(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மேல் நாட்டவருக்கு இந்தியப் பழக்க வழக்கங்களைப் பற்றி விசித்திர, விசித்திரமான அபிப்பிராயங்கள் எவ்வளவோ காலமாக இருந்து வந்திருக்கின்றன. இன்றும் நம்மைப்பற்றிய வரையில் நம் உண்மை வேறு, அவர்களுடைய உண்மை வேறாகத்தான் இருக்கின்றன. இந்த நிலைமை மாற இன்னும் எவ்வளவு காலம் பிடிக்குமென்று நிச்சயமாகச் சொல்ல முடியாது.
இப்படி நம்மைப்பற்றி மேல் நாட்டில் வழங்கும் விசித்திரமான கற்பனைகளில் ஒன்று, பூரி ஜகந்நாதத்திலுள்ள தேரைப் பற்றியது. ‘ஜக்கர்நாட்’ என்று அதன் பெயரையே மாற்றி, கற்பனையைக் கொண்டு, அவர்கள் ரஸமான ஓர் ‘உண்மை ‘யைச் சிருஷ்டித்திருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் புண்ணியசாலிகள் எல்லாரும் பூரி க்ஷேத்திரத்துக்குப் போய் வருஷத்துக்கொருதரம் ஓடும் தேருக்கடியில் விழுந்து பிராணனை விட்டு விடுவார்களாம்! பூரித்தேர் உண்மையானதுதான்; அதன்கீழ் அகப்பட்டுக்கொண்டு நசுங்கிச் சிலர் சில சமயம் இறப்பதும் வாஸ்தவந்தான். ஆனால் அதைத் தியாகம் என்றோ, புனிதம் என்றோ சொல்வதற்கில்லை.
இந்தப் பூரித் தேரைவிட உண்மையான விஷயம் வாழ்க்கையின் ‘புழுதித்தேர்.’ அணுக்களையும் விடச் சிறிய உருத்தெரியாத பரமாணுக்களால் ஆனதோர் பிரம்மாண்டமான சிருஷ்டி இது. இங்கு மட்டும் அல்ல; இது உலகெங்கும் ஆட்சி செலுத்தி நரபலி கேட்டுத் திரிந்துகொண்டிருக்கிறது.
கந்தசாமியினுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் பால்காரனுடன் சண்டையில் தான் ஆரம்பிக்கும். அவர் சரியாகத் தூக்கம் கலையாமல் பாயில் படுத்துக் கிடப்பார்.
“சாமி , இன்னிக்காச்சும் பணத்தைக் கொடுத்துடுங்க” என்று உரத்த குரலில், ஆனால் மரியாதையாகச் சொல்லுவான் பால்காரன்.
“உன் பணத்துக்கென்னடா? கொடுத்துடறேன் போடா” என்று சொல்லிக்கொண்டே சோம்பல் முறித்துக்கொண்டு பாயில் எழுந்து உட்காருவார் கந்தசாமி.
“இன்னிக்குக் கொடுக்கலேன்னா நீங்க வேறே பால்காரன்தான் பாத்துக்கணும் சாமி. மாசம் பொறந்து இருபது நாளாயிடுச்சு. பாக்கிப்பேருங்ககிட்டேல்லாம் வாங்கிச் செலவழிச்சு எத்தனையோ நாளாயிடுச்சு! இப்படிப் பால் வியாபாரம் பண்ணினாக் கட்டாதுங்க சாமி, எனக்கு” என்பான் பால்காரன்.
“இன்னிக்குப் பால் கொடுத்தாச்சோல்யோடா? போ, போ. இன்னிக்குப் பணம் தந்தூடறேன்” என்பார் கந்தசாமி. அவருக்கு மறுநாளைப் பற்றிய விசாரம் இல்லை. விசாரப்பட்டுப் பிரயோஜனம் இல்லை என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும். அன்றைக் காபிக்கு பால் கிடைக்காமல் போய்விடப்போகிறதே, அப்படிப் போய்விட்டால் தமக்குப் பொழுதே விடியாதே என்றுதான் அவருக்குக் கவலை. மற்ற விஷயங்களைக் கவனிக்க இருபத்துநாலு மணி நேரம் இருக்கிறதே! பார்த்துக்கொள்ளலாம்.
பால்காரன், “ஞாபகம் இருக்கட்டும், சாமி. சாயங்காலம் நாலு மணிக்கு வறேன். இன்னிக்குக் கட்டாயமா சீட்டுக் கட்டியாகணும்” என்று ஒரு கடைசிப் பாணத்துடன் போய்விடுவான்.
அவனை வராதே என்று தடுக்கக் கந்தசாமி யார்? “வா, வா” என்று வாசல் பக்கம் போய்க்கொண்டிருக்கும் அவன் காதில் விழும்படி சொல்லிவிட்டுப் பல் துலக்க எழுந்து குழாயண்டை போவார். சமையலறையிலிருந்து அவர் மனைவியின் குரல், “காபி வச்சிருக்கேன். சாப்பிட்டுடுங்கள்; ஆறிப் போயிடும்” என்று கேட்கும். அதே சமயம் வாசல் திண்ணையில் பல குழந்தைகளுடன் சபை நடத்திக் கொண்டிருந்த அவளுடைய நாலு வயசுப் பெண் குடுகுடென்று ஓடிவருவாள். குழாயண்டை வழுக்குப் பிரதேசத்தில் வழுக்கி விழுந்து காலைக் கையை ஒடித்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் செலவுக்கு வழி வைத்துவிடப் போகிறாளே என்று கந்தசாமிக்குப் பயம். அன்பு ததும்பாத குரலில், “ஏண்டி! என்ன அவசரம் இங்கே? மொள்ள வரது!” என்பார்.
“இல்லேப்பா; வாசல்லே தொந்திச் செட்டியார் காத்திண்டிருக்கார். அவசரமாப் பாக்கணுமாம். அதான் அப்பா ஓடிவந்தேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி ஓடிவிடப் பார்க்கும் பெண்.
அவளைத் தோளைப் பிடித்து நிறுத்திக் கந்தசாமி, “இதோ பாரு , ரங்கம். அந்தச் செட்டியார்கிட்டே அப்பா வீட்டிலே இல்லேன்னு சொல்லிவிடு. காலணாத் தரேன்” என்பார். ரங்கத்துக்கு அந்தக் காலணாவைக் கொடுக்கக்கூட அவர் மனைவியிடம் கேட்டு அஞ்சறைப் பெட்டியில் ஏதாவது மிஞ்சியிருக்காதா என்று பார்க்கவேண்டியதுதான்.
ஆனால் அவர் பெண், “பல் தேச்சிண்டுருக்கேன்னு சொல்லிட்டேனே அப்பா,” என்று சொல்லுவார்.
“போடி அசட்டுக் கழுதை! எத்தனை சொன்னாலும் தெரிகிறதில்லை. வயசாச்சு!” என்று கசந்து கொள்ளுவார் கந்தசாமி.
“காலணாவைக் குடப்பா, போறேன்” என்று சொல்லி அந்தக் காலணா கிடைக்காதா என்று ஒரு நம்பிக்கையில்லாத ஆசையுடன் சில விநாடிகள் நின்றுவிட்டு அவள் வாசல் பக்கம் ஓடிவிடுவாள்.
அவள் ரேழியைத் தாண்டிக் கொண்டிருக்கும் போது உரக்க, வாசலிலும் அதற்கப்பாலும் கேட்கும்படியாக, “செட்டியாரை வாசல்லே குந்தச்சொல்லு; வறேன்” என்று சொல்லுவார் கந்தசாமி. பல்தேய்த்து, சமைத்து அறைக்குள் போய் அன்று சமையலுக்கு என்ன என்ன தேவை, அதில் எது அவசியம் தேவை, அதில் எது கிடைக்கும் என்பதைப்பற்றிப் பேசிக்கொண்டே காபி சாப்பிட்டுவிட்டு , கந்தசாமி வாசல் பக்கம் போவதற்குள் அரை மணி நேரத்துக்கு மேலாகிவிடும். வாசலில் செட்டியார் இருக்கமாட்டாரென்று கந்தசாமிக்குத் தெரியும். அவர் கந்தசாமி வீட்டு வாசலில் அவ்வளவு நேரம் உட்கார்ந்துவிட்டாரானால் கடையைத் திறப்பவன் யார்? கந்தசாமியினுடைய இரண்டரையே சொச்சத்தை வசூல் பண்ணுவதற்காகச் செட்டியார் அவர் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பாரா என்ன? “அடாடா! செட்டியார் போயிட்டாரா என்ன? என்ன சொல்லிவிட்டுப் போனார் ரங்கம்?” என்று கந்தசாமி கேட்பார்.
“சாமான் வாங்க வறச்சே சொல்றேன்னு சொல்லிவிட்டுப் போனார் அப்பா. எனக்குக் காலணா கொடுக்கமாட்டியே?” என்று சொல்லிவிட்டு, ரங்கம் அந்தக் காலணா வரப்போவதில்லை என்று தெரியுமாதலால், தன் சகாக்களுடன் அரட்டை அடிக்கத் திரும்பிவிடுவாள்.
தபால்காரன் வரப் பத்து மணி ஆகிவிடும். அதுவரையில் யாரும் வந்து தொந்தரவு செய்ய மாட்டார்கள். உட்கார்ந்து தம்முடைய காவியத்திலே இருபது வரியாவது நிம்மதியாக எழுதிவிடலாம் என்று கந்தசாமி எண்ணுவார். கவிதை எழுத அந்த வீட்டில் திண்ணைதான் சரியான க்ஷேத்திரம். மற்றப் பகுதிகளில் வெளிச்சம் போதாது. காகிதம் பேனா தேடி எடுத்துக் கொண்டு ரங்கத்தை, “இங்கே கூச்சல் போடாதே!” என்று அதட்டிவிட்டு அவர் திண்ணைப் பக்கம் போகும்போது, வீட்டில் தம்முடன் ஒண்டுக் குடியிருக்கும் குசேலரின் குழந்தைகள் எல்லாம் அவர் பிரதேசத்தை அவருக்கு முன்போய் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். தம் வீட்டுக் குழந்தை என்றால் வாயெடுத்து அதட்டலாம். கூடக் குடி இருப்பவர் குழந்தையை அதட்டிவிட்டால் பாரதப் போர் மூண்டு விடுமே! அந்தப் போரில் சரியானபடி தலைமை வகிக்கக் காலை வேளையானதால் அவர் மனைவியும் வரமாட்டாள்; தோல்வி நிச்சயம். கந்தசாமி காவியம் எழுதும் லக்ஷயத்தைக் காகிதம் பேனாவுடன் கூடத்து அலமாரியில் கட்டி வைத்துவிட்டு அலமாரிக்குக் கீழே உட்கார்ந்துவிடுவார். அவர் காவியத்தின் கதி ஆமையின் கதிதான். முடிவு என்னும் லக்ஷ்யத்தை அது என்றுதான் அடையுமோ, ஜோஸியனைத்தான் கேட்கவேணும். ஜோஸ்யனுக்குக் கொடுக்கக் காசு கிடையாது. அவரே ஜோஸ்யம் கற்றுக் கொண்டால் தான் ஜோஸ்யம் அளிக்கக்கூடிய ஆறுதலை அவர் பெறலாம் போல் இருந்தது.
கந்தசாமி மொத்தத்தில் ஒரு லக்ஷயவாதி. சில்லறை விஷயங்கள் அவரை அதிகமாகப் பாதிப்பது இல்லை ; அதாவது மனத்தைப் பற்றிய வரையில் அவை அவரை ஒருவிதத்திலும் பாதிப்பது இல்லை. ஆனால் தினம் காலையில் எழுந்தவுடன் பால்காரன், தொந்திச் செட்டியார், சமையல் தேவைகள், இத்தியாதிகள் அவர் லக்ஷயத்தைப் பாதிக்கவில்லையே தவிர அந்த லக்ஷ்யத்தைத் தூரப் பிரதேசத்துக்குத் தள்ளிக் கொண்டே போயின. ஆனால், என்றைக்கு உட்கார்ந்தாலும் தம் காவியத்தையும், அது முடிந்துவிடும், அது முடிந்து வெளியானபின் என்ன நேரும் என்பதையும் பற்றிக் கனவு காண ஆரம்பித்துவிட்டாரானால் அவர் மனத்திலே அமைதியும் சாந்தியும் பிறந்துவிடும். அதற்கப்புறம் அவர் கவி கந்தசாமியே தவிர, தினசரிச் சோற்றுக்குத் தாளம் போடும் கந்தசாமி அல்ல. காவியம் எழுதி முடிந்தால் எப்படி இருக்குமோ? இப்பொழுது சத்தியாக அவருக்கு ஆறுதலளிக்க அதன் ஞாபகமே போதியதாக இருந்தது.
அவர் மனைவி வந்தாள்; “நாழியாறதே. சமயலுக்கு…?” என்றாள்.
தம்முடைய இன்பமான கனவைக் கலைத்த தம் மனைவியிடம் கந்தசாமிக்குக் கோபம் கோபமாக வரும். ஆனால் கோபித்துக் கொண்டு பயனிராது என்று அவருக்குத் தெரியும். இந்த மாதிரி அர்த்தமற்ற கோபம் அவர்களுடைய வாழ்க்கையிலே தினசரிக் காரியம் ஆகிவிட்டது. “கையிலே காலணாத் துட்டுக் கூட இல்லை . தபாலில் ஏதாவது வந்தால்தான்…” என்று மெதுவாகவே பதில் சொல்லுவார் கவி.
கந்தசாமி எழுத ஆரம்பித்தபோது அவருடைய அப்பா சேர்த்து வைத்திருந்த சொற்ப ஆஸ்தி இருந்தது. அதிகமாகக் கஷ்டப்படாமல் முதல் நாலைந்து வருஷங்கள் சென்றுவிட்டன. அப்புறம் இப்பொழுது பல மாதங்களாகக் கஷ்ட ஜீவனந்தான். கவிதையால் வரவு கிடையாது. வரவுக்கு ஏற்பாடு இல்லாமல் பெண்டு குழந்தைகளுடன் காலந்தள்ள முடியாது என்ற அற்பு அறிவுகூடக் கவிக்கு இல்லாமல் போய்விடவில்லை. கவிதையைப் பிரியமான அந்தரங்க லக்ஷ்யமாகவும், மட்டமான ஆனால் பணம் கொடுக்கும் பத்திரிகைகளுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதைப் பகிரங்கமான தொழிலாகவும் நடத்திவந்தார். கவி கந்தசாமியைக் கதை உற்பத்திசாலை என்று சொன்னால் பொருந்தும். ஒரு காலத்தில் அவர் தினம் இவ்வளவு மணி நேரத்தில் இவ்வளவு கதைகள் எழுதுவது என்று திட்டம் போட்டுக் கதைகள் உற்பத்தி செய்தார். நாலுவருஷங்களுக்குமுன் அமுலில் இருந்து அந்த உற்பத்தித் திட்டம், மேல் நாடுகளில் நவீன ஆலைகளில் நேர்ந்துவிட்டது என்று சொல்லுகிறார்களே பொருளாதார நிபுணர்கள், அதுபோல ‘ஓவர் ப்ரொடக்ஷன்’ (தேவைக்குமேல் அதிகமான உற்பத்தியில்) கொண்டுபோய் விட்டு விட்டது. அந்தக் கதைகள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவரும் வரையில் கந்தசாமி உயிர் வைத்திருப்பாரா என்பது சந்தேகம். ஆனால் இது ஒருவிதத்தில் நல்லதுதான். சில்லறைக் கதைகள் எழுத வேணுமே என்ற நச்சு இப்பொழுது இல்லை. கையில் இருந்ததை மாற்றி மாற்றி அனுப்பிக் கொண்டிருந்தால் போதும். ஆனால் அதற்குக்கூடச் சிலசமயம் தபால் செலவுக்குக் கையில் காசு இருப்பது
இப்போதெல்லாம் துர்லபமாகிக்கொண்டிருந்தது.
கவி கந்தசாமிக்குப் பத்திரிகைகளையும், பத்திரிகைக் கதை கட்டுரைகளையும் பற்றி மனத்தில் ரொம்ப மட்டமான அபிப்பிராயந்தான். ஆனால் காசு கொடுக்கிறார்களே என்று எழுதித் தொலைக்க வேண்டியிருந்தது. அவர் சொந்தக் கவி கற்பனையை ஓடவிட்டால் அந்தப் பத்திரிகை ஆசிரியர்களுக்கோ, வாசகர்களுக்கோ வேகம் தாங்காது. அதனால் கந்தசாமியின் கதைத் தொழிற்சாலையில் உபயோகப்பட்ட சரக்கெல்லாம் திருட்டுச் சரக்குத்தான். பழம் பத்திரிகைகள், அன்னிய நாட்டுக் கதைகள், யாரும் படித்திராத, படிக்கமுடியாத, கதை கட்டுரைகள் எல்லாம் அவர் பேனாவின் சக்தியால் புது உருவெடுத்து விசித்திர விசித்திரமான வேஷங்களுடன் நடமாடின. ஆனால் அவைகளுடைய நடமாட்டம் அநேகமாகத் தபால் இலாகாவில்தான். நாலு வருஷத்தில் நாற்பது கதைகள் பத்திரிகைகளில் வெளியாயிருக்கும். அவைகளில் பத்துக்கு இரண்டு மூன்றாகச் சன்மானம் கிடைத்ததுண்டு. மற்றவைக்கு இனிமேல்தான் கிடைக்கவேணும்; கிடைத்துவிடும் என்றுதான் கந்தசாமிக்கு நம்பிக்கை.
இந்த நம்பிக்கையோ, அதன் பயனாக ஏமாற்றமோ அவருடைய மனைவிக்கு இல்லை. தபாலில் ஏதோ வரப்போகிறது என்றாரே கந்தசாமி; என்ன வரும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். கந்தசாமி தபால் என்று சொன்னவுடன் அவள் முகத்தில் அவநம்பிக்கை தோன்றிவிட்டது. கவிஞன் கந்தசாமிக்கு அந்த முகபாவம் நன்கு பழக்கமானதுதான். வழக்கமாக அதைக் கவனியாதவன் போலவே இருந்துவிடுவார். ஆனால் இன்று அப்படி இருக்க மனம் வரவில்லை. அவர் உண்மையிலேயே தபாலில் ஏதோ வரப்போகிறது என்றுதான் எதிர்பார்த்திருந்தார்.
“சாமி இன்று தபாலில் பணம் நிச்சயமாக அனுப்பிவிடுவதாக எழுதியிருக்கிறான்” என்றார் கந்தசாமி.
“எந்தச் சாமி-?”
“அதுதான்- என்னுடைய கதைகள் பத்தை அங்கீகரித்து எழுதியிருந்தானே! அவன்தான், ரணசண்டியின் ஆசிரியன்-“
“ரணசண்டியில் இதுவரையில் வெளிவந்த கதைக்கெல்லாம் பணம் வந்தாய்விட்டது! இனிமேல் வருகிறதற்கும் சேர்த்துப் பணம் இன்று அனுப்பப்போகிறானோ?”
“இல்லை, அனுப்பிவிடுவான்”
“அனுப்பட்டும்; அனுப்பட்டும். உங்கள் தபாலையும் ராமசாமியையும் நம்பிக் கொண்டு நிற்க நான் தயாராக இல்லை” என்றாள் அவர் மனைவி.
கவி கந்தசாமியின் மனைவி அவ்வளவு படித்த பெண்ணல்ல. எழுத்துக்கூட்டத் தெரியும். அவ்வளவுதான். அவளுக்குக் கவிதை எழுதும் லக்ஷயமோ, கதை எழுதிப் பிழைப்பது என்ற லக்ஷயமோ இல்லை , கணவரும், தானும், குழந்தையும் எங்கேயாவது சிரமப்படாமல் சந்தோஷமாக இருக்கவேணும் என்ற ஒரே ஓர் ஆசைதான் உண்டு. என்ன பண்ணுவது?
“இந்தப் பிழைப்பு வேண்டாம்; வேறு ஏதாவது வழிதேடுங்கள்” என்றாள் அவள்.
“இன்று சாமி நிச்சயம் அனுப்பி விடுவான்” என்று கந்தசாமி மறுபடியும் ஒருதரம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே தபால்காரன் வந்துவிட்டான். வேறு ஏதோ பத்திரிகைக்கு அனுப்பியிருந்த ஒரு கட்டுரை திரும்பி வந்திருந்தது; அவ்வளவுதான்.
“மணியார்டர் இருக்கா, போஸ்ட்மேன்?”
“இல்லை.”
கந்தசாமியினுடைய இந்தக் கேள்வியும், தபால்காரனுடைய இந்தப் பதிலும் அநேகமாகத் தினசரி நிகழ்ச்சிகள்தாம். திரும்பி வந்த கதை என்ன கதை என்று கூடப் பார்க்காமல் உறையை மேஜைமேல் போட்டுவிட்டுத் திரும்பி அருகில் நின்றுகொண்டிருந்த மனைவியைப் பார்த்தார்.
“வீட்டில் அரிசி இல்லை; விறகு இல்லை ; குழந்தை பசிக்கிறதூன்னு இன்னுஞ் சித்தைக் கெல்லாம் வந்துவிடும்.”
மதுரைக்குத் தீயிட்டு எரித்த கண்ணகியைப் போல உலகையே சுட்டெரித்து விடலாமா என்று ஆத்திரம் வந்தது கந்தசாமிக்கு.
அவர் மனைவி சொன்னாள்: “நேற்று அரைப் பட்டினி.
இன்னும் பட்டினி கிடப்பது முடியாத காரியம். என் கையிலே இருக்கிற தங்க வளையைக் கழட்டித் தறேன்; வித்து அரிசியும், விறகும், கறிகாயும் வாங்கிண்டு வாருங்கள். நாழியாறது.” அவள் நாக்குழறிற்று.
அவள் மெல்லிதாகக் கைக்கு இரண்டு தங்க வளைகளும், கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலியும், காதில் வெள்ளைத் தோடும், மூக்கில் சிவப்பு மூக்குத்தியுந்தான் அணிந்திருந்தாள். எல்லாமாகச் சேர்ந்தால் நூறு ரூபாய் பெறுமா என்பது சந்தேகம். இப்போது அவர்களுடைய ஆஸ்தி அவ்வளவுதான். தன் கை வளைகளில் ஒன்றைக் கழற்றி நேரே கணவன் கையில் கொடுக்காமல் அவன் காலடியில் போட்டுவிட்டு , கண்ணீர் ததும்பிய தன் கண்களைத் திருப்பிக் கொண்டு சரேலென்று சமையலறைக்குள் போய்விட்டாள்.
சித்தப்பிரமை பிடித்தவன்போலக் கீழே கிடந்த அவள் கை வளையைப் பார்த்துக் கொண்டு சிறிது நேரம் நின்றார் கவி கந்தசாமி. அவருக்கும் கண்ணீர் வந்துவிடும்போல் இருந்தது. ஆனால் அதை அடக்கிக் கொண்டு, கையில் வளையை எடுத்துப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றார். அப்புறம் ஒரு தீர்மானத்திற்கு வந்தவராக வளையுடன் வெளியேறினார்.
அவர் அரிசி, விறகு எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து போட்டார். மௌனமாகவே எல்லாம் நடந்தது. பன்னிரண்டு மணி சுமாருக்குச் சாப்பாடாகிவிட்டது. அப்புறந்தான் அவர் மனைவி தன் வளை எத்தனை ரூபாய்க்குப் போயிற்று, எத்தனை மிச்சம் இருந்தது என்று கேட்டாள். கந்தசாமி கூடத்தில் ஏதோ எழுதும் உத்தேசத்துடன் பேனா காகிதம் சகிதம் அப்பொழுதுதான் உட்கார்ந்திருந்தார்.
“பதிமூணரை ரூபாய்க்குத்தான் போச்சு. மளிகைக் கடைப் பாக்கியைத் தீத்துட்டேன். சாமான் எல்லாம் அஞ்சாறு ரூபாய் ஆச்சு. மிச்சம் ரெண்டு ரூபாய்” என்றார் கந்தசாமி.
“மூணு நாலு ரூபாய்க்குக் கணக்கு எனக்குத் தெரியல்லையே?” என்றாள் அவர் மனைவி.
“…ம்….. பேப்பரும், தபால் பில்லைகளும் வாங்கிண்டு வந்தேன்.”
“என் குழந்தையும் நீங்களும் சாப்பிடணும்னு தான் நானா வளையைக் கழட்டித் தந்தேனே தவிர உங்கள் பேத்தல்களுக்கும் சர்க்கார் தபால்களுக்கும் அழ நான் அதைச் செய்யல்லையே!” என்றாள் அவர் மனைவி.
“….ம்!” கந்தசாமி உறுமினார்.
பாவம்! அவர் பெண் உரக்க , “அப்பா! எனக்குக் காலணாத் தரமாட்டயே நீ?” என்று கேட்டுக் கொண்டு அந்தச் சமயமா அவரை அணுகவேணும்! பேயறைவதுபோல அதைப் பிடித்து நாலு அறை அறைந்து விட்டார் கவி.
“உங்கள் கையாலாகத் தனத்துக்குக் குழந்தையைப் போட்டுக் கொல்லுவானேன்?” என்றாள் அவர் மனைவி, குழந்தையை அழைத்து அணைத்து ஆசுவாஸப்படுத்திக் கொண்டு சமையலறைப் பக்கம் போய்விட்டாள்.
கவி கந்தசாமிக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாமா என்று இருந்தது. தம் கையாலாகத்தனந்தான் தம் கோபத்துக்குக் காரணம் என்று அவருக்கே தெரியவில்லையா, என்ன? கவி என்றால் கையாலாகாதவனாகத்தான் இருக்க வேணுமா? அப்படியானால் இந்தக் கவிதையும் வேண்டாம், எழுத்தும் வேண்டாம். திடீர் என்று அவர் எழுந்து அலமாரியைத் திறந்து தம் கையெழுத்துப் பிரதிகளையெல்லாம் எடுத்துத் தாறுமாறாகக் கிழித்துப் போட்டார். அவருடைய காவியத்தில் இதுவரை எழுதியிருந்த பகுதிகளையும் கிழித்துப் போட்டுக் கொண்டிருக்கும்போதே, காகிதம் கிழிக்கும் சப்தம் கேட்டுத் தன் குழந்தையைத் தூங்கப் பண்ணிவிட்டு அவர் மனைவி வந்தாள். சிறிதுநேரம் சும்மா பார்த்துக் கொண்டு நின்றாள்.
அப்புறம், “என்ன இது?” என்று கேட்டாள்.
கந்தசாமி பதில் சொல்லவில்லை. பாக்கிக் காகிதங்களையும் கிழித்து எறிந்துவிட்டு ஒரு பைத்தியக்கார அசட்டுச் சிரிப்புடன் தம் மனைவியைப் பார்த்தார்.
“நான் இனிமேல் கையாலாகாதவன் அல்ல” என்றார் கவி கந்தசாமி.
– 1944, க.நா.சு. சிறுகதைகள்