பெண் பார்த்தப் படலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 9,630 
 
 

“ஹலோ சரசு, அவங்க எப்போ வரதாச் சொன்னே?”

“ஏன், பதினோரு மணிக்குத் தான். அதுக்கு முன்னாடி இல்ல. அரை மணி நேரம் லேட் ஆகலாம். ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?. தயார் செஞ்சிடலாம் இல்லையா?. இன்னொரு தரம் சரியாக் கேட்டுக்கோங்க!. ஹோட்டல் ஐட்டம் எதுவும் இருக்கக் கூடாது. ரெடி-மிக்ஸ் யூஸ் பண்ணக் கூடாதாம். ஐட்டமெல்லாம் யார் பண்ணது, ரெசிப்பி என்னன்னு கேள்வி ஆராய்ச்சி இன்டர்வியூ வேறு இருக்குமாம். டெய்லி பண்ற மாதிரி மெனு இருந்தாப் போதுமாம். நாம ஜாக்கிரைதையா இருக்கணும். சொதப்பிடக்கூடாது. வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்று சும்மாவா சொன்னார்கள்”.

சரசுவின் கணவர் நளவேந்தன் தன்னுடைய சமையல் திட்டத்தை விவரித்தார்.

“இந்த வருஷம் சிறு தானிய ஆண்டாச்சே. அதனாலே வரகு அரிசி சாதம். மெட்ராஸ் ஸ்டைலே முருங்கைக்காய் போட்டு

சாம்பார். பருப்பு இல்லாம மைசூரு ரசம். மிச்சம் மீதி இருக்கிற காய்கறி வச்சி கலவையா ஒரு அவியல்.

“அவியல் சரி வருமா? நாம இதுவரைக்கும் பண்ணதில்ல”

“எல்லாம் சரியாய் தான் வரும். கவலைப்படாதே. உனக்குத் தெரியமா, மைசூர்-பாக் எப்படி வந்திச்சின்னு?. ஒரு நாள் தலைமை அரண்மனை சமையல்காரர் திடீர்ன்னு ஒரு ஸ்பெஷல் ஸ்வீட் எளிமையா செய்யப் போக, மைசூரு மஹாராஜா அதன் பேரைக் கேட்கப் போக, அவரும் திடிரென்று சூட்டிய பேர் தான் இப்போ உலக பிரசித்திப் பெற்ற மைசூர்பா”.

“சப்பாத்தி, பரோட்டா, பாலக் பன்னிர் இப்படி நார்த் இந்தியன் டிஷ் எதாவது வேணுமா?”

“அதெல்லாம் வேணாம். ஐட்டம்ஸ் ஜாஸ்தி ஆயிடும். அவங்களும் சிம்பிளா இருந்தா போதும்னாங்க”.

“சரி. அப்புறம், சுண்டக்காய் வத்தல் இருக்கு. அத வச்சி குழம்பு பண்ணில்லாம். முந்தா நேத்து புளித்தத் தயிர் இருக்கே. அத வச்சு பூசணிக்காய் போட்டு, முந்திரி, தேங்காய் அரைச்சி ஊத்தினா சூப்பரா மோர் குழம்பு. கொரிக்க மொரமொரனுன்னு அரிசி வடகம் செஞ்சில்லாம். மாம்பழ சீசன் இப்போ. அதனால மாம்பழ

மில்க்-ஷேக். கூலா வெயில்ல வர்றவங்களுக்கு வெல்கம் ட்ரிங்க்“.

“ஸ்வீட் என்னப் பண்ண போறிங்க ? எல்லா ஐட்டம் ரெசிப்பி ஒரு பேப்பர்லே எழுதி வச்சுடுங்கோ”.

“எள்ளுருண்ட தான் ஸ்வீட். நேத்தேப் பண்ணி வச்சிட்டேன். சூப்பரா வந்திருக்கு. இப்போ மணி ஆறு தான். சூடா ஒரு பில்டர் காபி குடிச்சிட்டு, குளிச்சிட்டு வந்து ஆரம்பிக்கிறேன். பத்துக்குள்ளார எல்லாம் ரெடி ஆயிடும். டோன்ட் ஒரி ! ”. நளவேந்தன் அறிக்கை சமர்ப்பித்து விட்டு இடத்தைக் காலி செய்தார்.

மணி 11 நெருங்க நெருங்க எல்லோருக்கும் ஒரே டென்ஷன். ஆண்டவா, முருகா, பிள்ளையாரப்பா, பெருமாளே, பராசக்தியே, மஹாலக்ஷ்மியே என்று அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டார்கள். சரியாக மணி 11 அளவில், அவர்கள் நான்கு பேர், அப்பா அம்மா மகன் மகள் அமைதியாக நுழைந்தார்கள். வந்த எல்லோருக்கும் புன்னகை வரவேற்பு இலவசமாக அளிக்கப்பட்டது. கொஞ்ச நேர அமைதிக்குப் பிறகு வார்த்தைகள் கணீரென்று வெளிவந்தன.

“எல்லா ஐட்டம்களும் டேபிள்ள இருக்கா. எங்க பொண்ணு வந்து கேட்கிறப்போ, பையன் வந்து

எல்லாத்தையும் ஐட்டம் வாரியாப் பேர் சொல்லி அத எப்படிப் பண்றதுனு விளக்கம் சொல்லணும். புரிஞ்சுதா?. என்ன, பையன் இன்னும் ஏன் வரல. சீக்கிரம் வரச் சொல்லுங்க”. பெண்ணின் அம்மா சுருதிக் கூட்டி வினவினார்.

அப்போது தான் நளவேந்தன்-சரசு தம்பதியின் மகன் பரதன் மெதுவாக நிதானமாக உள்ளேயிருந்த அறையிலிருந்து ரெசிப்பி அடங்கிய கணினி நோட்புக் சகிதம் வெளிப்பட்டார்.

ஒவ்வொரு ஐட்டமும் கொஞ்சம் ருசித்தப் பின் வந்திருந்த இளம்பெண் கேட்டாள். “இங்குள்ள தயாரிப்புகளில் உங்கள் பங்கு என்ன?, உங்கள் பெற்றோர் பங்கு என்ன?. தெரிவிக்க முடியுமா?” .

“ஆமாம், நான் பொய் சொல்லல. அப்பா ஃபுட் டெக்னாலஜிஸ்ட், அப்பா தான் முழுவதும் தயாரித்துள்ளார். நான் ஃபுட் இன்ஜினீயர், மிக்ஸி கிரைண்டர் ஆப்பரேட் செய்வது, ரெசிபி எழுதுவது, போட்டோ- வீடியோ எடுப்பது மற்றும் அவற்றை யூடியூபில் அப்-லோட் செய்வது என் வேலை. அம்மா ஃபுட் மேனேஜ்மென்ட். எல்லாவற்றையும் ருசிப் பார்த்து ‘எக்ஸலண்ட், சூப்பர், நன்று, பரவாயில்லை, மோசம் என்று ரேட்டிங் கொடுப்பாள். அதாவது, கிரிட்டிக்கல் அனாலிசிஸ் (விமர்சன பகுப்பாய்வு) பண்ணுவாங்க.

கட்டாயம் தந்தை வழி தனயனாக நாளை நான் மாறுவேன்”. முதலில் தயங்கித் தயங்கி வெளி வந்த வார்த்தைகள் பின்னர் சரளமாக திருத்தமாக ஓடி வந்தன.

அந்த இளம்பெண் தன் அம்மாவிடம் மிதமிஞ்சிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். “குடும்பம்னா இது மாதிரி இருக்கணும். நான் இவரையே மணந்துக் கொள்கிறேன், அம்மா. நல்ல இயற்கையான ஆரோக்கியமான உணவு-முறைக்கு இங்கே உத்தரவாதம் நிச்சயம்”.

எல்லோர் முகத்திலும் ‘அப்பாடா’ என்று நிம்மதி ஒளி பரவியது.

– குவிகம் மின்னிதழ் நவம்பர்-2023.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *