ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டேஎன் கண்ணம்மா !
உன்பாதம் சேரேனோ !
– அழுகுணிச் சித்தர்.
ஒரு கனிந்த பஞ்சவர்ண மாம்பழத்தின் தோலைப் போன்றிருந்தன அதன் உடலிலிருந்த சுருக்கங்கள். இரண்டு குட்டி சிவப்பு நிலாக்களைப் பதியம் வைத்ததைப் போலிருந்தன கண்கள். ஒரு சமயம் ஒரு தலையாகவும், மறு சமயம் ஐந்து தலையுடையதாகவும் மாறி மாறித் தோற்றமளித்தது அந்தப் பாம்பு. அதன் தலையையும், வாலையும் இணைத்து வட்டமாக்கினால் அதன் ஆரமே குறைந்தது ஐந்தடி இருக்கும். உதிர்ந்திருந்த சருகுகளின் வழியே அது ஊர்ந்து வர உரசியெழும் சப்தம் உடம்பிலுள்ள ஐம்பது லட்சம் மயிர்க்கால்களையும் நெம்பி எழுப்பியது. அலறி ஓடிய என் முன்னே தன் தலை உயர்த்தி, வாலால் என் கால்பற்றி, உடல்சுற்றி இறுக்கி உச்சந்தலையில் ஓங்கி கொத்தவும் “கிர்ர்ர் கிர்ர்ர்” என்ற ஒலி எழும்பியது. அட்ரினலின் சுரப்பு அதிகமாக அலறியடித்து எழுந்தேன். கனவு கலைந்தாலும் “கிர்ர்ர் கிர்ர்ர்” என்ற சப்தம் மட்டும் நின்றபாடில்லை. ஒரு நிமிடம் என்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு கட்டிலுக்கு இடப்பக்கம் இருந்த ஜன்னலைத் திறந்தேன். நேற்று இரவு பெய்த மழையின் குளுமை அந்த காலைப் பொழுதில் வீசிய இளந்தென்றலில் தெரிந்தது. மீண்டும் ஒருமுறை அந்த “கிர்ர்ர் கிர்ர்ர்” ஓசை எழவே, இடுப்பைவிட்டு கழண்டிருந்த லுங்கியை சரி செய்தவாறே அரைத் தூக்கத்தில் எழுந்து கதவைத் திறந்தேன். கதவிற்கும், நிலைக்குமிருந்த இடைவெளியில் வெயில் மட்டும் கொஞ்சம் உள்ளே நுழைந்தது.
இடது காலை மேலுயர்த்தி, குதிக்கால் கொண்டு வந்த லுங்கியை கைப்பற்றி முன்னே இழுத்துக்கட்டி வெளியே யாராவது இருக்கிறார்களா என்று எட்டிப்பார்த்தேன். இடியாப்பம் விற்கும் ஒரு பெரியவர் மட்டும் அதனை ஒரு தள்ளு வண்டியில் தள்ளியபடி “இடியா…ப்பம்” என்று இழுத்துக்கூவியபடி சென்று கொண்டிருந்தார். அவரது நெற்றியில் இருந்த ஒரு பெரிய சிவப்புப் பொட்டு கவனம் கலைத்தது. தொலைவில் ஒரு வீட்டில் மீன் வாங்கிக் கொண்டிருந்தனர். எனக்கு மானசா வைக்கும் அயிரை மீன் குழம்பின் ஞாபகம் வந்து பல்தேய்க்காத வாயில் எச்சிலூற்றியது. குவித்துத் துப்பினேன். அவளைப் பற்றிய ஞாபகங்களையும் இப்படி குவித்து உமிழ முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். காலிங் பெல் சத்தம் வருவதும், வந்து பார்த்தால் யாருமின்றி இருப்பதும். இப்படி நிகழ்வது இது முதல் முறையல்ல. ஊரிலிருந்து வந்த இந்த இரண்டு வாரங்களில் கிட்டத்தட்ட நான்கு முறைகளுக்கும் மேல் இப்படி நடந்துவிட்டது. மானசா போனதிலிருந்து எதுவுமே சரியாக இல்லை. அற்ப ஆயுசு அவளுக்கு மட்டுமல்ல என் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் தான். பாதகி.
இந்தக் கனவும் காலிங்பெல்லும் என்னைத் துரத்தித் தொந்தரவு செய்தன. ஒருமுறை கல்யாணமாகி இங்கு குடிவந்த புதிதில் காலிங் பெல்லை அழுத்திவிட்டு ஒருபக்க கதவின் பின்னே ஒளிந்து கொண்டு பின்புறமாக என்னைக் கட்டியணைத்த அவளது உடலின் வெம்மையை என்னால் அப்போது கூட மீண்டும் உணர முடிந்தது. காற்றில் கலையும் முன்னெற்றி முடி ஒதுக்கும் லாவகமும், அவள் அடிக்கடி கட்டும் கரும்பச்சை டெரிகாட்டன் புடவையும், ஒருமையில் அழைக்கும் தனிமைப் பொழுதுகளும், நுரை ததும்பும் டிகிரி காபியின் மணமும், சலசலக்கும் நதிபோல முணுமுணுக்கும் உதடுகளும் இன்னும் இத்யாதி இத்யாதிகளும் என்னை ஏதேதோ செய்து போயின.
அதன்பின் இந்த காலிங்பெல் விவகாரத்தைப் பற்றி வீட்டு ஓனரிடம் புகார் செய்ய சென்றபோது இது பக்கத்திலிருக்கும் சிறுவர்களின் வேலையாக இருக்கும் என்றார். பள்ளிக்கூட நெருக்கடியிலும் எத்தனை சிறுவர்களுக்கு இப்படி திங்கட்கிழமை காலைப் பொழுதுகளில் விளையாட நேரம் கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
இதே போன்றதொரு பாம்பு கொத்தும் கனவு இதற்கு முன்பும் ஒருமுறை வந்தது. நடுநிசியில் விழித்து, வியர்த்து, கலைத்து போடப்பட்ட சீட்டுக்கட்டு போல் எழுந்த என்னை, மானசா அணைத்து அமைதிப்படுத்தி அவள் இயக்கி உச்சமடையச் செய்த அந்த கலவி இன்னும் ஆயிரமாயிரம் ஜென்மங்களுக்கும் மறக்காது.
இந்தக் கனவைப்பற்றியும் காலிங்பெல்லைப்பற்றியும் யாரிடமாவது பகிர்ந்து கொண்டால் பரவாயில்லை என்று எனக்குத் தோன்றியது. இதற்கு லக்ஷ்மணை விடச் சரியான ஆள் இருக்க முடியாது. பட்டாம்பூச்சியிலிருந்து பென்னி குக் வரை எந்த விசயம் பேசினாலும் அதை எதிர்த்துப் பேசவோ, ஆதரிக்கவோ அவனிடம் எப்போதும் ஏதாவது ஒன்று இருக்கும். மறுநாள் மதியப் பொழுதில் உணவிற்குப் பின்னான சிறுநடையின் போது இதைச் சொன்னேன். கனவில் பாம்பு வருவதென்பது சைக்காலஜிப்படிப் பார்த்தால் அடங்க மறுக்கும் செக்ஸ் உணர்ச்சியின் வெளிப்பாடகவோ அல்லது மனதை படுத்தியெடுக்கும் ஏதோ ஒரு சம்பவத்தின் தொடர்ச்சியாகவோ இருக்கலாம் என்றான். மேலும் கனவு சாஸ்திரங்களிலும் பாம்பு துரத்துவதும், கொத்துவதும், எதிர்பாராத விபத்து, துரோகம், வியாபாரத் தோல்வி போன்ற கெட்ட பலன்களையேத் தருமென்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினான். பேசாமல் வீட்டைக்காலி செய்துவிட்டு தன்னுடன் வந்து ரூமில் தங்கிவிடுமாறும் சொன்னான்.
எனக்குத் தெரியும். அவன் சொன்ன அத்தனை காரணங்களுக்கும் மீறிய ஏதோ ஒரு காரணம் இதற்குப்பின் ஒன்று உள்ளதென்பது. இந்த நிகழ்விற்குப் பின்னும் கனவும் காலிங் பெல்லும் என்னை விடுவதாயில்லை. சில சமயங்களில் இரவிலும், புலர்காலையிலும் காலிங் பெல் அடித்து என்னைக் கடுப்பேற்றியது. ஒரு முறை கதவைத் திறந்த போது வீட்டு ஓனர் சொன்னது போலவே சில சிறுவர்கள் எங்கள் வீட்டைத் திரும்பி திரும்பி பார்த்தபடி ஓடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்கள்மேல் அப்போது கோபம் வரவில்லை. மாறாக நிம்மதியும், சந்தோசமுமே வந்தது. ஆனாலும் அன்றே வீட்டு ஓனரின் அனுமதியுடன் அங்கிருந்த காலிங் பெல்லை அகற்றிவிட்டேன். ஒருவழியாக ஒரு தொல்லையிலிருந்து தப்பித்தேன்.
இந்தக் கனவிலிருந்து தப்பிப்பதுதான் எனக்குப் பெரும்பாடாக இருந்தது. அதற்கும் எனக்கொரு வழி கிடைத்தது டாஸ்மாக்கில். கல்லூரியில் தொடங்கிய இந்தப் பழக்கம், வேலை கிடைத்து சுற்றித்திரிந்த பேச்சிலர் தினங்களில் உச்சம் பெற்று மானசா வருகைக்குப் பின் முற்றிலும் நின்று போனது. அவளே இல்லை என்றான பின்பு அவளுக்கு செய்து கொடுத்த சத்தியமாவது சப்பாத்தியாவது. அன்றுதான் காலிங் பெல்லை கழற்றிவிட்ட மகிழ்ச்சியில் ஹாஃப் சிக்னேச்சருடன், கொஞ்சம் சைடு டிஷ்சும் சேர்த்து எனது மூன்று தொல்லைகளுக்கும் முடிவுகட்டத் தொடங்கினேன். ஆம் மூன்றாவதாகக் குறிப்பிட்டது மானசாவைத்தான்.
எப்போது உறங்கிப் போனேன் என்று நினைவிலில்லை. டி.வி. மட்டும் அதுபாட்டிற்கு ஓடிக் கொண்டிருந்தது. தலைவலியும், குளிரும் பின்னியெடுக்கவே விழிப்பு கொடுத்துவிட்டது. வெளியே மழை பிடித்து அறைந்து கொண்டிருந்தது. வலதுகாற் பெருவிரலால் டி.வியை எட்டி அணைத்துவிட்டு, காலிற்கு கீழேயிலிருந்த அந்த மஞ்சள் பூப்போட்ட போர்வையை எடுத்துத் தலைவரை இழுத்து மூடினேன். மானசாவின் கழுத்துவாசத்தை இந்த போர்வை கொஞ்சம் கடன் வாங்கியிருந்தது போலும். அப்போது அவளது கழுத்து முகர்ந்து, இடுப்பு வளைத்த ஞாபகத்தில் தலையணையை நெருக்கியவாறு என்னையறியாமல் தூங்கிப் போனேன். மீண்டும் “கிர்ர்ர் கிர்ர்ர்” என்று காலிங் பெல் அடிக்கத் தொடங்கியது.
– டிசம்பர் 21, 2011