நீர்க்குமிழி!

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2013
பார்வையிட்டோர்: 10,694 
 
 

தரகர் தந்திருந்த ஃபோட்டோக்களில் இருந்த பெண்களில் பெரும்பாலானவர்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும், எந்தப் பெண்ணின் மீதும் மனசு ஒன்றாமல் மிகுந்த சலிப்பும், அதிருப்தியுமே உண்டாகியிருந்தது சின்ராசுக்கு.

நீர்க்குமிழிகோபத்தில் அள்ளிப் போட்டவையில் கையிலிருந்து நழுவி விழுந்த ஃபேன் காற்றினால், மெதுவாக அசைந்தபடியிருந்த அந்த ஃபோட்டோவை எடுத்து, வைத்த கண் மாறாமல் பார்வையில் மேய்ந்த அவர், சட்டென்று முகத்தைத் திருப்பி, தரகரிடம் கேட்டார். “யோவ்… பலராமா.. யாருய்யா இந்தப்புள்ள? ஏஞ் சின்ன மகன் மாடசாமிக்கு ரொம்ப பொருத்தமாயிருப்பா போலிருக்கே. ஜீன்ஸ் பேண்ட் – டீ சர்ட் போட்டுக்கிட்டு ரொம்பக் கச்சிதமா இருக்காளே. மும்பையில எஞ்சினீயர் வேல பாக்குற அவன் இப்படி மார்டனா இருக்குற பொண்ணுதான் வேணும்னுட்டு ஒத்தக் கால்ல நின்னுட்டிருந்தான். எனக்கும் அதுதாஞ் சரின்னுப்பட்டது’ – முதுமைச் சுறுக்கங்கள் நிறைந்த முகத்தில் மின்னல் கீற்றாகச் சந்தோஷ ரேகைகள் நெளிந்தோட கூறியவர், “நல்லவேள, என் மூத்த மகன் கேசவனோட பொண்டாட்டி கோமதிகணக்கா சுத்த பட்டிக்காட்டு ஜென்மந்தான் அமைஞ்சிருமோன்னு பயந்துட்டேன்,’ என்றார்.

அருகில் உட்கார்ந்திருந்த பலராமனுக்கு, அவர் அப்படிப் பேசியது மனத்தைச் சலனப்படுத்தியது. “நீங்க கைல வெச்சிபருக்குற அந்த ஃபோட்டோவ்ல இருக்குற பெண்ணோட பேரு தீபிகா. மதுரைக்குப் பக்கத்துல இருக்குற மேலூர்தான் பூர்விகம். அம்மா ஹை-ஸ்கூல் டீச்சர், அப்பாவுக்கு பேங்க் உத்தியோகம். இந்தப் புள்ள எம்.பி.ஏ. முடிச்சிட்டு அமெரிக்காவுல கார் தயாரிக்கிற கம்பெனி ஒன்ல நல்ல வேலையில் இருக்குது. மாசச் சம்பளம் ரெண்டு லட்சம் ரூவாயத் தொடும். இப்பக்கூட ரெண்டு மாச லீவுல ஊருக்குத்தான் வந்திருக்கு. புடிச்சிருந்தா சொல்லுங்க. போயி பொண்ணு கேட்டு முடிச்சிடலாம்,’ என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தவர், அதே வேகத்தில் “ஆமா, ஒங்க மூத்த மருமகள் கோமதி நல்லாத்தானே இருக்குது. எதுக்கு எப்போ பாத்தாலும் சகட்டுமேனிக்கு அந்தப் புள்ளயவே நாக்கால தாளிச்சிட்டு இருக்கீங்க?’ என்று போலிப் புன்னகையுடன் அதிருப்தி மேலிடக் கேட்டார்.

“அவளப் போயி நல்லவள்ன்னு சொல்லதீரும். எம் மகனை எப்டியோ மயக்கிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் வாழ்க்கையை வறுமையில் தள்ளிட்ட பாவி அவ. அது மட்டுமல்லாமெ, பால்வாடியில் வேலைக்குச் சேர்ந்து, யாராரோ பெத்துப் போட்ட நண்டு சுண்டக்காப் பசங்களுக்கெல்லாம் மூக்கச் சிந்திவுடறது; ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போனா கழுவி வுடறதுன்னு ஏதேதோ வேலையைச் செஞ்சுக்கிட்டு… ச்சீய்…! நெனச்சாலே கொமட்டிட்டு வருதுய்யா…’ என்று ஆவேசமாகத் திட்ட ஆரம்பித்தவர், மீண்டும் அந்த அமெரிக்க ஃபோட்டோவையே கண்களால் மையங் கொண்டு மேய ஆயத்தமானார்.
இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் அணிந்தும் தலைமுடியைத் தோள்பட்டையளவுக்கு பாப் கட்டிங்காக வெட்டிக் கொண்டு பவ்யமாகப் புன்னகைத்தபடி காட்சி தந்த அந்தப் பெண்ணின் தோற்றம், அவரது பார்வையை நகர்த்த விடாமல் நங்கூரமிட்டது.
“யோவ்… தரகு, இந்தப் பொண்ணு பட்டணத்து வாழ்க்கைக்குத் தகுந்தாப்ல என் பையன் எதிர்பார்த்த மாதிரியே இருக்கா, நாளைக்கே இவுங்க வீட்டுக்குப் போயி கல்யாணப் பேச்சுவார்த்தையை ஆரம்பிச்சுடலாம்’ என்றார்.
அப்போதுதான் சமையலறைக்குள்ளிருந்து காபி தம்பளர்களுடன் அவர்களின் பக்கத்தில் வந்து நின்ற சின்ராசுவின் மனைவி யசோதா, “இதுதா நீங்க ரெண்டு பேரும் பேசிட்டிருந்தா அமெரிக்கா பொண்ணா?’ என்று கேட்டுக் கொண்டே அந்த ஃபோட்டோவை வாங்கிப் பார்த்து, “ம்…ம்…ம்… இவதேன் தரகரய்யா ஏம் பையனுக்கு நூத்துக்கு நூறு பொருத்தமாயிருப்பா சட்டுன்னு பேசி முடிச்சிடலாம்’ என்று அருள்வாக்கு தோரணையில் திண்ணமாய்க் கூறிவிட்டு மறுபடியும் சமையலறைக்குள் நுழைந்தாள்.

“அப்போ, நாளைக்கு இந்தப் புள்ளையப் பொண்ணு பாக்க நீங்க வர்றதா இப்பவே அவுங்க அப்பா, அம்மாவுக்கு தகவல் சொல்லிடுறேன்.’ இரண்டு கைகளைக் குவித்துக் கும்பிட்டவாறு வெளியேறினார் தரகர் பலராமன்.

சின்ராசின் மனத்தில் றெக்கை முளைத்தது. மகன் மாடசாமியை செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டார். “அடேய் மாடசாமி, ஒனக்கு நாளைக்கு மேலூர்ல போய் பொண்ணு பாக்கப் போறம்…’ என்று பேச்சை ஆரம்பித்தவர், அந்தப் பெண்ணை பற்றிய அனைத்த விவரங்களையும் கூறிவிட்டு, “நீயும், நானும் ஆசைப்பட்டது கணக்காவே நல்ல மார்டனாவேதான் அந்தப் புள்ள இருக்கா,’ என்று முடித்தார்.

“ஏனுங்க… இந்த புள்ள நமக்கு மருமவளா வந்துட்டா, நம்பளையும் அமெரிக்காவுக்கெல்லாங் கூப்பிட்டுப் போவா இல்லீயா…’ ஆவலும் தாவலுமான குரலோடு அவரது அருகில் வந்துநின்றபடி கேட்டாள் யசோதா.

“அதேநேரம்; சமையலுக்கு இரவல் கொத்தமல்லித் தழை வாங்கிப் போவதற்காக வீட்டுக்குள் நுழைந்து யசோதையின் அருகில் வந்த எதிர்வீட்டு உறவுக்காரப்பெண் ஒருவள், அவளது கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க பெண் தீபிகாவின் ஃபோட்டோவைப் பார்த்து, என்னங்க பெரியம்மா… தரகரு ஒங்களுக்குத் திருப்தியா. நீங்க தேட்னாப்லயே பொண்ணா காட்டிட்டாரு போல்யிருக்கு…’ மெல்லிய புன்னகையுடன் கேட்டாள்.

“ஆமாடியம்மா!’ என்று பதிலுக்குப் புன்னகைத்தவாறு பல்லிளித்தாள் யசோதா.

அதுவரையிலும் எந்த எதிர்த்த வீ“டுப் பெண்ணின் இடுப்பில் அமர்ந்தபடி ஃபோட்டோவின் மீதே பார்வையை அலையவிட்டிருந்த அவளது குழந்தை, இரண்டு கைகளையும் முன்னுக்கு நீட்டியவாறு, “ம்…ம்…மா, அங்கிள்!’ என்று கூற… அவளுக்கு க்ளுக்கென்று சிரிப்பு வந்து விட்டிருந்தது. “அது அங்கிள் இல்லடா; ஆன்ட்டி!’ என்றவாறு குழந்தையின் கன்னத்தில் கையால் தட்டி சின்ராசுவைப் பார்த்து, “இந்த ஃபோட்டோவ்ல இருக்கற ஆடம்பரத்துக்கும், ஒங்க மருமக கோமதியோட அடக்கத்துக்கும் நூறு பர்சன்ட் வித்தியாம் இருக்கும் போல. கோமதி ரொம்ப சிம்பிள்..’ என்று இயல்பாக – அதே சமயம் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளில் கூறினாள்.

சின்ராசு சட்டென்று முகம் இறுக்கமானார். சட்டென்று எழுந்தவர், “அந்த வெளங்காத வெளக்கமாறு கோமதியப் பத்தி புகழ் பாட்றதாயிருந்தா இங்க வரக்கூடாது. மொதல்ல போ வெளீல!’ என்று கனத்த உருவத்தின் தசைகள் குலுங்க அந்தப் பெண்ணைப் பார்த்து தடித்த வார்த்தைகளில் சினந்தார்.

சின்ராசுவின் மூத்த மகன் கேசவனும், கோமதியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். அவனுக்காக வசதியான இடங்களில் பெண் பார்த்துக் கொண்டிருக்க, தன்னோடு நூற்பாலையில் மெஷின்களைச் சுத்தம் செய்கிற தொழிலாளியான அவளைக் காதலித்து, நண்பர்கள் உதவியுடன் கோயில் ஒன்றில் வைத்துத் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்தபோது, உறைந்து போனார் சின்ராசு. “எங்கள இப்படி அசிங்கப்படுத்திட்டியேடா. இப்டி மூணு வேளக் கஞ்சிக்கே மூச்சுத் தெணர்ற, அன்னாடங்காட்சியப் புடிச்சிட்டு வந்து நிக்கிறீயே…! இனி, ஒனக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கெடையாது. உள்ளவராத எங்கிட்டாச்சும் ஓடிப் போய்ரு’ என்று ஆத்திரம் தீரும் மட்டும் திட்டி அனுப்பியிருந்தார்.

அவன், காதல் மனைவி கோமதியுடன் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பக்கத்துக் கிராமத்தில் ஒரு சிறு வீட்டில் வாடகைக்குக் குடியேறிவிட்டதாகவும், கோமதி, அங்குள்ள பால்வாடி ஒன்றில் குழந்தைகளைப் பராமரிக்கிற ஆயா வேலைக்குப் போவதாகவும், அடுத்த வாரமே அவருக்குத் தகவலாய்த் தெரிவித்திருந்தது.

விசாரிப்போரிடம், “அவனுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கெடையாது என்று ஆதங்கப்படுவார்.’

அமெரிக்காவில் வேலை பார்க்கிற அந்தப் பெண்ணின் வீட்டார் ஒப்புதலை எதிர்பார்த்து, சாப்பிடக்கூட உடன்பாடின்றி ஆவல் மேலிட அலையடித்துக் கொண்டிருந்த சின்ராசுவின் மனசு, “நாளைக்கிக் காலைல ஒங்களப் பொண்ணு பாக்க வரச் சொல்லி, பொண்ணோட அம்மாவும், அப்பாவும் சம்மதிச்சிட்டாங்க’ என்று தரகர் பலராமனிடமிருந்து சாயங்காலம் தகவல் வந்த பின்பே நிம்மதியாய் அடங்கியது.

மறுநாள் காலை – அந்தப் பெண் தீபிகாவைப் பெண் பார்ப்பதற்காக சின்ராசு, யசோதா, தரகர் பலராமன் ஆகியோர் கார் ஒன்றைப் பிடித்து, மேலூர் நோக்கிப் புறப்பட ஆயத்தமாக…
வாயில் மென்று குதப்பியிருந்த வெற்றிலையின் காவி நிற எச்சிலை ப்ளிச் சென்று துப்பிவிட்டு, “ஏனுங்க ஒங்க மூத்த மகன் கேசவனையும், அவரு சம்சாரம் கோமதியையும் இந்த நல்ல காரியத்துக்கு கூப்டிருக்கலாமே… அதானே மொற?’ என்றார் தரகர்.
“சத்தே நிறுத்தம்யா. மொற மண்ணாங்கட்டின்னுகிட்டு.. இன்னொரு வாட்டி அந்த ஓடுகாலியோட பேரச் சொன்னீருன்னா, நா மனுஷனா இருக்கமாட்டே… நாரிப் போகும் நாரி!’ – கருவிழி திரட்டி எச்சரித்தார் சின்ராசு.

மூன்று மணி நேரம் எதிர்காற்றைக் கிழித்துக்கொண்டு சீரிக்கொண்டு போன அவர்கள் பயணப்பட்ட அந்தக் கார், மேலூர் வந்தடைந்து அமெரிக்கப் பெண் தீபிகாவின் வீடு இருக்கிற அந்தத் தெரு முனையில் வளைந்து அவளது வீட்டு முன்பாக நிற்க,
அதிலிருந்து சின்ராசு, யசோதா, பலராமன் மூவரும் இறங்கினர்.
பலராமன், எதிரேயிருந்த அந்தப் பெரிய வீட்டைச் சுட்டிக்காட்டி, “கீழ்த்தளத்த வாடகைக்கி விட்டுட்டு, பொண்ணு வீட்டுக்காரங்க மாடியில குடியிருக்காங்க. வாங்க மேல போவோம்’ என்றபடி முன்னால் நடந்து மாடிப்படியேறத் தொடங்க, அவரைத் தொடர்ந்து, சின்ராசுவும், யசோதாவும் படியேறி மாடித்தளத்தை நெருங்கிட-

“ச்… சீய் நாயே! நீயெல்லாம் ஒரு பொண்ணாடி? கல்யாணத்துக்கு முன்னேயே குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்கிட்டதா சொல்றீயே, ஒனக்கு வெக்கமாயில்ல? சொல்லுடீ… ஏன் இப்படிப் பண்ணின? அமெரிக்கா, பேரிக்கான்னு வேலைக்குப் போனது இதுக்குத்தானா? மரியாதையான குடும்பம். இப்படி மானத்த வாங்கித் தொலைக்கிறீயே..’

“இதப் பாரும்மா… ஒரு ஆம்பளையக் கல்யாணம் பண்ணி, அவனுக்க ரெண்டு பிள்ளைகளைப் பெத்தப் போட்டு, அதுங்களுக்குப் பாலூட்டி, மூக்குல வழியுற சளியச் சிந்திப் போட்டு, டாய்லெட் போனா கழுவி விட்டுப் பணிவிடை செஞ்சுன்னு காலம் பூராவும், ஹஸ்பண்டுக்கும் பிள்ளைகளுக்கும் வாழ்க்கைய அர்ப்பணிச்சுத் துருப்பிடிச்சுப் போறதுல என்கு உடன்பாடில்ல, முழுக்க முழுக்க சுதந்திரமா இருக்கணும். இந்த உலகத்த முழுசா என்ஜாய் பண்ணணும். உன்னப்போல அப்பாவையே செக்கு மாடு போலச் சுத்திக்கிட்டு முடங்கிக் கிடக்க என்னால முடியாது. அதனாலேதான் நான் அந்த முடிவுக்கு வந்தேன்.’

“எவ்ளோ திமிரா பேசறா பார்த்தீயா? அதுவும் இத்தனை நாளா இந்த விஷயத்தை மறச்சிட்டு, மாப்ள வீட்டுக்காரங்க வர்றாங்கன்னு தெரிஞ்சதும் சொல்றா பாரு. நீ செஞ்ச காரியத்துக்கு உன்னைக் கொண்ணாலும் என் மனசு அடங்காது..’
மனத் திதிலையும், ஒருவிதக் கலவரத்தையும் உணர்ந்த சின்ராசு, மாடிப்படியேறிய அதே வேகத்தில், “மேல போக வேணாம். அப்டியே கீழ இறங்குங்க’ என்று கட்டளையிட்டபடி, யசோதா, பலராமனை கீழே – வீதிக்குப் போகச் செய்தார். அவரது மனசெல்லாம், “ரெண்டு பிள்ளைகளப் பெத்துப்போட்டு, அதுங்களுக்குப் பாலூட்டி, மூக்குல வழியுற சளிச் சிந்திப்போட்டு டாய்லெட் போனா கழுவிவிட்டுக் காலம் பூராவும் ஹஸ்பண்டுக்கும், பிள்ளைகளுக்கும் பணிவிடை செஞ்சு துருப்பிடிச்சுப் போறதுல எனக்கு உடன் பாடில்லை…’ என்று பெற்றோரிடம் வெடித்தக் கொண்டிருந்த தீபிகாவின் வார்த்தைகள் எதிரொலித்த வண்ணமிருக்க, காருக்கு அருகில் சென்றதும் கூறினார். “டிரைவர் தம்பீ… வண்டிய நம்மூர்ப் பக்கம் கள்ளிப்பட்டிக்கு விடுங்க. என் மருமக கோமதியப் பார்க்கணும் போல ஏக்கமா இருக்கு.’

– அல்லிநகரம் தாமோதரன் (பிப்ரவரி 2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *