(2004 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கலைந்து போன அவளின் கருங்கூந்தல் நீண்டு பரந்து அந்த அறைப் பரப்பை மூடிக்கொள்ள சாளரத்தினூடே ஊடுருவிப் புகுந்து கொண்ட மெல்லிய நீல நிலவொளி அவளின் நிர்வாண உடல்பரப்பில் பட்டுத் தெறித்து விட்டத்தில் ஏற்ற இறக்கங்களை காட்டி நின்றது. அவள் மோகித்திருந்தாள். அண்டத்தின் அனைத்தும் அவளின் காலடியில் என்பதாய் மமதையில் மரணத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை ரசித்தபடியே அவள் கலைந்தாள். நாகம் அசைந்தது.
***
மென் கறுப்புத் தோலைக் களைந்து விட்ட நாகம் தனது நுண்மையான கரும் நாக்கால் அவளின் பாதம் தொடங்கித் தலைவரை மெல்ல நகர்ந்து, முகர்ந்து, புகுந்து, நழுவ சூரியனைத் தொட்டுவந்தவள் போல் உடற் தணதணப்பில் அவள் சிணுங்கினாள். நாகத்திற்கு கோபம் தலைக்கேறியது. என்றோ தான் ஏங்க வைக்கப்பட்டு ஏமாந்தது போல் ஆவேசம் வந்தது.நாகம் வேகம் கொண்டு அவள் உடலை சுற்றி ஆவேசமாய் இறுக்க எலும்புகள் மெல்ல நொறுங்கத் தொடங்கின. அவள் உச்சத்தின் வேதனையில் வாய்விட்டுக் கதறினாள். நாகத்தின் பார்வையில் குரோதம் தெரிந்தது. மூடிக்கிடந்த அவள் கண்களை தனது நாக்கால் எச்சில்படுத்தி அவள் கண்விழிகளுக்குள் தனது பார்வையைச் செலுத்தியது. அவள் வார்த்தைகளற்று வதைபட்டாள். அவள் வளைவுகளை அழுத்தி தனக்கான மோகத்தில் திளைத்து எழுந்தது நாகம். அவள் மூச்சுக்காற்று மெல்ல மெல்ல அடங்க களைப்புற்ற நாகம் விலகி அவள் கூந்தலுக்குள் நுழைந்து புரண்டு தனது தோலுக்குள் புகுந்து நகர்ந்து கொண்டது. வரண்டு போய் அசைவின்றிக் கிடந்தாள் அவள்.
கண் விழித்தாள். தெளிவற்று குத்தி நின்றது பார்வை. பல் வருட கேள்விகளுக்கு விடைதேடிக் களைத்து இன்று பதில் கிடைப்பதாய் நம்பி மீண்டும் கலைந்து போனாள். மனதுக்குள் குரோதம் வளர்ந்தது. ஆண்மையின் மிதப்பில் நாகம் அசைந்தது. விம்மிப் புடைத்து நிற்கும் தனது மார்புகளினைத் தடவிக்கொடுத்து அதிசயித்தாள்.
நீள்சதுர கண்ணாடி பிம்பத்தை தனக்குள் வாங்கிப் பிரதிபலிக்க, இருப்பதால் இடையளவிலிருந்து தலைமட்டும் கண்ணாடிக்குள் அடங்கிப்போய், இடுப்பில் பிதுங்கும் தசை… பதிவாய் தொங்கும் பருத்த மார்பகங்கள்… உச்சியில் ஊடுருவும் வெள்ளை மயிர்கள்… கண்கள் உடலில் அர்த்தமின்றி மேய்ந்து வலம்வர குளிர்காற்று ஊடுருவி தலைமயிரைக் கலைத்துக் கன்னத்தில் போட்டது.
இயற்கை தனது கடமைகளைச் சளைக் காது செய்தருள, மனித மனம் மட்டும் குழப்பத்துடன் போராடிக் கொண்டிருக்கும். எனக்கான குழப்பம் இதுதான் என்று சபைமுன்னே எழுந்து நின்று மனம் திறந்து கொட்ட முடிவதில்லை. இது சரி, இது தவறு என்ற எங்காவது அகராதியில் அடையாளப் படுத்தியிருந்தால் அதை வாழ்வின் கோட்பாடாய்க் கொள்ளலாம். நிறைவாய் மனம் திருப்தி பெற தவறென்று சுட்டுவிரல் நீளும். சில, தவறோ என்று தடுமாற சரளமாக மற்றவை செய்து முன்னேறும். வாழ்வின் நிரந்தரமின்னையின் புரிதலால் இருக்கும்வரை இன்புற்றிருப்போம் என்றால், அது எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழவேண்டும் என்ற நியதியை இடித்துக் கொள்ளும்.
அவள் புரண்டு படுத்தாள். உடைகளுக்குள் தன்னைப் புகுத்திக்கொள்ள ஏனோ பிடிக்கவில்லை. தொலைபேசி அலறியது. புகைமூட்டமாய் முகில்கள் அலைந்து அலைந்து உடலைச் சிலுப்புறவைத்த வேதனையை அனுபவித்து அயர்ச்சியாய்க் கிடந்தாள். அவள் சிந்தனையில்…
அவளின் கூம்பிய தோற்றத்திற்கும் தோஷம்தான் காரணம் என்றார்கள். நாகபூசணி அம்மனுக்கு வெள்ளி தோறும் விரதம் பிடிக்கவைத்து சூரியப் பொழுதுக்கு முன்னம் குளிர் நீரைத் தலைக்கு ஊற்றி கோவிலுக்கு நடையாய் அழைத்துச் செல்வாள் அம்மா. தாவணி நழுவி விடும் தட்டையான மார்பு, கிள்ளிப் பார்க்க சதை இன்றி துருத்தி நிற்கும் எலும்புத் தேகம்.. அப்பிவிட்ட கறுப்புத் தோல்.. துருத்திக் கொள்ளும் பற்கள்.. இருந்தும் அவள் பெண். திருமணம் குழந்தைகள் குடும்பம் என்ற கற்பனைகளை வளர்த்து வாழும் சாதாரண உணர்வுடைய இளம் பெண். அவளுக்கு அவளின் தோற்றத்தில் திருப்தியில்லை. மாற்ற முடியுமா? மஞ்சளும் சவர்க்காரமும் கரைந்ததுதான் மிச்சம். திருமணங்கள் தட்டிப்போனது. காரணம் நாகதோஷம் என்றார்கள். அம்மா எள்ளை இடித்திடித்துப் பிடித்து சாப்பிட வைப்பாள். அப்பிய கருப்பு மினுக்கம் காணும். எலும்பை மூடி சதை போடும். பற்களுக்கும் ஏதாவது நடக்கலாம். இருந்தும் எள்ளுச் சாப்பிட்டால் கர்ப்த்தைத் தாங்கும் பலம் வரும் என்றாள். தோஷத்தின் வேகம் அவளது சாதகத்தில் மட்டும் ஆழமாய் இருப்பதாய் புலம்புவாள். சாத கத்தை யாரிடமாவது கொடுத்து மாற்றி விடலாம் என்ற அப்பாவின் ஆசை பின் வளவுக்குள் நாகம் புற்று அமைத்துக் குடிபுகுந்த போது மறந்து மறைந்து போனது. திரைப்படங்களின் தாக்கம் அதிகமாகி அவளை பால் வார்த்துக் கும்பிடும்படியும் வற்புறுத்தினார்கள். ஜடமாய் நம்பிக்கை யற்றுக் கோவிலுக்குள் வலம் வந்தவளை கோவில் பின் வீதியில் வாழ்ந்து வந்த நாகத்தின் நேரடிப் பார்வை கவர்ந்து விட… பின்னர் கோயிலே கதியெனக் கிடந்தாள்.
மா பூசியது போல் தோல்… சுருள் சுருளான தலைமயிர்… அங்குமிங்கும் சுழரும் கரும் கண்கள்… அவனின் பார்வை தன்னில் விழுந்தபோது அவள் துவண்டு போனாள். காதலுக்குக் கண் இல்லை என்பதை முற்றிலும் நம்பினாள். பெரிய வளான போது நிறுத்தப்பட்ட கல்வி, ஆழமாகப் பிடித்து உலுக்கும் தோஷம். அவலட்டணமாக தோற்றம், முன் படலை தாண்டமுடியாத வாழ்க்கை எல்லாமே அவன் பார்வை அவள் மேல் பட்ட பின்னர் அவளை நெருடுவ தில்லை.. மாலை நேரங்களில் பின்வள விற்குள் சென்று நாகத் திற்குப் பாலுற்றும் தீவிரம் கூடியது. மணிக்கணக்காக பாலுாற் றிப் பிரார்த்தித்து இருள் மூழ்கும் போது வீடு திரும்புவாள். அவளை ஒருவரும் கேள்வி கேட்டதில்லை. நாகத்தின் வலிமை அவள் வாழ்வில் மாற்றத்தை உண்டு பண்ணுவ தாகப் பெற்றோர்கள் நம்பினார்கள். எடை போட்டு அவள் உடலிலும் மாற்றங்கள் ஏற்பட்டது. சந்தனம் கலந்த அவள் உடலின் மெல்லிய வியர்வை மணம் திரட்சியற்றி ருப்பினும் நாகத்திற்கு போதை தந்தது. அவளை விழுங்கிவிட தக்க சந்தர்ப்பம் ஒன்றிற்காய் காத்திருந்தது. தினம் தினம் மாலை நேரம் பால் வைத்து இன்புற்றுப் போதை ஏற்றி, அவள் வாய் திறந்து கணீர் என்று தேவாரம் பாடும் போது நாகத்திற்கு முறுக்கேறும், மெல்ல எழுந்து வந்து அவள் உடல் சுற்றித் தழுவும். தட்டையான மார்புகளும், வரண்டு போன வயிற்றுப் புறங்களும் அலுப்பைத் தர கண்மூடி அவள் தூரத்தில் இருக்கையில் மெதுவாக அவள் அடிவயிறு நகரும். அவள் கலகலவென்று சிரித்தபடியே ஓடிவிடுவாள்.
வீட்டில் அவள் திருமணப் பேச்சை எடுத்த போது அவளை ஒருவரும் ஒரு பொருட்டாக வேனும் எண்ணவில்லை. தோஷத்தையும் தாண்டி ஜாதகம் ஒன்று பொருந்திவந்த சந்தோஷம் அவர்களுக்கு. வான் பிளக்க உரத்த குரல் எடுத்து நாகம் பற்றி அவள் கதறியது உதட்டோடு உறைந்துகொண் டது. நாகத்தை தன் தொடை அமர்த்தி தலைவருடி பாலைச் சொட்ட ஊற்றி கண் கலங்க தன் விதியை நொந்தாள். நாகம் அவசரம் கொண்டது. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போகும் பயம் அதற்கு. உடை தளர்த்தி உள்ளே புக முயன்றது. அவளின் வேதனை அவளிற்கு, உதறிவிட்டு எழுந்துகொண்டாள்.
நாகம் பாய்ந்து அவளை வேகமாக அணைக்க அவள் திமிறினாள். மஞ்சள் கயிறைக் கொடுத்து கட்டி அழைத்துப் போ என்றாள். நாகம் தளர்ந்தது. பின்வாங்கி யது. அவளின் உருவம் அதற்குப் பயம் கொடுத்தது. கருந் தோலில் துருத்திக் கொண்டிருக்கும் பற்கள் நாகத்தைப் பார்த் துச் சிரித்தன. மெல்ல மெல்லப் பின்வாங்கி ஓடிமறைந்தது நாகம். அவள் தனது தட்டையான மார்புகளைத் தடவிக்கொண்டாள்.
உடல்விறைக்க ஜடமாய்க் கிடந்து, வலி எழும்ப வாந்தி எடுத்து, கண்கள் சிவக்க சாமி ஆடி முயன்று பார்த்து முடியாமல் போய் அவள் கழுத்தில் தாலி ஏறியது, வெறுமனே கிடந்து தொடர்ந்து நான்கு குழந்தைகளை வயிற்றில் தாங்கிப் பெற்றுப் போட்டாள். இருந்தும் ஏங்கும் நாகத்தின் தழுவலுக்காய். நாகத்தை வீணே நழுவ விட்டதாய் மனம் கதறும், தன் வாழ்வின் முழுமை நாகத்துடனான புணர்விலேயே என்றும் தன் காதலை புனிதமானது என்றும் நம்பினாள்.
நீள்சதுர கண்ணாடி பிம்பத்தை தனக் குள் வாங்கிப் பிரதிபலிக்க, இருப்பதால் இடையளவிலிருந்து தலைமட்டும் கண்ணா டிக்குள் அடங்கிப்போய் இடுப்பு இறுக, பதிவாய் தொங்கும் பருத்த மார்பகங்கள்… வரிசையாய் மின்னும் பற்கள்… பதினாறில் தவறவிட்டது நாற்பதில் கிடைத்த சந்தோ ஷம் அவளிற்கு. உச்சியில் ஊடுருவும் வெள்ளை மயிர்களை மறைக்க மருதோண்டி போட்டுத் தலைகுளித்து தகதகப்பாய், கண்கள் உடலில் அர்த்தத்தோடு மேய பெருமையாய் இருந்தது அவளிற்கு, அவள் அழகாக இருந்தாள். இயற்கையை பணத்தால் வாங்கிவிட்ட சந்தோஷம்.
அவளை புரட்டிப் புரட்டிப் போட்டு அவள் தானா என்ற சந்தேகத்தை மீண்டும் மீண்டும் தீர்த்துக்கொண்டான் அவன். கண்களில் வீணாக விட்டுவிட்டோமே என்ற ஏக்கம் தெரிந்தது. அவள் குரூரமாகத் திருப்திப் பட்டாள், அவன் போய் விட்டான். இனி அழைப்பான்… குழைவான்… கெஞ்சுவான். அவளிற்குத் திருப்தியாய் இருந்தது.
அவள் மோகித்திருந்தாள். அண்டத்தின் அனைத்தும் அவளின் காலடியில் என்பதாய் மமதையில் மரணத்திற்கும் வாழ்விற்குமான இடைவெளியை ரசித்தபடியே அவள். முலையில் தேடுவாரற்று புகைமூட்டமாய் அம்மாள். அருகில் பித்தளையில் நாகம்.
தொலைபேசி அலறியது. அவன் அழைத்தான்… குழைந்தான்… கெஞ்சினான். அவள் வெறுமனே ஜும், கொட்ட அவன் குழைவில் தீவிரம் புகுந்தது. அவள் செருமினாள். கண்கள் மின்ன பற்கள் புடைத்தன. எதுவோ அவளை உலுக்கி உயரத்திற்கு நகர்த்தியது. அவள் மீண்டும் குரலைச் செருமி மெல்லிய குரலில் அவனிடம் கேட்டாள்…நீ ஏதாவது மருந்து சாப்பிடலாமே. பத்துவயதுப் பெடியன்ர போலல்லோ இருக்கு…
தொலைபேசித் தொடர்பு அறுந்தது.
– பெண்கள் சந்திப்பு மலர், அக்டோபர் 2004