச்சு செத்திருக்காங்க. எல்லாம் அந்த மண்ணிலத்தான் இருக்கும்..’
‘கஷ்டப்பட்டீங்களா?’ ’அதைப்பத்தி என்ன பேச்சு? . கண்ணமூடிண்டு எம்பி கெணத்திலே குதிக்கிற மாதிரி பாய்ஞ்சு நாலஞ்சடி போயிடுவேன். அப்றம் கொஞ்சநேரம் நிப்பேன்’ என்றார். ‘ ‘நின்னா ஆசுவாசமா இருக்குமோ?’ என்று கேட்டேன்.‘யார்யா நீரு…நின்னா வேற மாதிரி வலி. நடக்கறச்ச கடப்பாரையால அடிக்கிற மாதிரின்னா நின்னா மண்வெட்டியால வெட்டுற மாதிரி…ஒரு சேஞ்ச் இருக்கறது நல்லதுதானே? பெருவலி…பாதாளத்திலே ஒரு ராஜா இருந்தானே, மாவலி. பெருமாள் அவனை ஒர்ரே மிதியா மிதிச்சு பாதாளத்துக்குத் தள்ளிட்டார். ? பேரே எப்டி பாத்தியா, மா-வலி..பெருமாளே மிதிச்சா அப்டி ஒரு வலி இருக்கத்தானே செய்யும்?’
சட்டென்று எதிர்பாராமல் யாரோ தாக்கியது போல ‘அம்மா!’ என்று அலறினார். ‘அம்மா அம்மா அம்மா’ என்று கொஞ்சநேரம் அரற்றினார். நான் எழுந்து விடலாமா என்று யோசித்தேன். ‘பொறப்படறேளா” ‘இல்லை’ என்று அமர்ந்துகொண்டேன். ‘இமயமலைக்கு போய் கைலாசத்த பாக்காம செத்திருந்தேன்னா மறுபடி இங்கேயே பொறந்து மறுபடியும் இந்த நாடகங்களை எல்லாம் போட்டு தமிழ்நாட்டை ஒருவழி பண்ணியிருப்பேன். தப்பிச்சிட்டீங்க…’ என்றார். கண்களை மூடிக்கொண்டார். இமைகள் மேல் மெல்லிய சதை அதிர்ந்தது. வலது கன்னம் இழுபட்டு இழுபட்டு துடித்தது. பின் கண்களைத் திறந்து ‘கண்ணை மூடினா மலையிலே நான் போய்ட்டிருக்கிறதை பாக்க முடியறது’ என்றார்
‘உயரம்தான் இமயமலை. காலடியிலே இருந்து இறங்கி சரசரன்னு கிலோமீட்டர் கிலோமீட்டரா போய்ட்டே இருக்கிற பாதாளம் கூட பெரிய உயரம்தான், என்ன தலைகீழா நிக்கிற மாதிரி யோசிச்சுப்பாக்கணும். மனுஷனை சின்னச்சின்னதா எறும்புகளா ஆக்கற உயரம். அந்தி மாதிரி எப்பவும் ஒரு கருக்கிருட்டு. மலையோட இடுப்பில சுத்தின அர்ணாக்கொடி மாதிரி பாதை. கொஞ்ச தூரம் போனதும் பக்கவாட்டிலே இருந்து பெரிய மலை அப்டியே திரும்பி கண்முன்னாடி எழுந்திரிச்சு வந்து நின்னுட்டிருக்கும். இதோ இருக்கேன்னு…பிரம்மாண்டமான பூதம். பூதகணங்கள் தலையிலே வளைவா வானத்தை தாங்கிண்டு நிழலும் இருளுமா நீலமும் கருப்புமா ஒக்காந்திண்டிருக்கு. ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டு தியானத்திலே இருக்கிற மாதிரி.
‘இந்த மலைக்கு அந்தப்பக்கம் திரும்பினா கைலாசம்னு சொன்னாங்க. அதைகேட்டப்பவே என் கூட இருந்தவங்க கைகூப்பிண்டு அரற்ற ஆரம்பிச்சாச்சு. திடீர்னு காரணமே இல்லாம எனக்கு ஒரு பெரிய ஏமாற்றம் வந்தது. அங்க ஒரு பெரிய மொட்டை மலையைத்தான் பாக்கப்போறோம்னு ஒரு நினைப்பு. ஏன்னா அதைத்தான் உள்ளுக்குள்ள எதிர்பார்த்திட்டிருந்தேன். என்னோட லாஜிக் மைண்டு அதைத்தான் கணக்குபோட்டு வச்சிருந்தது. முப்பதுவருஷமா முட்டாத்தனமா ஏதோ கனவ வளத்து வச்சுண்டு இது வரைக்கும் வந்தாச்சு. அந்தக்கனவு என் அன்றாட வாழ்க்கையிலே இருந்த சலிப்பை இல்லாம பண்ணி ஒரு சின்ன குளுமைய மனசிலே நிறைச்சிட்டிருந்தது… அதை அப்டியே விட்டிருக்கணும்…இவ்ளவுதூரம் வந்திருக்கக்கூடாது…
’அந்த ஒரே எண்ணம்தான் மனசு முழுக்க. வந்திருக்கக் கூடாது. வந்திருக்கக் கூடாது. அப்டியே கால் உறைஞ்சிடுத்து. என்னால என்னோட கை விரலைக்கூட அசைக்க முடியலை. ஏன் இமையக்கூட அசைக்க முடியலை. என் மனசும் அந்த ஒரே வார்த்தையிலே அப்டியே உறைஞ்சிடுத்து. வந்திருக்கக் கூடாது வந்திருக்கக் கூடாது. திடீர்னு ஒரு பயம். நான் செத்துட்டேனா? அந்த வார்த்தையிலேயே என் மூச்சு நின்னுட்டுதா? இப்ப என் சடலத்துக்குள்ள நின்னுட்டு இதை யோசிச்சிட்டிருக்கேனா? இதுதான் மரணமா?
‘உண்மையிலே, மோகன் என் உடம்பு சடலம் மாதிரி குளுந்து உறைஞ்சு எங்கியோ இருந்தது. வலிக்குதான்னு பாத்தேன். வலியே இல்லை. ஆமா அப்ப செத்தாச்சு. அப்பாடா செத்துட்டேன். இனிமே வலியே இல்லை. ஊழிற்பெருவலி யாவுள? அடடா , செத்தாலும் விடமாட்டேங்கிறாரே தாடிக்காரர். பெருவலி மறைஞ்சாச்சு. மாவலிக்கு மோட்சம் கிடைச்சாச்சு. செத்துட்டேன், செத்துட்டேன்னு கொண்டாடணும் போல இருக்கு. துள்ளிக்குதிச்சு ஆர்ப்பரிக்கணும்போல இருக்கு.
‘அந்த மலை ஏறுற வழி முழுக்க வடநாட்டுக்கார பக்தர்ங்க கைதட்டி ஆடிட்டே பாடிட்டே வர்ரதை கவனிச்சப்ப நானும் அதேமாதிரி ஆடிட்டே ஏறணும்னு நெனைச்சேன். ஆனால் அந்த வலி இல்லாம இருந்தாக்கூட ஆடியிருப்பேன்னு சொல்ல முடியாது. வலி இல்லாம இருந்திருந்தா மலைக்கு வந்திருப்பேனாங்கிறதே சந்தேகம்தான். அப்ப ஆடணும்ணு தோணிச்சு. ஆனா என்னை அந்த உடம்புக்குள்ளே இருந்து வெளியே கொண்டுவர முடியலை. அப்ப பீதி வந்திட்டுது. இதுக்குள்ளே மாட்டிண்டு இங்கேயே கெடக்கப்போறானா? பொறியிலே மாட்டிண்டு பொறியோட மட்கி அழுகிப்போற காட்டெலி மாதிரி…
‘எல்லாம் ஒரு நாலஞ்சு செகண்டு மயக்கம்தான். தெளிஞ்சுட்டுது. அப்டியே ஓரமா ஒக்காந்துட்டேன். வேண்டாம். அவங்கள்லாம் கைலாசத்தை பாக்கட்டும். நான் திரும்பிடறேன். எனக்கு அது மானசகைலாசமாகவே இருந்திடட்டும்னு நெனைச்சேன். எங்கூட ஒரு மார்வாடிக்காரி வந்தா. கீழே இருந்தே என்னை அவதான் அப்பப்பா அன்பா பாத்துக்கிட்டவ,. நல்ல ஸ்தூல சரீரம். மூச்சு வாங்கி வாய ஸீல்மிருகம் மாதிரி பொளந்து முகத்தை தூக்கி தூக்கி பொதபொதன்னு நடந்து வர்ரா. சதையெல்லாம் ததும்புது. அந்தகுளிரிலயும் நெத்தியெல்லாம் வேர்வை.
’அவளால என்கிட்ட துண்டு துண்டாத்தான் பேசமுடியறது. வரலையா? கைலாஷ் வந்தாச்சு. இதோ இருக்கு. இதோ கன்முன்னாடி தெரியுது கைலாஷ்… அப்டீன்னு சொல்றா. நான் வலிக்குது என்பதுபோல வாயசைச்சேன். அவள் ’ஒரு எட்டுதான் இதோ இருக்கு இவ்வளவுதூரம் வந்துட்டீங்களே’ன்னு கேட்டா. அவளோட வாழ்கையிலே கடைசி லட்சியமா அத வச்சிட்டிருந்துருப்பா போல. ’அதோ எனக்கு விளிம்பு தெரியறது, பக்வான் கைலாஷ்!’னு சொல்றப்பவே கண்ணுலே தண்ணி வந்து கன்னங்களிலே உருளுது. கைகளை கூப்பிட்டு மெல்ல ஆடிகிட்டு பஜனை மாதிரி என்னமோ பாடுறா. பைத்தியம்புடிச்சவ மாதிரி இருக்கா.
’அந்தக் கும்பலிலே கிட்டத்தட்ட அத்தனைபேருமே அப்டித்தான் இருக்காங்க. நான் மட்டும் குளுந்து உறைஞ்சு வேற எங்கியோ நின்னுட்டு அவங்கள ஆச்சரியமா பாத்துண்டிருந்தேன். அவ என் கையைப் புடிச்சு வாங்கன்னு தூக்க வந்தா. ’இல்லம்மா என்னால முடியலை நீ போ’ன்னேன். ’நீங்க வாங்க, நீங்க வராம நான் எப்டி போறது?’ன்னு என் பக்கத்திலேயே நின்னுட்டா. எல்லாரும் முன்னாடி போயாச்சு. இருட்டு பரவின மலைப்பாதையிலா நானும் அவளும் மட்டும்தான். எங்கேயே பொறந்து எங்கேயோ எப்டியோ வாழ்ந்த ரெண்டு ஜீவன். அங்க நாங்க அப்டி நிக்கணும்னு எழுதியிருந்தது.
நான் திடமா ’பெஹன்ஜீ நீங்க போங்க, நான் ஒரு அஞ்சு நிமிஷத்திலே வந்திடறேன்’னேன். ;இல்லை உங்கள தனியா விட்டுட்டு போகமாட்டேன்;னா. ’அவங்க இப்ப திரும்பி வந்திடுவாங்க’ன்னேன். ’சரி பரவாயில்லை, நான் கைலைலாஷ்ஜியை பாக்கக்கூடாதுன்னு ருத்ரனோட கட்டளைன்னா அப்டி ஆகட்டும். எப்டி தனியா விட்டுட்டு போவேன்’னா. எனக்கு மனசு நெகிழ்ந்துட்டுது. எப்ப வேணுமானாலும் எதையும் விட்டுக்குடுக்க ரெடியான ஒரு வாழ்க்கை. எந்தப் பிடியிலயும் இறுக்கம் இல்லை. கையிலே ஒண்ணுமே நிக்காது. அதனால அவங்க ஒண்ணையுமே சாதிக்க முடியாது. ஆனா மிக முக்கியமான எதையெல்லாமோ அடைஞ்சிடறாங்க இல்லியா?
’நான் தனியா இருக்கனும்னு நெனைக்கறேன். என்னை விட்டிருங்க’ன்னு கடுமையா சொன்னேன் ‘ நீங்கபோய் பாத்துட்டு திரும்பி வந்து என்னை கூட்டிட்டு போங்க. அதுவரை ஒக்காந்திருக்கேன்’னேன். கொஞ்சம் தயங்கிட்டு ‘இங்கேயே இருங்க இதோ வந்திடறேன்’னு கெளம்பி ஓடிப்போனா. மலைச்சரிவுப்பாதையிலே நான் மட்டும் தனியா உக்காந்திருந்தேன். அந்த தனிமையை ஃபீல் பண்ணத்தான் அவ்ளவுதூரம் வந்தேனான்னு நினைச்சுகிட்டேன். அதுகூட என்னோட உச்சமா இருக்கலாம் இல்லையா? ஒருவேளை சிவன் நினைச்சதே இதுதானோ. இதுதான் என்னோட பிரைவேட் கைலாசமோ.
‘தனியா அங்கே ஒக்காந்திட்டிருதேன். அந்த நானே வேற யாரோ மாதிரி இருக்கு. கனமான பூட்ஸ். ஸ்வெட்டர் மேலே கனமான கோட்டு. வெள்ளை வெளேர்னு பனிக்குல்லா. எம்ஜிஆர் போடுவாரே அதை மாதிரி. கழுத்திலே மஃப்ளர். மொத்ததிலே என்னோட மூக்கும் நெத்தியும் மட்டும்தான் கைலாசம் பாக்க போயிருக்குன்னு தோண்றது’
‘நல்ல இருட்டு. இருட்டுன்னா நாம இங்க பாக்கிற இருட்டு இல்லை. ஒருமாதிரி நீலநிறமான இருட்டு. தூரத்திலே வெள்ளிமலைகளோட உச்சி மட்டும் சாம்பல்நிறமான வானத்திலே தூரிகையால தீட்டினமாதிரி தெரிஞ்சுது. சரிவெல்லாம் நீலத்திரைய போட்டு மூடினதுமாதிரி இருந்தது. சத்தமே இல்லை. அதுக்கு ஒரு காரணம் நம்ம காது நல்லா அடைச்சுக்கிடும்ங்கிறதுதான்.எங்க ட்ரூப் பக்கத்திலேதான் நின்னுட்டிருந்தது. ஆனா அவங்களோட சத்தம் ரொம்ப தூரத்திலே கேக்கற மாதிரி இருந்தது. குளிரிலே உடம்பு அதுவே தூக்கித்தூக்கி போட்டுது. ஆச்சரியமென்னன்னா வலியே இல்லை. வலி இருந்துதான்னா இருந்திருக்கலாம், நான் அதை ஃபீல் பண்ணலை.
‘சாயங்காலம் மூணு மூணரைதான் இருக்கும். ஆனா அங்க நேரமே கெடையாது. ஏன் காலமே கெடையாது. மலைச்சிகரங்களுக்கும் காலத்துக்கும் என்ன சம்பந்தம்? அதெல்லாம் அப்டியே காலாதீதமா ஒக்காந்திண்டிருக்கு. சீக்கியர்கள் அவங்க கடவுளை சத்ஸ்ரீ அகால்னு கும்பிடுறாங்க. அகாலம். அகால். என்ன ஒரு வார்த்தை. அகாலத்திலே யாராச்சும் காலமாக முடியுமா என்ன? காலா சற்று என்னருகே வாடா உன்னை உதைக்கிறேன். ஏன் வலிக்கவே இல்லை? வலிங்கிறது வாழ்க்கை. வாழ்க்கைமேலே படியற மரணத்தோட அதிர்வு. வாழ்வும் மரணமும் இல்லாத எடத்திலே ஏது வலி.
’அப்டியே ஒக்காந்திட்டிருக்கேன். கண்மட்டும் மலைச்சரிவுகளை தேடித்தேடி பாத்துண்டிருக்கு. என்னமோ நடந்திரும்ங்கிறது மாதிரி. ஆனா அது அப்ப தெரியலை. அப்றம் கோட்டுப் பையிலே இருந்து பைனாகுலரை எடுத்து வச்சுண்டு மலைச்சரிவுகளை பாத்தேன். அப்ப சட்டுன்னு தூரத்திலே அதை பார்த்தேன். அந்த எருமைக்கன்னுக்குட்டியை. சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. என்னோட கற்பனைன்னோ பிரமைன்னோ சொல்வீங்க. ஆனா உண்மை. சத்தியமான உண்மை. அதே கன்னுக்குட்டி, அதே எடம். சாரதானந்தர் எடுத்த அந்த போட்டோ மாதிரி அதே காட்சி. சத்தியமா அதே கன்னுக்குட்டிதான்.
‘ஒரு ரெண்டு மூணு கிலோமீட்டர் தள்ளி பெரிய வெள்ளைநிறமான மலைச்சரிவு. அதெல்லாம் வெள்ளைமண்ணும் கூழாங்கல்லும்னுதான் நெனைச்சிருந்தேன். அது வெள்ளைப்பனி. பொருக்குபொருக்கா உப்பை கொட்டிவச்சதுமாதிரி. அதிலே முன்னங்காலை மடக்கிண்டு தலையை திருப்பி கண்ணை மூடி படுத்திருக்கு. அப்டியே ஆழ்ந்துபோனதுமாதிரி படுத்திருக்கு. ஒரு படபடப்பு வந்து என் பார்வையை மறைச்சிட்டுது. உண்மைதானா, இல்லை ஏதாவது மனப்பிராந்தியா? மறுபடியும் பாத்தேன். அதேதான். . அந்த எருமைக்கன்னுக்குட்டியேதான்.
‘பொறந்து ஒரு நாலஞ்சுமாசம் ஆகியிருக்கும். புத்தம்புதிசு. பரிசுத்தமான ஒடம்பு. ஒரு பிரம்மாண்டமான எலிக்குஞ்சுன்னு ஒருசமயம் தோணிச்சு. பிரம்மாண்டமான கருங்கல் நந்தின்னு இன்னொரு சமயம் தோணிச்சு. சட்டுன்னு அது பக்கத்திலே போய் அதை அப்டியே அள்ளி உள்ளங்கையிலே எடுத்துக்கிட்டேன். அதோட காலடியிலே நின்னேன். அதோட குளம்புக்கே என்னளவுக்கு உயரம். என்னஒரு சருமம். சாம்பல்நிறமான கண்ணாடித் துருவல் மாதிரி முடி. எளம் நுங்கு மாதிரி மூக்கு. சிப்பிகள் மாதிரி குளம்புகள். இவளவு தூய்மையா? இவ்ளவு பரிசுத்தமா இது…சாரதானந்தா என்ன பண்ணினார்? இதை படம் எடுத்த அந்த செகண்டிலேயே அவர் செத்துப்போகலையா?
’அந்தம்மா திரும்பி வந்தப்ப நான் அங்கியே மல்லாந்து மயக்கம்போட்டு படுத்திருந்தேன். அவ வந்து என்னை உலுக்கி மூஞ்சியிலே தண்ணி தெளிச்சு எழுப்பினா. ஃப்ளாஸ்கிலே இருந்து சூடான காபிய குடிக்க வச்சா. நான் எந்திரிக்க போனப்ப ‘இல்லை அசையவேண்டாம்…கொஞ்ச நேரம்போகட்டும்னா’ ‘இல்லை, இப்பவே நான் கைலாசத்தைப் பாக்கணும்’னு கெளம்பிட்டேன். ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அஞ்சு நிமிஷத்திலே போய்ட்டேன். அங்க இருந்த கனமில்லாத காற்றிலே நான் பஞ்சுமாதிரி போய்ட்டே இருந்தேன்.
’சாம்பல்நிறமா வானம். கறுப்பு கொடைவழியா மத்தியான்ன சூரியனைப் பாக்கற மாதிரி வானத்திலே ஒரு ஊமைவெளிச்சம். சூரியன் இல்லை. கைலாசம் எங்கேன்னு பாக்கறேன். நாலஞ்சு உயரமான பனிமலைகள், வெள்ளைகூடாரத்தை வானத்திலே இழுத்து கட்டி வச்சதுமாதிரி. சட்டுன்னு பார்த்துட்டேன். அப்டியே உடம்பு பரவசமாகி சிலிர்த்து பனிக்கட்டியா ஆயிட்டுது. சூடா கண்ணீர் ஊறி கொட்டிட்டேஇருக்கு. ரெண்டுகையையும் மார்பிலே கோத்துக்கிட்டேன். உதட்டை இறுக்கி கடிச்சுகிட்டு அப்டியே நின்னேன். ‘கர்மாவை கழிச்சாச்சுன்னு’ யாரோ சொன்னாங்க. இல்ல நானே நெனைச்சுகிட்டேனா?
’குளிர்ந்த காத்து கீழே மலைச்சரிவிலே இருந்து ஏறிவந்து மேலே போச்சு. அப்றம் மேலே இருந்து மயில்பீலிகளை கொட்டுறமாதிரி கனமான பனிக்காற்று வந்து மூடிட்டு கீழே போச்சு. கைலாசத்தோட வலப்பக்க சரிவிலே வெள்ளை செம்மறிக்கூட்டம் நிக்கற மாதிரி பனிமேகம். மடியிலே ஒரு பட்டுத்துவாலைய போட்டுண்டு கைகளை கோத்து வச்சுண்டு அது தியானத்திலெ இருந்தது. ஒரு சத்தம் கெடையாது. அகாலம். சத்தம் இல்லேன்னா சொல்றது. இருக்கு. காத்து போற சத்தம் கேட்டுண்டே இருக்கு. கடலுக்குள்ள படகிலே போனா மெட்ராஸோட ஒட்டுமொத்த சத்தம் அலையலையான இரைச்சலா கேக்கும் . அதே மாதிரி காத்தோட சத்தம். சிலர் தும்மறாங்க, சிலர் மூச்சு விட்டு ஏங்கறாங்க, சிலர் மெல்ல விசும்பறாங்க. எங்க கூடவே வந்த நாலுகுதிரைகள் செருக்கடிச்சு காலால தரைய தட்டுற சத்தம். ஆனா எல்லா சத்தமும் சேர்ந்து பெரிய நிசப்தமா ஆயிட்டுது. எங்க எல்லார் மனசிலயும் ஓடிண்டிருந்த எல்லா காலமும் சேர்ந்து அகாலமா ஆயிட்டுது
’சாம்பல் நெறமான வானத்திலே அங்கங்க சிவப்பு தெரிய ஆரம்பிச்சது. ரோஸ் நெறத்த பஞ்சிலே முக்கி அங்கங்க ஒத்தி எடுத்தது மாதிரி. அப்றம் செவப்பு அப்டியே வானத்தோட கீழ் வளைவிலே நல்லா எறங்க ஆரம்பிச்சுது. வானத்தோட மேல்தோலை உரிச்சிட்டதுமாதிரின்னு தோணிச்சு. அப்பதான் நான் என் வலிய மறுபடி ஃபீல் பண்ண ஆரம்பிச்சேன். பழுக்கக் காய்ச்சின சூட்டுக்கோலை என்மேலே அழுத்தி வருடிட்டே போறதுமாதிரி. பழுக்க காய்ச்சின பாதரசமே ரத்தமா மாறி உடம்பு முழுக்க ஓடுறது மாதிரி. உடம்புக்குள்ள எல்லா உறுப்புகளும் தீக்காயம்பட்டு வெந்து வடிஞ்சிட்டிருக்கு.
‘என்னையே உசிரோட யாரோ தோலுரிக்க ஆரம்பிச்சாங்க. தோலை உரிச்ச எடங்களிலே சதை நின்னு விதிக்குது. மொத்தமா தோலை உரிச்சு விட்டுட்டு போய்ட்டாங்க. வெளிக்காத்துல சதை திகைச்சு நடுங்கிண்டிருக்கு. என் பார்வை ரொம்ப மங்கியிருக்கனும். நான் கீழே விழுறமாதிரி தோணிச்சு. எங்கியோ மெரினா பீச்சிலே கடல்காத்திலே விழுறேனான்னு ஒரு பிரமை. அப்ப திடீர்னு ஏகப்பட்ட குரல்கள் ஜெய் ஸ்ரீ கைலாஷ்னு கூவறமாதிரி இருந்தது. மெட்ராஸிலே ஏது வடநாட்டுக்கூட்டம்? இல்ல இது ராமேஸ்வரமா
‘சட்டுன்னு கன்ணத்தெறந்தேன். என் கண்ணுமுன்னால பொன்னால ஆன ஒரு கோபுரமா கைலாசம் வானத்திலே தகதகன்னு நின்னுட்டிருந்தது. அதோட ஒருபக்கம் கண்கூசற மஞ்சளிலே மின்னுது. இன்னொருபக்கம் வளைவுகளிலே இருட்டோட புடைப்புகள் பொன்னா ஜொலிக்குது.பொன். ஆகாசத்துப்பொன். பரிசுத்தமான பொன்மலை. மனுஷன் அள்ள முடியாத செல்வம்… இன்னும் இருக்கு. இத்தனைக்கு அப்பாலும் அது அங்க இருக்கு. எப்பவும் இருந்துண்டேதான் இருக்கும்.
’அங்க நின்னுட்ட்டிருந்த எம்பது பேரும் கண்ணிர் விட்டுட்டிருந்தாங்கன்னு சொன்னா நீங்க நம்பமாட்டீங்க. ஏன் கண்ணீர்? துக்கமா துக்கம் வழிஞ்சு போன ஆனந்தமா? ஒவ்வொரு மனசும் ஒரு பிரபஞ்சம். அங்கே ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு சொற்கமும் நரகமும். ஆனா பொதுவா எல்லாருமே மனுஷங்கதானே. சின்னப்பூச்சிங்க ஒரு கூழாங்கல்லிலே ஒண்டிக்கிட்டு நிக்கிற மாதிரி. இவ்ளவு அற்பமா இவ்ளவு கேவலமா வாழ விதிக்கப்பட்டிருந்தாலும், இவ்ளவு துக்கத்தையும் வலியையும் அனுபவிச்சு அர்த்தமில்லாம சாக விதிக்கப்பட்டிருந்தாலும் யாரோ மானுடம் மேலே இந்த மகத்தான மணிமுடிய சூட்டியிருக்காங்களே! தாங்க முடியலை. அந்த மகத்தான கௌரவத்தை குடுத்த அது எதிர்பார்க்கிறத்தான் செய்றோமா?
’அய்யய்யோ அய்யய்யோன்னு அகம் கூப்பாடு போடுது…கூசி சிலுத்துட்டுது உடம்பு. என்னென்னமோ கீழ்மையெல்லாம் ஞாபகம் வந்து மனசு கொந்தளிக்குது. கீழ்மைகளைப்பாத்து பாத்து கண்புளிக்கிற ஒரு துறையிலே இருந்தவன் நான் மோகன். பெரியவங்களோட கீழ்மை. சிறியவங்களோட கீழ்மை. இத்தனை கீழ்மைகளுக்கும் மேலே இந்த கிரீடத்தை தூக்கி வச்சு மனுஷனை ஆசீர்வதிச்ச முட்டாள் யாரு? மனுஷன் எத்தனை மகத்தான வார்த்தை. சொல்லிட்டான். ஆனா, நான் எட்டு பேராலே ராவெல்லாம் கற்பழிக்கப்பட்ட பன்னிரண்டு வயசுப்பொண்ண கைத்தாங்கலா அவ அம்மா தூக்கிண்டு போறத பாத்திருக்கேன் மோகன். எட்டு பேரும் பொண்களை பெத்த அப்பாக்கள். ஈவிரக்கமில்லாம ஏமாத்தப்பட்ட பொண்கள் நின்னு கதறுறத பாத்திருக்கேன். அநீதிகளை விழுங்கி விழுங்கி வயிறே ஆசிட்டால நிறைஞ்சுடுத்து
’கபோதி, உனக்கெதுக்குடா முதுகெலும்பு ?. நீ நின்னு எரிஞ்சிருக்க வேண்டிய எடங்களிலே எல்லாம் குளுந்து கல்லா நின்ன கோழை தானேடா? அன்னிக்கு உன் வாயிலே எழுந்த சாபத்தையெல்லாம் துப்பாம உள்ளுக்குள்ள சேத்து வச்சிட்டே. எல்லாம் படிஞ்சு உன் முதுகெலும்பு உளுத்துப்போச்சு. உப்பு பட்ட இரும்பு மாதிரி துருப்பிடிச்சு தொங்கி போச்சு. இந்தா, என் முதுகெலும்பு ஒண்ணை ஒண்ணு கவ்விண்டிருக்கிற நூறு தேளு மாதிரி இருக்கு. நூறு கொடுக்கு. நூறு வெஷம்… என் மேலேயா தூக்கி வச்சிருக்கே இந்த பொற்கிரீடத்த? வெளையாடுறியா? கேலி பண்றியா? நான் பட்ட சிறுமைக்குமேலே இன்னும் சிறுமைப்பட்டு கூசி புழுவா மலமா இங்க நிக்கணும்னு நெனைக்கறியா?
’எங்க இருக்கே? இருக்கியா? நீ இல்லாம இருந்தா நல்லா இருக்கும்னு வாழ்நாளெல்லாம் ஆசைப்பட்டேனே. நீ இல்லாத எடத்திலே எதுவும் நடக்கலாம். நீ இல்லேன்னா எல்லாத்தையும் நியாயப்படுத்திடலாம். நீ இல்லேன்னா எல்லாத்துக்கும் வேற அர்த்தம் வந்திடுது. ஆனா எங்கேயோ அலகிட முடியா வெளியிலே உக்காந்துண்டு பாவி மனுஷன் மேலே இந்த மகத்தான ஒளிக்கிரீடத்த தூக்கி வச்சிருக்கே.
‘அய்யோ, இந்த தருணத்திலே ஒரு கணம் ஒரே ஒரு கணம் அதை நான் என் தலையிலே சூடிக்க முடியுமானா எல்லாமே அர்த்தமாயிடும். ஒண்ணும் வீணாப்போகலைன்னு ஆயிடும். நான் வாழ்ந்ததுக்கும் வந்ததுக்கும் அர்த்தம் வந்திடும்.. டேய், பாவிகளா உங்க ஒவ்வொருத்தன் சார்பிலயும் இத நான் எடுத்து தலையிலே வச்சுக்குவேண்டா…. ஏன்னா நீங்களும் உங்க எட்டுதலைமுறையும் படுற எல்லா வலியையும் நான் தின்னாச்சு. நானும் என் ஏழு முன்னோர்களும் செஞ்ச எல்லாத்துக்கும் நான் தண்டனைய அனுபவிச்சாச்சுடா… நான் ஏசு போல. எனக்கு முள்முடி வேணாம். இப்ப இந்த பொன்முடி வேணும். நீ எங்க இருந்தாலும் சரி, நீ நியாயமறிஞ்சவனா இருந்தா மனுஷன்ங்கிற அற்பப்புழு மேலே உனக்கு கொஞ்சமாவது நம்பிக்கை இருந்தா அந்த பொன்முடி இப்ப என் தலையிலே வந்தாகணும்…இப்ப—
’இத எப்டி நான் சொல்றதுன்னு தெரியலை…சத்தியமா தெரியலை. இது கண்டிப்பா சீக்குபுடிச்ச மனசோட பிரமை கெடையாது. என் தலையிலே அந்த மாபெரும் கிரீடம் வந்து ஒக்காந்தது. அந்த ஒளியிலே என் உடம்பே தங்கமா ஜொலிச்சது. கீழே விரிஞ்சுகிடந்த மொத்த உலகத்துக்கும் சக்ரவர்த்தியா அங்கே நின்னேன். அத்தனைபேர் மேலேயும் கட்டுக்கடங்காத கருணை பெருகி ஒரு பிரம்மாண்டமான அவலாஞ்சி மாதிரி மலையெறங்கி போய் கோடை மழை மாதிரி பூமி மேலே கொட்டிச்சு. குளிரக்குளிர உலகம் அதிலே நனைஞ்சு மலர்ந்து நின்னுட்டிருந்தது. அங்க நின்னு அத்தனை பேரையும் பூர்ணமா மன்னிச்சேன். நேத்தும் இன்னைக்கும் நாளைக்குமான அத்தனை மனுஷங்களையும் மன்னிச்சேன்.
’அப்ப ஒண்ணு நடந்தது. அங்க நின்ன அத்தனைபேரும் என்னைத் திரும்பிப்பார்த்தாங்க. அத்தனை கண்ணிலயும் பரவசமும் பக்தியும். சிலர் முகத்திலே கண்ணீர் ஒளிவிட்டுது. சிலர் கைய கூப்பிட்டாங்க. பெஹன் என்னமோ சொல்ல வாயெடுத்து உதடு அப்டியே நின்னுட்டுது. நான் அவங்களப் பாத்தேன். அவங்களப் பாக்கவும் இல்ல’
நீண்ட அமைதி. அறைக்குள் இருந்த மங்கிய வெளிச்சத்தில் கோமலின் உடல் கிடந்தது. அவர் அப்போது அங்கே இல்லை. அவர் பேசினாரா இல்லை அனைத்தையும் நான் கற்பனைசெய்துகொண்டேனா? என் மனம் விம்மிக்கொண்டிருந்தது. இரு விரல்களால் கண்களை அழுத்தி என் கண்ணீரை அடக்கிக்கொண்டேன்.
‘அம்மா! அம்மா! அம்மா’ என்று கோமல் பெரிய குரலில் அலறினார். அவரது மனைவி வந்து அருகே பேசாமல் நின்றார். அவர் தீயருகே நிற்பது போல இருந்தது முகம். கோமல் கைகாட்ட அவர் கோமலை பிடித்து சற்றே அசைத்து அமர்த்தினார். ‘அம்மா, எங்கம்மா, தாயே ,எங்கம்மா! ’ என்று கதறி நடுங்கும் கரங்களால் அவர் தோளைப்பற்றிக்கொண்டார். தலையணையை மாற்றி விட்டு ஒரு மாத்திரையை கொடுத்தார். அதை அவர் விழுங்கி கண்களை மூடினார். ’அம்மா! அம்மா! அம்மா!’ என்று கத்திக்கொண்டே இருந்தார். உரத்த குரல் மெல்ல முனகலாகியது
சட்டென்று கண்களை திறந்து என்னைப்பார்த்தார். ‘நீயா?’ என்பது போல. பின் பெருமூச்சு விட்டார். ‘ அன்னிக்கு திரும்பறப்ப நான் எல்லா வார்த்தைகளையும் இழந்துட்டேன். இனிமே சொல்லிக்கவும் தெரிஞ்சுக்கவும் ஒண்ணுமில்லை. இவ்ளவுதான். கணக்குக்கு கீழே கோடு போட்டு விடைய எழுதியாச்சு. கணக்கையே அழிச்சுடலாம். என்ன? ஒவ்வொரு அடியாதூக்கி வச்சு வந்திட்டிருந்தேன். வர்ர வழியிலே வலி அறிமுகமான இன்னொரு ஆள் மாதிரி தனியா கூடவே வந்தது. பரவாயில்லை, இதைமாதிரி கடைசி வரை கூடவர்ர நண்பன் வேற எங்க கெடைப்பான்? ஊழிற்பெருவலி. ஊழெனும் பெருவலி..
’அன்னிக்கு ராத்திரி நான் பெஹன்ஜி கிட்டே கேட்டேன். ஏன் அங்க எல்லாரும் என்னை திரும்பிப்பாத்தீங்கன்னு. அவ சொன்னா ‘பாயிஜி உங்கமேலே பக்கத்துப்பாறையிலே பட்டு பிரதிபலிச்ச சாயங்கால வெயில் பட்டுட்டிருந்தது. நீங்க பொன்னிறமான வெளிச்சத்திலே நின்னுட்டிருந்தீங்க. ஒரு ரெண்டு நிமிஷம் நீங்க ஒரு தங்கச்சிலை மாதிரி இருந்தீங்க. உங்க தலையிலே இருந்த பனிக்குல்லா பொன்னால செஞ்ச கிரீடம் மாதிரி ஜொலிச்சுது. உங்களுக்கு கைலாஷ்ஜியோச ஆசீர்வாதம் இருக்கு’. நான் சட்டுன்னு போர்வையை முகத்துமேலே தூக்கிண்டு அழுதேன்’
மீண்டும் ஆழமான மௌனம். நான் கிளம்ப வேண்டும் என்று நினைத்தேன். அதை உடனே அவர் உணர்ந்து ‘ நேரமாச்சு என்ன? பாக்கலாம். எங்க எப்பன்னு தெரியலை. ஆனா பாக்கவும் கூடும்’ மீண்டும் அந்த கோணலான சிரிப்பு. ‘நேத்து ராத்திரி இந்த ஜன்னலுக்கு வெளியே ஒரு சத்தம். எருமைக்குட்டி காதை அடிச்சுக்கிடற மாதிரி. நெஜம்மா. எலைச்சத்தமா கூட இருக்கலாம். இல்லை அதுவாக்கூட இருக்கலாம். தெரியலை’ என்று சிரித்தார். ‘அதை என்னமோ பயங்கரமான எருமைன்னு சொல்லி பயமுறுத்திட்டாங்க. அது ரொம்பச்சின்ன கண்ணுக்குட்டி. பரிசுத்தமான கொழந்தை. செல்லக்குட்டி, பட்டுக்குட்டி, பூக்குட்டின்னு அதோட குளுந்த மூக்கை புடிச்சு கொஞ்சணும்னு தோணும்’
நான் வெளியே இறங்கியபோது மதியம் வெந்து நீராவி காதுகளில் வீசியது. நிழல்கள் நீள, மரங்களின் இலைப்பரப்புகள் வாடிய மணம் பரப்ப , மாலை வந்துகொண்டிருந்தது. தலைகுனிந்து தனிமையில் நெடுநேரம் நடந்து சென்றேன்.