தேன்நிலா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 4,849 
 
 

என்னுடைய பெயர் சம்யுக்தா. வயது இருபத்திமூன்று.

சொந்த ஊர் திம்மராஜபுரம். பாளையங்கோட்டையில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். வேலைக்கு செல்லும் ஆர்வம் இல்லை. என் பெற்றோருக்கு நான் இரண்டாவது கடைசிப் பெண் என்பதால் செல்லமாக வளர்க்கப்பட்டேன். நன்றாகச் சாப்பிடுவேன், தூங்குவேன், டிவி பார்ப்பேன். நல்ல தமிழ்ப் படங்கள் பார்ப்பேன். அக்காவுக்கு திருமணமாகிவிட்டது. அவளுடன்தான் சென்னையின் பாலவாக்கத்தில் இப்போது வாசம்.

பறவைகள், செடி கொடிகள், வளர்ப்புப் பிராணிகளிடம் அதிக அன்பு செலுத்துவேன். உடம்பைக் குறைக்க தினமும் வீட்டில் ட்ரட்மில் ஓடுவேன். காலையில் தியானம் செய்வேன். மொத்தத்தில் சொகுசான அமைதியான வாழ்க்கை.

அன்று காலையும் நீண்டநேரம் தியானத்தில் ஆழ்ந்து போயிருந்த நான், தியானம் நிறைந்து கண்களை மெதுவாகத் திறந்து பார்த்தபோது, அந்த அறையின் பெரிய ஜன்னலுக்கு வெளியே ‘தேன்நிலா’ என்று எங்களால் செல்லமாகவும், ஆசையாகவும் அழைக்கப்படும் தேன்நிற பூனைக்குட்டி ஜன்னல் சுவற்றில் என்னையே மெளனமாக பார்த்தபடி உட்கார்ந்திருந்தது. ஒருவேளை ஆதுவும் தியானம் பண்ணிக் கொண்டிருக்குமோ என்னவோ? தேன் கலரில் அது இருப்பதாலும், பின்பக்கம் சற்று வெள்ளையாக இருப்பதாலும் அதற்கு ‘தேன்நிலா’ என்று நான்தான் பெயர் சூட்டினேன்.

நான் தியானம் முடித்து எழுந்ததைப் பார்த்ததும் அதுவும் எழுந்து நின்று ‘மேங்’ என்று குரல் கொடுத்து தான் காத்துக் கொண்டிருப்பதை எனக்குக் காட்டிக் கொண்டது. நான் ஜன்னலின் அருகில் போய், “என்னடா? பிஸ்கட் ஏதாவது சாப்பிட்டியா? இல்ல இப்பத்தான் தூங்கி எழுந்து வர்றியா?” என்று கெஞ்சலாகக் கேட்டேன். .

உடனே அது ‘மேங் மிங் மியாங்’ என்று ராகமாக இழுத்துக்கொண்டு என்னைப் பார்த்தவாறே ஜன்னல் கம்பிகளில் தன் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்து தேய்த்துக் கொண்டது. இந்த மாதிரி சோம்பலோடு ராகம் இழுத்தால் அது இன்னும் எதுவும் சாப்பிடவில்லை என்று அர்த்தம். அப்படியில்லாமல் ‘மேங்’ என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு கீழே குதித்து வலதுபுற வெளிச்சுவரை சுற்றிக்கொண்டு எங்களுடைய படுக்கையறை ஜன்னலை ஒட்டியோ அல்லது ஹால் ஜன்னலை ஒட்டியோ ஓடிப்போய் படுத்துக் கொண்டுவிட்டது என்றால், “சாப்பாடாகி விட்டது, இனிமேல் மதியம்வரை எதுவும் வேண்டியதில்லை” என்று அர்த்தம்.

இந்த ‘தேன்நிலா’ ரொம்ப சமர்த்து. வீட்டிற்குள் நாங்கள் ஒரு பெரிய கூண்டில் ‘பட்ஜீலிகர்’ என்ற லவ்பேர்ட்ஸ் நிறைய வளர்க்கிறோம். இந்த லவ்பேர்ட்ஸ் பறவைகளை பொதுவாக பூனைகள் பார்த்தால் மறு நிமிஷமே அவைகளின் மேல் பாய்ந்துவிடும். நாங்கள் லவ்பேர்ட்ஸ்களை கூண்டுக்குள்தான் வைத்திருந்தாலும் பூனைகள் அவற்றைப் பார்த்துவிடக் கூடாதபடி கவனமாக இருப்போம்.

குட்டியாக இருந்தாலும் ‘தேன்நிலா’ எங்கள் பறவைகளைப் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, பூனையை நாங்கள் எந்தக் காரணத்திற்காகவும் வீட்டிற்குள் வரமட்டும் அனுமதிப்பதில்லை. எனினும் ‘தேன்நிலா’ வீட்டிற்குள் வந்து எப்போதும் எங்களோடு ஒட்டி உரசியபடி ஈஷிக்கொண்டு நிற்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

இருந்தபோதிலும் அதை நாங்கள் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை என்பதை தேன்நிலாவும் புரிந்துக்கொண்டு விட்டதால், அதுவும் எதற்காகவும் வீட்டிற்குள் வர முயற்சி செய்யாது. அதன் குடித்தனம் எங்கள் வீட்டுக்கும் காம்பவுண்டு சுவருக்கும் இடையிலுள்ள ஐந்து அடி அகல சுற்றுப் பாதையிலும்; எங்கள் வீட்டு ஜன்னல்களின் தாழ்ந்த குறுகலான சுவர்களிலும்தான். ஆனால் அது எங்கே உட்கார்ந்திருந்தாலும் அல்லது படுத்துக் கொண்டிருந்தாலும் தேன்நிலாவின் ஏக்கமான ‘பார்வை’ மட்டும் எங்கள் வீட்டிற்குள்தான் இருக்கும்.

நானும் அக்காவும் சமையலறையில் வேலையாக இருந்தால், சமையல் அறையிலிருந்தே வெளியே செல்வதற்காக இருக்கும் வலைகள் பின்னப்பட்ட இரும்பு கம்பிக் கதவின் வெளிப்பக்கத்தில் படிக்கட்டில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கும். அதேமாதிரி நானும் அக்காவும் ஹாலில் இருந்தால், ஹால் ஜன்னல் சுவரில் உட்கார்ந்துகொண்டு எங்களையே பார்த்துக் கொண்டிருக்கும். சிலநேரம் தேன்நிலா எங்கே இருக்கிறது என்று தெரியாது எங்களுக்கு. ஆனால் நாங்கள் ஏதேனும் வேலையாக சமையல் அறையின் கம்பிக்கதவைத் திறந்தோ அல்லது வாசல் கதவைத் திறந்தோ வெளியே செல்ல காலை எடுத்து வைத்தால் தாழ்ப்பாள் திறக்கும் சப்தம் கேட்டு எங்கே இருந்தாலும் ஒரே ஓட்டமாக தேன்நிலா ஓடி வந்துவிடும்.

எங்கள் காலை உரசியபடி சிறிது தூரம் ஈஷிக்கொண்டு சுற்றிச் சுற்றி கூடவே வரும். ‘மேங் பீங்’ என்று அதன் குரலில் ஏதேதோ சொல்லிக்கொண்டு வரும். வேலையை முடித்துக்கொண்டு நாங்கள் கதவைத்திறந்து வீட்டுக்குள் நுழைந்ததும் தேன்நிலா உள்ளே நுழைய சிறிதும் முயற்சி செய்யாமல், அதேநேரம் உள்ளே போக முடியவில்லையே என்கிற ஏக்கம் கண்களில் தெரிய வீட்டின் வெளியே உட்கார்ந்து விடும்.

நானும் என் அக்காவும் வழக்கப் படுத்தியிருந்தபடி தேன்நிலா சில விதிமுறைகளை ஏற்றுக் கொண்டிருந்தது. ஒரு சின்ன பிளாஸ்டிக் தட்டில் இரண்டு பிஸ்கட்டுகளைத் தூக்கிப்போட்டு பால்விட்டு குழைத்து, சமையலறைக் கதவிற்கும் படிக்கட்டுக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் வைத்து விடுவோம். காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் இந்த மாதிரி வைப்போம். அதை தேன்நிலா சாப்பிடும். சாப்பிட்டது போதாது இன்னும் வேண்டும் என்றால், ‘மீங்’ என குட்டைக் குரலில் சப்தம் கொடுக்கும். அப்போது மேலும் ஒரு பிஸ்கட்டைத் தூளாக்கிப் போட்டு பாலை ஊற்றுவோம். சாப்பிட்டது போதும் என்றால், தன் கழுத்தைச் சாய்த்து கம்பிக் கதவில் உரசி தேய்த்துக் கொள்ளும். பின் குனிந்து தன் உடம்பையும் கால்களையும் நிதானமாக நாக்கால் நக்க ஆரம்பித்து விடும். பின் எழுந்து போய்விடும்.

சில நேரங்களில் தேன்நிலா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அதன் அக்கா, வெள்ளையும் ஆரஞ்சும் கலந்த சற்று தடித்த பூனைக்குட்டி அங்கு வந்துவிடும். உடனே இந்தத் தேன்நிலா படிக்கட்டில் இருந்து ஒரு குதி குதித்து சாப்பாட்டை அக்காவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு நகர்ந்து போய்விடும். இந்த அக்கா பூனை இருக்கிறதே அது சரியான சாப்பாட்டு ராமி. எப்போதும் அது தேன்நிலாவை விட ஜாஸ்தியாகச் சாப்பிடும். தனக்குக் கொடுத்ததையெல்லாம் சாப்பிட்டுவிட்டு தம்பிக்குக் கொடுப்பதையும் சாப்பிட பங்குக்கு ஓடி வந்துவிடும். அதனால் கூடியவரை அக்கா பூனை கண்ணில் படாதவாறு, அது இல்லாத நேரத்தில் தம்பிக்கு அவசர அவசரமாக சாப்பிடக் கொடுப்போம். ஆனால் தேன்நிலாவுக்கு அவசரம் அவசரமாக சாப்பிட வராது. அதைப் பார்க்க எனக்கும் என் அக்காவுக்கும் பாவமாக இருக்கும். தேன்நிலா சாப்பிடும் அந்தக் குறிப்பிட்ட நேரம் தவறிப் போனால், மறுபடியும் சாப்பிடக் கொடுக்கச் சொல்லிக் கேட்காமலும், நாமாகக் கூப்பிட்டாலும், எழுந்து வராமல் அது இப்படி பட்டினியாக தூங்குவதைப் பார்த்தால் எனக்கு மனசுக்கு வேதனையாக இருக்கும்.

ஒரு பூனைக்குட்டியின் பேரில் இப்படித் தனிப்பட்ட முறையில் பரிவு காட்டும்விதமாக என்னுடைய மனநிலை மாறியிருப்பதை நினைத்துச் சற்று வியப்பாக இருக்கிறது. அதற்குக் காரணம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பூனைகள் என்றாலே எனக்கு ஒருவிதமான பயம் கலந்த சிலிர்ப்பு இருந்து வந்தது.

மனிதர்கள் வளர்க்கும் மற்ற எல்லா செல்லப் பிராணிகளையும் போல் பூனைமட்டும் என்னால் சகஜமாக ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. அப்படி ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *