தோஷம் என்றால்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2023
பார்வையிட்டோர்: 2,301 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்கப்பூர் அழகான சிறிய நாடுதான். தொழில் துறையில் மிகவும் முன்னேறிய நாடுதான். விண்ணை முட்டும் கட்டிடங்கள் நிறைந்த நாடு தான். எல்லாமே நவீனமயமான நாடுதான். உழைக்கும் ஒவ்வொருவ ரும் ஆயிரம், ஈராயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம், லெட்சம், கோடி என்று கைநிறைய பொருள் தேடுகின்ற நாடுதான். ஆனால்… மனதில் ஆறுதல் இல்லை. எண்ணத்தில் ஓய்வில்லை. எப்போதும் உழைப்பு, பணம் – வேலை. மொத்தத்தில் இயந்திரமயமான நாடு.

படுக்கையை விட்டு எழுந்ததிலிருந்து, படுத்து உறங்கும் வரை ஏதாவது ஒரு நினைப்பு, ஏதாவது ஒரு வேலை, ஏதாவது ஒரு கவலை. இப்படியே இயங்கிக் கொண்டிருக்கின்றவர்களில் குமரனும் ஒருவன்.

குமரன் கவலைப்பட்டதில் அர்த்தம் இல்லாமலில்லை. குமரன் பிறந்ததிலிருந்து அவன் தாய் நோயுற்றிருந்தார்.. சோதித்துப் பார்த்த மருத்துவர் குடலில் ஏதோ கட்டி மாதிரி இருக்கிறது. அறுவை சிகிச்சை செய்து பார்த்தால்தான் தெரியும் என்று மருத்துவர் கூறியபோது குழம் பிப் போய் இருந்த வரதன் தலையாட்டினார். அறுவை செய்த மறுநாளே வரதனின் மனைவி காலமாகிவிட்டார். துடிதுடித்த வரதன் ஓடிச் சென்று மருத்துவரிடம் விளக்கம் கேட்டபோது புற்றுநோய் என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தார்.

அன்று முதல் வரதன்; குமரனுக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து காப்பாற்றி வந்தார். பக்கத்து வீட்டுக்காரர் மலாய்க் குடும்பமாக இருந்தாலும் குமரனைத் தன் சொந்தப்பிள்ளையாகப் பாவித்து வளர்த்து வந்தனர். வரதன் வேலை முடிந்து வந்ததும் குமரனைக் கூட்டி வந்து குளிப்பாட்டி உணவு கொடுப்பார். அவனோடு சின்னப் பிள்ளையைப் போல் விளையாடுவார். நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன.

ஒருநாள் வரதன் வேலை முடிந்து வந்தபோது கண்ணப்பன் பார்த் துவிட்டு நலம் விசாரித்தான். பேச்சோடு பேச்சை “நீ மறுமணம் செய்து கொண்டால் என்ன? உன் மனைவியும் இறந்து ஆண்டுகளாகிவிட்டன. பாவம் அந்தச் சின்னப் பிள்ளையை வைத்துக் கொண்டு எவ்வளவு துன்பப்படுகிறாய்” என்று படுகின்ற பாட்டைப் பகிர்ந்து கொள்பவரைப் போல் கூறியபோது ‘பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு விடை பெற் றார். இவ்வாறு வரதனின் நண்பர்களும் உறவினர்களும் கேட்காத நாளில்லை.

முப்பது வயதுகூட நிரம்பாத வரதன் தன் அன்பு மனைவியை நினைக்காத நாளே இல்லை. அவளை இந்தச் சின்ன வயதில் பறி கொடுத்து விட்டேனே என்று எண்ணி கண்ணீர் சிந்தாத நேரமில்லை. தனக்காக இல்லாவிட்டாலும் தன் அருமைப் புதல்வனுக்காகவது ஒரு பெண் துணை தேவை என்று நினைத்ததுண்டு. மறுகணம் மனைவியோடு பழ கிய பழக்கம் நினைவு வந்ததும் மறுமணம் மறந்தே போகும். இவ்வாறு பல எண்ண அலைகளில் சிக்கியவாறே சென்ற போது குறுக்கே வந்த இயந்திர வண்டி இடித்துத் தள்ளியது. ‘அம்மா’ என்று கத்திக் கொண்டு விழுந்த வரதன் எழுந்திருக்கவே இல்லை.

மருத்துவர்களின் சோதனைக்குப் பின் வரதனின் உடல் இல்லத்தில் வைக்கப்பட்டது. விபரம் அறியாத குமரன் அப்பா! அப்பா!! என்று அழைத்தான். அந்தக் கோரக் காட்சியைக் கண்டோரின் நெஞ்சம் உருகி யது. பக்கத்திலிருந்த பாட்டி உன் அப்பா மேலே போயிட்டார். இனி வரவே மாட்டார்; என்று சொல்லி அழுத போது ‘பாட்டி பொய் சொல் றீங்க; என் அப்பா தூங்குறாங்க’ என்றுச் சொல்லிக்கொண்டே மீண்டும் அப்பா! அப்பா!! என்று கூப்பிட்டான்.

அடுத்திருந்த பெண் ‘உன் அப்பா செத்துட்டாரப்பா இனிமேல் எழுந்திருக்க மாட்டாரப்பா’ என்றபோது ‘முடியாது எனக்கு அப்பா வேண்டும்’ என்று அழத் தொடங்கினான். அவ்வேளையில் பக்கத்து வீட்டு மலாய்க்கார அம்மா அவனைத் தூக்கிக் கொண்டு போய் அவன் நினைவை வேறுபக்கம் திருப்ப முயன்று கொண்டிருந்தார்.

குறித்த நேரத்தில் ஆகவேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு வரதன் உடல் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே வரதனின் புகழ் பாடப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்திய பின் பூத உடலை எரித்தனர். வரதனின் நண்பர்களும் உறவினர்களும் குமரனைத் தூக்கியபோது அழ ஆரம்பித்துவிட்டான். பக்கத்து வீட்டு மலாய்க்காரர் தூக்கியதும் அழுகையைப் படிப்படியாக நிறுத்தினான்.

வரதன் பெட்டியைச் சோதித்த போது ஒரு லெட்சம் வெள்ளிக்கு எடுத்த இன்சூரன்சும் நகையும், பணமும், குறிப்புகளும் இருந்தன. வரத னின் நெருங்கிய நண்பன் இன்சூரன்சு நிறுவனத்தை விசாரித்த போது அப்பணம் முழுவதும் குமரனுக்கு எழுதியிருந்ததை அறிந்து கொண் டார். அதே போல மத்திய சேம நிதி பணமும் மகனுக்கு எழுதப்பட்டிருந் தது. வரதனுக்கு மரணத்தை ஏற்படுத்தியதற்காக ஒரு லெட்சத்திற்கு மேல் பணம் கிடைத்தது.

வரதனின் நண்பர் எல்லாப் பணத்தையும் சேர்த்து மொத்தமாக மூன்று லெட்சம் வெள்ளியாக வைப்புத் தொகையில் போட்டார். இதில் மத்திய சேம நிதி மட்டும் சேர்க்கப்படவில்லை. வைப்புத்தொகையிலி ருந்து கிடைக்கும் வட்டிப் பணத்திலிருந்து மாதம் இருநூறு வெள்ளியைக் குமரனை வளர்க்கின்ற அந்த மலாய்க் குடும்பத்திற்குக் கொடுக்கப்பட்டது.

குமரன் மிக்கப் பாதுகாப்போடு அந்த மலாய்க் குடும்பத்தில் வளர்ந்து வந்தான். ஏழு வயதில் அவனைப் பள்ளிக்க அனுப்பினார்கள். குமரன் கருத்தோடு கற்று வந்தான். தாயும் தந்தையும் இருந்தால் எப்படிக் கருத்துடன் படிக்க வைப்பார்களோ அப்படிப் படிக்க வைத்தார்கள். குமரன் மிகக் கவனமாகவும் பொறுப்பாகவும் படித்து வந்தான். குமரன் வீட்டில் மலாய் மொழியிலும் பள்ளியில் ஆங்கிலமும் தமிழும் பேசியதால் மொழி தெரிந்தவனாக வளர்ந்துவந்தான்.

வரதனின் புத்திசாலித்தனத்தால் குமரனுக்குப் பணச்சிக்கலே இல்லை. வைப்புத் தொகையில் போட்ட பணத்திற்குக் கிடைத்த வட்டியி னால் ஆயிரம் ஆயிரமாகப் பெருகி மூன்று லெட்சம் நான்காகியதோடு அது மேலும் பெருகிக் கொண்டே இருந்தது. ‘எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே’ என்பது ஒரு கவிஞனின் கருத்தாகும்.குமரனுக்கு லெட்சம் லெட்சமாகப் பணம் இருந்தாலும் மன மகிழ்வு மட்டும் பஞ்சமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

குமரனைப் பற்றித் தெரிந்தவர்கள் ஏனோ அவனை ஒரு மாதிரியா கப் பார்த்தார்கள். அவனைப் பற்றி ஒரு மாதிரியாகப் பேசினார்கள். சின்ன வயதிலேயே பெற்ற தாயையும் தந்தையையும் விழுங்கிவிட் டான்; கெட்ட தோஷம் உள்ளவன். அவனோடு ஒட்டி உறவாட வேண் டாம். அவன் முகத்தில் விழிப்பதே பாவம் என்றெல்லாம் பலவாறாகக் குரமரன் காதில் விழும்படியாகக் கூடப் பேசினர். அவ்வாறு அவர்கள் பேசிய பேச்சு குமரன் மனதில் முள் போல் தைத்தது.

ஒருசில மலாய், சீன நண்பர்கள் மட்டும் குமரனுடன் அன்பாகப் பழகினார்கள். குமரன் அவர்களுடன் பழகுவதற்குக் கூட சற்று யோசித் தான். தான் அவர்களுடன் பழகினால் அவர்களுக்கு ஏதேனும் தீங்கு நேருமோ ? துன்பம் உண்டாகுமோ? ஆபத்து வருமோ? என்று எண்ணி அஞ்சிய குமரன் கூடுமானவரை தனித்தே இருக்கக் கற்று வந்தான்.

குமரன் மிக அமைதியாகவும், யாருடனும் நெருங்கிப் பழகாமலும் இருப்பதை நல்லதம்பி என்பவர் கவனித்தார். தமிழர்களில் அவர் மிக வும் மாறுபட்டவர்.

குமரன் ஏன் கவலையாகவும் சோகமாகவும் இருக்கிறாய்? என்று நல்லதம்பி கேட்டபோது ஒன்றுமில்லை என்று மழுப்பினான். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நான் எத்தனை பிள்ளைகளு டன் எவ்வளவு காலமாகப் பழகி வருகிறேன் எனக்குத் தெரியாதா ? உண்மையைச் சொல் என்னால் முடிந்தால் உனக்கு வேண்டியதைச் செய்கிறேன். அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம் என்பார்கள். என்னை உற்ற நண்பனாகக் கருதி மறைக்காமல் சொல். ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வோம் என்று அன்போடு நல்லதம்பி மறைமுக மாக வலியுறுத்திக் கேட்டார்.

குமரனின் கதையைக் கேட்ட நல்லதம்பி மிகவும் வருந்தினார். இருந்தாலும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் குமரனிடம் உலகில் உள்ள எல்லா இன மக்களிடமும் சில மூடப் பழக்கங்கள் இருக் கின்றன. தமிழர்கள் மட்டும் விதி விலக்கல்ல. பகுத்தறிவுடன் பேசுபவர் கள் கூட சில மூடப் பழக்கங்களுக்கு அடிமையாகிக் கண் மூடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று கூறினார்.

நீ வயதில் சிறியவனாக இருந்தாலும் அறிவிலும் பழக்க வழக்கங்க ளிலும் முதிர்ச்சி அடைந்தவனாகப் பேசுகிறாய், பழகுகிறாய். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அறிவுக்குப் பொருந்தாதக் கருத்துக்களைச் சொல்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அதற்காக மனத்தளர்ச்சி அடையாமல் முயற்சியோடு கற்று வா. பகுத்தறிவுக்கு ஒவ்வாத வாதங்க ளைப் புரிவோரைப் பற்றிக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாது எதிர்கால திட்டத்தை நோக்கி வீர நடைபோடு; என்று ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தார்.

மலாய்க்காரர் வீட்டில் இருப்பதில் சிக்கல் இருந்தால் சொல், என் பிள்ளைகளோடு சேர்ந்து வாழலாம் என்று சொல்லி முடிப்பதற்குள் குமரன் குறுக்கிட்டு, ஐயா! அவர்களைப் பற்றி ஒரு குறையும் சொல்லவே கூடாது. அவர்கள் என்னையும் தங்கள் பிள்ளையாகக் கருதி காப்பாற்றி வருகிறார்கள். வங்கியிலிருந்து கொடுக்கின்ற இரு நூறு வெள்ளியைக் கூட வேண்டாம் என்று கூறுகிறார்கள். நான் கேட்டுக் கொண்டதற்காகப் பெற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் மீது குறை சொன்னால் என்னைவி டக் கொடியவன் இல்லை என்றே கூறலாம்; என்று நிதானத்துடன் கும ரன் கூறியதைக் கேட்டு நல்லதம்பி வியந்து போனார்.

ஐயா, ‘தோஷம்’ என்று கூறுகிறார்களே அப்படி என்றால் என்ன? என்று குமரன் அமைதியாகக் கேட்ட போது ‘தோஷம்’ என்பதே தமிழ்ச் சொல் அல்ல. சோம்பேறிகள் நலமாக வாழ்வதற்குச் சூட்டி வைத்த பட்டமே ‘தோஷம்’ என்றார் நல்லதம்பி. நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லையே; சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்று குமரன் மீண்டும் கேட்டான்.

‘குமரா நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அறிவும் தந்திரமும் நிறைந்தவர்கள் உடலை வருத்தி வேலை செய்து வாழாமல் மற்றவர்களின் உழைப்பில் வாழ்ந்தார்கள். ஏன் கண்களை அகல விழிக்கிறாய்? அது எப்படி என்று கேட்கிறாயா? சொல்கிறேன் கேள்.

திருமணம் செய்தால் சில சடங்குமுறை; குழந்தை பிறந்தால் சில சடங்கு முறை; குழந்தைக்கு உடல்நலக் குறை ஏற்பட்டால் வைத்தியம் பார்க்காமல் வைதீய முறையை நாடுவார்கள். அப்போது பிறந்த மாதம், நாள், நேரம், தேதி இவற்றில் ஏதாவது ஒன்று சரியில்லை என்பார்கள். இதைத் தான் தோஷம்’ என்பார்கள். இந்தத் தோஷத்தைப் போக்கச் சில சடங்கு முறைகள். பெண் பிள்ளைகள் பருவம் எய்திய பிறகு வீட்டில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடனே அதற்கு என்று சில சடங்கு முறை கள் உண்டு. ஒருவர் இறந்துவிட்டால் அதற்குப் பல சடங்கு முறைகள்; ஒவ்வொர மாதமும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு வழிபாடு செய்வதிலே பல சடங்கு முறைகள். இப்படி ஏதாவது ஒரு தோஷத்தை ஏற்படுத்தி அத்தோஷத்திற்கு நிவாரணம் காண்பதற்குப் பல சடங்குமுறைகள் உண்டு. ஒவ்வொரு சடங்குமுறைகளைச் செய்து வைக்க வருபவருக்குக் காய்கறி, அரிசி, வேட்டி, பணம், போக வர வாகனம் என்று பல ஏற்பாடு களைச் செய்தி கொடுக்க வேண்டும்.

வசதியாக ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு வடமொழியில் சொற்க ளைச் சொல்லுவார். அவருக்குப் பக்கத்தில் சிலர் துணைக்கு நிற்பார்கள்.

அவருக்குத் தேவையான பொருட்களை ஓடியோடி எடுத்து வந்து கொடுப்பார்கள். அவர் என்னென்ன யாகம் செய்யணுமோ, மந்திரம் சொல்லணுமோ அத்தனையையும் சொல்லி முடித்துவிட்டு அவருக்குச் சேரவேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு ‘உங்கள் தோஷமெல் லாம் கழிஞ்சிட்டு இனிக் கவலை இல்லாமல் வாழுங்கள்’ என்று சொல்லி விட்டுச் சென்றுவிடுவார். இப்படி வாழ்கின்ற கூட்டங்கள் ஏற்படுத்திய தந்திரமே ‘தோஷம்’ என்பதாகும்.

இப்படி எல்லாம் செய்த பிறகும் அவர்கள் வாழ்க்கையில் துன்பம், தொல்லை ஏற்படுமா? என்று குமரன் கேட்டான். குமரனின் அறிவுடை மையைப் பாராட்டிய நல்லதம்பி பலவித சடங்குகளைச் செய்த பிறகும் சில தம்பதிகளின் வாழ்க்கையில் சண்டை சச்சரவுகளும், பிளவுகளும், பிரிவுகளும், விபத்துகளும் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

அப்படி என்றால் இந்தச் சடங்குகள் செய்வதினால் ஏற்படும் பயன் கள் என்ன ஐயா? குமரன்தான் கேட்டான். தம்பி குமரா, நான் முதலில் குறிப்பிட்டதைப் போல நீ மிகவும் புத்திசாலியான பையன். உன்னு டைய வினாக்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. நீ பயன்களைப் பற்றிக் கேட்டாய் அல்லவா? முதல் பயன் எவ்வித கடின உழைப்பும் இன்றி சடங்குகளைச் செய்பவருக்கு வருமானம் கிட்டுகிறது. அதை அடுத்து ஏற்பாடு செய்தவர்களுக்கு அப்போதைக்கு மனநிறைவு கிட்டுகிறது.

நமது முன்னோர்கள் ‘எண்ணம் போல் வாழ்வு’ என்றும் ‘மனங் கொண்டது மாளிகை’ என்றும் உள்ளத்தனையது உயர்வு என்றும் கூறி யுள்ளனர். இக்கூற்றிலிருந்து ஒருவரது வாழ்வு அவர் மனம் போல்தான் அமையுமே தவிர இச்சடங்குகளால் மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது. சில ருக்குச் சிறிதுநேரம் அல்லது சிறிது காலம் தெம்பு ஏற்படும். திடீரென பயந்தவர்களுக்குச் சிக்கல்’ ஏற்பட்டு விட்டால் பின் பழைய குருடி கதைதான்; என்றார்.

ஐயா! கடைசியாக ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்; கேட்கலாமா? கோபிக்க மாட்டீர்களே என்று தயக்கத்தோடு கேட்டபோது, குமரா! ஏன்? எப்படி? எதற்கு? என்று கேள். அப்படிக் கேட்டால்தான் அறிவு வளரும் என்று தத்துவமேதை சாக்ரட்டீஸ் கூறியுள்ளார். ஆகவே தயக்கமில்லாமல் கேள் என்றார். நீங்கள் கூறிய கருத்துக்கள் எல்லாம் உண்மை என்று நம்பினாலும் இப்படிப்பட்ட சடங்குமுறைகள் எப்படி எல்லா நாடுகளிலும் ஏற்பட்டன? என்று கேட்டதும் உண்மையிலேயே நல்லதம்பி பதில் கூறுவதற்குச் சற்று நேரம் திகைத்துப் போனார்.

நல்லதம்பி குமரனின் அறிவுக் கூர்மையைச் சற்றுநேரம் ஆழ்ந்து சிந்தித்துவிட்டு, குமரா ஆதிமனிதன் விலங்குகளைப் போல் காடுகளில் வாழ்ந்த காலக் கட்டத்தில் சில கொடிய மிருகங்களுக்கு அஞ்சி வாழ்ந்து வந்தான். அதிலும் குறிப்பாக இரவு வேளையில் எப்போது? எந்தப் பிராணிகளுக்கு இரையாகப் போகிறோமோ? என்று நடுங்கிக் கொண்டி ருந்தான். அப்படி நடுங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் ஒளி பரப்பித் தோன்றிய பகலவனைப் பார்த்து என்னைக் காப்பாற்றிவிட்டாய் என்று வணங்கினான். காலப் போக்கில் பகலவன் என்ற சொல் பகவான் என்று மாறி இருக்கலாம். தாகம் தீருவதற்கும், குளிப்பதற்கும், செடி கொடிகள் வளர்வதற்கும் நீர் கொடுத்த முகிலை மாரி என்று அழைத்து மழைக்கு நன்றி செலுத்தினர்.

பசித்த பிள்ளைக்கு உணவு கொடுத்துக் காப்பாற்றுபவர் தாய். எவ்வித கைம்மாறும் கருதாது உதவுபவர் தாய். அதனால் தான் தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்றும்; அன்னையும் பிதாவும் முன்னறி தெய் வம் என்றும் கூறினர். தாயைப் போலக் கைம்மாறு கருதாமல் உதவுகின்ற மாரியின் பெருமையை உணர்ந்தவர்கள் மாரியைத் தாயாகக் கருதி மாரியம்மாள் என்று அன்போடு அழைத்தனர். தந்திரக்காரர்கள் காலப் போக்கில் மழையையும் தெய்வமாக்கிவிட்டனர். அதே தந்திரவாதிகள் மதம் என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கினர். அதனால் இப்படிப் பட்ட எண்ணங்களும் செயல்களும் எல்லா மக்களிடத்திலும் தோன்றியி ருக்கலாம். அதையொட்டியே எல்லா நாடுகளிலும் சடங்குமுறைகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்றார்.

படித்தவர்கள் தங்கள் அறிவுக்கு ஏற்ப புதுப்புதுக் கருத்துக்களைக் கூறுவதோடு மற்றவர் கருத்துக்களை விடச் சிறந்ததாகவும் வேறுபட்ட நிலையிலும் கூற முயல்வார்கள். அது போலவே மதவாதிகள் மக்களிடத் தில் நல்ல பழக்கங்களைப் புகுத்த சிந்தித்ததாலோ என்னவோ பல மதங்கள் தோன்றிவிட்டன. அதையொட்டி சடங்குமுறைகளும் மதச் சார்பான வழிபாட்டு முறைகளும் தோன்றியதைத் தொடர்ந்து தோஷம், கிரகம், சனி, வைகுண்டம் போன்ற சொற்களை வைதீகத்திற்குப் பயன்ப டுத்திக் கொண்டார்கள்.

உன் தாயாரின் இறப்புக்குக் கடுமையான நோயோ மருத்துவரின் கவனக்குறையோ காரணமாக இருக்கலாமே தவிர உன் தோஷம் என் பது கொஞ்சமும் பொது அறிவுக்கு ஒவ்வாத வாதமாகும். அன்பான மனைவியை இளம் வயதில் பறிகொடுத்த ஏக்கத்தாலும், சின்னப்பிள் ளையாக இருந்த உன்னைப் பற்றிய கவலையாலும், மறுமணம் செய்து கொள் என்ற மற்றவர்களின் நச்சரிப்பை நினைத்து வேதனையோடும் குழப்பத்தோடும் சென்று கொண்டிருந்தவர் ஏட்டிக்குப் போட்டியாக வந்த உந்து வண்டியைக் கவனிக்கத் தவறிவிட்டார். அதுவே உன் தகப்ப னாரின் இறப்புக்குக் காரணமாகும்.

நீ பிறந்த நேரம் அல்லது தோஷம் உன் பெற்றோர்களின் மரணத்திற் குக் காரணம் என்று நினைப்பது பாவமாகும்; அவ்வாறு சொல்வது பொதுஅறிவுக்கு இழைக்கும் கொடுமையாகும்; இந்த அறிவீனர்களின் பேச்சை நம்புவது உனது புத்திசாலித்தனத்திற்கு விடப்படும் சவாலாகும்.

உன் அறிவு மீது, ஆற்றல் மீது, திறமை மீது உனக்கு நம்பிக்கை இருந்தால், துணிந்து நில்; நிமிர்ந்து நட; அந்த வீணர்களின் கருத்தை வீழ்த்த முற்படு. உன்னைப்பற்றி நீயே தாழ்வாக நினைக்காமல் எல்லோ ரையும் போல கலகலப்பாகப் பழக வேண்டும்; படிக்க வேண்டும்; நீ படித்து மிகச்சிறந்த நிலையில் இருந்துகொண்டு எதைத் தவறு என்று கருதுகிறாயோ அதைப் பற்றிய விளக்கத்தை அவர்களுக்குச் சொல்ல வேண்டும். சடங்கும் சம்பிரதாயங்களும் பயந்தவர்களுக்குத் தான். துணிந்தவர்களுக்கு இல்லை. இக்கருத்தை உலக மக்களுக்கு வள்ளுவப் பெருந்தகை,

‘துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை’

என்ற குறளின் வழி இன்பம் பயக்குமே என்றால் துன்பம் வந்தாலும் துணிவோடு செய்க என்று ஆணையிடுகிறார். என்று நல்லதம்பி கொடுத்த விளக்கம் குமரனுக்கு அளவு கடந்த ஊக்கத்தையம் உற்சாகத்தையும் கொடுத்தது. உதயசூரியனைக் கண்டு ஆதிமனிதன் பெற்ற நம் பிக்கையை விட ஆயிரம் மடங்கு பலம் பொருந்தியவனாகக் காட்சியளித்தான் குமரன்.

கவலையும் சோகமும் நிறைந்த குமரனின் வாழ்வில் நம்பமுடியாத மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றத்திற்குப் பின் கவலையில்லை; சோகமில்லை. மாறாகக் குமரனின் உள்ளத்தில் தெளிவும் துணிவும் தோன்றி யது. முகத்தில் மலர்ச்சியும் உடலில் வலிமையும் உண்டாக்கியது. புதிய சிந்தனையும் பரந்த எண்ணமும் உதித்த வண்ணமிருந்தன.

அறிவு நிறைந்த நல்ல மக்களைப் பெறுவதே சிறந்த செல்வமாகும் என்று மணம் புரிந்த தம்பதிகளுக்குத் திருவள்ளுவர் கூறியுள்ளார். அதே பெருந்தகை அன்பை, அறத்தை உணர்ந்தவராய், பட்டு அறிந்து தெளிந் தவராய், வயது முதிர்ந்தவராய் உள்ள சான்றோரின் நட்பைக் கொள்ள வேண்டும். அத்தகு பெரியாரின் வகை அறிந்து, ஆராய்ந்து அவரின் துணையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறிய பொருள் எவ்வ ளவு ஆழமானது ? என்று எண்ணிய போது குமரனின் உள்ளம்,

‘அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்’

என்ற குறளைப் பற்றிச் சிந்தித்தது.

உலகில் உள்ள ஒவ்வொருவரும் நல் மனிதராக வாழ வழி கண்ட வள்ளுவன் சொல்லை நாளும் கற்று ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற திருமூலரின் கருத்துக்கு ஏற்ப வாழ்வேனே அன்றி தோஷம் என்ற வேஷத்திற்கு இடங்கொடுக்க மாட்டேன் என்ற மன உறுதியோடு குமரன் அறிவுக் கூடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

– தனிமரம் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1990, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

தமிழ் நாட்டின் தஞ்சை மாவட்டத்திலுள்ள இராங்கியன் விடுதி எனும் ஊரில் 20.06.1943ஆம் ஆண்டு பிறந்த திரு. பி. சிவசாமி, தொடக்கக் கல்வியை சிங்கையிலுள்ள இராமகிருஷ்ணா பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியிலும் பெற்றார். தொழில் பொதுக் கல்விச் சான்றிதழ் "ஓ" நிலை தேர்ச்சி பெற்ற இவர் கடந்த 32 ஆண்டுகளாகத் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். தற்போது மெக்பர்சன் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இவருக்கு தமிழுடன் ஆங்கிலம், மலாய்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *