காலை மணி 10. கோடை சூரியனின் கொடூர வெயில். எதிர்ரெதிரே மருத்துவமனை, காவல் நிலையம். காவல் நிலைய ஓரம் .பிரதானசாலையிலிருந்து கிராமத்திற்குப் பிரிந்து செல்லும் அந்த சாலை சந்திப்பின் முகப்பில் அந்தப் பாட்டி தனியாக நின்றாள்.
தோலெல்லாம் சுருங்கி, முகம் சுருக்கம் விழுந்து, தலை பஞ்சாக நரைத்து, கொஞ்சமாய்க் கூன் விழுந்து, கோலூன்றி நின்றிருந்தாள். சாயம் போன நூல் புடவை. வெளுத்துப் போன தொள தொள ஜாக்கெட்.
காவல் நிலைய சுவரோம் ஒதுங்கி நின்ற அவள், அந்த வழியே திரும்பும் இரு சக்கர வாகனக்காரர்களைத் தயக்கத்துடன் கை நீட்டி மறிப்பதும், அவர்கள் இவளைக் கண்டு கொள்ளமல் செல்வதும், இவள் ஏமாற்றமடைந்து துவளுவதுமாக இருந்தாள்.
நான் எதிர்வரிசையில் இருந்த கடைக்கு வந்தவன் இவள் செய்கையைப் பார்த்து நின்றேன்.
இந்தச் சாலை கோட்டுச்சேரியிலிருந்து நெடுங்காட்டிற்குச் செல்வது. 6 கி.மீ தொலைவு. இடையில் ஏகப்பட்ட கிராமங்கள் உயிர் நாடி. இருந்தும் அந்த சாலையில் பேருந்து போக்குவரத்து மிகவும் குறைவு. கிராம மக்கள் வசதிக்காக காலை,மதியம்,மாலை நீண்டகாலமாக ஓடிய தனியார் பேருந்து ஏதோ காரணத்தால் எப்போதோ நிறுத்தம். வசூல் அதிகம் இல்லாததால் சிற்றுந்து இயக்கமும் இல்லை. இரண்டே இரண்டு டெம்போக்கள் மட்டும் நினைத்த நேரத்திற்கு வரும், செல்லும். சமயத்தில் அதுவும் படுத்துக் கொள்ளும்.
அந்த வழியே பள்ளிப் படிப்பு, மருத்துவமனை, மற்றும் இதர வேலைகளுக்கெல்லாம் வருபவர்கள் இந்த சாலை சந்திப்பு முகப்பில் இப்படி நிற்பார்கள். திரும்பும் இருசக்கர வாகனங்களைக் கை நீட்டி நிறுத்தி ஏறி இறங்கிக் கொள்வார்கள். இதில் வயசு,ஆண்பெண் என்கிற பாகுபாடு என்று எதுவும் கிடையாது. வாகன ஓட்டிகளுக்கு ஏற்றி இறக்க….மனம் இருக்க வேண்டும்.!
அந்த வழியே ஒற்றையாய்ச் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் மக்கள் மேல் பரிதாபப்பட்டு அவர்ளை ஏற்றிச் சென்று நிறுத்தச் சொன்ன இடத்தில் நிறுத்தி இறக்கிச் செல்வார்கள்.
இந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் இலவசமாய்க் கொடுக்கும் இரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்க வந்திருக்கும் போல. இடது கையில் ஊன்று கோலை ஒட்டி வெளுத்துப் போன துணிக்கடை மஞ்சள் பை. அதனுள் பட்டையாய் நோட்டு.
தாங்கள் செல்லும் அவசரம், வேகத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் விழுந்துவிடக் கூடாது, அதனால் தனக்கு சங்கடம், கஷ்டம் வரக் கூடாது என்பதற்காகவே ஏற்றிச் செல்பவர்களும் சுதாரிப்பாய்….சரியாக உட்கார்ந்து பிடித்துக் கொள்ளும் ஆட்களாய்ப் பார்த்துதான் ஏற்றுவார்கள். அப்படி இருக்கும்போது இந்த வயதான மூதாட்டியை எவர் ஏற்றிச் செல்வார்கள். ?
இதன் மேல் பரிதாபப்பட்டு அப்படியே ஏற்றிப் போக மனம் வந்தாலும் குடுகுடு வயதில் வாகனத்தில் கால் ஊன்றி ஏறவே தெம்பிருக்காது, தடுமாறும். தட்டுத் தடுமாறி ஏறி உட்கார்ந்தாலும் எங்கு பிடிப்பது, எப்படி அமருவது என்று தெரியாது. எல்லாம் சொல்லிக் கொடுத்து உட்கார வைத்தாலும் கையில் கோல் எப்படி வைத்துக் கொள்வது கஷ்டம்.! ‘கோலை குறுக்கே வைக்காமல் இப்படி வைத்துக் கொள்!’ என்று சொல்லி ஏற்றி அழைத்துச் சென்றால் பழக்கம் இல்லாத காரணத்தால் விழுந்து தொலைத்தால் நமக்கும் கஷ்டம் அதற்கும் கஷ்டம்.
இந்த கஷ்டம் இருவரோடு சென்றால் பரவாயில்லை. பாட்டி தப்பித் தவறி விழுந்த காயத்தோடு வீட்டிற்குச் சென்றால்….அங்கே நல்லவர்களாக இருந்தால், ‘அதுங்களே பரிதாப்பட்டு ஏத்திக் கிட்டு வருது. நீ சரியா பிடிச்சு வந்து தொலைச்சாலென்ன ? ‘ என்று அதைக் கண்டித்து ஆறுதல் படுத்துவார்கள்.
வில்லங்கங்கள் இருந்தால், ‘எவன் உன்னை ஏத்தித் தள்ளி விட்டுப் போனான். பார்க்கிறேன்!’ துடித்துக் கிளம்புவார்கள்.
‘அந்த புள்ள மேல தப்பில்லேப்பா. நான்தான் வகைக் கெட்டத்தனமா உட்கார்ந்து விழுந்தேன்!’ என்கிற பாட்டி பரிதாபத் தடுப்பையும் மீறி சாலையில் வந்து கேட்டு விசாரித்து, காத்து ஆளைப் பார்த்து வழி மறிப்பாhக்கள். உதவி செய்யப் போய் இது உபத்திரவம்! இப்படிப்பட்ட நிலையில் இவளை எவர் ஏற்றிச் செல்லத் துணிவார்கள்.!?
இது தெரியாமல் இந்தக் கிழவி ஏன் கை நீட்டி கை நீட்டி ஏமாறுகிறது. வீட்டிற்குப் போய் இதற்கு அப்படி என்ன அவசர வேலை. ஒரு வீட்டு திண்ணையில் ஒதுங்கி படுத்து, வரும் டெம்போவில் ஏறிச் சென்றாலென்ன ? இப்படி வெயிலில் வம்மாய் நின்று எதைச் சாதிக்க இந்தப் போராட்டம். ? எனக்குள் கேள்வி.
ஒருவேளை கையில் காசில்லாததால் முடியாத காலம் இப்படி செல்ல முயல்கிறதா ? முதியோர் உதவித் தொகை பெற்று ஒரு வாரக் காலம் கூட ஆகாத நிலையில்… மகன், மகள், மருமகள், பேரன் பேத்திகள் பிடுங்கிக் கொள்ள.. இல்லை இல்லை அவர்களுக்குச் செலவழித்துவிட்டு இப்படி அல்லாடுகிறதா ? ஏழைகளுக்கு எந்தப் பணம் வந்து கையில் தங்கி இருக்கிறது ?! எனக்கு அதன் மீது பச்சாதாபம் ஏற்பட்டது.
காலை உணவும் எடுத்திருக்க வாய்ப்பில்லாமல் வந்திருக்கும். பசி, வெயில் தாக்கம் சுருண்டு விடப் போகிறது. அதன் மேல் எனக்குள் இன்னும் பரிதாபம் தோன்றியது.
ஐந்துக்குப் பத்து பணத்தைக் கொடுத்து, ‘ஒரு டீயும் குடிச்சட்டு டெம்போ ஏறிப் போ!’ சொல்ல வேண்டியதுதான் நினைத்து என் இரு சக்கர வாகனத்தில் ஏறி அதன் முன் நிறுத்தினேன்.
இதுவரை தான் பெற்ற ஏமாற்றத்தின் தாக்கமோ, இவனும் தன்னை ஏற்றிச் செல்லமாட்டான், எதற்கோ நிற்கிறான் என்கிற நினைவோ தெரியவில்லை. பாட்டி வழி மறிக்கவில்லை, எதிரில் நின்ற என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
உதவிக்கு வந்த நான் சும்மா இருக்க முடியுமா ?
“பாட்டி எங்கே போறீங்க ? ” கேட்டேன்.
“நெடுங்காட்டுக்கு.” குரல் அலட்சியம், அவநம்பிக்கையாய் வந்தது.
“டெம்போ ஓடுதா ? ”
“ஒடுது.”
“வெயில்ல நிக்காம ஓரம் ஒதுங்கி அதுல போக வேண்டியதுதானே. எதுக்குப் போற வண்டியெல்லாம் நிறுத்தி அவஸ்த்தைப் படுறீங்க.”
“……………………………”
“வீட்டுக்கு அவசரமா போகனுமா ? ”
“இல்லே.”
“கையில காசில்லையா ? ”
பதில் வரவில்லை.
“சில்லரை இல்லியா ? ”
“இ….இருக்கு.”
“அப்படின்னா…இன்னும் கொஞ்ச நேரத்துல அது வரும். வெயில்ல நின்று மயக்கம் போட்டு விழுந்துடாதீங்க. கையில காசில்லேங்குறதை சொல்ல வெட்கப்பட்டு இருக்குன்னு சொல்லி இப்படி நிக்க வேணாம். வயசான உங்களை ஏத்திப் போக எல்லாரும் பயப்படுவாங்க. இந்தாங்க பணம். ஒரு டீயைக் குடிச்சிட்டு ஓரமா உட்கார்ந்து அதுல போங்க,” சொல்லி, டீ ஒன்று ஏழு ரூபாய் நினைப்பு வர….இரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து நீட்டினேன்.
அவள் வாங்கவில்லை. “வேணாம்!” சொன்னாள்.
“ஏன்ன்…..?!!!” எனக்கு வியப்பு, திகைப்பு.
“என் ஊர்ல எல்லாரும் ஏழையாய் இருந்தாலும் இந்த மாதிரி வண்டியில ஏறி வந்து இறங்குறாங்கப்பா. நான் தொட்டுக்கூடப் பார்த்ததில்லே. எனக்கும் இதுல போக ஆசை. ஏத்திப் போய் இறக்கேன் பத்து ரூபாய்ப் பணம் வேணும்ன்னாலும் தர்றேன்.” கண்களில் ஆசை, ஆவல் மின்ன பரிதாபமாகக் கெஞ்சினாள்.
சடக்கென்று எனக்குள் இருந்த இதயத்தை எடுத்து எவரோப் பிசைந்தார்கள்.
“பத்ரமா ஏறி உட்கார்ந்து பிடிச்சுக்கோங்க பாட்டி.” சொல்லி இருபக்கமும் கால்களை ஊன்றி பலமாய் நின்றேன்.
அந்த சுருக்கம் விழுந்த முகத்திலும், குழி விழுந்த கண்களிலும் பளீர் வெளிச்சம்.
மெதுவாக என் தோலைப் பிடித்துத் தட்டுத் தடுமாறி ஏறி அமர்ந்து, தடி பைகளை ஓட்டும் எனக்கு இடைஞ்சல் இல்லாமல் பக்குமாய் வைத்து கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, “போப்பா” என்றாள் பாட்டி.
குரலில் அத்தனை உற்சாகம், குதூகலம்.