அந்த நடு இரவில் நகராட்சி திருமண மண்டபம் திருமண கலகலப்பிறகு மாறாக மயான அமைதியில் இருந்தது.
ஆண், பெண் அத்தனை பேர்களும்… சாத்தி , தாழ் போட்டிருந்த மணமகள் அறைக்கு முன் மௌனமாய் நின்று கலவரமாக கதவை வெறித்தார்கள்.
இவர்களுக்கு முன் மணமகன் வெங்கடேஷ் இறுக்கமாக இருந்தான்.
‘ ஏ… அப்பா ..இவனுக்குத்தான் எத்தனை நெஞ்சுறுதி..! எந்த மாதிரி சூழ்நிலையில் என்ன மாதிரியான முடிவெடுப்பு !? ‘ – நின்ற அத்தனைப் பேர்கள் மனங்களிலும் அவன் விஸ்வரூபமாக நின்றான்.
சம்பவம் சிறிது நேரத்திற்கு முன்தான் நடந்தது. நாளை காலை முகூர்த்தம். மண்டபத்திற்கு மணப்பெண் வந்து , மாப்பிள்ளை அழைப்பு முடிந்து, விருந்து முடிந்து எல்லோரும் சோர்வாய்க் கட்டையைச் சாய்க்கும் நேரம்.
மண்டப வாசலில் படியேறி இளைஞன் ஒருவன் மயங்கி விழுந்தான்.
‘ யார் இவன்..? ‘ – என்று பார்த்த அனைவரும் பதறி அடித்துக் கொண்டு அவனிடம் ஓடினர்.
வெங்கடேசும் ஓடினான்.
சுருண்டு விழுந்தவன் அசைவற்றுக் கிடந்தான். ஒரு கையில் , விஷ பாட்டில்.! இன்னொரு கையில் வெள்ளையாய்க் காகிதம் – கடிதம்.!!
வெங்கடேஷ் சட்டெனர் குனிந்து அவன் மமூக்கில் விரல் இவ்த்துப் பார்த்தான். மூச்சில்லை.!!
பதறாமல் காகிதத்தை எடுக்க கை நீட்டினான்.
“வேண்டாம் மாப்பிள்ளே..!”உடன் நின்றவர்கள் பிடித்து இழுத்தார்கள்.
“விடுங்க…”உதறிக்கொண்டு இறந்தவன் கையில் இறுகி இருந்த காகிதத்தை கிழிபடாமல் உருவினான்.
கசங்கி இருந்த அதைப் பிரித்து, விரித்துப் படித்தான்.
அன்புள்ள அன்னபூரணி,
ஜாதி , மதம் பார்த்து நம் காதல் கை கூடவில்லை. நீ இல்லாமல் இந்த உலகில் வெறும் கூடாய் நான் வாழ விரும்வில்லை. எனவே உன் மடியில் உயிரை விடுவது போல்….. உன் மண்டப வாசலில் மாய்கிறேன். விசம் அருந்தி இருக்கிறேன். தவறுக்கு மன்னிக்கவும்.
இப்படிக்கு
ராகவ்.
படித்து முடித்த வெங்கடேஷ் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்றான்.
“என்ன தம்பி…?”- எவரோ.
“என்ன மாப்பிள்ளே..?”- பெண்ணைப் பெற்றவர்.
“என்னடா..?”- நண்பன் .
வெங்கடேஷ் எவருக்கும் பதில் சொல்லவில்லை.
திரும்பி மெல்ல நடந்தான்.
கண்களில் கலவரம், மிரட்சி, பயம், பதற்றம்…. கலவையாய் கையைப் பிசைந்து கொண்டு கூட்டக் கடைசியில் மணப்பெண் அன்னபூரணியை நோக்கிச் சென்றான்.
அவளிடம் அந்த கடிதத்தை நீட்டினான்.
அவள் நடுக்கத்துடன் பிரித்தாள்.
படித்து முடித்த அடுத்த வினாடி…. அழுகை, ஆத்திரம் !
சட்டென்று திரும்பி ஓடி தன் மணப்பெண் அறைக்குள் புகுந்து படீரென்று கதவைச் சாத்தி தாழி போட்டுக் கொண்டாள்.
இருந்த அத்தனைப் பேர்களும் திடுக்கிட்டு, துணுக்குற்று..
“ஐயையோ..!”அலறி அந்த அறையை நோக்கி ஓடினார்கள்.
ஆனால்….
அவர்கள் எதிரில் நின்ற வெங்கடேஷ்…தன் இரு கைகளையும் அகல விரித்து அதற்கு மேல் அவர்களை போக விடாதவாறு தடுத்தான்.
வந்தவர்கள் திகைத்தார்கள்.
“தயவு செய்து அவளை யாரும் தொந்தரவு செய்யாதீங்க…”
“என்ன தம்பி இப்படிச் சொல்றீங்க…?”நின்றவர்கள் முகங்களில் பீதி.
“இது அன்னபூரணி வாழ்க்கை. அவளே முடிவு செய்யட்டும் !”அமைதியாகச் சொன்னான்.
“தம்பி ! அவ தற்கொலை செய்துப்பாள்! ”
“மாட்டாள் !”அவன் விரித்த கைகளை மடக்கவில்லை.
“என்ன தம்பி சொல்றீங்க..? ”
“வாசல்ல இறந்து கிடக்கிறது அவள் காதலன். எந்தப் பக்கம் எதிர்ப்புன்னு தெரியல. பையன் தற்கொலை !”என்று சொல்ல…
எதிரில் நின்ற அன்னபூரணியின் அப்பா… திடீரென்று தங்கமாட்டாதவராய் வாயில் துண்டைப் புதைத்துக்கொண்டு விம்மினார்..
“என்ன மாமா..? ”
“நா.. நான்தான் மாப்பிள்ளே இந்த காதலுக்கு எதிர்ப்பு. அவனுக்கு வசதி, வேலை வெட்டி எதுவும் கிடையாது. இவளுக்கு நிறைய எடுத்துச் சொல்லி , மிரட்டி உங்களுக்கு முடிச்சேன் . பையன் இப்படி வந்து முடிவெடுப்பான்னு நினைக்கலை.”அழுதார்.
அவ்வளவுதான்.
இதுவரை பொறுமையாய் இருந்த வெங்கடேஷின் அம்மா…ஆத்திரத்துடன் ….
“கிளம்புடா..!!”மகனின் கையைப் பிடித்தாள்.
“பொறும்மா. காதல்ங்குறது பொது. யார், யாரை வேணுமின்னாலும் காதலிக்கலாம். ஆனா.. அதுல உறுதியா இருந்து ஜெயிக்கனும். பயந்து, கொஞ்சம் கோழையானாலும் முடிவு இப்படித்தான் !”சொன்னான்.
எவ்வளவு சரியான உண்மை ! – எல்லோரும் அசந்தார்கள்.
“மாப்பிள்ளே…!”திருமணம் நின்றுவிடுமோ என்கிற பயம், துக்கம்…அன்னபூரணி அப்பா அழுதார்.
“அழாதீங்க. உங்க பொண்ணுக்கு ஒன்னும் ஆகாது. அதேசமயம்.. இது அவ வாழ்க்கைப் பிரச்சனை. முடிவு அவள்தான் எடுக்கனும்.! தப்பு நடந்து போச்சு. இறந்தவன் இனி திரும்ப வரப்போறதில்லேன்னு நினைச்சி அன்னபூரணி இந்த திருமணத்துக்குச் சம்மதிச்சாலும் எனக்கு சம்மதம். இல்லே… காதல் உறுதியில் இறந்தவன் என் கணவன் திருமணத்தில் விருப்பமில்லே சொன்னாலும் எனக்கு அவமானமில்லே. இங்கே என்னால அவள் வாழ்க்கை பாழாகாது. மணவறை வந்த பெண்ணை திருப்பி அனுப்புறது மகா பாவம். அந்த தவறை நான் சாத்தியமா செய்யமாட்டேன்.”நிறுத்தி நிதானமாக, எந்தவித தடங்கலும் இல்லாமல் சொன்னான்.
எதிரில் இருந்தவர்களுக்கு…அவன் பேச்சு, முடிவு , செயல் எல்லாமே வாயடைத்தது.
அதான்….இதோ …
அனைவரும்….அன்னபூரணி அறையை வெறித்தார்கள், வெறிக்கின்றார்கள்.
சிறிது நேரத்தில்…
அவள் எல்லா அலங்காரங்களும் கலைத்து அறைக் கதவைத் திறந்தாள்.
பார்த்தவர்கள் பதறினார்கள். எல்லோரும் அதிர்ந்தார்கள்.
“அம்மா…”குமுறினார் அன்னபூரணி அப்பா.
“அப்பா ! எங்க காதலுக்கு இதுதான் முடிவு. காதலுக்காகவும், எனக்காகவும் உயிரை விட்டவனுக்கு மரியாதை. அதே சமயம்…தனக்குத் திருமணம் முடிக்க வேண்டியவள் ஒருத்தனை நேசித்தாள்ன்னு தெரிஞ்சதும்…. மாப்பிள்ளை மாலையைக் கழட்டி , மாணவறையை விட்டு ஓடும் இந்தக் காலத்தில் வெங்கடேஷ் நின்னு நிதானிச்சி, எல்லாம் யோசிச்சி, தன்னால ஒருத்தி வாழ்க்கைப் பாழாகக்கூடாதுன்னு இருந்த இவர் ரொம்ப பெரியவர்ப்பா.இவரோட வாழ எனக்குக் கொடுத்து வைக்கல. அது என் தங்கைக்குக் கிடைக்கட்டும். தயவு செய்து இதுக்கு யாரும் தடுப்பு சொல்ல வேணாம். என் தங்கையும் இதை மறுக்க வேணாம். தயவு செய்து என் ஆசையை நிறைவேத்துங்க. என்னப்பா..?”கேட்டு அவரைப் பார்த்தாள்.
“சரிம்மா..”என அவர் தலையசைக்க….
அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சி, புன்னகை.