புகழ்பெற்ற அந்தக் கல்லூரியில் புதுசாகத் தொழில் கல்வி துவங்கப் போவதாகப் பத்திரிகையில் விளம்பரம் வந்தபோது பையன் அடம் பிடித்தான். நல்ல கோர்ஸ், வெளி நாட்டிலும் உள்நாட்டிலும் வேலை வாய்ப்பு.
எனி டிகிரி என்று விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்தது பிகாம் படித்த அவனுக்குத் தெம்பூட்டியது.
எங்கிருந்து பணம் திரட்டி அனுப்பினான் தெரியவில்லை. விண்ணப்பப் படிவம் தபால்காரர் என்னிடம் தரும் நேரம் அவன் வீட்டில் இல்லை, திறந்து படிவத்தில் கண்களை ஓடவிட்ட போதே நெஞ்சு படபடத்தது. நுழைவுத் தேர்வு எழுதவேண்டும். தேர்வு செய்யப்பட்டால் நேர்முகம், அதற்குப் பிறகு அட்மிஷன்.
கெட்டிக்காரன் தேறிவிடுவான். ஆனால்…
கடைசியில் கொடுத்திருந்த பீஸ் விளக்கம்தான் நெஞ்சு இரத்தத்தை உறைய வைத்தது. இரண்டாண்டுப் படிப்புக்கு ஏறத்தாழ இரண்டு லட்சம். சுயநிதியில் நடத்தும் கோர்ஸ். அதனால்தான் இவ்வளவு இலட்சம்.
வாழ்நாளில் ஒரு லட்சத்தை ஒரே நேரத்தில் பார்த்திராத எனக்குக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத பெரும் தொகை.
கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்த பையன் முகத்தில் விண்ணப்பப் படிவம் சீக்கிரம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சி. ‘நாளைக்கு அனுப்பணும்.’
‘நீ பி.காம் படித்தவன். உனக்குத் தொடர்பில்லாத விஷயம். அட்மிஷன் கிடைப்பதே சிரமம்ப்பா .’
‘நீங்க உங்க ஃப்ரண்டிடம் சொன்னாலே போதுமே.’
அப்போதுதான் கல்லூரியில் செல்வாக்குள்ள நண்பரின் நினைவு வந்தது. நண்பரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.
‘உங்க பையனுக்கு இல்லாத சீட்டா?’ பதிவு நம்பரும் பெயரும் எழுதிக் கொண்டார்.
மனசு குளிர்ந்தது. ‘நன்றி’
‘சொல்லியாச்சியப்பா. இடம் வாங்கித் தருவதா சொல்லி விட்டார்.’
கேட்டதும் பையனுக்கு ஒரே குதூகலிப்பு.
‘அட்மிஷன் கிடைச்ச மாதிரி துள்ளிக் குதிக்கிறியே, பணம்?’
‘பாங்கில் எஜுகேஷன் லோன் குடுப்பாங்க.’ அதுவும் தெரிந்து வைத்திருக்கிறான். அப்படியொரு ஏற்பாடு இருப்பது பையன் சொல்லித் தான் தெரியும். அவனே போய் சில பாங்குகளில் இருந்து விதிமுறைக் குறிப்புகளை வாங்கி வந்தான். விதிமுறைக் குறிப்புகள் வாசித்தபோது கல்விக் கடன் கிடைப்பதில் எந்தச் சங்கடமும் இருக்காது என்றும் அவர்களாகவே கூப்பிட்டுத் தருவது போன்றும் இருந்தது. ஏழைப் பிள்ளைகளுக்கு மேல் படிப்பிற்கு இப்படியும் ஒரு வசதி இருக்கா?
அட்மிஷன் கிடைச்சது போலத்தான். பணமும் கைக்கு வந்தது போல, இவ்வளவு எளிதில் எல்லாம் கைகூடும் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. நகரில் கிரிக்கெட் விளையாட வந்த பையன்களிடம் அட்மிஷன் கிடைத்துவிட்டதாகப் பெருமை பேசிக் கொண்டான். புத்திசாலித்தனமான பையன்கள் கேட்டார்கள்.
‘பணம்?’
பையன்களுக்குத் தெரியும். இவ்வளவு பெரும் தொகை என்னால் கொடுக்க முடியாதென்று.
‘பாங்க் லோன்.’
பையனுடைய துணிச்சலான பதிலில் அவர்கள் அசந்துவிட்டார்கள். அட்மிஷன் உறுதியாகிவிட்ட நிலையில் அட்மிஷன் நேரம் அங்கு மிங்கும் ஓடாமல் இருக்க, முன் ஏற்பாடாக பாங்க் கடன் பெறுவதற்குப் பையனோடு பாங்க் வாசலைத் தட்டினேன். அங்கேயும் காற்று என் பக்கம் வீசியது. கடன் வழங்கும் அதிகாரி எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது எனக்கு அப்போதுதான் தெரியும். வணக்கம் சொல்லி வர வேற்று உட்கார வைத்தார். விஷயத்தைச் சொன்னேன். மேனேஜர் அறைக்குள் நுழைந்தோம். குளிர் ஊட்டப்பட்ட அறை. வேட்டி சட்டை அணிந்திருந்த என்னை ஏற இறங்கப் பார்த்தபடி, ‘எவ்வளவு லோன்?’
‘இரண்டு லட்சம்.’
‘என்ன செய்றீர்?’
‘யாபாரம்.’
‘வருமானவரி கட்டுறிங்களா?’ வருமானவரி செலுத்துவோனாக இருந்தால் இவரிடம் கடன் கேட்டுவரணுமா. எனக்குள் முனகிக் கொண்டேன்.
‘இல்லை . சில்லறை யாபாரம்.’
‘விற்பனைக் கணக்கில் லாபம் எவ்வளவு?’
லாபம் இருந்தால் கடன் வாங்கத் தேவையில்லை.
‘கணக்குக் காட்டும்படியான வியாபாரம் இல்லைய்யா.’
‘பையன் பெயரில் கடன் தொகைக்கு எல்.ஐ.சி.பாலிசி எடுக்கணும்.’
பாலிசி கட்டுவதற்குண்டான பணம் இருக்குமானால் பையனைப் படிக்க வைக்க பணம் கேட்டு இங்கே வரணுமா?
‘சரிங்க.’
‘சொத்து ஜாமின் வேணும்.’
’14 வருஷத்துக்கான வில்லங்கம் சர்டிபிகேட் வேணும்.’
‘சரிங்க.’
வேற?
இவ்வளவு மலைமேடுகளைக் குதித்துத் தாண்டிப் போய் பூ பறிக்க வேண்டுமா?
மானேஜர் இன்னமும் என்னவெல்லாமோ நிபந்தனைகள் சொல்லிக் கொண்டிருந்தது எதுவும் காதுவழி என் உணர்வு மண்டலத்தில் நுழைய வில்லை. மனசிற்குள் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடிய படி மானேஜருக்கு முன்னால் போடப்பட்ட நாற்காலியில் சாத்தி வைக்கப்பட்ட சவமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். வரி கட்டாத, கணக்கு காட்டாத, அரசு அதிகாரியாக இல்லாத ஏழைகளின் பிள்ளை களுக்கு உயர் கல்வி பெற இவ்வளவு தடைகளைத் தாண்ட வேண்டுமா? சிறுபான்மைச் சலுகைகள் பெற்று நடத்திக் கொண்டிருக்கும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் ஏழைச் சிறுபான்மையினர் நுழையாமல் இருக்க பூட்டப்பட்ட இரும்பு வாசல் இரண்டு லட்சம். அந்தச் சிறுபான்மைச் சலுகைகளையும் செல்வந்தர்களின் பிள்ளைகள் அடைவதற்கென்றே உள்ளே போடப்பட்டக் கொண்டி.
‘அய்யா வரட்டுமா?’ மானேஜரின் முன்னால் உட்கார்ந்து கொண்டி ருந்த சவம் உயிர் ஊசலாடும் சவமாகவே எழும்பியது. போக நினைத்த வழியில் தடுப்புச் சுவர் உயர்ந்துவிட்டது. மனதைத் திறந்து சொல்ல வந்ததைப் பையனிடம் சொல்லவில்லை. சோர்ந்துபோய் நடக்கையில் மனசில் வெளிநாட்டிலிருந்து சீமானாக வந்து நிற்கும் தம்பி மகனும் கிராமத்தில் உள்ள வீடும் சிறு நம்பிக்கையாக அப்போது சுடர்விட்டது.
ஏறி இறங்கிய சில வங்கிகளின் நிபந்தனைக் கட்டுகள் மேன்மேலும் இறுகிக் கொண்டே போனது. சோர்ந்த முகத்தோடு என்னைப் பார்த்த பையனோடு ‘பாங்கு நமக்காக இல்லப்பா’ என்றேன். நம் இரத்தங்களை உறிஞ்சும் அட்டைகள் கொழுத்து வளர நிறுவப்பட்டவை பாங்குகள்.
‘வீட்டை விற்பனை செய்தாவது உன்னைப் படிக்க வைக்கலாம், அழாதே..’
எதிர்பாராமல் நுழைவுத் தேர்வு எழுத, தேதி குறிப்பிட்டுக் கடிதம் வந்ததும் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.இனி அதிக நாட்கள் இல்லை. அட்மிஷன் உறுதி. தேர்வு எழுதிய பின்னால் பணம் கட்டச் சொல்லும் கடிதம் வரும். உடன் பணம் கட்டியாக வேண்டும். பணம் திரட்டும் வழியைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டிருக்கையில் கோழி கூவியது. பணம் தயார் செய்துவிட்டுத்தான் தேர்வு எழுத காலை 5 மணி ரயில் ஏற வேண்டும். புலர்ந்ததும் 7.15க்குள்ள பஸ்ஸில் புறப் பட்டேன். தம்பி மகன் புதுசாகக் கட்டிய மூன்று மாடி வீட்டுக்கு, தௌஃபீக் என்று பெயரிட்டிருந்தான்.
தம்பி மகன் வீட்டிற்கு முன்பிலுள்ள புல்வெளியில் பிரம்பு செட்டி போட்டு உட்கார்ந்து குளிர்காற்றும் இளம் வெயிலும் கொண்டு ஆரோக்கியத்தைப் பேணிக் கொண்டிருந்தான். அவன் கால்களைச் சுற்றி வந்து கொண்டிருந்த வெள்ளை ஜடை நாய்க்குட்டிகள் இரண்டுக்கும் பிஸ்கட் போட்டுக் கொண்டிருந்தான். ‘வாங்க மூத்தாப்பா’ அன்போடு அழைத்தான். எதிரில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன்.
‘என்ன மூத்தாப்பா, காலையிலேயே?’
‘உன்னைப் பார்க்கத்தான். பையனுக்கு எம்பிஏ சீட்டு சொல்லி வைச் சிருக்கேன். கிடைச்சது போலத்தான். பாங்க் லோனுக்காக அலஞ்சேன். கிராமத்தில் உள்ள வீட்டை விலை பேசியிருக்கேன். சீக்கிரம் முடியும். அட்மிஷன் கிடைச்ச உடனே பணம் கட்டணும் இல்லையா?’
‘ஆமா கட்டணும். நல்ல கோர்ஸ். வெளிநாட்டில் நல்ல சான்ஸ்.’
‘வீட்டை விற்ற உடனே கொண்டு தாரேன். கொஞ்சம் ரூபாய் வேணும்.’
‘தாரேன். குடும்ப வீட்டை விக்க வேண்டாம். தம்பி படிப்புக்குள்ள ரூபாய் நானே அனுப்பித் தாரேன். நாளை பிளைட்ல போறேன். போய் இறங்கினதும் டி.டி. எடுத்து அனுப்புறேன். உங்க ஏசி எண் ஐ இ-மெயில் செய்யுங்கோ.’
ஒருவழியாகப் பணம் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் மனசு குளுமை யாகிவிட்டது. ‘முந்தைய நாள் காலை இரயிலுக்குப் புறப்பட்டால் கல்லூரி முதல்வரை முன்னதாகச் சந்திக்கலாம். ஒரு மரியாதைக்காக.’ சின்னப் பையனாக இருந்தாலும் அவன் சொன்ன யோசனை நல்ல தாகப்பட்டது.
இரயில் நிலையம் செல்லும் வழியில் சாலையோரம் எல்லோருக்கும் அருள் புரியும் மூஸா அப்பா தர்காவில் காலை இருளில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மழை இல்லாதபோது மழை பெய்யச் செய்து வயல் களில் நெல் விளைய வைத்து அற்புதம் காட்டும் மூஸா அப்பா! அது வழியாகச் செல்லும் பஸ் பயணிகளும் நடைபயணிகளும் உண்டியலில் காசு போட்டு, பூவும் பத்தியும் வாங்கி மடியில் கட்டுவார்கள். சிலர் காதில் பூ வைப்பார்கள். தர்காவை நெருங்கியதும் ஒருபோதும் நிற்காத கால் நின்றுவிட்டது. நண்பரின் சிபாரிசே இருந்தாலும் ஒருவேளை சொல்ல மறந்து விடலாம். சொன்னாலும் முதல்வர் மறந்துவிடலாம்.
ஒரு முன் எச்சரிக்கையாகப் பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாய் எடுத்து உண்டியலில் மடித்துப் போட்டேன்.
‘அப்பா, என் பிள்ளைக்கு எம்பிஏக்கு சீட்டு கிடைக்க அருள் புரியுங்களப்பா.’ முன்னே போய்க் கொண்டிருந்த பையன் உண்டியலில் காணிக்கை போட்டதையும் நான் மன்றாடி வேண்டியதையும் கவனித் திருக்கமாட்டான். இரயில் பிடிக்கும் வேகத்தில் போய்க் கொண்டிருந்தான்.
‘உங்களைப் பிரின்சிபாலுக்குத் தெரியாமல் இருக்காது.’
ஓடிக் கொண்டிருந்த இரயிலில் பக்கவாட்டில் வசதியாக உட்காரக் கிடைத்த இருக்கையில் உட்கார்ந்தபடி பையனுக்கு இடம் கிடைக்க மனசில் இறைவனைத் தியானம் செய்து கொண்டிருந்தது தெரியாமல் மையப்படுத்திய மனசைக் கலைத்து விட்டான். அவன் முகத்தையும் பார்க்காமல் சொன்னேன். ‘தெரியாமல் இருக்காது.’
மீண்டும் மனசை ஒருமுகப்படுத்த சற்றுநேரம் பிடித்தது. இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் நடுவானத்தில் தீ குளித்துச் சூரியன் அனல் துப்பிக் கொண்டிருந்தது. கல்லூரி வழியாகச் செல்லும் பஸ் தெரியாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு வயோதிக மனசின் இரக்கத்தால் நெருக்கி அடித்து ஒரு பஸ்ஸில் ஏறினோம்.
கதகதக்கும் சாலைகளின் சந்திப்பில் உயர்ந்து காணப்பட்ட நுழை வாயில்.
முதல்வர் வர 4 மணியாகும் என்று தெரிந்து காரில் வந்திறங்கும் முதல்வரை எதிர்நோக்கி முதல்வரின் அறைக்கு நேராக ஒரு மரத்தடி யில் உட்கார்ந்து கொண்டிருந்த என்னை அது வழியாக நடமாடிக் கொண்டிருந்த ஒரு மனுச குஞ்சும் அடையாளம் தெரியாமல் இருந்தது எனக்கு வியப்பாக இல்லை. யாரோ ஒரு கிராமவாசி, மகனுக்கு அட்மிஷனுக்கு வந்திருப்பார் என நினைத்திருக்கலாம்.
முதல்வர் வந்தாச்சு என்ற குரல் காதில் ஒலித்த திடுக்கிடலில் அவருடைய அறை வாசல் திறக்கப்பட்டது தெரிந்தது. முதல்வர் அது வழியாக உள்ளே நுழையவில்லை. அவர் அறைக்குள் நுழைந்ததே புதிரான அற்புதம். ஆகாசம் வழி வந்து கட்டிடத்தின் முகடு திறந்து உள்ளே போயிருப்பார். அல்லது பூமிக்கு அடியிலிருந்து அஸ்திவாரத்தைத் துளை போட்டு உள்ளே நுழைந்திருப்பார். போர்டிகோவில் அவருடைய கார் இல்லை . திறந்த வாசல் பக்கம் ஓடிச் சென்றதும் பியூன் தடுத்தார். பேர் ஊர் கேட்டார். சொன்னேன். அவருடைய முகத்தில் என்னை அடையாளம் தெரிந்த பாவனையே இல்லாமல் இருந்தது.
‘என்ன விஷயமா பார்க்கணும்?’
‘பிரின்சிபாலிடம்தான் பேசணும்.’
அவரோட மல்லுக்கட்டிதான் உள்ளே நுழைய முடிந்தது. இப்படி ஒரு மல்லுக்கட்டின் தேவை ஏற்படும் என்று எள்ளளவும் எதிர்பார்க்கவில்லை. அப்படியானால் போயிருக்க மாட்டேன்.
கம்பீரமான தோற்றத்துடன் முகமலர்ச்சி இல்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்த முதல்வர் என்ன விஷயம் என்று தலையை அசைத்துக் கேட்டதும் நான் உருகி நாற்காலியோடு ஒட்டி நானல்லாதவனாகிப் போனேன்.
‘பணக்காரப் பிள்ளைகளுக்கான கோர்ஸ். பெரிய தொகை கட்ட முடியுமா?’
என்னுடைய உடையையும் தோற்றத்தையும் கண்டாலே அப்படிக் கேட்கத்தான் தோன்றும். 4 முழம் வேட்டியும் அரைக்கைச் சட்டையும் மீசை இல்லாத முகமும்.
‘பிராஸ்பெக்டஸ் வாசித்தேன்.’
‘என்ட்ரன்ஸ் எழுதட்டும். பார்ப்போம்’ என்று கூறிவிட்டு அடுத்த ஆளை அனுப்ப காலிங்பெல்லை அமுக்கினதும் பேச நினைத்ததைப் பேசாமல் கட்டையாக வெளியேறினேன். இதுக்காக இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்கவேண்டாம்.
‘உங்களை அவருக்குத் தெரியாது போலிருக்கே.’
பஸ் ஸ்டாண்டுக்கு நடக்கும் போதே முதல்வரின் சுரசுரப்பான நடவடிக்கை பிடிக்காது பையன் சொன்னான். தெரியாமல் இருக்கும் என்று அவனை ஆறுதல்படுத்தினேன்.
நுழைவுத் தேர்வு எழுதிய பின் ரயில் ஏறும்போது கேட்டேன். ‘எப்படியப்பா எழுதின?’
‘நல்லா எழுதியிருக்கேன். நம்ம இனத்தான் கொஞ்சம் பேர்தான். கண்டிப்பா கிடைக்கும். உடன் இண்டர்வியு கார்டு வரும்.’ எச்சரித்தான்.
‘நமக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு.’
பையன் கல்லூரி அந்தரங்கங்களைச் சக இனத்தான் மாணவரிடம் இருந்து தெரிந்து வைத்திருக்கிறான்.
‘அப்படியா?’
இண்டர்வியூ கார்டு தபால்காரர் கொண்டு வருவார் அல்லது கொரியரில் வரும் என்று பையன் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. தம்பி மகன் அனுப்பும் வெளிநாட்டு உறை பதிவுத் தபாலில் வரக்கூடும் என்று நானும் வெளியே செல்லவில்லை. வாசல் பக்கம் ஊன்றிய நான்கு கண்களும் ஊன்றியபடியே இருந்தன. திறக்கும்போது கரகரக்கும் வாசல் ஒலிக்காகக் காதுகளும் கூர்ந்தன.
இண்டர்வியூ கார்டு வரும். அட்மிஷன் உறுதி. பணத்தோடு செல்ல வேண்டும். வெளிநாட்டில் இருந்து தபால் வர ஒரு வேளை சற்று சுணங் கலாம் என்ற எண்ணம் ஒரு மின்னல் பாய்ச்சலாக இருந்தது மனசில். செல்வந்தரும் நெருங்கிய உறவினருமாகிய நண்பருடைய நினைவு வந்தது.
உட்கார்ந்திருந்த முசிப்பு மாறுவதற்காக காலாற நடந்து வர வெளி யில் செல்லுகையில் எதிர்ப்பட்டார் நண்பர். உடல் மெலிவு முகச் சோர்வு பற்றியெல்லாம் அன்பு விசாரிப்புகள். உடம்பைப் பேணுங்கள் என்று பரிவோடு உபதேசம் சொல்லும் போது கேட்டேன்.
‘பையனுக்கு எம்.பி.ஏக்கு இன்று அல்லது நாளை பணம் கட்டணும். தம்பி மகனிடம் கேட்டேன். அனுப்புறதா சொன்னான். வந்ததும் திருப்பித் தாறேன். கொஞ்சம் பணம் புரட்ட முடியுமா?’
‘என்னிடம் ஏது? நானே ரொம்ப சங்கடப்படுதேன்’ பதில் பளிச் சென்று இருந்தது. நண்பர் தராதது பற்றி வருத்தம் ஏதும் இல்லை, ஒருவரிடம் இருக்கலாம். இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆழமான நட்பு வைத்திருப்பவர் என்று எண்ணி இருந்த என் உயிர் நண்பர் அவருக்கு வேண்டியவரிடம் ரகசியமாகச் சொன்ன வார்த்தைகள் காற்று வழி காதில் விழுந்ததும் நெஞ்சைக் கிழித்துவிட்டது.
‘இந்த ஆசாமிக்கெல்லாம் ரூபாய் கொடுத்தால் எப்படித் தருவார். எப்படி வாங்குவது. இவங்களுக்கெல்லாம் பெரிய படிப்பு எதுக்கு.’
உண்மையேதான்.
என்னைப் பற்றி வாங்கினால் கொடுக்காதவன் என்ற எண்ணம் வைத்துக் கொண்டிருந்தாரே நண்பர், அதுதான் நெஞ்சைக் கிழித்தது. நெருங்கிப் பழகுவோர் நம்மைப் பற்றி அவர் என்ன எண்ணம் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிந்து கொண்டு பழக வேண்டும் என்ற ஒரு பாடம் கற்றுக்கொள்ள முடிந்த மகிழ்ச்சி, கிழிசலின் நோவைத் தணித்தது. தம்பி மகன் இவ்வளவு விரைவாக டி.டி.அனுப்பி வைப்பான் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நண்பரிடம் கேட்டு வாயை நாற்றி இருக்கவேண்டாம். கொஞ்சம் பொறுத்திருக்கலாம். இண்டர்வியூ கார்டுவரும்முன் தம்பி மகன் வெளிநாட்டில் இருந்து அக்கறையோடு அனுப்பி விட்ட டி.டி வந்துவிட்ட பெரும் மகிழ்ச்சி. நாளையே டி.டி மாற்றி கல்லூரி முதல்வர் பெயருக்கு, பிராஸ்பெக்டஸில் கண்ட கட்டணத்திற்கு ஒரு டி.டி எடுத்து வைத்திருந்தால் வீட்டுப் பூட்டை உடைக்கும் திருடர்களிடம் இருந்து பணத்தைப் பாதுகாக்கலாம்.
பையனுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் டி.டி.
கடலுக்கு அப்பால் நிற்கும் மகனே, உனக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி யப்பா. இருந்தாலும் பதிவுத் தபாலில் அனுப்பாமல் பொறுப்பில்லாத படி சாதா தபாலில் இந்தப் பெரும் தொகையை அனுப்பிவிட்டாயே. ஏதோ மூஸா அப்பா புண்ணியத்தால் வந்து சேர்ந்தது. தபால்காரர் நீட்டிய தபால் உறையை ஒடிச் சென்று பெற்றுக் கொள்ளும் போது நேரம் பார்த்து பையன் வீட்டில் இல்லை. எம் பி ஏ படிப்பிற்கான புத்தகங்களின் விலை விசாரித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். கடலுக்கு அப்பால் இருந்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நொண்டிக்காரணங்களைத் தொடர்ந்து வாசிக்க மனம் ஒப்பவில்லை. இனி ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக உதவி புரிவதாகக் குறிப்பிட்ட இடத்தில் வாசிப்பை முடித்துக் கொண்டு கடிதத்தை மடித்து உறையில் போட்டு, பையன் பார்வையில் படாதபடி மறைத்து வைத்தேன்.
இனி யாரை நாடுவது?
மனசிற்குள் பல முகங்கள் ஓடிக் கொண்டிருந்தன. பாக்கெட்டுக்குள் இருந்தது இருபது ரூபாய். வெளியே கிளம்பும்போது வியாழன் பகல் சாய்ந்து வெள்ளி இரவாகி விட்டிருந்தது. பெண்கள் பூ சூடிய தலையை மறைத்துக் கொண்டு அருள்பெற மூஸா அப்பா தர்காவிற்குச் சென்று கொண்டிருந்தனர். கையில் பத்திக்கட்டு, பூ, விளக்குக்கு எண்ணை, பழக்குலை!
நூற்றாண்டுகளுக்கு முன்பே பச்சைப் போர்வை போர்த்திய சிமெண்ட் கல்லறைக்குள் மறைத்திருந்து மக்களின் குறை கேட்டு, சுட்டு விரல் அசைத்து நிவர்த்தி செய்து கொடுக்கும் அப்பாவிடமே மீண்டும் ஒரே ஒரு உதவி கேட்டுப் பார்ப்போமே. பத்தி சாம்பிராணி புகை மூட்டத்தில் கல்லறைப் பச்சை தெரியவில்லை. உண்டியலுக்கு நேர்மேல் பகுதியில் தொங்கவிடப்பட்ட பல்பு ஒளி சிந்திக் கொண்டிருந்தது. கையில் இருந்த இருபது ரூபாயை மடித்து நேர்க்கோடாய்க் கிழித்து உண்டியலின் உதடு வழியாக உள்ளே திணித்தேன். புகை குகைக்குள் மங்கலாகத் தெரிந்த அப்பா சமாதியைப் பார்த்து ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்.
‘அப்பா! எம் புள்ளைக்கு எம்.பி.ஏ. சீட் கிடைக்காமல் இருக்க அருள் புரியுங்களப்பா.’