நின்னை சரணடைந்தேன்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 24, 2013
பார்வையிட்டோர்: 8,806 
 

என்மகள் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறாள்.
என்றும் போலவேதான் இன்றும் தன் வகுப்பிற்கு சென்று வந்தாள்.

அவள் அருந்துவதற்கு கொஞ்சம் பாலை, அவள் எழுதிக்கொண்டிருந்த மேஜையில் வைத்துவிட்டு, அவளை நோக்கினேன்.

நிமிர்ந்து சில நொடிகள் என்னை பார்த்தவள்,
புன்னகைத்துவிட்டு மீண்டும் எழுதுவதில் ஆழ்ந்து போனாள்.

அவளெதிரில் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்ட நான், அவளுடன் கொஞ்சம் விளையாடவிரும்பி, “என்னம்மா, இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க?
அம்மாக்கு எதுவும் ஹெல்ப் பண்ணவே இல்லையே….” என்றேன்.

எழுதுவதை நிறுத்தாமலேயே… “நாங்கள்லாம் பெரிய வேலையா இருந்தாதான் செய்வோம்…பரவால்லயா” என்றாள்.

அவள் சொன்ன விதத்தில், என்னுள் எழுந்த மென்சிரிப்பை கட்டுப்படுத்த விரும்பாமல் சிரித்துக்கொண்டே…
“அப்போ இந்த பூ எல்லாத்தையும் கட்டிடறீங்களா?” என்றேன்.

நிமிர்ந்து, நான் தொடுத்துக் கொண்டிருந்த பூமாலையையும்
அருகிலிருந்த பூக்களின் குவியலையும் பார்த்தவளின் பார்வை,
“நான் இவ்வளவு பூ இருக்கும் என்று நினைக்கவே இல்லையே” என்றது.

பின், விளையாட்டில் தோற்றுவிட்டேன் என்பது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக்கொண்டு என்னை பார்த்துவிட்டு திரும்பவும் எழுதுவதை தொடர்ந்தாள்.

நானும் குறுஞ்சிரிப்புடன் அவளை இடையூறு செய்ய விருப்பமின்றி தொடுப்பதை தொடர்ந்தேன்.

சில நிமிடங்கள் மௌனமாய் கழிந்தன…

அவளே இம்முறை மௌனம் கலைந்தாள்.

எழுதுவதை திடீரென நிறுத்தி,
“குட்டிப் பொண்ணு வச்சுக்றதுக்கு யாராவது இவ்ளோ பூ வாங்குவாங்களா? பாருங்க…எனக்கு கொஞ்சம் முடிதான் இருக்கு” என்றாள்.

நானும் விடாமல், “குட்டிப் பொண்ணுக்கு ஆசை ரொம்பதான். அந்தக் கொஞ்சம் முடியில் எப்படி இவ்ளோ பூ வைக்கிறது?” என்றேன்.

“அப்போ எதுக்கு இவ்ளோ பூ வாங்கினீங்க?” அவள் கேட்டாள்.

“சாமிக்கு வைக்கிறதுக்கும் சேர்த்து வாங்கினேன்-மா” நான் சொன்னேன்.

“ஓ” என்றவாறே சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தவள்,
திரும்பவும் எழுதுவதை தொடர்ந்தாள்.

எதற்கோ அவள் விடை தேடுகிறாள் என்பது அவள் யோசனையில் நன்றாகவே தெரிந்திருந்தாலும், அதை அவளாகவே கேட்கட்டும் என்று காத்திருந்தேன்.

“அம்மா சாமிக்கு பூ எதுக்கு வைக்கிறோம்?”

நான் எண்ணியது போல் ஒரு சில நிமிடங்களில் அவளே கேட்கவும் செய்தாள்.

முதலில் விளையாட்டாக, “பாப்பா பூ வைக்கறத பார்த்து சாமியும் வேணும்னு கேட்டுச்சு..அதனாலதான் சாமிக்கும் வைக்கிறோம்” என்றேன்.

ஆனால் அந்த பதிலில் அவளுக்கு திருப்தி இல்லையென்பதை அவள் முகமே காட்டிக்கொடுத்தது.

எனக்கும் அதன் முழு தாத்பர்யம் தெரியாத போதிலும், குழந்தையின் ஆர்வத்தை வீணடிக்க விரும்பாமல், “குடிக்க தண்ணி, சாப்பாடு, டிரஸ், இருக்கறதுக்கு வீடு இதெல்லாமும்
சாமிதான் நமக்கு குடுக்கறாங்க…

அதனால, இதெல்லாம் குடுத்த சாமிக்கு நாமும் ஏதாவது குடுத்து
நன்றி சொல்லணும் இல்லையா? அதுக்கு தான் இந்த பூ, பூஜை, நெய்வேத்தியம் எல்லாமும்” என்றேன்.

சமையலறையில் இருந்து வெளிப்பட்ட குக்கர் சத்தம், எங்களது உரையாடலை தடைபடுத்தி, செய்து கொண்டிருந்த சமையலை எனக்கு ஞாபகப்படுத்தியது.

சோபா-விலிருந்து எழுந்தவாறே நான் கட்டி முடித்திருந்த பூக்களை அவளிடம் கொடுத்து, சுவாமிக்கு வைக்கச் சொல்லிவிட்டு சமையலறைக்கு விரைந்தேன்.

“ம்.. இம்மாதிரி கேள்விகளெல்லாம் சிறுவயதில் ஏன் நமக்குத் தோன்றவில்லை?”

“சே அப்படியெல்லாம் இருந்திருக்காது, நமக்கும் தோன்றியிருக்கும்…. நாமும் இதுமாதிரியெல்லாம் கேட்டிருப்போம்..விடைகள் கூட சொல்லியிருப்பார்கள். ஆனால் மறந்திருப்போம்” எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

சமையலை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தேன். எழுதிக்கொண்டிருந்த அவள் அங்கில்லை.

ஆனால் அழகிய கையெழுத்தில் அவள் எழுதி முடித்திருந்த நோட்டுப்புத்தகம் அங்கிருந்தது.

ம்ம்ம்…மரங்களின் பயன்பாடுகள் பற்றி இன்றைய வகுப்பில் நடத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது.

அதை அழகாய் புத்தகத்தில் கொடுத்தவாறு வரைந்திருக்கிறாள்.

அவளது நோட்டுப்புத்தகத்தை மேஜையின் மீது வைத்துவிட்டு
பூஜையறைக்கு சென்றேன். அட, இதென்ன?! அவள் இங்கே இல்லையே?

ஒருவேளை…அவளது அறையில் இருப்பாளோ? அவளை அழைத்தவாறே அவளது அறைக்குள் புகுந்தேன். ஆனால் அங்கேயும் இல்லை.

இந்தப்பெண் எங்கு தான் போனாள்?

நான் தேடுவதை அறிந்துகொண்ட பக்கத்துக் குடியிருப்பிலுள்ள குழந்தை, “ஆண்ட்டி, பவி கீழ போயிருக்கா பாருங்க” என்றாள்.

அவளுக்கு நன்றி சொல்லியவாறே படிகளில் விரைந்தேன்.

கீழே வேகமாக படிகளில் இறங்கி திரும்பிய என் கண்களுக்கு முதலில், அந்தக் காட்சி விநோதமாகத்தான் தெரிந்தது…
பிறகுதான் அதன் அற்புதத்தை உணர்ந்து கொண்ட என் இதழ்களில் புன்னகை துளிர்விட்டது.

இதோ, நீங்களும் பாருங்கள்…அவள் மரக்கன்றிற்கு, நான் தொடுத்த மாலையை அணிவித்து நமஸ்கரித்துக் கொண்டிருக்கிறாள்!

இருங்கள்…நான் சீக்கிரம் போய் பூஜை பொருட்களை எடுத்து வருகிறேன்.

என்ன… இன்று நெய்வேத்தியம் உங்களுடையதா?
மிக்க சந்தோஷம்!!

– 07/06/2012

Print Friendly, PDF & Email

சகுனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

கற்பனைக் கணவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *