கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 7,203 
 
 

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலங்கை எழுத்தாளர் சங்கம் நடத்திய அந்தச் சிறுகதைப் போட்டியிலே 687 கதைகள் பங்குபற்றின. அவற்றுள் பூ முதலாவது பரிசுக்கு உரியதென ஒரு முகமாகத் தேர்வு செய்யப்பட்டு, மட்டக்களப்பில் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25 ஆம் நாள் நடைபெற்ற தமிழ் விழாவிலே பரிசளிக்கப்பட்டது.

‘முதல் பரிசு பெற்ற எம்.ஏ.ரஹ்மானின் பூ என்ற சிறுகதை மிகச் சிறப்பாய் அமைந்திருக்கிறது. கதையின் நடை, கதையின் திருப்பங்கள், பாத்திரங்களின் போக்குகள், அவர் கையாளும் உருவங்கள், கதையின் முடிவு எல்லாம் மிகவும் அழகாகவும், மனதைத் தொடுகின்றனவாகவும் இருக்கின்றன…’

தலைவர் சீ.ஸ்ரீநிவாசன்
முன்னுரை
போட்டிக் கதைகள்

***

பூத்துச் சொரிகையிலே
பூக்கருகிப் போனதுவோ?
மாதா செய் தீவினையோ
மலரமுன்னே போனாயோ…?

நீ படுத்துக் கிடந்த அறைப் பக்கமிருந்து ஒப்பாரிக் குரல் கேட்கின்றது. அது உன் அம்மாவின் குரல். துக்கத்திற் கனத்துக் கதறுகின்றது. எது உன் முடிவாக இருக்கக் கூடாது என்று இவ்வளவு நேரமும் பிராத்தித்துக் கொண்டிருந்தேனோ, அதுதான் உன் முடிவா? என் கல்யாணி!

“ஏய் கெழவி. இதுங் ஹோஸ்பிட்டல் தெரியுங்தானே! சத்தங் போட வேணாங்.”

கிழவியை ‘நேர்ஸ்’ அறைக்கு வெளியே கொண்டு வந்து விடுகிறாள். புழுவாகத் துடித்து, சுவருடன் தலையை மோதிக் கொண்டே குரல் எழுப்பி அழுகின்றாள். ‘மேளே, கல்யாணி நீ போய் விட்டியாடி?’ என்று நெஞ்சு வெடிக்கப் புலம்புகிறாள். ஒவ்வொரு வார்த்தையும் என் என்பின் குழலட்டையையுஞ் சுண்டுகின்றது.

நேர்ஸ் என்னைப் பார்க்கிறாள். எனது விழிகளை அவளது விழிகள் துழாவுகின்றன. அந்த துகட் கணப் பொழுதில் அந்தச் செய்தியை மௌன பாஷையிற் சொல்லி விட்டாள்.

மூச்சு, மூக்குத் துவாரங்கள் வழியாக வெளியேற முடியாது. துருத்தியாக உப்பி, எனது சுவாசப் பையினை அவஸ்தைப் படுத்துகின்றது. விரல் நொடிப்பு நேரத்திலே ககனத்து ஒளி முழுவதும் அஸ்தமிக்க, அமாவாசை மையிருட்டு அகண்டா காரமாக விரிகின்றது. இருள் குதிர்ந்த அந்தப் பாளையிலே சினைத்திருந்த அக்கினிக் கோளங்களெல்லாம் என் சென்னியிலே அறுந்து விழுந்து கேசத்தினைப் பொசுக்கி விட்டதைப் போன்று…சிகை எரிந்த நாற்றமோ…பிணம் வெந்து கக்கும் புலால் நாற்றமோ…? விழி மதகுகளைத் தகர்த்துப் பெருகும் கண்­ர். கால்கள் ஸ்பரிசத்தை இழந்து, இயக்க சக்தி இற்று…சுவரோரம் போடப்பட்டிருக்கும் ‘வாங்’கிலே குந்துகின்றேன்.

நேர்ஸ் என்னைத் தாண்டிச் செல்கின்றாள். மரங்கொத்திப் பறவை மரத்தினைக் குடையும் பொழுது ஏற்படும் ஒலியினைப் பிரதி பண்ணுகின்றது. சீமெந்துத் தரையில் உராயும் அவளுடைய குதியுயர்ந்த சப்பாத்துகள் அவளுடைய முகத்தையும் அவள் சொல்லக் கூடிய செய்தியையும் தவிர்ப்பதற்காகத் தீக்கோழி சாகஸம் புரிந்து கரங்களுக்குள் எனது முகத்தினைப் புதைத்துக் கொள்ளுகின்றேன். சின்னி விரல் பொருந்த மறுக்கும் ‘கிறாதி’யில் ஒரு விழி புகுந்து, சாப்பாத்துக் குதியினை மேய்கின்றது.

இதே போன்ற சப்பாத்துகளிலே புகுந்து, உயரத்தை அதிகரித்து, கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடைக்குள் நீ நுழைகின்றாய். நான் உன்னை உன்னிப்பாகப் பார்ப்பதை நீ எப்படி அறிந்தாய்? உள்ளுணர்வா? நவீன நாகரிகத்தின் முடக்குகளை அறிந்தவளாகக் கூந்தலைப் பல கோணங்களிலே முறுக்கிக் கொண்டை போட்டிருந்தாய். சிரசினைக் கழுத்து வாக்கிலே வெட்டி என்னைப் பார்த்தாய். புகைப் படத்திலே பார்த்த அதே முகம், அதே விழிகள், அதே நுதல், அதே மூக்கு…படத்தில் இரட்டைப் பின்னல்களுடன் மங்குளிப் பெண்ணாகத் தோன்றிய நீ…நீ கல்யாணியா? அல்லது வேறொருத்தியா? நீ உன் சிநேகிதியின் காதைக் கடித்ததும், அவள் என்னைத் திரும்பிப் பார்த்துத் தலையை ஆட்டியதும்…உனது திருட்டுப் பார்வை என்னை மேய்ந்ததும்…முதற் சந்திப்பு; அடுத்த சந்திப்பு மணவறையில் நிகழ்ந்தது.

உலகின் நவீன போக்கு என்ற ஆற்று வெள்ளத்திலே கழிந்து செல்லாது, வீட்டுக் கொல்லையிலே இருக்கும் கிணற்று நீராக என்னை வளர்த்த பெருமை என் தந்தையைச் சாரும். வாலிப உணர்ச்சிகள் பதியம் போடும் பல்கலைக் கழகத்து வாழ்க்கையிலே, பெண்களுடன் பேசக் கூச்சப்படுவேன். இருப்பினும், என் முன்னால் நடமாடும் ஒவ்வொருத்தியையும் கற்பனையிலே என் காதலியாக்கி…தினந் தினமும் புதிது புதிதாக யாரையோ காதலிக்கின்றேன் என்கின்ற ஊமைக் கற்பனையிலே கூச்சம் போக்கி, வாழ்க்கையின் சிருஷ்டி விளையாட்டிற்குள் ஒரு பெண்ணை இணைத்துக் கொள்வதற்கிடையில் என் படிப்பு முடிந்தது. மீண்டும் தந்தையின் மூக்கு நிழலிலே வாழத் துவங்குகின்றேன். ஜதை சேர்த்து வாழும் சமூகப் பண்பாட்டிற் கொப்ப என்னைக் கல்யாணச் சந்தையிலே நிறுத்தினார் அப்பா….குணமும்-குலமும் பார்ப்பதாக வெளியே விளக்கஞ் சொல்லி, சீதன ஆதனத்திலே இரையினைக் குத்தி,பெண் பார்க்கும் படலத்தினை அப்பாவே நடத்துகின்றார்…ஈற்றிலே எப்படியோ உன்னை அவருக்குப் பிடித்து விட்டது உனது புகைப்படம் என்னிடம் காட்டப்படுகின்றது. வேண்டும், வேண்டாம் என்று எதுவும் சொல்ல வில்லை. வார்த்தைகள் தொண்டையில் சிக்கிய மீள்முள்களாகின்றன. மௌனத்திற்குச் சம்மதம் என்ற அர்த்தம் பாய்ச்சப்பட்டு ஏற்பாடுகள் நடை பெறுகின்றன. உயர்ந்த கிடுகுவேலியின் ‘அறிக்கை’யுள் வாழ்ந்து விட்டாலும், அம்மாவுக்குப் புதிய போக்குகள் தெரியும். நீ நகைக்கடைக்கு வரும் சமாசாரத்தை அவள்தான் சொன்னாள். உன்னை பார்த்ததிலிருந்து அங்கேயே ‘சம்மதம் சம்மதம்’ என்று ஓராயிரம் முறை என் மனசிற்குள் சொல்லியிருப்பேன். கல்யாணி, நீ அதியற்புத அழகியடி!

இனிய பதினைந்தாம் நாள், நீ ஆசிரியையாகக் கடமை பார்க்கும் பாடசாலைக்குப் பிரயாணமாகின்றோம்.

நெஞ்சக் குளத்திலே அந்த நினைவு வட்டம் கரையைத் தட்டுகின்றது…

ஆசை வெட்கமறியாது என்பது எவ்வளவு உண்மை… அந்தப் புகையிரதத்திற்குள் கூட்டம் முட்டி வழிவதைக் கவனித்தோமா? நீயும் நானும் மட்டும் ஏதோ தனியான பிரபஞ்சத்திலே பிரயாணஞ் செய்வதான எண்ணம் இருவரையும் இணைக்கின்றது.

“அத்தான், பெண்களை ஏன் மலருக்கு ஒப்பிடுகின்றார்கள்?”

“மென்மையினால்…”

“ஆண்களை ஏன் வண்டிற்கு ஒப்பிடுகின்றார்கள்?”

“பல மலர்கள் மீது தாவும் பலவீனம் அவர்களுக்கிருப்பதால்…”

“அத்தான்?”

உன் விழிகளில் நீர் உற்கைகள் உதிருகின்றன…குறுக்காக ஓடுவதாகத் தோன்றும் மரங்களைப் பார்க்கும் பாவனையில் மறைக்கின்றாய். “என்ன கல்யாணி?”

“நீங்கள் இந்த மலர் மீது மட்டும்….என்னால் தாங்க முடியாது…”

“பைத்தியக்காரி! கையிலே பாரிஜாத மலரை வைத்துக் கொண்டு ஊமத்தம் பூவையா நாடுவேன்?”

“கிளியைப் போல மனைவியிருந்தாலும், ஆண்கள் குரங்கைப் போன்ற ஒரு வைப்பாட்டியை நாடுவார்கள் என்று சொல்வார்கள்..” சொல்லும் பொழுதே களுக்கென்று சிரித்து விடுகின்றாய்.

உன் எதிர்ப் பக்கமாக அமர்ந்திரு நத அந்த நடுத்தர வயதுப் பெண்ணின் காதிலும் விழுந்திருக்க வேண்டும். அவள் அர்த்தபூர்வமாகச் சிரிக்கிறாள்.

குங்குமச் சிரிப்பினைக் கன்னத்திலே அள்ளி அப்பி. நீ நாணத்துடன் பட்ட அவஸ்தை.

“என்ன, சின்னக்கிளி! ஒரு வருஷத்துக் குள்ளை இஞ்சையே மாறுதல் எடுத்திட்டியே?”

“நான் தானே போகேக்குள்ளை சொல்லிப் போட்டுப் போனனான்…அவன் டாக்குத்தனுக்கு ஒரு பாடம் படிப்பிப்பனெண்டு.”

“உனக்கென்ன? எம்பி உன்ர கையுக்குள்ளை.”

“கையுக்குள்ளை” என்ற சொல்லை விரசஞ் சிந்தத் தொனிக்கிறாள். என்னைத் தாண்டி அந்த இரண்டு கங்காணிப் பெண்களும் நி கிடக்கும் அறைக்குள் நுழைகின்றார்கள்.

கல்யாணி, உன் கொடிவாக்கு உடம்பிலே அந்தப் பிடிவாதக் குணம் எப்படிப் புரையோடிக் கிடந்தது? நான் கற்பிக்கும் அதே பாடசாலைக்கு நீயும் மாறி வரவேண்டுமென்று ஒற்றைக்காலிலே நின்றாய். கணவனும் மனைவியும் ஒரே பாடசாலையிலே கற்பிப்பதிலே ஏற்படுஞ் சிரமங்களை விளக்கினேன். அன்பு குறையுமென்று கூடச் சொன்னேன்.

“நான் குரங்கு, எப்படிக் கொண்டு போய் மாணவர்கள் முன்னால் நிறுத்துவது என்று சொல்லுங்கோ?” என்று என் நியாயப் பேச்சு முழுவதையும் உன் குதர்க்கப் பேச்சுகளினால் முறியடித்தாய். இறுதியில் வெற்றி உனதே.

ஒன்றாகவே பாடசாலையிலும், வீட்டிலும், இருபத்திநான்கு மணிநேரமும் விட்டுப் பிரியாதே உதிர்ந்த அந்நாள்கள்…

“கல்யாணி முடிச்சு மூண்டு வருஷம். இன்னும், தேனிலவுத் தம்பதிகள்தான்” என்று வெற்றிலைத் துப்பல் தாடைவரை வழிய அழகையா வாத்தியார் சொல்லுவார். க்ஷயரோக இருமல் புரையோடக் குலுங்கிச் சிரித்து அதற்க ஒத்தூதுவார் பண்டிதா விஸ்வலிங்கம்.

மூன்று ஆண்டுகள்-ஆயிரம் நாள்கள்-இவ்வளவு சீக்கிரம் உருண்டோடி விட்டனவா? உன் அம்மா தன் பேரப்பிள்ளையைக் காணத் துடிப்பதாக நீ தெரிவித்தாய். கள்ளி, அந்தப் பிள்ளையை எப்படியும் பெறவேண்டுமென்ற விரத அனுஷ்டானங்களிலே அக்கறைகாட்டுகிறாய். விடுமுறைதோறும் ஒவ்வொரு புண்ணிய ஸ்தலமாகப் பிள்ளை வரம் வேண்டி யாத்திரை. செல்லச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரை, கீரிமலையிலிருந்து சிவனொளி பாதம்வரை எந்த ஸ்தலத்தினையும் பாக்கி வைக்கவில்லை.

கல்யாணி, உன் நோன்பு வீண் போகவில்லை. நீ கர்பவதியாக இருந்த காலத்தைப் பசுமையாக நினைக்க முடிகின்றது. தாய்மையின் பூரணத்துவத்துடன் உன் அழகு, சுந்தரப் பொய்கையிலே மிதக்கின்றது. மசக்கை ஆசைகள் பண்பாட்டினையும் எகிறி நிற்கின்றன. பெண்களால் இரகசியத்தினைக் காப்பாற்றி வைக்க முடியாது என்பதற்கு நீதானும் விதிவிலக்கல்லள். ஒருநாள், ஆசிரியர் அறையிலிருந்து நீ மாங்காய்ப் பிஞ்சுகள் தின்ற செய்தி, அன்று முழுவதும் நமது பாடசாலையிற் பரவ ‘கொங்கிராஜுலேசன்’ என்று எல்லோரும் என்னை ஊமை இன்பத்திற்குள் அமிழ்த்தி விட்டனர். அவர்களது கேலிப் பேச்சுகளிலேயே நான் திணறிக் கொண்டிருக்க, நீ மட்டும் அன்றலர்ந்த மலரின் மலர்ச்சியினால் உன் முகத்தை நிரப்பிக் கொண்டு, மொட்டின் இதழ்கள் பூட்டவிழ்க்கும் இரகசியமே அம்பலமாகும் குறுநகை அரும்புகின்றாய். அதனைத் தலை கவிழ்ந்து நிலத்திலே உதிர்த்தலுக்குப் பெயர்தான் நாணமா?

“நீங்கள் தானே மயில்வாகனம்?”

வேறொரு ‘நேர்ஸ்’ வந்து என்னைக் கேட்கின்றாள். உணர்ச்சி படராத குரல்.

அன்றும் இப்படித்தான்…நீ பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாய். குட்டி போட்ட பூனை போல எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. ‘விறாந்தை’யின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரை எத்தனை தடவைகள் என் கால்கள் நடந்து விட்டன? கால் உளைவோ, மன உளைவோ? அப்பாவாகும் பெருமை உள்மனசில் பொங்கி வழிய, குழந்தை பெண்ணோ, ஆணோ? என்ற ஆரூடங் கணிப்பதில் மனம் குதிக்க நடந்து கொண்டிருந்த என்னை, அந்த நேர்ஸ’ன் அழைப்புத் தரிக்கச் செய்தது. அந்த அழைப்பிலே ஓர் அவசரம். எதையோ மறைத்துச் சொல்வதான நடுக்கம் தொனித்தது.

“ஓம்”

இந்த வார்த்தையை குரல்வளைக் கிணற்றின் ஆழத்திலிருந்து எடுப்பதற்கு நான் பட்ட அவஸ்தை…

“டொக்டர் உங்களை வரட்டாம்…”

“மிஸ்டர், மயில்வாகனம்! இது மிகச் சிக்கலான கேஸ். சிசேரியன் ஒப்பரேஷன்தான் வழி…தாயையாவது காப்பாற்றலாம்.”

“ஐயோ, யார் குழந்தை வேண்டுமென்றது? தாயைக் காப்பாற்றித் தாருங்கள் டொக்டர் அது போதும்.” என்று அலறிவிட்டேன். உணர்ச்சிகளைப் போர்வையிட்டுப் பேசுவதுதான் நாகரிகமாம்…அந்தக் கணம், உணர்ச்சிச் சுழலிலே சகலவற்றையும் இழந்துவிட்ட துரும்பாகத் தவிக்கின்றேன்.

ஓர் உயிரைப் பிரசவிக்கச் சென்ற நீ, இரண்டு மாதங்களாக ஒரே படுக்கையாகக் கிடக்கின்றாய். அப்பொழுது பாதி பிணமாகத்தானே இருந்தாய்! ஊரார் உதவிய உதிரத்திலே நீ ஜ“வித்த காலம் அது. சிசேரியன் ஒப்பரேஷனுக்குப் பிறகு, மார்பிலே பல புதிய சிக்கல்கள் தோன்றினவாம். தொடர்ந்து மார்பிலே சத்திர சிகிச்சை. ஒரு நாள் பூராவும் ஸ்மரணையற்றிருந்தாய். டொக்டர் என்னை எப்படியோ வெல்லாம் தேற்றினார்….

அன்று எமனை ஜெயித்த நீ. இன்று தோற்றுவிட்டாய்.

நான் டொக்டரின் அறைக்குச் செல்வதற்காக நடக்கின்றேன். என் உடல் அவ்வளவு பாரமானதா? அதனைச் சுமக்க இயலாது கால்கள் இடறுகின்றன. என் தந்தையும், தாயும் வருகின்றார்கள். என் அம்மா உன் தாயைப் பிடித்துக் கொண்டு ‘சலிப்பு’ச் சொல்கின்றாள்.

தந்தை என்னிடம் வருகின்றார். கண்களிலே துளிர்த்து நிற்கும் கண்­ரைச் சால்வையினால் ஒற்றியெடுக்கும் அவசரம். அப்பாவின் கம்பீரமான குரலிலே எப்படி இந்த உடைவு ஏற்பட்டது?

“தம்பி, நாங்கள் கொடுத்து வச்சது அவ்வளவுதான். வெளியாலை கார் நிக்குது. கொம்மானும் இருக்கிறார். நீ வீட்டை போ. நான் சவத்தை எடுத்துக் கொண்டு வாறன்…”

கல்யாணி! நீ இப்பொழுது சவம்.

நாளை…

சங்கிலித் தொடரான வைத்தியத்திற்குப் பின்னர் உன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கின்றேன். அந்த இரண்டு மாதங்களுக்கிடையில் நானும் டொக்டரும் நண்பர்களாகிவிட்டோம். அவர் என்னை தனியாக அழைத்தார்.

“மயிர்வாகனம்! பொதுவான கூட்டு வாழ்க்கைக்காகவும் பண்பிற்காகவும் மனிதன் தன்னுடைய சில சுதந்திரங்களையும், இச்சைகளையும் துறந்தான். சமுதாயப் பிராணியாக வாழ்வதற்குக் கட்டுப்பாடுகள் அவசியம்….தனது இச்சைகளை அடக்கி வாழ்பவனே மனிதன். நீங்கள் மனைவியை அழைத்துச் செல்லும் இக்கணம் ‘நான் மனிதனாக வாழ்வேன்’ என்ற சங்கற்பத்தினையும் ஏற்றுக் கொள்ளவும்”, தான் சொல்ல நினைத்தவற்றை நேரடியாகக் சொல்லாது சற்றி வளைத்துக் கூற முடியாது தடுமாறுகின்றார்.

“டொக்டர்! நேரடியாகச் சொல்லுங்கள். நான் என்ன குழந்தையா?” என்று வலிந்து உரிர்க்கும் சிரிப்புடன் கேட்கின்றேன்.

“உங்களுடைய மனிவி குடும்ப வாழ்விற்கு உதவமாட்டான். குறைந்தது மூன்று வருடங்களாவது விலக்கி நடக்கவும். அதற்குப் பின்னரும் என்னிடமோ வேறு ஒரு டொக்டரிடமோ உங்கள் மனைவியை அழைத்துச் சென்று காட்டுங்கள்…அதற்கிடையில் கணப் பொழுது பலவீனத்திற்கு நீங்கள் இரையாகி விட்டால், அவளுடைய உயிரை யாராலும் மீட்டுத் தர முடியாது.”

அவருடைய ஒவ்வொரு சொல்லும் என்னுடைய வாலிப எழுச்சிகளின் உயிர் முடிச்சுகளைத் திருகுகின்றன.

“இது சாமான்யமான பரீட்சையில்லை. நெஞ்சிலே வைரத்தின் வைரந் தேவை…இந்த விஷயத்தினை உங்கள் மனைவிக்குச் சொல்ல வேண்டாம். அது அவளுக்குச் சிக்கலை ஏற்படுத்தி மன நோயைக் கொண்டுவரலாம். சகஜமாக உடல் தேறி வருவதற்குப் பாதகமாக இருக்கும்…இது நீங்கள் தன்னந் தனியாக நடத்தப்போகும் போராட்டம். உங்கள் மானுஷ“கத்திற்குச் சவால்…”

“நான் மனிதனாக வாழ்வேன்!”

“தம்பி, நீ படிச்சவன். உனக்கு நானே புத்தி சொல்லுறது? விதியை யாரால் வெல்ல முடியும்…போய்க் காரிலே ஏறு.”

“டொக்டர் ஒருக்காப் பாக்க வேணுமம்…”

கல்யாணி! நீ உடல் தேறியதும் மீண்டும் பாடசாலைக்கு வரத் தொடங்குகின்றாய். நீ கிட்ட நெருங்க நெருங்க நான் எட்ட எட்ட ஓடுகின்றேன்…என் உணர்ச்சிகளைப் பொசுக்கி,பொம்மையாக இயங்குகின்றேன். உன் சரசப் பேச்சுகள் எனக்கு எரிச்சலை மூட்டுகின்றன. ‘மேல் படிப்புக்கு தயார் செய்கின்றேன்’ என்று கவசந்தேடிக் கொள்ளுகின்றேன். இருவருக்கு மிடையில் மௌனச் சுவரொன்று எழுகின்றது…நீ என்னை வெறுக்கின்றாய் என்பது எனக்குத் தெரியும். அதனைப் போக்க வழி தெரியாது என்னுள் நானே சாம்பிக் கொண்டிருந்ததை நீ அறிய மாட்டாய். ஊசி விவகாரங்களை உலக்கையாகப் பெரிது படுத்துகின்றாய். மனக் கசப்பின் நிழல் பாடசாலை வரையும் வளர்கின்றது. என்னை அந்நியனாகப் பார்க்கின்றாய். நமது மாற்றம் பாடசாலையின் பல வதந்திகளைக் கிளப்புகின்றது. ‘ஆசை அறுபது நாள்’ என்று பண்டிதர், வார்த்தைக் கோடரியினால் என் நெஞ்சைப் பிளக்கின்றார்.

பல நாள்களாக சொல்ல நினைத்திருந்தரைதத் துணிந்து சொல்லுகின்றேன்.

“கல்யாணி! நல்ல சுவாத்தியமுள்ள வேறோர் ஊருக்கு நீ மாற்றிப் போவது நல்லது.”

“ஓம், நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.” உன் வெறுப்பின் காங்கை என்னைச் சுடுகின்றது.

“அப்படியே செய்.”

நாவலப்பிட்டிக்கு மாறுதல் கிடைக்கின்றது

டொக்டரின் அறைக்கு சமீபித்து விட்டேன். கதவைத் தட்டுகின்றேன்.

“யெஸ், கம்இன்.”

புதிய இடத்திற்குச் சென்றதிலிருந்து நீ எவ்வளவோ மாறிவிட்டாய். விடுமுறை காலங்களிலே வீட்டிற்கு வந்திருந்தால் உற்சாகத்திற்குக் குறைவில்லை. அங்கே உன்னுடன் படிப்பிக்கும் நேசமணியும், தனலெட்சுமியும் வந்தால் மணிக்கணக்காக இருந்து பேசுவாய். வாடிச் சோர்ந்த மலரா?…புது மலரின் தேன் கவர்ச்சி!

இரண்டு மாதங்களுக்கு முன்னர் நீ விடுமுறையில் வந்திருந்தது நன்றாய ஞாபகமிருக் கின்றது.

நடுநிசி. உலகமே உறக்கத்திற் சுகிக்கும் வேளை. நான் மட்டும் புத்தகங்களிலே மனசினைப் புதைத்திருக்கின்றேன். நீ திருட்டு நடை நடந்து…உன் கூந்தல் என் கழுத்திலே புரள எவ்வளவு இதமாக இருக்கின்றது…நீ என்னைத் தழுவி அணைத்து போதை ஊட்டுகின்றாய்…அப்புறம் மிருக ஆவேசம் கொண்டவளாக என்னை அழைக்கின்றாய்….வெட்கமற்று, இவ்வளவு விரசமாக நடக்க எப்படிக் கல்யாணி கற்றுக் கொண்டாய்? உன் தவிப்பிற்காக நான் அநுதாபப் படுகின்றேன். “போய்ப்படு!” உடலைப் பொசுக்கும் தணலைத் தட்டிச் சொல்கின்றேன். நெடு நேரம்வரை நிலத்தில் புரண்டு விசும்புகின்றாய்.

நீ உன்னையே இழந்து விட்டாயா?

அடுத்து நாளே நாவலப்பிட்டிக்குச் சென்றுவிட்டாய். சமாதானப்படுத்திக் கடிதங்கள் எழுதினேன். என் கைவலித்தது. நீ பதில் ஏமாப்படைகின்றாய்.

“உடல் நிலை அபாயம். உடன் வரவும்?”

இத் தந்தியை அனுப்ப எப்படி மனசு இளகிற்று?

இங்கு அழைத்து வந்து, உன்னைத் தேற்றலாம் என்று தானே கல்யாணி நம்பினேன்?

நீ ஏமாற்றி விட்டாய். என்னை இருட்காட்டில் இடறவிட்டு நீ போய்விட்டாய். ஐயோ, கல்யாணி!

டொக்டர் என்னை திருப்திதானே? உமது நோயாளி மனைவி இறந்துவிட்டாள். இரண்டாங் கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்!”

டொக்டரின் ஒவ்வொரு வார்த்தையும் வெறுப்பைக் கக்கிச் சீறுகின்றன.

கல்யாணி! உன் பிரேதம் வீட்டிற்கே வரவில்லை. அதற்கிடையில் டொக்டர் பைத்தியக்காரத் தனமாகப் பேசுகின்றாரே…

“நானா?…”

நீ இறப்பதை விரும்பினேனா?…

“ஓம்; நீர் ஒரு மிருகம்! அவள் மூன்று மாதக் கர்ப்பிணி!”

உலகம் முழுவதும் சுழல்கின்றது. கல்யாணி நீயா? பெண் மென்மையினால் மட்டுந்தான் பூ என்றழைக்கப்படுகின்றாளா?

பூவிலே தேன்குடிக்க வெறிகொண்டு அலைந்த வண்டு நானல்ல என்பதை நீ அறிவாய்.

– சிறு கை நீட்டி, முதற் பதிப்பு: அக்டோபர் 1998, மித்ர வெளியீடு, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *