நீதிக்கு ஒருவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 7,755 
 
 

வாசுகி தொலைபேசியைக் கீழே வைத்த விதம், அது பல கிலோகிராம் எடை கொண்டது என்று எண்ணத் தோன்றியது.

மனைவியை அதிசயமாகப் பார்த்தார் விவேகன். எதற்கும் கலங்காத நெஞ்சுரத்தால், பல ஆண்களும் எட்ட முடியாததொரு உயரத்தை எட்டி இருந்தாள் வாசுகி. நாற்பது ஐந்து வயதுக்குள் வக்கீல், அரசியல் கட்சி ஒன்றின் பெண் பகுதி தலைவி, செனட்டர் என்று படிப்படியாக ஏறியிருந்தாள். இப்படிப்பட்டவளே அதிரும்படி அப்படி என்ன செய்தி வந்திருக்கும்?

ஆரம்பத்தில் தான் அளித்த ஊக்கத்தையும் பக்கபலத்தையும் மறந்து, இப்போதெல்லாம் தன்னை மதித்து மனைவி எதுவும் சொல்வதில்லை என்ற வருத்தம் அவருக்கு உள்ளூர உண்டு. அதை மறந்து, “யாரும்மா?” என்று கனிவுடன் கேட்டார். இப்போதாவது தன்மீது சாயமாட்டாளா என்ற நப்பாசை அக்கேள்வியில் தொக்கியிருந்தது.

உயிரற்ற குரலில் வந்தது பதில். “போலீஸ். விபத்தாம்!”

விவேகன் அதிர்ச்சியுடன் மூச்சை இழுத்துக்கொண்டது வெளியே கேட்டது. “ரவி காரை எடுத்திட்டுப் போனானா?”

அவள் பதில் சொல்வாளென்று அவர் எதிர்பார்க்கவில்லை. வேறு எதுவும் அவளை அவ்வளவு தூரம் பாதிக்காதென்பது அவருக்குத் தெரிந்த விஷயம்தானே!

ஏற்கெனவே ஒருமுறை, ‘பதினாறு வயசுதான் ஆகுது! அதுக்குள்ளே எதுக்கு இவனைத் தெருவில காரை வெச்சுக்கிட்டுச் சுத்த விடறே?’ என்று கண்டித்திருக்கிறார்.

அவரது ஆற்றாமை புரியாது, ‘ஒங்களை யாரும் கேக்கல. சும்மா இருங்க. எல்லாம் எனக்குத் தெரியும்!‘ என்று வழக்கம்போல் அதட்டிவிட்டு, பிறகு சற்றுத் தணிந்துபோய், “ரவிக்கு இருபது வயசானமாதிரி தெரியுதுன்னு எல்லாருமே சொல்றாங்க. அஞ்சு வயசுக்குள்ளேயே எல்லா காரோட பேரையும் கண்டுபிடிப்பானே! இப்ப ஓட்டத் தெரியுது. அப்புறம் என்ன?’ என்று அவர் வாயை அடைத்தாள்.

அவளைப் பொறுத்தவரையில், பெற்ற மகன் அவன் வயதுப் பிள்ளைகளைவிட சற்று மேலான நிலையில் — காரும் தானுமாய் — இருந்தால், அவனுக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்து. அத்துடன், தான் அவனுக்காகச் செலவிட முடியாத நேரத்தைப் பணத்தால் ஈடுகட்டிவிடுவது போலவும் ஆகும்.

அதன் பலன், இன்று!

`தெரியாமலா, லைசன்ஸ் இல்லாம கார் ஓட்டக்கூடாது, குறைஞ்சபட்சம் பதினெட்டு வயசாவது ஆகணும்னு சட்டம் போட்டிருக்காங்க!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் விவேகன். அதைச் சொல்லிக் காட்டுவது இந்த தருணத்தில் உசிதமல்ல என்று, திக்பிரமையாக நின்ற மனைவியின் அருகில் வந்து, அவளுடைய தோளைத் தொட்டார்.

“வாசுகி?”

“ஆஸ்பத்திரிக்குப் போகணும்,” என்று முணுமுணுத்தாள் வாசுகி.

`எனக்குக் கார் ஓட்டவும் தெரியும்!’ என்று பெருமைக்கு லைசன்ஸ் வாங்கி வைத்திருந்தாலும், கோலாலம்பூர் தெருக்களில் காரோட்டப் பயந்து, சம்பளம் கொடுத்து, டிரைவரை நியமித்திருந்தாள். ஆனால், அவன் இனி நாளை காலையில்தான் வருவான்.

“வா!” மனைவி தன்னை நாடுவது அபூர்வமாகத்தான் என்றாலும், அப்போதிருந்த சூழ்நிலையில் அதைக் குறித்து பூரிப்பு அடையத் தோன்றவில்லை அவருக்கு.

அந்த அவசரத்திலும் உடை மாற்றிக்கொண்டு, முக ஒப்பனையும் செய்துகொண்டு புறப்பட்டவளைப் பார்த்து, இவள் உண்மையாகவே மகனைக் குறித்துக் கவலைப்படுகிறாளா, இல்லை, தன்னைப் பிறர் கேலியாகப் பேச இடம் கொடுத்துவிட்டோமே என்ற தவிப்பா என்று யோசிக்க ஆரம்பித்தார். ஆஸ்பத்திரியை அடையும்வரை அதற்கு விடை காண முடியவில்லை அவரால்.

“ஸார்! இப்படி வர்றீங்களா?” சீருடையில் மிடுக்காக நின்றிருந்த அந்த போலீஸ் அதிகாரி விவேகனை அழைத்தார்.

முன்னால் வந்தது வாசுகி.

இந்த மனிதருக்கு என்ன, தன் வருவாயில் கால்பங்கு இருக்குமா? அந்த கணக்கே ஒரு புதுத் தெம்பை அளிக்க, “என்ன?” என்றாள் அதிகாரமாக.

“விபத்து நடந்தப்போ நான் அந்த சிக்னல்கிட்டதான் இருந்தேம்மா,” குரலில் குழைவு. “விளக்கு சிவப்பா மாறினப்புறம்கூட கார் நிக்காம வேகமா வந்திச்சு. எதிர்ப்பக்கம் வந்த பைக்கில மோதினதில, அதில இருந்த ரெண்டு பேர் அங்கேயே போயிட்டாங்க!”

‘எங்கே போயிட்டாங்க?’ என்று தன்னிச்சையாகக் கேட்க வந்தவள், விஷயம் விளங்க, அதிர்ந்துபோய், வாயைப் பொத்திக்கொண்டாள்.

கொலைக் குற்றம்!

“ஒங்க மகனா அந்தப் பையன்? கண்மண் தெரியாம குடிச்சிருந்தாரு. அடையாளக் கார்டு பார்த்தப்போ, வயசு…”

தான் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று, அவர் வாக்கியத்தை முடிக்குமுன்னரே வாசுகி தீர்மானித்துக் கொண்டாள். முகத்தில் ஒரு புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டாள்.

“ஸார்! ஒங்க பேரும், டிவிஷனும் சொல்றீங்களா?” விஷம் கலந்த தேனாக வந்தது அவளது குரல். “டிபார்ட்மெண்டில எனக்கு நிறைய பேரைத் தெரியும். நான் ஒரு வார்த்தை சொன்னா போதும். அந்த இடத்திலே விபத்தே நடக்கலேன்னு எழுதி, கேசை மூடிடுவாங்க!”

`அடிப்பாவி!’ இரு ஆண்களுக்கும் ஒரே நேரத்தில் தோன்றியது.

புன்னகை மாறாத முகத்துடன், வாசுகியே தொடர்ந்து பேசினாள். “ஒரு சின்ன அதிர்ச்சி வந்தாக்கூட தாங்க மாட்டான் என் மகன். அந்த சின்னப் பையனைப்போய், போலீஸ், கோர்ட்டு, அது, இதுன்னா அலைக்கழிச்சா, வீணா பயந்துடுவான்!”

அவள் பேச்சு எங்கே போகிறது என்று புரிய, ஆத்திரம் உண்டாயிற்று அதிகாரிக்கு. ஏதோ சொல்ல வாயெடுத்தார்.

வாசுகியோ, தன்பாட்டில் யோசனைகளை அள்ளி வீசினாள். “இவன் பச்சை லைட்டிலே போய்க்கிட்டு இருந்தப்போ பைக்தான் குறுக்கே வந்ததா ரிபோர்ட் எழுதிடுங்க,” என்று அவர் வேலையைச் சொல்லிக் கொடுத்தாள்.

அவர் வாயிழந்துபோய் அவளைப் பார்த்தார். `பெரிய மனிதர்கள்’ என்ற போர்வைக்குள் வலம் வருபவர்களுக்குள் இவ்வளவு சிறிய மனிதர்கள் இருப்பார்களா? ஒரு வேளை, கீழ்த்தரமானவர்கள் எதற்குமே வெட்கமோ பயமோ அடையாதிருப்பதாலேயே, தடங்கலின்றி உயர உயரப் போகிறார்களோ?

அகாலமாக, மனைவியின் நினைவு எழுந்தது. `என்னமோ, நீங்கதான் நாட்டில நீதி, தர்மத்தைக் காப்பாத்தப் பிறந்தவர் மாதிரிதான்! நம்ப பக்கத்து குவார்ட்டர்ஸிலே இருக்கிறவருக்கும் ஒங்க சம்பளம்தானே? சொந்த பங்களா, ரெண்டு டாக்ஸி வாங்கியிருக்காரு அந்தம்மா பேரில! ஒண்ணு அதிர்ஷ்டம் இருக்கணும், இல்ல, துணிச்சலாவது இருக்கணும்!’ தினமும் அவள் செய்யும் அர்ச்சனை.

இப்போது அதிர்ஷ்டம் தன்னைத் தேடி வந்திருக்கிறது!

அவர் நின்ற நிலையிலிருந்தே மனமாற்றம் உண்டாகி வருவதை உணர்ந்த வாசுகி, மேலும் தூபம் போட்டாள். “போனவங்க என்னவோ போயிட்டாங்க. அவங்க ஆயுசு அவ்வளவுதான்! அவங்க குடும்பத்துக்கு ஏதாவது குடுத்தாப் போச்சு!” கார் வசதிகூட இல்லாதவர்கள் ஏழைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டதில் பிறந்த தாராளம். “என்னைப்பத்தி ஒங்களுக்குத் தெரியுமோ, என்னவோ! `படிக்க காசில்லேம்மா!’ன்னு வரவங்ககிட்ட சுளையா ஆயிரம் ரிங்கிட் குடுக்கறவ நான். இப்ப நீங்க எனக்கு ஒரு உதவி செய்யப்போறீங்க. ஒங்களைக் கவனிக்காம விட்டுடுவேனா? ஏன் ஸார்? ஒங்களுக்கு எத்தனை பிள்ளைங்க? படிக்கிறாங்களா?”

அவர் பேசவே இடங்கொடுக்காது, தானே எல்லா முடிவையும் செய்தவளைப் பார்த்து மலைத்தே போனார் அந்த அதிகாரி. இவளை எதிர்த்து, தன்னால் வெற்றி காண முடியாது என்றவரை புரிந்தது. அதிகாரம் உள்ளவர்களைப் பகைத்துக்கொள்வது அறிவீனம்.

அறையை மறைத்துக்கொண்டு நின்றிருந்தவர் சட்டென விலகினார். “நீங்க உள்ளே போங்கம்மா,” என்று அதீதப் பணிவுடன் வழிகாட்டியவர்மேல் ஒரு கர்வப் பார்வையை ஓடவிட்டு, மகன் இருந்த அறைக்குள் நுழைந்தாள் வாசுகி.

பணத்தாலும், அதிகாரத்தாலும் சாதிக்க முடியாதது எதுவுமே கிடையாது என்ற பெருமிதம் கட்டிலோடு கட்டிலாகக் கிடந்தவனைப் பார்த்ததும் விலகியது.

வாசுகியிடமிருந்து கிளம்பிய அலறல் வெளியே நின்றிருந்தவர்களுக்கும் கேட்டது.

`மூளை ரொம்ப சேதமாயிருக்கு. இப்படி கோமாவில கிடக்கிறவங்க எப்போ நினைவு திரும்புவாங்கன்னு சொல்ல முடியாது. சில பேர் அப்படியே போயிருக்காங்க. இந்தப் பையனுக்கு நினைவு திரும்பினாலும், புத்தி ஸ்வாதீனத்தில இருக்க வாய்ப்பில்லே!’ தனக்குத் தெரிந்ததை அவள் எங்கே சொல்லவிட்டாள்!

உலகமே தங்களால்தான் இயங்குகிறது என்று சிலபேர் அலட்டிக் கொள்ளலாம். ஆனால், எல்லாருக்கும் மேலே நீதிக்கென ஒருவன் இருக்கிறான்!

அதிகாரி தன் தலையைப் பக்கவாட்டில் ஆட்டிக்கொண்டார். சிறிதுமுன் எழுந்த சலனத்தையும் சேர்த்து விலக்கத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *