பாவியர் சபைதனிலே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2018
பார்வையிட்டோர்: 6,212 
 
 

அது ஒரு குலை நடுங்கும் குளிர். நள்ளிரவு ஒரு மணி இருக்கும் மணி துளிகள் கடக்க மறுத்த நேரமது. நால்வர் மூச்சிறைக்க துரத்தி கொண்டிருந்தனர். தாயும் மகளும் தலைதெறிக்க ஒடிய அந்த சாலையில் யாருமே இல்லை. இருவருக்கும் ஒடமுடியவில்லை பாதங்கள் கவ்வியது வெறுங்காலோடு ஓடுகிறார்கள் அல்லவா. துரத்திய அந்த நால்வரிடமே அகப்பட்டு கொண்டார்கள். இருவருக்கும் பயம் தொற்றி கொண்டது என்ன நடக்க போகிறதோ என நிமிடங்கள் கூட பரபரத்தன. இருவர் இருவராக பிரிந்து இருவரை பிரித்தனர். இருவரும் திமிறி சலசலத்தனர் அவர்களின் சலசலப்பை அந்த நால்வரால் சகிக்க முடியவில்லை சகிப்பின்மை காரணமாக இருக்கலாம்.

கொடி கம்பத்தின் கீழே அண்டைக்கு வைக்கப்பட்ட கருங்கல்லை எடுத்து தாயின் தலையில் ஓங்கி வைத்தான். சிறிது நேரத்தில் கருங்கல் சிவப்பானது. மெள்ள மகளை நோக்கி வந்தான், தலையை பிடித்தவாரே மயங்கும் நிலையில் அலறினாள் தாய் “யாஜ்னா பாக் பாக்” என்று. முடியவில்லை என் செய்வாள் நான்கு திசைகளிலும் நரிகள் சூழ்ந்து கொண்டன. அனுதினமும் பார்த்து பழகியது என்றாலும் அந்த கபரி பசாரில் அவளுக்கு திக்கும் தெரியவில்லை திசையும் தெரியவில்லை இருந்தும் ஓட முயற்ச்சித்தாள், ம்ஹும்! முடியவில்லை. கருங்கல்லை முதுகிலே எறிந்தான் அடுத்த நிமிடமே சுருண்டு விழுந்தாள் மேலும் பூட்டிய கதவின் மேற்கூறையில் இருந்த மூன்றடி நீள இரும்பு கம்பியை எடுத்து அவள் பின்னந்தலையை பழுக்க வைத்தான் இன்னொரு பாதகன். இப்போது சர்வமும் அடங்கியது மெள்ள அவள் மயங்க முனங்கல் சத்தம் மட்டுமே கேட்டது. அவள் ஆடைகளை மெதுவாக களைந்தார்கள் கயவர்கள், இன்னும் மயங்கி தான் கிடக்கிறாள்.

அங்கு ஒரே பேய் சிரிப்பொலி அந்த சிரிப்பொலியின் சத்தத்தை கேட்டு வண்டுகள் கூட தங்கள் ரீங்காரத்தை நிறுத்தி கொண்டன, அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்த நாய்களும் தங்கள் சப்த நாடியையும் அடக்கி கொண்டு தங்கள் இருப்பிடத்தில் ஒடுங்கி கொண்டன. சிறிது நேரம் நீள் அமைதி. தவளை தன் இணையை மயக்கும் சத்தம் மட்டும் அங்கு கேட்டு கொண்டிருந்தது அவள் முனங்கலும் தான். மயக்கம் மெள்ள தெளிந்தது போலும் வலியின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஆஆஆஆவென்று அலறினாள். கண்ணீர் அவள் காதோரம் வழிந்த உதிரத்துடன் கலந்தது. குளிரிடமிருந்து அடைகாத்த கடைசி ஆடையையும் உருவி எடுத்துவிட்டார்கள் பாவிகள். அவள் வாழ்க்கையின் முதல் அழுகையின் கோலத்தில் தான் இப்போது அவள் அழுகிறாள். அவள் மென்கைகள் அந்த பாவிகளின் கால்களின் கீழ் இருப்பதையே அப்போது தான் உணர்ந்தாள் என்பதே அவள் சுயநினைவின் வீரியம். ஆவென்று கதற கதற கண்ணீரும்; இரத்தமும்; வியர்வையும் அவளை நனைத்து அந்த குளிரில் அவள் மேனியை சிலிர்க்க செய்தது. அந்த ரணகளதத்திலும் வானத்தையே பார்த்து கொண்டிருந்தாள். எங்கு நமக்கு கண்ணன் துகில் ஏதும் அனுப்புவானா என்று. அதற்கெல்லாம் அவனுக்கு நேரமுமில்லை மனமுமில்லை என்று அந்த பாதகத்திக்கு எப்படி சொல்வது. அப்படி அனுப்புவானேயானல் இந்த பாரதமே துகிலால் நிறைந்திருக்காது.

அந்த கடுங்குளிரின் குளிர்ச்சியை தாங்காது அவள் கதறல் கேட்டுகொண்டே இருந்தது. அந்த குளிரையே தாங்க முடியாதவள் அடுத்து கடக்க இருக்கும் அந்த வன்தருணங்களை எப்படி தான் தாங்க போகிறாளோ அந்த கண்ணனுக்கே வெளிச்சம். தலைப்பு செய்திகள் கூட தலைப்பேற்க தயங்கும் இருந்தும் அதிகாலை தலைப்பு செய்திகளில் தெரியும் அவளுக்கு நடந்த அந்த வன்கொடுமை.

இத்தனைக்கும் எட்டு வீட்டிற்க்கு கேட்கும்படி அந்த தலைப்பு செய்தியை வாய்விட்டு படித்து கொண்டிருந்தார் இருந்தும் தண்ணீரில் விழுந்த கோழியின் இறகை போல அங்கு எந்த சலனமும் இல்லை படித்த அவருக்கே எந்த தாக்கமுமில்லை. எப்படி தெரியும் வெட்டியானுக்கு தெரியுமா வழியும் வேதனையும். அருகில் நின்று பார்க்கும்போது கூட அனுதாப கணைகள் வீசாத அற்ப மானிடர்கள் தானே. ஆகயால் வழக்கம்போல அவர் துனைவி இட்லி சட்டியின் ஆவியில் முகம் புதைத்து கிடந்தாள் மகன் காபியை சப்பு கொட்டி குடித்து கொண்டிருந்தான். மகளோ பரபரக்க எங்கோ கிளம்பி கொண்டிருந்தாள்.

“மா சாப்பாடு வேனாம், நான் கிளம்புறேன்” என சடையை பின்னியவாரே சமையலறை நுழைந்தாள்.

“ஏய் என்னடி! செஞ்சுட்டேன் எடுத்துட்டு போ”

“வேணாமா! டைமாச்சு”

“ஏன்டி வெள்ளிகிழம அதுவுமா? போ போய் விளகேத்தி குங்குமம் வச்சுட்டு போ”

“மா! அதலாம் பண்ணக்கூடாது”

“ஏய்! சொல்லிட்டே இருக்கேன்”

“மா! புரிஞ்சுக்கமா வைக்ககூடாதுனா வைக்ககூடாது… ஈவ்னிங் வர லேட்டாகும் காலேஜ் போய்ட்டு அப்படியே ஜனனி வீட்டுக்கு போரேன்”

“சரி சரி பார்த்து பத்திரமா போ”

“சரி மா” என்று பையை எடுத்துக்கொண்டு அப்பாவின் கன்னங்களை கிள்ளிவிட்டு “பாய் பா” என்றாள்

“ம்ம் ஜாக்கிரதயா போடா” என்றார் அவர்.

அண்ணனை பின்னந்தலையில் தட்டிவிட்டு

“டேய் அண்ணா பாய்”

“ம்ம்….

ஏய்! நான் வந்து டிராப் பண்ண வா”

“பாருடா! பிரதருக்கு பாசத்த நான் போய்குவேன்” என வாசல் வரை வந்து வழி அனுப்பிய அண்ணனுக்கு டாட்டா காட்டியபடியே போனாள். அவ்வளவு புன்னகை அவள் முகத்தில்.

தங்கை பார்த்தபடியே நின்று கொண்டிருந்த பரதனை கைப்பேசி அழைத்தது.

அலைப்பேசியில் அவன் ஆருயிர் நண்பன் தான்,

“டேய்! நேத்து பேசுனபடி இன்னைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்துரு…”

“கண்டிப்பாடா உன்ன அசிங்கப்படுத்துனவள இன்னைக்கு நம்ம அசிங்கப்படுத்துறோம்…

நான் வரேன்” என்றான் பரதன்

சாயும் காலமும் வந்தது பேசியபடியே இருவரும் சந்தித்தனர். அது ஒரு ஒத்தையடி பாதை இருசக்கர வாகனம் மட்டும் அதில் பயணம் செய்யலாம் பாதசாரிகளும் அவ்வபோது செல்வார்கள். ஆறு மணிக்கு மேல் ஆள் அரவம் நடவாத, தெருவிளக்கில்லாத, சேரும் சகதியும் சேர்ந்து உறவாடிய அந்த கார்ப்பரேசனின் செல்ல சந்தின் முகட்டில் ஒரு பெரிய வேப்ப மரம் அதன் அருகில் இரண்டு நிழலாடியது அந்த நிழல்கள் பேசி கொண்டன.

“டேய் பரதா ! இன்னும் கொஞ்சம் நேரத்துல அவய்ங்களும் வந்தருவாய்ங்க

அவளும் வந்துருவா! ரெடியா இரு”

“அவள என்னடா பண்ணப்போறோம்” என அவன் காதாண்டை கூறினான் பரதன்.

“தெரில ஆனா அவள எதாச்சும் பண்ணனும்டா பெருசா! அவ இத வாழ்க்கையில மறக்க முடியாத மாறி”

சொன்னபடியே மேலும் இருவர் இணைந்தார்கள்.

“டேய்! என்ன தான்டா பிரச்சனை அவ பேரென்ன” என்றான் மூன்றாம் அவன்.

“அவ பேரு ஜனனி! வேற எதும் கேக்காத”

“என்ன ஜனனியா!” என நடுவே ஆச்சர்யபட்டான் பரதன்

“சரி எத இருந்தா என்ன இன்னைக்கு ஒரு கை பார்த்துருவோம்” என்றான் நாலாம் அவன்.

மணி ஐந்தை தாண்டியது ஆனால் அவள் வரவில்லை வழக்காமாக ஐந்து மணிக்கு டான்ஸ் கிளாஸுக்கு செல்லும் அவளை இன்னும் காணவில்லயே என கொஞ்சம் கடுப்பானார்கள். கடுப்பானாலும் நேரமாக ஆக அவர்கள் மனதில் கொஞ்சம் அச்சம் உறைந்தோடியது.

தூரத்து ஹெட்லைட் வெளிச்சத்தில் சேரும் சகதியும் தெரிக்க துப்பட்டாவில் முகம் மறைத்து செங்கண் பார்வை கொண்டு வந்தாள். அவளை பார்த்த போதே அவர்களுக்கு அல்லையை பிடித்தது இருந்தும்

“டேய்! வாங்கடா” என பரதன் முன்மொழிய அவன் சொல்படி நடந்தனர்.

வேகமாக மறித்த அவளை தட்டு தடுமாறி நின்ற வண்டியில் இருந்து கார் கூந்தல் பற்றி இழுத்தான் பரதன். நான்காம் அவன் கிழே பிடித்து தள்ளிவிட இரண்டாம் அவன் ஓங்கி கன்னத்தில் அறைய மூன்றாம் நபர் அவள் தலையை தட்டினான். அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை முகத்தை கர்சிப்பால் மூடியதால் யாரென்று தெரியவில்லை. அடிக்க உதைக்க தடுக்க செய்தாள் ஒன்றும் முடியவில்லை கடைசியாக வாய்விட்டு கத்த அவள் முயற்சித்தபோது வாயை பொத்தினான் ஒருவன் மற்றொருவன் கையை இறுக்கி பிடித்து கொண்டான். பரதன் நெருங்கி வந்தான் கழுத்தில் கை வைத்தான் மெள்ள கை கீழே இறங்கியது. அவள் கதறினாள் அலறினாள் பதறினாள் கண்ணீர் அவள் முகம் மறைத்த துப்பட்டாவை நனைத்தது. வேகமாக தலையை ஆட்டினாள் இன்னும் வேகமாக முடிச்சுகள் அவிழ்ந்தது அது விதியின் முடிச்சுகளாக கூட இருக்கலாம்.

அவள் முகத்தை பார்த்த அடுத்த கணமே நால்வருமே தேள் கடித்தாற்போல துடி துடித்தார்கள். பரதனுக்கோ உயிரோடு தன்னை தீ வைத்து கொளுத்தியதை போல எரிந்து சாம்பலாக பார்த்தான் யாராவது செய்யமாட்டார்களா என ஏங்கினான். அந்த பாவியை தீ கூட தீண்ட மறுக்கும் என்பதை அவன் அறிந்திருக்கமாட்டான். கடைசியாக வந்த இருவரும் வந்த தடம் தெரியமால் ஓடினார்கள். இவர்களை ஒருங்கினைத்தவனும் தலைதெறிக்க ஓடினான். பரதனுக்கு ஓடவும் முடியவில்லை ௐளியவும் முடியவில்லை கண்கள் கணத்தன கண்ணீர் சுரந்தன அவள் பரிதாபமான முகத்தை கண்டு கண்ணீர் பீறிட்டது. அவள் கிடத்தபட்ட இடத்தில் இருந்து நகரவே இல்லை உயிர் இன்னும் அவள் உடம்பில் இருக்கிறது ஆனாலும் இறந்து அழுகிறாள். அவனோ தலையில் அடித்து கொண்டே அழுகிறான் முகத்தை மறைத்த துணி விலகியது கூட தெரியாமல் அழுகிறான் கூனி குறுகி அழுகிறான் வாழும்போதே அழுகி அழுகி அழுகிறான்.

யார் தவறு என்று தெரியவில்லை காதல் சொல்ல வந்தவனை ஏசி பழித்தாளே அவள் தவறா,

தன் ஆற்றாமையை பூர்த்தி செய்ய அழைத்த நண்பனின் தவறா,

தோழியின் வீட்டிற்க்கு சென்று அவள் ஆடையை உடுத்தி அவள் வண்டியில் வந்த இவள் தவறா,

அவளை சிறுவயதில் தோளில் போட்டு சுமந்த இவன் தவறா,

இவர்களை படைத்த அந்த ஆண்டவனின் தவறா என்று, ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அன்று பாவியர் சபைதனிலே பாஞ்சலியை கூந்தல் பற்றி இழுத்து வந்த துச்சாதனனுக்கும் இழுத்து வரச் சொன்ன துரியோதனனுக்கும் துச்சலையை அப்படி செய்திருந்தாள் எப்படி இருந்திருக்குமோ அந்த கார்மேக கண்ணன் திரௌபதிக்கு பதிலாக துச்சலையை இடம்மாற்றி துச்சாதனன் கையினாலே அந்த லீலையை செய்திருந்தாள் துரியோதனனுக்கு எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலையில் தான் இப்போது இருக்கிறான் பரதன். அதற்கு வியாசர் கூட விடையளிக்க முடியாது. முகத்திரை விலகிய பரதனை பார்த்து அவள் கேட்ட கேள்வியில் இன்னும் கொஞ்சம் அழுகை பீறிட்டது இனி அவன் எவ்வளவு நீரை இரைத்தாலும் அந்த பாபத்தை கழுவ முடியாது இருந்தும் அவள் பரிதாபமாக கேட்டாள்

“அண்ணா, நீயா!!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *