பள்ளிக்கூடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 7,291 
 

எனக்கு தற்போது வயது அறுபது.

நான் பள்ளியில் படிக்கின்ற காலங்களில் எனக்குப் படிக்கவே பிடிக்காது.

படிப்பு என்றாலே எனக்கு எட்டிக்காய்.

பள்ளியில் வாத்தியார் சொல்லிக் கொடுத்ததை படித்து அதை ஞாபகம் வைத்துக்கொண்டு, வீட்டிலும் அவைகளைப் படித்து வாரத் தேர்வுகளும், மாதத் தேர்வுகளும், குவார்ட்டர்லி, ஆபியர்லி, பைனல் எக்ஸாம் எல்லாம் எழுதி, ஒவ்வொரு வருடமும் பாஸ் பண்ணி…..யப்பா எனக்கு தாவு தீர்ந்துவிடும்.

படிக்கிற வயதில் பள்ளிக்கூடம் போவதற்கு பிடித்திருக்குமோ இல்லையோ; படித்து முடிந்து இப்ப இவ்வளவு நிறைய வருடங்கள் கழிந்த பிறகு, படித்துக் கிழித்த படிப்பையும், பள்ளிக்கூடத்தையும் நினைத்துப் பார்க்க மட்டும் இப்ப எனக்கு ரொம்பத்தான் பிடிக்கிறது. ஒரு விதத்தில் இது ஒரு முரண்பாடுதான்.

நான் படித்தது பாளை தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் அதைத் தொடர்ந்து சவேரியார் கல்லூரி. பள்ளிக்கூடம் போகிற வயதில் என்னமோ பள்ளிக்கு போகவும் பிடிக்காது, பாடப் புத்தகங்ககளை தொடவும் பிடிக்காது. பிடிக்காத அந்த விஷயங்களை எல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு மட்டும் ஏன் இப்போது இனிப்பாக இருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை.

மாணவப் பருவம் கவலையே இல்லாத வயதென்று பலர் சிறிது ஏக்கமாகக்கூட நினைவு கூர்கிறார்கள். அப்படித் தோன்றவில்லை எனக்கு.

மாணவ வாழ்க்கையிலும் பிரச்சனைகளும், கவலைகளும் சூழ்ந்துதான் இருந்தன. பல சமயங்களில் ஏமாற்றங்களும், நிராசைகளும் மனதின் தைரியத்தை சிதைத்தும் விடுகின்றன. இதனால் வாத்தியாருக்கும், மாணவனுக்கும் இடையே ஏற்பட வேண்டிய நல்ல உறவுகளும்கூட பல நேரங்களில் திரிந்தும் போய்விடுகின்றன.

நான் பள்ளியில் படித்த காலங்களில் பாளையங்கோட்டைக்கு அருகில் திம்மராஜபுரம் என்கிற அக்கிரஹாரத்தில் குடியிருந்தேன். தூய சவேரியார் ஒன்பது மணி பள்ளிக்கு, தினமும் காலையில் எட்டரை மணிக்கு, ஒரு பத்து அக்கிரஹாரத்துப் பசங்க ஒன்று சேர்ந்து, யூனிபார்மில் நீல நிறக் கால்சராயும், வெள்ளைச் சட்டையும் அணிந்துகொண்டு, நெற்றி நிறைய விபூதி இட்டுக்கொண்டு, புத்தக மூட்டைகளை சுமந்துகொண்டு நான்கு கிலோமீட்டர்கள் விறுவிறென நடந்தே செல்வோம், வருவோம்.

நடந்து செல்லும்போது எங்களது பேச்சு பாடத்தைப் பற்றியும், தேர்வுகளைப் பற்றியும் அல்லது ஆசிரியர்களைப் பற்றி மட்டுமே இருக்கும். அவ்வளவு தூரம் அந்தக் காலத்தில் நேர்மையும், ஒழுக்கமும்.

அந்தப் பசங்களின் மத்தியில் கொஞ்சம் ஒழுக்கம் கெட்டவன் நான் மட்டும்தான். படிப்பைத் தவிர சினிமா, கிரிக்கெட், பெண்கள் என கொஞ்சம் தடாலடியாகப் பேசுவேன். பள்ளிக்கூடம் போகிற வழியில், அவ்வப்போது சம்சுதீன் கடையில் பாஸிங்ஷோ சிகரெட் வாங்கி திருட்டு தம்மடிப்பேன். நான் மதுரையில் ஏழாம் வகுப்புவரை படித்துவிட்டு, என் அப்பாவின் அரசாங்க உத்தியோக மாற்றலால் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அக்கிரஹாரத்துக்குள் புதிதாக குடியேறியவன். மற்றவர்கள் அனைவரும் மடியான ஒரிஜினல் திம்மராஜபுரம் ஐயர் பசங்க.

என் அப்பா தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கெசட்டட் ஆபீசராக இருந்தார். அவர் பெயர் கே.சுப்பிரமணியன். அக்கிரஹாரத்தில் ஏகப்பட்ட சுப்பிரமணியன்கள் இருந்ததாலும், என் அப்பா பெரிய கடாமீசை வைத்திருந்ததாலும், மீசைக்காரர் என்று அழைக்கப் பட்டார். அதனால் என்னை மீசைக்காரர் பையன் என்றுதான் அழைப்பார்கள். ஏகப்பட்ட கண்ணன்கள் இருந்ததும் மற்றொரு காரணம்.

நான் படிக்கும்போது சவேரியார் பள்ளியில் ஆசிரியர்களாக இருந்த பொ.ம.ராசாமணி, சிங்கராயன், கரீம், பீட்டர் பெடலிக்ஸ், தமிழ் அறிஞர்களான மொட்டராமன், சேஷாத்ரிநாதன், கிரிக்கெட் கோச் பென்ஸ் போன்றவர்களை என்னால் மறக்க முடியாது. மொட்டராமன் கடிகாரத்தைப் பார்க்காமலே எங்களுக்கு டைம் சொல்லுவார்.

பாதிநேரம் பள்ளியில் இல்லாது, அருகில் இருந்த மரியா கேன்டீனில் டீ குடித்துக்கொண்டு, தம் அடித்துக்கொண்டு எப்ப ஸ்டிரைக் பண்ணலாம் என்று காரணம் தேடிக் கொண்டிருப்பேன். இடுப்பில் பெல்ட் அணிவதற்கு பதிலாக முட்களுடன் கூடிய மீன் விளாறை அணிந்துகொண்டு சாதுவான மாணவர்களிடம் உதார் காட்டுவேன். பெல்ட் வடிவில் தூத்துக்குடியில் கிடைக்கும் மீன்விளாறை கழட்டி முதுகில் அடித்தால் சதை பிய்ந்துவிடும். பதினான்கு வயது முதல் இருபது வயதுவரை, திமிர்பிடித்து கிட்டதட்ட பாதி ரெளடியாகவே வலம் வந்தேன்.

பள்ளி நாட்களிலேயே எனக்கு எல்லா லாகிரி வஸ்துக்களும் அறிமுகமாகிவிட்டன.

படிக்கும் காலங்களில் ஒவ்வொரு வருடமும் நான் தொட்டுக்கோ தொடைச்சிக்கோவென்று மென்னியப் பிடிக்கிற மாதிரி மார்க் வாங்கி பெயிலாகாமல் ஜஸ்ட்பாஸ் பண்ணி விடுவேன். அதனால் நான் படிப்பில் புலி கிலி என்பதெல்லாம் கிடையாது. எனக்குத் தெரிந்து நான் 35 முதல் 45 க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்ததாக ஞாபகம் இல்லை. அந்தக்கால எஸ்எஸ்எல்ஸியில் 600க்கு 306 மார்க் மட்டும் எடுத்தேன் என்றால் என் படிப்பின் யோக்யதையை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

ஆனால் என் அப்பாவுக்கோ நான் நன்கு படித்து நிறைய மார்க்குகள் வாங்கி எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்கிற ஆசை. தினமும் ராத்திரி பத்துமணி வரை என்னைப் படிக்க வைப்பார். மறுநாள் காலை ஐந்து மணிக்கே எழுப்பி விடுவார். நான் பல இரவுகளில் புத்தகத்தை திறந்து வைத்தபடியே தூங்கி விடுவேன். அதற்கு என் அப்பா, “கண்ணா நீ படிச்சேன்னு நான் சொல்றேன்டா….புஸ்தகத்தை மூடிட்டுப் போய் படுத்து தூங்கு” என்பார். எவ்வளவு தூரம் இடக்கும், கிண்டலுமான வார்த்தைகள்!? என் அப்பாவுக்கு சொந்த ஊர் திருவையாறு. அதனால் தஞ்சாவூர் குசும்பு ஜாஸ்தி.

கல்லூரிவரை இப்படியே ஒவ்வொரு வருடமும் ஜஸ்ட்பாஸ் பண்ணிவிட்டேன். அக்கிரஹாரத்தில் குடியிருந்ததால், என் அப்பா அடிக்கடி என்னிடம், “சுந்தரேசனைப் பார், சுதர்சனைப் பார், கிச்சுவைப் பார், விச்சுவைப் பார்” என்று என்னை படிப்பில் அவர்களுடன் அடிக்கடி கம்பேர் பண்ணுவார். நிறைய மதிப்பெண்கள் எடுக்க வற்புறுத்துவார்.

ஆனால் எனக்கோ அக்கிரஹாரத்தின் வயசுப் பெண்கள்மீதுதான் லயிப்பு. அலைபாயும் கண்களில் குறுகுறுப்புடன், தாவணியில் வளையவரும் அந்தப் பெண்களைப் பார்த்தாலே எனக்குள் மனசும் உடம்பும் பரபரக்கும். அவர்களைப்பற்றிய கற்பனைகளும், சுவாரசியங்களும்தான் எனக்குள் ஏராளம். அவர்களை நிறையப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஏக்கமும், தூண்டுதலும் என்னுள்ளே எப்போதும் வியாபித்திருக்கும்.

நீளமான தெருவில், ஏதாவது ஒரு திண்ணையில் அமர்ந்துகொண்டு போகிற வருகிற வயசுப் பெண்களை கண்களால் அளந்து, “சீக்கிரம் புட்டு போட்டுற வேண்டியதுதான்….” என்று கமென்ட் அடிப்போம். அவர்கள் ‘க்ளுக்’கென்று சிரித்துக்கொண்டே, இல்லாத மார்பை இழுத்து மறைத்துக் கொண்டு ஓடிவிடுவார்கள். அந்தக் காலத்தில் பெண்கள் வயதுக்கு வந்தால், அதை அறிவிக்கும் விதமாக தெருவில் அனைத்து வீடுகளுக்கும் புட்டு செய்து அனுப்பி வைப்பார்கள்.

இப்படித்தான் நாராயண வாத்தியாரின் பெண் அம்புலுவை நான் ஏதோ கிண்டல் செய்யப்போக, அவர் என் அப்பாவிடம் பெரிதாக சண்டைக்கு வந்துவிட்டார். அதன்பிறகு எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு அவர் காரியம் பண்ண வருவதை நிறுத்திக் கொண்டார். பின்பு என் அப்பா நெல்லை ஜங்க்ஷனில் இருந்து பாஸ்கர் வாத்தியாரை ஏற்பாடு செய்துகொண்டார். .

அதன்பிறகு எனக்கு வயது ஏறஏற, பெண்களைப் பற்றிய மரியாதைக்குரிய மேன்மையான புரிதல்கள் எனக்குள் ஏற்பட்டு நிறைய மாறிப் போனேன்.

மனித ஜாதியில் பெண்கள் உயர்ந்த ஜாதி. இயல்பாகவே மிகவும் தற்காப்பு உணர்வு மிக்கவர்கள். அவர்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது உண்மையையும், நேர்மையையும், அன்பையும் மட்டுமே. பணமோ பொருளோ அல்ல….கண்டிப்பாக செக்ஸ் அல்ல. ஆனால் ஒரு ஆணின் முதல் எதிர்பார்ப்பே பெண்ணின் உடம்புதான். இதுதான் நான் புரிந்துகொண்ட உண்மை

என்னுடன் படித்த மகாதேவன் நெல்லை டவுனிலிருந்து ஒரு கருப்புநிற அம்பாசடர் காரில் தினமும் பள்ளிக்கு வருவான். அவன் வீட்டின் தொலைபேசி இலக்கம் 212. அது இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஸ்ரீதர் என்பவன் நாங்குநேரியிலிருந்து பியட் காரில் வருவான். அவனுடைய அப்பா டிவிஎஸ்ஸில் பெரிய பதவியில் இருந்தார். இவர்கள் இருவரும் காரில் பள்ளிக்கு வந்துபோவதைப் பார்க்க எனக்கு ஏக்கமாய் இருக்கும்.

படிப்பே ஏறாத கிறிஸ்டோபர் இன்று பாளை மார்க்கெட் கோட்டுர் ரோட்டில் சொந்தமாக ஒரு பெரிய பலசரக்கு கடை வைத்துள்ளான். அவனுடைய பள்ளி ஆசிரியர் தற்போது அவனுடைய கடையின் கஸ்டமர். அது மட்டுமில்லை, கிறிஸ்டோபர் தன்னிடம் படித்த மாணவன் என்று பெருமைப் படுகிற கஸ்டமர்.

சுந்தரேசன் சென்னை எல் அன் டியில் பெரிய பதவியிலிருந்து ரிடையர் ஆகிவிட்டான். ராஜா என்கிற நாகராஜன் கோவாவில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓஷனோகிராபியில் வேலை பார்த்து ரிடையர்ட் ஆகிவிட்டான். இப்படியாக படிப்பு வந்த, வராதவர்கள் என அனைவருமே வாழ்க்கையில் நல்லவிதமாக இருக்கிறார்கள்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் நான் சிறிது காலம் நெல்லை ஜங்க்ஷன் வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் இருந்த கமர்ஷியல் இன்ஸ்டிடியூட்டில் ஷார்ட்ஹேண்ட், டைப்ரைட்டிங் படித்தேன். அப்போது என்னுடன் படித்த பிரேமா என்கிற ஐயங்கார் பெண்ணை விரட்டி விரட்டிக் காதலித்தேன். அவள் தினமும் ரயிலில் தாழையூத்திலிருந்து நெல்லை ஜங்க்ஷன் வந்து போவாள். ஆனால் அவள் என் காதலை நிராகரித்து உதாசீனப் படுத்திவிட்டாள். அவளின் தந்தை ராகவனை நேரில் பார்த்து பெண்கேட்க முயற்சித்தேன். அதுவும் ஈடேறவில்லை.

இப்படியாக என் நேர்மையான முதல்காதல் நிராசையாகி விட்டது.

அதன்பிறகு பெங்களூரில் ஒரு செகரட்டரியாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்பு படிப்பின் மகத்துவத்தை சுயமாக உணர்ந்துகொண்டு, செயின்ட் ஜோசப் ஈவ்னிங் காலேஜில் மேற்கொண்டு நிறையப் படித்து சென்ற மார்ச்சில் ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் அதன் மனிதவள மேம்பாட்டுத்துறையின் சீனியர் வைஸ்-பிரசிடெண்டாக ஓய்வு பெற்றேன்.

டைட்டானில் வேலை செய்தபோது, ஒருமுறை பெங்களூர் வெஸ்ட் என்ட் ஹோட்டலில் இருந்து டைட்டான் ஹோசூர் பாக்டரிவரை டாட்டா குழுமத்தின் தலைவர் மறைந்த ஜேஆர்டி டாட்டாவை ஒரு வெள்ளைநிற பென்ஸ் காரில் அழைத்துச் சென்றது என்னால் மறக்க முடியாத அனுபவம்.

வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என் அருமை மனைவி சரஸ்வதி. கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக அனுதினமும் என்னைச் சகித்துக்கொண்டு என்னை நல்ல பாதையில் வழி நடத்திச்செல்லும் பெண்தெய்வம் அவள்.

உருப்படாத கழிசடையாக கருகித் தீய்ந்து போயிருக்க வேண்டிய நான், எப்படியோ தடம்புரண்டு உருப்பட்டு விட்டேன் என்றால் அதற்கு ஒரே காரணம் சரஸ்வதியுடன் நடந்த என் திருமணம். . .

பெங்களூரில் செட்டிலாகி என் ஒரேமகனுக்கு நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைத்து, தற்போது என் பேத்தி விபாவை தினமும் கொஞ்சிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறேன்.

‘மரம் வைத்தவன், தண்ணீர் விடமாட்டானா என்ன!?’ என்கிற சொல் கூற்று எனக்கு நன்றாகவே பொருந்தும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *