கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 7,757 
 

ஒரு குடுவையில் இரண்டு அமிலங்களைக் கலந்தால் என்ன ஆகும் என்பதற்கும் குமாஸ்தா வேலைக்கும் என்ன சம்மந்தமிருக்க முடியும் என்பது தெரியவில்லை ரகுவுக்கு. வணிகவியல் பட்டதாரியான அவனுக்கு அந்த வேதியியல் வினா கூட வினையாகத்தான் விடிந்தது. பதில் தெரிந்தும் தேர்வு செய்ய முடியாத படி கீழே இருந்த நான்கில் இரண்டு சாய்ஸ்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியும் அதே சமயம் மிகநுண்ணிய வேறுபாடுகளுடன் இருந்தன .

இது கூட பரவாயில்லை அதிகம் கேள்விப்படாத தொலை தூர தேசமொன்றில் ஆண்டுக்கு மிகத்துல்லியமாக எவ்வளவு மழை பெய்யும் என்பது அவன் படித்த எந்தப் புத்தகத்திலும் இருந்ததாக நினைவில்லை. எப்படியோ நான்கு விடைகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டிய நிலையில் “இவை எதுவும் இல்லை” என்கிற பதில் அவனுக்கு ஏதோ ஞானத்தை உபதேசிப்பது போலிருக்க நெகட்டிவ் மார்க் பயத்தில் இதுபோன்ற சிலபல வினாக்களை விட்டுவிட்டு அந்தப் போட்டித்தேர்வை கிட்டத்தட்ட முடித்திருந்தான் ரகு.

அப்படியே அறையில் இருந்த மற்றவர்களைப் பார்த்தான். எல்லோரும் இறுதிக்கட்ட பரபரப்பில்…சிலர் அந்த பரபரப்பான இறுதி நேரத்திலும் எதையோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தனர். மூன்று மணி நேரத்தில் எழுத முடியாத ஏதோ ஒன்றை அந்தக் கடைசி முப்பது வினாடிகளில் அப்படி என்னதான் எழுதி விடுவார்கள் என்று அவர்கள் மீது வியப்பாகவும் ஏன் கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது அவனுக்கு. மேற்பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டிருந்தார்.

கடந்த ஆறுமாதமாக இந்த போட்டித் தேர்வுக்காகத்தான் கனவுகளுடன் காத்திருந்து இப்போது அதுவும் முடிவுக்கு வந்துவிட்டது. எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்றே ஏமாற்றத்துடன் கடப்பது என்பது அவனுக்கு ஒன்றும் புதியதல்ல என்றாலும் இந்த முறை அவன் நெஞ்சில் அது அதீத கனமாய் இறங்கியது. இருபத்தி ஆறு வயதைக் கடந்திருந்த அவன் கடந்த நான்கு வருஷங்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறான். ஒவ்வொரு முறையும் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தான் தேர்வாகாமல் போயிருக்கிறான். ஆனால் அந்த வித்தியாசத்தில் தோற்றுப்போனவர்கள் பல்லாயிரம் பேர் என்பதும் கசப்பான உண்மை. இனி இன்னும் ஒரு வருடம் மட்டும்தான் இப்படித் தேர்வுகள் எழுதி முயற்சி செய்ய முடியும். அதற்குப்பிறகு… குறைந்த சம்பளத்தில் இப்போது இருக்கும் இந்த வேலயே அவனின் வாழ்க்கையாகி விடலாம்.

தேர்வு முடிந்துவிட கூட்டம் கூட்டமாய் இளைஞர்களையும் யுவதிகளையும் வெளியேற்றிக் கொண்டிருந்தது அந்தக்கட்டிடம். கூட்டத்தில் ஒருவனாகத் தேர்வு மையத்திலிருந்து வெளியேறிய ரகு, தான் அந்தத் தேர்விலிருந்தும் வெளியேற்றப்பட்டதாக உணர்ந்தான்.

அடுத்த பேட்ச் பரிட்சை எழுதத் தவமிருந்து தயாராக வெளியே நின்று கொண்டிருந்தது மற்றொரு கூட்டம். இளங்கலை, முதுகலை, வணிகவியல், கணினி, அறிவியல், முனைவர், பொறியியல் எனப் பார்க்குமிடமெங்கும் பரவிக் கிடந்தது பட்டதாரிகள் பட்டாளம். கடைசி நிமிடம் வரை படித்தபடி இருந்தனர் சில பெண்கள் . இத்தனை பெரிய கூட்டமா என்று மூன்று வருடங்களுக்கு முன் முதல்முறையாகத் தேர்வு எழுதவந்த போது இருந்த மலைப்பு இப்போது இல்லை அவனுக்கு.

ஒரு வழியாகத் தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்தபின் நண்பன் ராம்குமாரைத் தேடினான் ரகு. சற்றுத் தொலைவில் வந்து கொண்டிருந்த அவனின் முகமும் கலை இழந்திருக்க அவனின் நிலையை எளிதில் ஊகித்துக் கொண்டான் ரகு.

பேப்பர் ரொம்ப டஃப் இல்ல ராமு…

மூவாயிரம் போஸ்ட்க்கு ஐம்பது இலட்சம் பேர் அப்ளை பண்ணியிருக்காங்க. நாற்பத்தி ஒன்பது இலட்சத்து தொண்ணுத்தி ஏழாயிரம் பேரை கழிச்சாவனும். அப்பறம் எப்படி இருக்கும்… நம்ம நாட்டில மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் இருப்பதாக படிச்ச ஞாபகம். அப்படிப் பார்த்தா ஊருக்கு ஒருத்தருக்குத் தான் வாய்ப்பு கிடைக்கும். நம்ம ஊர்லிருந்து இந்த பெரிய கூட்டத்தில் தேர்வு செய்யப்படுகிற அந்த ஒருவன் யாரோ.

எது எப்படியோ மூவாயிரம் பேரைத் தேர்ந்தெடுக்க காட்டுற தீவிர அக்கறையில ஒரு துளியாவது கழிச்சு விடப்படுற பல லடசம் பேர்மேலேயும் காட்டினா நல்லாருக்கும்…ஆதங்கப்பட்டான் ராமு.

சரி, போலாமா…ரகு கேட்க…

ஏதாவது ஓட்டல்ல சாப்பிட்டு விட்டு போலாம். காலையில சாப்பிடாம வந்துட்டேன். நல்லா பசிக்குது…என்றான் ராமு.

ஹோட்டலில் அமர்ந்த இருவரிடமும் வட இந்திய இளைஞன் ஒருவன் வந்து ஆர்டர் எடுத்துக்கொண்டு போனான்.

உணவு வரும்வரை காத்திருந்த இருவரிடையேயும் ஒருவிதமான மொளனம். இது விரக்தியில் விளைந்த மௌனம். மனதின் பாரங்களுடன் இனி பேச எதுவுமில்லை என்கிற நிலையில் ஏற்படும் மௌனம். இப்படி ஒவ்வொரு முறையும் நிகழ்வது அவர்களுக்குப் பழகிப் போயிருந்தாலும் மனதில் முன்பைவிட அதிகமாக வலிக்கத்தான் செய்தது.

இத்தனைக்கும் ராகுவுக்குப் படித்து முடித்தவுடன் தீவிர முயற்சியின் பலனாக ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்திருந்து. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில மாதங்களிலேயே அங்கு நஷ்டம் ஏற்படுவதாகக் காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்யப்பட அவன் வேலையிலிருந்து அகற்றப்பட்டான். அதன் பிறகு அவன் குறைந்த சம்பளத்தில் கிடைத்த வேலையில் சேர்ந்திருந்தான். எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை நடத்துவதெல்லாம் நினைத்துப் பார்க்கவே மலைப்பா இருந்தது.

வேலையிலிருந்து கொண்டே படித்து எப்படியாவது ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடவேண்டும் என்றுதான் அவன் இப்படித் தேர்வுகள் எழுதி முயற்சி செய்து கொண்டிருந்தான்.

அந்த ஹோட்டலில் அவர்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு சற்றுத்தள்ளி எதிர் வரிசையில் இருந்த டேபிளில் இரண்டு பேர் வந்தமர்ந்தனர். வயது அறுபதைத் தொட்டுக் கொண்டிருக்கலாம் இருவருக்கும்.

சேது…உங்களுக்கு இன்னும் எத்தனை வருஷமிருக்கு ரிடையர் மெண்டுக்கு என்றார் மாநிறத்தில் கனத்த உடலுடன் இருந்தவர்.

மூனு வருஷமிருக்கு…என்று பதில் சொன்ன சேது,

உங்களுக்கு மாதவன்?…என்று பதிலுக்குக் கேட்டார். சற்று ஒல்லியாக எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர்.

இன்னும் ஆறுமாசம் தானிருக்கு. இந்த ஆகஸ்ட் வந்தா முப்பதிஆறு வருஷ சர்வீஸ் கம்ளீட் ஆயிடும் எனக்கு, இருபத்தி மூனு வயசில டிகிரி முடிச்சவுடன் வேலையில ஜாயின்ட் பண்ணினேன்…

படிச்சு முடிச்ச கையோட வேலை கிடைச்சிருச்சு… என்றார் பெருமையாக. ரிடையர்மெண்ட் ஏஜ் இன்னும் இரண்டு வருஷம் அதிகப்படுத்தினா நல்லாருக்கும். என்னோட கமிட்மென்ட்ஸ் முடியக் கொஞ்சம் ஈஸியா இருக்கும். இந்த டுபிஎச்கே வீடடை வித்துட்டு திரி பிஎச்கே வாங்கிடுவேன். பொண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தபின் பொண்ணு மும்பையிலும் பையன் டெல்லியிலும் செட்டில் ஆயிட்டாங்க பண்டிகை நாள்ல வீட்ல எல்லாரும் ஒண்ணா சேரும்போது எல்லாருக்கும் தங்க ரூம் பத்த மாட்டேங்குது… ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

என்னைப் பொறுத்தவரை அம்பத்தஞ்சி வயசோட ரிடையர்மன்ட் கொடுத்துடனும். ஏன்னா ஐம்பது வயசுக்கு மேலே பிபி சுகர்னு வந்துடுதே நிறையப் பேருக்கு. அதுனால அம்பத்தி எட்டு அறுபதுவயசு வரை இழுக்காம அம்பத்தி அஞ்சிலேயே ரிடையர் கொடுத்துடலாம். அதுனால அடுத்த தலைமுறைக்கு வழிவிட்ட மாதிரியும் இருக்கும். வேலையில்லாம இருக்கிற எத்தனையோ பேருக்கு வாய்ப்பு கெடச்ச மாதிரியும் இருக்கும் என்றார் சேது.

நீ என்னப்பா இப்படி பேசறே. நம்பளை மாதிரி மாத சம்பளத்துக்கு வேலை பார்க்குறவங்க நிலைமையையும் கொஞ்சம் நினைச்சிப்பாரு…சம்பாதிக்கறதேல்லாம் குடும்பம் நடத்தவே சரியா இருக்க வாழ்க்கையில பலவருஷ உழைப்பின் பலனா ஒரு மனுஷன் தலைநிமிர முடியறது அம்பத்தி அஞ்சி வயசுக்கு மேலைதான். பெத்த பொண்ணுக்கும் புள்ளைகளுக்கும் கல்யாணம் பண்ணிப் பார்த்து வாழ்க்கையில ஒரு நிலையை அடைய அறுவது வயசு வரைக்குமோ அதுக்கு மேலேயுமோ வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்துல பல ஆயிரம் குடும்பங்கள் இருக்கு….

என்றார். நம்மை மாதிரி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்க வாழ்க்கையே போராட்டம் தான்…

இது மட்டுமில்லாம, இன்னைக்கு வேலை இல்லா திண்டாட்டம் இந்த அளவுக்கு மோசமானதுக்கு நிறைய நிறுவனங்களில் மாறிக்கிட்டே வருகிற சூழல்களும் ஒரு காரணம்தான்.

முன்னாடியெல்லாம் இலாபம் சம்பாதிக்கனும் விற்பனையை அதிகரிக்கனும் உற்பத்தியை பெருக்கனும் என்றதுதான் பிரதானமா இருந்துச்சு. இப்பல்லாம் ஊழியர்கள் எண்ணிக்கையை கணிசமா குறைச்சிட்டு புதுசா ஆள் எடுக்குறதையும் நிறுத்திட்டா சம்பளத்துக்காக செலவிடுகிற தொகையில கணிசமா மிச்சமாகுங்கிற மாதிரி யோசிச்சு செயல்படறாங்க. அவசரத்துக்கு ஆள் தேவைப்பட்டா குறைஞ்ச சம்பளத்துக்கு ஏஜென்சிகள் மூலமாய் வேலைக்கு ஆள் எடுத்துக்குறாங்க. நிர்வாகங்களோ ஊழியர்களோ இரண்டு பக்கமும் யாருமே நிரந்தரமா இருக்கனும் எதிர்பார்க்கிறதில்லை. இவங்களுக்கு நடுவிலே இருந்த முன்னே இருந்த பிணைப்பும் குறைஞ்சிகிட்டே வருது. ஏற்கனவே எல்லா இடத்திலேயும் ஆள்பற்றாக்குறை. இந்த நிலமையிவ இருக்குறவங்க கிட்ட இரண்டு மடங்கு வேலையை வாங்குறதுதான் நடக்குது.

இதுல நாம என்ன செய்யமுடியும்….

என்று மாதவன் தன் கருத்தைச் சொல்லி முடித்தார்.

அப்போது அவர்களின் டேபிளில் சர்வர் பில் கொண்டு வந்து வைக்க இருவரும் கையில் இரண்டாயிரம் ரூபாய் தாளுடன்…

நீங்க இருங்க… நான் குடுக்குறேன்..

என்று ஓருவருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டிருந்தனர்.

நண்பர்களின் டேபிளிலும் அந்த வரிசையைக் கவனித்த சர்வர் ஒருவர் பில்லை கொண்டு வந்து வைத்தார். நண்பர்கள் இருவரும் வெளியில் செல்லும் போது அவ்வப்போது அவர்களில் யாரோ ஒருவரோ அல்லது இருவரும் இணைந்தோ செலவுகள் செய்வார்கள். அவர்களுக்குள் முறையேதும் இல்லை. நிலைமைக்குத் தகுந்தாற்போல் போல் யாரிடம் காசு இருக்கிறதோ அவர்கள் செலவு செய்வார்கள். அது புரிதலுடன் கூடிய நட்பு.

பர்சை திறந்து பில் தொகைக்கான ரூபாயை மேஜையின் மேல் வைத்தான் ரகு. பர்சில் மிச்சமிருந்த பதினைந்து ரூபாய் அவனைப் பார்த்துச் சிரித்த மாதிரி இருந்தது. ஐந்து ருபாயை சரவருக்கு டிப்ஸ் ஆக வைத்துவிட்டு பர்ஸை பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். சம்பளக்காசு முழுவதும் 25 தேதிக்குள் தீர்ந்து விட்டிருந்தது. இனி நாளைக்கு அவசரத்துக்குக் கைச்செலவுக்கு வீட்டிலோ வெளியில் யாரிடமாவது கடனோ கேட்க வேண்டும்.

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இந்த நிலைமையோ. வீட்டில் எதுவும் சொல்வதில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் இப்படி பணம் கேட்க நேரும் போது அவனுக்கு வெட்கமாகத்தான் இருக்கும். இவன் நிலைமையாவது கொஞ்சம் பரவாயில்லை. நண்பன் ராமுவின் வீட்டில் நிலைமை இன்னும் மோசம்.

சாப்பிட்டு முடித்த நண்பர்கள் இருவரும் இருக்கைககளிலிருந்து எழுந்தனர். மறுபுறம் அந்தப் பெரியவர்களும் வெளியே வந்து புறப்படுவதற்காக காரில் அமர்ந்தனர்.

அந்த ஹோட்டலில் பெரியவர்கள் இருவரும் அமர்ந்து பேசிய உரையாடல்கள் இந்த இளைஞர்களின் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இளைஞர்களின் மௌனத்தின் கணமும் அவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

எப்போ நல்ல வேலை கிடைச்சு சுய கவுரவத்துடன் லைப்ல செட்டில் ஆகப் போறோமோ… மனதுக்குள் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளுடன் இனி ஏதாவது செய்தாக வேண்டும் என்ற சவால்களுடன், நண்பர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். அவர்கள் செல்ல வேண்டிய பயணம் வெகு தூரமிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *