நான் சாகமாட்டேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 3,545 
 
 

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேல் மாடியில் வலைக்கம்பி அடித்த ஜன்னல்களுக்கப் பால், மர உச்சிகளின் பரந்த பச்சைக் கம்பளங்கள் இருட்கோலம் பூண்டன. இருண்ட பச்சை, மஞ்சள் பரவிய பச்சை, புதிய தளிரான பச்சை என்ற அத்தனை பச்சைகளும் – பூவுலகின் அதிசயங்களாய் அப்பச்சைகளிடையே தலைகாட்டி, தென்றலில் சிலுசிலுத்த சின்ன சின்ன பூக்களும், அந்த இருட்போர்வையுடன் இரண்டறக் கலந்தன. பூமி இருண்டு வந்தது. மங்கி மறைகின்ற மாலை நேரத்துச் சங்கமத்தில், மெதுவாகத் தூறிய மழையின் குளுமை; எங்கேயா கீச்சிடும் பறவைகள்; வீதியில் உறுமி ஆரவாரிக்கும் வாகனங்கள்;

இவற்றுக்கு அப்பாலுக்கு அப்பாலாய் – அந்தச் சோகங்கவிந்த இருள் – சற்று நேரத்திற்கு முன் பச்சைக் கம்பளமாய் அதிலிழைந்த பூக்கோலங்களாய் பரவச மூட்டிய அந்தக் காட்சி இருளாய் – இருளாய்…

இந்தப் பிரபஞ்சத்தின் அந்த ஆழமான சோகம் – எதற்கோ குரல்விட்டுக் கத்த வேண்டும் என்ற தவிப்பிலும் – மௌனமாக மனத்தினில் அழும் அந்த மௌடீகச் சோகம் – எனக்குப் புரிந்தமாதிரி இருந்தது.

என் மனத்தை ஏதோ செய்தது. நான் மீண்டும் வலைக்கம்பி அடித்தது ஜன்னலுக்கப்பால் வானத்தை அண்ணாந்து பார்த்தேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜொலிக்கும் வைரக்கற்களாக நட்சத்திரங்கள் மினுங்கின. இலையுதிர்ந்த – பெரிய மொட்டை மரமொன்று நிமிர்ந்து நின்றது. எங்குமே பச்சை போர்த்து வசந்தம் சிரிக்கையில் – அந்த மரம் மட்டும் அதற்கு விதி விலக்காய் ஏதோவொரு ஆழ்ந்த சோகத்தில் இலயித்திருப்பதாக எனக்குப்பட்டது.

பூப்போட்ட பச்சைக் கம்பளமான மரத்தொகுதியின் இருட் கோலத்திலும் தனிமையில் வாடி நின்ற ஒற்றை மரத்திலும், கீச்சிடும் பறவையின் ஒலியிலும் ஆரவாரிக்கும் வாகனங்களின் உறுமலிலும் அங்கொன்றும், இங்கொன்றுமான நட்சத்திர மினுக்கிலும் நான் ஏதோ சோகத்தைக் கான்கின்றேன்.

என்னுள் கிளர்ந்து, என்னுள் வளர்ந்து, என்னை மூடி விழுங்கி விடுகின்ற பயங்கர பூதம் மாதிரி அச்சோகத்தை நான் இனங் கண்டேன்.

அப்போது நான் இனிய கனவுகள் காண்கின்ற பிள்ளைப் பிராயத்தினனாக இருந்தேன். என்னிலும் இரண்டு வயது இளையவளான என் சின்னத்தங்கையுடன் நான் எப்போதும் இருப்பேன். பாட்டி சொல்லுகிற பூதக்கதைகளை எல்லாம் நானும் அவளும் ஒன்றாகவேயிருந்து கேட்போம். நானும் அவளும் ஒன்றாகவே பக்கத்து வளவில் மாங்காய் பிடுங்கித் தின்போம். நானும் அவளும் ஒன்றாகவே வீட்டின் அயலெல்லாம் உலா வருவோம்.

இப்போது எனக்கு முப்பது வயதாகின்றது. என்றாலும் இந்த உலக மயக்கங்களில் பற்றற்ற மனிதன் போல நான் ஈசிச்சேரில் படுத்திருக்கின்றேன். வாழ்க்கையில் இனிய, கடிய அனுபவங்களையெல்லாம் நான் அனுபவித்து முடித்திருக்கின்றேன். ‘வாழ்க்கை’ என்பதன் அர்த்தங்களையெல்லாம் என்னைப்போல உணர்ந்து இரசித்து இரசித்து அனுபவித்தவர்கள் என்னளவில் யாரும் கிடையாது.

கள்ளம் கபடமில்லாத சின்னஞ் சிறுவனாய்,- என் தங்கையுடன் கழித்த அந்த நாட்களின் பசுமை வனப்புகள் என் நினைவில் படிந்து நிற்கின்றன. பாட்டியின் பூதக் கதைகளைக் கேட்டு அவள் பயந்து நடுங்குவதும், அடுத்த வளவில் மாங்காய் பிடுங்கும் போது அகப்பட்டு அடிவாங்கி அழுது குலுங்குவதும், பல் துலக்கும் போது அவள் வாயிலிருந்து வடியும் கரிகலந்த எச்சிலும், செல்லமாகச் சிணுங்குகின்ற அழுகையும், கெக்கட்டமிட்ட சிரிப்பும், அந்தச் சிவத்த சட்டையும் கறுத்தப் பொட்டும் போட்டு அவள் பளபளத்த நாட்களும்…

ஒரு நாள். இன்று போல இருண்ட ஒருநாள்; மப்பும் மந்தாரமுமாக இருந்த மழை நாள்; மின்னல் மின்னின நாள்; இடி இடித்த நாள்;

“அண்ணை வயிற்றுக்கை குத்துதடா” என்று துடித்தாள் தங்கை . நானும் அழுதேன். அம்மாவும் அழுதாள். மாலை மங்கும் நேரம்; மரம் பச்சையெல்லாம் இருண்டன. காகங்கள் கத்திக்கொண்டு பறந்தன, மழை தூறிக் கொண்டு இருந்தது. மழைத் தண்ணீர் ‘றைவரின்’ பார்வையை மறையாமலிருக்க, மழைத் தண்ணீரை வழித்து விடுகின்ற இருப்புத்துண்டு ஆடிக்கொண்டிருக்க ‘போம் போம்’ என்று கோணடித்துக் கொண்டு கார் வந்தது நானும், தங்கையும் முற்றத்தில் வளர்த்த மல்லிகைக் கன்றை நெரித்துக் கொண்டு கார் வந்து ‘பிறேக்’ போட்டு நின்றது.

ஐயா அவளைத் தூக்கிக் கொண்டு காரில் ஏறினார். அம்மாவும் ஏறினாள்; வீட்டில் உடுத்திருந்த மண்வேட்டியுடன் தான் ஐயா காரில் ஏறினார். எங்காவது போகும் போது கட்டுகின்ற பவுன் சங்கிலியைக்கூட அன்று அவர் கட்டவில்லை. அவர் போடுகின்ற கறுத்த கூலிங் கிளாசையும் எடுக்காமலேயே , கவலை தோய்ந்த கறுத்த முகத்தோடு அவர் காரில் ஏறினார். அம்மாவும் வீட்டுக்குக் கட்டியிருந்த பச்சை சேலையோடை காரிலேறி ஐயாவுக்குப் பக்கத்திலே அழுது கொண்ட இருந்தா. கோயிலுக்கு போகும் போது அல்லது எங்காவது கலியாண வீட்டுக்குப்போகும் போது வீட்டு அலமாரியிலிருந்து அவா எடுத்துப் போடுகின்ற பதக்கம் சங்கிலியை அன்று அவா போடவில்லை. வடிவாய் மினுங்குகின்ற அந்த நெளி நெளிக் காப்புகளை அவா போடவில்லை. பவுன் ‘புறோச் சை’ எடுத்து அவா நெஞ்சில் குத்தவில்லை. முடிமயிர் வைத்துத் தலையைப் பின்னிக் கட்டவில்லை, குங்குமப் பொட்டு நெற்றிக்குப் போடவில்லை. ஐயாவுக்கும் கொடுத்து வாய் சிவக்க சிவக்க சப்புகின்ற வெற்றிலை பாக்கைக்கூட அவா அன்று சப்பவில்லை.

ஐயாவுடைய தோளிலை சரிந்து அழுதுகொண்டே அவா இருந்தா.

நானும் அம்மாவைப் பார்த்தேன்; ஐயாவைப் பார்த்தேன்; தங்கச்சியைப் பார்த்தேன். அழுதேன்; விக்கி விக்கி அழுதேன்; ‘மீனாட்சி’ என்று கத்திக்கொண்டு அழுதேன். பாட்டி என்னைத் தேற்றிக் கொண்டே, தானும் கண்ணீர் விட்டாள். கார் இரைந்து கொண்டு பறந்தது.

நான் பாட்டியின் மடியில் கிடந்து அழுதேன். ஏன் அழுகிறேனென்று தெரியாமலேயே அழுதேன்.

கார் மீண்டும் வந்தது. ‘ஐயோ என்ரை இராசாத்தி’ என்று என்னைப் போட்டுவிட்டு பாட்டி ஓடினாள்.

நான் எழும்பி நின்று முழுசிப் பார்த்தேன். பச்சை, சிவப்பு நிறங்கள் பூசப்பட்ட வடிவான ஒரு சின்னப் பெட்டியும் கொண்டு வந்தார்கள். தங்கச்சியை யாரோ தூக்கிக் கட்டிலில் கிடத்தினார்கள். அம்மாவையும் தூக்கி பாய் விரித்து, சீலை போட்டு, தலையணி போட்டு கிடத்தினார்கள். ஏராளம் அம்மா மாதிரிப் பொம்பிளையளும், பாட்டி மாதிரிக் கிழவியளும் வந்து ஏதோதோ சொல்லிக் குழறினார்கள்!

ஐயா தலையைச் சுவரில் சாய்த்து விக்கிக் கொண்டிருந்தார்.

தங்கச்சி கிடந்த கட்டிலில் தலைமாட்டிலும், கால் மாட்டிலும் பக்கத்து வீட்டுப் பெரியம்மா குத்து விளக்கு களைக் கொளுத்தி வைத்தா.

எல்லோரும் தங்கள் தங்கள் பாட்டில் ஏதோதோ செய்துக் கொண்டிருந்தார்கள். என்னை ஒருவருமே கவனிக்கவில்லை. எனக்குப் பயம் வந்தது; அழுகை வந்தது.

நான் அம்மாவின் படுக்கைக்குப் பக்கத்தில் போயிருந்து அவாவின் சொக்குகள் இரண்டையும் கையால் தொட்டு, ஆட்டி ‘அம்மா’ என்றேன். அவா என்னைப் பாராமல் கிடந்தா; பதில் பேசாமல் கிடந்தா; ‘என்னடா தம்பி’ என்று கேளாமல் கிடந்தா, சின்னக்குஞ்சாச்சி. ‘அம்மாவுக்குச் சுகமில்லை இராசா; அவளைக் கரைச்சல் படுத்தாதே’ என்று என்னைத் தூக்கிக்கொண்டுபோய் தேத்தண்ணி தந்தா.

நான் அவ்வளவு சனக்கூட்டத்திலும் புகுந்து. புகுந்து திரிந்தேன். சனக்கூட்ட மென்றால் எனக்கு நல்ல ஆசை. குஞ்சியம்மாளின் கலியாண வீட்டுக்கு எவ்வளவோ பேர் வந்திருந்தார்கள். அவ்வளவு சனத்துக்கையும் நானும், தங்கச்சியும், வேறு ஐந்தாறு சிநேகிதர்களும் சேர்ந்து கைதட்டி விளையாடினது எனக்கு அப்போது ஞாபகம் வந்தது. நான் தங்கையை நினைத்துப் பார்த்தேன். மெதுவாய், மெதுவாய் அவள் கிடந்த கட்டிலலடிக்குப் போய் தங்கச்சி தங்கச்சி என்று கூப்பிட்டேன். திடீரென என்னைக் கட்டிப்பிடித்த அம்மா மாதிரி ஒரு பெண் ‘என்ரை இராசா’ என்று அழுதாள். எல்லோரும் என்னைச் சுற்றி அழுதார்கள். நானும் பயந்து மிரண்டு போய் அழுதேன்.

பக்கத்து வீட்டு அக்கா எப்படியோ தெண்டித்து அந்தக் கூட்டத்துக்குள்ளிருந்து என்னைத் தூக்கிக் கொண்டு போனதையும் தங்கடை வீட்டு சின்ன அறைக்குள் என்னை இறக்கிவிட்டு ‘உன்ரை தங்கச்சி செத்துப் போச்சடா கண்ணா’ என்று கண் கலங்கிச் சொன்னதையும், நான் இப்போ நினைத்துப் பார்க்கின்றேன்.

அதைக் கேட்ட போதும் எனக்கு அழுகை வரவில்லை நான் பார்த்துக் கொண்டிருந்த ஜன்னலுக்கப் பால் மர இலைகளெல்லாம் கறுத்து இருளுவதை நான் கண்டேன ; ஒன்றுக்குப் பின் ஒன்றாக இரண்டு காகங்கள் கத்திக் கொண்டு பறப்பதை நான் கண்டேன். பின் வேறொன்றையும் நான் காணவில்லை; தலைக்குள் ஏதோ செய்ய, கட்டிலில் கிடந்த தங்கையின் கோலம் மட்டுமே எனக்குத் தெரிய நான்…

பச்சை இருள்வதாய்த் தெரியும் போது, அந்த நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகக் காகங்கள் கத்திக் கொண்டு பறக்கும் போது, அந்த வேதனையான நினைவின் திட்டுகள். மனதில் கிளர்ந்து என்னை ஏதோ செய்கின்றன.

என்னுள் கிளர்ந்து, என்னுள் வளர்ந்து, என்னையே மூடி விழுங்கி விடுகின்ற பயங்கர பூதம் மாதிரி என் வாழ்க்கையில் அந்த சோக நினைவுத் திட்டுகள்…

ஏதோ நினைவுகளில் மூழ்கி நெடுநேரமாக ஈஸிசேரில் படுத்து விட்டேன் போலிருக்கிறது. வாலிப வயது என்றாலும் வாழ்க்கைச் சோதனைகளில் அடிபட்ட மனத்தினனாயும், இயற்கையிலேயே நோய் பொருந்திய உடம்பின னாயும் இருந்தால் அசதி மேலிடுகின்றது; ஈஸிசேரில் பிரப்பம் நார்கள் உடம்பில் படிந்து வருத்த, சோம்பல் முறித்துக்கொண்டே அப்படியும் இப்படியுமாய் நெளிந்து கொண்டிருக்கின்றேன்.

வலைபோட்ட ஜன்னலுக்கு அப்பால் கீழ்த்திசையில் மிதக்கும் முழுநிலவில் குளிர்ச்சி தெரிகின்றது. ‘சொக்க வெள்ளிப் பாற்குடத்தினின்றும்’ சொரிந்த பசும்பாலாய் நிலவுக்கதிர்கள் சிரிக்கின்றன. ஊருகின்ற தென்றலின் சலசலப்பில் மர இலைகள் சோக கீதம் இசைக்கின்றன. எங்கிருந்தோ கத்தும் குயிலோசை காதில் பாய்கின்றது. மனத்தை அறுத்து, அறுத்து, அறுத்து ஏதோ செய்கின்றது.

நான் மெல்லச் சிலிர்த்துக் கொள்கின்றேன். என்னுள் மெதுவாகச் சிரித்துக் கொள்கின்றேன். ‘எங்களது இன்பமான சிரிப்பில் கூட சோகம் நிறைந்திருக்கின்றது’ என்ற ஷெல்லியின் கவிதை வரிகளை நினைத்துக் கொள்கின்றேன்.

ஓரிரு வருடங்களுக்கு முன் என் வாழ்வின் அந்தப் பசுமையான பகுதிகளை நான் அனுபவித்திருக்கின்றேன். காதல்…அந்த மகத்தான அனுபவங்களை வெறும் வார்த்தைகளுக்குள் சிறைப்பிடிக்க என்னால் முடியாது. சோகங்களும், துன்பங்களும், விரக்திகளும், ஏமாற்றங்களும் நிறைந்த ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் ஏற்படு கின்ற மிகமிக மகத்தான, இனிமையான அனுபவம் அதுவாகத்தானிருக்க முடியுமென நினைக்கின்றேன். எங்கள் ஆத்மாவின் உணர்ச்சிகளைப் புரிந்து, எங்கள் இன்பங்களையும், துன்பங்களையும், துயரங்களையும், சோகங்களையும், தங்களுடையதாகவும் கருதி, அதில் அமிழ்ந்து, எங்களுக்காகவே வாழ்கின்ற அல்லது நாங்கள் அவர்களுக்காகவே வாழ்கின்ற எதுவென்று சொல்லி விவரிக்க முடியாத அந்த மோகனமான வாழ்க்கை….; என்னையும் ஒருத்தி காதலித்தாள். கடற்கரையிலும், பூஞ்சோலையிலும்; காற்றாட உலாவுவதிலும் அல்லாமல் இதய உணர்ச்சிகளில், வாழ்க்கை பற்றிய நோக்கங்களில், இந்த உலகத்தின் மயக்குகின்ற மோகனமான அழகுகளில் நானும் அவளும் ஒன்றாக வாழ்ந்தோம்.

நான் பெருமூச்சு விடுகின்றேன். நான் பெருமூச்சு விடுவது தவறென்று ஒருவரும் சொல்லமாட்டார்களென்றும் நினைக்கின்றேன்.

வெளியே ஊதும் பனிக்காற்றில் உடம்பு குளிர்கின்றது. மேகத் திரையில் மறைந்த சந்திரனின் மங்கிய ஒளியில் மரங்களின் கீழ் கரும்பூதங்கள் தலையை நீட்டுகின்றன. அந்த ஆழ்ந்த நிசப்தத்தில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளின் கீச்சிடும் சப்தங்கள் கேட்கின்றன.

எனக்கும் பெருமூச்சு விட வேண்டும் போலத் தோன்றியது. ஏதாவதொரு மோகனமானதொரு மௌனகீதத்தை முணுமுணுக்க வேண்டும் போலவும் தோன்றியது. ஜானகி ராமனையோ, லா.ச.ராவையோ, மௌனியையோ எடுத்து வைத்துப் படிக்க வேண்டும் போலவும் தோன்றியது.

வீட்டின் கீழ்ப்பகுதியில் குடியிருக்கும் இளம் தம்பதிகளின் ஒரே குழந்தையின் அழுகையொலி கேட்டது. அருகில், எங்கோ ‘பாத்ரூமில்’ யாரோ குளிப்பதினால் தண்ணீரின் சலங்கைச் சத்தம் கேட்டது.

நான் சோம்பல் முறித்து ஒரு கொட்டாவி விடுகின்றேன்.

இந்த வாழ்க்கையின் – மாலை நேரத்து வானம் போன்ற மோகனமான நினைவுகள், உணர்ச்சிகள், அனுபவங்கள் எல்லாம் நிலையில்லாததுதானா? வானவில்லின் வர்ண ஜாலங்களாய் அவை மறைந்து விடத்தான் வேண்டுமா என நான் நினைக்கிறேன். ஏதோவொரு உணர்ச்சி பூர்வமான மென்மையான கீதத்தைக் கேட்டு அனுபவிப்பது போன்ற நிலையில் நானிருந்தேன். எங்கள் வீட்டு முற்றத்தில் – பரபரவென்று இருளுகின்ற வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் – சாணத்தால் மெழுகிய திண்ணை களின் தூய்மையில் – வீடுகளில் விளக்குகள் ஜெகஜோதி யாய் பிரகாசிக்க ஆரம்பிக்கையில் – இழைகின்ற தென்ற லில், முற்றத்து முல்லையின் சுகந்தத்தில் அந்தக் காலங் களில் நான் என்னை மறந்திருந்தது போன்ற நிலையிலிருந் தேன். பருவவாளிப்பில் எழிற்கோலம் காட்டி, வாலிபத்தினாலும் மனத்தின் களங்கமற்ற புனிதத் தன்மையினாலும் முகத்தில் எழில் காட்டி, முத்து நகைகாட்டி, என்னருகில் அவளிருந்து காதல் கதை சொன்ன பரவச நிலையில் நானிருந்தேன்; அவளை முதன் முதல் கண்ட போது – பார்வையும், பார்வையும் முட்டி மோதியபோது, இப்படியும் ஒரு பெண்ணா என்று நானினைத்துருகிய அந்தக் கணத்தில் இருந்தது போல நானிருந்தேன்.

இவற்றைவிட வேறுவிதமாக அந்தப் பரவச நிலையை என்னால் சொல்ல முடியாது. இந்த உலகில் ‘சுடர்மிகும் அறிவுடன்’ பிறந்தவர்கள், அந்த அறிவின் உச்சத்தில் எப்படி இருந்திருப்பார்களென்று புரிந்தவர்கள் என்னுடைய நிலையையும் புரிவார்களென்று நம்புகின்றேன்.

வாழ்க்கையில் எதுவும் அழிவதில்லை; வாழ்க்கையின் மகத்தான அனுபவங்கள் அழிந்துவிடுவதுமில்லை; வாழ்க்கையின் அர்த்தமே உணர்ச்சி பூர்வமான இன்பந்தான்;

வாழ்க்கையில் ஏற்பட்ட சோகங்கள் கூட – அந்தச் சோகங்களின் மங்கிய நிழலான நினைவுகள் கூட இன்பந்தான்; போராட்டங்களும், வெற்றிகளும்…தோல்விகளும் இன்பந்தான்; எல்லாமே இன்பந்தான்; இப்படியெல்லாம் நான் நினைக்கின்றேன்.

இருள்கின்ற பச்சை இலைகளும் ஒன்றன் பின் ஒன்றாக கத்திக்கொண்டு பறக்கும் காகங்களும், என் மனத்தில் சோக நினைவுகளை மீட்டாலும் கூட, அதுவும் ஒரு இன்பந்தானென நான் நினைக்கிறேன்.

வாழ்க்கையின் சமூக அமைப்புகள் அவளையும் என்னையும் பிரித்து வைத்தது. நிரந்தரமாகவே பிரித்து வைத்தது. ஏழை வாலிபனும், பணக்காரப் பெண்ணும் எப்படி ஒன்றாக வாழ முடியும் என்று கேட்பது போல இந்தச் சமூக அமைப்பு எங்களைப் பிரித்தது.

வழக்கமாகவே அவள் என்னைச் சந்திக்கின்ற – ஒரு நாள் மாலையில் அவள் என்னைச் சந்திக்க வரவில்லை: இரண்டாம் நாளும் வரவில்லை. என் உயிருக்குயிரான ஏதோவொன்றை இழந்தது போல நான் தவித்தேன். உலகம் எங்குமே சூனியமாகக் காட்சி அளிப்பது போல நாசி. உணர்ந்தேன்.

இருள் நிறைந்த மூன்று மாதங்களின் பின் இடியான அந்தச் செய்தி என் காதில் விழுந்தது. அவள் போய் விட்டாள்.

அவளையும் – என்னையும் நன்கறிந்த அவளது தூரத்து உறவினன் ஒருவன் இதை எனக்குச் சொன்னான். மாலை மங்கி இருளும் சூழலில் – வானத்து அந்தகாரத்தில் காகங்கள் கத்திக் கொண்டு பறக்கையில் – மின்மினிப் பூச்சிகளாக வீதி விளக்குகள் பளிச்சிடுகையில் ஓடும் இரட்டைத்தட்டு வஸ்சின் மேற்பகுதியில் என்னருகில் இருந்த அவன் இதை என்னிடம் சொன்னான்.

நான் ஓடுகின்ற வஸ்சிலிருந்து ஓடாத காட்சிகளை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மரம் பச்சைகள் இருண்டன; பறவைகள் கத்திக் கொண்டு பறந்தன; எனது நெஞ்சில் ஏதோ செய்தது; கண்கள் இருண்டு வந்தது; ஒருமுறை குரலெடுத்து அழவேண்டும் போலிருந்தது.

இப்போது நான் அதை நினைத்துப் பார்க்கிறேன். அவளை – அவள் அன்பை – அந்த அமைதியான அழகை நினைத்து மனதில் அழுகின்றேன். அவளுடன் கழித்த அந்த நித்தியமான நாட்களை – அவள் மறைந்தாலும் மறையாது நிலைத்துவிட்ட அந்தப் பசுமையான அனுப்வங்களை நினைத்து – அந்த இன்ப நினைவுகளிலேயே வாழ முனைகின்றேன். அவளுடன் பகிர்ந்த அந்த அனுபவங்களின் மங்கிய மனப்பதிவுகளை நான் நினைக்கும் போது எவ்வளவு இன்பங் கலந்த வேதனை இந்த வாழ்க்கை என்றும் நினைக்கின்றேன். நான் அனுபவித்த மகத்தான சோகங்களின் உள்ளார்த்தமான அழகை – அந்த இன்பங்களை நான் அனுபவித்தது போல மன நிறைவுங் காணப் பார்க்கின்றேன்.

உறுமிச் செல்லும் வஸ்சின் ஓசை வீதியில் கேட்கின்றது. அதன் ஒளிக்கோடுகள் இருண்டு கிடக்கின்ற மரங்களில் அசைகின்றன. அவற்றின் தேய்வில் கீழே இளம்குடும்பத்தின் குசுகுசுப்புக் கேட்கின்றது.

எனக்கு நெஞ்சை ஏதோ செய்கின்றது; மூச்சு அடைப்பது போல் இருக்கின்றது; கை கால்கள் விறைப்பதுவும் தெரிகின்றது.

சாவு என்னை அண்முகின்றதா…?

நான் சாக மாட்டேன்.

எத்தனை எத்தனை விரக்திகளும், இன்பங்களும், ஏமாற்றங்களும், சோகங்களும் ஏற்பட்டாலும் – இந்த உலகின் மயக்குகின்ற, மோகனமான, எழிலான வனப்புகளை விட்டு நான் பிரியமாட்டேன்.

‘வாழ்க்கை அழகானது; இன்பமானது; வாழ்க்கை போராட்டங்களும் வெற்றிகளும் தோல்விகளும் இன்பமானவை.’

‘நான் ஏன் சாக வேண்டும்..?’

‘நான் சாக மாட்டேன்.’

– 1972, சாதாரணங்களும் அசாதாரணங்களும், முதற் பதிப்பு: அக்டோபர் 1983, நர்மதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *