கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 16,297 
 

‘கும்கி’ படம் பார்த்தபோது எனக்கு நசீர் அண்ணன் நினைவுதான் வந்தது.

‘கும்கி’ என்று இல்லை, பொதுவாகவே யானைகளைப் பற்றிப் பேச்சு வரும்போதும் யானைகளைப் பார்க்கின்றபோதும் நசீர் அண்ணனின் உருவம்தான் மனச் சித்திரமாக வந்துபோகும். அண்ணனுக்கும் யானையைப் போலவே சின்னக் கண்கள். சென்ற வாரம் அம்மாவிடம் பேசும்போது நசீர் அண்ணன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். ரொம்ப நேரம் மனசு அடைத்துக்கிடந்தது. யானை ஒன்று இறந்து வீழ்ந்துகிடப்பதான மனச் சித்திரம் அப்போது வந்துபோனது. யானை இறந்து கிடப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு பிரமாண்டமான ஆலமரம் வேரோடு சாய்ந்துகிடப்பதைப் போலவே இருக்கும். துக்கத்தைத் தாண்டியும் எப்போதும் ஒரு பயத்தை உண்டாக்கும் யானையின் சடலம்!

நசீர் அண்ணனுக்கு வாப்பாவைப் போல, பெரிய மீசை. வாப்பாவுக்கும் ஆமினா அக்காவுக்கும் எங்கள் குடும்பத்துக்கு மான உறவு மூன்று தலைமுறைகளாகத் தொடர்கிறது. வாப்பாவும் ஆமினாஅக்கா வும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்கள். அந்த உறவின் கடைசிக் கண்ணியான நசீர் அண்ணனும் இதோ… இப்போது இறந்துவிட்டார்.

நசீர் அண்ணன்

தாத்தாவின் நண்பர் நகராட்சித் தேர்த லில் கவுன்சிலர் பதவிக்கு நின்றபோதுதான் தாத்தாவுக்கு வாப்பா பழக்கம். எங்கள் வீடு இருக்கும் தெரு, மூன்று பக்கம் இஸ்லாமியர் கள் வாழ்கின்ற தெருக்களால் சூழ்ந்த தீபகற்பம். முகம்மதியாபுரம், பேகம்பூர், மக்கான்தெரு கொஞ்சம் தள்ளிப் போனால்… பாறைப்பட்டி டி.வி.ஏ. நகர். அதுவும் இஸ்லா மியர்கள் வாழ்கின்ற பகுதிதான். முகம்மதியாபுரத்துக்கு வாக்குச் சேகரிக்கச் சென்றபோதுதான், வாப்பா தாத்தாவுக்குப் பழக்க மாகி இருக்கிறார். வாப்பாவுக்கு இரண்டு மூன்று தோல் ஷாப்பு கள் இருந்தன. நான் பார்த்த முதல் வசதியானவர் வாப்பாதான். முதன்முதலில் கார் பயணம் செய்த தும், கலர் டி.வி-யும், ஃப்ரிஜ்ஜும் பார்த்ததும் வாப்பாவால்தான் சாத்தியமானது. தாத்தா இறந்த பிறகு, எங்கள் வீட்டில் வறுமையும் சேர்ந்து வசித் தது. அப்பா கணக்கர். சிட்டை, பதிவேடு, வரவு- செலவு, ரசீது இவைதான் அப்பாவுக்குத் தெரிந்தவை. ஆறு மாதம் ஏதாவது ஒரு கடையில் வேலை பார்ப்பார். ஆறு மாதம் அப்பாவுக்கு வேலையே இருக்காது. பல நாட்கள் வீட்டில் சாப்பாடு இருக்காது. காலை உணவு என்பது அரிதானதுதான். மதியம் பள்ளியில் சத்துணவு. இரவு எப்படியும் சாப்பாடு கிடைத்துவிடும். ரம்ஜான் நோன்பு ஆரம்பித்து விட்டால், எங்களுக்கு உற்சாகம் வந்துவிடும்.

மாலையானால் சுடச்சுட மூன்று, நான்கு இஸ்லாமியர்களின் வீடுகளில் நானும் அண்ணனும் நோன்புக் கஞ்சி வாங்கி வருவோம். சில சமயம் கஞ்சியோடு வடையும் சமோசாவும்கூட எங்களுக்குக் கிடைப்பது உண்டு. எப்போதாவது யாரேனும் பள்ளிவாசலில் கறிக்கஞ்சி போடுவார்கள். சின்னச் சின்ன கறித்துண்டுகள் மெல்லிசாகக் கஞ்சியில் கிடைக்கும். அந்தக் கஞ்சியை அப்படியே வாய்க்குள் கவிழ்த்து, கறித் துண்டுகளை மென்றுகொண்டே கஞ்சி குடிப்பது அற்புதமாக இருக்கும். அதிலும் நோன்புக் கஞ்சி வாளியைத் திறந்தவுடனே கமகம என்று ஒரு மணம் வரும். இன்னமும் என் மூளைக்குள் அந்த வாசனை மணக்கத்தான் செய்கிறது. அது பசியின் வாசனை. ருசியின் வாசனை.

ஒருநாள் நான் ஆமினா அக்கா வீட்டுக்கு நோன்புக் கஞ்சி வாங்கப் போயிருந்தேன். கையில் பெரிய வாளி. எனக்கு அப்போது எட்டு, ஒன்பது வயதிருக்கும்.

”எல்லாரும் சொம்புலதானே வாங்குவாங்க… நீ ஏன் இவ்வளவு பெரிய வாளி கொண்டாந்திருக்கே?” என்று என்னிடம் கேட்டாராம் ஆமினா அக்கா. ”இதைத்தான் நைட்டு எங்க வீட்டுல குடிப்பாங்க. எங்க வீட்டுல சாப்பாடு கிடையாது” என்று சொன்னேனாம் நான். ரொம்பவே சின்னப் பையனாக இருந்ததால் பொய் சொல்லாமல் உண்மை சொல்லி யிருக்கிறேன்போல. நான் சொன்ன பதிலைக் கேட்டு ஆமினா அக்கா கண்ணீர் வடித்துவிட்டார். ஒரு எட்டு வயதுச் சிறுவனின் வாயிலிருந்து பசி பற்றிய வார்த்தைகளைக் கேட்க எத்தனை பேருக்குப் பொறுக்கும்? அப்பா வாப்பா வின் கணக்குகளைக் கவனிப்பதற்கு வேலைக்குச் சேர்ந்தார். அக்கா வீட்டில் இருந்து அவ்வப்போது தின்பண்டங்களும் சாப்பாடும் வரும். நசீர் அண்ணன், இஸ்மாயில் அண்ணன், ரஹ்மான் அண்ணன், முபாரக் அண்ணன் என்று அண்ணன்களின் பழைய உடைகளைத்தான் நான் கல்லூரி வரைக்கும் அணிந்திருந்தேன். அண்ணன்களுக்குக் கல்யாணம் ஆன பிறகு, ரம்ஜானின்போது வரக்கூடிய பிரியாணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதேபோல் பக்ரீத்தின்போது வீட்டுக்குத் தவறாமல் மாட்டுக் கறி வந்துசேரும். அதற்கு முன்பு எங்கள் தலைமுறையில் நிச்சயமாக யாரும் மாட்டுக் கறி சாப்பிட்டு இருக்கவே மாட்டார்கள். அதுவும் குழம்பு வைத்ததுபோக மிச்சம் இருக்கும் மாட்டுக் கறியைத் துண்டுகளாக்கி, உப்பும் மஞ்சளும் தடவி, ஒரு கோணி ஊசியில் குத்தி சணலில் கோத்து, தகிக்கும் வெயிலில் காயவைத்துவிடுவார்கள்.

அந்த உப்புக்கண்டம் காயக் காய… அவ்வளவு ருசியாக இருக்கும். அக்கா வீட்டுக்குப் போகும்போது எப்போதாவது பெரிய மீசையுடன் டி.வி. பார்த்துக்கொண்டு இருப்பார் வாப்பா. எனக்கு வாப்பாவின் மீசையையும் உருவத்தையும் பார்த்தால் பயம். சரசரவென்று அங்கு இருந்து நகர்ந்து வீட்டின் உள்ளே போய்விடுவேன். எப்போதாவது டி.வி-யில் இருந்து முகத்தைத் திருப்பி, ”ரத்தினசாமி மகனா..? கண்ணம்மா(அம்மாச்சி யின் பெயர்) பேரனா?” என்று கேட்பார். இரண்டுமே ஒன்றுதான். ஆனாலும் பதில் எதையும் எதிர்பாராது, பரிச்சயம்விட்டுப் போகக் கூடாது என்பதற்காக வாப்பா இந்தக் கேள்வியைக் கேட்பார்போலும். வாப்பாவின் மூத்த மகன்தான் நசீர் அண்ணன்.

நசீர் அண்ணன்2

நசீர் அண்ணன், தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர். அவரோடு சேர்ந்து நிறைய எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்திருக்கிறேன். அவருக்கு எல்லாப் பிரச்னைகளுக்கும் எம்.ஜி.ஆர். படங்களிலும் பாடல்களிலும் தீர்வுகள் இருந்தன. ஒருமுறை பள்ளி விடுமுறையின்போது தெருவுக்கு வந்த யானையின் பின்னாலேயே ஓடிய சிறுவர்கள் கூட்டத்தில் நசீர் அண்ணனும் ஒருவர். அப்போது முதல் அவருக்கு யானைக் கிறுக்குப் பிடித்துப்போனது. எம்.ஜி.ஆர். நடித்த ‘நல்ல நேரம்’ படத்தின் பாதிப்பாகக்கூட இருக்கலாம். திண்டுக்கல் மலைக்கோட்டைக்குக் கீழே கோட்டைக்குளம் இருக்கும். அங்குதான் யானை கட்டிப்போடப்பட்டிருக்கும். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் யானையுடன் பழியாய்க்கிடந் தார் நசீர் அண்ணன். வாப்பாவும் ஆமினா அக்காவும் நசீர் அண்ணனைக் கண்டித்துதான் பார்த்தார்கள். ஆனால், திட்டு வாங்கிய இரண்டு நாட்கள் அண்ணன் கோட்டைக் குளத்துக்குப் போகாமல் இருப்பார். மூன்றாவது நாள் மீண்டும் அவரை அங்கு பார்க்க முடியும். ஒரு கட்டத்தில் நசீர் அண்ணனுக்குப் படிப்பு வராமல் பள்ளியில் இருந்து நிற்க, யானையுடனேயே சுற்ற ஆரம்பித்தார். வாப்பாவும் அக்காவும் தண்ணி தெளித்துவிட்டார்கள். உள்ளூர்க் கோயில் திருவிழாக்கள் தொடங்கி, பக்கத்து ஊர்த் திருவிழாக்கள் வரை யானையுடன் போய்வரத் தொடங்கினார். நசீர் அண்ணனுக்கு யானைக் கிறுக்கு இந்த அளவு முற்றிப்போனது வாப்பாவுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

நசீர் அண்ணனைப் போலவே மற்ற அண்ணன்களுக்கும் படிப்பு வரவில்லை. பையன்கள் வளர்ந்ததும் ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்துத் தொழில் செய்வதற்கு முன் வந்தார் வாப்பா. எல்லோரையும் அழைத்து ‘என்ன செய்யப்போகிறீர்கள்?’ என்று கேட்டுப் பணம் கொடுத்தார். முபாரக் அண்ணனும் ரஹ்மான் அண்ணனும் தோல் ஷாப் வைக்க, இஸ்மாயில் அண்ணன் மட்டும் பெரிய செருப்புக் கடை வைத்தார். நசீர் அண்ணனோ, ”வாப்பா… நான் யானை வாங்கிக்கிறேன்… காசு தாங்க” என்று கேட்க, வாப்பா அதிர்ந்துபோனார். வசதியான குடும்பத்தில் பிறந்த நசீர் அண்ணன் தெருத் தெருவாக யானையுடன் செல்லும் காட்சியை வாப்பாவால் ஜீரணிக்கவே முடிய வில்லை. ஆனாலும், விடாப்பிடியாக நின்று நசீர் அண்ணன்தான் கடைசி யில் ஜெயித்தார்.

இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன், தம்பிகளாக வாழ்ந்த வாழ்க்கையின் ஈரக்குலையைக் குலைத்துப்போட்டது மதக் கலவரம். அப்போது நான் எட்டாவது படித் துக்கொண்டிருந்தேன். எங்கள் மாவட்டத்துக்குக் ‘காயிதேமில்லத் மாவட்டம்’ என்று புதிதாகப் பெயர் சூட்டப்படவும் கலவரம் வெடித்தது. அறுந்த குடலைக் கையில் பிடித்துக் கொண்டு எங்கள் தெருவுக்குள் ஓடிவந்த ஒருவரைப் பார்த்தேன். ஆமினா அக்கா வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு குடிநீர்க் குழாய் அருகே ஒருவர் வெட்டப்பட்டுச் செத்தார். எல்லோருமே ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கினார்கள். வியாபாரம், குடும்ப உறவு என எல்லாவற்றிலும் மதத் துவேஷம் கரிய இருளாக அப்ப ஆரம்பித்தது. அப்போது எல்லாம் நான் பள்ளிக்குப் போய் வருவதற்கே, பயப்படத் தொடங்குவேன். திடீரென்று கூட்டம் கூட்டமாக ஓடத் தொடங்குவார்கள். கடைகள் அடைக்கப்படும். பேருந்துகளின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்படும். முதலில் ஓரிருவர்தான் ஓட ஆரம்பிப்பார்கள். பிறகு நான்கு, ஐந்து என்று ஆரம்பித்து சிறுகூட்டமே ஓடத் தொடங்கும். ஆனால், கடைசி யில் எந்தக் கலவரமும் நடந்திருக்காது. கலவரமும் கலவர வதந்திகளுமாக நாட்கள் பீதியில் நகர்ந்தன. ஆனாலும் இதைப் பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல் லாமல் நசீர் அண்ணன் கோயில் திருவிழாவுக்கு யானையுடன் போய் வந்துகொண்டுதான் இருந்தார்.

”அண்ணே, கொஞ்ச நாளைக்கு நீங்க கோயில் பக்கம் போகாம இருக்கலாமேண்ணே?” என்று நசீர் அண்ணனிடம் சொன்னேன். ”போடா லூஸு” என்று சிரித்தவர்,

”என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒரு
தலைவன் இருக்கிறான் மயங்காதே”

என்று ஒரு எம்.ஜி.ஆர். பாட்டு பாடினார்.

”தலைவன்னா யாருடா? கடவுள். அல்லா. அல்லா இருக்கான். அவன் பார்த்துக்குவான்” என்றார். ஆனால், ”யானை ஆசீர்வாதம் வழங்குவது மார்க்கத்துக்கு விரோதம்” என்று சில இளைஞர்கள் அண்ணனுடன் சண்டை பிடிக்கத்தான் செய்தார்கள்.

அதற்கும் ”ஒன்றே குலமென்று பாடுவோம்
ஒருவனே தேவன் என்று போற்றுவோம்” என்று ஒரு எம்.ஜி.ஆர். பாட்டைத்தான் பதிலாகச் சொன்னார் நசீர் அண்ணன். அவர்கள் கேட்ட கேள்விக்கும் அண்ணனின் பதிலுக்கும் எந்தச் சம்பந்தமும் இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை. ”போடா எம்.ஜி.ஆர். கிறுக்கு” என்றபடி நகர்ந்துவிட்ட அவர்கள், அதற்குப் பிறகான நாட்களில் எதற்காகவும் நசீர் அண்ணனுடன் வாதத்துக்கு வருவதே இல்லை.

கல்லூரிக் காலம், கல்லூரிக்குப் பின்னான காலங்களில் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்க, நசீர் அண்ணனைப் பார்ப்பது குறைந்துபோனது. எப்போதாவது யானையுடன் அவர் எதிர்ப்படுவார். பிறகு, சென்னைக்கு வந்துவிட்ட பிறகு, ஊருக்குப் போகும்போதுகூட நசீர் அண்ணனை எப்போதாவதுதான் பார்ப்பேன். என் கல்யாணத்துக்கு நசீர் அண்ணன் வந்திருந்தார். மகன் பிறந்ததை அம்மா நசீர் அண்ணனுக்குச் சொல்லியிருக்கிறார்கள். ”சிவா மாதிரி சிவப்புதானே? நல்லாப் படிக்கவெச்சு பேங்க் உத்தியோகத்துக்கு அனுப் புங்க” என்றாராம் நசீர் அண்ணன். ஆமினா அக்காவும் அடிக்கடி இதையேதான் சொல் வார். அவர்களைப் பொறுத்தவரை பேங்க் உத்தியோகம்தான் பெரிய உத்தியோகம்.

ஒரு வருடம் இருக்கும்… போன கோயில் திருவிழாவுக்குப் போனபோது நசீர் அண்ணனைப் பார்த்தேன். காலர் இல்லாத ஜிப்பா உடம்பில்… மீசை விரியும் அகலமான அதே சிரிப்பு. என் மகனைத் தூக்கிக் கொஞ்சியவர், யானையை ஆசீர்வாதம் செய்யவைத்தார். அப்படியே அவனைத் தூக்கிக்கொண்டு யானையின் மீது ஏற, நகரத்தில் காக்கைகளைத் தவிர, வேறு பறவைகளைப் பார்த்தறியாத என் மகன் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கி விட்டான். யானையைவிட்டு நகரும் வரை அவன் அழுகையை அடக்கவே முடியவில்லை. கடைசியில், என் மனைவி யானையின் மீது ஏற, அது அங்கும் இங்கும் லேசாக அசைந்து கொடுத்தது. அண்ணன் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்!

”பாருடா சிவா… எங்கம்மாவும் உங்கம்மாவும் இதுவரைக்கும் யானை மேல ஏறினதே கிடையாது…” என்றார் ஆச்சர்யத்துடன்.

”ரெண்டு பேரும் சுடிதார் போட்டிருந்தா, ஏறி இருப்பாங்கண்ணே!” என்றேன். மீண்டும் அகலமான சிரிப்பை உதிர்த்தார் அண்ணன். அதுதான் நசீர் அண்ணனையும் அந்த அகலச் சிரிப்பையும் நான் கடைசியாகப் பார்த்தது.

”சாப்பிடலாம்பா” என்றார் சபீதாக்கா. நசீர் அண்ணனின் மனைவி.

”இல்லக்கா… ஊருக்கு வந்தா, அம்மா சாப்பாடுதான். அதை மிஸ் பண்ண மாட்டேன். அதனால வெளியில எங்கேயும் சாப்பிடறது இல்லை” என்றேன்.

”தேயிலை போடட்டா?” என்று சமையலறையில் இருந்து குரல் வந்தது. ஆயிஷாவின் குரல். நசீர் அண்ணனின் மருமகள்.

தலையாட்டிவிட்டு, ”அந்த யானை என்னாச்சு?” என்றேன்.

”கேரளாக்காரரு ஒருத்தரு வாங்கிட்டுப் போனாரு. முப்பதாயிரம் ரூபா கிடைச்சது. அதை வெச்சுத்தான் இந்த வீட்டை லீஸுக்குப் பிடிச்சோம்” என்றார் சபீதாக்கா. ஒரு யானை வெறுமனே முப்பதாயிரம்தான் போகுமா? ஏமாந்துவிட்டார்கள் என்பது பட்டவர்த் தனமாகத் தெரிந்தது. ‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது நசீர் அண்ணன் குடும்பத்துக்குப் பழமொழியாகவே நின்றுவிட்டதுபோல.

”வாங்கண்ணே” என்றபடி உள்ளே வந்தான் பாபு. நசீர் அண்ணனின் மகன்.

கைலியை இறக்கிவிட்டு எதிரில் அமர்ந்தவன், ”வாப்பா அடிக்கடி உங்களைப் பத்திப் பேசுவாரு” என்று நசீர் அண்ணனைப் பற்றியும் அவரது யானைக் கிறுக்கு, எம்.ஜி.ஆர். கிறுக்குபற்றியும் பேசிக்கொண்டிருந்தான். ”இந்தா, இவனுக்கும் அவங்க நன்னா மாதிரி யானைக் கிறுக்குதான். டி.வி-யில யானையைப் பார்த்தா குஷியாகிடுவான்” என்றான் தன் சின்னஞ் சிறு குழந்தையைக் காட்டி. அதுவும் யானையைப் போல மண்டியிட்டு, தலையாட்டிச் சிரித்தது.

எனக்கு என்னவோ போல் இருக்க, கொஞ்சம் பார்வையைச் சுவரின் பக்கம் திருப்பினேன். ஒரு பழைய கறுப்பு – வெள்ளை புகைப்படம். அதை மீண்டும் வரைந்து மாட்டியிருந்தார்கள். தாஜ்மகால் செட்டிங் பின்னணியில் வாப்பாவும் தலை யில் முக்காடிட்டு ஆமினா அக்காவும் அமர்ந்திருந்தார்கள். இருவருக்கும் நடுவே இருவரின் தொடையிலும் கைவைத்தபடி நசீர் அண்ணன் சிறுவனாக நின்றிருந்தார்.

வாப்பா புன்னகைத்து இந்தப் படத்தில்தான் பார்க்கிறேன். பொதுவாகவே, இயல்பாகவே கலகலவெனச் சிரிப்பவர்களுக்குக்கூட புகைப்படத்துக்காகப் புன்னகைக்கும்போது செயற்கை கலந்த தயக்கம் வந்துவிடும். ஆனால், இதில் வாப்பாவின் புன்னகை இயல்பாக, அழகாக இருந்தது.

பக்கத்தில் இருந்த இன்னொரு புகைப் படத்தில் யானைக்கு முன்பு மீசை விரிய அகலச் சிரிப்போடு நின்றிருந்தார் நசீர் அண்ணன். கண்களில் நீர்த் திரை படிய ஆரம்பித்தது. எதுவும் பேசினால் அழுதுவிடுவேன்போல் இருந்தேன். அப்போது செல்போன் மணி ஒலித்தது. அம்மா.

”என்னடா கிளம்பிட்டியா? சாப்பிட வர்றதான?” என்றார் அம்மா.

”இல்லம்மா… நான் நசீர் அண்ணன் வீட்டிலேயே சாப்பிட்டு வந்துடுறேன்” என்றேன்.

– ஜூலை 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *