நியூட்ரல்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 1,304 
 

“அவசரம்னா என்ன வேணா செய்துடலாமா…? வெயிட் பண்ணவே மாட்டீங்களா…?”

வரதன் கத்தியதைக் கேட்டார் அப்பா.

‘ஆபீஸ் கால்’ என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது.

அதிகார தொனியையும், கறார் பேச்சையும் பார்த்தால், பேசுவது அவனுக்குக் கீழ் உள்ள அதிகாரியாக இருக்கவேண்டும் என்று அவதானிக்க முடிந்தது.

“…”

“நான் ‘சிஎல்’ல தானே இருக்கேன். நாளைக்கு வந்து முடிச்சித் தரமாட்டேனா…!”

“…”

“ஒரு நாள், ஒரே ஒரு நாள் ‘சி எல்’ போட்டுட்டு வீட்டு வேலை பார்க்க முடியலை; ச்சே…! கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாதவனுங்க. அவனுங்க வேலை ஆனாப் போதும். மத்தவங்க எப்படிப் போனா என்னங்கற எண்ணம்…!”

“…”

“கிளையண்ட் அவசரப்படுத்தறானாம்; அதனால எனக்கு பதிலா அவனே கவுண்ட்டர்-சைன் பண்ணி ப்ராஜக்டை அப்ரூவ் பண்ணலாமா’ன்னு கேக்கறாம்ப்பா அஸிஸ்டெண்ட்-சூப்ரண்ட் சடகோபன்…!”

உரத்து முணுமுணுத்தான் வரதராஜன்.

“…”

“அதான் நல்லா உரைக்கறா மாதிரி பதிலடிக் கொடுத்தேன். காதுல வாங்கினீங்கதானே…!”

“ம்…!”

அருணாசலய்யா, ஒற்றை எழுத்தில் மகனின் புலம்பலைக் கடந்து போனார்.


“அப்பா…!”

அழைத்தபடியே, புறப்படத் தயாராக நின்றான் வரதன்.

“ம்…!”

“ஏன் புறப்படாம லேட் பண்றீங்க…? சீக்கிரம் போனா வேலைய முடிச்சிக்கிட்டுக் காலாகாலத்துல திரும்பிடலாம்ல்ல…?”

“ஆசாரிய வரச் சொல்லியிருக்கேன். வந்துரட்டுமே…!”

“ஆசாரி எதுக்குப்பா?”

மகனின் கேள்வியில் ஞாயம் இருப்பதாகத்தான் பட்டது அருணாசலய்யாவுக்கு.

“நீ சொல்றது கூடச் சரிதான்…; வாங்கப் போறது, ஜன்னல், வெண்டிலேட்டர், கதவுச் சட்டங்கள்தான்; ஸ்டாண்டர்டு சைஸ்தான்; ஆசாரி கூடத் தேவையில்லை…; நாமேக் கூட எடுக்கலாம்தான்…; இருந்தாலும்…; ஆசாரி டெக்னிக்கல் பர்ஸன். அவர் இருந்தா மரத்தோட வயசு, ரேகை, தரம் எல்லாம் பார்த்துப், பார்த்து எடுப்பார்; அதான் வரச் சொன்னேன்.”

விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“ஆசாரிய வரச் சொன்னது சரிப்பா..! எடுக்கப் போறது ஸ்டாண்டர்டு சைஸ்தானே, எதுக்கு ஆசாரி நம்ம வீட்டுக்கு வரணும்னு கேக்கறேன்…?”

“நீ சொல்றதும் சரிதான் வரதா. ஆசாரிய மரவாடிக்கு வந்துடச் சொல்றேன்; கார் எடு கிளம்புவோம்…;

சைஸ் எடுக்கணும், இழைக்கணும். நீ சொல்றா மாதிரி, சீக்கிரம் போனாக் காலாக் காலத்துல திரும்பிரலாம்..!”

செல்போனில், ஆசாரி நம்பருக்குக் கால் செய்து கொண்டேக் காரில் ஏறினார்.


“அய்யா…! நாட்டுத் தேக்கு பார்ப்போமா…? பர்மாத் தேக்குங்களா…!”

ஆசாரி கேட்டார்.

“கொஞ்சம் ஐட்டம்தானே, பர்மாத்தேக்கே பார்த்துருவோம்…!”

ஆசாரியிடம் சொல்லிக் கொண்டே,

“என்ன சொல்றே வரதா?”

மகனிடம் அபிப்ராயம் கேட்டார்.

“நாட்டுத் தேக்குக்கும் பர்மாத் தேக்குக்கும் என்னப்பா வித்தியாசம்…?”

“பர்மாத் தேக்கு வெய்ட் லெஸ்ஸா இருக்கும்; ஃபினிஷிங்ல ஷார்ப்னஸ் கிடைக்கும்; இழுத்த இழுப்புக்கு வரும்; வெடிப்பு, வீரல்னு எந்தத் குறையும் வரவே வராது. மத்த மரங்கள் மாதிரி, ஸீசனுக்குச் சீஸன் சுருங்கற விரியற பிரச்சனை இருக்காது; செல்லரிக்கறது, உளுவடிக்கறதுங்கற பேச்சுக்கே இடமில்லை; கல்லு மாதிரி காலத்துக்கும் கிடக்கும்; ஆனா… ரேட்தான் ரொம்ப ரொம்பக் காஸ்ட்லி…!”

ஆசாரியே வியக்கும் வண்ணம் தெளிவாகச் சொன்னார்.

“அவ்வளவு காஸ்ட்லி தேவையாப்பா…?”

“காஸ்ட்லியர் ஈஸ் ச்சீப்பர்’ னு…’ தெரியாதா வரதா உனக்கு?;

“…”

“காசு குறையறதேனு ‘ரேஸ் குதிரை’க்கு பதிலா, ‘மட்டக் குதிரை’ வாங்கினா வேலைக்காகுமா…?”

“…”

அப்பா சொல்வது சரியெனப் பட்டது.

“சரிப்பா…! பர்மா தேக்கே பாத்துரலாம்…!”


அந்த அடுக்கு ஜன்னல் சைஸ்;

இது வென்ட்டிலேட்டர் சைஸ்;

சைஸ் வாரியாக அறுத்து அடுக்கப்பட்டிருந்த ரெடிமேட் சட்டங்களைச் சுட்டிக் காட்டினான் மரவாடிப் பையன்.

“அய்யாவுக்கு ரெடிமேட் சட்டங்கள் வேண்டாம். புதுசா அறுத்துத்தான் வேணும்.” என்றார் ஆசாரி.


பொதுவாகக், குறைவான ஐட்டங்கள் வாங்கும்போது அறுத்துத் தருவதில்லை என்றாலும், அருணாசலய்யாவின் தரம் அறிந்து அதற்குச் சம்மதித்தார் மரவாடி ஓனர்.

தொட்டும், தடவியும், தேய்த்தும், தட்டியும், சுரண்டியும், முகர்ந்தும் பார்த்துப் பார்த்து, இருப்பதில் நல்ல தரமானப் பத்தையாகக் காட்டினார் ஆசாரி.

“அப்ப நான் புறபடலாமுங்களா…?”

புறப்பட்டுவிட்டார் ஆசாரி..

“வழக்கமா நமக்கு வர்ற தட்டு வண்டிக்குச் சொல்லிட்டுப் போங்க ஆசாரி.”

போகும்போது ஆசாரியிடம் சொன்னார் அருணாசலய்யா

“சொல்றேங்கய்யா…!”


“உடனே ட்ராலில ஏத்தி அறுத்துடுங்க. இருந்து இழைத்து எடுத்துப் போயிருவேன்…!”

அருணாசலய்யாவின் சுபாவம் அது.

அவரே இருந்து ஒரு காரியத்தைச் செய்தால்தான் திருப்தி ஏற்படும் அவருக்கு.

எதற்கெடுத்தாலும் ஆட்களை ஏவும் பழக்கம் அறவேக் கிடையாது அவருக்கு.

அருணாசலய்யாவின் சுபாவம் அறிந்த மரவாடி ஓனர் விரைந்துக் காரியத்தில் இறங்கினார்.

இரண்டு மரவாடி ஆட்கள், ஆசாரி காட்டிய மரத்துண்டை லாகவமாய்த் தூக்கி ட்ராலியில் வைத்தார்கள்.

ஓட்டுச் சார்ப்புக்குப் போடும் உத்தரம் என்றால் திமிர் வசத்தில் வைத்துத்தான் அறுப்பார்கள்.

குத்துக்கால், நெட்டுக்கால், அநந்தரம் எல்லாம் அதன் மேல் நின்று சரம், சப்பை, நாட்டு ஓடுகள் உட்பட அனைத்தையும் தாங்கத் திமிர் வசம்தான் பலம்.

சட்டமோ, சைஸோ எடுக்கத் திமிர் வசத்தில் வைத்தால் சேதாரம் அதிகமாகும் என்பதால் வளைவு வசத்திலேயே ட்ராலியின் வைத்தார்கள்.

வாழைக்காய் வளைவு வரும் இடங்களைச் சரிக்கட்ட, ஆங்காங்கே அணைப்பும் ஆப்பும் கொடுத்து அசையாது நிறுத்தினார்கள்.

இரண்டு புறமும் க்ளாம்ப் போட்டு இறுக்கினார்கள்.

தலையில் இரும்புத் தொப்பி, மார்பில் தோல் கவசம், கண்களில் வெள்ளைக் கண்ணாடி அணிந்து தன்னைத் தற்காத்துக் கொண்டார் அறுப்பாள்’;

இடுப்பில் இணைக்கப்பட்ட கயிறு மூலம் ட்ராலியை இழுத்தார் லேசாக.

“க்…ராக்…”

ஒரு நூல் அறுத்ததும் ட்ராலியைப் பின்னால் தள்ளி அறுப்பளவு அவதானித்தார்.

“க்…ராக்… க்…ராக்… க்…ராக்…”

இழுத்தும் தள்ளியும், கிழிக்கப் போகும் பத்தையின் அளவைத் துல்லியமாய் நிர்ணயித்தார்.

“அய்யாவுக்கு ஒரு நூல் துடியாவே வெய்யி…!”

ஓடும் ரம்பம் எழுப்பும் சத்தத்தைத் தாண்டிக் குரலெடுத்துச் சொன்னார் மரவாடி ஓனர்.

அளவு நிர்ணயமானதும்… சீராக ட்ராலியைத் தன் பக்கம் இழுத்தார் அறுவையாள்.

“க்…ரா…க்…ஷ்… ஷ்… ஷ்… ஷ்… ஷ்… ஷ்… ஷ்…”

ஒரேச் சீரான ஓசையெழும்பியபடியேப் பத்தைக் கிழிந்துப் பிரிந்து வந்தது..

அறுப்புவாயிலிருநது அடர்த்தியாய்க் கூராய்க் கிளம்பிய மரத்தூள் அறுப்பு வேகத்தில் விரிந்துப் பரவிப் புகையாய்ப் பறந்துப் படிந்தது ஆங்காங்கே.

ஆங்காங்கே நின்றோர் தலைமுடி மெல்ல மெல்ல தேக்கு நிறமாய் உருமாறிக் கொண்டிருந்தது.

முற்றிய தேக்கின் நறுமணம் ‘கம்…’ மென்று பரவியது.

ட்ராலியில் அறுத்தெடுத்தப் பத்தை,

மேசை வாள் அறுவைக்கு வந்தது.

சைஸ் செய்யப்பட்டது.

சைஸ் செய்த உருப்படிகள், இழைப்புச் செக்ஷனுக்குச் சென்றன.

கோடி மட்டம் பார்த்தும், கைகளால் தடவிப் பார்த்தும், மட்டச் சுத்தமாகவும், வழுவழுப்பாகவும், கச்சிதமாகவும் முடிந்த்து இழைப்பு.

இழைத்த உருப்படிகளைக் கொண்டுவந்து, கடையின் முகப்பில், தட்டு வண்டியில் ஏற்ற வாகாய் அடுக்கினார்கள் இழைக்கும் பணியாளர்கள்.

சைஸ் கிரயம், அறுவைக் கூலி, இழைப்புக் கூலி அனைத்தும் ‘கன அடி’க் கணக்கில் எஸ்டிமேட் ரோக்காவில் குறித்துத் தந்தார் மரவாடி ஓனர்.

குறித்தத் தொகையில் தள்ளுபடியும் செய்தார்.

ஜி பே மூலம் ‘பில்’ செட்டில் செய்துவிட்டு, கேஷ் பில் பெற்றுக் கொண்டான் வரதராஜன்.


“என்னப்பா இன்னும் தட்டு வண்டியக் காணம்.?” வரதராஜன் ‘ரெஸ்ட்-லெஸ்’ஸாகக் கேட்டான்.

“ஏதாவது நடுவுல வேலை வந்துருக்கும். வந்துடுவார் …!”

“எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்குப்பா…!;

அவசரமாப் போயாகணும்…!;

தட்டு வண்டிக்காரனுக்காக மணிக் கணக்குல வெயிட் பண்ணிக்கிட்டு நிக்க முடியுமாப்பா…!”

பொறுமையின்றிப் பரபரத்தான்.

“என்னதான் செய்யலாம்ங்கறே இப்போ…?”

“நம்ம கார்ல பின் சீட்டைத் தூக்கி விட்டுட்டா அதுல எடுத்துப் போட்டுக்கிட்டுப் போயிடலாமேப்பா…!”

“வேண்டாண்டா, இடைஞ்சலா இருக்கும்…!”

அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்ப்பா…!”

“முடியாது வரதா…!”

“டைம் ஆகுதுப்பா….!”

“அவசரம்னா என்ன வேணா செய்துடலாமா…?; வெயிட் பண்ணவே மாட்டியா…?”

வரதனைக் கேட்டார் அப்பா.

– 14-12-2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *