நிஜங்களும் நிழல்களும்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,759 
 
நிஜங்களும் நிழல்களும்!

அந்த அழகான இளம்பெண், உதவாக்கரை கணவனையும், ராட்சசி போன்ற மாமியாரையும் துறந்து வரும் தன் நிலை குறித்து, விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள், “டிவி’ தொடரில்.

ராஜேஸ்வரி இந்தத் தொடரைத் தொடர்ந்து பார்ப்பவள் அல்ல. இருந்தாலும், அவ்வப்போது பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில், கதையின் போக்கு அவளுக்கு பிடிபடாமல் இல்லை. தவிர இந்த, “மெகா தொடர்’களில் கதை, “மினி’யாகத் தானே இருக்கிறது.

ராஜிக்கு இதுபோன்ற பெண்களின் கண்ணீர்தான் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. அவள் வாழ்க்கையில் இந்தப் பெண்ணை விட, அதிகமான சிரமங்களைச் சந்தித்து நீந்தி வந்தவள். எந்த சமயத்திலும், இப்படி இடிந்து போய் அமர்ந்ததில்லை; கதறியதும் இல்லை.

நிஜத்தில் இன்றைய பெண்கள் இத்தனை பலவீனமானவர்களா?

தன் வாழ்க்கையையே நினைத்துப் பார்த்தாள் ராஜி.

அவளுக்கு நினைவு தெரியுமுன்பே, அவள் தந்தை காலமாகி விட்டார். அம்மாவும் அதிகம் படிக்காதவள். திருச்சியில் ஒரு வக்கீல், வீட்டில் சமையல் வேலை செய்துதான் ராஜியைப் படிக்க வைத்தாள். அதிபுத்திசாலி இல்லையே தவிர, சற்று சூட்டிகையானவள்தான் ராஜி.

வக்கீலின் உதவியால், பி.எஸ்.சி., படித்து, ஸ்காலர்ஷிப்பில் எம்.எஸ்.சி.,யும் படித்தாள். வங்கிக்கான தேர்வில், அவள் எம்.எஸ்.சி., முதலாண்டில் இருக்கும் போதே தேர்ந்தெடுக்கப்பட்டு, உடனே வேலையில் சேர்ந்தாள்.

அதற்குப்பின் அவளுக்கும், அவள் அம்மாவுக்கும் பணப் பிரச்னை எழவில்லை. திருமணம் என்ற ஒன்றுதான் வாழ்க்கையில் குறுக்கிட்டு, ராஜிக்குப் பல குழப்பங்களைத் தோற்றுவித்தது.

ராகவனைக் கல்யாணம் செய்த மூன்று ஆண்டுகளில், இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகுதான் ராஜிக்கு, ராகவனுக்கு இன்னொரு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

ராகவன் அந்த மனைவியுடன் வாழ்க்கையைத் தொடர நினைத்துப் பேசிய போது, கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

ராஜியின் மகள் லதாவுக்கும், மகன் ஸ்ரீகாந்துக்கும் அப்போது வயது மூன்றும், ஒன்றும். இனி, இந்தக் குழந்தைகளுக்கு தாயாகவும், தந்தையாகவும் இருக்க வேண்டியது, தன் கடமை என்பதை உணர்ந்தவளாய், சலனம் எதுவுமின்றி ராகவனைத் துறந்தாள் ராஜேஸ்வரி.

அதன் பின், எந்த சந்தர்ப்பத்திலும் அவனைப் பார்க்கவுமில்லை. பேசவுமில்லை. இப்போது ராஜிக்கு வயது அறுபது. பாங்க் வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்டாள். லதா, ஸ்ரீகாந்த் இரண்டு பேருமே படித்து வேலையில் சேர்ந்து, அமெரிக்காவில் இருக்கின்றனர்.

அவர்கள் திருமணமும், அவள் விருப்பப்படியல்ல. இரண்டு பேருமே திருமணம் செய்து கொண்டது இந்தியர்களைத் தான் என்றாலும், ஒரே ஜாதியல்ல; மதமுமல்ல.
வாழ்க்கையில் இத்தனை நடந்த போதிலும், ராஜி இவற்றை தனக்கு ஏற்பட்ட தோல்வியாகக் கருதி, வருந்தியதில்லை.

ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளும் உரிமை, அவரவர்களுக்கு இருக்கிறது. அதில் மூன்றாம் மனிதர்களுக்கு இடமில்லை என்பதுதான் ராஜியின் கருத்து.

ஆனால், சமீபகாலமாக அவள் பார்க்கும், கேட்கும், படிக்கும் கதைகளில், “பெண் உரிமை’ என்ற பெயரில், பல ஜீரணிக்க முடியாத எண்ணங்களும், கருத்துக்களும் பிரபலப்படுத்தப் படுவது, அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

ராஜியின் வாழ்க்கையைப் பலமாக விமர்சித்தவர்கள் உண்டு. ஆனால், ராஜி அவற்றை ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.

தொலைக்காட்சித் தொடரின் பெண்ணின் அழுகை ஓயவில்லை. செல்போன் சிணுங்குவதைப் பார்த்து, ராஜி, “டிவி’யை மவுனமாக்கி, போனை எடுத்து, “ஹலோ’ என்றாள்.

“அம்மா ஹலோ…. லதா…”

ராஜேஸ்வரிக்கு, லதா செல்போனில் கூப்பிடுவதை விட, அவள் போன் செய்த இந்த நேரம் சற்று வியப்பை தந்தது.

“என்ன…. சொல்லு…. எப்படி இருக்கே? என்ன லதா….? எதாவது பிரச்னையா?”

“ஆமாம்…”

ராஜேஸ்வரி திடுக்கிட்டாள். என்னவாக இருக்கும்? லதாவின் கணவன் அருண், தற்சமயம் சிங்கப்பூர் போயிருக்கிறான். எல்லாம் சாப்ட்வேர் வேலைதான். கம்பெனி ஒரு மாசத்திற்கு அங்கே அனுப்பியிருப்பதாக, போன வாரம் போன் செய்த போத, சொல்லியிருந்தாள் லதா.

“என்ன பிரச்னை?”

“அருண் என்னை ஏமாற்றி விட்டான்!”

இதைச் சொல்வதற்காகவே காத்திருந்தது போல் லதாவின் குரல் உடைந்து, விக்கி விக்கி அழுதாள்.

“ஏமாற்றி விட்டான் என்றால்…. விபத்தா… இறந்து விட்டானா? ஏமாற்றி விட்டானா? என்ன விஷயத்தில்…?’

ராஜிக்கு மனசு படபடத்தது. இருந்தாலும், சுதாரித்தபடி உறுதியாகப் பேசினாள்.

“லதா… அழாதே…. எனக்குப் புரியலை!”

“என் தோழி கவிதாவை தெரியுமில்லையா உனக்கு, அருணை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறாள்.”
இப்போது நிஜமாகவே ராஜேஸ்வரிக்கு திடுக்கிடலாக இருந்தது.

“கவிதாவா?”

“ஆமாம்மா… சிங்கப்பூரிலிருந்து இப்பத்தான் இரண்டு பேரும் பேசினர். அவர்கள் கல்யாணம் பண்ணிக் கொள்ள போவதால், விவாகரத்து வேணுமாம்!”

மழையாக லதா அழுவது கேட்டது. ஆனால், அவள் சொன்ன சேதியைத்தான் ராஜிக்கு ஜீரணிக்க கஷ்டமாக இருந்தது.

லதா, அருண், கவிதா மூன்று பேருமே, பள்ளிக்கூட நாட்களிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். மூன்று பேரும் ஒரே மாதிரியான ரசனைகளும், எண்ணங்களும் கொண்டவர் களாக இருந்ததால், மிகச் சிறு உரசல்கள், சண்டைகள் தவிர, வேறு விதமான பிரச்னைகள் எழாமல் நட்பு வளர்ந்து கொண்டிருந்தது.

அருணின் பெற்றோர் இருவருமே கல்லூரிப் பேராசிரியர்கள். அவன் ஒரே பையன். கவிதாவின் குடும்பத்தினர் மிகுந்த செல்வந்தர்கள். அவளுக்கு ஒரே ஒரு தம்பி. கவிதாவின் தந்தை, ஒரு தொழிலதிபர். அவர் பாதி நாட்களுக்கு மேல், வெளி ஊர் அல்லது வெளிநாட்டில்தான் இருப்பார். அவர் மனைவியும் மிகுந்த நாகரிகமானவள். மாதர் சங்கம், சமூக சேவை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ளவள்.

இந்த மூன்று பேருக்குமே பெற்றோரின்பால் அதிக ஈர்ப்பு கிடையாது. இதில், லதாதான் கொஞ்சம் அதிகமாக அப்பா இல்லாமல் வளர்ந்த பெண் என்ற வகையில், அம்மாவை சார்ந்தவள்.

ராஜியும், இவர்களின் பழக்கத்தில் எந்த தவறையும், திருட்டுத்தனத்தையும் கண்டதில்லை. அதனால், திடீரென்று, கல்லூரி படிப்பு முடித்து, உடனேயே வேலையில் சேர்ந்து, லதா – அருண் ஜோடி தாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொன்னதும், அதை வரவேற்கவே செய்தாள். நல்ல நண்பர்கள், கணவன் – மனைவி ஆவது வரவேற்கத்தக்க விஷயம்தானே என்று நினைத்தாள் ராஜி.

கவிதா கூட, “பாவம் ஆன்ட்டி… அருணுக்கு வேற நல்ல பெண்ணே கிடைக்கலை போலிருக்கு…’ என்று கிண்டல் செய்தபோது கூட, யதார்த்தமாகப் புன்னகை செய்தாள் ராஜி.

ஆனால், இவர்கள் இருவரும் அமெரிக்கா போனபோது, கவிதாவுக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்தது.

ஈ-மெயில், போன் என்று நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகவே இருந்தது.

ஆனால், இன்று?

கவிதா, அருணைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாளா?

இது, எந்த தருணத்தில் எடுத்த முடிவு?

இத்தனை வருஷங்களாகத் தோன்றாத காதல், திடீரென்று அருண் – கவிதா இடையே எப்படி முகிழ்த்திருக்கும்?

ராஜிக்கு ஒன்றும் புரியவில்லை.

“அம்மா… அம்மா… ஏதாவது பேசும்மா…” தன்னை உலுக்கிக் கொண்டாள் ராஜி.

“ம்… லதா… சாரி… எனக்கு ஒன்றுமே புரியலை… இது எப்படி சாத்தியம் என்று தான் யோசிக்கிறேன்!” லதாவின் அழுகை இப்போது சற்று ஓய்ந்திருந்தது.

“நீ இங்க வர்றியா, இல்ல நான் இந்தியா வரட்டுமா?” என்றாள் லதா, திடீரென உறுதியான குரலில்.

“இந்த விஷயம் ஸ்ரீகாந்த்துக்குத் தெரியுமா?”

“அவன்கிட்ட நான் பேசலை… அதுக்கு இப்ப அவசியமில்லை. நான் கேட்டதற்கு பதில் சொல்!” என்ன சொல்வது? ராஜிக்கு திடீரென்று, அவள் முதுமை அவளை பலவீனப்படுத்துவது போல் இருந்தது.

“ஆனால், உன் வேலை… லீவு கிடைக்குமா?’ என்றாள்.

“சரி… நான் அங்கு வருகிறேன்.”

போனை துண்டித்து விட்டாள் லதா. ராஜிக்கு உடம்பு லேசாகி, ஏதோ கனவில் நடப்பது போல் தோன்றியது. “ஐந்து நிமிடங்களுக்கு முன், ஓவென்று அழுது மாய்ந்தவள், இப்போது, இரும்பின் உறுதியுடன் பேசுகிறாள். என்ன பெண் இவள்? இவள் தோழியே இவளுக்கு எதிரியா? அது திடீரென்று எப்படி சாத்தியமாயிற்று?’

ராஜேஸ்வரி எதிரே, “டிவி’யில் ஓடும் பிம்பங்களை, எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

மறுநாள் காலை, தனக்கு இன்னுமொரு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கும் என்று ராஜேஸ்வரி நினைக்கவில்லை.

காலை தினசரியை, மேம்போக்காக படித்துக் கொண்டிருந்த போது, தொலைபேசி மணி ஒலித்தது .

“ஹலோ…”

“ஆன்ட்டி… நான் அருண் பேசுறேன்!”

வார்த்தைகள் வரவில்லை ராஜேஸ்வரிக்கு. ஒரு வினாடிதான். தன்னை சமாளித்துக் கொண்டு “”ஹலோ…” என்றாள்.

“நீங்கள் வீட்டில்தானே இருக்கிறீர்கள். இன்னும் அரை மணியில் நாங்கள் நேரே வருகிறோம்.”

தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

ராஜேஸ்வரி சிலையாக, அமர்ந்திருந்தாள்.

“நாங்கள்…’ என்கிறான்; “அரைமணியில் வருகிறோம்…’ சிங்கப்பூரிலிருந்து அரைமணியில் எப்படி வர முடியும்?

“இது என்ன கதையின் ஆரம்பமா… இல்லை முடிவா?’

அழைப்பு மணி ஓசை, ராஜேஸ்வரியை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தது. எழுந்து சென்று, கதவைத் திறந்தாள்.

அவள் எதிர்பார்த்தபடி அருணும், கவிதாவும்… புன்னகையுடன்… எந்தவிதமான குற்ற உணர்ச்சியோ, குரோதமோ, பயமோ இல்லாமல் நின்றிருந்தனர்.

“ஹாய் ஆன்ட்டி.”

“உள்ளே வாங்க.”

கவிதாவின் தலைமுடி இன்னும் குட்டையாக வெட்டப்பட்டு, கொஞ்சம் பூசினாற் போல் இருந்தாள்.

ராஜேஸ்வரி, பேச்சை எப்படி தொடங்குவது என்று தயங்கிக் கொண்டிருக்கையிலேயே பட்டென்று ஆரம்பித்தாள் கவிதா.

“லதா போன் பண்ணினாளா ஆன்ட்டி?”

ராஜேஸ்வரிக்கு கவிதாவின் நேரடியான கேள்வி அதிசயமாக இருந்தது.

“ஆம்’ என்கிறபடி தலையசைத்த ராஜேஸ்வரி, “”இதெல்லாம் என்ன கூத்து?” என்றாள் சற்றுக் கோபமாக.

கவிதா, அருண் இருவரின் முகமும் இறுகியது.

“என் கேள்வி உங்களுக்குப் புரியவில்லையா?” என்றாள் ராஜி ஆத்திரத்துடன்.

“அருண்…நீயே சொல்லு,” என்றாள் கவிதா.

“ஆன்ட்டி… என்னை மன்னிச்சிடுங்க. லதாவும், நானும் கல்யாணம் செய்துக்கிற முடிவின் பின்னணியில், ஒரு கதை இருக்கிறது.”

“என்னது… கதையா?”

“ஆமாம்… உண்மையில் நானும், கவிதாவும்தான் காதலித்துக் கொண்டிருந்தோம். எங்களிடையே நட்பை மீறிய காதல் இருக்கிறது என்ற விஷயம் லதாவுக்கு தெரிந்ததும், சற்று வித்தியாசமாகப் பழக ஆரம்பித்தாள். என் மேல் அதிக அன்பு, பாசம், அக்கறை… நான் இல்லாவிட்டால், தனக்கு வாழ்க்கையே இல்லை என்பது போல்… முதலில் நாங்கள் அதை நம்ப மறுத்தாலும், போகப் போக லதாவுக்கு என் மீது ஒருவித வெறித்தனமான காதல் இருப்பது போல் தோன்றியது.
“”என்னது?”

“ஆமாம் ஆன்ட்டி… அருண் எனக்கு முதலில் நல்ல நண்பன்… அப்புறம்தான் காதலன். அதனால், நான் லதாவின் மனநிலையைப் புரிந்து, லதாவை கல்யாணம் செய்து கொள்ளும்படி அருணிடம் கூறினேன்.”

“இதென்ன தியாகமா? அப்படியானால், இப்போது என்ன திடீர் மாற்றம்?” என்றாள் ராஜி.

“ஆன்ட்டி… தியாகம் என்றெல்லாம் நான் பேசவில்லை. ஒருத்தர் ஒன்றின் மேல், அளவுக்கு மீறிய பிரியம் வைத்திருக்கிறார். அதை, அவரிடம் கொடுப்பதில் என்ன தவறு என்றுதான் நான் நினைத்தேன். தவிர, லதா என்னுடைய அன்புக்குரிய தோழியும் கூட. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும். என்னுடைய ப்ரெண்ட்ஷிப்பை அவள் துண்டிப்பாள் என்று நான் நினைக்கவில்லை.”

“பிறகு…?”

“லதா என்னைக் கல்யாணம் செய்து கொண்டது, என்மேல் உள்ள காதலினால் இல்லை… கவிதாவுக்கு நான் கிடைக்கக் கூடாது என்கிற எண்ணத்தில்தான். கல்யாணத்திற்குப் பின், ஒரு மாசத்திற்குள்ளேயே லதாவின் போக்கு, மாறி விட்டது. கவிதாவின் தொடர்பை வெட்டினாள். என்னை பலமுறை சந்தேகப்பட்டு கத்தி, கூச்சல் போட்டு சண்டையிட்டாள். எல்லாவற்றுக்குமே, ஒரு உடையும் தருணம் இருக்கிறது. அதனால்தான், லதாவின் போக்கிலேயே போக விட்டு, சிங்கப்பூர் வந்ததும், கவிதாவை சந்தித்துப் பேசினேன். நாங்கள் மீண்டும் இணைவது என்று முடிவு செய்தோம்.

“லதா மிகவும் ஹிஸ்டரிகலாக நடந்து கொள்கிறாள். அதன் பின்னும் அவளுக்காக என் வாழ்க்கையை, பாழாக்கிக் கொள்ள நான் தயாராக இல்லை. எங்கள் முடிவு, உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று தெரியும். ஆனால், லதாவுக்குத் தேவை, இப்போது ஒரு மனோதத்துவ நிபுணரின் உதவி; கணவன் இல்லை.”
அருணின் பேச்சு தெளிவாக இருந்தது.

“ஆன்ட்டி… நாங்கள் அவளுக்கு முன்பாக வந்து உங்களிடம் பேசுவோம் என்று லதா எதிர்பார்த்திருக்க மாட்டாள். ஆனால், நாங்கள் உங்களிடம் உண்மையை விளக்கி விடுவது என்ற எண்ணத்தில்தான், அவளுக்கு விஷயத்தை தெரியப்படுத்திய கையோடு சென்னை வந்து விட்டோம்… உங்கள் விருப்பப்படி சட்ட ரீதியாக எப்படி விவாகரத்து பெற வேண்டுமோ, அப்படி பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”

அருணின் இந்த வார்த்தைகள், ராஜேஸ்வரியின் செவிகளில் நெருப்பாக விழுந்தன.

“நீங்கள் பேசுவதெல்லாம் நிஜமா?” என்றாள் ராஜேஸ்வரி.

புன்னகைத்தாள் கவிதா.

“நான் எதிர்பார்த்தேன்… நான் வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொள்பவள்… அருண், லதாவைக் கல்யாணம் செய்து கொள்ள அனுமதி கொடுத்தவளும் நான்தான். இன்று, அவன் வாழ்க்கையை, லதா நரகமாக்கும் போது, அதை விட்டு, அவன் வர வேண்டும் என்று சொல்பவளும் நான்தான். அவரவர் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமைதான் ஒருவருக்கு இருக்கிறதே தவிர, இன்னொருவரின் வாழ்க்கையை அழிக்கும் உரிமை கிடையாது.

“நாங்கள் இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள். எங்களிடம் அர்த்தமற்ற சென்டிமென்ட்டுகளும், போலித்தனமான போர்வைகளும் கிடையாது. லதா நல்லவள்தான். ஆனால், அவள் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன். அவள், அருணுக்கு ஏற்றவள் இல்லை. அதை, அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள்.”

அழுத்தமாகப் பேசிய கவிதா, “”சரி… நாங்கள் கிளம்புகிறோம்… உங்களுக்கும் யோசிக்க நேரம் தேவை…” என்று பதிலுக்குக் கூடக் காத்திராமல், இரண்டு பேரும் எழுந்து வெளியேறினர்.

நிமிர்ந்த நடையுடனும், நேர் கொண்ட பார்வையுமாக செல்லும் கவிதாவையும், அருணையும் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ராஜேஸ்வரி.

திடீரென்று அவளுக்கு, நேற்று, “டிவி’ தொடரில் உதவாக்கரை கணவனுக்காக, விக்கி விக்கி அழுத, அந்தக் கதாநாயகி நினைவுக்கு வந்தாள்.

– பிப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *