பாரதி வாடை..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 28, 2021
பார்வையிட்டோர்: 2,138 
 

காலையில் கண்களைத் துடைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய தண்டபாணி மதியம்…. முகம் சோர்ந்து, உடல் தளர்ந்து வந்து நாற்காலியில் தொய்வுடன் அமர்ந்து வியர்வையைத் துடைத்தார்.

கணவனின் வாட்ட முகத்தைப் பார்த்ததுமே பங்கஜத்திற்குத் திக்கென்றது.

“என்னங்க ஆச்சு… .?” பயம், படபடப்பாய்க் கேட்டாள்.

நிமிர்ந்து பரிதாபமாக மனைவியைப் பார்த்தவர்…

“அதிகம் எதிர்பார்க்கிறாங்கம்மா…” மெல்ல சொன்னார்.

“என்ன எதிர்பார்க்கிறாங்க…?”

“நூறு பவுன், இருபத்து அஞ்சு லட்சத்துல ஒரு இன்னோவா கார். அப்புறம் சீர்வரிசை அது இதுன்னு படாடோபம்…”அதற்கு மேல் அதிகம் பேச முடியாமல் நிறுத்தினார்.

கேட்ட பங்கஜம் திறந்த வாய் மூடவில்லை.

“பையன் பெரிய படிப்பு படிச்சிருக்கானாம். மாசம் லட்சத்தை நெருங்கும் சம்பளமாம். கலியாணம் கட்டினா தனிக்குடித்தனமாம். பொண்ணுக்கு அக்குதொக்கு கஷ்டமே இல்லே. சொன்னாங்க.

நானும்.’ .என் பொண்ணு .நல்லா புடிச்சிருக்கா. இந்த அளவு சம்பாதிக்கிறாள் !’ சொன்னேன்.

‘அதெல்லாம் முடியாது. அதெல்லாம் முடியாது. பேச்சுன்னா பேச்சுதான். உங்களுக்குத் செய்ய சவுகரியப் படலைன்னா… உங்க செய்காலுக்குத் தக்க வேறு இடம் பார்த்துக்கோங்க’ – சொன்னாங்க.

நாம பொண்ணை படிக்க வச்சி வேலைக்கனுப்பியது எல்லாம் வீண். உழவு மாடு, விருதா மாடுக்கெல்லாம் கல்யாணச் சந்தையில ஒரே விலை.” புலம்பினார். குரலில் வருத்தம் இழையோடியது.

“கவலைப் படாதீங்க. இந்த இடம் நமக்கு வேணாம். !” பங்கஜம் குரல் கறாராக வந்தது.

“ஏன்..?” – திகைப்பாய்ப் பார்த்தார்.

“உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கலையாம் . !”

“பங்கஜம்.?” துணுக்குற்றார்.

“அவளுக்கு இந்த அளவுக்குப் படிச்சி , உத்தியோகம் பார்க்கிற வரன் வேணாமாம். !”

“ஏனாம்..?”

“எனகென்னத் தெரியும்..? கேட்டாத்தான் உங்க செல்லப் பெண் என்னிடம் ஒழுங்கா சொல்லுவாளா…? சேதியை உங்களிடம் சொல்லச் சொன்னாள் சொன்னேன்.”

‘தாய்க்கும் மகளுக்கும் என்றைக்குமேப் பிடிக்காது. ஏடாகூடம் ! இந்த விஷயத்தில் கூடவா மகளை அதட்டி உருட்டி காரணம் கேட்கக்கூடாது..? இல்லை… மகளாவது தாயிடம் ஒழுங்கான காரணத்தைச் சொல்லக் கூடாதா..?’ – நினைக்க மனைவி, மகள் மீதே தண்டபாணிக்கு வெறுப்பை வந்தது.

போகட்டும். ! கண்ணம்மா ஏனிப்படி தன்னிடம் சொல்லக் சொல்லிவிட்டு போனாள்..? வேலைக்குச் செல்பவள், வெளிப்பழக்க வழக்கம் தெரிந்தவள். நாட்டு நடப்பு புரிந்தவள். தன் தகுதிக்கும் தராதரத்திற்கும் ஏற்ற வரன் இப்படித்தான் அதிகம் கேட்கும். இது தங்கள் சக்திக்கு மீறியது என்று நினைத்துச் சொன்னாளா..?

தன்னைவிட அதிகப் படிப்பு, சம்பளம் உள்ளவன் வாய்த்தால் தான் அவனுக்கு அடங்கி ஒடுங்கி அடிமையாக வேண்டும். சரி வராது . – என்கிற எண்ணத்தில் சொன்னாளா..?

தன்னைவிட குறைவாகப் படித்து, வேலையில் இல்லாத வரன் முடித்தால் அவன் தனக்கு அடங்கி நடப்பான். தான் வேலைக்குச் செல்ல கணவன் வீட்டில் பெண்ணைப் போல் சமையல் வேலை செய்து தனக்குப் பணிவிடைகள் புரிவான். என்று நினைத்து எதிர்பார்க்கிறாளா..?

வியாபாரி, சொந்தமாக தொழில் செய்பவன் தேவையோ..?!

தான் பணக்காரியாக இருந்து அலட்டலாக வேலைக்குச் சென்று திரும்பலாம் நினைப்போ..?!

– எந்த நினைப்பில் இப்படி தாயிடம் சொல்லிச் சென்றாள்..? – சிந்தனையில் வளைய வந்தார்.

மாலை.

கண்ணம்மா…வேலை விட்டு வீட்டிற்குத் திரும்பி காபியெல்லாம் குடித்து , களைப்பு நீங்கி..ஆசுவாசமாக அமர்ந்திருந்தவள் அருகில் தண்டபாணி அமர்ந்தார்.

“மகளே..!” அழைத்தார்.

“என்னப்பா..?”

“அம்மாவிடம் படிச்ச மாப்பிள்ளை வேணாம் அது இதுன்னு ஏதோ சொல்லிவிட்டுப் போனீயாமே..?”

“ஆமாம்ப்பா !”

“ஏன்..?”

“எனக்குத் தெரிந்து… வேலையில் இருக்கும் ஆண், பெண்ணுக்கு…. பெத்தவங்க சரிக்கு சரி சமனான வரங்களைத்தான் தேடுறாங்க. சம்பத்தப் பட்டவர்களும் அதை விரும்புறாங்க.

தானாய்த் தேடுறவங்களும் அப்படித்தான் தேடுறாங்க. அமைச்சிக்கிறாங்க.!

ஏன்…? சமுதாயத்துல தாங்கள் வசதி வாய்ப்பாய், கெத்தாய் வலம்வர ஆசை. இதே ஆசையில், தன் பெண் நல்லா இருக்கவேண்டும் என்கிற கணிப்பில் பெண்ணைப் பெத்தவங்களும் அப்படித்தேடி கடன் வாங்கி கலியாணம் முடிச்சி கஷ்டப்படுறாங்க.

இந்த இணையான இணை சேர்ப்பில் சில சவுகரியங்கள், கஷ்டங்கள் இருக்குப்பா. தூரத்து நிலவு. ஆனா…. உண்மை.. ! நிறைய மேடு பள்ளங்கள். புரியலையா…?

இப்படி பணம் பணத்தோடு சேர்வதால் அவர்கள் மேட்டுக்குடிகள் போல் தெரிந்தாலும்… உள்ளே…ஏகப்பட்ட ஓட்டை உடைசல்கள். தம்பதிகளுக்குள் அன்பு, ஆசை, நேசம், பாசம், சரியான விட்டுக் கொடுப்புகள் இல்லே. நீயா, நானா என்கிற ஏட்டிக்குப் போட்டிகள். இஷ்டத்திற்கான செய்கைகள், செயல்பாடுகள். விவாகரத்துகள், வில்லங்கங்கள்.

இது இல்லாமல் இருக்கணும்ன்னா…படிப்பு, சம்பாத்தியம் எல்லாத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு….நல்ல வரனாய்த் தேடுறதுதான் நல்லது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு வருமானம் போதும். அப்படிப் பார்த்தால் எனக்கு படிப்பு, சம்பாத்தியம் கணவர் தேவை இல்லே. என்னைப் புரிந்து நடக்கும் கணவர்தான் தேவை. நல்லவர் இருக்காங்க பொருங்க. கிடைப்பாங்க.” சொன்னாள்.

தண்டபாணி முகத்தில் பளீர் வெளிச்சம்.

‘கண்ணம்மா… பெயர் வைத்தாலே….துணிவு , முற்போக்கு சிந்தனையெல்லாம் வந்து பாரதி வாடை வருமோ…?’ – நினைக்க… தண்டபாணிக்குள் புளகாங்கிதம்.

“சரி. கண்ணம்மா…!” சந்தோசமாக சொன்னார்.

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)