பழி ஓரிடம்…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 25, 2021
பார்வையிட்டோர்: 5,192 
 
 

அன்று மணி படுக்கையை விட்டு எழுந்த நேரம் சரியில்லை. முன்னாள் இரவு மனைவியுடன் தகராறு. அதனால் தூக்கம் கெட்டது.

அதனால் எழுந்திருக்கும் நேரம் லேட். அவனது துணிகள் கசங்கி இருந்தது. கோபத்தினால், மனைவி மல்லிகா அவனது துணிகளை இஸ்திரிக்கு கொடுக்க வில்லை. ஒரு வழியாக அலுவலகத்திற்கு வேண்டிய துணிகளை தானே இஸ்திரி செய்து கொண்டான் மணி.

மல்லிகா சமையல் செய்ய வில்லை. அலுவலகம் சென்று சாப்பிட்டு கொள்ளலாம் என்று ஆபீஸ் கிளம்பினான்.

அன்று பார்த்து மழை வேறு. வழியெல்லாம் சகதி. போட்ட ஷூ சேற்றுடன். பாழாகி விட்டது.

அன்று பார்த்து அவனது தாம்பரம் மின் வண்டி லேட்.

அன்று பார்த்து ஆபீசுக்கு சீக்கிரம் போக வேண்டும் பிரச்னை. ‘என்ன கொடுமை இது’ அலுத்துக் கொண்டான். அலுத்துக் கொண்டால், வண்டி சீக்கிரம் வந்து விடுமா என்ன ? அது அது அப்படி அப்படி தான் ! ஒரு வழியாக, நேரம் கழித்து ஆபிஸ் வந்து சேர்ந்தான்.

அன்று பார்த்து, லிப்ட் வேலை செய்ய வில்லை. ஐந்து மாடி படியில் ஏறி ஒரு மாதிரியாக அலுவலகத்தில் நுழைந்தான். “சே என்ன வாழ்க்கை இது, இன்று பார்த்து கேட்டை, மூட்டை, சனியன் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொண்டதே” என்று வெறுத்துக் கொண்டான் .

அவனது அறை வாசலில், அவனது ஜூனியர் கோபி அவனுக்காக காத்துக் கொண்டிருந்தான். “ என்ன எல்லாம் ரெடியா கோபி ? இல்லே, இது இல்லே அது இல்லேன்னு ஏதாவது சாக்கு சொல்லப் போகிறாயா ? “ கொஞ்சம் கடுப்பாகவே கேட்டான் .

“எல்லாம் ரெடி சார், நீங்க ஒரு தடவை செக் பண்ணிட்டாக்க, நாம நேர மீட்டிங் ஹாலுக்கு போயிடலாம்., அப்புறம் மேலதிகாரிங்களெல்லாம் உங்களுக்காக காத்துகிட்டிருக்காங்க” – கோபி

“சரி, அப்போ அந்த லாப்டோப்லே எல்லாம் சரியாக இருக்கான்னு பார்த்திடு பின்னாடி அது பிரச்னை இது பிரச்னைன்னு என் மானத்தை வாங்காதே” – மணி கடுப்பாக சொன்னான் . வீட்டு பிரச்னைகளை, தன் சொந்த பிரச்னைகளை, எளியார் மீது எளிதில் காட்டுவது வலியார் சிலர் இயல்பு .

“எல்லாம் அப்பவே பார்த்திட்டேன் சார், எல்லாம் சரியாக இருக்கு”

“சரி அப்போ கிளம்பு . ஏற்கனவே லேட். சீக்கிரம், சீக்கிரம்” மணி பறந்தான்.

மணி, கோபியுடன் , பிரசென்டேஷன் அறைக்கு வந்து சேர்ந்தான். அமர்ந்திருந்த அதிகாரிகள் முகத்தில் ஒரு கோபம். பதினோரு மணிக்கு வர வேண்டியவர் பதினோறரை மணிக்கு வந்ததில் ஒரு கடுப்பு. காக்க வைத்ததில் ஒரு கசப்பு. ஒரு அதிகாரி கொஞ்சம் தமாஷாக தன் கோபத்தை “ உங்க கடிகாரம் கொஞ்சம் ஸ்லோ போலிருக்கு மணி, திருத்திக்கோங்க” என்று கிண்டலிடித்தார்.

மணி “சாரி சார், கொஞ்சம் லேட், இப்போ உடனே ஆரம்பிச்சுடலாம்”. கோபி ,லேப்டாப்பை ப்ரோஜெக்டரோடு இணைத்தான்.

மணி எல்லாவற்றையும் முடுக்கினான்.

அன்று பார்த்து , ப்ரொஜெக்டர் வேலை செய்ய வில்லை. என்ன செய்தாலும் , ஆடியோ வேலை செய்தால், வீடியோ வேலை செய்யவில்லை. விடியோ வேலை செய்தால், ஆடியோ பழி வாங்கியது. மணி விழித்தான். “என்னய்யா , வேலை பாக்கறீங்க, இது கூடவா சரி பார்த்து வெச்சுக்க கூடாது ?” என்று கடிந்தார் ஒரு மூத்த அதிகாரி.

கோபி “ இன்னொரு ஸ்பேர் , ப்ரொஜெக்டர் கொண்டு வரட்டுமா சார் ? என்று கேட்டதற்கு, இன்னொரு மூத்த அதிகாரி, “ வேண்டாம்! வேண்டாம், எனக்கு இன்னொரு மீட்டிங் இருக்கு. இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாம், அன்றாவது, நல்லா பிரசெண்டேஷன் பண்ணுங்க” என்று பரிகசித்து விட்டு அகன்றார். கூட்டம் கலைந்தது.

மணிக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. “ என்ன கோபி, இப்படி பண்ணிட்டே, கொஞ்சம் முன்னாடியேஇதெல்லாம் செக் பண்ணியிருக்க கூடாது ? உன்னாலே பார் , எனக்கு எத்தனை கெட்ட பெயர் ? உங்களை மாதிரி, முட்டாள்களையும் சோம்பேறிகளையும் வைத்து நான் குப்பை கொட்ட வேண்டியிருக்கிறது ? என் கெட்ட நேரம் !” என்று காய்ந்து விட்டு அங்கிருந்து அகன்றான் “

கோபிக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘இதில் என் தவறென்ன ? லேட்டாக வந்தது மணியின் தவறா ? என் தவறா? எதையும் பார்க்காமல், பார்க்க நேரமில்லாமல், மணி, அதிகாரிகள் திட்டியதை என் பேரில் திருப்புவது என்ன நியாயம்?‘ . அன்றே, கோபி வேறொரு பிரிவிற்கு மாற்றம் கோரி மனு அளித்தான்.

***

அன்று இரவு , கோபி சோகமாக வீடு திரும்பினான். மணி திட்டியது அவன் காதில் ரீங்காரம் செய்து கொண்டே இருந்தது.

கோபியின் மனைவி சியாமளா “என்னங்க கொஞ்சம் சோர்ந்தா போல இருக்கீங்க ? ஆபிசில் ஏதாவது பிரச்னையா ?” என்று ஆதுரமாக வினவினாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை, நீ தட்டை எடுத்து வை ! நான் முகம் கழுவிக்கிட்டு வரேன் “ கோபி அவள் முகத்தை பார்க்காமல் சொன்னான்.

சியாமளா, தட்டில் “நான்கு இட்லி , சட்னி, கொஞ்சம் மிளகாய் பொடி” எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்

டைனிங் மேஜையில், இட்லியை பார்த்தவுடன், கோபிக்கு கோபம் பிய்த்துக் கொண்டது. “என்ன இது, ஒரு நாளை போல இட்லி? வேறே டிபனே உனக்கு தெரியாதா? அதுவும் சட்னி ! மனுஷன் ஆபீஸ்லேருந்து களைப்பா வருவானே, ஒரு சப்பாத்தி, தோசை, பூரி அப்படின்னு வித விதமா பண்ணினா என்ன ? சே ஒரே வெறுப்பா இருக்கு !”

சியாமளாவுக்கு ஒன்றும் புரியவில்லை. வலியார் கோபம் எளியார் பேரில் ! என்னை ஏன் திட்டுகிறார். இட்லி அவருக்கு பிடித்த டிபன் தானே ?

சியாமளாவிற்கு பொறுக்கவில்லை. அவள் எதற்கும் சளைத்தவளில்லை. பதிலுக்கு திருப்பினாள். “ஏங்க ! உங்களுக்கு வெளியிலே பிரச்னைன்னா, அதை அங்கேயே காட்ட வேண்டியது தானே ? அதுக்கு ஏன் என்னை காட்டறீங்க ?” என்று முகத்தில் இடித்துக் கொண்டாள். இட்லியை திருப்பி எடுத்துக் கொண்டு போய் குப்பையில் கொட்டினாள். கோபிக்கு இப்போது இட்லியும் போச்சு. வீட்டில் நிம்மதியும் போச்சு.

***

ஆசிரியர் குறிப்பு : சுற்றி உள்ளவர் உங்களை விரும்ப வில்லையென்றால், உங்களால் ஒரு இடத்தில் தாக்கு பிடிக்க முடியுமா? எவ்வளவு திறமை இருந்தும், ஜொலிக்க முடியுமா ? இதுவே எமோஷனல் இன்டலிஜன்ஸ் (Emotional Intelligence) வீட்டு கோபத்தை வெளியிலும், வெளி கோபத்தை வீட்டிலும் காட்டினால், நட்டம் நமக்கு தான்!

இதில் கெட்டநேரம் யாருக்கு ? மணிக்கா, கோபிக்கா, அல்லது சியாமளாவிற்கா?

Print Friendly, PDF & Email

1 thought on “பழி ஓரிடம்…

  1. Good Story. To make it great, you may add some twists in the story. the concept of the story is very old version.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *