தெரு நாய்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 11,371 
 

தெருக்குழாயின் அடியில் குத்துக்காலிட்டு குந்தி துணி துவைத்துக் கொண்டிருந்தாள் வசந்தி. அண்ணக்கூடையில் தண்ணீர் தளும்பிக்கொண்டிருந்தது. சோப்புத்தூள் போட்டு ஊற‌வைத்த துணிகள் சின்ன மலையைப் போல குவிந்திருந்தன.

வீட்டுக்காரனின் லுங்கியை லேசாகப் பிழிந்துவிட்டு, எதிரிலிருந்த பலகைக்கல்லில் “தப்தப்தப்’ என்று ஒரே சீராகத் தப்பினாள். இரண்டு கைகளிலும் கும்பலாகப் பிடித்து கல்லின்மீது கும்கும்மென்று கும்மிவிட்டு நிமிர்ந்தவள், தூரத்தில் கணவன் மனோகரன் மிதிவண்டியில் வருவதைப் பார்த்தாள்.

அனிச்சையாக அவள் கண்கள் அவளையே பார்த்துக்கொண்டன. மாராப்புத்துணி விலகவில்லை. புடவையும், பாவாடையும் சோப்பு நுரைகளுடன் தெப்பலாக நனைந்து கால்களோடு ஒட்டிக் கொண்டிருந்தன.

திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தாள். யாருமே இல்லை. வழக்கமாக அங்கே எப்போதும் இரண்டு மூன்று பேராவது இருப்பார்கள். இப்போது ஒருத்தரும் இல்லை. திடீரென அவளுக்குள் ஒரு குறுகுறுப்பு பிறந்தது.

சட்டென்று எழுந்து புடவையையும், பாவாடையையும் முட்டிக்குமேல் சுருட்டி, இடுப்பில் சொருகினாள். இழுத்துச் சொருகியிந்த மாராப்புச் சேலையை மார்பகங்களுக்கு மத்தியில் கொடிபோல ஒதுக்கி இடுப்பில் அதையும் சொருகினாள்.

அவன் வருவதை கவனிக்காததைப்போல குனிந்து நின்று மாமனாரின் வேட்டியை கல்லில் அடித்துத் துவைக்கத் தொடங்கினாள்.

வீட்டை நெருங்கியதும், மிதிவண்டியிலிருந்து இறங்கியபடியே அவளைப் பார்த்தான் மனோகரன். கால் முட்டிகளுக்குமேல் ஏற்றிச் சொருகிய சேலையால் செம்பமுப்பில் உருண்டிருந்த தொடைகள் வெயில் பட்டு பளபளத்தன. சேலைக்கொடியில் காய்த்துக் கனிந்ததைப்போன்று மார்பகங்கள் ரவிக்கைக்குள் குலுங்கிக்கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் மனோகரன் அவசரமாய் சுற்றும் முற்றும் பார்த்தான்.

பத்தடி தூரத்தில் செழித்திருந்த வேம்பின் தென் கிளையில் உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த காகம் “கர் கர்’ என்று சோம்பலாய் கரைந்தது. அதைத்தவிர அங்கே யாரும் இல்லை.

ஒன்றும் பேசாமல் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தியவன், கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான்.

அவன் வந்ததையோ, தன்னை உற்றுப் பார்த்ததையோ, காகம் அவனிடம் ஏதோ சொன்னதையோ கவனிக்காததுபோல துணிகளை அடித்துக்கொண்டிருந்த வசந்தி, அவன் வீட்டுக்குள் நுழைந்ததும் புடவையை இறக்கிவிட்டு, மாராப்பை சரிசெய்து இழுத்துச் சொருகிக்கொண்டு மீண்டும் பழையபடி துவைக்கத் தொடங்கினாள்.

அவளுக்குள் அவ்வப்போது அரித்துக் கொண்டிருக்கும் அந்தக் கேள்வி மீண்டும் இப்போது விஸ்வரூபம் எடுத்தது. நான்கு பேர் நடமாடும் தெருவோரம் அலங்கோலமாக துணி துவைத்துக் கொண்டிருக்கிற மனைவியைப் பார்த்துவிட்டு, கோபமோ, ஆத்திரமோ வராமல் ஒரு புருசனால் போக முடியுமா?

போகிறானே! ஏன்? கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஓடியதில் இரண்டு குழந்தைகளையும் பெற்றாகி விட்டது. ஆனாலும் அவள் உடல் கட்டுக்குலையவில்லைதான். இருந்தும் ஏன் கண்டும் காணாமல் போகிறான்?

கல்யாணமான புதிதில் எப்போதும் இழுத்துச் சொருகிக்கொண்டு நடந்தாள். நடக்கச் சொன்னான். வீட்டில் மாமனார், மைத்துனன் என்று ஆண்களின் நடமாட்டம் உள்ளதால் அவளது துணி விலகியிருக்கிறதா என அவள் கவனிப்பதைவிட அவன் கவனித்தான்.

துணி துவைக்கும்போது, சாமான்களைக் கழுவும்போது, வீடு வாசல் பெருக்கும்போது, எப்போதுமே துணி விலகக்கூடாது. கொஞ்சம் விலகினாலும் பின்னாலிருந்து செருமுவான். சட்டென்று சுதாரித்துக் கொள்வாள்.

ஆனால் அதே அவன்தான் இப்போது, அவளை இப்படிப் பார்த்துவிட்டு, ஒன்றுமே பேசாமல் போகிறான். இப்போது மட்டுமல்ல கொஞ்ச நாட்களாகவே இப்படித்தான். ஏன் இப்படி மாறிப்போனான்?

அவளே அறியாமல் வாசல் பெருக்கும்போது கொஞ்சூண்டு இடுப்போ, வயிறோ, தொப்புளோ, முழங்கால்களோ தெரிந்தால் சைகை செய்துவிட்டு அப்போதைக்கு சும்மா இருப்பவன், ராத்திரி படுக்கையில் காச் மூச்சென்று கத்துவான்.

“இன்னா பொம்பளடி நீ… நாலு ஆம்பிளிங்க கீற ஊட்ல, அடக்க ஒடுக்கமா துணி கட்டத் தெரீதா உனுக்கு, ஊங் ஒடம்ப போறவங் வரவனெல்லாம் பாக்கணுமா?” என்று எகிறுவான்.

“அய்யே… நானு இன்னா ஓணுமுன்னேவா அவுத்துப்போட்டுகினு ஆட்றங்… பொட்டச்சி வளஞ்சி, நிமிந்து வேல செஞ்சா அங்க இங்க துணி ஒதுங்காதா…? நாங்க இன்னா ஆம்பிளங்கிளாட்டம் சொக்காயும், பட்டனுமா போட்டுகினு கீறம்?” என்று பதில் சொன்னால் இன்னும் எகிறுவான்.

“ஆம்பள சொக்கா போட்டுகீனு கீறான்… இல்லன்னா அல்லாத்தயுங் அவுத்துப்போட்டுட்டு கோமணத்தோடு அலயறாங்… ஆம்பள எப்டிச்சுத்தனாலும் எவங்கேக்கப்போறாங்? ஆனா பொம்பளிங்க மாராப்ப கொஞ்சிண்டு எறக்கிவுட்டுகினு நடந்துபோனா இன்னா ஆவுந்தெரிமா…? ஆடி மாசம் பொட்ட நாயி பின்னால சுத்தற கடாநாய்ங்க மாதிரி ஊர்ல கீற ஆம்பிளங்களெல்லாம் கோவணத்த அவுத்துகினு வரிசைல நிப்பானுங்க தெரிமா? என்று குதிப்பான்.

உண்மைதானா? முழங்கால் சேற்றில், முட்டிக்குமேல் சேலையை தூக்கிச் சொருகிக்கொண்டு எவளும் நாற்று நடுவதில்லையா? அரக்கப் பரக்க தாளடிக்கிறபோதும், “செம’ தூக்குகிறபோதும் மாராப்புகள் விலகுவதில்லையா?

“வெக்கிலாட்டம் குறுக்குக் கேள்வி கேக்கறீயா…? வேல செய்யும்போது எல்லாரு கண்ணுங் வேலைலதாங் இர்க்கும்… அங்க யாரு தொடயுங், மாரயுங் பாத்துகினு கீறாங்க… அங்க அவனவனுங் சூத்துல ஜீவம் ‘போவுது’ ஆத்தா வூட்டுக்கு ஆள அனுப்புன்னு ஓடிகினு இர்க்கும்போது இதுக்கெங்க நேரங்கீது… நாஞ் சொல்றது… ஊட்லயுங் தெருவுலயுங் ஒய்ங்கா துணி போட்டுகினு நடன்னுதாண்டி” என்று புது நியாயம் சொல்வான்.

ஆரம்பத்தில் இவளுக்கு ஆத்திரமாக வரும். “இன்னா ஆம்பள இவங்… பொண்டாட்டிய நம்பாம எப்பப் பார்த்தாலும் முதுவுக்கு பின்னாலியே மொரச்சிகினு கீறானே” என்று பொருமுவாள்.

படுத்துக்கொண்டு நிதானமாய் யோசிப்பாள். பானையில் விதைக் காலக்காயைக் கொட்டி, அதன்மேல் வைக்கோல் பரப்பி சாம்பல் கரைத்து ஊற்றி ‘மெத்து’ போட்டு, அலுங்காமல் குலுங்காமல் காப்பாற்றுவதைப்போல பெண்களை எதற்கு இந்த ஆண்கள் மூடி மூடி வைக்கிறார்கள்? ஆம்பிளைகள் வெய்யில் காலத்தில் பட்டாப்பட்டி டவுசர்களைப் போட்டுக் கொண்டும், கொஞ்சம் வயதான கிழடுகள் கோவணங்களைக் கட்டிக்கொண்டும்கூட தெருக்களில் படுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் காற்றாட படுக்க முடிகிறதா? சித்திரை மாதப் புழுக்கத்தில்கூட ரவிக்கையும், இழுத்துச் சொருகிய மாராப்புமாய்தானே வேக வேண்டியுள்ளது.

“ஊட்டு ஊட்டுக்குங்.. பொம்பிளிங்கோ ஒடம்பு மேல ஒன்னுமேயில்லாமக் கூடத்தாங் இருங்க… அடத்தெருவுலகூட படுங்க… அதனால் ஆம்பிளிக்கி இன்னா…? மஜாதாண்டி. ஆனா நஸ்டம் யாருக்கு…?” என்று கண்ணடிப்பான்.

அவனுக்குக் குஷி வந்துவிட்டால் அவளை துவம்சம் செய்வான். முரட்டு மாடு சோளப்பயிரில் புகுந்தால் கறுக் மறுக்கென்று பயிர்களை மிதித்தும் கடித்தும் துவம்சம் செய்வதைப் போலத்தான். கூரை வீட்டுத் தூளத்தைப்போல கொழுத்த அவளது தொடைகள்மீது அவனுக்கு அடங்காத வெறி இருந்தது.

ராத்திரிகளில் அவனது கொஞ்சல்களுக்கும் அளவில்லை. எப்போதும் புதுப்பொண்டாட்டியைப் போலவே அவளை அடங்காத ஆசையோட ஆட்கொள்வான். அதனாலேயே இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும், மகுடிக்கு மயங்கும் பாம்பைப்போல அவனிடம் மயங்கிக் கிடந்தாள் அவள். எல்லாம் ராவோடு சரி. விடிந்துவிட்டாலோ பின்னாலேயே முறைத்துக்கொண்டு நிற்பான்.

ஏன் இப்படி இருக்கிறான்? சந்தேகப்படுகிறானா? அது வேரோடு வம்சத்தையோ ஒழித்துவிடுமே!

“உம்மேல யாருடி சங்தேகப்பட்டாங்க… நீ சொம்மாயிருந்தாலும், ஊரு சொம்மாயிருக்காதே… நாற்பது கடா நாயி தெருத்தெருவா சுத்தனாலும் ஒன்னும் நடக்காது… ஆனா ஒரே ஒரு பொட்ட நாயி கொஞ்சூண்டு வாலத்தூக்கிச்சின்னா போதும்… ஊர்ல கீற அத்தினி கடா நாயுங் அதயேச் சுத்திச் சுத்தித் தொறத்திகினு திரியுங் தெரீமா?”

“பொட்ட நாயிய மட்டும் தப்புன்றீயே… பின்னால சுத்தற கடா நாய்ங்க மட்டும் யோக்கியமா?” என்று திருப்பிக் கேட்பாள் .

“அதாண்டி பொட்டச்சிக்கும், ஆம்பளைக்கும் ஆண்டவங் வெச்சிக்கீற அளவு. எவங்எவள வெச்சிகினு இர்ந்தாலுங் ‘ஊசி எடங்குடுக்காம நூலு நோயுமான்னு’ கேக்குற ஊருடி இது. கையாலாவாத ஆம்பள கூட பொண்டாட்டி ஒடம்ப வேற எவனும் பாக்கக்கூடாதுனுதாண்டி நெனைப்பாங். உன்ன ஒய்ங்கா துணியக் கட்டுன்னுதான சொல்றங், வேறின்னா மலய வெட்டவா சொல்றங்?” என்பான்.

யோசித்துப் பார்த்ததில் அதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை வசந்திக்கும்.

அவள் மீது அவனுக்கிருக்கிற காதல்தான் அவனை அப்படியெல்லாம் பேச வைக்கிறதோ என்று யோசித்தாள். ‘அதுதான் உண்மை’ என்று அவளும் நம்பத் தொடங்கியபின், அவன் மீதான அவளின் காதலும் கூடிக்கொண்டே போனது. அவனும் வேறு பெண்களை அநாவசியமாகப் பார்ப்பதில்லை.

மழை பொய்த்துப்போனதால், ஊரில் இப்போது ஒன்றிரண்டு கிணற்றடிகளில் மட்டுமே விவசாயம் நடக்க, பல ஆம்பளைகள் தோல் கம்பனிகளுக்கும், இரும்பு கம்பனிகளுக்கும், சித்தாள் வேலைகளுக்கும் போனார்கள். பெண்கள் சிலர் ஷூ கம்பெனிகளுக்குப் போக, போகாத பெண்கள் வீட்டோடு உட்கார்ந்து ஊதுவத்தி உருட்டத் தொடங்கினார்கள்.

இவனும், இவன் தம்பியும் தோல் கம்பனிக்குப் போனார்கள். மாமனார் கறவை மாட்டோடு கரம்புகளில் போராடிக்கொண்டிருந்தார்.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, இவளும் ஊதுவத்தி தேய்த்தாள். எப்போதேனும் ஊரில் நடக்கும் ஒன்றிரண்டு நடவுக்கோ, அறுவடைக்கோகூட அவளை அனுப்புவதில்லை அவன். காலப்போக்கில் அதெல்லாம் கூட அவன் மீதான காதலை அவளுக்குள் கிணற்றில் பெருகும் கொடி ஊற்றைப்போல பெருகச் செய்தது.

ஆனால் அண்மைக் காலமாக அவன் மாறிக்கொண்டு வருகிறான். அவளே அறியாமல் எப்போதாவது லேசாக அவளது துணி விலகியிருப்பதைப் பார்த்தாலும்கூட அவன் எதுவுமே கேட்பதில்லை. படுக்கையில் கூட முன்புபோல எதுவும் பேசுவதில்லை.

ஏன்? அவள் மீதிருந்த ஈர்ப்பு குறைந்துவிட்டதா? ஒருவேளை தோல் கம்பனியில் எவளுடனாவது பழக்கம் ஏற்பட்டிருக்குமோ? அய்யோ! அப்படி இருந்தால் எதிர்காலம் என்ன ஆவது?

சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு, இவர்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்து ஆறு மாதங்களாகியிருக்கும்போது காலையில் வேலைக்குக் கிளம்பும்முன் கிணற்றிற்குக் குளிக்கப் போனான் மனோகரன்.

உடல் அதிர அதிர கத்திக்கொண்டு, புகை கக்கிய லிஸ்டர் இன்ஜின் தண்ணீரை உறிஞ்சி பீய்ச்சிக் கொண்டிருந்தது. இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, பைப்பிலிருந்து குதிக்கும் தண்ணீருக்குள் தலையைக் கொடுத்து அவன் சிலிர்த்துக்கொண்டிருந்தபோது, புருசோத்தமனின் மனைவி துணி துவைக்க அங்கே வந்தாள்.

துணிகளுக்கு சோப்புப் போட்டு, அங்கிருந்த கல்லில் “உஸ் உஸ்’சென்று பாம்பைப் போல சத்தமிட்டபடி அடிக்கத் தொடங்கினாள். அவளின் விநோதமான சத்தத்தைக் கேட்டு அவளைத் திரும்பிப் பார்த்தான் மனோகரன்.

அவள் இவனது பங்காளி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு வந்து நான்கு வருடங்கள் ஆகிறது. அவளுக்கும் இரண்டாவது குழந்தை பிறந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கும். அவளைப் பார்த்ததும் மனம் கூசியது அவனுக்கு.

தொடை வரை புடவையைத் தூக்கிச் சொறுகி, எந்தவித கூச்சமும் இல்லாமல் துவைத்துக் கொண்டிருந்தாள் அவள். அவன் இருப்பதையே உணராத பாவனையில் துணியை ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டிருந்தாள். வரும்போது குழந்தைக்கு பாலூட்டி விட்டு வந்திருக்க வேண்டும். மாராப்பு விலகியிருக்க, ரவிக்கையின் கீழிரண்டு ஊக்குகள் போடாததால், அவள் கைகளைத் தூக்கி துணிகளை அடிக்கும்போது இரண்டு மார்புகளும் பிதுங்கியபடி அதிர்ந்தன. அவைகளைப் பார்த்ததும் திணறினான்.

ஏற்கெனவே அவள் ஆண்களை விழுங்கிவிடுவதைப்போல பார்ப்பதாக ஊரில் பேசிக்கொண்டனர். எப்போதும் பாதி மார்புகள் தெரியும்படி அவளின் மாராப்பு ஒதுங்கியே இருக்கும். கிணற்று மேட்டில் நின்றிருந்த அவுஞ்சி மரக்கிளைகளில் கூட்டமாய்க் கத்திய பீகுருவிகளை நிமிர்ந்து பார்த்தாள். இவனைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மீண்டும் துணிகளை அடிக்க, அவளின் வனப்புகளைப் பார்த்து ஒரு கணம் தடுமாறிப் போனான். ஒரே கணம் தான்.

சரியாக அந்த நேரத்தில் துணி துவைக்க வசந்தி அங்கே வந்தாள். இவனின் பார்வையையும், அவளின் கோலத்தையும் கண்ட வசந்திக்கு அதிகாலை ஏறு வெயிலைப்போல சுருசுருவென்று ஏறியது கோபம். வசந்தியைப் பார்த்ததும் அதிர்ந்தான் மனோகரன். வெயிலில் அறுத்துப்போட்ட அவரைக்கொடியைப்போல வதங்கிச் சருகானது அவனது முகம். எதுவுமே பேசாமல் வேக வேகமாய் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

இரவு ஆங்காரமாய் நின்றாள் வசந்தி. அவனைப் பார்வையாலேயே கொன்றாள்.

“யோக்கியமான கெய்த செனக்கெய்த மேல போயி ஏறிச்சாம்… அப்டிஇரு… இப்டி இருன்னு மத்தவங்களுக்குச் சொல்றவங்க புத்தி இப்ப ஏன் பீத்துன்ன போச்சி?” என்றாள் ஆங்காரமாக.

“இத்துமே… நானு இன்னா கொய்ப்பேறிப்போயி ஊர மேயறவனா…? நாம்பாட்டுக்கு தண்ணி ஊத்திகினு இர்ந்தங்… அதுயின்னா பொம்பளியா… மோகினியா… அத்தாங் ஜாக்கிட்ட அவுத்து வுட்டுட்டு மொலய காமிச்சிகினு நிக்கிது… நானு இன்னா பொட்டயாடி…? காட்ல சாமியாரா கீறவனேகூட ஒரு பொம்பள இப்டி எதிர்ல நின்னா சொம்மா இர்க்கமாட்டாங்… நானு இன்னா அவ கைய புட்ச்சனா, கட்டிப்புட்ச்சனா…? ஒய்ங்கா கீற ஆம்பளயே… பொம்பள அப்டி இப்டி இருந்தா மாறிப்புடுவாங்… எப்ப எவடா மாட்டுவான்னு அலையறவங்களுக்கு சொல்ணுமா…? இதுலயிர்ந்தே ஒய்ங்கா துணியப் போடுன்னு உனுக்கு நானு எதுக்குச் சொல்றன்னு புர்ஞ்சிக்க…” என்றான்.

அவன் சொல்வதை ஒத்துக்கொள்வதா, இல்லை இதுதான் சாக்கு என்று அவனோடு ரகளை செய்வதா? என்று தெரியாமல் இரண்டு நாட்கள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு இருந்தாள். பிறகு சகஜத்துக்கு திரும்பிவிட்டாள். அவனும் இதுவரை எவளிடமும் எந்த வம்புக்கும் போனதில்லை என்றாலும் அதற்குப் பிறகுதான் அவன் படிப்படியாக மாறிவிட்டான்.

முன்பெல்லாம் இவள் ஏதேனும் வேலையாயிருக்கையில், அவன் திடீரென வந்துவிட்டால் வேலை மும்முரத்தில் கவனிக்காமல் ஒதுங்கியிருக்கும் மாராப்பை சட்டென்று சரி செய்வாள்.

“என்னைப் பார்த்ததும் இழுத்து மூடிக்க… ஏன்னா நானு எதயும் பாக்கக்கூடாது பாரு… நானு இல்லன்னா தறந்து போட்டுக்கினு இரு” என்பான்.

“தாலி கட்னவனப் பார்த்தாதாங் அதெல்லாங் கண்ணுக்கு தெரீதா… தூண்டி முள்ளப் போட்டவனுக்கு எப்பவும் கண்ணு தக்கயில கீற மாதிரி, பொட்டச்சிங்க கண்ணு எப்பவும் மாராப்புல கீனன்டி” என்று பல்லைக் கடிப்பான்.

“இன்னா ஆம்பள இவன்? எப்பப் பார்த்தாலும் மாராப்பு… மாராப்புன்னு… அப்டி இன்னாதாங்கீது இதுல?… இன்னாத்துக்கு இந்த ஆம்பளைங்க இப்டி அதயே நோண்டிகினு கீறானுங்க” என்று அவளுக்கு ஆத்திரமாக வரும்.

அப்படிப்பட்ட ஆம்பளைக்கு இப்போது என்ன ஆனது? எறும்புக்கு இந்த வெல்லத்தின் ருசி சலித்துவிட்டதா? இவளும் அவன் வரும்போது வேண்டுமென்றே நான்கைந்து தடவைகள் இப்படி செய்து பார்த்துவிட்டாள். அவன் கண்டும் காணாமல்தான் போகிறான். ஏன்? ஏன்?

கேள்விகள் குடையக் குடைய துணிகளை வேக வேகமாகத் தப்பத் தொடங்கினாள்.

வீட்டுக்குள் நுழைந்த மனோகரன், அறைக்குப்போய் பேண்டையும் சட்டையையும் கழற்றி ஆணியில் தொங்கவிட்டு லுங்கியைக் கட்டிக்கொண்டான். சொம்பு நிறையத் தண்ணீரை மொண்டு கடகடவென குடித்தான். பாயை விரித்து, மல்லாந்து படுத்தான். குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு போயிருக்க வெறுமையாய் இருந்தது வீடு.

வசந்தி துணி துவைத்துக்கொண்டிருந்த காட்சி மீண்டும் மீண்டும் கண்களுக்குள் ஓடிக்கொண்டேயிருந்தது. ஏன் இப்படி மாறிவிட்டாள்? அவனுக்குள் அடுக்கடுக்காய் கேள்விகள் முளைத்தன.

இவன் வருவதைப் பார்த்தாலே துளியூண்டு சேலை விலகியிருந்தாலும் இழுத்துச் சொருகிக் கொள்கிறவள், ஏன் இப்போதெல்லாம் அலங்கோலமாய், இவன் பார்ப்பதைப் பார்த்தாலும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறாள்.

இப்போதெல்லாம் கிணறுகளில் பம்ப் செட்டோ, ஆயில் மிஷின்களோ ஓடுவது குறைந்து விட்டது. ஆற்றிலோ, குளத்திலோ தண்ணீர் கிடையாது. பாவம் பெண்கள். துணிகளைத் துவைக்க அல்லாடுகிறார்கள். தெருக்குழாய்களும், போர்வெல்களும்தான் இருக்கிற ஒரே புகலிடம். அது இவனுக்கும் தெரியும்.

எல்லா ஊர்களிலுமே குழாயடிகளில்தான் பெண்கள் கும்பல் கும்பலாகத் துவைக்கிறார்கள். இவனும் மிதிவண்டியில் போகிறபோது பல ஊர்களில் பார்க்கிறான். பல பெண்கள் துணி துவைக்கிற வேகத்திலும், பேச்சு மும்முரத்திலும் மாராப்பு விலகி, பல நிற தொடைகள் தெரியும்படி நிற்கிறார்கள்.

அதையெல்லாம் இப்போது யார் குற்றம் சொல்கிறார்கள்?

“பொட்டச்சி நெனச்சிட்டா வூட்டுக்காரங் மூத்திரம் பேய்ற நேரத்துல இன்னோர்த்தங்கூட படுத்து எய்ந்துடுவாடா… அவ நெனைக்கலன்னா அந்த மம்மதனே வந்தாலும் அவ நெகலக்கூட தொட முடியாதுடா பேரா” என்பாள் இவன் பாட்டி.

“பாவம் வசந்தி. சொம்மா சொம்மா அவளுக்கு இன்னாத்துக்கு இப்டி இம்சகுட்த்துகினு கீறம்” என்று நினைத்து அவளை சீண்டுவதை படிப்படியாக குறைத்துக் கொண்டது தவறா? எதற்காக இப்படி அலங்கோலமாய் அலைகிறாள்?

எது நடக்கக்கூடாது என்று முன்பெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தோமோ அது நடந்து விட்டதா? யாருக்கேனும் வலை விரிக்கிறாளோ?

இருக்காது. வசந்தி அப்படிச் செய்வாளா? பின் ஏன் இப்படி இருக்கிறாள்? அந்த புருசோத்தமனின் பொண்டாட்டிக்கும் பக்கத்து வீட்டிலிருக்கிற நாராயணனுக்கும் தொடர்பு இருப்பதாக இப்போது ஊரில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

வசந்தியும் ஒருவேளை…? கூடாது. இன்று ஒரு முடிவுக்கு வரவேண்டும். அவள் வந்தவுடன் கேட்டுவிட வேண்டும். ஏன் இப்படி தெனவெடுத்து அலைகிறாய் என்று கேட்டு விடவேண்டும். அவன் மனதுக்குள்ளேயே ஒத்திகை பார்த்தபடி தயாரானான்.

அலசியத் துணிகளை முறுக்கி, முறுக்கிப் பிழிந்து, கற்றாழை நார் வடத்தைப்போல சுருள் சுருளாய் அண்ணக் கூடையில் போட்டுக்கொண்டிருந்த வசந்திக்கு தலை கிறுகிறுத்தது.

கணுக்கால் தெரிந்தாலே குதிகுதியென்று குதிக்கிறவன் மேல் தொடை தெரியும்படி நிற்கிறவளைக் கண்டும் காணாமல் போகிறானே.

இப்படியே போனால் எவளையாவது ஷூ கம்பனியிலிருந்து இழுத்துக்கொண்டு வந்து நிற்பானோ? கூடாது. இன்று ஒரு முடிவுக்கு வரவேண்டும். கேட்டுவிட வேண்டியதுதான். அவளும் தயாரானாள்.

அன்னக்கூடையைத் தூக்கிக்கொண்டு நங்கு நங்குவென்று நடந்து வந்து வாசலில் கூடையை தொபீர் என்று வைத்தாள். சத்தம் கேட்டு அவனும் தயாராக வெளியே வந்தான். இருவரின் பார்வைகளும் மோதின. நான்கு கண்களிலும் கோபம் தெரிக்க, பார்த்தபடியே நின்றனர். என்ன பேசுவதென்று இரண்டு பேருக்குமே தெரியவில்லை.

“இன்னாடி நென்ச்சிகினு கீற நீயி… பொட்டச்சிக்கு ஒரு அடக்கம் ஒடுக்கம் இல்லாம அவுத்துப் போட்டுகினு ஆடற” என்று கத்தினான்.

“நீயின்னா நென்ச்சிகினு இத்தினி நாளா ஊமசாமி மாதிரி கம்னு கீற…? உம் மானம் ரோசம் இப்ப எங்க பூட்ச்சி?” என்று திருப்பிக் கத்தினாள்.

அதற்குமேல் பேச முடியாமல் இரண்டு பேருமே திண‌றினர். ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர். இதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் காகம் படபடவென்று இறக்கைகளை அடித்தபடி, வேப்பமரத்திலிருந்து எழும்பி “கா… கா…” என்று கத்திக்கொண்டே இவர்களைக் கடந்தது.

இருவரும் நிமிர்ந்து காகத்தைப் பார்த்தனர். அதே நேரம் “சொத் சொத்’தென்று அவர்கள் முகத்தில் விழுந்தது காகத்தின் எச்சம். அதிர்ந்துபோய் அதை வழித்தபடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இரண்டு பேருக்கும் அடக்கமுடியாத சிரிப்பு முட்டிக்கொண்டுவர “கெக்கெக்கெக்கே’ என்று சிரிக்கத் தொடங்கினர்.

காகம் அவர்களைத் தாண்டி பறந்து கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *