கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 5,259 
 
 

என்னுடைய பெயர் சங்கமித்திரை. வயது முப்பத்தியாறு. சென்னையில் மாநில அரசுப் பணியில் இருக்கிறேன்.

அன்று நான் அலுவலகத்தில் இருந்தபோது மதியம் பள்ளிச் சீருடையில் என்னை வந்து பார்த்த அந்தப் பெண்ணுக்கு பதின்மூன்று வயது இருக்கும். “என் பள்ளித் தோழி உங்களோடு பேச வேண்டுமாம். நீங்கள்தான் அவளுக்கு எப்படியாவது உதவி செய்யணும். அவங்க அம்மா அப்பாகிட்ட அவளுக்காக நீங்க வந்து பேசணும்…”

நான் அன்றாடம் அலுவலகம் போகும் அதே வழியில்தான், இந்த இரண்டு மாணவிகளும் அவர்களின் பள்ளிக்குப் போவார்கள். அதனால் அவர்களின் அறிமுகம் எனக்கு உண்டு.

ஸ்கூல் படிப்பைத் தவிர, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி என்று அவர்கள் கலந்து கொண்டால், வழியிலேயே என்னை நிறுத்தி ஏதாவது பாயிண்ட்ஸ் சொல்லுங்க மேடம் என்று என்னிடம் கேட்பதால், எனக்கும் அவர்களுக்கும் சற்று நெருக்கம் அதிகமானது.

போட்டியில் அவர்கள் பரிசு வாங்கியவுடன் என் அலுவலகத்திற்கு வந்து சான்றிதழ் மற்றும் பாரதியார் கவிதைகள் ஆகியவற்றை மகிழ்ச்சியோடு என்னிடம் காட்டியபோது, அவர்கள் மேல் சாதாரணமாய் ஆரம்பித்த நட்பு சற்று வலுப்பட்டது.

லதா, ரம்யா இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள். இருவரில் ஒருவர் வெற்றி பெற்றாலும் பொறாமையின்றி மற்றவர் அதை ஏற்றுக்கொண்டு சந்தோஷப் பட்டார்கள். இந்தச் சின்ன வயதில் அவர்களுக்குள் இருந்த ஒற்றுமையும், ஆரோக்கியமான போட்டியும், நட்பும் அவர்களை என் நேசத்திற்கு உரியவர்களாக மாற்றியது. அந்த இருவருள் ஒருத்தியான ரம்யாதான் இன்று என் அலுவலகத்திற்கு வந்து என்னைச் சந்தித்தாள்.

அவளை அன்புடன் அமரச்செய்து, “என்ன விஷயம் ரம்யா, ஸ்கூலில் எதுவும் பிரச்னையா?” என்று கேட்டேன்.

“இல்லைங்க மேடம். இது வேற…”

சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்று எனக்குப் புரிந்தது.

“தைரியமா என்னை நம்பி சொல்லும்மா…” இன்னும் நெருக்கத்தோடும், நட்போடும் கேட்டேன்.

ரம்யா மிகுந்த யோசனைக்குப் பின், “மேடம், என் தோழி லதா இரண்டு நாளா ஸ்கூலுக்கு வரவில்லை” என்றாள்.

“ஏன் ரம்யா?”

“அவங்க வீட்டுலே இன்னும் மூணு நாள் கழிச்சு ஏதொ பங்க்ஷன் எல்லாம் பண்ணித்தான் அனுப்புவாங்களாம். எங்க ஸ்கூல் கோ-எட் மேடம். மத்தப் பசங்களுக்கு தெரிஞ்சா ரொம்பக் கேலி பண்ணுவாங்க… பாய்ஸ் எல்லாம் கிண்டல் பண்ணி பாட்டுப் பாடுவாங்க. ஸ்கூல்ல மரியாதையே போயிடும்.”

“………………….!”

“லதா அழுதுண்டே இருக்கு. எப்படியாவது இந்த பங்க்ஷனை நிறுத்துன்னு என்னிடம் கெஞ்சறா… அவங்க அம்மா அப்பாகிட்ட அவ எவ்வளவோ சொல்லிப் பார்த்தா. அதுக்கு அவளை, ‘இப்படியெல்லாம் பண்ணா அப்புறம் ஸ்கூலுக்கே அனுப்பமாட்டோம்னு’ மிரட்டியிருக்காங்க மேடம். நீங்கதான் மேடம் எப்படியாவது அவளுக்கு உதவி பண்ணனும். லதா வீட்டுல எது செஞ்சாலும் உடனே எங்க வீட்டுலேயும் அதே மாதிரி செய்வாங்க மேடம். எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. எனக்கும் இந்த மாதிரி செஞ்சா, நான் செத்தே போயிடுவேன்…”

“………………..?”

“நாங்கள் வசிப்பது ஒரே காலனி. ஸ்கூல்ல படிக்கிற பாதி பசங்க எங்க காலனியில்தான் குடியிருக்காங்க. இந்த மாதிரி செஞ்சா எப்படி மேடம் நாங்க மறுபடியும் ஸ்கூலுக்குப் போறது?”

ரம்யா என்ற அந்த பதின்மூன்று வயதுப்பெண், தன் தோழிக்காகவும் தனக்காகவும் பேசியதை ஒரு சாதாரண விஷயமாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை.

பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவியை, ஊர்கூட்டி சடங்கு செய்து பார்ப்பேன் என்று கட்டாயப் படுத்தும் பெற்றோர்களை எதில் சேர்ப்பது? அப்படிச் செய்வதே தங்களுக்கு கெளரவம் என்று நம்பும் அவர்களின் அறியாமையை எப்படி விலக்குவது? ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் இயல்பான ஒரு உடல் மாற்றத்தை விளம்பரப் படுத்துவது அவளுக்கு அவமானத்தை தேடித் தருவதன்றி வேறு என்ன?

இதைக் கேட்டால், ‘அதெல்லாம் பெரியவங்க பல காரணங்களோட வச்சிருக்காங்க. நீங்க புதுசு புதுசா சொல்லாதீங்க. எங்க குடும்பத்ல இப்படி செஞ்சாத்தான் கெளரவமா நினைப்பாங்க… அதெல்லாம் உங்களுக்குப் புரியாது’ என்று மிக அலட்சியமாகச் சொல்லும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறோம்.

பெண் என்பவளை ஆபாச விளம்பரங்களில் உபயோகப் படுத்துவது எத்தனை கீழ்மையோ, அத்தனைக் கீழ்மை அந்தப் பெண்ணையும், அவளுக்குள் ஏற்படும் உடல் மாற்றங்களையும் விளம்பரப் படுத்துவது.

‘என் மகனுக்கு மீசை முளைத்திருக்கிறது ஸார்… நாளைக்கு அவனுக்கு சடங்கு வைத்திருக்கிறோம்’ என்று எவரேனும் விழா எடுத்தால்; அல்லது விழா எடுக்கப் போவதாகச் சொன்னால், அது எத்தனை கொச்சையாகவும் அறிவீனமாகவும் தோன்றுமோ; அத்தகைய அறிவீனம்தானே இந்தப்பெண் குறித்து எடுக்கப்படும் விழாக்கள்?

‘அன்னப் பறவை மாதிரி அலங்காரம் பண்ணி, வாகனத்தில் பெண்ணை உட்கார வச்சி, ஊர்வலம் விட்டு வீடியோ எடுத்து தடபுடலா பண்ணிட்டாங்கப்பா’ என்று சிலர் பேசிக்கொள்வது, இவர்களைப் பற்றிய இகழ்ச்சியையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்துவதன்றி வேறு என்ன செய்யப் போகிறது?

ஏன் இப்படிச் செய்கிறார்கள்? ஒரு இளம்பெண் ‘செந்தூரப் பூவே’ என்று சினிமாவில் சந்தோஷமாகப் பாடுவதற்குக் காரணம் அவளுக்கு ஏற்பட்ட இந்த இயல்பான மாற்றம் என்று சித்தரிக்கப்பட்டது. ‘மண்வாசனை’ போன்ற படங்கள் வரத் தொடங்கிய பின் இந்தச் சடங்குகளுக்கும் விழாக்களுக்கும் இன்னமும் மவுசு கூடிவிட்டது.

“மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே!”

“நானும் ஆளான தாமரை ரொம்ப நாளாக தூங்கலை!”

“பேசிப்பேசி ராசியானதே, மாமன் பேரைச்சொல்லி ஆளானதே!” என்று தொடங்கி சகலமும் பெண்ணின் வாழ்க்கையில் இயல்பாக வரும் மாற்றத்தைக் குறித்தே பாடப்படும் பாடல்களாகவும், அது குறித்த காட்சி அமைப்புகளாகவும் அமைந்து விடுகிறது. இதன் தாக்கம் எத்தனை அழுத்தமானது என்று யோசிக்க நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

நேற்றுவரை யதார்த்தமாய் பழகிய பையன், இன்று வித்தியாசமாகப் பார்க்கிறான். நேற்றுவரை சாதாரணமாக ஓடியாடிய ஒருபெண், தேவையின்றி கட்டுப்படுத்தப் படுகிறாள். அவள் மீது திணிக்கப்படும் விதிகளும், கட்டுப்பாடுகளும் இரண்டு விதமான பாதிப்புகளை அவள் மனதுக்குள் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

முதலில், தன்மீது போடப்படும் இந்த விதிகளால் தன்மீதே இரக்கமும், சுய பச்சாதாபமும் ஏற்படுத்திக்கொண்டு, தனக்கு எல்லோருமே எதிரிகள் என்ற ஒருவிதமான மனோவியாதிக்குள் அவள் விழுந்து விடுகிறாள். இந்த நிலையை அவள் அடையாத பட்சத்தில், அவள் தனக்கு ஒரு புதிய அந்தஸ்து கிடைத்ததாக எண்ணி, தனக்கு எல்லாம் தெரியும் என்றும், தனக்கு நாளைக்கே திருமணம் செய்ய வயது வந்துவிட்டது போலவும் (அதுவும் பெற்றோர் திரும்பத்திரும்ப சொன்னதன் தாக்கம்), தான் எதிரில் சந்திக்கும் ஒவ்வொரு ஆண்மகனையும் கிட்டத்தட்ட ஹீரோவாகவே கற்பனை செய்துகொண்டு விடுகிறாள்.

இப்படி தன்னைப் பற்றிய கழிவிரக்கத்தால் வரும் பாதிப்பு; அல்லது தான் என்று தேவையில்லாமல் தன்னைப்பற்றி வரும் நினைப்பு, இந்த இரண்டில் ஒன்றுக்கு பெரும்பான்மையான பெண் பிள்ளைகள் ஆட்பட்டுப் போகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா? மாமன் சீர் சரியில்லை என்ற காரணத்தால் குடும்பங்கள் பிரிவதும், இதுபோன்ற சடங்குகள் நடத்துவதும் கூட ஒருவிதத்தில் ‘மொய் பணம்’ சம்பாதிக்கும் உத்தி என்பது இந்தப் பிரச்னையின் இன்னொரு பரிமாணம்.

பெண்ணை வீட்டில் அலங்கரித்து வைத்து நகரத்தில் நடப்பதுபோல ஒருநாள் விழாவோ, அல்லது கிராமங்களில் நடப்பதுபோல தெருவெல்லாம் புட்டு வினியோகித்து; ஆண்டாள் வேஷம் முதல் சகுந்தலை வேஷம்வரை போட்டு நடத்தப்படும் பதினொரு நாள் விழாவோ, இவைகள் அனைத்தும் ஒரு பெண்ணை அவள் குடும்பத்திலேயே அந்நியப்படுத்தி, ஒரு இரண்டாந்தரப் பிரஜையாக அவளை ஆக்கிவிடும் விஷயங்களாகவே மாறிவிடுகிறது.

பெண் என்பவள் விளம்பரப் பொருளல்ல; பெண் என்பவள் போகப் பொருளல்ல; பெண் என்பவள் வசூல் செய்ய காரணப் பொருளல்ல; பெண் என்பவள் குடும்ப வசதியையும் குடும்பத் தலைவர்களின் ஜம்பத்தையும் வெளிக்காட்டிக்கொள்ள பயன்படுத்தப்படும் பொருளல்ல.

அவள் ரத்தமும் சதையும் கலந்த இன்னுயிர்; மான அவமான உணர்வுகள் உடையவள்; தன் உடல், மனம் ஆகிய இரண்டுக்கும் உரிய அந்தரங்கத்தை காத்துக்கொள்ளவும், அவளோடு வைத்துக் காப்பாற்றிக்கொள்ளவும் அவளுக்கு உரிமை உண்டு. அந்த உரிமையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை – அவள் பெற்றோர் உட்பட. ஆனால் இன்னமும் பழக்கம், பண்பாடு என்ற பெயரில் தனிமனித உரிமைகளை நசுக்கும் காரியங்களை நாம் செய்துகொண்டு இருக்கிறோம்.

பத்திரிக்கை அடித்து, கல்யாண மண்டபத்தில் விழா நடத்தி, நம்முடைய மாண்புமிகுக்கள் உட்பட கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளாக இவை மாறி வருகின்றன. இதயெல்லாம் வெறும் கற்பனை புலம்பல், மிகைப்படுத்துதல் என்று சொல்லும் முன், இந்த ‘மஞ்சள் நீராட்டுவிழா’ பத்திரிக்கைகளைப் பற்றி யோசிப்பது நலம்.

ரம்யா சொன்னதால் மட்டும் அல்ல, இது மனித உரிமை குறித்த பிரச்சனை என்பதால் லதாவின் பெற்றோரோடு பேச முடிவு செய்தேன். லதா ஸ்கூலுக்குப் போவது நிற்காது. ஆனால் அவள் விரும்பாத இந்த சடங்கு நிகழ்ச்சி என்னால் நிற்கப்போவது உறுதி.

கலாச்சாரம், பண்பாடு, பழக்கம், நாகரீகம் இவை எல்லாமே மனதுக்கு ரம்மியமாகவும், உணர்வுகளை வலுப்படுத்தவும், மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியைக் குறிக்கும் விதமாகவும் அமைவதே உன்னதம். அப்படி இல்லாதபோது, அதை மாற்றுவதும் அந்தத் தவறான பழக்கங்களை தகர்த்து எறிவதும் தப்பில்லை.

நான் ரம்யாவுடன் அவர்கள் வீட்டையடைந்தேன். என்னைப் பார்த்தவுடன் லதா ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டாள்.

லதாவின் அப்பா பண்பு கருதி “வாங்க” என்றார்.

அவள் அம்மா என்னை உட்காரச் சொன்னாள். குரலில் கடுமையுடன் “நான் அரசு உத்தியோகத்தில் இருக்கிறேன். இங்க உட்கார வரல. லதா பெரிய பொண்ணா ஆயிட்டான்னு கேள்விப்பட்டேன்… அது மிகவும் இயல்பான விஷயம். அதுக்காக அவளுக்கு சடங்கு அது இதுன்னு அவளை அசிங்கப்படுத்துவது அநாகரீகம்… இந்தச் சடங்கில் அவளுக்கும் சம்மதமில்லை. உடனே அதை நீங்க நிறுத்தணும்…”

“இது எங்க பரம்பரை குடும்ப வழக்கம்ங்க… வீட்ல பெரியவங்க என்னோட அம்மா. அவங்க சொல்லித்தான் நாங்க ஏற்பாடு செய்யறோம்.” லதாவின் அப்பா சொன்னார். அவரின் வயதான அம்மா சற்று கெத்தாக என்னிடம் “நீ யாரும்மா எங்க குடும்ப விஷயத்துல தலையிட?” என்றாள்.

கேபி சுந்தராம்பாள் மாதிரி நெற்றியில் வியூதியுடன் காட்சியளித்தாள்.

“கொஞ்சம் உள்ள வரீங்களா, உங்களிடம் தனிமையில் கொஞ்சம் பேசவேண்டும்.” இருவரும் அடுத்த அறைக்குள் நுழைந்ததும் கதவைச் சாத்தினேன்.

“உங்க வீட்டுக்காரரு என்ன பண்றாரு?”

“அவரு போய்ச் சேர்ந்து பதினைந்து வருஷமாச்சு…”

“அவரு போனவுடனே நீங்களும் உடன்கட்டை ஏறியிருக்கலாமே?”

“…………………….”

“சரி குறைந்த பட்சம் தலையை மொட்டை அடித்துக் கொண்டிருக்கலாமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?”

“அதெல்லாம் இப்ப வழக்கில் இல்லாத சங்கதிகள்…”

“உண்மைதான். அவைகள் இப்போது வழக்கில் இல்லைதான். அதுமாதிரி இந்த பூப்பு சடங்கையும் நீங்கள் தூக்கி எறிய வேண்டும். செய்வீர்களா? உங்களுக்கு ஒரு நியாயம் உங்க பேத்திக்கு ஒரு நியாயமா? சற்று யோசியுங்கள்…”

“……………………………”

“உங்க பேத்தி லதா பூப்பு எய்தது மிக இயல்பான விஷயம். அது அவளின் அம்மா அப்பாவிற்கும் பாட்டிக்கும் தெரிந்தால் மட்டும் போதும். அவளை அரவணைத்து ஆதரவு சொல்லி தைரியம் சொல்லவேண்டுமே தவிர, இப்படி ஊரைக்கூட்டி அவளை அசிங்கப்படுத்துவது அநாகரீகம் பாட்டி…”

“புரியுதும்மா. கண்டிப்பா நான் உடனே இதை நிறுத்தறேன்…”

வெளியே வரும்போது என் கட்டை விரலை உயர்த்திக் காட்டினேன்.

லதாவும், ரம்யாவும் ஓடிவந்து என்னை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *