ஏங்க, பக்கத்து ஃபிளாட் சௌம்யா வீட்டுக்குப் போயிருந்தேன். எவ்வளவு பெருசு பெருசா சோபா, டீப்பாய், டைனிங் டேபிள் எல்லாம் வாங்கி வச்சிருக்காங்க தெரியுமா..? கணவன்
மோகனிடம் ஏக்கத்தோடு சொன்னாள் கனகா.
நம்ம வீட்டுலயும் அவசியத்துக்கு எல்லாம்தான் இருக்குதே கனகா,….
நீங்க வேற..!நம்ம வீட்டைப் பாருங்க…மைதானம் மாதிரி காலியா இருக்கு…வீட்டுக்கு வர்றவங்களை உட்கார வைக்க ரெண்டே ரெண்டு பிளாஸ்டிக் சேர்தான் இருக்கு. வர்றவங்க நம்மள பத்தி என்ன நினைப்பாங்க? – கனகா சொல்லிக் கொண்டிருக்கும்போதே காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்தால்…வாசலில் சௌம்யா.
ஹப்பா..வீட்டை எவ்வளவு விஸ்தாரமா வச்சசிருக்கீங…எங்க வீட்டுக்காரர் தேவையில்லாம சோபா, டைனிங்டேபிள், எல்லாம் பெரிசு பெரிசா வாங்கிப்போட்டு இப்போ ஹால்ல நடக்கக்கூட இடம் இல்லை.
ஒரு விசேஷம்னா வீட்டைச் சுத்தம் செய்யறது எவ்வளவு கஷ்டமாயிருக்கு தெரியுமா? பேசாம எல்லாத்தையும் வித்துட்டு உங்களை மாதிரி ரெண்டு பிளாஸ்டிக் ஃசேர் வாங்கிப் போடலாம்னு இருக்கேன் – சௌம்யா இயலாமையோடு சொல்ல, கணவனை அசடு வழியப் பார்த்தாள் கனகா.
– கீர்த்தி (செப்ரெம்பர் 2014)