பாதாள நந்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 7,628 
 

சிறுமிக்கும் குமரிக்குமான வித்தியாசங்களை அவளிடமிருந்து மெல்லச் செதுக்கிக் குறைத்துக் கொண்டிருந்தது காலம். காலத்தின் இரவில் கனவு கண்டு புரண்டாள் புஷ்பா. கனவில் படுபாதாளமாய் ஆழ்ந்திருந்தது ஒரு கிணறு. அதன் நீர் சாந்தின் பிசுபிசுப்பில் தளும்பிக் கிடக்க, அதில் மெல்ல நீந்திக் கிடந்தன இரு மீன்கள். குளித்துத் துவட்டும்போது வெற்றுடம்பின் எடுப்பை வியக்காது எடுப்பின் மச்சத்தை ஒருத்தி தொட்டு வியப்பதுபோலவே அவள் மின்னும் மீன் குறித்து வியக்காமல் நீரின் நிறம் குறித்து வியந்தாள்.

வியப்பு அவளின் உதட்டையும் இமையையும் துடிக்கச் செய்தது. சுருண்டு கதகதப்பில் உறங்கிய சிறுமி அவளைக் காலத்தின் உலையடுப்பும் கொதிநெருப்பும் வார்த்துக்கொண்டிருந்தன. அந்த இரவின் கனவுப் பொழுதில் அவளுக்கு வயது பதினொன்றுக்கும் சில நாள் குறைவாகவே இருந்தது.

தன் மூப்பால் எழுபத்தியிரண்டு பெண்களுக்கு உடல் பார்த்துச் சமையும் நாள் சொன்ன அவள் பாட்டியைப் போல் புஷ்பா அனுபவப்பட்டவள் இல்லை என்றாலும் ஒருத்திக்குக் கனவில் ஆண் பிள்ளையின் சாயலொத்த நிமித்தங்கள் வந்தால் மறுநாளே சமைந்து நிற்பாள் என்று கனவில் நினைவோடிற்று அவளுக்கு. ஆண் பிள்ளை கனவில் வருவது கள்ளத்தின் அடையாளமென்று அவள் அம்மா சொல்வதும் அவளுக்கு உறைக்காமல் இல்லை.

கனவில் நீந்தியது மீன்கள்தான் என்றாலும் அதில் ஒரு மீன், ஆண் மீனாகத்தான் இருக்கும் என்று உறுதியாய் நம்பினாள். அதே நேரத்தில் எது ஆண், எது பெண் என்று பேதம் அறியாது குழம்பினாள். மீன்கள் ஒன்றையொன்று கவ்விப் பிரியும் ஒவ்வொரு முறைக்கும் புஷ்பா புரண்டு தன் அம்மாவின் மேல் கால் போட்டு இறுக்கிக்கொண்டாள். உடல் உஷ்ணமோ மிஞ்சியபடி இருந்தது.

மகளின் தொடையை முரட்டுத்தனமாய் அம்மா தட்டிவிடக் கனவின் இரு மீன்களில் ஒரு மீன் அளவில் ராட்சசமாய் வளர்ந்து, இன்னொரு மீனை ஈட்டிப் பல்லால் இரு துண்டாக்கி, இரு துண்டையும் விழுங்கியது. திடுக்கிட்டு விழித்த புஷ்பாவின் பயந்த விழிகளில் இன்னமும் ராட்சச மீன் பீய்ச்சிய ஆயிரக்கணக்கான முட்டைகள் பொன்னிறத்தில் மின்னின. ராட்சசம் முட்டை வைக்கிறதென்றால் துண்டுபட்டது ஆண் மீனாகத்தான் இருக்கும். ஆண் மீன்மீது பரிதாபம் ஏற்பட, அவளுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.

வெறுமனே படுத்திருந்த அவளை அவள் அம்மா காக்கை கத்தும் கரும் விடியலில் திட்டி எழுப்பினாள். பெண் விடியும்வரை படுக்கையில் புரண்டு கிடப்பது தவறென்று அம்மா சொல்லும்போதே புஷ்பாவுக்கு எண்ணம் ஓடிற்று . . . ராமக்காள் எரிக்கும் வெகு தூரத்தில் உதிக்கும் சூரியனின் வெயில், காக்கைக்கும் கருநாய்க்கும் ஒன்றே எனும்போது தனக்கும் தன் அண்ணனுக்கும் மட்டும் விடிவது எப்படி வித்தியாசப்படும் என்று. சற்றுத் தள்ளி அவள் அண்ணன் லுங்கி அவிழ அலங் கோலத் தூக்கத்தில் இருந்தான்.

சந்தேகத்தை அவள் வாய் திறந்து கேட்கவில்லை. கேட்டால், அம்மாவின் வலது உலக்கை அவளின் நடு மண்டையில் இடியென இறங்கும்.

தூக்கக் காலத்தில் அம்மாவின் கண்களும் கனவில் கண்ட மீன்கள்போலத் தெரிய, இதில் எம்மீன் ஆண் மீன் என்று அறிய உற்றுப் பார்த்தாள். அதற்கு மட்டும் மை வைத்து அழகு பார்க்க எண்ணமிருந்தது அவளுக்கு. அம்மாவின் கண்களோ ராட்சசப் பற்களுடன் முறைத்தன. “என்னடி முறைக்கிற . . .! குடத்த எடுத்து கிட்டுக் கிளம்பு. தண்ணி எடுத்தாற வேணாமா?” விரட்டினாள் அம்மா.

அவள் பயந்து, விழுந்தடித்துக் குடங்களைத் தேடி எடுத்தாள். தன் முகம் பார்த்துக்கொள்ளவோ அழகாக்கிக்கொள்ளவோ தன் வனப்புக் குறித்து யோசிக்கவோ நேரமின்றி ஆறேழு குடங்களை எடுத்துக்கொண்டு பத்துக் கை காளி ஆயுதங்களோடு யுத்தத்திற்குப் போவதுபோல வெளிச்சமற்ற விடியலில் அவள் ஊரின் பொதுக் கிணற்றிற்குப் போனாள். ‘ஆண்டிக்கு மடம் அழகு! பெண்ணுக்குக் குடம் அழகு!’ என்று எந்தச் சோம்பேறியும் சொல்லி இவள் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும், பெண்களுக்கு மட்டும் இடுப்பில் பாவாடைக்கு அடுத்தபடி குடங்கள் ஏன் அதிகப்படியான நேரம் தங்குகின்றன என்ற தர்க்கம் அவளை வழிநெடுகக் குடைந்து கொண்டேவந்தது. அங்கே பொதுக் கிணற்றைச் சுற்றி மந்தை யானைகள்போலவும் கறுப்பு எருமைகள் போலவும் ஆடுகள்போலவும் பெருச்சாளிகள் போலவும் சிறிதும் பெரிதுமாய்க் குடங்கள் பெருகியிருந்தன. நீர் இல்லாத ஊரின் இரவுகளில் பெண்கள் உறங்குவதே இல்லை. தனக்கு எப்படியும் மத்தியானத்திற்கும் சாயந்திரத்திற்குமான ஒரு பொழுதில்தான் குடம் நிரப்ப நேரம் வரும் என்பதை உணர்ந்த அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டது.

குடத்தோடு கிணற்றடியில் உட்கார்ந்தாள். மீன்களின் கனவு அவள் மனசில் இன்னும் நீந்தியது. உடம்பின் நரம்புகளில் மீன் விளையாட்டின் குறுகுறுப்பு ஓடியது. துண்டுபட்ட மீனின் அதிர்ச்சியும் இதயத்தில் துடித்தது. அங்கிருந்த வெற்றுக் குடங்களை நோட்டமிட்டாள். குடத்தின் நீரில் அந்த மீன்கள் நீந்துமா? கனவு மீன்கள் எத்தனை பெரிதென்று தெரியாமல் மலைத்தாள். ஒரு வேளை அவை மலையளவு பெரிதோ; இந்தக் கிணற்றில்கூட நீந்த முடியாத பெரிதோ?

அந்தப் பொதுக் கிணறு ஊருக்கெல்லாம் ஒரே கடலாக இருந்தது. ‘முட்டிக் குடி கண்ணு’ . . . என்று தன் கன்றுக்கும் போகிற போக்கில் மாற்றுப் பசுவின் கன்றுக்கும் அதன் பிறகு தன் குலத்திற்கே ஒவ்வாத மனிதன் பெற்ற கன்றுக்கும் பால் பீய்ச்சிக் கொடுக்கும் உபகாரப் பசுவைப் போல எத்தனை பேர் வந்தாலும் வற்றாமல் நீர் சுரந்துகொண்டிருந்தது அந்தக் கிணறு. இளநீர் சுவை கொண்டதாய், கற்கண்டின் தித்திப்பாய்ச் சுவைக்காமல் நாக்குத் தோல் உரிந்துபோகாத அளவுக்கு உப்போடும் கண் எரியாத அளவுக்குக் காரத்தோடும் தோல் வெந்துவிடாத அளவுக்கு உஷ்ணத்தோடும் இருந்தது அதன் நீர். உப்பாய் இருந்தாலும் ஊருக்கு அது அமிர்தக் கிணறுதான். அமிர்தம் உப்புக் கரிக்காது என்பது உண்மையல்ல.

‘வழக்கமாக வட்டமான இடங்களை ஆண்கள்தான் மொய்ப்பார்கள். ஆனால் விதிவிலக்காய் கிணற்று வட்டங்களை மட்டும் எப்பொழுதும் பெண்கள்தான் மொய்க்கிறார்கள்’ – மேற்படியதை நினைத்து ‘களுக்’கென்று சிரித்த புஷ்பாவுக்கு நிஜமாகவே பதினொரு வயதுதான். அவள் சிரித்ததைப் பார்த்து புருவம் நெறித்த ராமாயிக் கிழவிக்கு முகம் மறைத்தாள் புஷ்பா. பெண்கள் அந்த இடத்தைப் ‘பேசும் சந்தைக்காடு’ ஆக்கிக்கொண்டிருந்தார்கள். வெளிச்சமற்ற உடம்பின் மச்சங்களை வைத்து ஆள் யாரென்று அனுமானிக்க முடிந்தது புஷ்பாவால். இன்றைக்கும் ராமாயிக் கிழவிதான் முதல் ஆளாக வந்து தண்ணீர் சேந்திக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தூக்கம் பகலிலா இரவிலா, யாருக்கும் தெரியாது. அவளை முந்திவந்து யாரும் தண்ணீர் சேந்தியதாய்ப் பொதுக் கிணற்றுச் சரித்திரமே கிடையாது. போட்டியாக வருகிறேன் என்று நடுச் சாமத்தில் வந்து கிணற்றில் தோண்டியை விடவும் யாருக்கும் இந்த ஊரில் தைரியம் கிடையாது.

நடுச் சாமத்தில் சத்தமெழுப்பித் தண்ணீர் சேந்தினால் கிணற்றுக் கோட்டானின் சாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று எல்லோரும் அஞ்சினார்கள். கிணற்றுக் கோட்டான் என்பது கிணற்றின் பொந்துகளில் தங்கியிருந்து வயல் எலிகளைப் பிடித்து வந்து தின்று வயிறு வளர்க்கும் ஒரு அப்பாவிப் பறவைதான் என்றாலும் நள்ளிரவில் அது பறந்து உச்சிக்குப் போகும்போது அதன் நிலா நிழல் யார் தலையிலாவது பட்டால் படை படையாய் பேன் பிடித்து, ஈறுகள் அதிகமாகி, முடி மொத்தமும் கொட்டிப்போய், தலை சொறிந்து புண்ணாகிப் புழுத்து நாறி, செத்துப்போவார்கள் என்று ராமாயிக் கிழவி நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் எல்லோரையும் மிரட்டி வைத்திருக்கிறாள். அப்படித் தலை புழுத்துச் செத்தவர்கள் யாரும் ஊரில் கிடையாது என்றாலும் எதற்கு வம்பென்றார்கள் தைரியசாலிப் பெண்கள்.

‘கோட்டான் ஏன் சபிக்க வேண்டும்?’ என்று யாரும் கேட்கவில்லை என்றாலும் காரணத்தை ராமாயிக் கிழவியே சொல்வாள்: கிணற்றுப் பொந்துகளில் கோட்டான்கள் ஆணும் பெண்ணுமாய்க் கூடிச் சந்தோசமாய் இருக்கும்போது யாராவது தண்ணீர் சேந்தினால் தோண்டியின் சத்தம் கேட்டுப் பயந்து ஆண் கோட்டான் செத்துப்போகும், பெண் கோட்டான் கிணற்றுக்கு மேல் கிளம்பி பறக்கும்.

அந்தக் கோட்டான் நிழல் சாபத்தினால் கறுப்பாய் இருக்கும். அந்த நிழல் பட்டால் சாவுதான். இதை நாளுக்கு இரு முறை சொல்வாள் கிழவி.

மனிதர்களைப் போலவே எல்லா நாளுமே கிணற்றுக் கோட்டான்கள் ராத்திரியில் புருஷன் பொஞ் சாதியாய் சந்தோசமாகத்தான் இருக்குமா? இப்படிப் புஷ்பாவுக்குச் சந்தேகம் வந்தது. ஆனால் ராமாயிக் கிழவியிடம் கேட்க அதைரியப்பட்டாள். “தொளையில்லாத புத்துலேயும் பாம்பிருக்கும் பாத்துப் போ . . .’ன்னு பாக்கு மத்தன் சும்மாவா சொன்னான் . . .” என்று கன்னத்தில் கை வைத்து, சமையாத பெண்கள் குறித்து அதிசயமாய்ப் பேசுவாள் ராமாயிக் கிழவி. மேற்படி தத்துவம் சொன்ன ‘பாக்கு மத்தன்’ என்பவன் ஏதோ சித்த புருஷனல்ல, ராமாயிக் கிழவியின் செத்த புருசன்தான்.

அதே பாக்கு மத்தன், கட்டுவிரியன் பாம்பு உலாத்தும் புதர்க் காட்டில், பெயர் தெரியாதவர்களோடு ஒதுங்கும் செவத்தாளைப் பார்த்து, ‘ஊருக்கு ஒரு கிணறு. . . அதற்கேழு ராட்டினமாம்’ என்று ஒரு பாட்டும் பாடியதாக ராமாயிக் கிழவி சொல்வாள். முழுப் பாடலும் கிழவிக்குத் தெரியாது என்றாலும் பொதுக் கிணறு என்பது செவத்தாளைப் போல யார் முதலில் பிடிக்கிறார்களோ அவர்களுக்குத்தான் சொந்தம் என்று சட்டம் பாடுவாள். மத்தன் பாடியதுபோலவே நிஜக் கிணற்றுக்கும் மொத்தம் ஏழு ராட்டினங்கள் இருந்தன. கிணறும் ராட்டினமும் ஊருக்குப் பொது. முதலில் பிடிப்பவர்களுக்கு அது சொந்தம். தேவையான அளவு நீர் இறைத்த பின் ராட்டினம் அடுத்தவர் கைக்கு வரும். ராட்டினம் மட்டும்தான் பொது. அதில் மாட்டப்படும் கயிறும் கயிற்றில் கட்டப்படும் தோண்டியும் அவரவர் கொண்டு வர வேண்டும். யாருக்கும் யாரும் கடன் தர மாட்டார்கள்.

தைரியமுள்ளவர்கள் மட்டுமே கயிறு கடன் கேட்பார்கள். கொஞ்சமேனும் நெஞ்சில் கூச்சமிருந்தால் நீர் இல்லாமல் போனாலும் போவார்களேயன்றித் தவறியும் கடன் கேட்க மாட்டார்கள்; கேட்டாலும் ராமாயிக் கிழவியிடம் மட்டும் கேட்கவே மாட்டார்கள். ஒரு முறை புஷ்பாவின் அம்மா கயிறு கடன் கேட்டு, ராமாயிக் கிழவியிடம் பட்ட பாடு ஊரறிந்த சிரிப்பு.

அப்பொழுதுதான் நல்லம்பள்ளி சந்தையில் புதுக் கயிறு வாங்கி வந்திருந்த அந்த ராமாயிக் கிழவியிடம் அவள் தெரியாத்தனமாகக் கேட்டுவிட்டாள். அதற்கு ராமாயிக் கிழவி பதறிப்போய், “ஐயோ ஆத்தா! நீ நல்லா இருப்பே. . . நேத்துதானே இந்தக் கயித்த புதுசா வாங்கினேன். இதக் கேக்கறியோ . . . எம் புருசன் வீட்டுல சும்மாதான் இருக்கான், அவன வேணா கேளு, ரெண்டு நாளு ராத்திரி அனுப்பி வெக்கிறேன். என் கயித்தை மட்டும் கேக்காத ஆத்தா!” என்றாள். மொத்தக் கிணறும் சுற்றி நின்று சிரித்தது.

இந்தக் கூத்து நடந்து ஒரே வாரத்தில் சம்மந்தப்பட்ட கிழவன் செத்துப்போனான். மீண்டும் ஊரே வயிறு வலிக்கச் சிரித்தது. சாவுக்கு அந்த ஊர் சிரித்தது அதுதான் முதல் முறை. ராமாயிக் கிழவி தன்னைக் கடன் கொடுத்துடுவான்னு பயந்துதான் கிழவன் செத்துப்போனான் என்று எக்காளமிட்டுச் சிரித்தார்கள் பல்லுள்ள வாய்க்குச் சொந்தக்காரிகள். சாகும்போது கிழவனுக்கு வயது எழுபதுக்கும் மேல். அதன் பிறகு அரசல் புரசலாக ஒரு பழமொழி உருவாகி நடமாடியது அந்த ஊரில் . . . ‘யானை ஒன்னு மாப்பிளை தேடிக் காட்டுக்குப் போச்சாம். அங்க ஒரு சுண்டெலி சுருக்கு மாட்டிச் செத்துப் போச்சாம்.’ கிழவனின் ஒல்லி உடம்புக்கும் புஷ்பா அம்மாவின் பருத்த உடம்புக்குமாய் இட்டுக்கட்டி எழுப்பிய கதை அது.

இப்படியொரு சரித்திரக் கதைக்குச் சொந்தக்காரி தன் பருத்த உடம்போடு குடங்களைச் சுமந்தபடி வானம் வெளுக்கும் நேரத்திற்குக் கிணற்றடிக்கு வந்து சேர்ந்தாள். மறக்காமல் கயிற்றையும் தோண்டியையும்கூட எடுத்துவந்தாள். அதுவும் புதுக்கயிறுதான். நல்லம்பள்ளி சந்தையில் கோழி முட்டையை விற்று வந்த காசில் வாங்கியிருந்தாள் கயிற்றை. தோண்டியைக்கூடப் போன வாரம்தான் மூட்டை அளவுக்கு அடுப்புக் கரி கொடுத்துக் கொல்லன் பட்டறையில் செய்திருந்தாள். சுளீர் என்று வெயில் அடிப்பதற்குக் கொஞ்சம் முன்பாகவே அவர்களுக்கு ஒரு ராட்டினம் கிடைத்துவிட்டது. அம்மா சந்தோசமாய்க் கயிற்றில் தோண்டியைக் கட்டிக் கிணற்றில் இறக்கினாள். ‘கிரி. . . கிரி. . . கிரி. . .’ சப்தமெழுப்ப, தோண்டி கிணற்றில் போனது. ‘தளும், தொளும்’ சத்தமெழுப்ப நீர் நிரம்பியது. ‘கிரி. . . கிரி. . . கிரி . . .’ சத்தமெழுப்ப மேலே வந்தது. மொத்தக் குடமும் நிரப்ப எத்தனையோ ‘கிரி, கிரி’ இழுக்க வேண்டுமே என்று புஷ்பாவின் அம்மா கொஞ்சம் பதட்டப்பட்டதால் வேகத்தை அதிகப்படுத்தினாள்.

விளைவு, கயிற்றின் கடை நுனியைப் பிடிக்க முடியாமல் கயிறும் தோண்டியும் ஒருசேரக் கிணற்றில் விழுந்தது.

அதிர்ந்துபோன அவள் எட்டாத கிணற்றை எட்டிப் பார்த்தாள். ‘ஐயோ’வென்ற ஆழம். ஐந்து ஆள் அளவுக்கு நீர் இருக்கும் கிணற்றில். எங்கே உள்ளே விழுந்து வாயில் நுழைந்த கொசுவாகி விடுவாளோ என்று பயந்து பக்கத்தில் இருந்தவர்கள் அவளைத் தடுத்துப் பின் தள்ளி நிறுத்தினார்கள். தன் புதுக் கயிறும் புதுத் தோண்டியும் இப்படி ஆழக் கிணற்றில் அழகு காண்பித்து மூழ்கிப்போனால் யாருக்குத்தான் வயிறு பற்றி எரியாது. போதாததற்கு ஊர்க்காரிகள் வேறு கொல்லென்று சிரித்து வைத்தார்கள். குலம் மொத்தத்திற்கும் அவமானம் வந்ததைப்போல அம்மா திகைத்து வெயிலில் வியர்வை வடிய நின்றாள்.

ஊர்க் கிணற்றில் தோண்டி விழுவது பாம்பு வாயில் விழுந்த மாணிக்கக் கல் போல அத்தனை அதிசயமான விசயம் இல்லைதான். ஆனாலும் சுடுகாட்டுக் குழியில் விழுவது சாதாரணம்தானே என்று செத்த பிணத்திடம் யாராவது சொல்ல முடியுமா?

செத்தவளுக்குத்தானே கேட்கும் சாவு மணியின் திடீர் ஓசை. அம்மா செய்வது அறியாமல் நிற்க, ராமாயிக் கிழவிதான் “போயி பாதாளக் கொலுசை வாங்கியாந்து அதை எடுடியம்மா . . . இப்படி நிக்காத. பயமா இருக்கு!” என்றாள். அவள் சொன்ன அந்தப் பாதாள கொலுசென்பது பலப்பல கொக்கிகளை உடைய, கிணுகிணுவென்று சத்தமெழுப்பும் கொக்கிகளின் கொத்து. உள்ளே விழுந்த தோண்டியைக் கொத்தாகக் கயிற்றோடு அள்ளி வரும் அது.

எலிப் பொந்தில் பாம்பு நுழைந்துவிட்டால் அதைப் புகை போட்டு வெளியே கொண்டு வரவும் அதை ஈட்டியால் குத்திச் சாகடிக்கவும் ஆண்கள் பட்டாளம் ஊரில் உண்டு. அவர்கள் உடையை இடுப்பு வரை கீழிருந்து மேலாக ஏற்றிக் கட்டிக்கொண்டு தொடை தட்டி வருவார்கள். ஆனால் ஒரு கயிறு கிணற்றில் விழுந்துவிட்டால் போட்டவளேதான் எடுக்க வேண்டும் இந்த ஊரில். பாம்பு ஈட்டி வைத்திருக்கும் கூத்தனிடமேதான் பாதாளக் கொலுசும் இருக்கிறது. பாம்பு ஈட்டி கேட்டுக் கூத்தனிடம் போனால், அவன் வாயில் புகையிலையை அடக்கிக்கொண்டுதானே ஈட்டியை எடுத்துவந்து பாம்பைக் கொல்வான். பாதாளக் கொலுசுக்கு அவன் வர மாட்டான்; சும்மாவும் தர மாட்டான். ஒரு வெங்கலச் சொம்போ, இல்லை வெங்கலக் குத்துவிளக்கோ அடமானத்திற்குக் கொடுத்துவிட்டுப் பாதாளக் கொலுசை வாங்கி வர வேண்டும். பிறகு திருப்பித் தரும்போது அடமானப் பொருளை அவன் தந்துவிடுவான்.காசு கேட்பதில்லை, உபகாரம்தான். புஷ்பாவின் வீட்டிலோ ஒரு வெங்கல டம்ளர்கூடக் கிடையாது.

அம்மாவுக்கும் கூத்தனுக்கும் சொல்ல முடியாத ஒரு விசயத்திற்காக வாய்த் தகராறு இருப்பதால் கொலுசு வாங்கத் தன் மகளை வெங்கல டம்ளரோடு அனுப்பினாள். அவளிடம் “அடமானத்திற்கு என்ன இருக்கு?” என்று கேட்டான் கூத்தன். பாதாளக் கொலுசு கேட்பவள் வெங்கலச் சிலைபோல இருப்பதால் அவளையே அடமானமாக வைத்துக்கொள்ளக் கூத்தனுக்கு விருப்பம்தான். ஆனாலும் அவள் அம்மா உச்சந்தலை கோழி மயிற்றைக் கொத்தாகப் பிடுங்கிவிடுவாள். புஷ்பா காட்டிய வெங்கல டம்ளரைப் பார்த்து இது போதாது இன்னும் பெரிதாக வேண்டும், இவ்வளவு பெரிதாக என்று சிரித்தபடி ஒரு அளவு காண்பித்துத் புஷ்பாவைத் திருப்பி அனுப்பினான் அவன். அவள் கூசிக்கொண்டே வந்து தன் அம்மாவிடம் “இந்த அளவு பெரிசா அடமானத்துக்குப் பாத்திரம் வேணுமாம்…

” என்று தன் பிருஷ்டத்தை வட்டம் போட்டுக் காண்பித்தாள். அம்மாவுக்குக் கோபமாக வந்தது. ஆனாலும் வழி இல்லை. டம்ளர் தந்த அதே பாட்டியிடம் ஒரு பெரிய வெங்கலக் குடத்தை இரவலாக வாங்கிப் பாதாளக் கொலுசை உள்ளே விட்டாள் அம்மா.

முக்கால் கிணறு விட்டத்திற்குக் கயிற்றைச் சுழற்றி, முடிந்தவரை தரை தட்டும் ஆழத்திற்கும் அதிகமாகக் கயிறு விட்டுத் துழாவித் தேடினாள் அவள். எதுவோ சிக்கியதுபோல இருந்ததும் சந்தோசமாக வெளியே எடுத்தாள். அதில் என்றைக்கோ விழுந்து மக்கிப்போயிருந்த பழம் பாவாடைதான் இருந்தது. இரண்டாம் முறையாகக் கொலுசை இன்னும் ஆழமாக விட்டுச் சுழற்றினாள். இந்த முறை எந்தப் பாவாடை வருமோ என்று பயந்தபடியேதான் வெளியே எடுத்தாள். ஆனால் எடுக்க முடியவில்லை. ஏதோ ஒரு பொந்தில் கொலுசு நன்றாக மாட்டிக்கொண்டது. ஆத்திரமாய் அதை இழுக்கப் போய் அவளே தடுமாறி கிணற்றுக்குள்ளே விழப் போனாள்.
உள்ளே விழாமல் சமாளிக்கத் தெரிந்தவளுக்குக் கயிற்றையும் பத்திரமாகப் பிடிக்கத் தெரியவில்லை. அந்தக் கூத்தனின் பாதாளக் கொலுசோடு ராமாயிக் கிழவியின் கயிறும் ஆழக் கிணற்றில் விழுந்து தொலைத்தது.

பெருந்துக்கம் வந்து பேரழுகை அழுதாள் அம்மா. கிணற்றில் விழவும் முயற்சித்தாள். அவளை எல்லோரும் சமாதானப்படுத்தி உட்காரவைத்தார்கள். அவர்களுக்கு என்ன . . . சமாதானம் சொல்வார்கள். கிணற்றில் விழுந்த அந்தப் புதுத் தோண்டிக்கு யார் சொல்வார்கள் சமாதானம்? அதனோடு சேர்ந்து விழந்த கயிற்றுக்கு யார் சொல்வார்கள் சமாதானம்? அதை எடுக்க விழுந்த பாதாளக் கொலுசுக்கும் கூத்தனுக்கும் யார் சொல்வார்கள் சமாதானம்? அடமானமாக வாங்கிய வெங்கலக் குடத்துக்கும் அதன் சொந்தக்காரி கிழவிக்கும் யார் சொல்வார்கள் சமாதானம்? ராமாயிக் கிழவிக்கும் அவள் கயிற்றுக்கும் அவள் செத்த புருசனுக்கும் யார் சொல்வார்கள் சமாதானம்? தோண்டியும் போய், பாதாளக் கொலுசும் போய், அதற்கு அடமானமாய் வைத்த வெங்கலக் குடமும் போய், மானம் போய், மதி கெட்டு நின்றாள் புஷ்பாவின் அம்மா.

இனி, இழந்த அத்தனையையும் மீட்க ஊரில் ஒரே ஒரு கடவுளால்தான் முடியும். மாதேஸ்வரன் ஒருத்தனால்தான் எவ்வளவு நீர் இருக்கும் கிணற்றிலும் மூழ்கி மூக்குத்தி இருந்தாலும் எடுத்து வர முடியும். ஆனால் அவனிடமும் புஷ்பாவின் அம்மாவுக்குச் சச்சரவு. அவனிடம் தன் மகளையும் அனுப்ப முடியாது. சச்சரவுக்குக் காரணமே மகளைப் பார்த்த மாதேஸ்வரன் எலுமிச்சையை விளையாட்டாய்க் கிள்ளிவிட்டான் என்பதில்தான் ஆரம்பித்தது. அதற்காக மாதேஸ்வரனைச் சாவடிச் சந்தில் வைத்து, அவன் அம்மா, பாட்டி எல்லாம் அவுச்சாரிக் கும்பல் என்று வாய்க்கு வந்தபடி திட்டிய பிறகு அவனை எப்படி உதவிக்குக் கூப்பிடுவது. கூப்பிட்டாலும் அவன் எடுத்துத் தர வருவானா தெரியாது.

எப்படியாவது அவனைக் கூப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஊரின் ஒரே ஒரு பாதாளக் கொலுசைக் கிணற்றில் போட்டுவிட்டு ஊரின் சாபத்தோடு சும்மா இருந்துவிட முடியாது. அதுவுமில்லாமல் வெங்கலக் குடம் அடமானத்தில் போயிற்று என்று தெரிந்தால் பக்கத்து வீட்டுப் பாட்டி செத்தாலும் செத்துப்போவாள். அந்தச் சாபம் வேறு கொசுறாக வந்து சேரும். வேறு வழியற்று, நெஞ்சில் இரண்டு கைகளையும் மறைத்தபடி வைத்துக்கொண்டு போய் மாதேஸ்வரனைக் கூட்டி வரும்படி புஷ்பாவை அனுப்பினாள் அம்மா. மகள் வந்ததும் ஒத்தடம் தர வேண்டும்.

அம்மா சொன்னது போலப் பத்திரமாக இரு கைகளையும் நெஞ்சில் கட்டிக்கொண்டு மாதேஸ்வரன் வீட்டில் போய் விசாரித்தாள். “உம் மாமன் இல்லையேடி . . . புளியமரத்தடியில் ஆடு புலி ஆட்டம் ஆடுறானா போயிப் பாரு . . .” என்று அத்தை சொன்னாள்.

புளியமரத்தடிக்குப் போய்ப் பார்த்தாள். அங்கே ஆடு புலி ஆட்டத்தைச் சில குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்ததே ஒளிய மாதேஸ்வரனைக் காணோம். இன்னும் நெஞ்சில் கை வைத்தபடி “மாதேஸ் மாமன் எங்க?” என்று ஒரு குரங்கைக் கேட்டாள். அந்தக் குரங்கு “ஏன் என்னைய தேடிகிட்டு வரமாட்டியா?” என்று கேட்டது. எல்லாக் குரங்கும் சிரித்தது. இன்னொரு குரங்கு, “டேய் . . . அது உங்க சித்தி மகடா. நீ சும்மா இரு. எனக்குத்தான் அத்தை மக. நான் கேக்கறேன்” என்று சொல்லிவிட்டு இவளிடம் “நீ ரெண்டு கையையும் எடுத்துட்டுக் கேளு, நாஞ் சொல்லறேன்” என்றது.

அவள் கையை எடுத்துவிட்டு எங்கே என்றாள். அவன் சிரித்துக்கொண்டே “சுண்டு வெரல்ல மறைக்கிறதத்தான் ரெண்டு கையால மறைச்சியா . . . போ, போ. . . எனக்குத் தெரியாது. அவன் நேத்து சாயிந்தரமே புளியமரத்து உச்சியில செத்துப் போயிட்டான்” என்றது. பிறகு எல்லாக் குரங்குகளும் ஆடு புலி ஆட்டம் ஆட ஆரம்பித்துவிட்டன. அவளுக்கு அவமானம் பிய்த்துக்கொண்டது.

ஏமாற்றத்தோடு திரும்பியவளை வாகுலன் என்ற ஒரு சாதுக் குரங்கு நிறுத்திச் சொன்னது, “பூமா சந்துல அவனைப் பார்த்தேன். அங்க இருக்கானா பாரு. எதுக்குத் தேடறே . . .?’

“எங்கம்மாவோட தோண்டி கிணத்தில விழுந்திடுச்சி . . .”

“உங்கம்மாவோட தோண்டியா? உங்கம்மாவோட தோ. . .ண்டியே . . . வா? அது எவ்ளோ பெரிசு இருக்கும் . . .” என்று ஒரு குரங்கு கேட்க, எல்லாக் குரங்குகளும் சிரித்தன. “உங்கம்மா கிணத்தில விழுந்தா தண்ணி முழுசும் வெளிய வந்துடுமே. . . எதுக்கு மாதேஸ் வரணும்?” இன்னும் குரங்குகள் சிரித்து. தான் ஒரு மீனாகி எல்லா ஆம்பள மீனையும் துண்டாக்கித் திங்கணும் . . . ரெண்டு துண்டா இல்ல, நாலு துண்டா, எட்டுத் துண்டா, துண்டு துண்டா . . . ரத்தம் வர. அவள் ஆத்திரத்தோடு பூமா சந்திற்குப் போனாள்.

அங்கே பூமா சந்தில் ஒரு வீட்டின் சுவர் மீது ஒரு காலை பின்புறமாகத் தூக்கி வைத்து சாய்ந்து நின்றபடி பீடி பிடித்துக்கொண்டிருந்தான் மாதேஸ்வரன். சூரியன் உச்சியில் நின்று தோலை உரித்தெடுக்க அவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது. பட்ட அவமானத்தில் உடம்பு கொதித்துக்கொண்டிருந்தது. மாதேஸ்வரன் எதிர் வீட்டைப் பார்த்தபடி சுவரில் சாய்ந்திருக்க, இவள் போய் “மாமா, அம்மா உன்ன கூட்டியாரச் சொன்னா.” என்றாள்.

அவன் பீடியைக் கீழே போட்டுக் காலால் மிதித்தபடி “எதுக்காம்?” என்று கேட்டான். இவளைப் பார்க்காமல் எதிர் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“எம் அம்மாவோட தோண்டி . . . இல்ல, ஒரு தோண்டி கிணத்தில விழுந்திடுச்சி” என்றாள்.

“பாதாளக் கொலுசு போட்டு எடுங்க தாயி . . . நான் இப்ப வேலையா இருக்கேன்”.

இவளுக்குப் பொசுக்கென்று ஆனது. சுவரின் மேல் ஒற்றைக் காலை வைத்துக்கொண்டு பீடி பிடிப்பதை வேலை என்கிறானே.

ஆனாலும் தன்னை அவன் தாயி என்று கூப்பிட்ட குரலில் ஒரு பாசம் இருந்ததால் தைரியம் பெற்றவளாகத் தன் நெஞ்சில் கட்டியிருந்த கையை எடுத்துவிட்டு அவன் முன்பாகப் போய் நின்று “பாதாளக் கொலுசும் உள்ளே விழுந்திடுச்சி, மாமா, நீங்க வந்துதான் எல்லாம் எடுக்கணும்” என்று கெஞ்சினாள்.

“பாதாளக் கொலுசும் விழுந்திடுச்சா . . .!?” அவன் அதிர்ச்சியாகக் கேட்டான் என்றாலும் இன்னும் முகம் பார்த்துப் பேசவில்லை.

வேட்டியால் தன் முகத்தைத் துடைத்துக்கொண்டு, அதைச் சரியாக மடித்துக் காட்டிக்கொண்டு, இன்னொரு காலை மாற்றி சுவரில் வைத்து சாய்ந்து நின்றான். கால் வலிக்க வெகு நேரம் நிற்பது தெரிந்தது.

“அம்மா அழறா, மாமா.”

அவன் முறைத்தான். “தோண்டி விழுந்ததுக்கு ஒரு பொம்பள அழுவாளா . . . பீடை. அவ போட்டதுமே நான் வந்து எடுத்துத் தரணுமா?”

அவன் எரிந்து விழுந்தான். அப்பொழுதுதான் அவள் முகத்தைப் பார்த்தான். அவள் பொசுக்கென்று தன் கையை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டாள். அவன் தன் முகத்தை இரு கையாலும் அழுத்தித் தேய்த்துக்கொண்டே தலையை இல்லை என்பதுபோல ஆட்டினான். பிறகு, “நீ போ தாயி, நாளைக்கு எடுத்துக்கலான்னு சொல்லு” என்று சொல்லிவிட்டு எதிர் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தான்.

இவள் திரும்பி அந்த எதிர் வீட்டில் யார் என்று பார்ப்பதற்குள் ஜன்னல் படீர் என்று அறைந்து சாத்தப்பட்டது. கொஞ்ச நேரத்திலேயே காலுக்கு உபயோகப்படும் ஒரு பொருள் பறந்து வந்து மாதேஸ்வரன்மீது விழுந்தது. அது பெண்களின் கால் செருப்பு. அவன் முகம் கறுத்துப்போயிற்று. செருப்பைத் தன் கால்களால் புரட்டித் தள்ளியபடி யோசித்தான். பிறகு “சரி வா தாயி, போவோம்” என்றான் அந்த ஜன்னலையே பார்த்தபடி.

வரும்பொழுது அவன் வாய் முணுமுணுப்பது கேட்டது. “மாதேஸ் எத்தினி நல்லவன், எத்தினி பாசமா இருந்தான்னு நாளைக்குத் தெரிஞ்சிப்பே நீ . . .” அவன் யாரிடம் பேசுகிறான்? செருப்பு வீசிய பெண்ணிடமா, இல்லை தன்னிடமா? புஷ்பா புரியாமல் வந்தாள்.

பொதுக் கிணற்றுக்குள் இறங்கினான். எப்பொழுதாவது ஒரு முறைதான் அவன் கிணற்றுக்குள் இறங்குவான். அவனைப் போல மூச்சுப் பிடித்துத் தண்ணீருக்கடியில் இருக்கும் வீரன் யாரும் கிடையாது இந்த ஊரில். அவன் நீருக்கு உள்ளே போனால் கேட்ட பொருள் மட்டும் இல்லாமல் எப்பொழுதோ விழுந்த அலுமினிய டேக்சா, சிறு சொம்பு, கிலுகிலுப்பை, மர பொம்மை, கல் சொப்புக்கள் எல்லாவற்றையும் ஆய்ந்து வெளியே எடுத்துவிடுவான். அம்மாவுக்கு இப்பொழுதுதான் உயிரே வந்தது. அத்தனை பொருளும் வெளியே வந்துவிடும்.

எல்லோரும் இடுப்புயர கிணற்றுச் சுவர்மீது வயிறு குனிந்து எக்கியபடி கிணற்றின் நீர்ப் பரப்பையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

உள்ளே மாதேஸ் மூழ்கிவிட்டான். நீரின் தளும்பல் குறைந்தது. பிறகு குமிழ் குமிழாக உள்ளே இருந்து காற்று வந்தது. வெகு நேரம் ஆயிற்று. அவன் எத்தனை நேரம் வேண்டுமானாலும் மூச்சு பிடித்துத் தேடுவான். பொருள் கிடைத்ததும் குபுக்கென்று மேலே வந்து, சிரித்து மூச்சு வாங்கியபடி பொருளைக் காண்பிப்பான். ஆனாலும் இத்தனை நேரமா அவனால் இருக்க முடியும்? பெண்களுக்குக் கொஞ்சமாய்ச் சந்தேகம் எழுந்தது . . . அவன் கிணற்றுச் சேற்றில் மாட்டிக்கொண்டிருப்பான் என்று பெருங்கூப்பாடு போட்டுக் கத்தினார்கள் அவர்கள். மற்ற ஆண்கள் ஓடி வந்தார்கள். அவர்களில் யாரும் கிணற்றில் முங்கும் வீரப் பையன்கள் கிடையாது. கை பிசைந்து நின்றார்கள்.

வெகு நேரம் ஆகிவிட்டது. சூரியன் மேற்கில் போய் விழுந்துவிட்டான். இனி அவன் உயிரோடு இருப்பது சாத்தியமில்லை. பிறகு ஒரு டீசல் என்ஜின் வைத்து உள்ளே இருக்கும் நீரை எல்லாம் இறைத்தார்கள். நீர் மெல்ல மெல்ல குறைய, நடுக் கிணற்றில் மாதேஸின் உச்சந்தலை முதலில் தெரிந்தது. பிறகு தோள், பிறகு கை. அவன் நடுக் கிணற்றில் சம்மணமிட்டு உட்கார்ந்தபடி இருந்தான். அவன் கையில், என்றைக்கோ ஆகாது என்று போட்ட ஒரு சிதிலமான கருங்கல் நந்தி இருந்தது. எல்லோரும் பயந்து போனார்கள்.

உயிரோடுதான் அவன் உட்கார்ந்திருக்கிறான் என்று நினைத்து ஆளாளுக்கு மாதேஸ் என்று கத்தினார்கள். நீர் முழுதும வற்றியபின் அவன் மல்லாந்து விழுந்தான். அவன் செத்துப் போய்விட்டான்.

அவன் நந்திக் கல்லை இறுகப் பற்றியபடி கிணற்றில் மூழ்கிச் செத்துவிட்டான் என்று சிலர் சொன்னார்கள். மூச்சு முட்டினா கல்லை
விட்டுட்டு மேல வந்திட மாட்டானா, அவன்மேல நந்திக் கல் விழுந்துதான் செத்துப்போனான் என்று சிலர் பேசிக்கொண்டார்கள்.

நடுக் கிணற்றில் அவன் தவம் செய்தபடி செத்துப்போனதாகக்கூடச் சிலர் பேசிக்கொண்டார்கள். நல்ல வேளை, கிணற்றுக் கோட்டான் சாபத்தால் செத்ததாக யாரும் சொல்லவில்லை. மாதேஸ் எப்படிச் செத்தான், எதற்காகச் செத்தான் என்பது ஊரில் யாருக்குமே புரிபடவில்லை.

மாதேஸின் பிணம் எடுத்தபின் ஊற்று நீர் ஊறி, உள்ளே இருந்த தோண்டியை, கயிற்றை, பாதாளக் கொலுசை, சிதிலமான நந்திக் கல்லை எல்லாம் மூழ்கடித்தது. இன்று எவரும் உபயோகிக்காத, கருஞ்சாந்தின் பிசுபிசுப்பில் நீர் ஊறிய அந்தப் பாழ்பட்ட கிணற்றில் எடுக்கப்படாத பாதாளக் கொலுசும் பாதாள நந்தியும் இருப்பதுதான் ஊருக்குத் தெரியும். ஆனால் அதில் இரண்டு தங்க மீன்கள் விளையாடியதோ, ஆண் மீனைப் பெண் மீன் துண்டாக்கி விழுங்கியதோ யாருக்கும் தெரியாது. அது புஷ்பாவுக்கு மட்டும்தான் தெரியும்.

பூமா சந்தில் அவன் ஒற்றைக் காலோடு நிற்கும்போது அவன் காலடியில் காலியான ஒரு பூச்சி மருந்து பாட்டிலை அவள் பார்த்தாள்.

மாதேஸ் கிணற்றில் மூழ்கி செத்தவனில்லை, செத்துக் கிணற்றில் மூழ்கியவன். அவன் பற்றியிருந்தது சிதிலமான நந்தியை இல்லை, தன் மரணத்தை. புஷ்பா அன்றைக்கு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் ஊருக்கு. இவன் மருந்து குடித்துவிட்டுக் கிணற்றில் இறங்குகிறான் என்று. ஆனால் விழுந்த செருப்பு. . . அது எப்படிச் சமாதானமாகும் அவனுக்கு.

அவன் நந்தி பிடித்து நீருக்கடியில் செத்துப்போன அன்றிரவே புஷ்பாவுக்குத் துயரமான, துண்டுபட்ட ஒரு ஆண் மீன் கனவில் வந்தது.

மறுநாள் அதிகாலையிலேயே அவள் ருதுவாகிப் பச்சை ஓலைக்கடியில் பல்லாங்குழி ஆட ஆரம்பித்தாள். ஆளற்ற பொழுதில் கிள்ளிய இடத்தை அவள் மெல்லத் தடவி வெட்கப்படவும் செய்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *