கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2024
பார்வையிட்டோர்: 419 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள் முழுவே உனக்கு அஞ்சலி. உதயத்தின் முற்பொருள் நீ உனக்கு அழிவில்லை. நான் இன்பத்தில் வாழ்த்தியும், துன்பத்தில் தூற்றியும் நீ என்றும் பெருகு வாயாக. நீ உமிழ்ந்த மாணிக்கமாய ஒளியைத் திரும்ப விழுங்க நீ திருவுளம் பற்றிய தருணமே. காலம், இடம், பொருள், தவம், தத்துவம் என என் ப்ரக்ஞை கட்டி யாடும் வேடங்கள் அனைத்தும் என் அந்தத்தில் குலைந்து அவிந்து உன்னில் அடங்கிவிடும். ஓம் சாந்தி. 


உன்னை நான் அறியுமுன்னர் என் உள் ப்ரக்ஞையில் நீ பீடம் கொண்டுவிட்டாய். 


இன்று காலை ஆபீஸுக்குத் தாமதமாகிவிட்டது. மின்சாரவண்டி திருட்டு மூட்டைகள் இறங்கும் திருப்பம் தாண்டிக் கோட்டை ஸ்டேஷனின் மதிற்சுவர்கள் தாண்டி, முழு வேகத்தில் போய்க் கொண்டிருக்கையில், “திடீர் ப்ரேக்’ போட்டு நின்ற சடக்கில், நாங்கள் பின் பல்டியடிக்காமல் தப்பித்தது எங்கள் அதிர்ஷ்டம். நான் இருந்த பெட்டி நடுப்பாலத்தில் நின்றது. சுற்றி, மும் முரமாய், ரயில்வே கட்டிடவேலை நடந்து கொண்டி ருக்கிறது. இரவும் பகலுமாய் விளக்குப்போட்டு விடாது நடக்கிறது. 

பாலத்தின் அடியில் ஓடும் ஜலத்தையொட்டிக் கரை கட்டினாற்போல் குவித்திருக்கும் பாராங்கற்களின்மீது, பூத்த நக்ஷத்ரம்போல் விரிந்த கைகால்களுடன், தலை கீழாய் அண்ணாந்து ஒருவன் விழுந்து கிடந்தான். குடுமி அவிழ்ந்து, தண்ணீரில் தோய்ந்தது. பின்மண்டை யிலிருந்து பீறிட்டுக் கொண்டேயிருக்கும் குருதி, ஜலத்தில் பந்து பந்தாய் சடைத்துச், சொம்பளவு இரத்தப் பூக்கள் முகத்தைச் சூழ்ந்து தவழ்ந்தன. காலை வெய்யிலில் தாடி முட்கள் பொன்னாய் மின்னின. சிற்றலைகள் முகத்தைக் கழுவின. 

மூலத் துயிலில் தாண்டவ கோலத்தில் மூழ்கி விட்ட செஞ்சடாதரன். 


தெருவிளக்கு அணைந்ததுதான் காரணமோ என்னவோ, நள்ளிரவில் திடுக்கென விழித்துக் கொண் டேன். என் உருவக்கோடுகூட எனக்கிலா தபடி என்னையும், தன்னோடு இழைத்துக் கொண்டது போல் எனைச் சூழ்ந்த மையிருளில் விழித்திரையில் சிவப்பு நுரை கக்கிக்கொண்டு பெருக்கெடுத்து அறை புரண்டது. 

சிவப்பை விடச் செந்தூரம் எனில் தகும். 

கைக்குப் பட்டாலன்றி இருக்குமிடம் தெரியாமல் தாதுவில் மிதந்து கொண்டிருந்தால் உயிர். 

“அப்பனே தீர்க்காயுசாயிரு” என்று அயிலாண்டப் பாட்டிகள் வாயார வாழ்த்த வழி. 

வெள்ளமாய்ப் புரண்டு விட்டாலோ; 

“போயும் போயும் இப்படியா போகணும்! நாலு நாள் கிடந்து போனான்னு வயத்தெரிச்சல் தீரக்கூட வழியில்லையே. நாங்கள் கிழங்கள். இன்னும் கிழங்கா வளைய வரோமே, இந்தக் கொடுமையெல்லாம் பார்க் கணும் கேட்கணும்னு இன்னும் எங்கள் தலையில் என் னென்ன எழுதி வெச்சிருக்கோன்னு தலையிலடித்துக் கொள்ள விஷயமாச்சு. 

ஆனால் இன்று செத்துப்போனவன் சின்ன வயது இல்லை. ரயில் தள்ளிவிட்டது. அறியக்கூட அவனுக்கு நேரமிருந்திருக்காது. இல்லாவிடில் முகத்தில் எப்படி அத்தனை சாந்தம்! உதட்டோரம் சிறு முறுவலின் முன் நிழல் கூட. இன்பம் தந்த ஏதோ ஞாபகத்தில் தன்னை யிழந்து வண்டி வந்ததுகூடத் தெரியாமல், பாலம் தாண்டுகின்றேன் என்று சமுத்திரத்தையே தாண்டி விட்டான். 

ஆமாம் அக்கரையில் காத்திருக்கும் காரிருளே னக்குக் கையென்றும், காலென்றும், முலை யென்றும், தொடையென்றும் தனியில்லை. அவனை நீ என்ன சைகை எப்படிக் காட்டி உன்னுள் வலித்துக் கொண்டாய் எனும் வியப்பில் எண்ணம் திளைக்கத் திளைக்க நெஞ்சு முள்மேல் மீன் நெளிந்து வளைந்து மாட்டிக்கொள்ளாமல் துள்ளி விளையாடி அடிவயிற்றின் ஒளி மருட்சி காட்டுகிறது. 

ஆனால் நூல் மாத்திரம் விட்டுக் கொண்டே போகிறது. இந்த நூலுக்கு மாத்திரம் திரௌபதியின் துகில் போல் எப்படி ஓயாத இந்நீளம்? இல்லை நடுவிலேயே அறுந்து போனதைத்தான் எல்லையே இல்லாததாய் நினைத்துக் கொண்டிருக்கிறேனா? 

சே, சே, இல்லை இல்லை: இல்லவே இல்லை. இந்த நூல் அறவே அறாது. இது அறுந்து போனால், பிறகு என்னதான் இருக்கிறது. என்ன இருந்துதான் என்ன? பிடிக்க மீனுமில்லை: மீன் பிடிக்க ஆளுமில்லை. 

இது இருளின் நரம்பு. 
எண்ணத்தின் கறுப்பு மணிக்கயிறு! 
வானத்தின் நீலத்தினின்று உரித்த பொற்சரடு
நினைவில் மின்னும் இருளின் யஞ்ஞோப வீதம்.
பிறவியின் ஒளி. 
வானத்தின் நீலத்தினின்று உரித்த சரடு. 
நினைவில் மின்னும் இருளின் யஞ்ஞோப வீதம்.
இதுதான் என் பிறவியின் தேஜஸ். 


ஆனால் நான் நூலைக் களைந்து வருடங்களாகி விட்டன. 

அம்மாவின் தகனத்திற்கு மறுநாள் சடங்குகளின் போது மாரைத் தடவினால் பூணூலைக் காணோம்! சட்டையோடு கழன்று ‘கோட் ஸ்டாண்டி’ல் தொங்கிக் கொண்டிருக்கிறதா? இருக்காது, நேற்று நான் சட்டை யோடு படுக்கவில்லையே! ஆ! புரிந்தது. நேற்று அம்மா வைப் பொசுக்கிவிட்டுக், காட்டிலிருந்து வந்து குளத்தில் மூழ்கிய போது ஜலத்தில் நழுவியிருக்கும்; வேறு வழியே இல்லை. 

பூணூல் போன வழி புரிந்ததுமே கூடவே நெஞ்சில் ஏதேதோ கதவுகள் திறந்துகொண்டே போயின 

வெடுக்கென நான் எழுந்த வேகத்தில் மடியிலிருந்த பணம் தரையில் சிந்திற்று. சில்லறைக்குத்தான் எத்தனை இரைச்சல்! 

“சாஸ்திரிகளே, நான் சடங்குகளைச் செய்யப் போவதில்லை.”

வாத்தியாருக்கு வாய் தொங்கிற்று. “ஏன் தீடீர்னு இப்போ என்ன?…”

“சரஸ்திரிகளே, திடீர் என்று நேர்பவைகள் தாம் திடம், நிஜம். படிப்படியாய் நேர்வது மாறுதல், பல காலம் முடிச்சவிழ்ப்பு நிச்சயமில்லை. திடீரென்று நேர் வதுதான் சிக்கறுப்பு. விடுதலை, மீட்சியற்றது. விடுதலை திடீரென்று தான் நேரமுடியும்.” 

“இப்போ என்ன விடுதலை, எதிலிருந்து விடுதலை?” நூ ல் கட்டிலிருந்து விடுதலை, இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என மாறி மாறிக் காட்டும் நம்பிக்கையின் போதையினின்று உதறிக்கொண்ட தெளிவு. 

“எனக்கு ஒன்றுமே புரியவில்லை.” 

“உங்களுக்கு விளக்குமளவிற்கு என்னுள் இப்போது நேர்ந்ததற்கு இன்னும் வார்த்தைகள் வரவில்லை. ஆனால் வரும், ஒரு நாள் வரும். ஆனால் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன நேர்ந்தது நேர்ந்து விட்டது. விடுதலையின் பாதையே அந்தச் செயல்தான்.” 

“நீங்கள் பேசற பாஷையே வேறேயா இருக்கு. போனவர்கள் போய்விட்டாலும் இருக்கிறவா சுபிக்ஷமா யிருக்கணும்னு, லோக க்ஷேமார்த்தம் இந்தக் காரியங்களைச் செய்தாகணும் இதுகளைச் செய்யாட்டா பிதுர்க்களின் சாபம் குடும்பத்திற்கு சம்பவிக்கும்.” 

“சாஸ்திரிகளே, உங்கள் கேள்விக்குப் பதில் உங்களிடமிருந்தே வந்து கொண்டிருக்கிறது. போனவர், இருப்பவர், க்ஷேமம், சாபம், லோகம் ஈதெல்லாம் சமுதாய பாஷையின்றி வேறு என்ன? உங்கள் வரை நேற்று இருந்த என் தாய் இன்று போய்விட்டாள் அல்லவா? ஆனால் அதோ சாம்பல் படுக்கையிலிருந்து நம் சர்ச்சையைக் கேட்டு அவள் சிரிக்கும் சிரிப்பின் த்வனி எனக்குக் கேட்கிறது. உங்களுக்குக் கேட்கிறதோ? அது தான் நான் உங்களுக்குச் சொல்லத் தவிக்கும் விஷயம்.” 

“இதோ பாருங்கள், பூணூலைக் காணோம்னா அதற்குப் பரிகாரம் இருக்கு. பெரியவா எல்லாத்துக்குமே பரிகாரம் பிராயசித்தம் ஏற்படுத்திட்டுப் போயிருக்கா. அதனாலே 

”ஆண்டவன் சித்தத்துக்கே ப்ராயச்சித்தம் உண்டா என்ன?” 

சாஸ்திரிகளின் கீழுதடு கேலி நகையில் வளைந்தது.

“நீங்கள் என்ன அப்போ சாமியாராயிட்டேனா? இப்படியே இந்த இடுப்பு வேட்டியுடனும் தோள் முண்டுடனும் தேசாந்தரம் கிளம்பிட்டேளா? வீட்டுக்குக் கூடத் திரும்பப் போறதில்லையா? இந்த நிலைக்குக்கூடப் ஏற்கனவே பேர் வெச்சிருக்கா, ஸ்சமான பெரியவா வைராக்யம்னு-” 

“எனக்கு ஏற்பட்டிருக்கும் விடுதலை வைராக்கியத் திலிருந்துகூடத்தான்.” 

வாத்தியார் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார். வாத்தியாருக்கு சொந்தத்தில் இரண்டு மாடி வீடுகள் இருக்கின்றன. வாடகை வருகிறது. அவர் பையன் நல்ல உத்யோகத்திலிருக்கிறான். ஆனால் அவர் பையனை நம்பவில்லை. 

“இன்னிக்கு ஒரு ஸீமந்த முகூர்த்தத்துக்குப் போயா கணும். இன்னும் எத்தனை நாழி இடக்குப் பண்ணப் போறேள்? உங்களை மாதிரி மனுஷாள் இருக்கிறதால் தான் நம் குலம் இப்படி க்ஷணப்பட்டிருக்கு. வேலியே பயிரை மேய்ஞ்சால் விமோசனம் இருக்கோ? நீங்களே சொல்லுங்கோ.” 

நான் ஒன்றும் சொல்லவில்லை. சொல்ல என்ன இருக்கிறது? அவரும், அவரை அண்டி வந்தவரும், என்னோடு வந்தவரும் என்னைச் சுற்றி நின்றுகொண்டு என்னை ஒரு வினோதப் 

வினோதப் பிராணிபோல் பார்த்துக் கொண்டிருந்தனர். 

சற்று எட்ட, ஒரு புதை மேட்டின்மேல், புல் மெத்தை யில் ஒரு தாய் நாய் சுகமாய்ப் படுத்துக் கொண்டிருந்தது. இரு குட்டிகள் – ஒன்று உடலே பட்டுக் கறுப்பு; இன் னொன்று காது மடிகளில் மாத்திரம் கறுப்புத்திட்டு – இன்ப முனகல்களுடன் பாலுண்டு கொண்டிருந்தன. 

ஆடு ஒன்று அருகே புல்லை மேய்ந்துகொண்டிருந்தது. நாய் குரைக்கவில்லை. ஆட்டின்மேல் பாயவில்லை. நாயும் ஆடும் சினேகம் போலும். எத்தனை நாள் சினேகமோ? 

அழுகிறேன்
சிரிக்கிறேன் 
பேசுகிறேன் 
பேசாமலிருக்கிறேன் 
ஆத்திரப்படுகிறேன்
அமைதியாயிருக்கிறேன்
அசைகிறேன் 
அடங்குகிறேன் 

சகுனம்
சம்பவம்
நம்பிக்கை 

நன்மை 
தீமை 

கேள்வி
பதில்
சமாதானம் 
புண்ணியம் 
பாவம் 

எல்லாமே த்வனிகள் தான் 

மௌனமும் 
ஒரு 
த்வனிதான் 

ஒலியே நீ மோனத்துள் புகுந்து கொண்டதால்
உன்னைக் கேட்கவில்லை என்று 
உன்னையே நீ ஏமாற்றிக் கொள்கிறாயா? 
கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக்
கேட்கிறது. நீ அதை அறிவாயோ ? எல்லாம் நெஞ்சு
நிற்கும் மீட்டலுக்கேற்ப. 
ஆனால் அறிவது, கேட்பது இவையெல்லாம் என்ன
வெறும் வார்த்தைகள் தானே! அவைகளின் பொருளும்
உண்டான பொருளல்ல. அவ்வவ்வார்த்தை வரம்புள்
சொல் ஓட்டம் நீடித்தவரை நாம் நமக்கு 
ஆக்கிக்கொண்ட பொருள்.
ஆனால், சொல்தாண்டிய உயிர், அவ்வுயிரையும் குடித்து 
உயிருடன் உயிர் தந்த பொருளையும் விழுங்கிய
இருள்பற்றி நாம் என்ன கண்டோம்!? 


என் தாயும் நம்பிக்கைகளைக் களைந்தவள்தான். “ஆமாம், உனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் நீயும்தான் தகப்பனுக்கு சிரார்த்தம் பண்ணிப்  பண்ணி உன் ஆயுசிலும் பாதிக்கு மேல் ஆயாச்சு.நீ. என்னைவிடக் கிழமாயிட்டே. ஆனால் உன் அப்பா இன்னும் உன் பிண்டத்துக்குக் காத்திருக்கார்னு உனக்குத் தோணறதோ? என்னவோ அப்பா எனக்கு நம்பிக்கையில்லே. மனுஷன் வேறு எங்கே பிறந்து? இன்னும் வேறெந்தக் குடியைக் கெடுத்திண்டிருக்கானோ, நீ முழிச்சுப் பார்த்தால் நான் பயந்துட மாட்டேன். உன் அப்பாவை உனக்குத் தெரியுமா, எனக்குத் தெரியுமா? உன் அப்பா என் கழுத்தில் கட்டியது தாலியா அது பாம்புன்னா ! பின்னே என்ன? என்னவோ என்னை இத்தனை கெடுத்ததற்கு எனக்குத் தெரிஞ்சு உன் அப்பா வால் அமைஞ்ச ஒரே நல்ல காரியம் உன்னைக் கொடுத்தது தான்.நீ மாத்திரம் எனக்கென்ன, நான் பெண்ணாய்ப் பிறந்ததுக்கு மலடு இல்லேன்னு நிரூபிக்கத்தானே !” 

என் தாய் ஆணாய்ப் பிறக்க வேண்டியவள்.ஏதோ சிருஷ்டிப் பிசகில் பெண்ணாய்ப் பிறந்து விட்டாள் என்று நானே எண்ணுவதுண்டு. நெஞ்சில் உரம் பாய்ந்தவள். நம்பிக்கைகளை அவள் துறந்தாள் என்பதைவிட, அவை அவளுடன் ஒட்டஇயலாது விட்டனஎன்பதே பொருந்தும். 

“அம்பி, இந்த ஊர் நாக்கு பிளந்த நாக்கு. என்னதான் பேசாது ? நீ வயத்திலிருக்கும்போதே உன் அப்பாவைக் காவேரி காலை வாரி விட்டதுக்கு, நீ கொஞ்ச நாள் பின் தள்ளிப் பிறந்திருந்தால் என் நாணயமே நாறிப் போயி ருக்கும். முன்தள்ளிக் குறை மாதத்தில் பூமியில் விழுந்தி ருந்தால் உன் உயிருக்கே தீம்பு ! அப்பவும் ஏச்சுத்தான். “பாவி, ஒண்ணே ஒண்ணு, ‘தான் தான் போகப் போறோம்னு நடுவிட்டுப்போன பயிரையும் அழிச்சுட்டு நிக்கறா !” எதை நம்பி இங்கு வாழ ? உண்மையில் அம்பி, யாரால் யாருக்கு என்ன பிரயோஜனம்?உன் வழி உனக்கு, என் விதி வழி நான். இந்தப் போலி வாழ்க்கை எனக்கு இத்துடன் போதும். தான் செத்த பின்னும் எனக்காகச் சடங்குகள் மூலம் இது என்னைத் தொடர வேண்டாம். 

என் பிறப்புத் தான் என் வசத்திலில்லை. வாழ்க்கையோ பிறருடையதாப் போயிடுத்து. என் சாவாவது என்னு டையதாயிருக்கட்டும். நீயிறைக்கும் எள் ளு க் தண்ணீருக்கும் நான் கரையோரம் வந்து, வாயைத். திறந்துண்டு காத்திருப்பேன் என்று எண்ணாதே. எனக்கு சுயக் கௌரவம் உண்டு.” 

ஏன் இப்படித் தன்னை முறுக்கேற்றிக் கொள்கிறாள் என்று நான் திகைப்பதுண்டு. ஆனால் அவள் சொல்வதில் எங்கோ உண்மை புதைந்திருக்கிறது. ‘எங்கே என்னைக் கண்டு பிடி’ என்று எள்ளி நகையாடுகிறது. 

ஆனால் என்றேனும் ஒரு நாள் உண்மையை  முகமுழித்துத்தான் ஆகவேண்டும், தப்ப முடியாது. 

என் தாய் உண்மையைக் கண்டு ஓடி ஒளிபவள் அல்ல. எத்தனையோ முறை வயிற்றுவலி அவளுக்கு வந்திருக் கிறது. ஆனால் இப்போது வந்ததும் சொல்லி விட்டாள்; ”அம்பி, இந்தத் தடவை நான் பிழைக்க மாட்டேன்” என்று, நள்ளிரவில், முன்பின் அறிகுறியிலாது வலி நேரே வயிற்றில் விழுந்து வெட்டியதும், உடல் இன்னும் விட்டுக் கொள்ளாத இரு துண்டுகளாக அது அது அதனதன் தனிப் போக்கில் படுக்கையில் நெளிகையில், அம்மா வலி பொறுக்காது ‘என்னடா பாவி பார்த்துக் கொண்டிருக் கையேடா, கத்தியிருந்தால் என்னைக் குத்திடேண்டா, உனக்கு மனமில்லாட்டா என்னிடமாவது கொடேண்டா! என்று கெஞ்சிக் கதறி, கத்திக்கத்தி, விடியற்காலை புலம் பல் அடங்கி ஓய்ந்து, ஒரு தரம் புரண்டு அசைவற்றுக் கட்டையானதும் சடலத்தினின்று பிரிந்த கடைசி மூச்சு டன் என்னின்று ஒரு பெருமூச்சு கலந்தது. 

அப்பாடா! கத்தியைக் கொடுக்காமல் தப்பித்தேன். 

“ஆனால் எனக்கு என் தாய்மேல் அன்பு உண்மையாயிருந்தால், இந்தச் சமயத்தில், நான் கொலையாளியாக அஞ்சியிருக்கக் கூடாது. ஆகையால் அன்பும் ஒரு பூச்சுத்தான். அதன் உண்மையான தன்மை பொய். அம்மா சொன்னது சரி. யாரால்தான் யாருக்கு என்ன பிரயோசனம்? “ஐயோ, தாயும் பிள்ளையும் அது என்ன ஈஷலோ; அப்பளாத்து மாவு மாதிரி! உலகத்தில் இல்லாத அம்மா, உலகத்திலில்லாத பிள்ளை!” என்று என் மனைவியின் கேலியும் சரி. 

ஆசை, அன்பு, பாசம், நம்பிக்கை, சடங்கு, ஆசாரம் என்று மேலுக்கு மினுக்குக் காட்டி, உண்மையில் பயத்தை வளர்த்துத் தனக்கு வேலிகள் நட்டுக்கொண்டே சமூகத் தின் இனித்த பொய்களை உண்டு ஏமாறுவதைவிடக் கசந்த உண்மையை விழுங்கி விடமுண்ட கண்டனானால் என்ன? நஞ்சுக்குப் பழக்கிக்கொண்டால் நான் சிரஞ்சீவி. 


சிற்சில சமயம் எனக்குச் செவி நரம்பு குறுகுறுக்கும் செவியென்று நான் சொல்கையில் என்மனத்தில் என் எண்ணம், வெளிச்செவிக்கும் உட்செவி தாண்டிய கட் செவிக்கும் உட்செவி, அங்குச் சிலந்தி நூலினும் இழை யெடுத்த ஸன்னத்தில் எஃகுச் சுருள் ஒன்று திடீர் திடீர் என, எனக்குக் காரணம் தெரியாத சமயங்களில் சுழல் கையில், அந் நரம்பொலியில் சிரிப்பு கேட்கிறது எனக்கு மாத்திரம் கேட்டு என்னில் குடிகொண்ட ரகஸ்யச் சிரிப்பு? என்ன சிரிப்பு ? என்னையறியாமல் இது என்னுள் எப் போது வந்தது? இல்லை, எனக்கு முன்னாலேயே இருந்து என் தோலும் சதையும்- தான் அதன் மேல் புற்று மண் ணாய்ப் பூத்துக் கொண்டிருக்கிறதே? இச்சிரிப்புக்குச் செலவு உண்டோ இல்லையோ, வற்றல் இல்லை. 

உயிர் அருவியின் ‘கிளுகிளுப்பே’, இதுதானோ? 

ஆனைக்கா ஸன்னதிபோல், நெஞ்சப்பாளங்களிலி ருந்து கசியும் கண்ணீரும் இதுதான் என்றும் தோன்று கிறது. ஏனெனில் நெருப்பு குளிர்ந்து ஜலம் ஆயிற்று என்றால் குளிர்ந்த கோபம்தான் கண்ணீர். உறைந்த கண்ணீர்தான் சிரிப்பு. 

ஆகையால் எப்பவும் அழுவதற்குப் பதில்தான் சிரிப்பு.
சிரிப்பைப்பற்றி நான் வேணது அறிவேன். 


ஒருநாள் மாலை நான் ஆபீஸிலிருந்து திரும்பி வரும் வழியில் தெருக் குழாய்ச் சண்டை. 

வசை மொழியில் ஆண் ஒருநாளும் பெண்ணை மிஞ்ச முடியாது, திண்ணமாய்ச் சொல்வேன். வசவின் வகை யிலோ, வேகத்திலோ, மூச்சுக்கூட விட்டு வாங்காத ஓயாத கூச்சலிலோ, வசவின் கதியில் அஞ்சாது இறங்கும் அடிமட்டத் துணிச்சலிலோ அவர்களுக்கு நிகர் அவர்கள் தான். 

இருந்தாற் போலிருந்து, திடீரெனக் கை கலந்து விட்டது. பானையும் தவலையும் உருண்டன. ஒருவர் கூந்தலை ஒருவர் பிடித்து உலுக்கி, முகத்தைப் பிராண்டி, தரையில் உருண்டனர். இந்த ஆரண்ய தர்மத்துக்கெதிர், மார்த்துணி, மானம், மர்மம் எனும் மனித முலாமெலாம் எங்கு நிற்க முடியும்? இருவருக்கும் மூச்சு இறைக்கின்றது. இருவர் முகமும் ரத்த விளாறு. ஆனால் கூந்தல் மேல்பிடி இருவரும் விடவில்லை. 

‘ஏன்’யா!’ 

புளித்த கள் நெடி பின்னாலிருந்து மோதியதும் வயிற்றைக் குமட்டிற்று. குத்து மீசைமேல் மங்கிய தணல் மேட்டு விழிகள் கனன்றன. 

“பார்த்தா வெள்ளைச் சொக்கா உடுத்து பெரிய மனுசனாட்டம் இருக்கே, வயசானவனா இருக்கே. புருவங்கூட நரைச்சுப் போச்சு, சண்டையை விலக்காட்டியும் வேடிக்கையா பார்க்கறே?” 

இவன் ஏதோ வலுச்சண்டைக்கு அவைகிறான். அது தான் இவன் பிழைப்பு. பிழைப்பில் தான் எவ்வளவு விதம்! எங்களைச் சுற்றி ‘கொல்’லென்று கூட்டம் கூடி விட்டது வேடிக்கை பார்ப்பவர் பாதி. அவனைச் சேர்ந் தவர் பாதி. ஓநாய்க் கூட்டத்தின் ஒரே முகமான பசி ஏக்கம் போல், அவர்கள் முகத்தில் ஒரு வார்ப்பாய்க் காணும் சண்டைக்கு ஏக்கத்திலிருந்தே தெரிகிறது. 

“வயசானவனாம் வயசானவன்! இந்த வயசான வங்க. வயசுமேலே பாரத்தைப் போட்டுட்டு பண்ணற கோஷ்டத்தைப் பத்தி என்கிட்டே கேளு அண்ணே! கோயில் திருக்குளத்திலே பொம்மனாட்டிங்க படித்துறை யிலேதான் கால் களவுவாங்க ‘நீ பாட்டுக்குக் குளிம்மா, நான் வயசானவன்!” பஸ்ஸிலே தள்ளித் தள்ளி இடிச்சு கிட்டு ஒக்காருவாங்க. சங்கோசப் படாதே, நீ என் பொண் மாதிரி!” பாத்ரூமலே ராங்ஸைடுலே நுழை வாங்க. ‘ஏண்டா கிளவா! கொட்டையா பொம்மனாட்டி பொம்மை போட்டிருக்குதே’ன்னு கேட்டால், “வயசாச் சோன்னோம்மா, கண்ணு தெரியல்லே ‘ம்பாங்க.ஐயோ, அதையேன் கேக்கறேபோ, இவங்க பண்ற அக்ரூம்புக் கெல்லாம், இவங்க வயசுதான் இவங்களுக்கு “அவுட் பாஸ். 

அவனுக்கு இவன் சுருதி. 

இடமே ஏதோ ஒரு தினுசில் பரபரத்தது. இவர்கள் தவிக்கும் சண்டைத்தினவின் முறுக்கேற்றம். 

என்மேல் கைவிழுவதற்கு வக்கினம் இன்னும் ஒரு விநாடி அரை வினாடியில் தொங்கிற்று. பகையின் புகைச்சல் சட்டென அப்படிக் கவிந்துவிட்டது. 

அப்போது என் சிரிப்புத்தான் என்னைக் காப்பாற் றிற்று என்று இப்போது தெரிகிறது. என் செவியோரம் எஃகுச் சுருள் திடீரெனக் கழலும் குறுகுறுப்புத் தாங்க முடியவில்லை. உடல் ரோமக்கால்கள் அனைத்தும் முள்ளாய் என்னின்று சிரிப்புப்புறப்பட்டதும் எல்லோரும் திகைத்து என்னின்று பின் வாங்கினர். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில் எனக்கே புரிந்தால் தானே! இது என் சிரிப்பாய் எனக்கேயில்லை. இது எனக்கு முன்னாலேயே இருந்து கொண்டிருக்கும் சிரிப்பு. தனக்கே சிரித்துக்கொண்ட சிரிப்பு. அதன் காரணம் அதற்குத்தான் தெரியும். ஆனால் அதில் ஏதோ ஒரு வெறி, குரூரம். சிரிப்பின் உருட்டு ஒவ்வொன்றும் ஒரு முள் சக்கரமாய்த் தெரிந்தது. 

நான் அடியெடுத்து வைக்க ஆரம்பித்ததுமே, கும்பலில் தானே ஒரு சந்து பிரிந்தது. நான் சாவதானமாய் அதன் வழி நடந்து வெளியேறி, தெருவைத் தாண்டினேன். 

என்னை யாரும் பின் தொடரவில்லை. 


என் சிரிப்புப் பற்றி ஒரோரு சமயமும் எனக்குப் புதிது புதிதாய்ப் புரிகின்றது. என் சிரிப்பின் விரிப்புகள் தான் எத்தனை!” 

ஒரு சமயம் அம்பாளின் அர்ச்சனைக்குக் குங்குமச் சிதர்களைத் தாங்கிய ரோஜா இதழ்கள் அதினின்று உதிர்கின்றன. 

இன்னொரு சமயம் நட்டுவாக்காளிகளும் குளவிகளு மாய்க் குதிக்கின்றன. 

ஒரு சமயம் பொன் வண்டின் ரக்கையடிப்பு. 

ஒரு சமயம் நர்த்தகியின் காற்சலங்கையொலி. ஒரு சமயம் கண்ணீர்த் துளிகளாலேயே கட்டிய சரம் அறுந்து மூலைக்கொன்றாய் உருளும் மணிகளின் கிணி கிணி. 

கறந்த பால் நிரம்பிய குடம் கவிழ்ந்து சரிந்த ரத்தம். அந்த ரத்தமே உறைந்து திடமாகி வழியின் குறுக்கே தலை தூக்கி இரை தேடி நெளியும் பவழ விரியன். 

அடித்த பஞ்சாகிப் பிறகு அதனுள் ஒளித்த வஞ்சசுக் கோடரியின் கூர்முனையுமாகி, நெஞ்சின் மீட்டலுக்கேற்ப உவமைகள், உருவகங்கள், உருபுகள், கருக்கள் கருவின் இருளில் மறைந்து தோன்றி மீண்டும் மறையும் த்வனிகள். 

அன்று- 

ஒன்று சொல்கிறேன். அன்று -என் கையில் எனக்கு நாளும் கிழமையும் அற்று என்றோ ஆகிவிட்டது. அதைப் பற்றி எனக்கு அக்கறையுமில்லை. அன்று, இன்று, இனி என நாம் நியமித்த ஏற்பாட்டில் நாம் உழம்பிக்கொண் டிருப்பது என்றும் உள்ள இன்றுதான் சென்று போனதை நொந்து, இனிக் காய்த்துத் தொங்கப் போவதை நம்பி, கைப்பிடியில் விரலிடுக்கில் வழியும் இன்றை ஏமாந்து போவதை என்றேனும் எண்ணுகையில் சிரிப்பு ஏன் வராது? அழுவதற்குப்பதில் சிரிப்பு. அன்றிலிருந்து பாய்ந்து கொண்டிருக்கும் ஜீவ நதியின் ஓசையே இதுதான்

அன்று –

நான் குளித்துவிட்டு இடுப்பில் ஈரமுண்டுடன் திடுதிடு மென மாடியேறுகையில், பால்கனியிலிருந்து போதிய நெடியில் மூக்குத் தண்டு எனையறியாமலே சுணுங்கிற்று. “மோப்ப மாஸ்டர்” என்று ஏற்கனவே பட்டம் வாங்கி யிருக்கிறேன். வேட்டை நாய் என்று அழைக்கவில்லை. மரியாதைக் குறைவு ஆயிற்றே! 

ராஜுபால்கனியிலிருந்து வெளிப்பட்டான். அவன் முகம் லேசாய் வெளிறிட்டிருந்தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றோம். 

மனிதனோ, மிருகமோ, எவ்வளவு நெருங்கிய உறவா னாலும் சரி எப்பவும் நம்மில் ஒரு நம்பிக்கையற்றதன்மை, ஒரு சதா விழிப்பு இயங்கிக்கொண்டேயிருக்கிறது. இந்த உஷார், ஜீவனின் இயல்புக்கே உரிய தற்காப்போ! 

ராஜுவுக்குப் படிக்க உடல் வணங்கவில்லை. “நான் வேண்டாம்னா சொல்றேன்?” அவன் தாய் என்னிடம் கை விரிக்கிறாள்.”அவன் தான் வேலைக்குப் போகணும்னு ஆசைப்படறான். ‘நீதான அப்பாவிடம் சொல்லேன்’னு எனைப் பிடுங்கியெடுக்கிறான். அவன் இஷ்டப்படி ஒரு வேளையைத்தான். பண்ணி வெச்சுடுங்களேன் ! வயசுப் பிள்ளை அப்பா மாதிரிதான் ரெண்டு காசு ஆத்துக்குக் கொண்டு வரணும்னு ஆசையிருக்காதா? ஏதோ அவனும் சொக்காய்த்துணி வண்ணான் வரைக்குமாவது ஆகுமோன்னோ!” 

ராஜு என்றுமே ‘டீக்’ காக உடுப்பான். வண்ணான் மடியில் கத்திமுனை கலையவே கலையாது. தூசி பட் டாலும் துடித்து விழுவான். ஆகையால், இப்போது சட்டைப்பையில் கறுப்புத் திட்டு தீய்ந்து கொண்டே பெரிதாகி, சொக்காய் பொசுங்குவது அவனுக்கு ஏன் தெரியவில்லை? நான் சட்டென்று அவன் பைக்குள் கைவிட்டு எடுத்து அவன் வாயில் நட்டேன். 

ஏண்டா, அப்பாவுக்கு இப்படி மரியாதை பார்த்தால் உன் உயிருக்கே ஆபத்தாச்சேடா! சட்டை பற்றிக்கொண் டால் உன் கதி என்ன? 

அவன் கன்னத்தில் விழுந்த அறையில் என் கைவிரல் நுனிகளில் சுறீல்’ பாய்ந்தது. 

ராஜு திணறிப் போனான் அவனுக்கு வலியை விட ஆச்சரியம்தான் இருந்திருக்கும். எனக்கே என் செயல் வியப்பாயிருந்தது. எனக்கு நினைவு தெரிந்து என் குழந்தைகளை நான் தண்டித்தது இல்லை அதெல் லாம் அவள்பாடு. அடிப்பாள். உடனே கட்டிக்கொண்டு அழுவாள். அடித்த கன்னத்தைக் கையில் தாங்கிக் கொண்டு என்னைப் பார்த்துக் குழம்பி நின்றாள். 

‘என்ன இது வயசுப் பிள்ளையை நீங்கள் போட்டு அடிக்கற அக்ரமம்?” குரல் கேட்டுத் திரும்பினேன். என் பின்னால் ராதை நின்று கொண்டிருந்தாள்; அவள் முகம் கொதித்தது. இந்தச் சமயம் அவள் தன் முந்திய அழகின் முழுமையில் பொலிந்தாள். எனக்குச் சொந்தமாயிருந்த. அந்த நாளின் அழகு. 

இப்போது ராதை எனக்குச் சொந்தமில்லை. அவள் தன் குழந்தைகளின் தாய். அவர்களுக்குச் சொந்தம். 

நான் ஒன்றும் பதில் பேசவில்லை. நேரே என் அறைக்குச் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டேன். இடுப்பின் ஈரத்தைக் களையாமலே நாற்காலியில் சாய்ந் தேன். உடலில் ஒரு தினுசான ஓய்ச்சல். என்னை மங்கிய இருள் சூழ்ந்தது. என்றுமே என் அறையில் வெளிச்சம் மட்டுத்தான். இந்தச் சமயம் எனக்கு இந்த இருள் வேண்டியிருந்ததது. என்னையே எனக்குப் பார்க்க விருப்பம் இல்லாத சமயம் இது. இருளின் இதவு உடல் மேலேயே உணரும் சமயம் இது. இருளுக்கும் எனக்கும் என்றுமே இணைப்பு உண்டு. எத்தனை பேர் என்னைச் சூழ இருந்தும் நான் வரவர அதிகம் உணரும் தனிமை யில் இந்தச் சின்னத்தின் துணையும் இல்லாவிடில் நான் என்ன ஆவனோ? வரவர எனக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது? வயது காரணமாய் உடல் நைவின்மேல் போடும் பழியைத் தவிர, மனத்திலேயே ஏதோ ரஸாய னம் நேர்ந்து கொண்டிருக்கிறது. இல்லை உடல் வேறு, என்று பிரித்துப் பேசுவதுதான் தவறோ? உடல் இல்லாது மனம் ஏது? 


கீழே கூடத்தில் ரேடியோ ஏதோ சினிமாப் பாட்டைக் கதறுகிறது. பாட்டா அது? ஆபாச ஊளை ஒரு கல்லைத் அடங்கிவிடும். ரிப்பேர் ஆகித் தூக்கிப் போட்டால் திரும்பி வரும்வரை ஒரு பத்து நாளேனும் நிம்மதி. ஆனால் அப்படியும் நிச்சயமாய்ச் சொல்வதற்கில்லை. கம்பெனிக்காரன் பதில் ரேடியோ தருவானாமே! ஓயாத இரைச்சலில்தான் இந்த வீட்டு வாழ்க்கை. ஒன்று இரைச்சல். இல்லை மொண மொணப்பு. 

மகப்பேறு ஒவ்வொன்றுக்கும் எங்கள் உறவு விரிசல் கண்டு, ஒன்று, இரண்டு, மூன்று – நான்கும் ஆனது ராதையும் நானும் நேர்ந்தது அறியாமலே, இரு கக்ஷிகளா கவே பிரிந்து விட்டோம். அவள் இரைச்சலில் தன் ஆத்தி ரங்களுக்கு வாய் மொழி கண்டால், நான் ஊமையானேன் 

பிளவைச் செப்பனிட நான் முற்படவில்லை. பயன்? நாம் தான் நாளுக்கு நாள் சுட்டமண் ஆகிக் கொண்டிருக்கிறோமே! 

“உங்கப்பா என்னடா காலத்தோடு ஒட்டின மனுஷ- னேயில்லை உத்தியோகம் பண்றார்னுபேர், இன்னும் கைக் கடிகாரம்கூட இல்லை. காய்கறிக் கடைக்காரன் கூட கடிகாரம் கட்டிண்டுதான் சொத்தைக் கத்தரிக்காயை நிறுத்துப் போடறான். அதையும் உங்கப்பா வாய் பேசாமல் வாங்கிண்டு வந்துதான் இங்கு கொட்டறார். மாமனார் வீட்டில் வாங்கிப் போட்டால்தான் உண்டா? தானா வாங்கிப் போட்டுக்கொள்ள வக்கில்லையா ? நாளாகவில்லையா? உங்கப்பாவின் மாப்பிள்ளையழைப் பின்போதே, இவர் வேட்டியைத் தட்டிச் சுத்திக் கட்டிண்டு காரிலிருந்து இறங்கினதைநான் மாடியிலிருந்து பார்த்தது. நான் நாலு பெத்தாச்சு. நாளுக்கும் மறக்காது. இன்னும் அந்தக்கோலம் நெஞ்சை அறுத்துண்டு தானிருக்கு. ஒரு சினிமா டிராமா ஆம்படையாளைத் தனியா அழைச்சுண்டு போனதுண்டா? கேட்டால், “நீ வேணும்னா போயேன்!” நான் வேணது போறேன். இல்லை இவர் போகலியேன்னு நான் போகாமலிருக்க முடியுமா? நான் போறேன், என் பிள்ளைகளை அழைச்சுண்டு போறேன்; நீங்கள் தடுக்கலே என்பதா கணக்கு? உங்களோடு என்று எனக்கு என் பங்கு எங்கே?” 

ராதையின் குரல்களே இப்படித்தான். 

‘ஆள் கால், ஆடை முக்கால்’னு உங்க அப்பா இன்னும் காலத்தோடு ஒட்டினால் நம் குடும்பம் இன்னும் முன்னேறலாம். என் தங்கை போல், நம் வீட்டிலும் ஒரு சமையற்காரனும் வாசலில் ஒரு காரும் நிற்கக்கூடாதா? இல்லை இரண்டுக்கும்தான் எனக்குத் தகுதியில்லையா?” 

எனக்குத் தெரிந்து ராதைக்கு மூன்று ஆசைகள்.

அவளைக் காலையில் எழுப்பக் கூடாது. 

அவள் செலவுக்குப் பணம் அவ்வப்போது முளைத்துக் கொண்டே இருக்கவேண்டும் அவளைக் கணக்குக் கேட்கக் கூடாது. 

அவள் தங்கை செய்வதெல்லாம் அவள் செய்தாக வேண்டும். 

“ஒரு அசலாத்துப் பெண்ணைக் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்துண்டு வந்துட்டா ஆயிடுத்தா? அவளைச் சந்தோஷமா வெச்சுக்க வேண்டாமா?” 

“உங்க அம்மாவுக்குக் காரும், சினிமாவும் தான் முக்கியம். நான் கூட இல்லே” என்று நான் கேலி செய்தால் அதற்கும் பதில் வைத்திருப்பாள். 

“அப்படித்தான் இருந்துட்டுப் போகட்டுமே! ஊர் உலகத்தில் எல்லோரும் போகல்லியா, வரல்லியா? ஆம்படையான் செத்துப்போனவாள் எல்லாம் உடனே உடன்கட்டை ஏறிவிட்டாளா? நீங்கள் ஒரு பிள்ளை. உங்களை நம்பி உங்கம்மா வாழ்ந்தாப்போலே, நான் மூணு பேரை நம்பி வாழ்ந்திட்டுப் போறேன். மூணு பேரில் மூணுபேருமா பொல்லாதவனாயிருப்பான்கள் ? உங்களை நம்பி என்ன கண்டேன்.”
 
“நான் தான் வெகுளி.லோலோன்னு சுத்தி நானே ஓயணும். எல்லாத்துக்கும் மௌனம்தான் மருந்துன்னு உங்கப்பா அழுத்தமாயிருக்கார். எனக்குத் தெரியாதா? ஆனால் இனி நான் ஓயமாட்டேன்”. 

எனக்கும்தான் தெரிகிறது. 

ப்ரேமையின் சின்னமாய் ராதையின் பெயரை இவள் ஏன் கொண்டாள்? 

இதெல்லாம் இன்றைக்கு எனக்குத் தோன்றுவானேன்? அன்று மாலை, ஏன் அன்றிலிருந்தே நான் வீடு திரும்ப வில்லை. 


ராதையின் புழுக்கமும், அவள் பழியும், என் மௌன மும் சேர்ந்து நிச்சயமாய் என்னை ஏதோ ஒரு முனைமுகம் இழுத்துச் செல்கின்றன. அவள் கிளை தாவிட்டாள். எனக்குத் தாலக்கிளையில்லை. அதற்குப் பதில் என்னைக் கழுவிலேற்றியது போல் என்னை ஊடுருவிவிட்ட வேர் மீது, என்மீது ஒரு விருக்ஷம் வளர்ந்து கொண்டிருக்கிறது. 

மனம் ஒரு தோலானால் மனமும் உடல்தான்.
உலகமே உயிரின் கல்லறை. 
என்மேல் கற்கள் அடுக்கியாகின்றன. 
நான் தனியனாகிவிட்டேன். 
நாளும் கிழமையும் என்னைத் துறந்தன. 


மறுநாள் மாலை: ராஜு ஆபீசுக்கு வந்தான், விஜியைத் தூக்கிக்கொண்டு. 

“அப்பா!’ குழந்தை என்னைக் கண்டதும் ஒரு தாவு தாவிவிட்டாள். அப்பம் போன்ற கைகளால் என் முகத்தைத் தொட்டுப்பார்க்கிறாள். அது அவள் சுபாவம். 

நான் மணியடித்து, பாபுவை ஒரு ‘ஸெட் டிபனும் ம்’ இரண்டு காப்பியும் வாங்கிவரச் சொன்னேன். விஜிக்கு ஒரு லாலி பாப்! 

அப்படியென்றால் என்னவோ? 

ராஜுக்கு முகம் சுண்டியிருந்தது. 

“அப்பா என்னை மன்னிச்சிடுங்கோ !” இந்த மூன்று வார்த்தைகளை வெளியிட எவ்வளவு ஒத்திகை பார்த்திருப்பான். 

“ஓ ராஜு I am also sorry. உன் அம்மா சொன்னாப் போல, உன்மேல் நான் ஏன் கை வைத்திருக்க வேணும்? நான் பெற்றதால் என் வளர்ப்பிலேயே உன்னை நான் உருவாக்கப் பார்ப்பது நியாயமா? ராஜு நீ பெரியவனா யிட்டே. உன்னிடம் விட்டுப் பேசலாம் என்றே நினைக்- கிறேன். இந்த மனித விதைக்குத்தான் இந்த மகத்துவம் உண்டு. ஒரேமரத்தில் மாங்காய் காய்க்கும், தேங்காய் பாளைவிடும், அவரை பூக்கும், பாகல் படரும். இந்த உண்மை சமயத்தில் மறந்து விடுவதால்தான் வருகிறது துயரம், சண்டை, மனஸ்தாபம் எல்லாம்!” 

“வீட்டுக்கு வாங்கோ அப்பா!” ராஜு முனகினான்’. ‘சேகர் இந்த ஒருநாள் ராத்திரியில் உங்களைக்காணாமல் “பக்’னு பாதி வாங்கிட்டான். வாய்விட்டால், அழுதால் கூட தேவலை. ஊமையடிப்பட்டுத் தவிக்கிறான்”. 

சேகருக்கு என்மேல் பட்சம் கூடத்தான். என்மேல் காலைப் போட்டுக் கொண்டால்தான் அவனுக்குத்  தூக்கம் வரும். 

“கண்ணன் என்ன பண்ணுகிறான்?” 

“கண்ணன் ரெண்டு தடவை ‘அப்பா இன்னும் வல்லியா’ன்னு கேட்டான். அப்புறம் பந்தை எடுத்துக் கொண்டு ஓடிப்போயிட்டான்.” 

எனக்குத் தெரியும். கண்ணன் சமாளித்துக்கொண்டு விடுவான். 

எல்லோருமே சமாளித்துக்கொண்டு விடுவார்கள்.

நாள் ஆகஆக, உடலில் உப்பும் தண்ணும் ஊற ஊற, சதை தடிக்கத் தடிக்க, எல்லோருமே எல்லாவற்றையுமே சமாளித்துக் கொண்டு விடுவார்கள். 

அம்மா என்ன பண்ணுகிறாள்?- என்று நான் கேட்க வில்லை. 

கேட்க மாட்டேன்.
கண்ணனுக்குப் பந்து.
ராஜுவுக்கு சிகரெட் 
விஜிக்கு ‘லாலி பப்பு 
ராதைக்குச் சினிமா. 
சேகர்தான் பாவம்! கொஞ்சம் திண்டாடுவான். 
பிறகு அவனும் சரியாகி விடுவான். 
வாழ்க்கையே மறதியின் வெற்றிதானே. 
நான் ராஜுவின் தோள்மேல் கை வைத்தேன். 

“ராஜு, Don’t bother. நான் எங்கே காட்டுக்கா போய்விட்டேன்? எனக்குத் தோன்றும்போது வருகிறேன். நீங்களும் என் ரூமுக்கு வாருங்கள்! இன்று நேரமாகி விட்டது. நாளை காலை வா, உன் பேரில் பேங்கில் கணக்கு வைக்கணும். குடும்பத்தை இனி நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். நீ வேலைக்குப் போக ஆசைப்” படுவதாக உன் அம்மா சொன்னாள். நாளைக்கு உனக்கு ஒரு சிபாரிசு கடிதாசு தருகிறேன். உனக்கு வேலை கிடைக்கும்.” 

ராஜுவுக்கு முகம் மலர்ந்தது. உடனே அடக்கிக் கொண்டான். 

“என்னப்பா இதைவிடப் பெரிய சண்டையெல்லாம் வீட்டில் நடந்திருக்கு. அதைவிட நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறும்படியாக என்ன நேர்ந்துவிட்டது? 

“நீ சொல்வது சரிதான். ஆனால் பெரிய வெடிக்கு தீவட்டியை வெச்சுத்தான் கொளுத்தணுமா ? சின்னத் திரி போதாதா? எனக்கும் வயதாயிற்று. குடும்பத்தை விட்டு ஒதுங்க எனக்கு வேளை வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளேன்! இளவெட்டுக்கள் உங்களுக்கெல்லாம் எப்போ சான்ஸ் கிடைக்கிறது? அட்டா பிடிடா இவளை மசியைக் கொட்டிட்டாளே, முக்கியமான பேப்பரில்!” 

“அப்பா, சாயந்தரமா வரப்போ ‘லாலிபப்’ வாங்கிண்டு வரீயா?” 


என் அறையில் படுத்திருக்கிறேன்.

அறை மிகச் சிறிது. கைகளை நீட்டினால் இரு பக்கத்துச் சுவர்களும் இடிக்கின்றன. ஆயினும் இது என் வளை. 

ஜன்னலில் ஒரு மண் கூஜாவில் குடி ஜலம், கண்ணாடி டம்ளர். இன்றுதான் வாங்கினேன். காலை வீசி நடக்கும் தூரத்தில் Hotel de Mathur. பண்டங்கள் அப்படி ஒன்றும் மதுரமாயில்லை. ஆயினும் கிட்ட இருக்கிறது. சாப்பிடம் போனாலும் போச்சு. சோம்பலாய் இருந்தால் திரும்பிப் படுத்துக் கொண்டாலும் போச்சு என்னைக் கேட்பார் யாருமில்லை. நானே ராஜா, நானே மந்திரி, நானே சேவகன். 

ராதையின் பழகிய குரல் நினைவில் எழுகின்றது. “எத்தனை நாள் நடக்கும் பார்த்துடறேன். நாக்குச் செத்துப்போனால் தானா வந்து சேர்றார். அவர் வீட்டுக்கு அவரை நான் அழைக்கணுமா என்ன? நாலு பேர் சிரிக்கணும்னுதானே நாலு பெக்கற வரைக்கும் காத்திருந்து உங்கப்பா லீலை நடத்தறார்!” 

அதுவும் எனக்குத் தெரியாது. இப்போதைக்கு என் சிரிப்புத்தான் எனக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறது. 

ஆனால் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. 

குழந்தைகள வருமுன், என் ராதை ஒரு சமயம் எங்கள் ஆலிங்கனத்தின் நெருக்கத்தைத் தடுத்ததென என் பூணூலைக் கோபித்து “சூள்” கொட்டி முதுகுப்புறம் தள்ளிவிட்டதும் ஞாபகம் வருகிறது. 

இன்று மாலை ‘லாட்ஜ்’ வாசலில் வந்து தெருப்பக்கம் காற்று வாங்க நின்றேன். எதிர் வீட்டுக் குறட்டில் ஒரு பையன் பம்பரம் ஆடுகிறான். இல்லை ஆடப் பார்க்கிறான். சின்னப் பையன் நாலு, ஐந்து வயதுக்குமேல் இராது. கயிற்றை இழுத்துப் பம்பரத்தில் சுற்றக்கூட அவனுக்குச் சக்தியில்லை. அவனிடம் போய் கையை நீட்டினேன். பையன் முறுக்கிக் கொள்ளவில்லை. உடனே கொடுத்துவிட்டான். ஜாட்டியைச் சுற்றிக் கொண்டே “அம்பி உன்பேர் என்ன?” என்று கேட்டேன். 

“சேகர்.” 

”ஓ! நீயும் சேகரா?” 

பம்பரம் கயிற்றிலிருந்து விடுபட்டு ரோஷத்துடன் தரைமீது குதித்தது. குளவிபோல் கூவிற்று கற்பூரக் கொழுந்து போல் தூங்கிற்று. பையன் முகமே கண் களாயின. ஏற்கெனவே கார்ட்டூன் பொம்மை மாதிரிதான் இருக்கிறான். பம்பரத்தை எடுத்து அவன் கையை விரித்து உள்ளங்கையில் விட்டேன். குறுகுறு – சேகர் வாயிலிருந்து உடைந்த குழாய் போல் சிரிப்பு பீறிட்டது. பம்பரம் படிப்படியாக வேகம் குறைந்து, கிழவன் தலைபோல் ஆடிக் கையிலிருந்து கவிழ்ந்தது. 

“தாத்தா தாத்தா நுன்னொண்ணா தடவை பண்ணுங்கோளேன்! தாத்தா தாத்தா! Please!” 

ஓ, கான்வென்டா? 

அந்த நிமிஷத்திலிருந்தே நாங்கள் சினேகிதர்களாகி விட்டோம். 

“நுண்னொண்ணு தரம்!” 

“நுண்னொண்ணு தரம்!” 

‘‘சேகர்! சேகர்!” என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளிருந்து ஒரு பெண் வந்தாள். பையன் அவனிடம் ஓடிப் போய் அவள் இடுப்பைக் கட்டிக்கொண்டான். 

“அம்மா! அம்மா! தாத்தா நொம்ம நன்னா குத்து விடறார். நீபாரேன்!”- 

இவள் இவனுக்குத் தாயாரா ? அக்கா என்றாலே பொருந்தும். பையன் முகத்துப்பால் இவள் முகத்தில் இன்னும் காயவில்லை. இவளை எங்கேயாவது பார்த்திருக்கிறேனோ ?” 

அவள் புன்னகை புரிந்தாள்.

“சேகருக்குக் கொஞ்சம் இடம் கிடைச்சுட்டால் போதும் நேரே தலைமேல் தான் சவாரி.” 

நான் நெற்றிப் பொட்டைத் தேய்த்துக்கொண்டு நின்றேன். இவளை நான் எங்கு பார்த்திருக்க முடியும்?

“தாத்தா குத்துவிடுங்கோ தாத்தா! அம்மா பார்க்கனும்!” 

அவள் அவன் வாயைப் பொத்தினாள். 

“உஷ்! மாமான்னு சொல்லணும் சேகர்!” 

அன்றிரவு நான் குளித்துவிட்டு, ஹோட்டலுக்குக் கிளம்ப சட்டையை மாட்டிக் கொண்டிருக்கையில், 

“தாத் – மாமா!” 

திரும்பினேன். அறை வாசற்படியில் சேகர் நின்று கொண்டிருந்தான், கையில் ஒரு தட்டுடன். அதில் ஒன்றன் மேல் ஒன்றாய்க் குவித்த இரண்டு மூன்று பொரித்த அப்பளங்கள். 

”அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாள். அப்பலாம். இன்னிக்கு இட்டாளாம்”. 

அவனைத் தூக்கிக்கொண்டேன். பையன் இறக்கை மாதிரியிருந்தான். 

“Thank you Sekar ! Tell your Mummy I thank here !” 


அவள் கணவனும் இரண்டு நாள் கழித்து என்னைப் பார்க்க வந்தான், பையனை அழைத்துக் கொண்டு “சுமாச்சுமா சேகர் பிடுங்கி எடுக்கிறான்.” அவனுக்கு ராணுவத்தில் வேலை. “நினைத்த சமயம் எங்கே வேணு மானாலும் மாற்றலாம். பையன் படிப்பு பாழாய்ப் போவுது. பையன் உங்க கிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டான் சார், எங்களுக்கே ஆச்சரியமா இருக்குது. 

யாரும் என்னோடு ஒட்டினால் இப்போது கூச்சமா யிருக்கிறது. எந்தவித ஈடுபாட்டிலும் மாட்டிக்கொள்ள மனம் மருள்கின்றது. இப்போது ஒரு பெரும் ஈடுபாடிலி வந்திருக்கிறேன. ருந்து என்னைக் கழற்றிக் கொண்டு ஆனால் இதை இவனிடம் சொல்ல முடியுமா ? சொல்வதே ஒரு ஈடுபாடுதான். 

“அவளுக்கு ரொம்ப சந்தோஷம் சார், so to me எங்க வீட்டில் பெரியவங்க யாரும் இல்லை. என் parents. சின்ன போதிலேயே காலமாயிட்டாங்க. அவளுக்குத் மறுபடியும் தாயார் இல்லை. அவள் தகப்பனார் கலியாணம் பண்ணிக்கிட்டார். அவங்க எல்லாம் தூர தேசம் -” 

கண்டவிடம் மாற்றலாகி, கண்டபேருடன் பழகி அவர்கள் பேச்சு இவனுக்குப் படிந்து, இவன் பாஷை இன்னதெனப் புரியாதபடி பாழ்பண்ணிக் கொண்டாச்சு 

இதையெல்லாம் இவன் ஏன் என்னிடம் சொல்கிறான்? இவர்களைப் பற்றி எதையும் அறிய நான் விரும்பவில்லை. யாரைப் பற்றியும் எதையும் அறிய நான் விரும்பவில்லை. 

“உங்க மாதிரி ஒரு பெரியவங்க எதிர் வீட்டிலேயே எங்களுக்குக் கிடைச்சுது எங்க அதிர்ஷ்டம் ஸார், அப் பப்போ உங்கள் advice, guidence-” 

Oh my god! இந்தத் தும்பைத் தலையும் நரை புருவமும் படுத்தும்பாடு! 

“அதே மாதிரி உங்களுக்கும் என்னால்- எங்களால் ஏதாவது ஆகணும்னா don’t hesitate-” 

“உன்னால் — உங்களால் எனக்கு ஆகவேண்டியது நீங்கள் என்னைச் சும்மா விட்டு விடுவதுதான். நான் வேண்டுவது தனிமை” என்று இவனிடம் சொல்ல முடியுமோ? 

“ஓ அதற்கென்ன ?” என்று சொல்லி எழுகின்றேன், அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு என்னுள் வீற்றிருக்கும் சிரிப்பு என்னைப் பார்த்துச் சிரிக்கின்றது. 


நான் தனிமை, தனிமை என்கிறேன். 

ஆனால் உண்மையில், உண்மையான தனிமையைச் சாதிக்க முடியுமோ? 

தனியாயிருந்தால் மட்டும் தனிமை கிட்டி விடுமோ? அதுவே முதலில் இருக்கிறதோ? 

ஏனெனில், நான் எங்கு போனாலும், யாரை விட்டுத் தப்பி வந்தாலும் எப்பவும் என்னோடு இருக்கிறேனே ! 

எனக்கும் நான் நாஸ்திதான் தனிமை. 

துறந்துவிட்ட தால் மட்டும் தனிமை வருமோ? ஒன் றைத் துறந்தால் மற்றொன்று அதனினும் பெரிது இட்டு நிரப்ப வந்து விடுகின்றது. 

சகலமும் துறந்தவனுக்கு உலகமே உடைமை. 

ஆகையால் சின்ன உடைமை, பெரிய உடைமை எனும் தாரதம்மியங்கள் தவிர உண்மையான தனிமையுமில்லை. 

உண்மையான துறவுமில்லை. 

இன்றிரவு எனக்கு ஒரு வேடிக்கையான எண்ணம் தோன்றிற்று.முற்றிலும் வேடிக்கையுமல்ல. விஷமமானது தான். நான் தனியாக வந்து எம்மட்டும் தனிமையைச் சாதித்திருக்கிறேன் என அறிய ஆவல் கொண்டேன். இன்று என் இரவுச் சாப்பாட்டை இரந்துண்டால் என்ன? பிச்சையெடுக்க மனம் எம்மட்டில் துணிந்திருக்கிறது? ஹோட்டல் டிக்கெட் புஸ்தகத்தையும், பாங்கு புஸ்தகத் தையும், மணி பர்சையும், எதிர் வீட்டு உறவையும், உத்யோக பத்திரத்தையும் இத்தனை தைரியங்களின் கலவையான என் மமதையையும் எம்மட்டில் என்னால் மறக்க முடியும்? 

தெருக்களைத் தாண்டி வெகுதூரம் நடந்தேன். வாசல்கள் சில திறந்திருந்தன. பல மூடியிருந்தன. எந்தப் படியை ஏறவும் மனம் துணிந்திருந்தால்தானே! நடந்து நடந்து நாக்குக்கூட வரண்டுவிட்டது. இன்று சோறு இல்லாவிட்டாலும் போகிறது. தாகத்துக்குச் சோதனை யாக ஒரு சோடாக்கடை கூடத் தென்படவில்லை. நான் இப்போது அலையும் இடத்தில் தெருவிளக்குக் கூடச் சரியாக எரியவில்லை. விட்டு விட்டு அணைந்து ஏற்றிக் கொள்கிறது. வழி தப்பிவிட்டதோ? சந்தேகம் வந்து விட்டது முன்னிலாவில் வெள்ளைத் துணி போர்த்த ஒரு உருவம் தெரிந்தது. சற்றுத் தயங்கி நின்றேன். 

திண்ணையில் சாய்ந்திருந்தவர் சட்டென எழுந்து உட்கார்ந்தார். 

“யாரைத் தேடறீங்க? வாங்க, வாங்க – உட்காருங்க- உட்கார்ந்து பேசுங்க-” 

“நான்-நான்-எனக்கு” 

விழிகளில் எரிநீர் உறுத்திற்று. இது கோபமா? அவமானமா?? பயமா??? உலகில் பிச்சை புகுந்த அத்தனை ஆண்டுகளின் அடையாளத் துயரமா???? 

இச்சமயம் ராதை என்னைப் பார்த்தால் என்ன சொல்வாள்? என்னை இடிக்க மாட்டாள்?? 

இதெல்லாம் எத்கனை அனாவசியம்! தன் மனசில்தான் பெரிய புத்தன், பட்டினத்தார்னு எண்ணம்! தன் வீட்டுச் சோற்றைத் தான் சாப்பிடுவதை விட்டுவிட்டு, இதென்ன கௌரவப் பிச்சையா ? வேண்டுதல் பிச்சையா?” 

என்மேல் ஊர்ந்த ஆயிரம் தேள்களில் ஒன்று அவ ரைக் கொட்டி விட்டாற்போல் அவர் துள்ளி எழுந்தார்.

சிவகாமி! ஆள் வந்தாச்சு, இலையைப் போடு!” அவர் குரல் கணீரென்றது. “வாங்க, கைகால் கழுவுங்க!’ 

வாழை இலையில் வட்டித்த சாதத்தின்மேல் நெய் ஊற்றிய இடம் லாந்தர் வெளிச்சத்தில் பளபளத்து என்னைப் பார்த்துச் சிரித்தது. 

அந்த வற்றல் குழம்புக்கும், பருப்புத் துவைய து கெட்டி மோருக்கும் இணை ருசி நான் இன்னும் காணப்போகிறேன். 

சாப்பாடு முடியும்வரை யாரும் பேசவில்லை.

கையலம்பிக் கொண்டதும் அவர் வெற்றிலைத் தட்டை யெடுத்து வந்தார். 

“நான் போடும் வழக்கமில்லை” என்றேன்.

“பரவாயில்லை, தாம்பூலம் எடுத்துக்கோங்க.”

நான் வாங்கிக் கொண்டதும் தடாலென்று இரு வரும் என் காலில் விழுந்து நமஸ்கரித்தனர். 

எனக்கு வாயடைத்தது. 

அந்த அம்மா பேசினாள். 

“எங்களுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுங்களா? இன்னி மாலையிலிருந்தே இவர் சொல்லிட்டிருக்காரு. சிவகாமி,இலை போட அவசரமில்லை விருந்தாளி வர இருக்கு”ன்னு, என்ன இவரு இப்படிச் சொல்றாரே, நேரமாவுதே. நான் யோசனை பண்ணிட்டிருந்தேன் நீங்களும் வந்தீங்க, ஆனால் இவர்கிட்டே எனக்கு இது ஒண்ணும் அதிசயமில்லீங்க. இவரு இப்படி ஏதாவது சூசனையா சொல்வாரு சொல்றபடியே நடக்கும்.” 

இவர்களிடம் எனக்கு அச்சமாயிருந்தது. பேச்சை மாற்ற, ‘குழந்தைகள் எல்லாரும் தூங்கி விட்டார்களா?” என்று கேட்டேன். 

“கொளந்தைகளா ?’ அவள் கணீரென்று சிரித்தாள் “கடவுள் எண்ணம் வெக்கலீங்க. ஆனால் நாங்கள் அதைப் பத்திக் கவலைப்படல்லீங்க. இவர்தான் எனக் குக் கொளந்தை. நான்தான் அவருக்குக் கொளந்தை, எழுந்தூட்டீங்களா? நேரமும் ஆவுது சரி, போய் வாங்க…?” 

கையும் பிடியுமாய் அகப்பட்டும், மன்னிக்கப்பட்ட திருடன் போல் நான் அவ்விடம் விட்டு அகனறேன். 

சோதிப்பவன்தான் உண்மையில் சோதிக்கப் படுபவனும். 


இவளை எங்கோ பார்த்த மாதிரி நினைவில் ஏதோ இடறுகிறது. ஆனால் நிச்சயமாய் இவளை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. பார்த்திருக்கவே முடியாது. இவர்கள் மூவர் மேலும் புரியாத சோகச்சாயை படர்ந்திருக்கிறது. இவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ நல்ல கவிதையைப் படித்தபின் நெஞ்சில் அதன் வண்டலாய்த் தங்கும் கிலேசம் இறங்குகிறது. குளிர் தாங்காது ஒன்றுடன் ஒன்று ஒடுங்கிக்கொள்ளும் சிட்டுக். குருவி ஜோடியை நினைவூட்டுகின்றனர். 

இவள் எவ்வளவு சிறுகூடாய் இருக்கின்றாள்! இவ் வளவு குறுகிய வயிறு எப்படிச் சேகரின் கருவைத் தன் னில் அடக்கிச் சுமந்தது? 

-இது எவ்வளவு முட்டாள் தனமான கேள்வி ! சுமந்து தானே சேகர் உருவாகி வெளிவந்து பம்பரம் விளை யாடுகிறான். தவிர இது என் கவலையா ? இது எண்ணத் தின் அக்கப்போரன்றி வேறு என்ன? 

அவர்கள் வீட்டில் செய்யும் பலகாரங்கள்- ஏன் சில சமயங்கள் அவள் கணவன் வாங்கி வரும் பொட்டலங் களில் கூடப் பங்கு பையன் மூலம் வரும். 

மறுக்கவும் முடியவில்லை. ஒரு தடவை திருப்பியனுப் பியதற்கு அவளே நேரே வந்து விட்டாள். 

“ஏன் நான் கொடுத்து நீங்கள் வாங்கிக்கக்கூடாதா ?” இதற்கென்ன பதில் சொல்ல முடியும்? தட்டை ஜன்னலில் வைத்துவிட்டுச் சென்றாள். 

இன்னொரு சமயம் ‘தலைவலி உடல் சுகமில்லை, என்று தட்டிக் கழிக்க முயன்றேன். அவ்வளவுதான். ஏன் சொன்னேன் என்று ஆகி விட்டது. உடனே மாத்திரை, வெந்நீர், கஷாயம், மிளகுரசம் என்று எதை எதையோ தூக்கிக் கொண்டு இருவருமே வந்து விட்டனர். அந்தப் பொய்யிலிருந்து கெளரவமாய்த் தப்புவதே பெரும் பாடாய்ப்போய்விட்டது. 

சிறுமீன் போட்டுப் பெருமீன் பிடிக்கிறார்களோ என்று நான் கவலையுறும்படி அவர்கள் என்னிடம் கடன் கேட்கவில்லை. ஒரு தயவையும் எதிர்பார்க்கவில்லை. 

மனிதன் எப்பவும் சந்தேகப்ராணி. 

ஒன்று இல்லாவிட்டால் ஒன்று ஏதோ ஒரு தாக்ஷண்யச் சுழியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறோம். 

ஒன்று ஆத்திரத்தில் அழிகிறோம் அல்லது அன்பால் கொலை செய்யப்படுகிறோம். 

இந்தத் தாக்ஷண்யங்களைத் திருப்புவது எப்படி என்று மண்டையைக் குடைந்து கொள்வேன். 

பையனுக்குப் பிஸ்கட் ரோல் வாங்கித் தருவேன். 

ஒரு வெள்ளிக்கிழமை மாலை கதம்பம் வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டுள் நுழைந்தேன். 

அவள் மட்டும்தான் இருந்தாள். அவள் கணவன் இன்னும் ஆபீஸிலிருந்து வரவில்லை. பையன் விளையாடப்போய் விட்டான் போலும். 

“வாங்கோ ! வாங்கோ !!” 

பூப்பந்தை அவளிடம் நீட்டினேன். அவள் கண்கள் விரிந்தன. “எனக்கா ?” 

“பின்னே என்ன நான் சூட்டிக்கொள்ளவா ?” 

என்னிடமிருந்து வாங்கிக் கொள்கையில் அவள் கைச் சுண்டுவிரல் என் உள்ளங்கையில் பட்டது. உடல் பூரா ஊடுருவிய ஒரு பரவசத்தில் என் விழிகள் பிதுங்கி என் கையில் விழுந்து விடும்போல் மண்டையில் ஒரு மின்னல். 

இரு கைகளையும் தூக்கிப் பூச்சரத்தைக் கொண்டை யில் சரிப்படுத்திக் கொண்டு அவள் நிற்கையில், ஜீராவில் செய்து வைத்த சின்னிப் பொம்மைபோல் எந்த நிமிஷம் கரைந்து விடுவாளோ, கடலில் கரையோரம் நடுங்கும் அலை நுரை போல் சிதறிக் காணாமல் போய்விடுவாளோ என்று கூட ஒருதினுசான வேதனை முதுகுத் தண்டில் ஏறி இறங்கி நெளிகின்றது. இவள் எப்படிப் போனால் எனக் கென்ன என்று ஏன் இருக்கமாட்டேன் என்கிறது? 


இன்று ராதை வந்தாள். 

மூன்று மாதங்களுக்குப்பின், முற்றிலும் எதிர்பாராத சமயத்தில், “நான் வரலாமா?” என்று கேட்டுக் கொண்டே. திடீரென்று அவள் அப்படித் தோன்றியதும் அவளைப் பார்க்க, சினேக பாவனையில் அவளை வரவேற்க சந்தோஷமாய்க்கூட இருக்கிறது. 

“என்ன அப்படிக் கேட்கிறாய்? வா,வா.” 

“ஆமாம், நம் வீட்டில், நம் வீடாகையால் நம் வீடு என் வீடுகூட. ஆனால் இது உங்கள் இடமாச்சே! இங்கு. அனுமதியில்லாமல் நுழையலாமா?” 

அவசரமாய்த் தலையணைகளை உதறிவிட்டு ஜமக் காளத்தை விரித்தேன். உட்காருமுன் அவள் கண்கள் அறையின் நாற்புறத்தையும் துழாவின. அவள் மூக்கு நுனி சுருங்கிற்று. என்னையும் ஒருமுறை கண்ணோட்டம் விட்டாள். 

“ஐயாவுக்கு வெளிவாசம் ஒன்றும் வனவாசமாா யில்லை, உடம்பு சிவப்பிட்டிருக்கே!” 

“நான் அப்போ கறுப்பா என்ன?” 

“ஓ! என் கறுப்பை நீங்கள் இப்படி ஞாபகப் படுத்தித் தானாகணுமோ?” 

“இல்லை நானா தேடிக்கொண்டதுதானே! இல்லை உனக்குக்கூட கறுப்பு உதிர்ந்துதானிருக்கிறது. இடுப்பில் ஒரு ‘டன்லப் உருவாகிக் கொண்டிருக்கிறதே?” 

“ஒண்ணுமில்லே.” அவசரமாய் அந்த இடத்தைப் புடவையால் மூடிக்கொண்டாள். “எங்களுக்கே நாற்பது வயதுக்குமேல் அப்படித்தான்.” 

“நீ கொழுப்பைக் குறைத்துக் கொள்ள வேணும். வீட்டில் தினம் சப்பாத்திக் கிழங்கு நடந்துண்டிருக்கோன்னோ?” 

“ஏன் நீங்கள் போய்விட்டால், தினம் வீட்டில் சுட்ட அப்பளமும் கொட்டு ரஸமும் இருந்தால் உங்களுக்குத். தேவலையா?’ 

பேச்சை மாற்றினேன், “ராதை ஒரு பத்து நிமிஷத்தில் வந்து விடுகிறேன். இங்கேயே இரு. உனக்குப் பிடித்தமான பேப்பர் ரோஸ்ட் மசாலா வாங்கி வருகிறேன்.” 

அவள் புன்னகை புரிந்தாள். “விருந்தாளியைக் கவனிக்க வேண்டியது நியாயம்தானே !’ 

ஆனால் நான் திரும்பி வருவதற்குள் அரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. நான் வாசலில் நுழைகையிலேயே இரு குரல்கள் கேட்டன. 

“என்ன மாமா, மாமி உள்ளூரிலே இருக்காள்னு எனக்கு நீங்கள் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே. நீங்கள் ஓட்டலுக்குப் போய்த்தான் வாங்கி வரணுமா? நீங்கள் வாசலில் இருந்தே குரல் கொடுத்திருந்தால் சேகர் என்னிடம் சொல்லியிருப்பானே!” 

“ஏண்டி கல்யாணி! மாமாவைப் பத்தி நானே இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியதிருக்கு. எனக்குமேல் நீ ஆசைப் படறையே!” 

அந்தப் பெண் சட்டென்று ராதை பக்கம் திரும்பி னாள். ஆனால் ராதையின் கவனம் முழுவதும் அவள் கைக் காப்பி டம்ளரின் மேல் ஆழ்ந்திருந்தது. (எதிர் வீட்டுக் காப்பிதான் அது. நான்தான் வாங்கி வரவில்லையே ! இன்று காலை கைதட்டி கண்ணாடி டம்ளர் உடைந்துவிட்டது.) 

“மாமா நாங்கள் கோவிலுக்குப் போகிறோம். நீங்களும் வரேளா? கேட்க வந்தேன். வந்த இடத்தில் மாமியைக் கண்டேன். 

“ஓ! மாமா இப்போ கோவிலுக்குக்கூடப் போறாரா, தேவலையே!” 

“இல்லை, இதுவரை நாங்கள் அழைத்ததில்லை. கலியாணியின் குரலில் ஏதோ நிழல் படர்ந்தது. “ஏன் நீங்களும் வாங்கோளேன் எல்லோரும் போவோமே! 

“எனக்கேது அம்மா அவ்வளவு கொடுப்பனை? மாமா அந்த நாளிலிருந்தே என்னை அழைச்சுண்டு போயிருந் தால் நாங்கள் இப்படியா இருப்போம்! காசியிலிருந்து கதிர்காமம் வரை இதுவரை மூணு ரௌண்டு அடிச் சிருக்க மாட்டேனா ? காசிக்கும் எட்டின இடம் ஏதாவது இருக்கா? நீங்கள் சொல்லுங்களேன்!’ 

“ஏன் இல்லை ? கைலாசமேயிருக்கிறதே ! ஆனால் என்றேன். அங்கு போனவர் திரும்பி வருவதில்லை” கலியாணி எங்கள் இருவரையும் மாறிமாறிப் பார்த்தாள். “சரி, இன்னிக்கு உங்களுக்கு ஒழியாது என்று தெரிகிறது, நான் வருகிறேன்” என்று எழுந்தாள் 

எதிர் வீட்டுள் அவள் கட்டுள் அவள் மறையும் வரை ராதை அந்தத் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

“எத்தனை நாளாக இந்த ஸ்வீகாரம்?” 

“எனக்குத் தெரியாது. நீ சொல்லித்தான் தெரியணும். அவள் பேரே இப்போத்தான் எனக்குத் தெரியும், அதுவும் உன் மூலமா…?” 

“இது இன்னொரு stunt ஆக்கும்!” திடீரென்று தலையிலடித்துக் கொண்டாள். ‘ஐய, இந்த ஆண் சபலமே! – நன்னா நெற்றிக் கண்ணைத் களுடைய திறவுங்கள். எனக்குப் பழகின கண்தானே! இப்படி யெல்லாம் சௌகரியமாய் இருக்கணும்னுதானே இங்கு ரூம் எடுத்துண்டிருக்கேள். எனக்கு நீங்கள் எந்தச் சமா தானமும் சொல்லத் தேவையில்லை. நீங்கள் சொன்னா லும் நான் கேட்டுக்க அவசியமில்லை. நீங்கள் என்ன சொல்வேள் என்பதும் எனக்குத் தெரியும்  “பெண் மாதிரி என்பேள். பெற்றால்தான் பெண்ணா என்பேள். ஆனால் ஒண்ணு சொல்றேன், இது எல்லாத்துக்கும் அடிப்படை ஒன்றுதான். அதில் தான் இதெல்லாம் போய் முடியும்.” 

“எதில்?”

“சபலம்.”

“Bore!” 

“ஒப்புக்கொள்கிறேன். நான் வந்த காரியத்தைப் பேசலாமா?’ 

“ஓ! பிஸினெஸ் மேல் தான் வந்திருக்கிறாயா?” 

“பின் நம்மிடையில் இனி வேறே என்ன இருக்கு?” 

“இந்த மாதம் முன்னூறு ரூபாய் கூட வேணும்.”

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 

“இந்த மாதமா? இந்த மாதத்திலிருந்தா?”

“அதுவும் சம்மதம்தான்.” 

“என் சம்பளம். ராஜூ சம்பளம் இரண்டு வந்தும் போதவில்லையாக்கும்!” 

“நீங்கள் என்னவோ தலையைக் கொய்து என் கையில் கொடுத்துவிட்டதாய் எண்ணிண்டிருக்கலாம். ஆனால் குடும்பம் பிரம்ம கபாலமாயிருக்கே! ங்கள் தலையை நீங்கள் தான் நிரப்பியாகணும்’ 

“என் தலை முன்னூறு ரூபாய் கேட்கிறதா?” 

“தலை பெரிய தலையாச்சே! அதுவும் ஆறுமாதங் களுக்கு ஒரு தடவை வெட்டிக்கிற தலை எப்படியிருக்கும்!” “மட்டை உரிக்காத தேங்காய் மாதிரி, சிங்கத்தலை.” “இவ்வளவு பெரிய தொகைக்குத் திடீர்னு எங்கே போவேன்!” 

“என்னைக் கேட்டால்? விஜிக்கு இன்னும் பத்து நாளில் பிறந்த நாள் வரது.” 

எனக்கு எரிச்சலாய் வந்தது. 

“என் இறந்த நாள் வந்தால் இன்ஷூரன்ஸ் பணம் வரும்-” 

“வரலாம் அது என்னிக்கோ ? அதுவும் ? அதுக்குள் நீங்கள் வேறு யாருக்காவது எழுதி வைக்காமல் இருந்தால். நீங்கள் தான் உறவு மனுஷாளை விட்டுட்டு, புதுசு புதுசா விஜி என்னைத் உறவு பிடிக்கறேளே? சரி நான் வரேன். தேட ஆரம்பிச்சுடுவாள். இன்னும் இரண்டு நாள் கழிச்சு ராஜூவை ஆபீசுக்கு அனுப்பறேன்.” 

அவள் போன பின்னரும் நான் உட்கார்ந்த இடத்தை விட்டு எழாமல் எந்நேரமாயிற்றோ? என்ன யோசனையி லிருந்தேன் என்று கூடத் திட்டமாய்த் தெரியவில்லை. ஆகையால் திடீரென ஒளி வெள்ளம் என்னைச் சூழ்ந்து கண்களைப் பொத்திக் கண்ணைப் பறித்ததும் கொண்டேன். 

“ஓ! I am sorry, உங்களை disturb பண்றேனா?”

நான் விழித்ததும் கலியாணியின் கணவன் வாசற் படியில் நின்று கொண்டிருந்தான். 

“நான் உங்களோடு கொஞ்சம் பேசலாமா?” 

“இன்று என் ராசி என்ன ராசியோ ?” 

இப்பத்தான் ஒருத்தி பேசிவிட்டுப் போனாள். 

“வா அப்பா, உட்காரு என்ன விசேஷம்?” 

அவன் முகம் சுண்டியிருந்தது. 

“எனக்கு மாற்றலாகியிருக்குது, ஸார். இன்னும் ஒரு வாரத்தில் கிளம்பியாகணும்.”

“ஓ!” எனக்கு மார் லேசாக வலித்ததோ ? அப்போ, இனிமேல் -“

ராதை எச்சரித்தது அப்போ சரிதானா? 

”பணம் ஏதாவது முடையா ?” என்று கேட்டேன்.

“No, no, no !” அவன் சிரிப்பின் அழுகையிலும் துக்கம் தொனித்தது. 

I am sorry. 

“நான் இப்போ மாறிப்போற இடமும் காயமில்லை. மறுபடியும் நாலு மாதத்துக்கெல்லாம் தூக்கிடுவாங்க. இந்தக் குருவிக்காரன் புளைப்பிலே இவளையும் பையனை யும் கூட எப்படிக் கட்டி இளுத்துக்கிட்டுப் போறது? இவளைப் பிறந்த வீட்டுலே விட்டுடப்போறேன்” நான் ஒன்றும் பேசவில்லை. நான் பேச என்ன இருக்கிறது? 

“அதுவும் தூரதேசமாப் போச்சு. அவருக்கு Second wife. அந்தக் குழந்தை குட்டி வேறே. அதனாலே அவங் களையும் நான் குத்தம் சொல்ல முடியாது. ரொம்ப நாளா touch விட்டுப்போச்சு இல்லையா? இருந்தாலும் எனக்கு வேறே வழி என்ன இருக்குது ? சொல்லுங்க” 

சற்று நேரம் எங்களிடையில் பேச்சு எழவில்லை. நான் காத்திருந்தேன். 

“ஸார், கலியாணி மூணுமாதமா ஸ்னானம் பண்ணல்லே” 

பிறகு வார்த்தைகள் மளமளவெனக் கொட்டின.

“எனக்கு இதுதான் பெரிய worry. முதல் பிரசவமே ரொம்பக் கஷ்டமாப் போச்சு. வவுத்தைக் கிழிச்சுதான் எடுத்தாங்க. அப்பவே வீக்காப் போயிட்டா. Complications வேறே. புளைச்சதே புனர்ஜன்மம். மறு படியும் கருத்தரிச்சு அதுவும் ஸிஸரீயன் ஆச்சுண்ணா ஆளுக்கே டேஞ்சர்னு doctors சொல்லிட்டாங்க. என் wife பாக்கறதுக்கு ஆனால் ரொம்ப weak. இதோ அவள் வீட்டில் விட்டப்புறம் எப்போ பாக்கப் போறேனோ ? இது நிச்சயமானதிலிருந்தே மனசு சரியாயில்லே. உங்க கிட்டேயாவது சொல்லிக்கலாம்னு வந்தேன்.” 

நான் ஊமையானேன். 

எல்லோரும் தங்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளத்தானே கடவுளைக் கல்லாக்கிக் கோவிலில் வைத்திருக்கிறது. கோயில் அமைதியின் இருப்பிடம் என்று கொள்பவர் கொள்ளட்டும். ஆனால் நான் அறிந்த மட்டில் ஆலயம் ஒரு துயரச்சந்தை. 

அவன் போன பின்னரும் நான் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. எனக்கு இப்போது புரிந்தது இந்தக் குடும்பத்தைச் சுற்றிக் கட்டிய சோக ரேகை, மயரிழை யில் கட்டித் தலைக்குமேல் தொங்கும் கத்தியின்கீழ், இரண்டாவது கர்ப்பப் பயங்கரத்தை நெஞ்சில் வைத்துக் கொண்டே வளையவரும் இவர்கள் வாழ்க்கை. ஸ்மரித்த பயம் தரிசனமும் ஆகிவிட்டபின் இவர்களுக்கு விமோசனம் ஏது ? சின்னக் குழந்தைகளின் சொப்பு விளை யாட்டுப்போல் ஆகிவிட்டது இவர்கள் குடித்தனம். 

ரயிலடிக்கு வழியனுப்ப நான் சென்றேன். இவர் களுக்குக் கடைசியாக நான் காட்டக்கூடிய தாக்ஷண்யம் இதுதானே ! 

அன்றைக்கென்று, ஆபீஸ் வேலை முடியும் தறுவாயில் எதிர்பாராத அவசர ஜோலி ஆகையால், நான் ப்ளாட்பா ரத்தில் நுழையும்போதே முதல் மணி அடித்துவிட்டது. பிறகு அவர்கள் ஏறிய பெட்டியைக் கண்டு பிடிக்கச் சற்று நேரம். இப்படித்தானே சிறுகச் சிறுகச் சில விஷயங்கள் சில நேரங்கள் நம் உயிரை உறிஞ்சி விடுகின்றன. 

“உங்களைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையையே விட்டுட்டோம்” 

“…”

“ஞாபகம் வெச்சிக்கோங்க, போய்ச் சேர்ந்ததும் எழுதறேன்.’ 

‘அவசியமாய்’ என்றேன், சேகர் முதுகைத் தட்டிக் கொண்டே. ஏதோ இவன் கடிதத்திற்கு நாள் தவறாமல் யதில் போட்டு விடுகிறாப்போல். 

சேகருக்கு என் நினைப்பு அதிகம் இருப்பதாய்த் தெரி யல்லே. அவன் இப்போது ரயில் சந்தோஷத்திலிருந்தான். அவள் ஒன்றும் பேசவில்லை. என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதைக் காட்டிலும் வெளுப்பாய் விளக்கு வெளிச்சத்தில் காட்டிய அவள் நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு, பேசத்தவிக்கும் வாய் போன்று தன் உயிர் கொண்டு திகழ்ந்தது. 

வண்டி நகர்ந்தது. கூட நான் நடந்தேன்.

திடீரென அவ்விழிகளினின்று கண்ணீர் புரண்டது. அதன் உதிர்களைத் துடைக்கக் கூட முற்படவில்லை. அவளிடம் செயல் இல்லை. 

“இவ்வளவு இளகின மனதாயிருந்தால் உலகில் எப்படி வளைய வரது?” அவளைத் தேற்றும் முறையில் கேலி பண்ணினேன். பார்க்கப் போனால் நம் பழக்கம் இந்த மூனு மாஸமாத்தானே! இத்தனைக் கண்ணீரும் எனக்கா”? 

“இல்லை. உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் அம்மா நினைப்பு வரது அவளுக்காகவும் கூட என் வெச்சிக்கோங்களேன். 

“ஏன், உன் தாயார் என் முகஜாடையாயிருப்பாளா?” 

“கொஞ்சம் கூட இல்லை.” 

“பின்னே?” 

“அதுதான் எனக்கும் புரியவில்லை. ஆனால் உங்களைப் பார்த்தால் அம்மா நினைப்பு வரது.” 

வண்டி வேகம் எடுத்து விட்டது. 

“உன் அம்மா யார் மாதிரி இருப்பாள்?” 

“என் தாய் என் ஜாடை தான்.” 

எங்கோ டெலிபோன் மணி அடித்தது. ஸ்டே ஷன் மாஸ்டர் அறையில் இருக்கலாம். 

“உன் அம்மா பேர் என்ன?’ 

அவள் திடீரென புன்னகை புரிந்ததால், நனைந்த கன்னங்களின் மேல் அதன் ஒளி படருகையில் அவளிடம் ஏதோ அமானுஷ்யம் மிளிர்ந்தது. 

“அம்மாவின் சொந்தப் பேர் ஒண்ணு. ஆனால் அவள் தனக்கு வெச்சுண்ட பேர் வேறு ஏதோ, புது மாதிரி. அவள் பேர்-” 

அவள் சொன்னது இஞ்சினின் பெருமூச்சில் கேட்க வில்லை. வண்டியுடன் நான் ஓடினேன். 

“உன் தாயார் பேர் என்ன?’ என்று கத்தினேன். அவளும் உரக்கக் கூவினாள். 

“ஸுநாதனீ”

அந்தத் தருணமே இஞ்சினின் ஊதல் காதைக் கிழித்துக் கொண்டு கிளம்பிற்று. செவிகளைப் பொத்திய படி நின்றவிடத்தில் நின்று விட்டேன். ரயில்’ என்னைத் தாண்டி இருளில் மறைந்தது. 

இப்பொழுது புரிந்தது. இவளை முன்பின் பாராமலே இவளை எங்கோ பார்த்தாற்போல் இவள் நினைவு நெஞ்சில் இடறும் மர்மம். தாயின் குரலின் சாயை பெண்ணிற்கும் கொஞ்சம் அடித்தது. 

ஸுநாதனி. 

ஸ்டேஷன் மாஸ்டரின் அறையில் டெலிபோன் மணி யடித்தது. 

ஆனால் அங்கு மட்டுமல்ல. 

நினைவின் தேன் கூட்டில் வருடங்களின் மிதி காலடியில் புதைந்துபோன ஏதோ ஒரு பாதாள அறை யிலிருந்து மணி ஒலி கேட்கிறது. 

ஸுநாதனி என்னைக் கூப்பிடுகிறாள். 


என் பேரிஷ்டம் என் அறையின் தனி விசேஷம் அதன் முழு இருட்டு. ஜன்னலின் பொருத்தம் காற்றுக்குப் பங்க மிலாது தெரு வெளிச்சம் துளிகூட உள் விழாது. என் உடலேனும் எனக்கிலாத நிலையை உயிரோடு இருள் மூலமேனும் பாவனையில் ருசிக்க என் அறை எனக்கு ஒரு வழி. 

இம்முறையில் இருளே உன்னை ஒரு வழியில் புரிந்து கொண்டது சரியோ என எனக்கு நீ சொல். 

இல்லை, நீ சொல்லமாட்டாய். நான் எனக்குச் சொல்லிக் கொள்வதே நீ எனக்குச் சொல்வதுதான். நீ சொல்லமாட்டாய். இமையா உன் விழிகொண்ட  உன் விலங்கு விழிப்புத்தான் உன் விளக்கம். 

அகன்ற சிறகுகளை விரித்து நீ என் மார்மேல் இறங்குவது உணர்கிறேன். உன் கழுகுக்கால்கள் என்னைக் கவ்வுகின்றன.பிறகு என்னை எங்கு எடுத்துச் செல்கிறாய்? 

இச்சமயம் உன் குஞ்சா? உன் இரையா? ஏனெனில் உன் குஞ்சும் உன் இரையும் உனக்கு ஒன்று தான். எதையும் விழுங்குவது உன் தன்மை. ஒன்று என்பதே உன் ஒரே குணம்; ஆகையால் அருங்குணம். 

நீ என்னைத் தின்ற விளைவாய் நான் என்னை இழந்து உன் ஒன்றில் ஒன்றி ஒன்றானேன். 

ஆனால் ஒன்று: 

என்னை நீ தின்றதும் உன் வயிற்றில் தங்கியிருந் தேனெனில் நீ என்னை ஜீரணித்திருப்பாய். அப்போது உனக்கு நான் இரையானேன் என்று பொருள் கண்டேன். 

உன் வயிற்றில் தங்காது அங்கிருந்து நேரே உன் விழிக்கு வந்து அங்கு அமர்ந்து அண்டங்களை அகண்ட மாய் உன் வாயில் கவ்வி, ஏந்திய வண்ணம் காக்கும் உன் காவலில் உன்னையும் தின்ற உன் குஞ்சானேன். 

இச்சமயம் உன்னோடு காலத்தையும் விழுங்கினேன்.

சென்று போனதற்கும் வந்து நிற்பதற்கும் வரப் போவதற்கும். 

இலக்கணமான அதனதன் சமயமுமாகும் அம்சம்.

நீயலால் எனக்கு ஏது தரும்? | Love you. 


அது அந்த நாள். 

ஆபீஸில் எனக்கென்று ஒரு அறை, திரும்பும் நாற்காலி, டென்னிஸ் கோர்ட் போன்ற மேசை, தனி டெலிபோன் – ஆபீஸர் பதவிக்கு உயர்ந்த புது முறுக்கு, இன்னும் வாழ்க்கையில் நம்பிக்கை ஆட்டம் கொடுக்காத நாள். 

எல்லாம் ராஜுபிறந்த ராசி என்று ராதை வருவோர் போவோரிடம் பெருமையடித்துக்கொள்கிறாள். அப்பவே உரிமையைக்கூட என்னிடமிருந்து என் தகுதிக்கு என் ராஜுவின் பிறந்த ராசி மூலம் பறிக்க ஆரம்பித்தாகி விட்டது! ஆனால் அப்போது அப்படிப்படுகிறதா? நானும் அந்தப் பெருமையில் கலந்து கொள்கிறேன். 

மாலை ஆபீஸிலிருந்து வந்ததும், ராதை ஒரு மூட்டையை ஏந்தி வந்து என் கையில் திணிக்கிறாள். ஸோப்பு நுரைபோல் குழந்தையின் பால் சதை என் மேல் வாய்வரை எழும்பி, என் அணைத்த கைகளை நிறைத்து வழிகின்றது. 

”நாம் மூணுபேரும் சேர்ந்து எப்போ போட்டோ எடுத்துக்கறது?” என் முகத்துள் அண்ணாந்து பார்க்கும் ராதை முகமே ஆப்பிள் மாதிரிதான் இருக்கிறது. 

சில நாட்களாகவே தொடர்ந்து நேர்ந்து கொண்டிருக்கும் இந்தச்சடங்கு எனக்கு இன்னும் அலுக்கவில்லை. ஆனால் ராதையின் ஆசையை நிறைவேற்ற எனக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை. இன்றேனும் வீடு சேர்ந்ததும் ஒரு டாக்ஸியை அமர்த்திக் கொண்டு- 

டெலிபோன் மணி அடித்தது. 

“ஹல்லோ?” 

“யார், மிஸ்டர் ஸாலிக்ராம்?” பெண் குரல்.

“Speaking.” 

அந்தப் பக்கத்திலிருந்து நீண்ட பெருமூச்செழுந்தது.

“மிஸ்டர் ஸாலிக்ராம். excuse me, நீங்கள் ரொம்ப வேலையாயிருக்கிறீர்களா? Am I disturbing you ?” 

“அப்படியொன்றுமில்லை. இன்னும் பத்து நிமிடங் களில் வீட்டுக்குக் கிளம்ப வேண்டியது தான்.” 

“அப்போ, இந்தப் பத்து நிமிஷங்களும் நமக்கே சொந்தம்தானே!” 

“நீங்கள் யார் என்று தெரியவில்லையே !” 

”ஆ!’ கண்ணடி டம்ளர் அடியில் உருளும் கரையாத ஐஸ்கட்டி போல் அடக்கிய அவுட்டுச் சிரிப்பு. 

“என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களை எனக்கு நன்றாய்த் தெரியும். உங்களுடன் பேசுவதற்கு ஏறக்குறைய மூணு மாதங்களாய் என் மனத்தைத் திடம் பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்றால் நீங்கள் நம்புவீர் களா? நீங்கள் நம்பினால், நம்பாவிட்டால் எனக்கென்ன? என்னைப் பற்றிச் சொல்லிக்கொள்கையில் எனக்கு நான் தானே சாக்ஷி! ஆனால் தன்னிலும் பெரிய சாக்ஷி ஏது?” 

“…”

“ஹல்லோ! ஹல்லோ !” 

“Yes ?” 

“ஓ இருக்கிறீர்களா? சந்தடியே காணோமே, line கட் ஆகிவிட்டதோ என்று பார்த்தேன்.”

“இல்லை யோசனை பண்ணிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவு ருசியாய்ப் பேசத் தெரிந்தவர்களில் எனக்குத். தெரிந்தவர் யார்?” 

“நான் சொல்லப் போவதில்லை”. 

“ஏன்?” 

“நான் யார் என்று யோசித்துக் கொண்டிருக்க, உங்களுக்கு இன்றிரவு பூரா, ஏன், இன்றிரவிலிருந்தே உங்கள் ஆயுசு பூரா நேரம் இருக்கிறது. உங்களை ஒரு தயவு கேட்கிறேன். என்னை யாரென்று அறிய நீங்கள் முற்பட வேண்டாம். மிஸ்டர் ஸாலிக்ராம் -உங்கள் பெயர் எவ்வளவு அழகாயிருக்கிறது! நீங்கள் என்னை வெட்கம் கெட்டவள் என்றுதானே நினைக்கிறீர்கள்?’ 

“இல்லை! இல்லை!!” 

அந்தப் பக்கத்திலிருந்து பெருமூச்செழுந்து என்மேல் சுழன்று விளையாடிற்று. 

“நீங்கள் -” 

“என்னை ‘நீங்கள்’ என்காதீர்கள்.”

“நீ என்னோடு பேசலாம், என்னைப் பார்க்க லாகாதா?” 

“நான் உங்களைப் பார்க்காதிருக்கிறேனே!” 

“நான் உன்னைப் பார்க்கலாகாதா?’ 

“நான் அந்தக் கட்டத்தை விரும்பவில்லை.”

“ஏன்?” 

“பார்த்த முகமே புளித்த முகம்தான்.” 

“நான் இன்னும் உன்னைப் பார்த்ததில்லையே!”

“ஒரு தரம் பார்த்தாலும், பார்த்த பின், பார்த்த முகம் தானே! கண்டதைக் கண்டபின், அப்படிக் கண்ட தாலேயே அதைக் காணாத முன் கற்பனையில் விளங்கிக் கொண்டிருந்த அதன் கற்பு நிலை சிதைந்து விடுகிறது என்று சொல்வேன். ஆகையால் நீங்கள் என்னைப் பார்க்க நான் விடப்போவதில்லை.” 

“இது ஒரு அனாவசியமான சீண்டல் இல்லையா?”

“உங்களுக்கு அப்படிப் படலாம். ஆனால் என் அரூபத்தை என்னால் இப்படித்தான் சாதிக்க முடியும் – சரி இன்று இது போதும். நாளை பேசுவோம்.” 

நான் படபடவெனத் தட்டினேன். ஆனால் தொடர்பு அறுந்தாகி விட்டது. 

யார் இவள்? 

நாளை பேசுவாளா? 


இன்று மாலை நாலரை மணியிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. என் வேலைகளைச் சுருக்கவே முடித்துக் கொண்டு விட்டேன். 

இந்த முள் ஏன் நகர மாட்டேன் என்கிறது? அவள் டெலிபோன் பண்ணுகிறேன் என்று சொன்னால் பண்ணு வாள் என்று நிச்சயமா? அவசியமா? சீ எனக்கு ஏன் இந்த அல்ப ஆசை. இன்னும் பத்து நிமிடங்கள் ஆனதுமே will get out. இன்றைக்கு நிச்சயமாய் குழந்தையைப் போட்டோ எடுத்- 

டெலிபோன் மணியில் தனி கணீர். பதறி எடுத்தேன். 

“Hello!” 

“ஓ, நீயா?” அவள் குரலைக் கேட்டதுமே எனக்கேன் இவ்வளவு மகிழ்ச்சி? 

“ஏன், வேறு யாரையேனும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்களா? sorry, போனை கீழே வைத்து விடட்டுமா?” 

“இல்லை இல்லை. don’t cut the line please-please!!”

“சும்மாச் சொன்னேன். இந்த வேளைக்கு நானும் தானே காத்துக் கொண்டிருக்கிறேன்!” 

எனக்குத் தொண்டையை அடைத்தது. 

“Hello!” 

“இங்கேயேதான் இருக்கிறேன் உன் பேர் என்ன?”

“என் பெயருக்கேன் ஆசைப்படுகிறீர்கள்? ‘நீயும் நானும்’ எனும் உறவுக்குமேல் பெயர்கள் பெரிதா?”

“இது என்ன வேதாந்தமா, விரக்தியா? இப்படிப் பேசிக் கொண்டே போனால் இதற்கு முடிவேது?” 

“ஆம், அலுப்பற்ற விஷயத்தின் முடிவற்ற விளிம்பில் தாம் நின்று கொண்டிருக்கிறோம்.” 

“Please, உன் பெயர் என்ன? 

“என் பெயர் என்னவென்று சொல்லலாம்? ஸீதா, லக்ஷ்மி, ராமசுப்பி, வாலாம்பாள் இந்த மாதிரி ஏதேனும் சொல்லவா?- “

“Please உன் பெயர் எனன்? 

“இருங்கள் என் பெயர் – என் பெயர் ஸுநாதனி”.

“ஸுநாதனி?” 

“இது எனக்கு இட்ட பேர் இல்லை என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இச்சமயத்திற்கேற்ற பெயர் என்று உங்களுக்குத் தோன்றவில்லை”. 

“ஸுநாதனி,உன்னிஷ்டம்.” 

”உங்கள் உச்சரிப்பில் என் பெயருக்கு உருவேறுவது எனக்கு இங்கே தெரிகிறது.” 

“ஸுநாதனி, உன்னால் எப்படி இவ்வளவு அற்புதமாய்ப் பேச முடிகிறது?” 

“கேட்பவருக்கும் கேட்பதற்கேற்ற படியும் தான் பேச்சும் வரும். உங்கள் மெளனம் என் பேச்சிற்கு உரைகல், உங்களுடன் பேசுவதே நான் உரமேறத்தானே.” 

“என்ன சுயநலம்!” 

“சுயநலமில்லாவிடில் உங்களைத் தேடி ஏன் பேசுகிறேன்!” 

“என்னிடம் அப்படி என்ன கண்டு விட்டாய்?’ 

“அப்படிக் காரணங்கள் கேட்டாலும் எனக்கு சொல்லத் தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு முன் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் மாலையில் நீங்கள் உங்களுக்கே பாடிக் கொண்டிருப்பதை நான் பின் தெருவில் என் வீட்டு மொட்டை மாடியிலிருந்து கேட்டேன், கண்டேன். இந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு என்னைத் தேடினால் நான் அகப்படமாட்டேன். நாங்கள் அந்த இடத்தைக்காலி பண்ணி விட்டோம்.’ 

“My god ! உனக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்?”

“நீங்கள் கலியாணமானவர். உங்களுக்குச் சமீபத்தில் குழந்தை பிறந்திருக்கிறது”. 

“இந்தத் தகவல்கள், நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமலே பேசிக்கொண்டிருக்க, நீ எனக்கு வகுத்த யோக்யதைகளா?” 

“இல்லை, நம் பேச்சின் உறவு அதன் வரம்பு மீறாம் லிருக்க அத்துக்கள்” 

“ஸுநாதனி, எத்தனை நாள் இப்படியே ஓடும்?’

“இன்றைக்கு இரண்டாம் நாள்’ 

“இந்த விக்ரமாதித்தன் சிம்மாஸனத்திற்கு இம்மாதிரி இன்னும் எத்தனை படிகள்?” 

“உங்களுக்கு அலுப்பு வரும்படிப் பேசிக்கொண்டிருக்க மாட்டேன்.’ 

“இது சிறு பிள்ளைத்தனமாய் இருக்கிறது. நாம் இன்னும் சொப்புவைத்தா விளையாடிக் கொண்டிருக்கிறோம்?” 

“உங்களுக்குக் கோபம் வருகிறது. ஆண்களே இப்படித்தான். நான்- நான் இவ்வளவு தைரியமாய், வெட்கம் கெட்டு, உங்கள் முன்னிலையில் பேசமுடியுமா? என்னதான் வெளிச்சமாயிருந்தாலும், ஆண் பார்வை என்மேல் படுகையில், கூச்சம் குறுக்கிட்டு விடாதா? ஆத்ம நிர்வாணத்தைப் புலன்களால் புரிந்துகொள்ள முடியாது அதையும் உடலின் ஆடையுரிப்பாய்த்தான் கண்ணுக்குக் காணத்தெரியும்.” 

“வெட்கம் கெட்டதாய்த்தான் மனத்திற்கு நினைக்க முடியும்.” 

”எனக்கென்னவோ இந்த நிலையில் பொய்ம்மை தான் தெரிகிறது.” 

“உண்மையும் பொய் போலும்மே பொய்போலிம்மே. நானும் ஏதோ ஒரு யோசனைதான் நடத்துகிறேன்,” 

“ஒரு வழியாகச் சொல், நீ விரும்புவதுதான் என்ன?”

“உங்கள் நினைவில் என் குரல் சதா ஒலித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். அந்த ஒலியின் தூண்டலாக உங்கள் எண்ணத்தில் எழும் உருவில், உங்கள் நெஞ்சின் ஒமகுண்டத்தில் அழிவற்ற இளமையில், ஜ்வலித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். 

“எனக்குப் பிடரி சிலிர்த்தது.” 

“என்ன குரூரமான ஆசை. எதிராளியின் வேதனை பற்றி நீ கொஞ்சமாவது நினைத்தாயோ?” 

“வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை? உயிர் பிறக்கையில் தாய்க்கு இரக்கம் பார்க்கி றதா, பார்க்க முடியுமா?அதேபோல் உயிர் பிரிகையிலும் உடலின் வேதனையை அனுசரிக்கிறதா ? இப்போது நம்மில் நேர்ந்து கொண்டிருப்பது என்னென்று நினைக்கிறீர் கள் ? நம் முதுகுகளைப் பிளந்துகொண்டு நாம் புதிதாய்ப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம் சாகாவரம் அடைவது பின் எப்படி?” 

Line cut- 

அவள் பேச்சின் வேகத்தில், அந்தக் குரலில் கக்கிய ஆவியில் டெலிபோன் புகையாததுதான் ஆச்சரியம். 

என் நெஞ்சில் 

குபீர். 

ஜ்வாலையில் குங்கிலியம் கமழ்ந்தது. 

தலையை இருகைகளிலும் பிடித்துக்கொண்டு நான் உட்கார்ந்திருந்தது இன்னும் நினைவிருக்கிறது. 

மணி 4-50, 4-55, 4-57, 4-58- 

இன்றும் டெலிபோன் மௌனமாய்த் தானிருக்கிறது. இவளை இந்த நேரத்திற்கு எதிர் பார்க்கப்பழக்கிவிட்டேன் என்பதை உணருகையில் எனக்குக் கடுங்கோபம் வந்தது. இன்று நான் தீர்த்துச் சொல்லிவிடப் போகிறேன், உன் கைப்பொம்மையாக இருக்க நான் விரும்பவில்லை என்று- 

டெலிபோன் அலறிற்று. 

எடுக்கலாமா வேண்டாமா? எடுக்கலாமா வேண்டாமா? 

இவள் குரல் ஒலி என்னை எங்கே கொண்டு போய் விடும்? 

இவளிஷ்டப்படியே நான் ஆடினால் என்னைப் பைத்தியம் பிடிக்க அடித்து விடுவாளோ? 

என் நெற்றியில் வேர்வை அரும்பிற்று இன்று பல்லைக்கடித்துக் கொண்டிருந்தாலும் நாளைக்கு மோஹினிப் பிசாசு போல் தொடருவாள். இந்த வேளைக்குப் பதில், எதிர்பாராத வேளையில் பேசுவாள். 

நான் டெலிபோனை எடுக்கையில் முற்றிலும் என் வசத்தில் இல்லை. 

“Hello!” 

“மிஸ்டர் சாலிக்ராம், நாளைக்கு எனக்குக் கல்யாணம். விடை பெற்றுக்கொள்கிறேன்”. 

மீண்டும் அந்த மறக்கமுடியாத வெற்றிச் சிரிப்பு. டெலிபோனை அந்தப் பக்கம் வைத்தாயிற்று. 

மூன்று நாள் சோறு தொண்டையில் விக்கிற்று. பித்து பிடித்தாற்போல் வளைய வந்தேன். 

ஸுநாதனி. 


மணி அடிக்கிறது. 

நினைவு மீண்டுவிட்டாலும், ஸூநாதனியின் அழைப்பு இல்லை என்று தெளிய நேரம் பிடிக்கிறது. 

எங்கோ கடியாரத்தின் அலாரம். 

கண்ணைக் கசக்கிக்கொள்கிறேன். விழிகள் நனைந்திருக்கின்றன. 


நான் கண் விழித்ததும் இவ்வுலகத்தை சிருஷ்டிக்கிறேன். 

நான் தூக்கத்தில் அயர்கையில், என் சிருஷ்டியாகிய இவ்வுலகம் என் இமைகளின் குவிப்புள் ஒடுங்கி விடுகின்றது. 

சாவில் இவ்வுலகத்தை அழித்து, என் சடலத்தையும் கழற்றி விட்டு, பிரக்ஞையில் புகுந்து யோக நித்ரையில் ஆழ்ந்து விடுவேன். 

என் கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர் வாய்க் கவிந்த இருளின் முழுவே உனக்கு அஞ்சலி.. உதயத்தின் முற்பொருள் நீ, உனக்கு அழிவில்லை.

– த்வனி (சிறுகதைகள்), இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 1990, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *