தெய்வ பரம்பரை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2022
பார்வையிட்டோர்: 3,293 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தூங்கி வழிந்து கொண்டிருந்த பேதுரு திடுக்கிட்டுக்கொண்டே தன்னை நிதானமாக்கிக் கொள்கிறான். கயிறு மிகவும் பாரமாகி அம்மிக் கொண்டே இருக்கிறது. இருந்தாற்போல் ஏற்பட்ட இந்த அமுக்கம் எப்பொழுதும் ஏற்படுவதில்லை. ஆசை அருமையாக எப்போதாவது ஒரு நாள் ஏற்படுகின்றது. பேதுருவின் ஐம்பது வருட அனுபவத்தில் ஐந்தோ, ஆறு தடவைகள்!

கடல் ஜீவிகளையற்றுக் கிடக்கிறது. ஆனாலும் அது பெருமூச்சு விடுகின்றது. கடற் பரப்பெங்கும் ஊமை வெளிச்சம் இரண்டு நாட் களுக்கு முன்புதான் பருவம் வந்தது. அந்தப் பருவ நிலா தேய்ந்து போக எண்ணிக்கொண்டு, தன்னைத் தானே தின்று கொண்டிருக்கிறதோ!

கூதல் பிடுங்கித் தின்கிறது. போதாக்குறைக்கு அடி வானமும் இடித்து மின்னுகிறது. வானத்திலே ஒரு வெள்ளித் துண்டுகூட இல்லை. கருமேகப் போர்வைக்குள் அவை புதைந்து கொண்டு கிடக்கின்றன.

பேதுரு வாழ்வுக்காகச் செத்துக் கொண்டிருக்கின்றான். கயிற்றோடு சேர்ந்து வந்த தண்ணீரை அளைந்தும், இறால் பருக்கைகளை வளைத்து வளைத்துக் குத்தி அதன் வாற்புறத்தைக் கழுவக் கடலை அலசியும் அவனின் கைத் தசைகள் சுருங்கி விறைத்துப் போய்விட்டன.

கருக்கல் வேளையிலிருந்து பேதுரு காத்துக் கிடக்கிறான். இத்தனை வேளைவரை ஒரு பூச்சியாவது, புழுவாவது! ஆனால் இப்போது மட்டும் இப்படி ஒன்று வந்து அம்மிக்கொண்டே தங்கி நிற்கிறது.

வலக்கரத்தை முன் நீட்டி, இடக் கரத்தைக் கயிற்றின் பின்புறமாக உருவித் தயார் செய்து கொள்கிறான் பேதுரு. அவன் நெஞ்சு அடித்துக் கொள்கிறது. தூண்டியை இரையாக எடுத்துள்ளது. கருங்கண்ணிப் பாறையோ கொடுவாவோ? அல்லது கற்பனைக்கப்பாற்பட்ட பெரும் மீனோ?

பேதுருவுக்கு மனசு நிழலாட்டமாடுகிறது. நேற்றுக் காலை அவன் வீட்டிலே தூண்டில் அரிப்பான் சரிபார்க்கும் போது, பேரன்முறையான பீற்றர் படித்துக் காட்டிய ஒரு கதையை அவன் நினைவுபடுத்திக் கொள் கிறான். அந்தக் கதையிலேயே வந்த சந்தியாக்கோவின் தூண்டியில் அகப்பட்ட பெருமீனைப் பற்றிய நினைப்பு அவனுக்கு வருகிறது. அந்த மீனோடு போராடுவதற்காகச் சந்தியாக்கோ தன்னைத் தயாராக வைத்துக் கொண்டதைப் போலெல்லாம் கிழவன் தன்னைத் தயாராக்கிக் கொள்கிறான். சந்தியாக்கோவுக்குக் கிடைத்த அந்த மீனைத் தனது தூண்டியில் மாட்டி வைத்துக்கொண்டு கிழவன் பேருவகைப்படுவதான அறிகுறிகள் தோன்றுகிறது.

தூண்டி இன்னமும் அம்மலாகவே இருக்கின்றது. அதில் துடிப்போ, துள்ளலோ, அரிப்போ எதுவுமே இல்லை. மெதுவாகத் தூண்டியைப் பிடித்து உயர்த்தி மீனுக்கு உணர்ச்சியை வரச்செய்கிறான்.

‘ம்… ராசாத்தி… ம்’

பேதுரு தன்னிலே பேசிக் கொள்கிறான். தூண்டிலில் வெறும் அம்மலைத் தவிர உயிரையே காணோம்!

பேதுரு பொச்சுக் கொட்டிக் கொள்கிறான். மனதில் ஆசையோடு சேர்ந்து கொண்டு நமைச்சல் வருகின்றது.

எங்கோ இருந்து குளிர்க் காற்று சுழன்று வருகின்றது. உலகத்தின் குளிர் எல்லாவற்றையும் அது அந்தக் கிழவன் மேல் கொட்டித் தீர்த்துவிட்டுப் போய்விடுகின்றது. கிழவனின் பற்கள் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொள்கின்றன.

வெதும்பிய இருட்டில் கிடக்கும் கடற்பரப்பைப் பேதுரு நோக்கு கிறான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை மனித நடமாட்டாமே இல்லை.

மறுபடியும் காற்றுச் சுழன்று வருகின்றது. கடலின் பெருமூச்சுகள் சற்றுப் பலமாகக் கேட்கின்றன. நீண்ட தூரம் ஓடிவிட்ட பந்தயக் குதிரையின் அவசர அவசிய பெருமூச்சுகளைப்போல் கடல் மூச்சு விடுகின்றது. அலை மேட்டில் ஏறியும், அலைப் பள்ளத்தில் சரிந்தும் நடனமாடும் பேதுருவின் சிறு தோணி, காற்றின் சுழற்சிக்குள் தடுமாறித் தன்னைத்தானே சுதாரித்துக் கொள்கிறது.

அந்தத் தோணி வலுவில் கவிழ்ந்துவிடக் கூடியதா? பேதுருவுக்கு அது கிடைத்து முப்பது வருடங்கள். அலெக்ஸாண்டர் அதை அவனுக்கு வாங்கிக் கொடுத்தான். அது ஒரே முழு மரத்தில் கோதி எடுக்கப் பட்டது. ‘ஆசினீர்’ என்று கூறுப்படும் ஒரு சாதிப் பலாமரத்தில் கோதப் பட்டது. இப்படி ஒரே மரமாகக் கிடைப்பது மிகவும் துர்மைந்தான். ஒன்றோ, இரண்டோ பேர்களுக்குத்தான் இந்த அதிர்ஷ்டம் கிடைக் கிறது. வள்ளத்துள் தண்ணீரைக் கோலிப்போய் விட்டாலும், ஆசினீர் வள்ளம் கடலுக்கடியில் தாழ்ந்துவிடவே மாட்டாது நீர் மட்டத்திற்கு மேல் அது அமிழ்ந்து விடுவதில்லை. நீரைத் தன் வயிற்றில் அடைத்துக் கொண்டு, அது துணிச்சலாகப் பிடிவாதம் செய்து கொண்டு தண்ணீர் மட்டத்தோடு நின்றுவிடும். இதனால் இதற்கு மிகவும் கிராக்கி. எந்த விலை கொடுத்தும் கடலோடிகள் இந்த வள்ளத்தை வாங்கத் தயாராக இருப்பார்கள்.

பேதுரு இந்த வள்ளத்தை வாங்கியபோது இந்த வள்ளங் கிடைத்த போது, ஊரில் எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். கரைவலைக்காரருக்கும், விடுவலைக்காரருக்கும், கொண்டோடி வலைக்காரருக்கும், கொட்டு வலைக்காரருக்கும், களங்கண்டி வலைக்காரருக்கும், தூண்டி வலைக்காரருக்கும், படகு வலைக்காரருக்கும் கிடைக்காத ஆசினீர் வள்ளம் பேதுருவுக்கு மட்டும் கிடைத்துவிட்டால்…?

அந்தத் தோணிக்குப் பேதுரு அதிபதியாக வந்த காலத்தில் அவன் நெஞ்சு நிமிர்ந்து கொண்டுதான் நடந்தான். தூண்டில் கயிறுகளை இரைப் பெட்டிக்குள் போட்டுத் தோளில் கிடக்கும் மரக்கோலுக்கும், சவளுக்கும் மேல் தொங்கவைத்து, அவன் நடக்கும் கம்பீரமான நடை யைப் பார்த்து ‘தூ! வெட்கங்கெட்டது!’ என்று மறைவிலிருந்து காறி உமிழ்பவர்களைப் பேதுருவால் முதலிற் காண முடியவில்லை. தோணி வந்து பத்து நாட்களுக்குள் இவர்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்கள்.

‘கும்பா, தோணிக்கு நீ எத்தினை பவுன் குடுத்தனி!’

ஞாயிற்றுக்கிழமை கோவிலிலிருந்து வரும்பொழுது, பேதுருவின் ‘கும்பா’ சலமோன் இப்படிக் கேட்டான்.

கும்பா என்றால் அதற்கு மதாசாரப்படி மைத்துனனை விடவும் நெருக்கமான மைத்துனத் தொடர்பு. குடும்பத்தில் நடக்கும் நன்மை யிலோ தீமையிலோ எதிலுமே பங்குதான். ஆனால் பேதுருவுக்குக் கிடைத்த சலமோன் கும்பாவுக்கோ, இந்தத் தொடர்புகளைவிட அதிகமாகவும் தொடர்பு இருந்தது. தொழிலிலும் இறுக்கம் இருந்தது.

சலமோனையும், பேதுருவையுந் தவிர வேறு எவருக்குமே தூண்டில் தொழில் வராது. தூண்டியைப் போட்டுவிட்டுத் தூங்கி வழியும் இந்தத் தொழிலால் ஆனை, சேனை வந்து விடுவதுமில்லை அதிகப்பட்டால் ஐந்து. பரவாயில்லையானால் இரண்டு. அவ்வளவுதான். மாதத்தில் ஒரு தடவையேனும் இந்த அதிகப்பாடு வந்துதான் போகும். பாஷையூர் கல்லுக்கடலைக் கடந்து கொழும்புத் துறைப் பரவைக் கடலையுந் தாண்டி, அப்பால் கௌதாரி முனையை நோக்கிச் சென்று ஆத்து வாய்க்கால் வரை சென்றால் கொடுவாயோ, விளைமீனோ நிச்சயம் கிடைக்கும். ஆனால் அதுவரை தோணியைத் தாங்கி வலித்துச் செல்ல வேண்டுமே! சலமோனுடன் பேதுரு ஜோடி சேர்ந்துவிட்டால், என்றாவது ஒருநாள் சலமோனின் தோணியை வலித்துக்கொண்டு கௌதாரி முனைவரை போய்விடுவார்கள். மறுநாள் இருவருக்கும் நிச்சயமாகக் கண்கள் கிறங்கிப் போகும்! தலைமுழுக வேண்டும் போலத் தோன்றும். கள்ளுக் கடையிலிருந்து வரும்போது தலை யில் எண்ணெயும், கையில் போத்தலும் தாங்கிக்கொண்டே வந்து சேர்வார்கள். சலமோனுடன் கழித்துவிட்ட இன்பமயமான நாட்களைப் பேதுருவால் எப்போதுமே மறந்துவிட முடியவில்லை. இத்தனை மகிழ்வுக்குரிய நண்பன் சலமோன் ஆசினீர் தோணியின் விலையைக் கேட்கிறான். தன் உதிரத்தில் பிறந்த கத்தறீனுக்குப் பெயர் சூட்டித் தலை தொட்டுக் கும்பாவாக வருவது பவுசுக் குறைவென்று எல்லோருமே கருதிவிட்டபோது, சலமோன் வந்து கும்பாவாகி பேதுருவின் பெரு மதிப்பைப் பேணினான். அவன் தோணியின் விலையைக் கேட்கிறான். உள்ளத்தை மறைத்துவிடப் பேதுருவுக்கு முடியவேயில்லை.

‘மூண்டு பவுண்தான் குடுத்தனான். மிச்சம் அந்தச் சட்டம்பிப் பொடியன் போட்டு வாங்கித் தந்தது கும்பா!’

எந்தவித ஒளிவு மறைவுமின்றிப் பேதுரு கூறுவிட்டான். ‘கும்பா, நான் சொல்லிறனெண்டு குறைநினையாதை. அந்த சட்டம்பியிட்டை, நீ இப்படியெல்லாம் வேண்டியது சரியில்லை.ஏதோ யோசிச்சுச் செய். குமர்ப்பிள்ளையை வைச்சிருக்கிறனி.’

மிகவும் நாசூக்காகச் சலமோன் பேசிவிட்டான். அதில் அவனுக்கொரு திருப்தி. நீண்ட நேரம் பேதுருவோ, சலமோனோ பேசவில்லை. சலமோனின் சந்தி வந்தது. அவன் போய் விட்டான். பேதுருவின் தலையில் பெரியதொரு பாரத்தைத் ‘தொம்’ என்று போட்டுவிட்டு சலமோன் போய் விட்டான். அனுபவதித்ததெல்லாம் பேதுரு!

தோணியின் அணியப்புறமாக ஒரு கோணம் அமுக்கிவிடப்பட்டு, முன்கோணச் சாக்குக்கிடக்கிறது. மழைக்கும் கூதலுக்கும், வெயிலுக்கும் அதுதான் பேதுருவுக்குத் துணைவனாக நிற்கிறது. அது தொலைவில் கிடக்கிறது. சமதரையிலே கிடக்கும் பல்லாங் குழிகளுக்குள் மழைத் துளி விழுந்து ஓசை கிளப்புவதைப் போல, கடலின் பரப்புக்கு மேல் அந்த ஓசை பரந்து கேட்கிறது. வெகு தொலைவுக்கப்பால் தெரிந்த வெளிச்சக் கட்டையின் ஒளிக்கீறல் மழைத் திரைக்கப்பால் மறைந்து போயிற்று. தொலைவிலிருந்த காற்றிலே கரைந்து வருவது கடற் புறாக்களின் கதறல், மழைத் துளிகளின் மிருகத்திரையைக் கிழித்துக் கொண்டு அவை எங்கோ பறந்து செல்கின்றன.

அம்மிக்கொண்டு கிடந்த தூண்டி இப்போது சிறிது நகரத் தொடங்கு கிறது. வலக் கரத்தையும், தலையையும் முன் நீட்டிக்கொண்டு பேதுரு தூணடியைத் தைக்க வைக்கத் தயாராகின்றான். அட! அதற்குள் அது மறுபடியும் நிதானமாக அமுக்கிக்கொண்டு நின்றுவிட்டது. பேதுரு நாக்கை மேல்முரசு விளிம்பில் படியவைத்துக் கீழ் நோக்கி விடுவித்துப் பொச்சுக் கொட்டி கொள்கிறான்.

தலையிலிருந்து மழைநீர் சொட்டி வழிகிறது. கீழ்வானக் கோடியிலே மின்னல் கோடிட்டு விளையாடுகிறது. அதன் ஒளியிலே தூண்டிக் கயிறு வெகுதூரம்வரை நீண்டு நிமிர்ந்து நிற்பது தெளிவாகத் தெரிகிறது. நிச்சயம் அது ஒரு பெருமீனாகத்தான் இருக்க வேண்டும்.

பேதுருவின் முதுகுக்குப்பின்னால் மழைத்துளிகளின் ஓசையைக் கிழித்துக்கொண்டு சலசலப்புக் கேட்கிறது. பேதுரு திரும்புகிறான். சற்றுத் தூரத்திற்கப்பால் பெரு முரலொன்று பாய்ந்து கொண்டு வருகின்றது. அது நேராகப் பேதுருவை நோக்கியே வருகின்றது.

இன்னும் இரண்டொரு பாய்ச்சலில் அது பேதுருவின் முதுகிலே ஓய்வு கண்டு விடப் போகின்றது. அதன் கூர்மையான அலகு முதுகை ஊடறுத்துக் கொண்டு நெஞ்சுவரை போகவல்லது. இப்படிச் செத்துப் போனவர்களைப் பேதுரு நேரிலேயே பார்த்திருக்கிறான். க்ஷண வேளைக்குள் பேதுரு நிதானித்துக் கொள்கிறான். மடக்கென மடங்கிச் சுருண்டுத் தோணி வங்குக்குள் சரிந்து போகிறான். பேதுருவின் உயிர் மயிரிழையில் தப்பிவிட்டது. முரல் அவன் முதுகுக்கு மேலால் மருவிக் கொண்டு தோணிக்குக் குறுக்காகப் பாய்ந்து, கிழக்காக விழுந்து மறுபடியும் பாய்ந்து செல்கிறது.

பேதுரு நிமிர்ந்து பார்க்கிறான்.

ஆ! அந்த மீன் எத்தனை பெரியது!

அந்தப் பெருமீனுக்குப் பயந்து ஒடுங்கிய சிறிய தேரை மீன்கள் துள்ளிப் பாய்ந்து தோணி வங்கில் அடித்து மோதிக்கொண்டு, கடலிற் புரண்டு போவது நன்றாகத் தெரிகிறது. இந்த மீன்களின் பயந்தாங் கொள்ளித் தனத்தைப் பார்த்துப் பேதுரு மனத்திற்குள் சிரித்துக் கொள்கிறான்.

மழை தேய்ந்து கொண்டுவிட்டது. தன் இறகுகளை மடக்கிக் கொண்டு அது கடற் பரப்புக்கு மேல் போவது மிகவும் ஒழுங்குபடத் தெரிகின்றது. அது செல்லும் ஓசை தொலையாகிச் செத்து மடிந்து போகிறது.

நீண்டதொரு பெருமூச்சு, சுவாச உறுப்புக்களை வீங்க வைத்துக் கொண்டு வருகின்றது.

‘ம்… ராசாத்தி… ஒருக்கா ‘

அம்மிப்போய் நின்றுவிட்ட அந்த மீனை உற்சாகப்படுத்த முயற்சி நடக்கிறது. கயிறு மெது மெதுவாகப் பின்னோக்கி நகர்த்தப்படுகின்றது. எடுத்த இரை பறிக்கப்படுகிறது என்று மீனுக்குத் தெரிய வைத்து விட்டால், இரையை அப்படியே மென்று விழுங்கிவிட்டு மீன் திருப்தி யுடன் உறை நோக்கிப் போகத் தொடங்கிவிடும் என்பது பேதுருவின் நினைப்பு. கடலின் அடியில் தாளம் புற்களுக்கு நடுவே வெள்ளையாகக் கிடக்கும் இறால் பொருத்திய தூண்டித் தலைப்பும் அதைக் கவ்வி நிற்கும் வளைமீனும் அவன் கண்களுக்குத் தெரிகின்றன. மிகவும் மிருதுவான அந்த இரைத் தலைப்பை ஏன் இன்னும் தின்ன மறுக்கிறது? என்பது போன்ற விநோதமான கேள்வி ஒன்று மனதுக்குள் முளைத்து நிற்கிறது.

‘ம்… ராசாத்தி…இழெணை இழு…’ கயிற்றை மேலும் கீழுமாகத் தாழ்த்தி உயர்த்திக் கொண்டே மீனை உற்சாகப்படுத்துகிறான். இந்த உற்சாக உணர்வுக்கு மீன் அடி பணிந்து விட்டதோ?

கயிறு இலேசாகப் பின்னோக்கிக் கனத்துச் சுண்டித் துடிக்கிறது.

பேதுருவுக்கு இப்போது நெஞ்சு பலமாக அடித்துக் கொள்கிறது. விட்டுக் கொடுப்பதற்காகக் கயிற்றைத் தயாராக உருவி வைத்துக் கொண்டிருக்கிறான். இக்காலத்துத் தங்கூசி என்றால் தானாகவே வழுக்கி நகர்ந்து கொள்ளும். இது பழைய கயிறு. கன்னங்கறுத்த வைரித்த முறுக்கு நூல்! அது விறைப்பாக நிற்கிறது. ஏன்தான் இந்தப் பழைய கயிற்றுடன் அவன் மாரடிக்கிறானோ? எல்லாத் தூண்டிக் காரரும் நவீன தங்கூசி நூலை ஏற்றுக்கொள்ள பேதுருவுக்கு மட்டும் பழமையின் மேல் இத்தனை ஆசை. இந்தக் கயிற்றில் எத்தனை மீன்களை அவன் பிடித்திருக்கிறான். இப்போது மட்டும் என்ன வந்துவிட்டது!

மீனுக்கு வெறி வந்துவிட்டது.

பேதுரு மீண்டும் தன்னை நிலைப்படுத்திக் கொள்கிறான். பலங் கொண்ட பசுவொன்று புல்லை மோப்பம் பிடித்துப் பலங்கொண்டு இழுத்துச் செல்வதைப் போன்று தான் உணர்வு தெரிகின்றது.

கைகளை முன் நீட்டியபடி இருந்தவன் வெடுக்கென்று தூண்டியைத் தைக்க வைக்கிறான். எங்கோ ஒரு கல்லு மலையிற் சிக்கிவிட்டது போன்ற நிலைக்குப்பின், கயிறு தன்னாலேயே இழுபட்டுச் செல்கிறது. கைகளோடு கயிறு உராய்ந்து கொண்டு போகும் ஓசையும் கேட்கிறது.

‘ஓமோம்! சும்மா கிட ராசாத்தி…’

அவன் பலமாகவே பேசிக்கொள்கிறான். நிர்மானுஷ்யமான அந்தப் பிரதேசத்தில் இப்படிப் பேசிக்கொள்வதில் என்ன வெட்கமிருக்கிறது?

பேதுரு இப்போது மீனோடு போராடத் தொடங்கிவிட்டான். அது அங்குமிங்குமாக ஓடியோடி அவனுடன் கண்ணாமூச்சி விளையாடு கின்றது. ஆனாலும் அவன் தன் பக்கமாகவே மீனைத் திருப்பி விட்டான். அந்தச் சண்டியன் மீன் அடங்கி வருகிறது.

பாதிக்குமேல் கயிறு வலிக்கப்பட்டுவிட்டது. மிகவும் உக்கிரத்தோடு போராடியும் அதனால் மனிதனை வெல்ல முடியவில்லை. இரண்டு தடவைகளில் மீன் மேலெழுந்து புரண்டு நெளிகிறது. அதன் வெளித் தோற்றம் இருட்டில் தெரிகிறது. வெள்ளிக் காசு போலக் கெவரடித்து மினுங்கும் நீர்க்கிழிப்பின் நடுவே, மீன் களைத்துப் போய்ப் புரண்டு நெளிந்து வருகின்றது. ஆனாலும் அதற்கு வெறிதான் பிடித்திருக்கிறது.

இப்படி வெறிபிடித்த எத்தனை அப்பன் மீன்களை அவன் பார்த்திருக் கிறான்; மடக்கியிருக்கிறான். கடந்த வருடம் நத்தார்ப் பண்டிகைக்கு முதல் நாளும் இப்படி ஒரு திருக்கை அகப்பட்டுக்கொண்டு தனது அசுர பலத்தையெல்லாம் காட்டித்தான் தீர்த்தது. இருந்தும் பேதுருவை வென்றுவிட அதனால் முடியவில்லை. கடைசியில் தனது அயோக்கியத் தனத்தையும் அது காட்டியது. வாலை வளைத்துத் திருப்பி தனது வலிய முள்ளைப் பேதுருவின் மணிக்கட்டில் பாயவைத்துவிட்டது.

இதனால் பேதுரு எத்தனை காலம் சீக்காகப் படுத்திருந்தான்.

பேதுரு தண்ணீருக்கு மேலாக மீனைத் தூக்கி எடுக்கும்போது, அது தன் கடைசிப் பலத்தையெல்லாம் காட்டித் தீர்த்தது. இந்தக் கடைசி வேளை தோற்றுப் போய்விட்டால் வாழ்க்கையே தோல்விதான். என்ன செய்யலாம்? பேதுரு அனுபவசாலியாயிற்றே!

அணியப்புறமாக மீனை இழுத்துப் போட்டு விட்டுப் பேதுரு கம்பீரமாக நிமிர்ந்து முதுகை நேர்ப்படுத்திக் கொண்டு பெருமையோடு உடலைச் சுற்றிப் பார்க்கிறான். இப்போது கூதலோ, குளிரோ எதுவுமேயில்லை .

மீன் சிறகடித்துத் தோணியைத் தாக்கும் ஓசை மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. வெளியுலகப் பவன அமுக்கத்தைத் தாங்க முடியாது. அதன் சுவாசிப்பைப் பொருமிப்புடைப்பதனால் அது துடித்துத் துடித்துச் சாகிறதோ!

தலையைத் தாழ்த்திப் பேதுரு ஒரு தடவை மீனைப் பார்த்துக் கொண்டு ‘விளை மீன்தானா?’ என்ற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள் கிறான். இரைத் தலைப்பை மீன்கள் தொட்டபோதே மீன்களின் இனத்தைக் கண்டுவிட வல்ல பேதுருவை இந்த விளைமீன் மட்டும் ஏமாற்றி விட்டது. விளை மீனாகத்தான் இருக்க வேண்டுமென்று அவன் நினைக்கக்கூட இல்லை.

பேதுரு கூடையிலிருந்து மடிப்பெட்டியைத் திறந்து ஒரு சுருட்டை எடுத்து வாயில் வைத்துக்கொண்டு நெருப்புப் பெட்டியில் குச்சைக் கிழிக்கிறான். அது மின்னி வெடித்து மங்கிப் போகிறது. ஒன்று, இரண்டு, மூன்றென்று, குச்சி மருந்துகள் சிதைந்து போகின்றன. கடைசியாக ஒன்று பற்றிக் கொள்கிறது.

***

கீழ்வானம் வெளுத்து வரும்போது பேதுருவின் தோணி கரைப்புறத்தை – நோக்கி நகர்ந்து வருகிறது. வங்கின் நடுவே மரக்கோலை ஊன்றித் தனது வேட்டியை எடுத்துப் பாயாக உயரக் கட்டி வேட்டியின் தலைப்புக்களைப் பிடித்தபடி பேதுரு ஆசனத்தட்டில் உட்கார்ந்து இருக்கிறான். அச்சுக்கானுக்குப் பதிலாகப் பாய்ச் சீலையைத்தான் சரித்து வளைத்து, தோணிக்கு வழிகாட்ட வேண்டயிருக்கிறது.

உதயகால ஒளிப்படர்வுக்கு முன்னால் தோற்றுப்போய்ச் செத்துக் கொண்டிருக்கும் பட்டணத்து வெளிச்சக் கீறல்கள் சமீபித்துக்கொண்டு வருகின்றன. இன்று இரவு நடுஜாமத்தில் திருச்சுதன் மனிதனாக வருகிறார். இடையர்கள் மத்தியில் தோன்றும் அவரை ஆரவாரித்து வரவேற்க, இன்றே ஊருக்குள் மத்தாப்புகள் வெடிக்கத் தொடங்கி விட்டன.

ஊர்க்கரையில் இருந்து விடப்படும் மத்தாப்பு வாணங்களின் வர்ணஜாலங்கள் பேதுருவின் கண்களுக்கு அழகாக இருக்கின்றன.

அதை ரசித்து மகிழ்வது சிறு பிள்ளைத்தனந்தான். ஆனாலும் கிழவன் ரசித்துத்தான் மகிழ்கிறான், யாரோ சிறுவர்கள் இப்படி மத்தாப்பு விடுகிறார்கள். அந்தச் சிறுவர் கூட்டம் பேதுருவின் மனக்கண்ணுக்குத் தெரிகிறது.

துன்ப நினைவுகள் அவனுக்கு முன்னால் அணிவகுத்து வருகின்றன. அவைகள் மிகவும் கொடுமையானவை. அலெக்ஸாண்டர் துண்டிச் சுடுகாட்டு மடத்தில் தூக்குப் போட்டுக் கொண்டுதான் செத்துப் போனானோ! அவன் முகத்தில் ஏன் அந்த இரத்தக் கண்டல்!

பேதுருவின் மகளை அந்தத் தாழ்ந்த சாதிக்காரச் சட்டம்பி கட்டிக் கொண்டு வாழும்நிலைக்கு இடந்தராமல் அவன் அடித்துக் கொல்லப் பட்டிருக்கலாம்! பாவம் அவன் மட்டும் பேதுருவுக்கு ஆசினீர்த் தோணி வாங்கிக் கொடுத்துத் தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இருந்திருந்தால்!

கன்னியாகக் கிடந்த மகள் கத்தறீன் ஒருநாள் பிரசவித்துவிட்ட காட்சி…

உலகமறியாத அந்தச் சின்னக் குழந்தையின் கமறல்! அதற்குப்பின்…? கொலைகாரர்களான ஊரின் சம்மாட்டிகள் அவன் முன் வருகிறார்கள். இரவோடிரவாக அந்தப் பெண்கள் கூடி கத்தறீனைக் கன்னியாகவே வைத்துவிட்டார்களாம்! கொலைகாரிகள்!

பைத்தியமாகிச் செத்துப்போய்விட்ட அருமை மகள் கத்தறீன் அவனுக்கு முன்னால் சடைவிரி கோலமாக நிற்கிறாள். அவளின் மார்பை மூடிக் கிடக்கும் சட்டையைத் தாய்மையின் ஊற்று தெப்பமாக நனைய வைத்திருக்கிறது.

ஓட்டை விழுந்த பல்லும் அரும்பு மீசையுமாக தூக்குக் கயிற்றுக்குள் தலையைச் செருகிக்கொண்டு அலெக்ஸாண்டர் நிற்கிறான்.

பாயோடு சேர்த்துச் சுருட்டப்பட்ட நிலையிலே ஒரு சடலம் தோணி யொன்றுக்குள் வைத்துக் கடலை நோக்கி இழுத்துச் செல்லப் படுகிறது.

மறுநாள் ஊரெல்லாம் நத்தார்ப் பண்டிகையைக் கொண்டாடிய போது பச்சையுடம்போடு கத்தறீனும், சொல்லிக்கொள்ளவே முடியாத நிலையில் அவனும்….

துர்ப்பாக்கியமாக அந்த நாட்களை மறைத்துக் கொண்டு காலப் படுக்கைக்கு எத்தனையோ ஆயிரம் நாட்கள் போய்விட்டன. ஆனாலும் அந்த நாட்கள்…

சாதியின் கறையைத் துடைப்பதற்காக அந்தச் சாமவேளையில் பாயால் சுருட்டப்பட்ட அந்த முண்டத்தைக் கடலை நோக்கி எடுத்துச் சென்ற அந்த மனிதர்கள், ஊரின் முன்னோடிகளாக நிற்கும் கொடுமை யைப் பேதுரு நினைத்துப் பார்க்கிறான். மனசு கருவிக்கொள்கிறது.

‘பத்தகா உறுவா, பத்தகா உறுவா, பயினொரு உறுவா, தார் பயினொரு உறுவா, பத்தமுக்கா உறுவா’

‘பயினொரு உறுவா, பயினோரரை உறுவா’

கடற்கரையிலே அமளி துமளியாக விற்பனை நடக்கிறது. படகுக்காரர்கள் மீன் மீனாக விற்றுத் தள்ளுகிறார்கள். பாச்சு வலைக்காரர்களும் விடுவலைக்காரர்களும் குறைந்தவர்களில்லை. களங்கண்டிக்காரர்களோ… அப்பாடா!

பேதுரு கூடையோடு தனித்து நிற்கிறான்.

இம்முறை நத்தார்ப் பண்டிகையை மிகவும் விசேஷமான எடுபிடி களுடன் நடத்துவதற்கு ஊரில் ஏற்பாடு. நாத்திகர்கள் பரவி, ‘கர்த்தர் என்றொருவர் மனிதனாகவே பிறக்கவில்லை’ என்று நாத்தடிக்கக் கூறுகிறார்கள் என்பதற்காக, அதற்கு எதிர்ப்பிரசாரத்திற்கு, மறுநாள் இரவு நாட்டுக்கூத்தும் கூட!

முக்கியஸ்தர்கள் பொதுத் தண்டலுக்காக மீன் சேர்க்க வந்திருக் கிறார்கள். பேதுருவின் நினைவிலே அவர்களில் பலர் கொலைக்காரர்கள்!

நிரையிலே பொதுத் தண்டல் கூடை நீட்டப்பட்டு வருகிறது. யேசுவின் திருநாமத்தினாலே கூடை நிறைந்து கொண்டு வருகிறது. சம்மாட்டிகள் எல்லாரும் பார்த்தும் பாராமலும் அள்ளிக் கொடுக் கிறார்கள்.

தண்டல்காரர்கள் பேதுருவைச் சமீபித்து வருகிறார்கள். பேதுருவுக்கு எது செய்யவும் தெரியாத நிலை. மனச் சலனத்தோடு அவன் தன் கூடையைப் பார்க்கிறான். கூடையின் அடிப்படையாக்கத்தை நிரப்பிய படி ஒரே ஒரு மீன் சண்டித்தனம் செய்த அந்த விளை மீன்தான்.

கூடை பேதுருவுக்கு நேராக நீட்டப்படுகிறது. கொலைக்காரர்கள் கூடையை நீட்டுகிறார்கள்.

‘கடவுளுக்காகவோ, கொலைகாரர்களுக்காகவோ?’ இந்த ஒரே யொரு கேள்விதான் முன்னே நிற்கிறது. கூடைக்குள் கையை வைத்து விளைமீனை அநாயாசமாகத் தூக்கிப் பொதுக் கூடைக்குள் வீசினான் பேதுரு.

மனத்திலே தெளிவுதான் இருந்தது.

பொதுத்தண்டல் மீன் விற்பனைக்காகக் கொட்டப்படுகிறது. மீனை வளைத்து நிற்கும் கூட்டத்தோடு பேதுருவும் நிற்கிறான்.

அவன் அந்த மீன் குவியலுக்குள் தனது சண்டியன் மீனையே அடையாளமாகப் பார்க்கிறான். அதைப்போல உருவத்தில் எத்தனையோ கிடக்கின்றன. ஆனாலும் அதை அவனால் அடையாளம் காணமுடிகிறது.

நீண்ட நேரப் பிரசவ வேதனைக்குப் பின் பிறந்த குழந்தை அது. அடையாளமா தெரியாமல் போய்விடும்?

பேதுருவின் கண்களிலே நீர் முட்டி நிற்கிறது. அந்த மீனுக்காக அவன் அனுதாபப்படுகிறானா? கூறல் தொடங்க வில்லை.

இத்தனை தொகை மீனுக்குச் சரியான குறிப்பிலிருந்து தான் முதற் கூறல் தொடங்க வேண்டும். கூறல்காரி சிறிசான மீன் ஒன்றால் கும்பலை விரிவுபடுத்திக் கொள்கிறாள்.

கர்த்தருக்காகக் கொடுக்கப்பட்டவை அத்தனையும் பெருமீன்கள்! கூட்டத்தில் அண்ணாவியாரின் தலை நீளமாகத் தெரிகிறது. அவனுக்குப் பெயர் சவிரியான்.

அண்ணாவியாருக்கு ஒரு மீன் கொடு!’ இப்படி ஒரு குரல்! ‘அண்ணாவியார் நீங்க ஒன்று எடுங்க!’ இப்படி வேறொரு குரல். அண்ணாவியார் குனிந்து ஒரு மீனை எடுக்கிறார். அந்த மீன்… அது பேதுருவின் சண்டியன் மீன். அவன் புனித யேசுவுக்காகக் கொடுத்த ஒரே ஒரு காணிக்கை!

பேதுருவின் நெஞ்சு தீய்ந்து போகிறது. பேதுருவுக்கு அண்ணாவி யாக நிற்கும் சவிரியானும் கொலைகாரனே!

பேதுருவின் உடல் வெடவெடக்கிறது. ‘தெய்வத்தின் பரம்பரையில் சவிரியானுமா?’ இப்படி ஒரு கேள்வி பேதுருவுக்கு எழவில்லை. அது எழ நேரமுமில்லை.

சுழற்றி வந்த கிறுக்கத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் பேதுரு சோர்ந்து போகிறான்.

பேதுருவின் உடல் மீன் குவியலை நோக்கிச் சரிந்து வருகிறது. மரணச் சரிவுக்கு அவன் போய்விட்டானா? உலகத்தின் அந்தத்திற்கப்பால் கர்த்தர் பேதுருவின் வரவுக்காகக் காத்திருக்கிறாரா?

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *