”அப்ப, உங்க பெண்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுடுங்க, மாப்பிள்ளை பிடிச்சிருக்கானு…” என்றார் மாப்பிள்ளையின் தகப்பனார்.
”ராதா ரொம்பவும் பயந்த சுபாவங்க. மாப்பிள்ளை உனக்குப் பிடிச்சிருக்கானு கேட்டா, அதுக்கு வியர்த்து வெலவெலத்துப் போகும். ஆம்பிளைங்களைக் கண்டாலே அதுக்கு வெட்கம்” என்றார் பெண்ணின் தந்தை.
”ஆமாங்க. வளர்ந்து ஆளாயிட்டாளே தவிர, விவரம் தெரியாத பொண்ணுங்க அது. எங்காவது வெளியே போனாலும் குனிஞ்ச தலை நிமிர மாட்டா” என்றாள் பெண்ணின் தாயார்.
இருப்பினும், மாப்பிள்ளை வீட்டாரின் வற்புறுத்தலின் பேரில், தமது பெண்ணின் சம்மதத்தைக் கேட்க, இருவரும் எழுந்து அடுக்களைக்குள் போனார்கள்.
”ஏண்டி ராதா கண்ணு, உனக்கு இந்த மாப்பிள்ளை பிடிச்சிருக்கா?” என்று கேட்டபடி, மாப்பிள்ளையின் போட்டோவை நீட்டினாள் தாயார். குப்பென்று முகம் சிவக்க, போட்டோவைத் தனது இரு கைகளாலும் முகத் துடன் சேர்த்து மூடிக்கொண்டு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் ராதா.
”பயப்படாம உன் அபிப்பிராயத்தைச் சொல்லு. இஷ்ட மில்லாத இடத்திலே உன்னைக் கட்டிக் கொடுத்துட்டதாக எங்களுக்குப் பழி வேணாம்” என்றார் தந்தை ஆதுரமாக.
ராதாவிடமிருந்து பதில் இல்லை.
”இப்படித் திரும்புடி பயந்தாங் கொள்ளி! நானும் உங்க அப்பாவும் தானே இருக்கோம்… பிறத்தியார் யாரோ வந்துட்ட மாதிரி நடுங்கறியே” என்று, ராதாவின் தோளைத் தொட்டுத் திருப்ப முயன்றாள் தாயார்.
ராதா, ‘விசுக்’கென்று விலகிக் கொண் டாள். ”என்னம்மா இது? இப்ப போய் சம்மதமா, சம்மதமான்னு கேட்டா எனக்கு வெட்கமா இருக்காதா? இவர் என்னோடு வேலை செய்யறவர்தான். போன வாரம்தான் நானும் இவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம்” என்று சிணுங்கினாள் ராதா.