நான்கு தோழிகளின் கதை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 12,612 
 

1.

மழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில் தேவதையென என் முன்னால் நீ தோன்றினாய் என்றுதான் எழுத நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லையே! முகம் முழுவதும் அப்பிய பாண்ட்ஸ் பவுடரும்,மிதமிஞ்சிய பெர்பியூம் வாசத்துடனும் எனக்கு முன் வரிசை நாற்காலியில் நீ அமர்ந்தபோது “யாருடா இது? தெருக்கூத்துல இருந்து தப்பிச்சு வந்தத்துட்டாளா? என்றுதான் என் மனம் என்னிடம் கேட்டது. முத்துக்களுக்கு பெயர்பெற்ற அந்த சிறுநகரத்தில் ஒரு கணிப்பொறி மையத்தில்தான் உலகப்புகழ் பெறாத நம் சந்திப்பு நிகழ்ந்தேறியது.

பெண்ணொருவள் தோழியாக மாறுவாள் என்கிற எண்ணம்கூட தோன்றாமல்,பெண்ணிடம் பேசினாலே அது காதல் எனும் முட்டாள்தனம் மட்டுமே மனதெங்கும் நிறைந்திருந்த பருவத்தில்தான் நமது இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது. ஒருவருடத்தில் முடியவேண்டிய கணிப்பொறி வகுப்பு ஏதோசில காரணங்களால் தள்ளிப்போனபோது
“இன்றோடு நான் விடைபெறுகிறேன் இனி வகுப்பிற்கே வரப்போவதில்லை,” என்று சொல்லிவிட்டு நான் விடைபெறும் தருணத்தில்தான் நீ என்னிடம் ஓடோடி வந்தாய்.

“இனி நீங்க வரவே மாட்டீங்களா?” ஒருவருடத்தில் அதிகபட்ச வார்த்தைகளால் நீ பேசியது அன்றுதான். ஆச்சர்யத்துடன் உன்னை திரும்பி பார்த்தேன். உதடு துடிக்க,கண்களில் இனம்புரியா தேடலும் தவிப்புமாய் கைகள் பிசைந்துகொண்டு “தூறல் நின்னு போச்சு” சுலோச்சனா மாதிரி நின்றுகொண்டிருந்தாய். அதன்பிறகுதான் என்மீதான் உன் தூய்மையான நட்பும் அன்பும் எனக்கு புரிந்தது. எனக்கே தெரியாமல் என் வீட்டு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து முதல்முறையாக என்வீட்டிற்கு தொலைபேசினாய். அந்த நாள் இன்றும் மறக்கமுடியாத நாளாக மாறாமல் என்னுள் அப்படியே நிலைத்திருக்கிறது. தொலைபேசியை எடுத்த என் அம்மா ஒரு பெண் எனக்கு முதன் முதலாய் தொலைபேசுவது கண்ட திகைப்பில்,என்னிடம் கொடுத்தார். தயங்கி தயங்கி உன்னிடம் பேசினேன். அதன் பிறகு உனக்காகவே கணிப்பொறி மையம் வரத்துவங்கினேன்.மழையென என்னில் விழுந்து விருட்சமான முதல்தோழியானாய்.

“உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா உன் மனைவியை என் தோழியாக்கி எப்போதும்போல் உன்னிடம் பேசுவேன். நம் நட்புக்கு பிரிவே கிடையாது” என்றெல்லாம் நீ சொன்ன வார்தைகளை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.
பத்துவருடங்கள் ஓடிப்போய்விட்டது.சுழன்றோடும் காலநதியில் வெவ்வேறு திசைகளில் அடித்துச்செல்லப்பட்ட இருவேறு இலைகளானோம் என்று சொல்ல தோன்றுகிறது ஆனால் “எனக்கு நிச்சயம் ஆகியிருச்சு ராஜேஷ் இனிமே “ஆண்நட்பு” எல்லாம் எங்கவீட்ல திட்டுவாங்க,இனி நாம பேசவே வேண்டாம்” என்று நீ சொல்லி சென்ற நிஜத்தை மறைக்க தோன்றவில்லை. இப்போது உனக்கு இரு குழந்தைகள் உன் கணவனின் வலைப்பூவில் வாசித்தேன்.

நீ நலமா ஹர்ஷி?

2.

ஐந்து வருடத்தோழியின் பிரிவில் தவித்திருந்தபோதுதான் உன்னிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. என் நண்பனின் அத்தை மகள் என்கிற அறிமுகத்தோடு என்னிடம் நட்பை யாசித்தாய் நீ. யாரென்றே தெரியாதபோது அந்த குறுஞ்செய்திக்கு நன்றி என்று மட்டும் பதிலிட்டேன். அதன் பிறகு எட்டு மாதங்கள் அலைபேசியில் அடித்த நம் நட்பலையை இப்போது நினைக்கும்போது நீண்டதொரு மெளனத்தை மட்டுமே பதிலாக்குகிறது மனம். தேவாலயத்தில் பாடல்கள் பாடும் புனிதமானவள் நீ. பொய்யில்லா நட்புக்கு சொந்தக்காரி நீ. நம் நட்பை காதலென்று தவறாக புரிந்துகொண்டு உன்னை அடிக்க கை ஓங்கிய அப்பாவிடம்
“அவன் என் பிரண்டுப்பா…எப்படிப்பா எங்கள தப்பா நினைச்சீங்க” என்று அழுதுகொண்டே நீ உதிர்த்த வார்த்தைகள் இன்னும் அழகாக்கிக்கொண்டே இருக்கிறது உன்மீதான நட்பையும்,நட்பு மீதான உன் நம்பிக்கையையும்.

எட்டு மாதங்கள் அலைபேசியில் வாழ்ந்த நட்பை நேரில் காணப்போகும் சந்தோஷத்திலிருந்தேன் அந்த செப்டம்பர் மாத ஏழாம் தேதியில். உன் அழைப்பு வந்தது “சென்னைக்கு வந்துட்டேன் டா.. திருவான்மியூர் பரணி ஹோட்டல் பக்கத்துல இருக்கேன்..சீக்கிரமா வா”. மனதெங்கும் உன் உருவத்தை வரைந்து கொண்டே விரைந்தேன். ஐந்தரை அடி உயரத்தில் சிறகில்லாமல் என் நட்புதேவதை நின்றுகொண்டிருந்ததை எழுத மொழியில் வார்த்தைகளே இல்லை பூவே. உன்னை பார்த்த சந்தோஷத்தில் நானும் என்னை சந்தித்த தித்திப்பில் நீயும் பேசமறந்து சிரித்துக்கொண்டே அழுதோமே! இப்போது நம்பிரிவெண்ணி அழுகிறது நம் நட்பு.உன் நினைவாக என்னிடம் இருப்பது நேசத்தோடு நீ எழுதிய மின்னஞ்சல்களும் அந்த முதலும் கடைசியுமான சந்திப்பில் எனக்காக விட்டுச்சென்ற ஒற்றை பார்வையும்தான்.

நீ எங்கே இருக்கிறாய் என் தாமிரபரணித்தங்கம்?

3.

தில்லிக்குளிரை ரசித்துக்கொண்டே நண்பன் ராமகிருஷ்ணனோடு நடந்துகொண்டிருந்த ஒரு அற்புத மாலையில்தான் முதன் முதலாய் என்னிடம் பேசினாய் நீ.

கவிதைகள் – மின்னஞ்சல்கள் – சண்டைகள் – சந்தோஷங்கள் – கருத்தாடல்கள் – கண்ணீர்த்துளிகள் – கோபங்கள் என நம் நட்பு நிறைந்திருந்த காலமது. சூழ்நிலைச்சகதிகளில் நான் சிக்கியிருந்த பொழுதுகளில் நீ ஒருத்தியே என்னை மீட்டுத்துக்கொடுத்தாய். என் மூன்றாவது தோழி உன் முதல்தர விமர்சனங்களுக்காகவே கவிதைகள் எழுதித்திரிந்த பசுமைக்காலங்கள் அவை.
தில்லியை விட்டு வந்த பின்னும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன உன் மடல்கள்.

வாழ்க்கையில் எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள்,எதுவும் நிரந்தரமில்லாத இவ்வுலகில் வெகு சிலரின் அன்புக்காக மட்டுமே நாம் ஏங்குகிறோம். கிளி அமர்ந்து சென்ற கிளைபோல் ஒரு சிறு அசைவை மட்டுமே பலர் நம்மில் விட்டுச்செல்கிறார்கள். வெகு சிலரே உயிரின் வேர் வரை அன்பால் பரவி திளைக்கவைக்கிறார்கள்.

நீ அந்த வெகு சிலரில் ஒருத்தி.

4.

கவிதை உலகிற்குள் சுற்றித்திரிந்துகொண்டிருந்த என்னை சிறுகதை உலகிற்குள் விரல்பிடித்து நடத்திச்சென்றவள் நீ.

உன்னை பற்றி எழுத நினைத்தவுடன் என் அறையெங்கும் பூக்களை வீசிச்செல்கிறது இந்தக் காற்று. எவ்வளவு உன்னதமான நட்பை நீ எனக்கு பரிசளித்திருக்கிறாய்! என் கனவுகளில் மிக முக்கியமானதொரு கனவை தேர்ந்தெடுத்து நிறைவேற்றி மொழி தொலைந்து தன்நிலை மறைக்க வைத்திருக்கிறாய்! என் பிறந்த நாளன்று நீ பரிசளித்த ஆதவனின் காகித மலர்கள் புத்தகம் எப்போதும் என் படுக்கை அருகே படபடத்துக்கொண்டு உன் பெயரை சொல்லியபடி இருக்கிறது.

மின்சார ரயிலில் அருகருகே அமர்ந்துகொண்டு இலக்கியம் பேசித்திரிந்த நாட்களாகட்டும் வயதில் என்னை விட மூத்தவளாக இருந்தாலும் “என்னை டீ போட்டு கூப்பிடுடா அப்போதான் நல்லா இருக்கும்” என்பதாகட்டும், மிதமிஞ்சிய உனதன்பில் லயித்து உன்னோடு உரையாடுகையில் “செல்லம்ல ரொம்ப நேரம் பேசமுடியாதுடா,வேலை இருக்கு நாளைக்கு பேசுறேன் சரியா” என்று அமைதியாக சொல்லிவிட்டு பிரிவதாகட்டும் உன்போன்ற தோழி கிடைக்க தவங்கள் பல செய்திருக்க வேண்டும் நான்.

கடைசிவரை கைகோர்க்க முடியாத தண்டவாளம் போன்றது நம் நட்பு. எப்போதும் அருகருகே மனதால் இணைந்திருப்போம்

என்னுயிர் “பிடாரி”யே!

5.

எழுதிவிட்டு உன்னிடம் காண்பித்தேன்.

“ஏன் டா இவ்வளவு நாளா என்கிட்ட உன் தோழிகள் பத்தி சொல்லவே இல்லை?” கேட்கும்போதே அழுதுவிட்டன உன் மீன்விழிகள்.

அதனால்,

இந்தக்கதையை கிழித்து எறிந்துவிட்டு எழுத ஆரம்பித்தேன் “நான்கு தோழர்களின் கதை”.

– ஜூன் 2009

Print Friendly, PDF & Email

1 thought on “நான்கு தோழிகளின் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *