கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினத்தந்தி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 26,351 
 
 

“விஷால் இன்னிக்கு எங்காவது வெளியில் போறியாப்பா.? தேவகி
கேட்டாள்.

” இல்லைம்மா.. தொடர்ந்து மூணு நாளா வெளியில போய்
போரடிச்சிடுச்சி.. இன்னிக்கு வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கலாம்னு
இருக்கோம்..”

ஸ்வாதி குளித்து விட்டு வருவதற்குள் பரபர வென்று சமையலை
முடித்த தேவகி, கணவர் ராகவனை கூப்பிட்டாள்,

” என்னங்க.. இன்னிக்கு மாம்பலம் வரை போய்ட்டு வந்துடலாம்..
கோமதி அத்தை நம்ம விஷால் கல்யாணத்தில் எவ்வளவோ ஒத்தாசையா இருந்தா.. ஸ்வீட்… பழத்தோட ஒரு நடை போய்ட்டு வந்துடலாம்…”

” சரிம்மா… புது மாமியார் சொன்னா மறுப்பேது..? கணவர் ராகவன்
கிண்டலடித்தார்.

“இந்த கிண்டல்தானே வேணாங்கிறது… ஸ்வாதி டிஃபன் டேபிள்ல
வச்சிருக்கேன்.. சாப்பிட்டுட்டு காபி மட்டும் போட்டு குடிங்க..”
என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.

” என்னங்க.. நானும் பார்த்திட்டேயிருக்கேன்.. நமக்குதான் புதுசா
கல்யாணமாயிருக்கு.. நாம வெளிய போற மாதிரி.. உங்கம்மாவும்
போட்டி போட்டுகிட்டு.. ஜோடியா அடிக்கடி வெளியே
கிளம்பிடறாங்க…?”

” ஸ்வாதி எங்கம்மா ரொம்ப நல்லவங்க.. மாமியார்ங்கிற பார்வையோட அவங்களை குறையா பார்க்காதே.. போக..போக.. நீயே
புரிஞ்சிக்குவே…”

மாலையில் வீடு திரும்பிய ராகவனும், தேவகியும் புது டி.வி. பெட்டி
ஒன்றை வாங்கி வந்தார்கள்.

” விஷால் இந்த டி.வி யை அம்மா ரூம்ல செட் பண்ணிடுப்பா…”

“க்கும்.. பார்த்திங்களா.. உங்க அம்மாவுக்கு இளமை திரும்புது..
பெட்.. ரூம்லயே டி.வி.. கேக்குதாம்….” நக்கலாக சிரித்தாள் ஸ்வாதி.
இரவு பதினொரு மணியிருக்கும்.. ஸ்வாதிக்கு விக்கல் எடுத்தது..
தண்ணீர் குடிக்க கிச்சனுக்கு செல்லும்போது .. தேவகியின் ரூமில்
லைட் எரிந்து கொண்டிருந்தது.

” ஏண்டி இப்படி .. பதிணொரு மணி வரை சீரியல் பார்த்து என்
தூக்கத்தை கெடுக்கிற..? வழக்கம் போல ஹால்ல டி.வி பார்க்க
வேண்டியதுதானே…?

“.. என்னங்க புரியாம பேசறிங்க..? ஹாலுக்கு நேரா நம்ம விஷால்
ரூம் இருக்கு.. நான் அங்க உட்கார்ந்து டி.வி பார்த்திட்டிருந்தா..
அவங்க கதவை சார்த்த சங்கடப்படுவாங்க..அதான் நம்ம ரூமுக்கே
டி.வி போடச்சொன்னேன்..நான் அந்த காலத்தில உங்க அம்மா..
தம்பி .. நாத்தனார்னு உங்ககிட்ட கல்யாணமான புதுசில தனியா
பேச முடியாம தவிச்சேன்..அதனாலதான் புதுசா கல்யாணமான
நம்ம மகன்.. மருமகளை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு.. அவங்க
வீட்டில இருக்கறப்ப உங்களை வெளியில கூட்டிட்டு போயிட்டேன்.
மருமகளும் நம்ம வீட்டு பொண்ணுதானே.. நாம நிறைய விட்டு
கொடுத்துப் போனா.. அவ தானா.. நம்மளை அப்பா அம்மாவா
ஏத்துக்குவா…”

தேவகி பேச.. பேச.. ஸ்வாதிக்கு குற்ற உணர்வில் விக்கல் தானாகவே நிற்க… பூனை மாதிரி சத்தம் போடாமல் திரும்பியவள்..மாமியாரை..இல்லையில்லை.. அம்மாவை மானசீகமாய் வணங்கியபடி தன் அறைக்குள் போனாள்.

– 21-11-2010 – குடும்ப மலரில் வெளிவந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *