கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 6,752 
 
 

அது சென்னையில் ஒரு ஐடி கம்பெனி.

காலை மீட்டிங் முடிந்து தன்னுடைய இருக்கைக்கு வந்து லேப்டாப்பைத் திறந்தான் ஸ்ரீவத்சன். மனைவி ரோகிணியிடமிருந்து தமிழில் ஒரு நீண்ட ஈ மெயில் வந்திருந்தது. அவசரமாகப் படித்தான்.

அன்புள்ள ஸ்ரீவத்சன்,

நான் என்னுடைய பிறந்த வீட்டிற்கு வந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் என்ன, ஏதுன்னு வம்பு பேச ஆரம்பிச்சுட்டா. ரொம்ப நாளைக்கு விஷயத்தைப் என்னால் பொத்தி வைக்கவும் முடியாது. மிகவும் நன்றாக யோசித்தேன். என்னால் இனி உங்களுடன் குடித்தனம் பண்ண முடியாது. இதை என் அம்மா, அப்பாவிடமும் சொல்லி விட்டேன்.

என் பாத்திரம், பண்டம், நகைகள், கொடுத்த ஐம்பதினாயிரம் பணம் இதயெல்லாம் திரும்பக் கொடுத்துட்டா எனக்கு உபயோகமாக இருக்கும். எனக்கு உங்க மேல கோபம் என்று ஒன்றும் இல்லை. வீணா போயிட்டேனேன்னுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. நாம விவாகரத்து வாங்கிண்டா நல்லது. அம்மா, அப்பா இதைக் கேட்டுட்டு அழுதாலும், இதுவே சரின்னு தோன்றது.

இதைத்தவிர எனக்கு வேற வழி தெரியலை. இனி நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது. துக்கத்தை நான் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.

இப்படிக்கு, ரோகிணி

கடந்த நான்கு மாதங்களாய் வீட்டில் கிடந்து, மனசுக்குள் குழம்பி; பிரிந்து பிரிந்து விவாதித்து; அம்மா, அப்பா, தம்பி என்று வரிசையாய் எல்லோரையும் நிறுத்தி; மனசுக்குள் தான் சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்லிப் பார்த்து, வரைப்படுத்தி, கடைசியாய் இதுதான் தன் மனசில் மேலோங்கி இருக்கிறது. இதிலிருந்து யாருக்காகவும் தான் மாறப் போவதில்லை என்று முடிவு செய்தாள்.

பி.ஈ., முடித்தவுடன், அரசு ஊழியரின் பெண் ரோகிணி, தன் அப்பா சொன்ன இடத்தில் கல்யாணம் செய்துகொள்ள சம்மதித்து, அதற்காகச் சந்தோஷப் பட்டுக் கொள்வதைத் தவிர, வேறு என்ன பெரிதாய் செய்து விடமுடியும்?

‘பரவாயில்லையே, நரசிம்மன் இதோ அதோன்னு இழுக்காம; நறுக்கா சர்வீஸில் இருக்கும்போதே பிஎப் லோன் போட்டு பொண்ணுக்கு ஒரு நல்ல இடமாகப் பார்த்துப் பேசி முடிச்சுட்டான் ஓய்! நரசிம்மன் நாம நினைக்கிற மாதிரி ஒண்ணும் அசமஞ்சம் இல்லை; விவரமானவன்தான்!’ என்று தன்னைப் பற்றியும், தன் சாமர்த்தியம் பற்றியும் சீட்டுக் கச்சேரி நேரத்தில் பேசப்பட்டது குறித்து நரசிம்மனுக்கு ரொம்ப சந்தோஷம். வெளியிலும் ஏகப்பட்ட கடன் வாங்கி, மிதப்பாக ஊர் கூட்டி கல்யாணப் பந்தல் போட்டார்.

முந்தைய நாள் மாப்பிள்ளை அழைப்பின் போது மடிசார் மாமிகளும், பஞ்சகச்சம் மாமாக்களும், இளசுகளும், சிறுசுகளும் தெருவை அடைத்துக்கொண்டு ‘ஆலுமா டோலுமா‘ பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்கள்.

9 – 10.30 முகூர்த்தத்தில், சரியாக ஒன்பதரை மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாய், மேடையில் அமர்ந்திருந்த ஸ்ரீவத்சனுக்கு லேசாய் வலிப்பு வர, மாப்பிள்ளை வீட்டார் அவனை அப்படியே அள்ளிக்கொண்டு அவர்களுக்கு ஒதுக்கி இருந்த ஏஸி ரூமுக்கு ஓடினார்கள்.

“ஏதோ ஆகாத எண்ணெய்ல பட்சணம், சமையல் எல்லாம் பண்ணிட்டேள் போல இருக்கு” என்று கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் மாப்பிள்ளை வீட்டில் இருந்து பேச்சு கிளம்பியது.

ஒரு வழியாக ரோகிணியின் அப்பா நரசிம்மன், கூட்டத்திலிருந்த தன் உறவினரான ஒரு டாக்டரை மாப்பிள்ளை அறைக்கு அழைத்துவர, “ஏதோ வயித்துப் பிரட்டல்; இதற்கு டாக்டர் அது, இதுன்னு பெரிசு படுத்துவானேன்?” என்று டாக்டரை திருப்பி அனுப்பி விட்டார்கள்.

தான் இப்போது என்ன செய்வது என்று புரியாமல் ரோகிணி மண மேடையில் தவித்துப் போனாள். ‘வலிப்பு மாதிரிதானே வந்தது? அதற்கும் பட்சணம் செய்த எண்ணெய்க்கும் என்ன சம்பந்தம்? டாக்டரை ஏன் திருப்பியனுப்ப வேண்டும்? ஏதோ இடறுகிறதே. எங்கோ தப்பு நடக்கிறது, எதையோ மறைக்கிறார்கள். இது நல்லதுக்கில்லை’ என்று அவள் புத்திக்கு உரைத்தது…

உடனே தன் தம்பியிடம் “அம்மாவைக் கூப்பிடு” என்றாள். அம்மா வந்தாள்.

“அம்மா இந்தக் கல்யாணம் வேண்டாம்மா..”

“ஐயோ! அப்பா காதுல விழுந்தா அவ்ளோதான்; துக்கிரித்தனமா பேசாதே” என்று அம்மா அவளை அடக்கினாள்.

தன் சந்தேகம், தன் பயம், தன் விருப்பம், தன் சுகம், தன் சந்தோஷ எதிர்கால வாழ்க்கை இவற்றில் எதுவுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாமல் முகூர்த்த நேரத்தில் கல்யாணம் நடத்துவதே அங்கு பிரதானமாய் இருந்தது.

மேற்கொண்டு பேசினால், அப்பா ஆத்திரத்தில் அசிங்கமாய்த் திட்ட நேரிடும் என்பதால், ரோகிணிக்கு துக்கப் படுவதைத் தவிர, அந்த நேரத்தில் வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

மாப்பிள்ளை மீண்டும் மேடைக்கு அழைத்து வரப்பட, ஒரு வழியாய் கல்யாணம் நடந்து முடிந்தது. தன் முயற்சி தடையின்றி முடிக்கப்பட்டதால் நரசிம்மன் நிம்மதியானார்.

முதலிரவில் அழகான பெண்டாட்டியை அருகில் பார்த்ததால் ஏற்பட்ட புது அனுபவத்தால் ஸ்ரீவத்சனுக்கு மூன்று முறைகள் வலிப்பு ஏற்பட்டு, வாயில் வெள்ளையாக நுரை தள்ளினான். ரோகிணி பயந்து ஒடுங்கிப் போனாள்.

மறுநாள் ரோகிணி, “அப்பா, நேத்து ராத்திரி மூன்று தடவைகள் அவருக்கு வலிப்பு வந்திருச்சுப்பா. பத்து வருஷமா அவருக்கு இப்படித்தானாம். அவர் அப்பா, அம்மா சொல்லித்தான் இதை நம்மிடம் மறைச்சுட்டாராம். மோசமான நிலைமையிலே இருக்காரப்பா” என்று கதறி அழுதாள்.

நரசிம்மன் உண்மையை உணர ஆரம்பித்தார். இருப்பினும் வறட்டுக் கெளரவம் தலை தூக்க, ‘திருமணத்திற்கு மறுநாளே பெண் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தால், தன் மரியாதை என்னாவது?’ என்று நினைத்தார்.

ரோகிணி வேதனையில் துவண்டாள். தன் விருப்பம் பற்றியோ, வேதனை பற்றியோ எவருக்கும் கலையில்லை. இந்தச் சூழ்நிலையிலும் கூட, ஸ்ரீவத்சன் வலிப்பு வராமல் பலத்தோடு இருந்த குறைந்த காலங்களிலும் ரோகிணியைக் கொடுமை செய்தான். அவள் அழகை கொச்சையாகப் பேசி அவமானப் படுத்தினான்.

கனவுகள் சிதைக்கப்பட்டதுமல்லாமல், தன் இயலாமைக்காக அவளைக் குற்றம் காணும் ஸ்ரீவத்சன் மீது, ரோகிணிக்கு குறைந்தபட்ச இரக்கம்கூட வராமல் போனது.

அடிப்படைக் காதலும், நேசமும் செலுத்த முடியாமல் போகும் இடத்தில், கடமையுணர்வுக்கோ, கரிசனத்திற்கோ, தியாகம் செய்வதற்கோ எவ்வித இடமும் இல்லாமல் போனது.

ரோகிணி அப்பா வீட்டுக்கு திரும்பி வந்தாள். அம்மா மூக்கைச் சிந்தினாள். இனி அவனுடன் குடித்தனம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாய்ச் சொன்னாள்.

அதனால்தான் கடைசியாக ஒரு ஈ மெயில் ஸ்ரீவத்சனுக்கு அனுப்பினாள்.

ரோகிணியின் இந்தச் சோக நிலைக்கு யார் காரணம்?

‘எல்லாம் நன்றாய் முடிந்தால் சரி’ என்று நினைத்த அவள் அப்பாவா? நன்றாய் முடிதல் என்றால் என்ன? நினைத்தது முடிதலா? நினைத்தபடி முடிதலா? அல்லது நன்மையாய் முடிதலா? பின் ஏன் ரோகிணிக்கு இந்தத் துக்கம்? இந்த வலி? இந்த வேதனை? அவள் அப்பா காரணமா? அப்பா மட்டும்தான் காரணமா?

இல்லை, இல்லவே இல்லை. முழுக்க முழுக்க ஸ்ரீவத்சன்தான் காரணம். திருமணத்திற்கு முன்பே, “என் நிலைமை இது. என்மேல் பரிவு காட்டுதல் உனக்குச் சம்மதமா?” என்று ரோகிணியிடம் அவன் கேட்டிருக்கலாம். பரவாயில்லை, போகட்டும். திருமணத்திற்கு அப்புறமாவது நயமாகச் சொல்லியிருக்கலாம். தன்னை நிராகரிக்க தன உடல் நிலையைக் காரணம் காட்ட வேண்டாம் என்று அன்புடன், வாஞ்சையுடன் நடந்து காட்டியிருக்கலாம்.

ஒரு பெண்ணிடம் அன்பு காட்டியிருந்தால், உடம்பிலுள்ள குறை ஒரு குறையாக இருந்திருக்காது, அப்படியே இருந்தாலும் அது வெளியே தெரிந்திருக்காது.

என்னுடைய குறையை நீ ஏன் உன் அப்பாவிடம் சொல்லி அழுதாய் என்று கேட்கும் அலட்சியம், அன்பின் வேரை அறுக்கும். ‘சீ போ, உன்னிடம் எனக்கு என்ன?’ என்று பிரிந்து நிற்கும்; ஒன்றில் இரண்டு பார்த்து விடுவது என்று சபதம் செய்து கொள்ளும்.

அலட்சியம் காட்டும் ஒருவரிடம், அன்பு செலுத்துதல் இயற்கை விதிக்குப் புறம்பானது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றால், மூன்றாவது அடிக்கு முதுகையா காட்ட முடியும்?

ரோகிணிக்கு, சக பெண்களுக்கு அமையும் வாழ்க்கை தனக்கும நிகழாமல் போனது குறித்து எந்த ஒரு துக்கமும் இல்லை. ஆனால், அதில் அவரவர் காட்டிய அலட்சியம்; துக்கமாய், சவாலாய், சபதமாய்ப் போய்விட்டது.

ரோகிணியின் திருமண வாழ்க்கையில், பிரிவு என்பது நிரந்தமாய்ப் போய் விட்டது.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *