பணக்கார இசக்கி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 7,595 
 

இசக்கிக்கு கல்யாணமாகி மூணு வருசமும் ஆயாச்சி. அவன் நடுத்தெரு பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது வாங்கிய முட்டைகள் பற்றி வெட்கம் எதுவும் அப்போது வந்துவிடவில்லை அவனுக்கு.

ஆனா, இலஞ்சியில் அடுத்து ஒரு குட்டி மச்சான் பிறந்திருக்கான்னு ‘ட்ரங்கால்’ வந்ததும்தான் ஒரே வெட்கக் கேடாகப் போய்விட்டது. பிறந்திருப்பது பத்தாவது பிள்ளை. இதைச் சொல்வதற்கு ட்ரங்கால்..! சும்மா இருக்கமாட்டார் போலிருக்கிறது இசக்கியின் மாமனார். வாரத்தில் ஒருநாள் முழுக் கோழியே சாப்பிட்டு வைக்கிறார் மனுஷன்..! அவ்வப்போது குளத்து நண்டுகள்வேறு… சும்மாயிருக்க முடியுமா?

“அதுக்காக ஓங்க அய்யாவை நா சும்மாயிருக்கச் சொல்லலை… அது அவரு பிரியம். ஆனா பிள்ளையை பெத்துக்காம இருக்கலாமே! அதுக்கு வழி இருக்காமே” என்று இசக்கி அடக்கமாட்டாமல் கோமதியிடம் ஒருநாள் கேட்டுவிட்டான். ஏன்னா, பாளையங்கோட்டையில் ஏற்கனவே பேச்சு வந்து விட்டது.

“பார்றா, இங்க மாப்ளை ஒண்ணுக்கே ததிங்கினத்தோம் தாளம் போட்டுகிட்டு கெடக்காரு; அங்க மாமனார் ‘கோல் மேல கோல்’ போட்டுக்கிட்டே இருக்காரு… டசன் போடாம விடமாட்டார் போலிருக்கு..” அப்படீன்னு சொல்லிச் சிரித்தார்கள்.

எந்தக் கவலையும் இல்லாமல் இருந்த இசக்கிக்கு இப்படியொரு கவலை வந்துவிட்டது. இந்தக் கவலையை மறக்க அடிக்கடி கொல்லம் பக்கம் போய் வியாபார சோலிகளில் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பித்தான். அப்போதுதான் பாளையங்கோட்டை வியாபார உலகத்தில் இசக்கி ரொம்பப் பெரிய திருப்பம் ஒன்றை ஏற்படுத்திவிட்டான்.

மலையாளத்தில் ரப்பர் தோட்டங்கள் இருக்கிற பக்கம் போய் இசக்கி ஒருநாள் சுற்றிக் கொண்டிருந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் மரங்களில் இருந்து உதிர்ந்த ரப்பர் காய்கள் காய்ந்து, தரை பூராவும் பரந்து குவிந்து கிடந்தன. தோட்டத்து முதலாளிகள் அதையெல்லாம் அள்ளி எங்கே கொண்டுபோய் போடுவார்கள்? அதனால் அங்கேயே அப்படியே கிடந்து கிடந்து ரப்பர் காய்கள் மக்கிப்போய் கொஞ்ச நாளில் மண்ணோடு மண்ணாகிவிடும்.

வெறுமனே அந்தக் காய்ந்த ரப்பர் காய்களை காலால் எத்தி எத்தி மிதித்துக்கொண்டே போன இசக்கி, திடீர்னு குனிஞ்சி சும்மா ஏழெட்டு ரப்பர் காய்களை எடுத்தான். காய்களை ஆட்டிப் பார்த்தான். காய்ந்திருக்கும் உட்பகுதி ஒரு தனிப்பகுதியாக உள்ளே குலுங்கியது. மறுபடியும் மறுபடியும் ஆட்டிப் பார்த்தான். உள்ளே எப்படி இருக்கிறதென்று பாக்கலாமேன்னு பெரிய கல் ஒன்றைத் தேடியெடுத்து உடைத்தான். ரப்பர்காய் உடைந்தது. உள்ளே இருந்த பகுதியை உள்ளங்கையில் திரட்டி நன்றாகப் பலதடவை திருகிவிட்டுப் பார்த்தான். கையில் லேசாக எண்ணைய்ப் பசை ஒட்டியது. அதை முகர்ந்து பார்த்தான். அவனுடையை மூளையில் ஏதோவொரு யோசனை பலமாக ஓடியது.

ரப்பர் தோட்டத்துக் காவலாளியிடம் சொல்லிவிட்டு இரண்டு பெரிய பை நிறைய அந்தக் காய்களை அள்ளிப் போட்டுக்கொண்டு யாரிடமும் அதைப்பற்றி மூச்சு விடாமல் பாளையங்கோட்டைக்கு எடுத்து வந்துவிட்டான். எண்ணை ஆட்டுகிற தெரிந்தவரின் ஆயில் மில்லுக்குப் போனான். செக்கில் திருகும் பையன்களிடம், உடைத்துச் சேகரித்திருந்த ரப்பர் காய்களின் உட்பகுதியைக் கொடுத்து ஆட்டிப் பார்க்கச் சொன்னான்.

இசக்கி எதிர் பார்த்தபடியே எண்ணெய் ஜோராக இறங்கி வந்தது. ரகசியமாக அந்த எண்ணையை எடுத்து வந்து, அதன் சேம்பிளை மெட்ராஸில் இருக்கும் சோதனை செய்கிற இடத்துக்கு அனுப்பிவைத்தான். பதினைந்து நாளில் அறிக்கையை அனுப்பி வைத்து விட்டார்கள். அந்த அறிக்கையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுரைக்குப் போனான். அங்கு சலவைக்கு சோப் தயாரிக்கும் ரொம்பத் தெரிந்த ஒருத்தரைப் போய்ப் பார்த்தான். இசக்கியை அவர் மரியாதையுடன் உட்காரவைத்து உபச்சாரம் செய்தார். அவர் மலிவான சோப் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர்.

“சொல்லுங்க இசக்கி அண்ணாச்சி, என்ன சோலியா வந்தீங்க? லேசுல நம்ம கடைக்கு வரமாட்டீங்களே?”

“நா ஒரு புது எண்ணைய் ஒண்ணு தாரேன்… ஒங்க சோப்பு செய்யறதுக்கு அதைப் பயன்படுத்திப் பாத்து அது எப்படி வருதுன்னு எனக்கு நீங்க சொல்லணும்..”

“இவ்வளவுதானே? தாராளமா செய்யலாமே… ரெண்டு நாள் கழிச்சு போன் பண்ணுதேன்.” இசக்கி தந்த எண்ணையை வாங்கி வைத்துக்கொண்டார்.

இரண்டு நாளில் போன் வந்தது.

“சோப்பு ரொம்ப டாப்பா வந்திருக்கு. அது என்ன எண்ணைய்; வெலை விவரமெல்லாம் என்னங்கிறதை வெவரமா சொன்னீங்கன்னா, மொத்தமா ஆர்டர் கொடுக்க தோதா இருக்கும்.”

“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. இனிமேத்தேன் அதை வியாபார ரீதியா செக்கில் ஆட்டிப் பாக்கணும்”

“இது என்ன எண்ணை அண்ணாச்சி?”

“கொஞ்சநாள் கழிச்சி சொல்றேனே…”

“இந்த எண்ணை இதுவரைக்கும் ஒருத்தரும் பாக்காத எண்ணைய்.”

“ஆமாங்க அண்ணாச்சி. ஒரு குஞ்சுக்குக்கூடத் தெரியாது இது என்னன்னு.”

“அப்ப இதை எங்களுக்கு மட்டுதான் நீங்க சப்ளை பண்ணனும்..”

“கண்டிப்பா அண்ணாச்சி.”

“அப்ப சட்டு புட்டுன்னு எண்ணையை ஆட்டி எங்களுக்கு மட்டும் சப்ளை பண்றதுக்கான வழியைப் பாருங்க… நாங்க உடனே சலவை சோப் மார்க்கெட்டை ஒரு கலக்கு கலக்கிப்புடுவோம். அதுக்குத்தேன்.”

மறுநாள் காலை இசக்கி மலையாளத்துக்கு ரயிலேறிவிட்டான்.

ரப்பர் தோட்டத்து முதலாளிக்கு ரொம்ப ஆச்சர்யமான ஆச்சர்யம். இப்படி ஒரு கோட்டி பிடித்தவன் வந்து காய்ந்து உதிர்ந்து கிடக்கும் ரப்பர் காய்கள் பூராவையும் சல்லிக்காசு கேட்காமல் லாரி கொண்டாந்து எடுத்துத் துப்புரவாய் சுத்தம் பண்ணித் தருவதாய் சொல்லுகிறானே..!

“தாராளமா அள்ளிட்டுப் போ…” என்றான்.

உடனே இசக்கி பாளையில் பெரிய கிட்டங்கியை வாடகைக்குப் பிடித்து ஏற்பாடு செய்துவிட்டு, முதலில் ஒரு பெரிய ரப்பர் தோட்டத்தில் கிடந்த காய்களை மட்டும் துப்புரவாய் எடுத்துவர திட்டம் போட்டான். அங்கேயே நாலு லாரிகள் ஏற்பாடு செய்து, சுற்றி இருக்கும் கூலியாட்களையும் அமர்த்தி நாலு லாரி நெறைய ரப்பர் காய்களை ‘லோட்’ பண்ணிக்கொண்டு நடுச்சாமத்தில் பாளைக்கு வந்து சேரும்படியாய் பார்த்துக்கொண்டான். லாரிகளிலிருந்து ரப்பர் காய்களை இறக்கும்போது ஒரு ஆள்கூட அதைப் பார்க்கலைன்னுதான் இசக்கி நினைத்தான். ஆனால் அது முடியுமா? அவ்வளவு பயல்களுக்கும் எலிக்காது..!

விடிஞ்சி கடை திறக்கிறபோதே பாளை வியாபாரிகளுக்கு மூக்கு வியர்த்து விட்டது. மிளகாய் கிடங்கியில் போய் நின்றுகொண்டு தும்மக்கூடாதுன்னு சொல்றதும், பாளை வியாபாரிகளுக்குத் தெரியாமல் ஒரு தொழில் செய்ய வேண்டும்னு நினைக்கிறதும் ஒண்ணுதான்! அதவும் இல்லாமல் இருபது பொம்பளைங்களைக் கூட்டிக்கொண்டு வந்து காய்களை உடைத்து உள்ளே இருக்கும் பகுதியைப் பிரித்தெடுக்க தினக்கூலி முறையில் ஏற்பாடும் செய்துவிட்டு யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதுன்னு நெனச்சா அதென்ன நடக்கப்போற காரியமா?

காயை உடைக்க வந்த சில பொம்பளைங்களுக்கும் அந்தக் காயை எங்கேயோ பார்த்திருக்கிற மாதிரி தெரிஞ்சாலும் இன்ன காய்னு தீர்மானமா சொல்லத் தெரியல.

இசக்கி ரொம்ப சுறுசுறுப்பா ஒரு ரோட்ரி ஆயில் மில்லை லீசுக்கு எடுத்தான். மலையாளத்து உடைத்த ரப்பர் சரக்கை செக்ல போட்டு ஆட்டியபோது எண்ணைய் தாரை தாரையா கொட்டிணப்ப இசக்கிக்கு கண்ல கண்ணீர் வந்திருச்சி. எவ்வளவு பெரிய வெற்றி! எத்தனை பெரிய சந்தோசம். ஆசையோட இசக்கி அந்த எண்ணையை தொட்டுத் தொட்டு உடம்பெல்லாம் தடவிக்கிட்டான்.

எண்ணை பூராவையும் பேரல் பேரலா பிடிச்சி நிரப்பி ‘டைட்டா’ சீல் வெச்சி மூடினான். மதுரை சோப்பு கம்பெனிக்கு அன்றே அனுப்பிவைத்தான். அவர்களும் புதுசா ஒரு ட்ரேட்மார்க் பெயரை வைத்து புத்தம்புது சலவை சோப்பை மதுரை சித்திரைப் பொருட்காட்சியில் மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள். ‘விலையில் குறைந்தது, தரத்தில் உயர்ந்தது’ என்று பொருட்காட்சி ஸ்டாலில் ரெண்டு மூணு பொம்பளைப் பிள்ளைகளை உட்காரவைத்து மைக்கில் அறிவிக்கச் செய்தனர். சேல்ஸ் பிய்த்துக்கொண்டு போனது. வரலாறு காணாத சேல்ஸ்.

எங்கேயாவது ஆடி மாசக் காத்தாடி ஆகாயத்தை விட்டு வருமா? அப்படித்தான் ஆயிடிச்சி ரப்பர் எண்ணையில் இசக்கிக்கு கிடைத்த வரும்படியும். தினம் அஞ்சு லாரி, ஆறு லாரின்னு ஓசியிலேயே ரப்பர் காய்களை அள்ளி வந்தான் இசக்கி. கொள்முதல் விலைதான் கிடையாதே! அதனால் இசக்கிக்கு கொள்ளைக் காசு… செமத்தியாக கல்லா கட்டினான்.

பேயறைஞ்ச மாதிரியாகி விட்டார்கள் பாளை ஆசாமிகள். பண மழையில்ல பேயுது இசக்கிப் பயவீட்ல..! என்ன, ஏதுன்னு அவர்களின் மண்டையில் ஏறுவதற்குள்ளேயே இருநூறு லாரி லோடு கொண்டாந்திட்டான் இசக்கி. மலையாளத்து ரப்பர் தோட்டம் பூராவும் சுத்தமா சவரம் செய்துவிட்ட மாதிரி ஆகிவிட்டிருந்தது. மருந்துக்குக்கூட ஒத்த ரப்பர் காய் கிடையாது. ரொம்ப நாள் கழிச்சி விசயம் தெரிந்து மற்ற வியாபாரிகளும் ரப்பர் தோட்டங்களை நோக்கி படையெடுத்தார்கள்.

பார்த்தான் தோட்டக்காரன்… இதில் ஏதோ விசயம் இருக்கு எனப் புரிந்துகொண்டுவிட்டான். ஆதாயம் இல்லாமலா வியாபாரிகள் லாரியைப் போட்டுக்கொண்டு வருவார்கள்?

‘இனிமே துட்டு கொடுக்காமல் காய்ல கைவைக்க விடாதே’ன்னு ஆர்டர் போட்டுட்டான்கள். “ஒரு லாரிக்கு இவ்வளவுன்னு குத்து மதிப்பா ஒரு ரேட்டுப் போட்டுக் குடுக்கத் தயார்ன்னு” சொன்னார்கள் வியாபாரிகள். அவர்கள் சொன்ன ரேட்டைவிட இருமடங்குக்கு கடைசியில் ஒப்புக்கொண்டு காய்களை அள்ளினார்கள். முந்தினவனுக்குக் கெடைச்சது பிந்தினவனுக்குக் கெடைக்கலை. போட்டி ஆரம்பமானது. அவ்வளவுதான்.. வியாபாரிகளுக்கு ஒரு சங்கமே வந்துவிட்டது. அந்தச் சங்கத்துக்கான தலைவர் பதவி இசக்கிக்கு தேடாமல் வந்து சேர்ந்தது. ‘ரப்பர் எண்ணையின் தந்தை’ என்று இசக்கிக்கு பெயரும் வந்துவிட்டது. ஆனால் அதுவே பலருக்கு இசக்கியை மறைமுகமாக நக்கல் செய்வதற்கு தோதாகி விட்டது.

“ஆமா, இவரால ரப்பர் எண்ணைக்குத்தேன் தந்தையாக முடிந்தது.”

“நீங்க ஒண்ணு, இதுக்காவது ‘தந்தை’ ஆனாரே இசக்கி அண்ணாச்சி.”

இசக்கிக்கு கல்யாணமாகி நாலு வருசம் ஓடிவிட்டது. பூரணியின் மனசிலும் தனக்கு இன்னும் பேரன் பேத்தின்னு ஒரு பிள்ளை வீட்டில் தவழ்ந்து விளையாடறதுக்கு இல்லையே என்ற கவலை மெள்ளமெள்ள ஏற்பட ஆரம்பித்திருந்தது. நாலு அலமாரி நெறைய ரூவா நோட்டு அடுக்கி அடுக்கி வைத்து என்ன செய்ய? அதையெல்லாம் ஆண்டு அனுபவிக்க பிள்ளைக் குட்டிகள் இல்லையே. ‘பிள்ளை இல்லாதவங்க வீடு’ன்னு பேரு வந்திடுமே? இப்போதே முதுகுக்குப் பின்னால் பேசுகிறார்கள். நாளைக்கு முகத்துக்கு நேராகவே பேச ஆரம்பிப்பார்கள்.

கோமதி கர்ப்பம் தரிக்க பூரணி அவளுக்குத் தெரிந்த கைவைத்தியம் எல்லாவற்றையும் செய்து பார்த்தாள். புங்கன் வேரை நல்லா தண்ணீர் விட்டு அரைத்து மாதவிலக்கான மூன்றாம் நாள் சாப்பிட கோமதிக்கு கொடுத்துப் பார்த்தாள். அரச மரத்தை சுத்தச் சொன்னாள். எல்லா விரதமும் இருந்து பார்க்கச் சொன்னாள். அவர்களை கூட்டிகிட்டு ராமேஸ்வரம், திருப்பதி போய்வந்தாள். ஒரு பிரயோஜனமும் இல்லை. மாரியாத்தா கண்ணைத் தொறக்கலை. பூரணி மாதிரியான ஒரு நல்ல மாமியாருக்காகவாவது மாரியாத்தா கண்ணைத் தொறக்க மாட்டாளா..?

பூரணிக்கு நேர் எதிரான மாமியார்களும் ஓலகத்ல அநியாயத்துக்கு இருக்கிறார்களே. ஏன், அவள் வீட்டிற்கு எதிர்த்த வீட்டிலேயே ஒரு மாமியார் இருக்கிறாள். தனக்குப் பேரன் பேத்தி இல்லாவிட்டால்கூட பரவாயில்லை; ஆனால் மருமகள் மகனுடன் ஆனந்தமாக இருந்து விடக்கூடாது. இன்னிக்கி மாசப் பிறப்பு; பெளர்ணமி; அமாவாசை; சனிக்கிழமை; சங்கட சதுர்த்தி என்று ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு எதையாவது சொல்லி மருமகளுக்கு ஞாபகப் படுத்திக்கிட்டே இருப்பா அந்த மாமியார்க்காரி.

அவ்வளவு சொல்லி அனுப்பியும் மாமியார்காரிக்கு மனசுக்குள் சந்தேகம். தான் சொன்னதையும் மீறி இதுக எதையாவது செய்து வைத்திருக்குமோன்னு..! அதனால் மருமகள் காலையில் உறக்கம் கலைஞ்சி எந்திருச்சி வரும்போது அவளையே வைத்த கண் வாங்காமே பார்ப்பா..!

“எதுக்கும் தலைக்கு குளிச்சிட்டு அடுப்பத் தொடுடியம்மா..” கழுத்தை ஒரு நொடிப்பு நொடித்தபடி சொல்வாள்.

சொல்றது அத்தனையையும் சொல்லிப்புட்டு, காலையில் இப்படிவேறு சொன்னா எந்த மருமகள்தான் சும்மா இருப்பா?

“இனிமே நெதமும் ராத்திரி நானும் ஒங்ககிட்டேயே பாயைப்போட்டு படுத்துக்கிறேன் போதுமா?” என்று ஒருநாள் வயிறு எரிஞ்சு கேட்டுட்டா.

எதிர்த்த வீட்டில் என்னமோ கதை இப்படிப் போகிறது. ஆனால் பூரணி போன்ற நல்ல மாமியர்களுக்கு கடவுள் ஏனோ செவி சாய்ப்பதில்லை. கோமதி என்கிற பேரட்ல பிள்ளைக் குட்டிகள் என்கிற பக்கத்தில் பெரிசா ஒரு முட்டையைத்தான் போட்டு வைத்துவிட்டான் கடவுள்..!

இது எப்படியோ இசக்கியுடன் படித்த பவளக்காரனுக்குத் தெரிந்துவிட்டது. “அந்தக் காலத்ல இசக்கி படிக்கும்போது முட்டைதேன் வாங்குவான். அதேன் வாழ்க்கை என்கிற பெரிய பள்ளியூடத்லேயும் முட்டை வாங்கறான்” என்று நாலு பேரிடம் பவளக்காரன் நக்கலாகப் பேசியதாக இசக்கிக்கு சேதி வந்தது.

“நீங்க போயி அந்தப் பவளக்காரனை நல்லா சுடச்சுட நாலு வார்த்தை கேட்டுட்டு வாங்க அண்ணாச்சி. அப்பத்தேன் அவன் வாய் அடங்கும். ரொம்பக் கொழுப்பு புடிச்ச பய” என்று நான்குபேர் இசக்கியைச் சுற்றி நின்று ‘கொலை’ அடித்தார்கள். ஆனால் இசக்கிதான் பேசாமல் இருந்துவிட்டான்.

அவனுடைய அபிப்பிராயம், ‘பவளக்காரன் சொன்னது நெசந்தான்.’

“இசக்கி அண்ணாச்சியா இருந்ததால விட்டாக… இன்னொருத்தனா இருந்திருந்தா இந்நேரம் பவளக்காரனோட எலும்பை எண்ணியே பாத்திருப்பாக…” என்றபடி ஒரு ஜால்ரா கும்பல் இசக்கியை சுற்றி நின்றது.

பணக்காரனாகி விட்டால் இப்படி ஒரு கூட்டம் கூப்பிடாமலே வந்து நிற்கும். அதுவும் இசக்கி இப்ப என்ன சாதாரணமான பணக்காரனா? பெரும் பணக்காரன்..! ரப்பர் எண்ணையில் அவன் சம்பாரித்த பணமே இன்னும் நாலு தலைமுறைக்குப் போதும்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “பணக்கார இசக்கி

  1. தல செமையா இருக்கு உங்க சிறுகதை தொடர்.இசக்கி அண்ணாச்சி கலக்குறாப்ல.தொடருக்காக காத்திருக்கிறோம்.வாழ்த்துக்கள் மேலும் தொடருக.

    1. மிக்க நன்றி ஜாவித். நம்ம அண்ணாச்சியைப் பற்றி இன்னும் நிறைய படிங்க… தங்களின் கருத்து என்னை உற்சாகப் படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *