பூர்ணிமா நெசவுக்குப் போகிறாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 24, 2023
பார்வையிட்டோர்: 1,700 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இருபது வருடங்களும் முன், அந்தக் கிராமத்திலேயே உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய இரண்டொரு கல்வீடுகளில் இதுவும் ஒன்றாகத்தான் தலை நிமிந்து நின்றது. ஏனைய வீடுகள் இரண்டறை மண் வீடுகளாகவும், ஒற்றையறை ஓலைக் குடிசை களாகவும், நிலத்தோடு பதிந்து நின்றன. அக்கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்தங்கிவிட்டது இந்த வீடு.

“சாப்பூடு” எனப்படும் பெண்களுக்கே உரிய வீட்டின் மூன்றாவது அறையிலிருந்து கடகடவென்ற தையல் மெஷின் இடைவிடாத சப்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. கொஞ்சங்கூட இடையீடு இல்லாமல் அச்சப்தம் கேட்பதால் உள்ளே வேலை மும்முரமாக நடைபெறுகிறது என்று யூகிக்கலாம்.

திடீரென்று குசினிக்குள் இருந்து ஒரு குரல் கேட்கிறது. “பூர்ணிமா…. பூர்ணிமா…”

“இதோ வந்தேன் அம்மா” தையல் மெஷினின் சப்தம் நிற்கிறது. உள்ளேயிருந்தும் ஒரு பெண், நெற்றியில் தவழும் தலை மயிரைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டுக் கொண்டே வருகிறாள்.

குத்துவிளக்கு ஒன்று, மினுக்காத நிலையில் வெளிப்படுவது போலிருக்கிறது அவள் தோற்றம்.

“எந்த நேரமும் தையல் மெஷினிலேயே உட்கார்ந்திருக் காமல் வீட்டு வேலையையும் கொஞ்சம் கவனியம்மா” என்கிறாள் தாயார்.

”இந்த வேலையையும் கவனித்தால் தானே அம்மா அன் றாடம் சாப்பாட்டுக்கு வழி பிறக்கும்” என்று பூர்ணிமா வாய் திறந்து சொல்லவில்லை. அவள் மனம் நினைத்துக் கொண்டது. தாய்க்கு உதவியாகக் குசினி வேலையில் ஈடுபடுகிறாள் அவள்.

மத்தியானம் ஒரு மணிக்கு மேல் பள்ளிக்கூடம் சென்றிருந்த சசி, கலா, மாலா எல்லோரும் வீட்டுக்கு வந்து விடுகின்றனர். வீடு ஒரே கலகலப்பாக இருக்கிறது. மத்தியானத்திற்கும் இரவுக்குமாகத் தாயார் செய்து வைத்திருந்த சாப்பாட்டில் ஒரு பகுதியை. எல்லோரு மாகப் பகிர்ந்து உண்கின்றனர்.

மூன்று மணியளவில், எல்லோரும் விச்சிராந்தியாக உட் கார்ந்து பேசிக்கொண்டிருக்க, பூர்ணிமா மீண்டும் தையல் மெஷினில் உட்கார்ந்து கொள்கிறாள்.

பத்து ஆண்டுகளுக்கு முன் கார்த்திகேசு மாஸ்டரின் குடும்பம் என்றால் அந்த ஊரிலேயே ஒரு தனி மதிப்பு இருந்தது. அவர் அப்போது ஒரு தலைமை ஆசிரியர். படிப்பிலும் பண்பிலும் உயர்ந்தவர் என்ற காரணத்தால் கிராமத்தில் நடக்கும் சகல நிகழ்ச்சி களிலும் முக்கியத்துவம் வகித்து வந்தார் அவர்.

கார்த்திகேசு மாஸ்டரின் மூத்த மகள் பூர்ணிமா. ஹெட் மாஸ்டரின் மகள் என்பதால் மட்டுமல்லாது ஊரில் பெரிய மனித ரின் குழந்தை என்ற வகையிலும் அவளுக்குப் பெருமை ஏற் பட்டிருந்தது. பள்ளிக்கூடத்திலும் சரி, வெளியிலும் சரி ஏனைய பெண்களுக்கு மத்தியில் தலை நிமிர்ந்து வாழ்ந்து வந்தாள் அவள்.

பூர்ணிமாவுக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. சித்திரை வருடம் வந்துவிட்டால் தங்கள் வீட்டிலேயே மருந்து நீர் காய்ச்சி எல்லோருக்கும் வழங்குவார்கள். மருத்து நீர் வாங்கவரும் பிள்ளை கள், அவர்கள் வீட்டின் அலங்காரத்தையும், அவர்களுக்காக சித்திரைக்கு என்று எடுத்த புதிய உடுப்புக்களையும் திறந்த வாய் மூடாமல் நின்று பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்போதெல்லாம் கார்த்திகேசு மாஸ்டர் கொழும்பில் இருந்தே தன் பிள்ளைகளுக்கு வேண்டிய உடுப்புக்களை எடுத்து வருவார்.

ஆனால் இன்றோ, சித்திரை வருடத்திற்கென அதே பிள்ளை களுக்குத் தான் உடை தைத்துக் கொடுத்து வயிறு கழுவவேண்டி இருக்கிறது.

வாழ்க்கை நிலையற்றது என்பது உண்மைதான். இருந் தாலும் பூர்ணிமாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது.

இருந்தாற்போலிருந்து ஒரு நாள் மாரடைப்புக்குப் பலி யானார் கார்த்திகேசு மாஸ்டர். என்ன நடந்தது என்பதை உணர் வதற்கு முன்பே அவர்கள் ஏழைகளாகிவிட்டார்கள்.

வாழ்க்கைக் கடலில் உல்லாசப் படகில் பிரயாணம் செய்து வந்த கார்த்திகேசு மாஸ்டரின் குடும்பம் இப்போது உடைந்து போன படகுத்துண்டு ஒன்றில் ஒட்டிக்கொண்டு மிகுதிப் பிர யாணத்தைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

கார்த்திகேசு மாஸ்டர் வாங்கிய சில ஏக்கர் வயல் நிலங்களின் வருவாயிலிருந்து குடும்பத்தை தாங்கிக் கொள்ள முடிகிறது என்றா லும், அவ்வப்போது சரிந்து விழும் நிலை ஏற்படும் போது முட்டுக் கொடுத்து உதவுகிறது பூர்ணிமாவின் தையல் வேலையிலிருந்து கிடைக்கும் வருவாய்.

கார்த்திகேசு மாஸ்டரின் மறைவுக்குப் பின், பூர்ணிமா ஆசிரியை வேலை ஒன்று தேடிக்கொண்டால் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கும் என்று சிலர் ஆலோசனை கூறினர். பூர்ணிமா எஸ்.எஸ்.சி. பாஸ் செய்திருந்தாள். அத்தோடு அவ்வூர் மிஷன் பள்ளிக்கூடத்திலேயே அப்போது ஒரு ஆசிரியை பதவி காலியாக இருந்தது. விரும்பியிருந்தால் பூர்ணிமாவுக்கே அப்பதவி மிக இலகுவாகக் கிடைத்திருக்கும். ஆனால் பூர்ணிமாவின் அம்மா அதை விரும்பவில்லை. சிறப்போடு வாழ்ந்த தன் மகள் வேலை செய்வது குடும்பத்திற்கு கௌரவமில்லை என்று கருதினாள்.

ஆண்டுகள் சில உருண்டபின், பூர்ணிமா வேலை பார்த்துத் தான் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அப்போது வேலை கிடைப்பது முயற்கொம்பாகிவிட்டது. சில காலத்திற்குப் பின் மாணவ ஆசிரியர் என்ற பெயரில் நூறு ரூபா சம்பளத்துடன் எஸ்.எஸ்.சி. படித்தவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்து வந்தது. பூர்ணிமா அதையும் விடவில்லை . கடந்த இரண்டு வரு டங்களாக மாணவ ஆசிரியர் பரீட்சை எடுத்துக் கொண்டே வரு கிறாள். ஆனாலும் என்ன காரணமோ அவளைவிடத் தகுதி குறைந் தவர்களுக்கு எல்லாம் நியமனம் கிடைத்தும் அவளுக்கு மட்டும் இன்னும் நியமனம் கிடைக்கவில்லை .

இறுதியில் பொழுதுபோக்காக பயின்று வந்த தையற் கலையே பூர்ணிமாவுக்குக் கைகொடுத்தது.

சட்டை ஒன்றைப் பூரணமாகத் தைத்து முடித்ததும் பூர்ணிமா “அப்பாடா” என்று முதுகை நிமிர்த்திக் கொண்டு எழுந்தாள். அதே சமயம் “புள்ள” என்று குரல் கொடுத்துக்கொண்டே உள்ளே வந்தாள் கண்டு மணி அக்கா.

“வா கண்டுமணி” என்று கூறிக்கொண்டே உள்ளேயிருந்து ஒரு பாயை எடுத்துவந்து போட்டாள், நல்லம்மா- பூர்ணிமாவின் தாயார். கூடவே வெற்றிலை வட்டாவும் வந்து விட்டது.

வெற்றிலையை வாயில் குதப்பிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள் கண்டுமணி.

“என்ன புள்ள, எங்கட சட்டை முடிஞ்சிரிக்கா?”

“சட்டை தைத்து முடிந்துவிட்டது அக்கா, இனிப் பூப்போட வேணும். நாளைக்குக் கொடுத்துவிடுகிறேன்”.

“வருசமும் நெருங்கி வருகுதே. புள்ளைக்கு இனி வேலை நெருக்கடியாகத்தான் இருக்குமாக்கும்?”

“ஓம் அக்கா ”

இது வரை மௌனமாக இருந்த நல்லம்மா இப்போது பேச்சில் கலந்து கொண்டாள்.

“என்ன செய்யிறது கண்டுமணி, நல்ல பூவேலை சலாரும் குறைவென்று எல்லோரும் இங்குதான் வாறாங்க”

“வருவாங்கதானே. அதுசரி புள்ளையிர சோதனைப் பாடு எப்படி?”

“இந்த முறையும் எடுத்திருக்கிறாள் கண்டுமணி. ஆனா முடிவு வரல்ல. வாற ஐப்பசி மட்டுல தான் முடிவு வருமாம்.”

“ஏன் புள்ள. இப்பல்லாம் நெசவுக்கெண்டு பொம்புளப் புள்ளையளெல்லாம் போகுதுகளே. ஒரு சேலை நெய்து கொடுத்தா பத்து ரூபா கிடைக்குமாம். சில புள்ளையள் ஒரு நாளில் பத்து ரூபா உழைச்சிடுதுகளாம்.”

“நெசவுக்குப் போகலாம் தான் கண்டுமணி. ஆனா நெச வுக்குப் போற புள்ளையளப்பத்தி ஒரு மாதிரியாகக் கதைக்கிறாங்க. அதனால் தான் அதுக்கு நான் பூர்ணிமாவை அனுப்ப விரும்ப வில்லை.”

“அதுகும் மெய்தான், புள்ள. மான மரியாதைக்குப் பயந்தது களுக்கு அந்த வேலை ஒத்துவராது தான்.”

பேச்சுத் தொடர்ந்து சிறிது நேரத்துக்குப் பின் கண்டுமணி போய்விட்டாள். ஆனால் கண்டுமணி தட்டி விட்ட வீணைத்தந்தி நல்லம்மாவின் இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

“நெசவுக்குப் போவதால் அப்படி என்ன குடி மூழ்கி விடப் போகிறது? மற்றவர்களைப்பற்றி நமக்கென்ன? நமது பிள்ளை ஒழுங்காய்ப் போய் ஒழுங்காய் வந்தால் சரிதானே, ம். விதி இருந்து ஒரு ஐயாயிரம் சேர்த்துவிட முடியுமானால் கனகசபையையே பூர்ணிமாவுக்கு மாப்பிள்ளையாக்கிவிடலாம். நல்லம்மாவின் மனதில் சபலம் ஆசைக்குத் தூபம் போட்டது.

கனசபை, கார்த்திகேசு மாஸ்டரிடம் படித்த பையன், அவரிடம் நிறைய மரியாதை கொண்டவன். கார்த்திகேசு மாஸ் டரின் மனதிலும் அவனை மருமகனாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தந்தையின் எண்ணம் பூர்ணிமாவுக்குத் தெரியாவிட்டாலும் கனகசபையின் அடக்கமான பண்பு அவளை மிகவும் கவர்ந்திருந்தது. எல்லாம் சுலபமாக முடிந்திருக்கும். அதற்குள் தான் பாழும் யமன் கார்த்திகேசு மாஸ்டரைக் கொண்டு போய்விட்டானே.

கனகசபை ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்டு பயிற் றப்பட்ட ஆசிரியனாக வெளிவந்ததும் கல்யாண மார்க்கெட்டில் அவனுடைய விலை கிடுகிடுவென்று ஏறி விட்டது.

கனகசபையைப் பொறுத்தவரை அவன் மனம் பூர்ணி மாவை வெகுவாக விரும்பியது. சீதனம் எதுவும் இல்லாமலே அவன் பூர்ணிமாவைக் கைப்பிடிக்க விரும்பினான். ஆனால் கனகசபையின் பெற்றோர்தான் வீடு வளவு, காணியுடன். கை ரொக்கமும் தரவேண்டும் என்று விடாப் பிடியாக இருந்தனர். பூர்ணிமாவுக்கு வீடு வளவு இருந்தது. காணி இருந்தது. கைரொக் கம்தான் இருக்கவில்லை. நெசவுத் தொழில் அதற்கு வழிகாட்டுகிறதா?

தாயும் மகளும் இரவு முழுக்க இந்தப் பிரச்சினையைப் போட்டு அலசினர். வேலையே பார்ப்பதில்லை என்றிருந்த பூர்ணிமா இப்போது தையல் வேலை செய்கிறாள். நெசவு வேலை அதை விட எந்தவகையில் மட்டம்? வேலை பார்த்துத் தான் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தையலாக இருந்தால் என்ன? நெசவு வேலையாக இருந்தால் என்ன?

பூர்ணிமா நெசவுக்குப் போகத் தொடங்கிவிட்டாள்.

இஸ்மாயில் மரைக்காரின் நெசவு நிலையத்தில் பேச்சும் சிரிப்பும் கைத்தறிகளின் சத்தத்தையும் மீறிக்கொண்டு வெளியே கேட்டுக்கொண்டிருந்தது. இரண்டு பெண்கள் சேர்ந்தாலே பேச் சுக்குக் குறைவிருக்காது. பதின்மூன்று பெண்கள் ஒன்றாகச் சேர்ந்திருந்தால் கேட்கவாவேண்டும்.

பேச்சுக்கும் சிரிப்புக்கும் மத்தியில் வேலை மந்தமாக ஊர்ந்து கொண்டிருந்தது. இருந்தாலும் அந்த நெசவு நிலையத்துக்குப் பொறுப்பாக இருந்த அப்பாவி நெசவு ஆசிரியர் அவர்களுடைய பேச்சை நிறுத்த வழி தெரியாமல் சிவனே என்று தன் காரியத்தைக் கவனித்துக்கொண்டு இருந்தார்.

“அடியே, புடியே, அவளே, இவளே” என்ற வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம், மிகத் தாராளமாக உபயோகப்படுத்தப் பட்டன.

பூர்ணிமா இந்தப் பேச்சுக்களில் கலந்துகொள்ளாமல் தன் வேலையிலேயே கண்ணாக ஒரு தறியில் நெசவு செய்து கொண்டி ருந்தாள். அவள் அப்படி அமைதியாக வேலை செய்வதால் நெசவு ஆசிரியருக்கு அவள் மேல் மிகுந்த மதிப்பு ஏற்பட்டிருந்தது. இதை எப்படியோ மோப்பம் பிடித்து விட்ட வாயாடிப் பெண்கள் நெசவு ஆசிரியரையும், பூர்ணிமாவையும் சேர்த்து வம்பளக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் பூர்ணிமா இதைக் கொஞ்சமும் பொருட் படுத்தவில்லை.

பூர்ணிமா நெசவு நிலையத்தில் சேர்ந்த சில தினங்களுக் குள்ளேயே அங்கு நடைபெறும் பல்வேறு காரியங்களையும் கவனித்து அவர்களுடன் ஒட்டாமல் ஒதுங்கிக் கொண்டாள்.

நெசவுக்கு வரும் பெண்கள் அத்தனைபேரும் குடும்பத்தின் ஏழ்மை நிலையை முன்னிட்டே வருகின்றனர் என்பது எல்லோ ருக்கும் தெரிந்த விஷயம். இப்படி இருந்தும் சில பெண்கள் தங்களை நாகரிகச் சிட்டுகளாக ”மேக்கப்’ செய்து கொண்டு வந்தனர்.

நெசவு நிலையத்திற்குப் புதிதாக வரும் பெண்கள் வரும் போது குனிந்த தலை நிமிராத பெண்களாக வருவார்கள். ஆனால் சில நாட்களிலே அவர்களையும் தங்களைப் போன்ற வாயாடிப் பெண்களாக மாற்றி விடுவார்கள் மற்றவர்கள்.

பூர்ணிமாவின் சுபாவத்திற்கு இந்த இடம் ஒத்துவரவில்லை. இருந்தாலும் குடும்ப நிலையை முன்னிட்டு அவள் அங்கே வேலை செய்து வந்தாள்.

பூர்ணிமா நெசவு நிலையத்தில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. ஓரளவு பணமும் கையில் சேர்ந்துவிட்டது. கனகசபையின் பெற்றோரிடம் இனித்தைரியமாகப் போய்க் கேட்கலாம் என்று நல்லம்மா சொல்லிக்கொண்டு இருந்தாள்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒரு நல்ல நாளாக இருப்பதால் அன்றே கனகசபையின் வீட்டுக்குப்போய் வரன் கேட்பதென்று தீர்மானமாயிற்று. கனகசபை பூர்ணிமாவை மனப்பூர்வமாக விரும்பியதால், நல்லபடியாகவே எல்லாம் முடியும் என்று அவள் நம்பினாள்.

பூர்ணிமாவுக்கும் வயது இருபத்தெட்டுக்கு மேலாகி விட்டது. இனிமேலும் அவள் கன்னியாக இருப்பதற்கு இடம் வைக்க மாட்டார் இறைவன். அவளுடைய நல்ல குணத்திற்கு கனக சபையே அவளுக்குக் கணவனாகக் கிடைப்பான்.

நல்லம்மாவின் தாய் உள்ளம் என்னவெல்லாமோ கனவு கண்டது.

அன்று வெள்ளிக்கிழமை. நெசவு முடிந்து வாயாடிப் பெண் கள் எல்லோரும் “காச் மூச்” என்று சத்தம் போட்டுக்கொண்டு வெளியே வந்தனர்.

தெருவில் போகும் போது கூட இவர்கள் அட்டகாசம் ஓய்வதில்லை. யாராவது இவர்களைப் பார்த்துவிட்டால், இவர் களுக்குக் குஷி பிறந்துவிடும். பேச்சும் சிரிப்பும் இன்னும் அதிக மாகக் கேட்கும்.

இந்தக் கூட்டத்தோடு சேர்ந்து போக வேண்டிய இருக்கிறதே என்று தன்னை நொந்தபடி வந்து கொண்டிருந்தாள் பூர்ணிமா.

பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்ததும் மீண்டும் கலகலப்பு. எல்லோரும் “கிளு கிளு” த்துக் கொண்டே பஸ்ஸில் கும்பலாக ஏறி முன் சீட்டில் உட்கார்ந்துகொண்டனர். பூர்ணிமாவும் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டாள்.

பஸ் புறப்பட இன்னும் சில நிமிடங்கள் இருந்தன. அதற்குள் ட்ரைவர்களும் கண்டக்டர்களும் கூட சம்பாஷணையில் கலந்து கொண்டனர். பூர்ணிமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை பேரும் இவர்களுக்கு நண்பர்களா?

பூர்ணிமா வீட்டிற்கு வந்ததும், அவள் தாயார் கனகசபை யின் வீட்டுக்குப் போக ஆயத்தமானாள். இரவு குறிக்கப்பட்ட சுபநேரத்தில் நல்லம்மா இறைவனை நன்கு வேண்டிக் கொண்டு புறப்பட்டாள்.

நல்லம்மா திரும்பும்பவரை பூர்ணிமாவுக்கு இருப்புக் கொள்ள வில்லை. இனியாவது இறைவன் தனக்கு நிம்மதியான வாழ்வைக் கொடுக்கமாட்டானா இனியாவது மனதுக்குப் பிடிக்காத இடத்தில் வேலை செய்யும் துர்ப்பாக்கியம் தீராதா என்றெல்லாம் அவள் சிந்தனை விரிந்தது.

இரவு ஒன்பது மணியளவில் நல்லம்மா திரும்பி வந்தாள். ஆனால் அவள் கொண்டுவந்த செய்தி…?

“பூர்ணிமா, கனகசபையில் பெற்றோர் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டனர். ஆனால் கனகசபைதான் ஒரே பிடியாக மறுத்துவிட்டான், எவ்வளவு தங்கமான பிள்ளை எப்படி மாறி விட்டான் பார்?

பூர்ணிமாவுக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. வெளியே சொல்லாவிட்டாலும் பூர்ணிமா அவனை மனமார நேசித்தாள், அவனும் அப்படியே தன்னை விரும்பினான் என்பதும் அவளுக் குத் தெரியும். ஆனால் இப்போது அவள் காதுகளில் விழுவது என்ன?

கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் பூர்ணிமா கேட்டாள் “அவர் மறுப்பதற்குக் காரணம் ஏதாவது தெரிந்ததாம்மா?”

“அதைக் கேட்காதே மகளே. அபாண்டம். நீ நடத்தை கெட்டவளாம். நெசவு ஆசிரியருக்கும் உனக்கும் ஏதோ தொடர் பாம். நெசவுப் பெண்களுடன் சேர்ந்து கெட்டுப் போய்விட்டாயாம். கண்ட கண்ட வாலிபர்களுடன் பேசுவதை இன்று அவனே பஸ் நிலையத்தில் கண்டானாம்.”

“போதும் அம்மா போதும். நம் விதி அப்படி இருக்கிறது. இதில் யாரையும் நோவதற்கு இடமில்லை.”

“வருத்தப்படாதே மகள். இது போனால் இன்னொரு இடம். நம்மிடந்தான் இப்போது தேவையான பணம் இருக்கிறதே.”

“வேண்டாம் அம்மா. அந்தப் பணம் தான் இப்போது என் வாழ்வைப் பாழடித்திருக்கிறது. இனி அந்தப் பணத்தாலும் என் வாழ்வை மீட்க முடியாது”.

பூர்ணிமா சொன்னது நல்லம்மாவுக்குப் புரியவில்லை.

பூர்ணிமா இன்னமும் நெசவுக்குப் போய்க்கொண்டே இருக்கிறாள்.

– முற்போக்குக் காலகட்டத்துச் சிறுகதைகள், முதற் பதிப்பு: மாசி 2010, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *