“குமார் சாப், ஆப் கீ பீவி..”
காக்கி உடை அணிந்த சிப்பந்தி கையில் தொலைபேசியை வைத்து கொண்டு உச்ச பச்ச ஸ்தாயில் கத்தினான். இந்தியாவின் வர்த்தக தலைநகரமான மும்பையின் ஒரு முடுக்கில் அமைந்திருந்த அந்த தபால் நிறுவனத்தில் புதியதாய் வேளைக்கு சேர்ந்திருந்த குமார் நிமிர்ந்து பார்த்தான். ‘ஏதும் பிரச்சனை’னா போன் பண்ணு ரேணு’ என்று அலுவலக எண்ணை இன்று காலை தான் குடுத்துவிட்டு வந்தான், அதுவும் அரை குறை மனதோடு. ‘வந்து நான்கு மணி நேரம் கூட இல்லை., அதற்குள்ளாகவே கூப்பிடுகிறாளே’ என நினைத்துக்கொண்டான். பாதி சந்தோஷமும் , பாதி பதட்டமும் நெட்டி தள்ள ஒரே பாய்ச்சலில் வந்து போனை எடுத்தான்.
“ரேணு…”
“குமார்.. ” எப்பொழுதும் அவள் பேச்சில் இருக்கும் குறும்புத்தனம் இன்று இல்லை. அவள் குரலில் உள்ள வலியை குமார் உணர்ந்தான்.
“என்னமா, ஏதும் பண்ணுதா..?”
“பயமாயிருக்கு குமார், ரொம்ப வலிக்குது.. நீ வந்துடேன் ப்ளீஸ்..”
“பயப்படாதே ரேணு.. டாக்டர் சொன்னாரில்லே இன்னும் மூணு நாலு நாள் ஆகும்’னு..”
“இல்ல குமார், பெயின் ரொம்ப அதிகமா இருக்கு, எனக்கு ரொம்ப மயக்கமா வருது. நீ சீக்கிரம் வரியா..”
***
குமார் அடுத்த அரைமணி நேரத்தில் ரேணுவின் பக்கத்தில் இருந்தான். ஆங்கிலம் புரியாத மேலாளரிடம மராத்தி தெரியாத குமார் தன் மனைவிக்கு பிரசவ வலி எடுத்திருப்பதாகவும், அவளை ஹாஸ்பிடல் சேர்க்க போவதற்கும் விடுப்பு வேண்டும் என்பதை கஷ்டப்பட்டு புரிய வைத்து வீடு வருவதற்குள் அவனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
இரு வீட்டாரின் மறுப்பையும், எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் குமார் ரேணுகா தம்பதியினர். ‘ஒன்றும் இல்லாத உன்னிடம் என் பெண் எப்படி நிம்மதியாக குடும்பம் நடத்துவாள்?’ என ரேணு வீட்டில் ஆரம்பத்திலிருந்தே பிரச்னை தான்.
‘என்னால் உங்கள் பெண்ணை சந்தோஷமாக வைத்து கொள்ள முடியும்’ என ரேணுகா வீட்டில் சவால் விட்டு சென்னையிலிருந்து மும்பைக்கு கூட்டி வந்தான். அப்படி இப்படி அலைந்து சின்ன சின்ன வேலைகள் செய்தவன், ஒரு கல்லூரி நண்பனின் உதவியால் தாதர் அஞ்சலகத்தில் ஒரு தற்காலிக பணியில் அமர்ந்தான்.
கிடைக்கும் சம்பளம் சொற்பம் என்றாலும் ரேணு குமார் தம்பதியினர் சொர்க்கத்தில் இருப்பதாய் இனிமையாக வாழ்ந்து வந்தார்கள். அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்க ஒரு குட்டி ரேணு’வோ குட்டி குமாரோ வர போகிறார்கள் என்ற இனிப்பான செய்தியை கேட்டதில் இரு வீட்டாரின் மனம் கூட குளிர்ந்து போனது. சண்டையை மறந்து ரேணு’வை சென்னைக்கு அழைத்த போது அவள் மறுத்துவிட்டால். தன் கணவன் துணை போதும் என்றும், அன்று அவனை அவமானபடுத்தி அனுப்பியவர்கள் இருக்கும் வீட்டிற்கு இவள் வரபோவதில்லை என்றும் கூறிவிட்டாள் . அவளது அந்த முடிவை பார்த்து அன்று சந்தோஷத்திலும் ஆச்சர்யத்திலும் கிடந்தவன் இன்று தன்னை தானே நொந்து கொண்டான்.
பின்னே என்னவாம். பிரசவம்னா என்ன வலினா என்ன என்று எதுவும் தெரியுமா இவனுக்கு. கிடைக்கும் சம்பளத்தில் வீடு, பால், மின்சாரம் என்று சேமிப்பிற்கு கொஞ்சம் கூட இடம் கிடைக்கவில்லை. இப்பொழுது இன்னொரு உயிரையும் தாங்கி பிடிக்கும் பொறுப்பு வேறு. குமார் பயந்திருந்தானே தவிர அவனுள்ளும் ஆசை இல்லாமல் இல்லை. ஏழு, ஆறு, மூன்று, இரண்டு என்று என்னிகொண்டிருந்த மாதங்கள், வாரங்களுக்கு மாறியது. இரண்டு தெரு தள்ளி இருக்கும் தமிழ் டாக்டரிடம் காட்டிய போது நாள் கூட குறித்து கொடுத்தார். “சுகபிரசவம் தான் சார். ஜூலை 16 எதிர்பார்க்கலாம், இங்கயே கூப்பிட்டு வந்திடுங்க. ஒரு நாள் முன்னாடி கூப்பிட்டு வந்துடுங்க” என்று சிநேகமாய் சிரித்து விட்டு பில்லில் சூடு போட்டார்.
வேறு வழி இல்லை. அங்கு தான் கூப்பிட்டு போகவேண்டும், வேறு எங்கேயும் என்றால் மராத்தியிலே பேசி கொல்வார்கள். இந்த ஒரு வருடத்தில் ஒரு தடவை கூட மராத்தியோ, ஹிந்தியோ தெரிந்து கொள்ள பிரயத்தனபடவில்லை. மீண்டும் நொந்து கொண்டான். ஆட்டோ வரவழைத்து ரேணுவை ஹாஸ்பிடல் கொண்டு சென்றான்.
****
சற்று நேரத்தில் ரேணுவை பரிசோதித்த நர்ஸ் வெளியே வந்து படபடவென மராத்தியில் பொரிந்து தள்ளினாள்.
“ஹிந்தி தெரியாதுங்க” அப்பாவியாய் பதில் சொன்ன குமாரை ஒரு தமிழ் நர்ஸ் கண்டுகொண்டாள்.
“சார், நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. உங்க மனைவிய ஏதும் வீடு வேலை செய்யகூடாதுனு அன்னைக்கே சொல்லி தான சார் அனுப்பினோம்.”
“இப்போ என்ன ஆச்சு சிஸ்டர்”
“என்ன ஆச்சா. குழந்தை தலைகீழ பிரண்டு இருக்கு சார். சிசேரியன் பண்ணனும். இங்க அதுக்கெல்லாம் வசதியும் இல்ல. சிட்டி உள்ள கொண்டு போகணும். நாங்க ஆம்புலன்ஸ் போன் பண்ணிட்டோம்”
சர்வமும் ஆடி போனது குமாருக்கு. சுக பிரசவம் என்றாலே ஆயிரத்தெட்டு பிரச்சணைகள் இருக்கும் என்பார்களே. கடவுளே சிசேரியனா? ரேணு இதையெல்லாம் தாங்கிக்கொள்வாளா? ஆயிரம் கேள்விகள் தலையை துளைத்தெடுக்க ரேணு இருந்த அறையை நோக்கி விரைந்தவனிடம் அந்த நர்ஸ் எதையோ நீட்டினாள்.
“சார், இந்த பில்லை கவுண்டரில் செட்டில் பண்ணிடுங்க” ஒரு காகித கற்றை கொடுத்து விட்டு நகர எத்தனித்தாள்.
குமாருக்கு தூக்கி வாரி போட்டது. எட்டாயிரத்தி நானூறு ரூபாய்க்கு பில் போட்டிருந்தார்கள். இவன் வாங்கும் மாத சம்பளத்தை விட நானூறு ருபாய் ஜாஸ்தி அவ்வுளவுதான். ஸ்கேன் டெஸ்ட், எக்ஸ் ரே டெஸ்ட், ப்ளட் டெஸ்ட் என்று மேலும் வாய்க்கு வராத நான்கு டெஸ்ட்களின் பெயரும் இருந்தது.
“அதற்குள்ளாக இதனை டெஸ்டும் பண்ணியாச்சா..” அப்பாவியாக குமார் கேட்டான்.
“இல்லை, ஸ்கேன் மட்டும் தான் செய்திருக்கிறோம், மீதி பாக்கி இருக்கு”
“என்னங்க நீங்க, பெரிய ஹாஸ்பிடல் அனுப்பனும் சொன்னிங்களே.. அப்புறம் ஏன் இந்த டெஸ்ட்லாம்..”
நர்ஸ் எரிந்து விழுந்தாள், “ஏன் சார், நீங்க டாக்டரா இல்ல நாங்க டாக்டரா. இந்த பார்மளிடிலாம் சீக்கிரம் முடிங்க சார். உங்க மனைவிய கூப்பிட்டு போகனுமா வேணாமா” என்று நடையை கட்டினாள்.
குமார் ஒரு இரண்டு நிமிடம் அப்படியே நின்றான்.கையில் இருக்கும் பத்தாயிரத்தில் எட்டாயிரம் இங்கே போனதென்றால் அந்த பெரிய ஆஸ்பத்திரிக்கு சென்று என்ன செய்வது. வேறு வழியில்லை யாரிடமாவது கேட்கவேண்டியது தான். கவுண்டரில் வந்து வரிசையில் நின்றான். யாரிடம் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருந்தபோழுது வரிசையும் வேகமாய் முன்னேறி கொண்டிருந்தது.
***
கபூதர் கானா அருகே இருந்த அஸ்வினி மடேர்னல் ஸ்பெஷாலிட்டி கேர் ஹாஸ்பிடலில்
ரேணு வை அட்மிட் செய்தார்கள். அங்கிருந்த டாக்டர்கள் இவனை பிடித்து இன்சிஷன் லப்ரடோமி, ஹைபெர்டோமி என புரியாத வார்த்தைகளை கொட்டி பயத்தை ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள். குமாருக்கு முழுக்க புரியவில்லை என்றாலும், இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆப்பரேஷன் செய்தாக வேண்டும் என்பதும் அதற்கு இருபதாயிரம் ரூபாயை இந்த ஹாஸ்பிடலில் அழுதாக வேண்டும் என்பது வரை மட்டும் தெளிவாக உறைத்தது. ரேணு பாதி மயக்கத்தில் படுத்திருந்தாள். பச்சை கவுன் அணிவித்திருந்தார்கள், சுவாச குழாயில் ஆக்சிஜனை விழுங்கிக்கொண்டிருந்தாள். அவளருகே சென்று உட்கார்ந்த குமாருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. பொங்கிவந்த கண்ணீரை இமைகளுக்குள் அணை போட்டு நிறுத்தினான். அந்த பாதி மயக்கத்திலும் ரேணு குமாரை கண்டுகொண்டாள். மெல்ல அவன் கை விரல்களை உறுதியாக பற்றிக்கொண்டாள்.
“அழறிய குமார்” தீனமான குரலில் ரேணு கேட்டாள்.
“இல்லே மா, உனக்கொன்னும் இல்லை.. பயப்படாத.. எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்”, சிரிக்க முயன்று தோற்றான்.
“ம்ம்” மேற்கொண்டு எதுவும் ரேணு பேசவில்லை.
உண்மையில் பேசுவர்தற்கு எதுவும் இல்லை. வீடு இருக்கும் சூழ்நிலை ரேணுவிற்கும் நன்றாக தெரியும். எல்லாம் ஏற்பாடு செய்தாகிற்று என்று குமார் சொன்னது பொய் என்பதை அவள் ஊகிக்காமல் இல்லை. அவன் மனதையே படிக்க தெரிந்தவள், கண்களை படிக்க வெகு நேரம் பிடிக்காது இல்லையா..
“டெலிவரி அப்போ கூட இருப்பேன்னு ப்ராமிஸ் பண்ணிருக்க குமார்”
ஆமாம். சொல்லியிருக்கிறான். முதல் மாதத்திலிருந்து பிரசவத்தை பற்றிய கேள்விகளுக்கும் ரேணுவின் பயங்களுக்கும் தெளிவாக விளக்கங்கள் கூறி அவளை தைரியபடுத்தி வைத்திருந்தான் .
“கவலைபடாத ரேணு மா, நான் உன் பக்கதிலே தான் இருப்பேன்” என்று சொல்லாத நாள் இல்லை.
விதியோ வேறு வழியில் அல்லவா பயணத்தை அமைத்து தொலைத்திருக்கிறது..
“சிசேரியன் மா, நான் எப்படி…”
“ம்ம்.. சும்ம்மா தன் சொன்னேன்..” அவன் விரல்களை மேலும் இருக்கமாய் பிடித்துகொண்டாள்.
மேலும் ஐந்து நிமிடங்களை மௌனம் கொத்தி தின்றது.
“நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரணும் ரேணு.. வந்து.. கொஞ்சம் மருந்து வங்கி வர..”
பொய். பொய் என்று ரேனுவிற்கும் தெரிந்தது..
“ஒரு நிமிஷம்.. கொஞ்சம் கிட்ட வாயேன்..”
மூன்று வருடங்கள் முன்பு முதன் முதலில் அவன் பார்த்த அதே ரேணு, துளி கூட மாறவில்லை தான். குழந்தை போல் சிரித்துக்கொண்டிருப்பவள், இப்பொழுது ஒரு குழந்தையை தரப்போகிறாள். ஒரு வருடமாக நாளொரு மேனியாய் இருவரும் வளர்த்த கற்பனைகளும், கனவுகளும் இன்னும் இரண்டு மூன்று மணி நேரத்தில் நிஜமாக போகிறது. ரேணு அருகில் சென்றான்.
சுவாச குழையினை கழற்றிய ரேணு அவன் நெற்றியில் மிதமான அழுத்தத்தில் ஒரு முத்தம் வைத்தாள். குமாரால் அதற்கு மேல் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை..
குமார் வேலை செய்யும் அலுவலகம் தாதரில் தான் இருக்கிறது. பஸ் பிடித்து அலுவலகம் சென்று அங்குள்ள சக பணியாளர்களிடம் விஷயத்தை விளக்கி கூறினான். அவனுக்காக பச்சாதாப படவும், அவன் மனைவிக்காக பிரார்த்திக்கவும் பல முகங்கள் இருந்தன, ஆனாலும் பணம் என்ற வார்த்தையை கேட்டதும் அனைத்து பச்சாதாபங்களும் நழுவிக்கொண்டது. போஸ்ட் மாஸ்டர் காலில் விழாத குறையாக கேட்டு பார்த்தாயிற்று. ம்ஹ்ம்ம்.. இன்னும் ஒரு மணி நேரமே இருக்கிற பொழுது தனக்கு இந்த வேலை வாங்கி தந்த நண்பனை கேட்டு பார்க்கலாம் என்ற எண்ணம் தோன்ற, உடனே அவனது கை பேசிக்கு அழைப்பை விடுத்தான்.
துக்கமும் இயலாமையும் தொண்டையை அடைக்க நண்பனிடம் விஷயத்தை கூறி முடித்தான்.
“என்ன டா குமார். இவ்வளோ நடந்துருக்கு என் கிட்ட சொல்லணும்ன்னு இப்போ தான் தோணுச்சா.. ”
குமார் அமைதியை இருந்தான். அதாவது அழுது கொண்டிருந்தான்
“எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல மதன். கைலயும் பணம் இல்ல. சிசேரியன்னு சொல்லி வேற பயமுறுத்துறாங்க”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது டா, அஸ்வினி ஹாஸ்பிடல் ரொம்ப பேர் போன ஹாஸ்பிடல்,, நல்லதா தான் நடக்கும்.. நல்லபடி பாத்துக்கொள்வார்கள்”
“பணத்துக்கு ஏதும் ஏற்பாடு பண்ண முடியுமா மதன்”
கடன் என்ற வார்த்தையை விளையாட்டுக்கு கூட உபயோகித்திராத குமாருக்கு அந்த வாக்கியத்தை கூறி முடிப்பதே பெரும்பாடாகிவிட்டது.. இப்பொழுது தன்மானமோ சுயகௌரவமோ பார்க்கும் நேரம் இல்லை. அவன் அதிகம் நேசிக்கும் ஒரு உயிரும், அவனை அதிகம் நேசிக்கும் ஒரு உயிரும் அவனுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.
“இல்ல டா, வீட்ல கொஞ்சம் பிரச்னை. என் கையிலயும் அவுளோ இல்லடா”
குமாருக்கு தலையில் இடியே விழுந்தது போல இருந்தது. பாசமாக பேசிய நண்பன் கூட கடைசியில் கை விரித்துவிட்டானே..
“ஹல்லோ.. குமார்.. குமார்”
“சொல்லு மதன்”
“கோச்சிகாத டா, என்னிடம் இல்லை ன்னு தான் சொன்னேன். ஏற்பாடு பண்ணலாம் குமார். தெரிஞ்சவர் இருக்கார். வட்டிக்கு தருபவர் தான். அவர் கிட்ட சொல்லிடறேன். நீ போய் பேசு டா, உங்க ஆபிஸ் பக்கம் தான் அவர் கடை”
குமாருக்கு பேச வரவில்லை. ச்சே ஒரு நொடி அவனை தப்பாக புரிந்து கொண்டோமே.. மதன் தந்த விலாசத்திற்கு விரைந்து சென்றவனுக்கு அங்கே பெரிய இடி காத்திருந்தது. அந்த கடையில் ஒரு மராத்தி பெண் அமர்ந்து விசிறியால் வீசிக்கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும் முகத்தை சுளித்து கொண்டு மென்று கொண்டிருந்த பானை பக்கத்தில் இருந்த செப்பு சொம்பில் துப்பிவிட்டு கேட்டாள்..
“கோன்”
“வந்து.. பட்டாபி சாரை பார்க்கணும்”
“க்யா.. ஒஹ் ஆத்மி கர் மெய்ன் நஹி.”
குமாருக்கு சுத்தமாக புரியவில்லை. அதை புரிந்துகொண்ட அந்த பெண் சைகையில் சொல்லி காண்பித்தால். அவர் வீட்டில் இல்லை என்று.
அதுவரை கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய்விட்டது. உரக்க கத்தி ஐயோ என அலற வேண்டும் போலிருந்தது. அந்த தெருவின் வாசலில் இருந்த கல்லின் மேல் அமர்ந்தான்.
ரேணு.. என்னை மன்னிச்சிடம்மா.. வசதியாய் வாழ்ந்த உன்னை தூக்கி வந்து நான் வாழ்ந்த நடுத்தர வாழ்கையோடு கோர்த்துவிட்டேன். இப்பொழுது உன் பிரசவத்துக்கு கூட வழி செய்ய முடியாமல் உன்னை கொல்லபோகிறேனே.. கடிகாரத்தை பார்த்த போது முற்கள் 6 மணியை தொட்டுகொண்டிருந்தது. இங்கிருந்து ஹாஸ்பிடல் போகவேண்டும் என்றாலே அறை மணி நேரம் ஆகுமே. போகலாம்.. டாக்டரின் கை காலில் விழுந்தாவது ஆபரேஷன் நடத்த சொல்லி கேட்கலாம். நாளை யாரிடமாவது வாங்கி தந்துவிடுவேன் என்று சொல்லி பார்க்கலாம்.
எழுந்து செல்ல எத்தனித்த பொழுது ஒரு கை அவனை தோளில் தொட்டது. படக்கென திரும்பி பார்த்த குமாருக்கு அந்த சிநேக புன்னகையை உதிர்த்துக்கொண்டிருந்த பெரியவரை யார் என்று தெரியவில்லை.
“தம்பி, குமார் தான நீங்க”
ஆச்சர்யத்தில் பேச நா எழாமல் தலையை மட்டும் அசைத்தான்.
“மதன் தம்பி போன் பண்ணுச்சு, வெளிய கிளம்பிட்டேன். தம்பி போன் பேசியதும் திரும்பி வந்துட்டேன். நல்ல வேலை நீங்க இங்க தான் இருக்கீங்க.. வாங்க தம்பி கடைக்கு”
கடவுள் நேரில் வருவதில்லை, தேவையான நேரத்தில் தேவையான உருவத்தில் வந்து உதவுவார்கள் என்று எங்கோ படித்தோமே, அது இது தான என்று எண்ணியபடி அவரை பின் தொடர்ந்தான். மதன் தனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதால் அதிகம் நேரம் எடுத்துகொள்ளாமல் வெறும் ப்ரோ நோட்டில் மட்டும் கைஎழுத்து வாங்கி கொண்டு பணக்கட்டை எடுத்து குமார் கையில் திணித்தார்.
“சீக்கிரம் போயிட்டு வாங்க தம்பி. நாளைக்கு அவசியம் ஸ்வீட்டோட கடைக்கு வரணும். நல்லபடியா எல்லாம் நடக்கும், போயிட்டு வாங்க தம்பி” வாழ்த்தி அனுப்பிய பெரியவரை கண்ணீரோடும் நன்றியோடும் கும்பிட்டான்.
****
“எங்கே சார் போயிட்டிங்க. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இருக்கிறிங்களே.. நீங்கலாம் என் சார் குழந்தைக்கு ஆசைப்படரிங்க.. இங்கே ஒய்பை விட்டுவிட்டு எங்கே போயி சுற்றிவிட்டு வரீங்க..” தன பங்கிற்கு அங்கே ஒரு நர்ஸ் இவனிடம் பொரிந்தாள்.
“இல்லை சிஸ்டர். பணம் எங்கே கட்டனும்..”
“அங்கே தெரிகிறதே அதான் கவுண்டர். சீக்கிரம் சார். தியேட்டர் ரெடி பண்ணனும்.”
கடவுளே, இன்னும் தியேட்டர் கூட ரெடி செய்யவில்லையா. ஓட்டமும் நடையுமாய் கவுண்டரை நோக்கி சென்றான். அவசர அவசரமாக பணத்தை கட்டி பில்லை வாங்கி கொண்டான்.
அடுத்து பத்து நிமிடங்களில் வேலை விறுவிறுவென்று நடந்தது. ஸ்டேசெரில் படுக்க வைத்து ரேணுவை அழைத்துக்கொண்டு சென்றார்கள். ஒரு முறை அவளை பார்த்து பேசவேண்டும் என கெஞ்சாத குறையாக கேட்டுக்கொண்ட குமாரை அங்கு யாரும் மதித்ததாகவே தெரியவில்லை.
“குலோரோபார்ம் கொடுத்தாயிற்று சார், அவங்களுக்கு நினைவே இப்போ இல்லை. இந்த மருந்தையெல்லாம் முதலில் வாங்கி வாருங்கள். இன்னும் அறை மணி நேரத்தில் ஆபரேஷன் முடிந்து விடும். அந்த நர்ஸ் தந்த லிஸ்டை எடுத்து கொண்டு மனமே இல்லாமல் வெளியே சென்றான்,
வெளியில் வந்த குமாருக்கு ஒன்றுமே புரியவில்லை. சாலை ஒரே அமளி துமளி பட்டுகொண்டிருந்தது . சற்று தூரத்தில் இருந்த மருந்தகத்தில் அந்த பட்டியலை கொடுத்தான். அங்கே போகிறவர்கள் எல்லாரும் பதற்றத்தில் அங்கும் இங்குமாய் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சில் இவனுக்கு இரு வார்த்தைகள் தான் புரிந்தது, opera ஹவுஸ், சாவேரி பஜ்சர். அனைவர் முகத்திலும் கவலையும் பீதியும் அப்பியிருந்தது. ஏதோ நடக்க கூடாதது நடந்திருக்குமோ, நினைத்த பொழுதே பக்கென்றது.. அந்த மருந்து கடைக்காரரிடம் ஆங்கிலத்தில் விசாரித்தான்.
“5 நிமிடங்கள் முன்பு 2 இடங்களில் குண்டு வெடித்திருக்கிறது சார். இன்னைக்கு அந்த அஜ்மல் கசபின் பிறந்த நாள் என்று சொல்லி கொள்கிறார்கள். அவன் ஆட்கள் தன் குண்டு வைத்திருக்க வேண்டும் போலிருக்கிறது , பொது மக்கள் வெளில வர வேண்டாம் ன்னு போலீஸ் கிட்டேர்ந்து sms போய்கிற்றுக்கு சார்..”
குமாருக்கு ஏனோ அடி வயிற்றில் கலக்கம் எடுத்தது.. கடைகாரர் தந்த மருந்தை பையில் போட்டு வெளியில் வந்தான்.. அந்த சாலையில் எப்பொழுதும் புறாக்கள் கூட்டம் கூட்டமாய் அலைந்து கொண்டிருக்கும். அவன் கடந்து சென்றபொழுது சட சட வென நகர்ந்து பறந்த புறா கூட்டத்தில் ஒரு புறா மட்டும் அவன் தோளில் வந்து உட்கார்ந்தது. ஏதோ இனம்புரியாத பயம் அவனை கொத்திகொண்டிருக்க, அந்த புறா மீண்டும் பறந்து பேருந்து நிறுத்தம் அருகே இருந்த மின்சார கம்பத்தில் போய் நின்றது.. ஒரு சில வினாடி நேரம் அதைய பார்த்துகொண்டிருந்தவன், கண்களை அங்கிருந்த எடுக்க நினைத்த மறு நொடி அது நிகழ்ந்தது.
‘படார்’ என்று ஒரு சத்தத்தோடு ஒரு பெரிய தீ பிழம்பு உருவானது. தொடர்ந்து இரண்டு பயங்கர சத்ததோடு அருகே இரு பிழம்புகள் உதித்தன. கண் இமைப்பதற்குள் அந்த இடம் மாறி இருந்தது. மக்கள் பலர் ரத்த காயங்களோடு சிதறி விழுந்திருந்தனர். புகையும், தூசியும் கண்ணை மறைத்துகொண்டிருக்க பல்வேறு மனித குரலின் ஓலங்கள் கேட்க ஆரம்பித்தது. பத்து பதினைந்து வினாடிகளில் புகை அடங்கியதும், அங்கே அஸ்வினி ஹாஸ்பிடல் செங்கல் செங்கலாய் பெயர்ந்திருந்தது.. அலறுவதற்கு அவகாசம் இல்லாமல் குமார் மயங்கி விழுந்தான்.
***
மறுநாள் கண்டிவாலி காவல் நிலையத்தில் குமார் அமர்த்தப்படிருந்தான். அவனோடு இன்னும் பத்து பேர், அனைவர் முகத்திலும் லத்தி உபயத்தில் ரத்த காயங்கள். ஒரு கான்ஸ்டபில் அனைவரின் ஊர், பெயர் முதலியவற்றை கேட்டு ஒரு காகிதத்தில் எழுதி கொண்டிருந்தார்,
“அந்த மூலையிலே இருக்கான் பாருங்கள் சார். அவன் மேல் தன் எனக்கு பெரிய சந்தேகம். நேத்து அந்த தாதர் சம்பவ இடத்திலே ரொம்ப நேரம் நின்னுகிற்றுந்து, வெறிக்க வெறிக்க எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். நேற்று முழுக்க இவனை அடித்து துவைத்து பார்த்தாயிற்று வாயை திறக்கவே மாற்றான். இவன் பாகிஸ்தான் காரன் தான் சார்”, குமாரை சுட்டிக்காட்டியபடி ஒரு காக்கி சட்டை, இன்னொரு காக்கி சட்டையிடம் பேசிக்கொண்டிருந்தது.
– செப்டம்பர் 2011