புனல்பெருவழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 7,516 
 
 

செல்வியைப் பார்க்கச் சென்றபோது அவளில்லை. அவளுடைய மகளும், அவளுடைய கணவரும் தான் இருந்தார்கள். செல்வியின் கணவர் என்னை பார்த்திருக்கிறார், மாப்ள, மாப்ள என்று வாய் நிறைய அழைத்திருக்கிறார் நிறைய சமயங்களில். ஆனால் அவரிருக்கும் நிலையில் என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. செல்வியின் மகளுக்கு என்னைத் தெரியாது, உறவுமுறை சொன்னால், ஓ! என்று கேட்டுக்கொள்ளலாம். என்ன செய்வது என்று தெரியாமல், வரும்போது முக்கில் பார்த்த டீக்கடை ஞாபகம் வந்தது, ஒரு டீயும், சிகரெட்டும், சில நிமடங்களை சாம்பலாய் உதிர்க்கும் என்று தோன்றியதால், அவளிடம் சொல்லிவிட்டு நகர முற்பட்டேன்.

செல்வியின் மகள், அம்மா வந்தா என்ன சொல்லணும் அண்ணா? என்றாள். அண்ணனா? என்று சிரித்துக் கொண்டேன். நானே வந்து சொல்லிக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன் அங்கிருந்து. டீயைச் சொல்லிவிட்டு காத்திருந்தேன். அது என்னவோ எந்த டீக்கடைக்கு போனாலும், காபி சாப்பிட மனம் வருவதில்லை. டீதான் எப்போதும், டீ மற்ற நேரங்களில் குடிக்கவில்லை என்றாலும். டீயும் சிகரெட்டும் பிரிக்க முடியாத விஷயமாகி விடுகிறது.

கிங்க்ஸ் இல்லேண்ணா, பில்டர் தரவா என்றான் கடைக்காரன். அவனுக்கும் அண்ணா நான். நான் ஒன்றும் சொல்லாமல் அவனைப் பார்த்தேன், சிகரெட்டை நீட்டினான். அனிச்சையாய் கை நீண்டு சிகரெட்டை வாங்கிக் கொண்டது. பற்றவைக்க தொங்கிய கொச்சைக்கயிற்றின் முனையில் கனன்று கொண்டிருந்த நெருப்பை இழுத்து, சிகரெட்டின் முனைகளை பொசுக்கினேன். பற்றி இழுத்துக் கொண்டிருக்கும் போதே டீயும் வந்தது.

செல்வி என்னுடைய சித்தியின் பெண், என்னைவிட இரண்டு வயது பெரியவள். மூன்றும் பெண்களாய்ப் போன வீட்டில், ஆண்பிள்ளை நான் செல்லப்பிள்ளை ஆனேன். செல்வியின் மீது ப்ரியம் வேர்பிடிக்க மற்றுமொரு காரணம் செல்வியின் தோழிகள். சாய்ராபானுவும், மீனாவும் என்னைக் கொண்டாடுவது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. பத்தாவது படித்து முடித்ததும், செல்வியை பள்ளிக்கூடம் போகவிடாமல் நிறுத்தி விட்டார்கள். செல்வியின் அப்பா, வயித்து வலிக்காரர், தங்க நகை வேலை பார்ப்பவர், வளையல் மட்டுமே செய்வார், அதுவும் கல்வைச்ச வளையல். யாரு இப்போது அதைப் போடுகிறார்கள்? வேலை ரொம்ப சுமார் என்பதால், அட்டையில் லாட்டரி சீட்டு வைத்துக் கொண்டு மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுப் பிராகாரங்களில் விற்றுக் கொண்டு இருப்பார்.

செல்விக்கு அடுத்து, கமலாவும், ராணியும் அவர்கள் இன்னும் படித்துக் கொண்டிருந்தார்கள், கமலா பத்தாவது வர குறைந்தது இரண்டு வருடம் இருந்தது அப்போது. கமலா நல்லாவே படிப்பாள், எல்லோருமே நீச்சத்தொட்டி ஸ்கூலில் தான் படித்தார்கள் அப்போது. செல்வி படிப்பை நிறுத்தியதும் தான், நான் சித்தி வீட்டுக்கு அதிகம் போக ஆரம்பித்தேன். செல்வி அழகாய் இருப்பாள், அப்போது. ராணி, ராணிமுத்து, மாலைமதி என்று அவளின் பொழுதுகளில் காதலும், துரோகமும், களவும் மலிந்திருந்தன. எல்லோரையும் போல அவளுக்கும் ராஜகுமார கனவுகள் இருந்தன என்பதில் சந்தேகம் இல்லாமல் இருந்தது. அவளின் செருகிய கண்களும், சுழித்த சிரிப்பும் அதற்கு கட்டியம்.

புதிய வார்ப்புகள் பாக்யராஜ், நிறம் மாறாத பூக்கள் சுதாகர் என்று பேசிப் பேசி காதலில் கொப்பளித்தாள் செல்வி. செல்வி மீராவின் கனவுகள் கற்பனைகள் காகிதங்கள், படித்து என்னிடம் விளக்கங்கள் சொல்வாள். மு.மேத்தா தான் உலகின் சிறந்த கவிஞன் என்று நம்பினாள். அவளுக்கு சுஜாதாவை அறவே பிடிக்காது. இந்துமதியும், சிவசங்கரியும், லக்‌ஷ்மியும் அவளுக்கு பிடித்த எழுத்தாளர்கள்.

செல்விக்கு இன்னொரு பிடித்தமான விஷயம் என்னுடைய தூரத்து மாமன் பாஸ்கரன். செல்வியைப் பார்க்கவே அடிக்கடி வருவான். அவனிடம் அப்போது சுவேகா என்றொரு மொபட் இருந்தது. சுவேகா கொஞ்சம் பருத்த சைக்கிள் மாதிரி இருக்கும். வீட்டுக்கார கிழவி மாதிரி சத்தம் போடும், புகையும் விடும். பாஸ்கர் எப்போதும் செல்வி மாவாட்ட உட்கார்ந்திருக்கும் நேரம் தான் வருவான். சாய்ந்தும் சாயாத வெயிலில், வந்தவன் சித்தியிடம் அக்கா, அக்கா என்று பிரியம் வழிய பேசுவான். சொந்த தம்பியே சீந்துறதில்லே, இந்த பய பாரு எவ்வளவு பிரியமா இருக்கான் என்று மெச்சிக் கொள்வாள் சித்தி. இடையிடையே அவனிடம் செலவுக்கு கொஞ்சம் பணமும் வாங்கிக் கொள்வாள்.

செல்வி மாவாட்டும் போது, எதிரில் இருக்கும் மாடிப்படியில் உட்கார்ந்து கொள்வான் பாஸ்கரன். வெயில் ஒரு பிரமிடு போல நிழல் பரத்தியிருக்கும். அதில் உட்கார்ந்து கொண்டு, சுவரில்லாத சித்த்ரங்கள் படத்தைப் பற்றி பேசினான். மீனாட்சி டாக்கீஸீல் போன வாரம் பார்த்துவிட்ட வந்ததன் பிறகு அதைப்பற்றி அதிகம் பேசினான். சக்தி தியேட்டரில், கன்னி பருவத்திலே அவனிடம் கதை கேட்கும் போது, அவளுக்கு வெட்கம் வரும். வெட்கத்தில் குருனையாய் அள்ளுவாள் மாவை. உளுந்து அரைத்து பொங்கிய பின், மாவை அள்ளிப் போடும் போது ஒரு சத்தம் வருமே, “தொளப்” என்று அதை திரும்ப திரும்ப செய்யச் சொல்லி சிரிப்பான். செல்விக்கு இவனின் வினோத ஆசைகள், ரசனைக்குரியதாய் இருக்கும்.

செல்வியின் பேச்சில் கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே வர ஆரம்பித்தான் பாஸ்கரன். செல்வி அவனைப் பற்றி பேசும்போதெல்லாம், எனக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வரும். அவன் மொபட்டில் காத்தப் புடுங்கிவிடவேண்டும் என்று தோன்றும், ஆனால் ஒருபோதும் செய்யத் துணிந்ததில்லை. ஒரு கட்டத்துக்குமேல் செல்வியிடம் பேச ஆரம்பித்தாலே, பாஸ்கரன் பற்றி மட்டுமே பேச ஆரம்பித்தாள். எனக்கு மிளகாய் அரைச்ச அம்மில வெறுமனே உட்கார்ந்த மாதிரி காந்தும்.

ஒருமுறை வயித்துவலிக்கார சித்தப்பாவிற்கு வலி அதிகமாகி, ஆஸ்பத்திரில சேக்குறமாதிரி ஆகிவிட்டது. தர்மாஸ்பத்திரி தான் என்றாலும், போக்குவரத்துக்கும், சத்துள்ள ஆகாரத்திற்கும் கொஞ்சம் காசு தேவையாயிருந்தது. தர்மாஸ்பத்திரில கொடுக்குற கோதுமை ரொட்டி ஒரு மாதிரி நாறுது என்று தொடவில்லையாம் அவர். ”பர்மாக்காரன் கடையில இடியாப்பம் வாங்கிக் கொடுங்க! வயித்துக்கு இதமா இருக்கும்” என்று பக்கத்து பெட்ல படுத்துக்கிடந்த பாட்டி சொல்ல, கீழவாசல் வரை போகணும், காசு வேற வேணுமே என்று சித்திக்கு தோன்றியிருக்க வேண்டும். முதலில் அம்மாவிடம் காசு வாங்கிவா என்று நான் பார்க்க போயிருந்த போது சொன்னவள், பிள்ளைக எல்லாம் அங்க தான் சாப்பிடுதுங்க என்று தோன்ற, காசு வாங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

அப்போது தான் அவளுக்கு பாஸ்கரன்கிட்ட கேட்டுப்பாக்கலாமே என்று யோசனை வந்தது. அவன் சாயங்காலம் வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தாள் போல. மதியம் சாப்பாடு வாங்கிவர எங்க வீட்டுக்கு வந்தாள். அம்மா அவளுக்கு சாப்பாடு போட்டுவிட்டு, எப்படிறீ இருக்காரு உங்க வீட்டுக்காரரு? என்று கேட்டாள். நீ தர்மாஸ்பத்திரிக்கு வந்து பாப்பியா, உனக்கு கீரிடம் எறங்கிடாது? என்று முணுமுணுத்தபடியே சாப்பிட்டாள்.

கைப்பிள்ளைய வச்சுக்கிட்டு நான் எப்படிறீ வருவேன்? புத்தியில்லாம பேசுற! உன் வீட்டுக்காரன் கொழுப்பெடுத்துப்போய் விஜயா மெஸ்ல அயிர மீன் கொழம்பு சாப்பிட்டா, வவுத்து வலி வராம என்ன செய்யும்? அதுவும் ஜேபி கூட சேர்ந்து! அதான் வயித்துக்கு எதுவுமே ஒத்துக்காம, பயத்தப்பயிறா சாப்பிடுற? இந்த லட்சணத்துல எதுக்கு அயிர மீன் குழம்பு வளைச்சு, வளைச்சு திங்கணும்? அப்படி என்ன நாக்கு கேக்குது, இழுத்து வச்சு அறுக்க மாட்டாம? என்று சொல்லிவிட்டு சித்தியின் மூஞ்சியைப் பார்த்தாள் அம்மா. சித்தியின் முகம் போன போக்கே ஒருமாதிரி இருந்தது. ஏதோ நடக்கப்போவது உறுதியாய் தெரிந்தது.

சித்திக்கு அம்மா, அவள் புருஷன் பற்றி சொன்னது பிடிக்கவில்லை போல. ”அந்தமாட்டுல நிப்பாட்டு, நீ எங்களுக்கு கஞ்சி ஊத்தறதும் போதும், நாங்க வாரிக்கட்டிக்கிட்டதும் போதும்” என்று சாப்பிட்டவரை வைத்துவிட்டு, பிள்ளைகளயும் வரச்சொல்லிவிட்டு கிளம்பினாள். செல்வி மட்டும் ஏம்மா உனக்கு புத்தி கித்தி கெட்டுப் போச்சா? பெரியம்மா நமக்கு எவ்வளவு செய்யுது? என்றாள். நீ பொத்து எனக்குத்தெரியும்! என்று மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினாள். நான் எவ்வளவு சமாதானம் சொல்லியும் சித்திக்கு கோபம் குறையலை.

சித்தி எங்கள் வீட்டுக்கு வருவதற்கான மிகப்பெரிய காரணம் அப்பா தான். அப்பா முதலில் கட்ட ஆசைப்பட்டது சித்தியைத்தான். ஆனால், அம்மாவின் அம்மா உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதால், அவசர அவசரமாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் நடந்தது. இது எல்லோருக்கும் தெரியும், அம்மாவுக்கும். ஆனால் அம்மா அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டாள், அப்பாவுக்கும் அம்மா மேல் அலாதியான பிரியம் வளர்ந்து விட்டது போகப்போக. இந்த சண்டையைக் காரணமாய் வைத்து சித்தி அம்மாவிடமும், எங்களிடம் கூட பேசாமல் இருந்தாள். ஏதாவது விசேஷத்தில், செல்வியைப் பார்த்தால், பெரிம்மா! என்று ஆவலாய் அம்மாவிடம் ஓடி வருவாள்.

செல்வியின் கல்யாணத்திற்கு கூட சித்தி கூப்பிடலை. ஆனா, சித்தி சம்பந்தம் பண்ணவர்கள் என்னோட அப்பாவழி சொந்தங்கிறதால, கல்யாணத்திற்குப் பிறகு திரும்பவும் ஒரு தொடர்பு வந்துவிட்டது. பாஸ்கரன் என்ன ஆனான் என்ற தகவல் தெரிந்து கொள்ள ஏனோ ஆர்வமாய் இருந்தது. கொஞ்ச நாள் செல்வி வீட்டோட போக்குவரத்து இருந்தது. செல்வி புருஷனும், தங்கவேலை தான் பார்த்தான், அவனோட தம்பியோட சேர்ந்து. நிறைய சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவான், அப்போதே.

பார்க்க நல்லாயிருந்தாலும், ஒரு விஷயத்தை ரெண்டு தடவைக் கேட்பான், ஒண்ணும் புரியலையே என்று கடைசியாய்த் தலையைச் சொறிவான். அவன் வீட்டில் யாரும் அவனை மதிக்கிற மாதிரி தெரியவில்லை. அவங்க வீட்ல செல்விக்கு எவ்வளவு மரியாதை இருக்கும் என்று நினைக்கும் போதே எனக்கு கவலையாய் இருந்தது. செல்வி மாமியார் வீட்ல தான் இருந்தாள், தம்பி, அவன் குடும்பம் என்று எல்லாம் ஒன்றாகத் தானிருந்தார்கள். செல்வியின் புருஷனுடைய தம்பிக்கு முன்னாடியே திருமணமாகி ஒரு குழந்தை வேறு இருந்தது. அப்பவாவது யோசித்திருக்க வேண்டும், ஏந்தம்பிக்கு முதல்ல கல்யாணம் செஞ்சாங்கண்ணு!

செல்வியின் புருஷனுக்கு கல்யாணம் ஆகும்போது, முப்பத்தி நாலு என்று யாரோ சொன்னார்கள். செல்விக்கு பதினெட்டோ, பத்தொம்பதோ தான். சித்திக்கு வேறு வழி தெரிந்திருக்காது, சித்தப்பா இன்னும் வயித்தப் பிடிச்சுக்கிட்டு தான் இருக்காரு என்று செல்வி சொன்னாள் ஒரு முறை. சித்தியை நினைத்தால் எனக்கு பரிதாபமாய் இருந்தது.

அதன் பிறகு நாங்க எல்லோரும் என் அப்பாவின் பணிமாற்றம் காரணமாக ஸ்ரீரங்கம் போய்விட்டோம். அதன்பிறகு முற்றாய் தொடர்பு விட்டுப்போனது. படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்தே இப்போது பத்து வருஷம் ஆகிவிட்டது. கல்யாணமாகி பெங்களூரில் செட்டிலாயாச்சு. என்னுடைய அலுவல் காரணமா கோயம்புத்தூர் வந்த எனக்கு, இன்னொரு சித்தி மகன் தான் சொன்னான், செல்வி இங்க தான் கோயம்புத்தூர் கருப்பக்கவுண்டர் வீதில இருக்கான்னு. கருப்பக்கவுண்டர் வீதி, காந்தி பார்க் போனா பக்கம் என்று ஞாபகம் இருந்தது.

செல்வம் சொன்னபடியே சரியாக கண்டு பிடிக்கமுடிந்தது. அவன் வழி சொன்னதும் வீட்டைப் பற்றிய விவரிப்பும் எதிரில் இருக்கும், கரிக்கடையும் போதுமானதாய் இருந்தது எனக்கு வீட்டை கண்டுபிடிக்க. வந்து பார்த்தால், இவளைக் காணோம், ஏதோ ஒரு சூடக்கம்பெனில தான் வேலை பார்க்குறதா சொல்லியிருந்தான் செல்வம். செல்வியோட மககிட்ட கேட்டாத்தெரியும், சரி அவளை கம்பெனில போயி பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.

செல்வியின் மகளைக் காணோம் முன்பக்கம். அப்போது அந்த வீட்டை கவனித்தேன். முன் வராந்தாவிலேயே ஒரு கட்டில் கிடந்தது. சுருங்கிக் கிடந்த ஒரு விரிப்பும், வகையின்றி கிடந்த தலைகாணி, ஒரு துண்டு அப்புறம் செல்வியின் புருஷன். எங்கோ பார்த்தபடி இருந்தான், நான் மாமா என்று கூப்பிட, யாரு என்று வந்தவன். என்னை தெரிந்துகொண்டது போல ஒரு பத்து ரூபா கொடேன் என்றான். என் பையில் பத்து ரூபாயே இல்லை, அம்பதைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டவன், கீர்த்தனா என்று உள்ளே பார்த்து கத்திவிட்டு, வேகமாக வெளியே ஓடினான். எனக்கு அது வித்யாசமாய் இருந்தது.

கீர்த்தனா, செல்வியின் மகள் வந்தாள் வெளியே. என்னண்ணா? என்றாள். உங்க அம்மா வேலை பாக்குற கம்பெனி எங்க இருக்கு என்றேன். அது தெலுங்கு வீதில இருக்குண்ணா, ஆனா அம்மா இப்போ சாப்பாட்டுக்கு வந்திடுவாங்க! நீங்க யாருண்ணா என்றாள். ரொம்பவும் ஒல்லியாய் இருந்தாள், மூங்கிலின் தப்பைக்குச்சி போல தட்டையான கைகள், ரெண்டு ரப்பர் வளையல்கள், கம்மலில்லாமல் குச்சி சொருகிய காது மடல்கள், கலைந்த தலைமுடி, பழைய சல்வாரில் பாவமாய் இருந்தாள். அழுகை வருவது மாதிரி இருந்தது. அவளிடம் நான் தான் உன் அம்மாவோட பெரியம்மவோட பையன் என்று முடிப்பதற்குள், சீனு மாமா என்று கட்டிக் கொண்டாள். எனக்கு இப்போது அழுகை உத்திரவாதமாய் வந்தது.

உட்காருங்க மாமா, அப்பா எங்க போயிட்டாரு தெரியலையே! டீ போடவா மாமா? என்று அவள் அம்மாவைப் போலவே பரபரத்தாள். கட்டிலில் உட்கார்ந்தேன். என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, கையைப் பிடித்துக் கொண்டாள். என்னென்ன சொன்னாளோ செல்வி என்று நினைத்துக் கொண்டேன். பத்தாவது படிக்கிறாள், ராஜவீதில பெண்கள் மாநகராட்சிப் பள்ளியில். நல்லாப் படிக்கிறாளாம். கல்லூரி போகும் கனவுகளைப் பற்றி பேசினாள். பாலில்லாத டீ ஒன்று கொடுத்தாள், சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே, அவளுடைய அம்மா! செல்வி வந்து சேர்ந்தாள். என்னைப் பார்த்ததும் ஓவென்று அழுதாள். எனக்கும் அழுகை வந்தது, பேசாமல் நின்றேன். கையில் வைத்திருக்கிறதை வாங்கிக் கொண்டு, ஏண்டீ கருப்பு டீ கொடுத்தே என்று சொல்லிவிட்டு கடைக்கு ஓடிப்போய் ஏதோ ஒரு குளிர்பானம் கொண்டு வந்தாள்.

உங்க அப்பா எங்கடீ? என்று கேட்டாள். அவளுக்கு தெரியாததால், எனக்குத் தெரியலைம்மா, மாமா முதல்ல வந்துட்டு போனபிறகு நான் உள்ள போயிட்டேன். ரெண்டாவது தடவை மாமா வரும்போது வெளியே வந்தேன் அப்பாவை காணோம் என்றாள். நான் செல்வியிடம், காசு கேட்டாரு கொஞ்சம் கொடுத்தேன், வாங்கிட்டு எங்கேயோ அவசரமா ஓடிப்போயிட்டார் என்றேன். போயிட்டானா? என்று கொஞ்சம் கெட்ட வார்த்தையில் திட்டினாள் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது அவள் அப்படி பேசியது.

இந்த மனுஷனுக்கு புத்தி பேதலிச்சு போச்சுடா, என்னென்னமோ பேசுறாருடா அது பத்தாதுன்னு தெருவில போறவன வர்றவண்ட்ட எல்லாம் போய் காசு கேக்குறாரு? போனமாசம் திடீர்னு ஆளைக்காணோம் ஒரு வாரமிருக்கும், போலீஸ்ல எல்லாம் தகவல் கொடுத்தாச்சு. ஒரு பிரயோஜனம் இல்லை, யாரோ வந்து சொல்றாங்க, மருதமலைல உட்கார்ந்து பிச்சை எடுத்திக்கிட்டு இருக்காரு. எனக்கு ஈரக்குலையே அறுந்து போச்சு!

“வேலைக்குண்ணு போயி பத்துவருஷம் இருக்கும். இவ இத்துனூண்டு பிள்ளை அப்போ, இடைவாருப் பையில வச்சிருந்த உருப்படிய எல்லாம எவனோ உருவிட்டு விட்டுட்டானுங்க, அதுல இருந்து அவந்தம்பி பட்டறையில உட்காரக்கூடாதுன்னு சொல்லிட்டான். அன்னைல இருந்து தான் சூடக்கம்பெனில வேலை பார்க்குறேன். ரெண்டு வேளைக்கும் குறையாம கஞ்சி ஊத்துறேன், வாடகை கொடுக்குறேன். இவளைப் படிக்க வைக்கிறேன், அதும் பத்தாவதோடு நிறுத்திடப்போறேன். ஏதோ என் மாமியாரு அப்பப்போ வந்து உதவி பண்றாங்க, ஆனா இந்த மாதிரி தெருவெல்லாம் போய் கை நீட்டறவற என்ன பண்றது சொல்லு! என்று என்னைப் பார்த்தாள். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

பேசிக் கொண்டிருக்கும் போதே வந்தான் செல்வியின் புருஷன். என்னைப் பார்த்து தம்பி யாரு? என்று கண்ணை சுருக்கிக் கேட்டான். அம்மா அப்பா வர்றாரு என்று கீர்த்தனா, சமையக்கட்டில் இருந்த செல்வியிடம் சொன்னாள். வேகமாக வெளியே வந்து உக்கிரமாக முறைத்துக் கொண்டு நின்றாள், செல்வி. யாரும் கவனிப்பதற்கு முன்பாக கையில் வைத்திருந்த விறகுக்குச்சியால், அவள் புருஷனை சாத்து சாத்தென்று சாத்திவிட்டு, தலையைப் பிடித்தபடி சுவற்றின் மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *