அக்ஷிதாவின் உடம்பு கொதித்தது. கண்கள் சிவந்து சோர்ந்து கட்டிலில் கிடந்தது குழந்தை.
ஆன்ட்டிபயாடிக் கொடுத்ததோடு வைத்தியம் முடிந்துவிட்டது. சரியாகப் போய்விடும் என்பது அக்காவின் எண்ணம்.
ஆனால், எனக்கு அப்படித் தோன்றவில்லை. அக்காவிடம் சொல்ல முடியாது. கடுப்படிப்பாள். ‘என் குழந்தை மேல எனக்கு இல்லாத அக்கறையா?’ என்பாள்.
அந்த ஜுரத்திலும் அக்ஷிதா வாசல் நோக்கி அடிக்கடி பார்வையைச் செலுத்தியதும் கண்களில் ஏமாற்றம் தெரிந்ததும் எனக்கு ஒருவிதக் குழப்பத்தை ஏற்படுத்தியது.
அவள் உதடுகள் ஏதோ முணுமுணுப்பது போல் தெரிய… உன்னிப்பாகக் கேட்டேன்.
”பப்பி… பப்பி…”
அக்ஷிதாவின் ஜுரத்துக்கான காரணம் எனக்குப் புரிந்துபோயிற்று.
பப்பி, தெரு நாய். எப்போதும் வீட்டு வாசலிலேயே கிடக்கும். அக்ஷிதா அதைப் பார்த்துக்கொண்டுதான் சாப்பிடுவாள். அவளுக்கு ஒரு கவளம், பப்பிக்கு ஒரு கவளம். இல்லாவிட்டால் அழுவாள். கிரில்லுக்கு உள்ளே நின்றுகொண்டு அந்தத் தெரு நாயைப் பார்த்துக் கையை ஆட்டுவதும். அருகே வரும் சந்தர்ப்பங்களில் உடம்பைப் பயமின்றித் தடவுவதும் அக்ஷிதாவின் வாடிக்கை.
பிடிவாதம் பிடிக்கும் சந்தர்ப்பங்களில் அந்தத் தெரு நாய் அவளது அழுகையை நிறுத்துவதால், அதற்கு பப்பி என்று பெயரிட்டு நானும் சிறிது அதனுடன் நெருங்கியிருந்தேன்.
சில தினங்களுக்கு முன் பப்பிக்கு உடம்பெங்கும் ஒரு மாதிரி சொறி போலத் தெரிந்தது. வாயிலிருந்து நீர் ஒழுகியது.
நான் இல்லாத சமயத்தில் அக்கா ப்ளூ கிராஸூக்கு போன் செய்திருக்கிறாள். அவர்கள் பப்பியைத் தூக்கிச் சென்றுவிட்டார்கள். அந்த ஏக்கம்தான் குழந்தைக்கு ஜுரம்.
ப்ளூ கிராஸில் ஏகப்பட்ட நாய்கள் கவனிப்பில் இருந்தன. தெரு நாய்களுக்கு ஏதாவதென்றால் அவை செத்தொழிவதுதான் வழக்கம் என்பதை மாற்றிய மகத்தான சேவையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது.
ஒவ்வொரு நாயாகப் பார்த்தேன். பப்பியைக் காணவில்லை.
”அடையாளம் ஏதும் வெச்சுக்க மாட்டோம் மேடம். வைத்தியம் முடிஞ்சதும் அவிழ்த்து விட்டுடுவோம். சில நாயிங்கதான் இங்கேயே சுத்திச் சுத்தி வரும்” என்றார் ஓர் அலுவலர்.
எனக்கு வருத்தமாக இருந்தது. பப்பி இருந்தால் அக்ஷிதாவை அழைத்து வந்து காட்டலாம் என்று நினைத்திருந்தேன். அடையாறு எங்கே, விருகம்பாக்கம் எங்கே? பப்பியை எங்கே தேடுவது?
செல்போன் ஒலித்தது. எடுத்தேன். அக்கா.
”உடனே வீட்டுக்கு வா… அக்ஷிதாவுக்கு ஜுரம் ஜாஸ்தியா இருக்கு. ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணணும்.”
ஆட்டோ பிடித்து விரைந்தேன்.
அபார்ட்மென்ட் வாசலில் இறங்கி வீட்டை நோக்கி வேகமாக விரைந்தேன். வாசலைப் பார்த்த எனக்கு ஆனந்த அதிர்ச்சி
வாசல் கிரில் கதவில் கால்களை வைத்தபடி பப்பி.
நான் பார்த்த விநாடியே அக்காவும் அதைப் பார்த்திருக்க வேண்டும். சத்தம் போட்டாள்.
”ரேணு, அந்தக் குச்சியை எடு இந்தச் சனியனாலதான் பாப்பாவுக்கு ஜுரம். இது உடம்புலேர்ந்துதான் ஏதோ பரவி இருக்கு.”
நான் வீட்டுக்குள் நுழைந்தேன். படுத்திருந்த அக்ஷிதாவைத் தூக்கிக்கொண்டு வாசலுக்கு வந்தேன்.
அக்ஷிதாவைப் பார்த்ததும் கால்களைத் தூக்கி பப்பி கிரில்லைப் பிறாண்ட, குழந்தை முகத்திலோ கொள்ளை மகிழ்ச்சி.
நர்ஸிங் ஹோமுக்குப் போக வேண்டி இருக்காது!
– சிறுகதை ஆக்கம் திருவாரூர் பாபு – 24th செப்டம்பர் 2008