பன்னாடை மனிதர்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 1,891 
 
 

“டேய் பன்னாட… நாஞ் சொல்லறது காதுல ஏறாதா? காத்தாலிருந்து நா என்ன சொன்ன? நீ என்ன செஞ்சிருக்கறே? அன்னாடும் இப்புடியே சொல்லிச்சொல்லி நானுந்தா ஒன்னம் எத்தன நாளைக்கு உங்கூட மாறடிப்பனோ தெரியல? ” என மிகவும் சலிப்புடன் பேசிக்கொண்டார் குப்பண கவுண்டர்.

“ஏனுங்க கவுண்டரே… எனக்கு எம்பட அப்பனாத்தா பேரே வெக்கிலேன்னு நெனைக்கிறீங்களா? எப்பப்பாத்தாலும் பன்னாட, பன்னாடைன்னே சொல்லீட்டு கெடக்கறீங்க? தென்ன மரத்துல பன்னாட இல்லீன்னா மட்டீமு நிக்காது. மட்ட நிக்கிலீன்னா தேங்காயும் காய்க்காது. அத மாதர தான் நானும். நாம்பாடு படுலீன்னா இந்த தோட்டம் வெளையாது. தோட்டம் வெளையலீன்னா நீங்க இப்புடி சோக்காலியா சுத்தீட்டு வாழ முடியாது. அதத்தெரிஞ்சுபோட்டு பேசுங்க மொதல்ல” வேலைக்கார முனியனும் தன் பங்கிற்கு முதலாளியிடம் சலித்துக்கொண்டான்.

“அட என்னப்பா நீயி. எனக்குத்தெரியாதா? சின்னப்பையன்ல இருந்து இந்தத்தோட்டத்துல எத்தன பாடு பட்டிருப்பே. நானும் உன்னைய வேறயா நெனைக்கறதில்லியே… சேரிச்சேரி மரமேறி ரெண்டு எளநியப்போடு. ஆளுக்கொன்னா குடிச்சுப்போட்டு வேலயப்பாக்குலாம். பொழுதோட வெடக்கோழியப்புடிச்சு பொசுக்கி வெய்யி. ரெண்டு நாளா கறியாச வேற வந்து தூக்கத்த கெடுக்குது. என்ற பொண்டாட்டியக்கேட்டா அந்த விரதம், இந்த விரதம்னு அன்னாடும் கோயிலயே சுத்திட்டு கத்திரிக்காய் சாம்பாறா வெச்சுப்போடறா. கம்பரசர் ரூம்லயே வெட்டி வேகவெச்சுப்போடு. உம்பட கைப்பக்குவமே வேறதான். என்ன நாஞ்சொல்லறது? ” என கூறிய முதலாளியிடம் சாடையாக முனியன் கையை மேல் நோக்கி மடக்கி காட்ட “சேரிச்சேரி. வாங்கியாறனெடு” எனக்கூறி தனது புல்லட்டைக்கிளப்பினார்.

உலகம் என்பது அண்டவெளியல்ல. அது மனித மனங்களில் அடங்கியுள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஓர் உலகத்தை தேரந்தெடுத்து வாழ்கிறான். ஒரு மனிதனுடைய உலகத்துக்கும் இன்னொரு மனிதனுடைய உலகத்துக்கும் நிறைய வேறுபாடுகளும், முரண்பாடுகளும் உள்ளன.

தான் ஏமாற்றப்படுவதைக்கூட மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு மனிதனின் உலக வாழ்வை புரிந்து கொள்ளாத இன்னொரு மனிதன் தன் உலகே சரியென்கிறான். ஒரே மாதிரியான உலகில் வாழ்பவர்கள் ஒத்துப்போகிறார்கள். 

முதலாளியும், வேலைக்காரனும் ஒரே உலகில் வாழ்கின்றனர். வேறு உலகில் வாழும் அவர்களது மனைவியர் கூட அவர்களுடன் ஒத்துப்போவதில்லை. திட்டிக்கொண்டாலும், கோபப்பட்டுக்கொண்டாலும் உணவென வரும்போது முதலாளி, வேலைக்காரர் வேற்றுமை மறந்து விடுகிறது. இரவு கூட அதற்க்கு ஒத்துழைக்கிறது. ஆம் இரவில் அனைத்துமே ஒன்று போல் தெரிகிறது.

புல்லட் சத்தம் கேட்டவுடன் முனியனுக்கு முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி. சமையல் வாசனையை முகர்ந்ததும் முதலாளிக்கு மகிழ்ச்சி. இருவரையும் ஒன்றாகப்பார்த்ததும் தோட்டத்து கருப்பி நாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. எலும்புத்துண்டுகளுக்காக ஏங்கி குரைத்துக்கேட்டது. வாயில் நீர் வடிந்தது. படுத்தவாறே நகர்ந்து, நகர்ந்து அடுப்படி வரைக்கும் வந்து விட்டது.

பைக் பெட்டியிலிருந்து முனியன் கேட்டதை முதலாளி கொடுக்க , வாங்கிய முனியன் மறைவில் வைத்து விட்டு முதலாளிக்கு சமைத்த கோழிக்கறியை போட்டுக்கொடுக்க சுவைத்து சாப்பிட்டவர், வாயை நன்றாக வாசம் போகக்கழுவி விட்டு வீட்டிற்கு கிளம்பினார்.

முதலாளிக்கு குடிக்கும் பழக்கம் இல்லை. அசைவப்பிரியர், அவ்வளவுதான். மறைவில் வைத்ததை எடுத்து மன நிறைவாகக்குடித்த முனியன் கறியை சுவைத்து விட்டு, மீதமிருந்ததை முழுவதுமாக கருப்பி நாயின் தட்டில் போட்டுவிட்டு தடுமாறியபடி சென்று தனது குடிசை வீட்டில் உள்ள பாயில் படுத்துக்கொண்டான்.

‘வாரத்தில் ஒரு நாளாவது இப்படியிருந்தால் தேவலை’ என நினைத்தான். அவன் வாழும் இந்த உலகம் பிறர் பார்வையில் அடிமை போல் தெரிந்தாலும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது!

ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *