கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 2,873 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மச்சக்காளையால் நிம்மதியாகத் தூங்கமுடியவில்லை. ஆணியில் தொங்கிய சட்டைப்பையிலிருந்து கண்ணை எடுக்கவும் முடியவில்லை.

“என்னடா இது, பெரிய ரோதனயா இல்ல போச்சு? என்று மனசெல்லாம் சலித்துக்கொண்டாலும், கனத்துப்போன மனசு தூக்கத்தை மட்டும் அண்டவிடவில்லை.

புரண்டு புரண்டு படுத்தும் கண் இமைகள் அமட்டவில்லை.

பரோட்டாக்கடை வைத்திருக்கும் தாவூதுக்கு மச்சக்காளை வெறும் வாடிக்கையாளன் மட்டுமல்ல. இவன் தலையைக்கண்டாலே, “வா, மச்சான்! டீ சொல்லட்டா?” என்று வாஞ்சையோடு அருகே வந்து நிற்பார் தாவூது.

“முட்ட பரோட்டாவா? சாதாவாண்ணே?” என்று மாவை உருட்டி விசிறிக்கொண்டே, கனிவோடு கேட்பார் தாவூதின் மனைவி பாத்தீமா. அதற்குள் அன்றைய தமிழ் முரசைக் கொண்டு வந்து வைப்பான் கடைப்பையன். மொறு மொறு பரோட்டாவை தாளிச்சாவில் புரட்டி சுவைத்துக்கொண்டே, சூடான டீயை உறிஞ்சிக்குடிக்கும்போது மச்சக்காளைக்கு நிமிர்ந்து பார்க்கக்கூடத் தோன்றாது. அவ்வளவு ஆசையாய், அருமையாய், ரசித்து, ருசித்து சாப்பிடுவான். ஒரு சமயம் பசி கூடிப்போனால், இவன் சாப்பிடும் வேகம் கண்டு, ஒரு முட்ட பரோட்டா இவன் கேட்காமலேயே தட்டில் வந்து விழும். இவன் பசியும் ருசியும் அந்த தம்பதிகளுக்கு அப்படி அத்துப்படி. பசி மட்டுப்பட்ட பிறகுதான் பேப்பரைக் கையில் எடுப்பான். மச்சக்காளை தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்தவன். தாவூது மலேசியாவிலிருந்து இங்கு வந்து கடை நடத்துகிறார்.

அப்பொழுது பல் குத்தும் குச்சி பக்குவமாய் பக்கத்தில் இருக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழலிலிருந்து, மலேசிய சிங்கை, அரசியல் வரை, மச்சக்காளையும் தாவூதும் அப்படி அலசுவார்கள். அது என்னமோ, தாவூதைத்தவிர வேறு யாரிடமும் அரசியல் பேச மச்சக்காளைக்குப் பிடிக்காது. தாவூதுக்கும் மச்சக்காளையிடம் பேச குடும்பக்கதைகள் நிறைய உண்டு.

“மலேசியாவிலுள்ள வீட்டை விற்றுவிட்டு, இந்த கடையை எடுத்து நடத்தத் தொடங்கியதே, அப்படியாவது கொமருங்களை கரையேற்றலாமேன்னுதான். ஆனா, எங்கே இப்ப அதையும் வித்துட்டுத்தான் இந்தக்கடையையே, நடத்த முடியுது. அப்படியும் வியாபாரம் ஒண்ணும் பெரிசா சொல்லிக்கும்படியாவும் இல்ல. என்னமோ மலையைப்புரட்டி, கடலைப்புரட்டிங்கறமாதிரி, பிழப்பு ஓடுது…”

“ரொம்ப சலிச்சுக்காதே தாவூது. உனக்காவது பொஞ்சாதி, பிள்ளைங்க கூட இருக்காங்க, என் நிலமையைப்பாரு, பிரசவத்துக்கு ஊருக்குப்போன மீனாட்சி, இனி எப்ப வருதோ?

“சுகப்பிரசவம்தான்னாலும், குறைஞ்சது ஆறுமாசமோ, இல்ல ஒரு வருடமோ, மக உடம்பைத்தேத்தி, குழந்தைக்கும் பால் ஊறி, முகம் பாத்துச்சிரிக்கற மாதிரி ஆனப்புறம்தான் சிங்கப்பூருக்கே அனுப்புவாங்க. அப்புறம்தான் குடும்பம், குடித்தனம், எல்லாம். அதுவரைக்கும் இப்படிகடைசாப்பாடுதான், ஒண்டிப்படுக்கைதான். ஒரு தலையக்கிலைய வலிச்சாக்கூட ஏன்னு கேட்க நாதியில்ல, நான் யார் கிட்ட போயி சொல்ல,” பாத்திமாவுக்குப் பாவமாக இருக்கும். தாவூதுதான் தேற்றுவார்.

“அதனாலென்ன, நாங்களெல்லாம் இல்லையா? நாங்க பாத்துக்கிட மாட்டோமா? “அந்த தைரியத்துல தானே மகராசி ஊரில் நிம்மதியா இருக்கா? நேத்துக்கூட மீனாட்சி பாத்திமாவை ரொம்ப விசாரிச்சது,” “போன் நம்பரைக்குடுங்கண்ணே, மீனாட்சி கிட்ட ராத்திரி நானும் பேசறேன்,” என்று பாத்திமாவும் உருகுவாள்.

நுளம்பு இப்படிப்பட்ட இவர்கள் நட்பில்தான் நேற்று அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான சம்பவம் உள்ளே நுழைந்தது. கண்ணுக்கே தெரியாத அந்த நுளம்பு மச்சக்காளையை இப்படி அலைக்கழிக்கும் என்று அவன் கனவிலும் எண்ணவில்லை.

அன்று காலையிலிருந்தே மச்சக்காளைக்கு வயிறு சரியில்லை.

வழக்கம் போல் இரவு உணவுக்கு வந்த மச்சக்காளைக்கு பரிமாற வந்த பாத்திமாவைப் பார்த்ததும் ஆச்சரியமாகப் போய்விட்டது. இந்நேரத்துக்கு கடைப்பையன், அல்லது தாவூதுதான் கடையில் இருப்பார்கள். பாத்திமா மாலை 5 மணிக்கே வீட்டுக்குப்போய் விடுவாள். . என்னதான் கடையில் விதம் விதமாய் சமைத்து வியாபாரம் செய்தாலும், தாவூதுக்கு மட்டும் வீட்டு சமையல்தான். அதனாலேயே பாத்திமாவை மாலை நேரத்தில் கடையில் காணவே முடியாது. திகைத்துப்போய் நிமிர்ந்து பார்த்தவனிடம் இயல்பாகக் கூறினாள் பாத்திமா.

“மத்தியானமே வயிறு சரியில்லைன்னு, சரியாவே சாப்பிடலையாமே? மாமா ரொம்ப கவலைப்பட்டாரு , அதான் நீயே இருந்து சாப்பாடு கொடுத்துட்டு வான்னாரு”

“அதுக்காக, நீ, ஏம்மா…”

“அதனாலென்ன அண்ணே, எங்க அண்ணனுக்கே ஒடம்புக்கு ஒண்ணுன்னா நான் பாத்துக்கிட மாட்டேனா?தாயா புள்ளையா பழகிட்டு, இதுகூட செய்யலைன்னா எப்படி? பூண்டு ரசம் சூடா இருக்கு, பப்படம் பொரிச்சிருக்கேன், தவ் தவ்கே பெரட்டல் இருக்கு, சாப்பிடுங்கண்ணே,” தாயினும் சாலப்பரிந்து பாத்திமா சுடச்சுட பரிமாற, மச்சக்காளையால் பேசவே முடியவில்லை. அம்மாவோ, மனைவியோதான் இப்படி பத்தியமாய் அவனுக்கு உணவு படைத்திருக்கிறார்கள். இப்பொழுது இப்படி ஒரு அன்னபூரணி.

சூடாகரசமும் சாதமும் பிசைந்து, பப்படத்தைக்கடித்துக்கொண்டு, தவ், தவ்கேயையும் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டபோதே, உடம்பு நன்றாக வியர்த்துவிட்டது. உடலே லேசாகினாற்போல் வயிறு நிதானத்துக்கு வந்தது. சாப்பிட்டு முடிக்கும் தருணம் கொதிக்கவைத்த ஜீரகநீர், கைபொறுக்கும் சூட்டில் கொண்டு வந்து கொடுக்க அதையும் மடக், மடக்கென்று குடித்துவிட்டான். அவ்வளவுதான், அடுத்த சில நிமிடங்களிலேயே, உடம்பிலுள்ள வேண்டாத காற்றெல்லாம் ஏப்பமாய் வெளியேற, பிறகுதான் உடம்பு உடம்பாகியது.

அந்த சுகத்தில் நிதானமாக வீடு திரும்பிக்கொண்டிருந்த மச்சக்காளைக்கு , வழியில் மங்குஸ்தீன் பழங்களைப்பார்த்ததும் வாங்கிட ஆசை வந்தது.

சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து, அவனுக்கு மங்குஸ்தீன் பழங்கள் என்றால் ஏனோ அப்படி தனிப்பிரியம். மீனாட்சிக்குப்பிடித்த ரம்புத்தான் பழங்கள் கூட அவனுக்கு அப்படி ஒன்றும் புதுமையில்லை. ஆனால் மங்குஸ்தீன் பழங்கள் எங்கு கண்டாலும் வாங்கிவிடுவான். ஒரு கொத்து பழங்கள் வாங்கிக்கொண்டு, காசு கொடுப்பதற்காக, பாக்கெட்டினுள் கையை விட்டவன், எடுக்க எடுக்க, அதிர்ந்து போனான். நான்கு 10 வெள்ளி நோட்டுகள், ஒரு ஐந்து வெள்ளி நோட்டு, 3 ஒரு வெள்ளிகள்,. ஆக மொத்தம் நாற்பத்தெட்டு வெள்ளிகள். . தான் கொடுத்தது பத்து வெள்ளி ஒற்றை நோட்டுதான் என்பதில் அவனுக்கு எந்த ஐயமுமில்லை. பிறகு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?

உள்ளங்கை நெல்லிக்கனியாய் விஷயம் புரிபட சில நிமிஷங்கள் பிடித்தது. அப்படியானால்…சந்தேகமேயில்லை, தான் கொடுத்த பத்து வெள்ளியை ஐம்பது வெள்ளியாய் நினைத்து, ஏதோ ஞாபக மறதியில் மீதம் 48 வெள்ளியாக பாத்திமா கொடுத்திருக்கிறாள்.

வீட்டிற்கு வந்து படுத்தவனுக்கு தூக்கம் வருவதே பகீரதப்பிரயத்தனமாயிருந்தது. மறுநாள் காலையில் அவன் கடைக்குப் போகவில்லை. அவ்வப்போது மச்சக்காளை அப்படி செய்வது சகஜம்தான். நேரமாகிவிட்டால், வீட்டிலிருக்கும் ரொட்டியில் பட்டர் தடவி சாப்பிட்டு, ரெடிமேட் காப்பிப்பொடியில் காப்பி கலந்து கொள்வான்.

மதியம் வேலையிடத்தில் மீனாட்சியின் தொலைபேசி வர, அப்பொழுது ஸ்டோர் ரூமில் வேலையிலிருந்ததால், உடனே மச்சக்காளையால் பேசமுடியவில்லை . பின் மேலதிகாரிகள் எல்லாரும் போய்விட, உணவு நேரத்தில் மனைவியை அழைக்க மீனாட்சி போனை எடுக்கவேயில்லை. மீண்டும் மீண்டும் 2 முறை அழைத்தும் மீனாட்சி தொலைபேசியில் கிட்டவில்லை. மாலை அழைத்துப்பார்த்தான். அப்பொழுதும் தொலைபேசி அணைந்து கிடக்கவே அப்பொழுதுதான் அடிவயிற்றில் பள்ளம் விழுந்தது. நடு முதுகுத்தண்டு சில்லிட, மைத்துனனை அழைத்துப்பார்த்தான். அங்கும் அதே கதிதான். பொறி கலங்கிப்போனான் மச்சக்காளை. கைக்குழந்தைக்காரி, பச்சை உடம்போடு எங்கே போனாள்? அவளுக்கு என்னாயிற்று? அழைத்து அழைத்து கைவலிக்க, அப்படியே கட்டிலில் சாய்ந்துவிட்டான். எதை நினக்கவும் பயமாக இருந்தது. குலதெய்வம் கோயிலுக்கு வந்து முடியிறக்குவதாக நேர்ந்து கொண்டான். இரவு பதினோருமணிக்கு, கைத்தொலைபேசி சிணுங்க, மச்சக்காளை நடுங்க நடுங்க எடுத்தான்.

மீனாட்சியின் குரலைக் கேட்டவன், அடுத்து வந்த சேதியில் வெலவெலத்துப்போனான்.”ஆக, பாப்பாவுக்கு இப்ப ஒண்ணுமில்ல, முகம் பாத்து சிரிக்கறா? “மீனாட்சி பேசிய மற்றெதுவுமே காதில் விழவில்லை. நன்றாக இருந்த குழந்தைக்கு திடீரென்று உடம்புக்கு வந்ததேன்? குளிப்பாட்டி மடியில் போட்டு, மருந்து சேகரம் கொடுத்துக்கொண்டிருக்கும் போதே, விலுக் விலுக்கென்று கையும் காலும் இழுத்துக்கொண்டு, வாயில் நுரை தள்ளியதற்குக் காரணமென்ன? மருத்துவர் சொன்னதென்ன? மீனாட்சி பதறிப்பதறி, கண்ணீரோடு சொன்ன எந்த தகவலுமே காதில் ஏறவில்லை .” பாப்பா, பாப்பா, என்றே மனசு அரற்றியது. குழந்தை, என் பட்டு செல்லம், என் கண்ணம்மா, என் முத்து, –மச்சக்காளைக்கு மனசெல்லாம் குலதெய்வம் முத்துமாரியே கண்ணில் நின்றாள்.

காலையிலேயே குளித்து, சாமி கும்பிட்டு, பரோட்டாக்கடைக்கு முன்னால் போய் நின்ற மச்சக்காளை, “பாத்திமா,” என்றழைக்க தாவூது ஆச்சரியத்தோடு பார்த்தார்.

“இந்தா, காசு கணக்கா இருக்கான்னு பாரு! ஆமா, இப்படித்தான் வியாபாரம் பண்றதா? என்று சொந்த அண்ணனாக மச்சக்காளை அதட்ட, “அட, உங்ககிட்டேதான் கொடுத்துப்புட்டு, வீடெல்லாம் தேடினேனா? அதனாலென்ன, எங்கண்ணன் கிட்டெ இருந்தா என்ன? எங்கிட்டே இருந்தா என்ன?” என்று பாத்திமா சிரிக்க, எப்படி சமாளிக்கறா பாரேன், என்று தாவூது கண்சிமிட்டினார், “உழைச்சு சம்பாதிச்ச காசு எப்படியும் நம்ம கிட்டே வந்துடும்னு எனக்குத்தெரியாதாக்கும்,” என்று பாத்திமா சிணுங்க.

சுளீரென்ற வலியில் ஒருவினாடி தடுமாறிப்போனான் மச்சக்காளை, “ரெண்டு முட்ட பரோட்டா போடும்மா,” என்று உரிமையோடு பாத்திமாவிடம் சொன்ன நிமிடம், வெளியே சிங்கப்பூரின் அடைமழை சோவென்று பொழியத்தொடங்கியது.

– சூரிய கிரஹணத்தெரு, முதற் பதிப்பு: 2012, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *