வார இதழின் அட்டைப்படத்தையே கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் பாலன். பாலனுக்கு சிறு வயதிலேயே திருமணமாகிவிட்டது. தன் ஒரே மகள் ரம்யாவை அனாதையாக விட்டு விட்டு தாய்மாமன் விபத்தில் இறந்துவிட, உறவுகள் கூடி முடிவு செய்து, இரண்டு வயது பெண்ணை விட இளையவனான பாலனுக்கு மணம் முடித்து வைத்தனர்.
ரம்யா படிக்காவிட்டாலும் நல்ல உழைப்பாளி. வெயில், மழை, பகல், இரவு என பாராமல் விவசாயத்தை கவனிப்பதோடு குடும்ப வேலைகளையும் கவனித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானதோடு கணவனை மிகவும் நேசித்து குடும்பம் நடத்தி வந்தாள். நிறத்தில் கறுப்பானவள். குணத்தில் வெறுப்பில்லாதவள். கணவனுக்கு வேலை மிச்சம் வைக்காமல் தானே அனைத்து வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்து முடிப்பாள். உறவுகளிடம் அன்பு காட்டுவதால் அனைவருக்கும் ரம்யாவை மிகவும் பிடிக்கும்.
இப்படியிருக்கும் வேளையில் வீட்டிலேயே சோம்பியிருந்த பாலன் வார இதழ்களை குறிப்பாக சினிமா செய்திகளைப்படிக்கும் பொருட்டு கிராமத்திலிருந்து நகரத்துக்கு சென்று வாரம் ஒரு முறை வெளியாகும் புத்தகங்களை வாங்கி வந்து படிப்பான். அதில் உள்ள நடிகைகளின் படங்களை அதிகம் ரசிப்பான்.

ஒரு முறை அருகிலுள்ள சுற்றுலா ஸ்தலத்தில் சினிமா படப்பிடிப்பு நடப்பதையறிந்து சென்றவன் தன் மனங்கவர்ந்த நடிகையின் ஆடல் காட்சியைக்கண்டு மெய்மறந்து போனதோடு, அன்று இரவு படப்பிடிப்பு குழுவினருடன் சென்னைக்கு எடு பிடி வேலை செய்ய வருவதாக கூறி வாகனத்தில் ஏறிக்கொண்டான்.
சென்னையில் பிரபலமான ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பில் யார் எந்த வேலை சொன்னாலும் செய்ததாலும், அப்பாவியாக இருந்ததாலும் அனைவருக்கும் பாலனைப்பிடித்துப்போனது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நடிகையுடன் பேசி விட வேண்டுமென விடா முயற்ச்சியெடுத்தவனுக்கு அதற்க்கான வாய்ப்பு கிடைத்தது.
கேரவனில் இருந்த நடிகைக்கு உணவு கொடுக்கச்சென்றவனுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்க, அவனது பெயரை விசாரித்த நடிகை, தன் வீட்டில் நிறைய வேலை இருப்பதாகவும் அதற்க்காக ஒரு வாரம் வந்து தங்க முடியுமா? என கேட்க, அடுத்த நொடி சம்மதம் தெரிவிக்க, நடிகையுடன் ஒரே காரில் அதுவும் அருகே அமர்ந்து பயணமாகும் வாய்ப்பு கிடைத்த போது சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்வு ஏற்பட்டது.
அரண்மணை போன்ற வீடு. காவலாளி கேட்டைத்திறக்க உள்ளே சென்று நின்றது கார். இறங்கியவனிடம் ஒரு அறையைக்காட்டி குளித்து விட்டு உடைமாற்றி விட்டு வருமாறு சொல்லிவிட்டு உள்ளே நுழைந்த நடிகையின் அன்ன நடையை ரசித்தவன் ‘இது தான் சோதிடர் சொன்ன சுக்கிரன் திசை காலமோ?’ என எண்ணியபடி தன் குடும்பத்தை முற்றிலும் மறந்தவனாய் அறைக்கு சென்று குளித்தவனுக்கு வேலைக்கார பெண் உணவு கொண்டு வந்து கொடுத்துச்சென்றாள். இது போன்ற சுவை மிகுந்த உணவை அவன் இது வரை சாப்பிட்டதில்லை. மீதம் வைக்காமல் சாப்பிட்டவனுக்கு உறக்கம் கிறக்கமாக உண்ட மயக்கமாக வர உறங்கிப்போனான்.
காலையில் எழுந்த போது காவலாளி காரை கழுவிக்கொண்டிருந்தான். அப்போது நைட்டியுடன் ஒரு பெண் வீட்டை சுற்றி வாக்கிங் போவது போல நடந்து கொண்டிருந்தவள் திடீரென இவன் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தவள், “ராத்திரி நல்ல தூக்கம் போலிருக்கு? சாப்பிட்டுட்டு என்னைப்பார்க்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன். ஏன் வரல?” என கூறியதைக்கேட்டு சற்று குழப்பமடைந்தவன் “நீங்க…?” எனக்கேட்க, நடிகை விழுந்து விழுந்து சிரித்தாள்.
“அடையாளம் தெரியலையா? நான் தான் நடிகை மானா. ” என சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தவன் ‘தனது மனைவி ரம்யாவை விட அழகில் குறைந்தவளான இந்த நடிகையை நினைத்தா ஏங்கினோம்?’ என எண்ணியவன் ” ஆமாங்க உங்களை வேலைக்கார பொண்ணோன்னு நினைச்சிட்டேன்” என்றான் எதார்த்தமாக.
“என்னைச்சொன்னது போல மத்த பிரபலமான நடிகையைப்பார்த்து இப்படிச்சொல்லியிருந்தீங்கன்னா இந்த நிமிசம் அடி விழுந்திருக்கும். உங்களோட எதார்த்தம் எனக்கு பிடிச்சிருக்கு. இருந்தாலும் என்னோட கோபம் தனியறதுக்கு சிருசா ஒரு அடி அடிச்சுக்கறேன்” என்றவள் அவனது தோள் மீது செல்லமாக ஒரு தட்டு தடியவள் அவனருகில் வந்து அமர்ந்து கொண்டது வியப்பாக இருந்தது. அவளது கை தன் மீது பட்ட போது உடல் சிலிர்ப்பாக இருந்தது. பல லட்சம் ரசிகர்களின் கனவுக்கன்னியல்லவா?
“என்னோட வாழ்க்கைல எத்தனையோ விதமான மனிதர்களைச்சந்திச்சிருக்கேன். உங்களை முதன் முதலா பார்த்ததும் எனக்கு பிடிச்சுப்போச்சு. ரொம்ப நல்லவரா தெரிஞ்சீங்க. இப்படிப்பட்ட ஒருத்தர் நம்ம கூட வீட்ல இருந்தா நல்லாருக்கும்னு நினைச்சுத்தான் அழைச்சிட்டு வந்தேன். தப்பா நினைச்சுக்காதீங்க. நட்புக்காகத்தான். வேலையிருக்குன்னு சொன்னாத்தான் வருவீங்கன்னு, வேலையிருக்குன்னு பொய் சொன்னேன். உங்களைப்பார்க்கறப்ப பாதுகாப்பா உணர்றேன். என்னோட பெற்றோர் இறந்துட்டாங்க. உறவுகள நம்பி பல சொத்துக்களை இழந்துட்டேன். ஆனா என்னோட நடிப்புக்காக படம் ஒடறதுனால இன்னைக்கும் பத்து படம் கைவசம் இருக்கு. பணம் எனக்கு ஒரு பிரச்சினையா இல்லை. எனக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லை. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”
எனக்கேட்டபோது ‘சொல்லலாமா? வேண்டாமா?’ என யோசிக்கலானான்.
முடிவாக “ஆயிடுச்சுங்க. மாமா பொண்ணுதான். பேரு ரம்யா. அவளுக்கு என்னை விட ரெண்டு வயசு அதிகம். ரெண்டு குழந்தைங்க இருக்காங்க” என்றான். அப்போது அவனது உடல் லேசாக நடுங்கியது.
“ரொம்ப சந்தோசம். அதென்ன ரெண்டு வயசு அதிகம்னு சொல்லறீங்க. மனசுக்கு புடிச்சுப்போனா அதெல்லாம் குறையில்லை. அவங்களையும் கூட்டிட்டு வந்து இந்த வீட்லயே தங்கிக்கங்க. உங்க குழந்தைகளை நானே படிக்க வைக்கிறேன்” என்று நடிகை சொன்ன போது ‘அழகு என்பது வேறு, அன்பு, ஆதரவு என்பது வேறு. ஒப்பனையால் அழகை உருவாக்கலாம். அன்பு, ஆதரவை விலை கொடுத்து வாங்க முடியாது. நடிகைக்கு இப்போது அன்பு பாதுகாப்பு வேண்டும்’ என்பதை உணர்ந்து கொண்டான்.
“எல்லோரும் வெளில நினைக்கிற மாதிரி நடிகைன்னா தங்கத்துல தயாரிச்ச உடம்புள்ளவங்க இல்லை. அவங்களுக்கும் நோய், உடல் சோர்வு, மன சோர்வு என இருக்கும்னு யாரும் நினைக்கிறதில்லை. மேக்கப் போட்ட அழகைப்பார்த்து உருகறாங்க. ஆனா என்னோட உடம்பு நோயால கொஞ்சங்கொஞ்சமா உருகிட்டு வர்றது எனக்கு மட்டும் தான் தெரியும். என்னோட போட்டோவப்பார்த்து பல இளைஞர்கள் தூக்கமில்லாம இருக்கிற அதே நேரத்துல நோயால ஏற்பட்ட வலி தாங்க முடியாம நான் தூக்கத்தை இழந்து தவிக்கிறத வெளில சொல்ல முடியாது” என கூறி நடிகை கண்ணீர் விட்ட போது அதைக்கேட்டு தானும் அழுதான் பாலன்.
மாடுகள் இக்கரையிலிருந்து அக்கரை பசுமையைப்பார்த்து ஓடுவதும், அங்கே ஓடிய பின் அங்கும் புற்கள் குறைவாக இருப்பதைப்பார்த்து திரும்ப இருந்த இடத்துக்கே திரும்புவது போலத்தான் மனித வாழ்க்கை எனும் உண்மையை புரிந்து கொண்டான்.
‘நடிகையைப்போல தன் மனைவியும் ஒரு பெண் தானே. நடிகை மீது இரக்கப்பட்டு இங்கேயே இருந்தால் அவள் நிலை? குழந்தைகள் நிலை என்னாவது? நடிகைக்கு நாம் இல்லாவிட்டால் இன்னொருவர் கிடைப்பார். நம் மனைவிக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள். அப்படி கிடைத்தால் ஊரும், உறவும் தவறாகப்பேசும். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். இன்னொருவரை மனதாலும் நினைக்க மாட்டாள் ரம்யா. நடிகை சந்தோசமாக இருக்க வேண்டுமென்று மனைவியை இங்கே அழைத்தால் வர மறுப்பாள். சிறு வயது முதல் காடு, மாடு, வெயில், மழை என வாழ்ந்தவளை இங்கே ஏ.ஸி அறையில் இருக்க வைக்க முடியாது’ என்பதை யோசித்தபோது இருதலைக்கொள்ளி எரும்பாக மனம் தவித்தது பாலனுக்கு.
‘ருசியான உணவு. அரண்மனை வாழ்க்கை. பிரபல நடிகையின் நிழல். தங்கக் கூண்டின் கிளியாகி விடுவோமோ?’ என எண்ணி பயம் கொண்டான். இரவு தூக்கம் வரவில்லை. ஏ.ஸி.அறையிலும் ஏனோ வேர்த்துக்கொட்டியது. இந்த வாய்ப்பு நல்லதா? கெட்டதா? என பிரித்துப்பார்க்க முடியவில்லை.
மறு நாள் காலையில் இறுதி முடிவுக்கு வந்தான். ‘ஊருக்கு செல்வதாக சொன்னால்
விட மாட்டார்களோ?’ என எண்ணியவன், காவலாளியிடம் வெளியில் சென்று திரும்ப வருவதாக பொய் வார்த்தை கூறிவிட்டு ஊர் திரும்பியவன் சொல்லாமல் சென்றதற்கு மனைவி ரம்யாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, அனைத்து வேலைகளிலும் தானும் பங்கெடுத்து மனைவி, குழந்தைகளுடன் அன்பாக வாழத்தொடங்கினான் பாலன்.