கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 5, 2021
பார்வையிட்டோர்: 3,450 
 
 

தன்னுடைய கம்பெனிக்கு கிளம்புவதற்காக கிளம்பிக்கொண்டிருந்த ரஹீம் “அப்பா ராஜேஸ் வீட்டுல புதுசா ஒரு நாய்க்குட்டி வந்திருக்குப்பா” சூப்பரா இருக்கு பெண் பாத்திமா கண்களை விரித்து ரஹீமிடம் சொல்லவும், ரஹீமுக்கு மகள் அதை சொன்ன அழகு மனதை தொட்டாலும், நாய் வளர்க்கும் விஷயத்தில் அவனுக்கு என்றுமே ஒத்து வருவதில்லை.

மகளின் தோளை மெல்ல தொட்டு நாய் குட்டி எல்லாம் நம்மால வளர்த்த முடியாதுடா செல்லம். மகளின் முகம் சற்று சுருங்கியது, போப்பா எப்பவுமே நீ இப்படித்தான் சொல்லறே, கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க அம்மாவிடம் சொல்ல சமையலறைக்கு சென்றாள்.

மகள் உள்ளே செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ரஹீமின் மனம் சற்று

சோகப்பட்டாலும், நாய் மட்டுமல்ல எந்த பிரணிகளையும் வளர்ப்பதற்கு அவன் விரும்புவதே இல்லை. அவனை பொறுத்தவரை எந்த பிராணிகளும் அதனதன் இடத்தில் வளர்வதுதான் சிறந்தது என்ற கொள்கை உடையவன்.அது மட்டுமல்ல

நாய் வளர்க்கும் நிறைய பேரை பார்த்து விட்டான், அவர்களுக்கு விருப்பம் இருக்கும் வரை வளர்த்து விட்டு பின் அதை அவிழ்த்து ரோட்டில் விட்டு விடுவார்கள். பாவம் ஒரு வாய் சோற்றுக்காக தெருவில் பலரிடம் கல்லடியும், விரட்டுதலையும் பார்த்து

இவனுக்கு கண்ணில் நீர் வரும். எதற்காக இவர்கள் நாயை வளர்க்க வேண்டும்?

பின் அப்புறம் ரோட்டில் அவிழ்த்து விட்டு விட்டு கண்டும் காணாமலும் இருக்கவேண்டும்? அதுவும் என்னைப்போல பொருளாதாரத்தில் மத்திய வர்க்கமாயும், இல்லாமல் கீழ்மட்டத்திற்கும் போகாமல் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும்

நபர்களுக்கு நாயோ, அல்லது பிடித்த பிராணிகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம்தான்.

ஆரம்பத்தில் பாலும், முட்டையும் கொடுப்பது, போகப்போக செலவுக்கணக்கு ஏற அதற்கு பழையது கூட போட முடியாமல் வீட்டை விட்டு விரட்டுவது?

ராஜேஸ் பாத்திமாவின் பள்ளித்தோழன். இருவரும் பக்கத்திலிருக்கும் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரே தெருதான், ராஜேஸ் வீடு இவர்கள் வீட்டிலிருந்து நான்கைந்து வீடு தள்ளியிருக்கிறது. மாலை பள்ளியில் விட்டு ஆட்டோவில் வந்து இறங்கும்போது அவன் அம்மா அந்த நாய் குட்டியை கையில் வைத்து இருப்பார்கள். இறங்கியவுடன் புத்தகப்பையை அம்மாவிடம் கொடுத்து விட்டு ராஜேஸ் குட்டியை வாங்கிக்கொண்டு தன் நண்பர்களிடம் பெருமையாய் காண்பிப்பான். அதை பார்த்துத்தான் பாத்திமாவுக்கும் நாய் குட்டி வளர்த்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்.

பெருமூச்சுடன் எழுந்தவன் மணியை பார்க்க கம்பெனிக்கு நேரமாகிவிட்டதை உணர்ந்து அவசரமாய் கிளம்பினான்.

சைக்கிளை எடுத்து கிளம்பியவன் ராஜேஸ் வீடு தாண்டும்போது கவனித்தான்,

ராஜேஸின் அப்பா சண்முகமும் வேலைக்கு கிளம்புவதற்கு தயாராய் இருந்தார். அவரும் இவனது கம்பெனியில்தான் வேலை செய்கிறார். இவனை கண்டவுடன் ரஹீம் நில்லு நானும் வர்றேன், சைக்கிளை அவன் சைக்கிளை ஒட்டி ஓட்டி வந்தார்.

என்ன உங்க வீட்டுல நாய் குட்டி வாங்கி இருக்கீங்களோ? ரஹீம் கேட்டவுடன் அதை ஏம்ப்பா கேக்கறே? பையன் ஒரே பிடிவாதம், நாய் குட்டி வாங்கோணுமுன்னு. அடம் பிடிச்சான். சரி நம்ம பிரண்டு வீட்டுல நாய் குட்டி போட்டவுடன் வாங்கிட்டு வந்துட்டேன். நாயும் நல்லாத்தான் இருக்கு, கடுவந்தான், பையனுக்கு ஒரே சந்தோசம், அது கூடவே விளையாண்டுகிட்டு இருக்கான்.

ரஹீம் ஒன்றும் பேசவில்லை.கடைசி வரைக்கும் பாத்துகிட்டா சரி, மனசுக்குள் நினைத்துக்கொண்டாலும் எதுவும் சொல்லவில்லை.

நான்கைந்து நாட்கள் ஓடி விட்டன. பாத்திமா நாய்குட்டியை பற்றி மறந்து விட்டாள். எதனால் என்று தெரியவில்லை. ஒரு வேளை தினமும் ராஜேஸ் அம்மா நாய்குட்டியை வைத்திருப்பதை பார்த்து சுவாரசியம் குறைந்து விட்டதா என்று தெரியவில்லை.

பாத்திமா ஐந்தாவது முடித்து விட்டாள். ஆறாவது வகுப்புக்கு வேறொரு பள்ளிக்கூடத்தில் அவளை படிக்க வைக்க நினைத்தவன் சற்று தள்ளி இருந்த பள்ளியில் சேர்த்து விட்டு ஆட்டோவுக்காகும் செலவுகளுக்கு பயந்து குடித்தனத்தையே பள்ளிக்கு அருகில் மாற்றிக்கொண்டான். அவன் சைக்கிளில் வேலைக்கு சென்று வருவதால் பெரிய தொந்தரவு ஒன்றுமில்லை. பாத்திமா நடந்தே

பள்ளிக்கு சென்று விடுகிறாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை, அவன் மனைவி வாசலில் ச்..ச்..போ..போ..என்று எதையோ விரட்டுவதை கேட்டு கண் விழித்தவன் மெல்ல வெளியே வந்தான்.

பாருங்க இந்த நாய் வீட்டு முன்னாடியே நின்னுகிட்டு போகமாட்டேன்னுட்டு’

இவனும் நாயை பார்க்க அது வயிறு ஒட்டிப்போய் பாவமாய் கண்களில் ஏதாவது போடு என்ற ஏக்கத்தோடு நின்று கோண்டிருந்தது.

ஏட்டி பாவமா இருக்கு ஏதாவது இருந்தா போடேன் அவன் சொல்ல வியப்புடன் அவனை பார்த்தாள். ஒரு நாள் போட்டா நித்தம் வந்து நிக்கும்” மெல்ல முணங்கினாள். அதுக்கு என்ன செய்ய? மூஞ்சியை பாரு இப்பவோ பிறவோன்னு இருக்கு” மீண்டும் மனைவியிடம் அங்கலாய்ப்பாய் சொன்னான்.

எனக்கென்ன நான் கொண்டு வந்து போடுறேன், நம்ம வீட்டுல பழசு நிறைய இருக்கு, வீணாத்தான் போயிட்டிருக்கு. இவள் உள்ளே செல்வதை பார்த்த அந்த நாயின் கண்களில் தெரிந்த எதிர்பார்ப்பின் மினுமினுப்பு இவனுக்கு அப்படியே வயிற்றை பிசைந்தது.

ஆர்வமாய் தரையில் போட்டதை விழுங்கி விழுங்கி சாப்பிடும் நாயை பரிதாபமாய் பார்த்துக்கொண்டு நின்றார்கள் ரஹீமும் அவன் மனைவியும். அப்பொழுதுதான் தூங்கி எழுந்து வெளியே வந்த பாத்திமா இவர்கள் எதை வேடிக்கை பார்க்கிறார்கள் என்று அருகில் வந்து எட்டி பார்த்தவள் “அட இது ராஜேஸ் வச்சிருந்த நாய்க்குட்டி”ப்பா என்றாள்

மனதில் எழுந்த ஆத்திரத்தை எச்சிலை விழுங்குவது போல் அடக்கி கொண்டான் ரஹீம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *