இன்று மாசி மகம், சமுத்திர தீர்த்தவாரி உற்சவத்துக்கு, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோயில், ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா பகுதிகளை சார்ந்த சிவ, வைஷ்ணவ, அம்மன் கோயில்களின் சாமிகள் ஒவ்வொன்றாக கிள்ளை கடற்கரைக்கு வந்து கொண்டிருந்தது.
இந்த கடலாடும் தீர்த்தம் மீனவர்களுக்காக, மீனவர்களை கெளரவிக்கும் பொருட்டு காலங்காலமாக நடக்கின்றது. கடலூர் தேவனாம்பட்டினம், பரங்கிப்பேட்டை, கிள்ளை, பூம்புகார், நாகப்பட்டினம் என்று ஆங்காங்கே இந்த மாசிமகம் உற்சவம் களைகட்டும்.
கிள்ளையில் ஏராளமான கூட்டம், தொன்று தொட்டு வரும் கலாச்சாரத்தில், பண்பாட்டின் பழமையில், பக்தி பரவசத்தில், பொழுது போக்கும் உல்லாசத்தில், காதல் சல்லாபத்தில், இளைஞர்களாலும் முதியவர்களாலும் மீனவர்களாலும் களைகட்டி இருந்தது கடற்கரை.
மீனவ சமுதாயம் அவரவர்களின் இஷ்டதெய்வத்துக்கு மண்டகபடி பூஜையை வெகுவிமர்சையாக நடத்துவார்கள். ‘ஊரெல்லாம் கல்யாணம் மாரெல்லாம் சந்தனம்’, என்கிற வகையில் கழுத்தில் மாலையை போட்டுக்கொண்டு கையிலும் மார்பிலும் சந்தனத்தை பூசிக்கொண்டு குடும்பமாக சேர்ந்து சாமி கும்பிடும் காட்சி பார்க்க பரவசமாக இருக்கும்.
அப்படித்தான் கயல்விழி குடும்பமும் ஈடுப்பட்டிருந்தது. கயல்விழியை பார்த்த கமலக்கண்ணன் தன் சிந்தையை இழந்தான். காதலியை வானத்து தேவதை, வனதேவதை, பொற்சிலை என்று வர்ணிக்கும் நண்பர்களை அவன் கிண்டல் செய்திருக்கிறான். இதோ இங்கிருக்கும் இந்த தேவதையை என்னவென்று சொல்வது.? எப்படி வர்ணிப்பாது, வர்ணனையோடு கடலோர கவிதையா? கடல் தேவதையா.? கடல் கன்னியா? மச்சக்கன்னியா? இல்லை மனம்கவர்ந்த கள்ளியா? யார் இவள்?
அவள் பார்க்கும் ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புதிய அத்தியாயத்துடன் மனசு கவிதை பாடியது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நண்பன் கிள்ளைக்கு கூப்பிடும் போதெல்லாம் தே..தோ.. என்று போக்கு காட்டினான். அறிவழகன் கட்டாயப் படுத்தும் போது உன் ஊருக்கு வந்தால் என்னடா தருவே என்று வீம்புக்கு கேட்கிற போது கிண்டலாக பொண்ணு தரேன்டா என்பான். இந்த வருடம் திடீர் யோசனையாக கிள்ளைக்கு செல்வதென்று முடிவெடுத்து, அறிவழகனுக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்று வந்தவன், வீடு தெரியாமல், வாசல் புரியாமல் கடற்கரை கூட்டத்தில் தேடினான்.
காலேஜுக்கு வர்ற பெண்களை பார்க்கிற போது எரிச்சல் எரிச்சலா வருது. பணத்திமிறுல, அழகு செருக்கில, தான் என்கிற அகம்பவத்துல மேக்கப்பை பூசி செயற்கை (அலங்)கோலத்துடன், மேனர்ஸில்லா நாகரீகத்துல சுற்றித் திரியறதைப் பார்த்தால் நல்லாவா இருக்கு.?
உன் ஆளும் இந்தக் கூட்டத்தில் தானே இருக்கிறாள்.? குத்தம் சொல்றே.
என் மனம் கவர்ந்தவள் என்னைப் புரிந்தவள் ஊரில் இருக்கிறாள். முறைப்பெண் இருக்கிற போது திமிரா முறைக்கிற பொண்ணுங்க., இவளுங்களை யார் ஏறெடுத்துப் பார்ப்பார்.?
எப்பவோ அறிவழகன் சொன்னது, ஆம் உண்மை தான் பெண்களின் அழகு என்பது அமைதியிலும், அடக்கத்திலும் தான் அடங்கி இருக்கிறது. இயற்கையின் அழகோடு ஒன்றி இருக்கும் இவளை பார்ப்பவன் இன்னொருத்தியை ஏறெடுத்து பார்க்க மாட்டான்.
தன்னை, வைத்தக் கண் வாங்காமல் ஒருவன் பார்க்கும் பார்வையை எதிர்க்கொள்ளத் துணியாமல், நாணத்தால் முகம் கவிழ்ந்தாள் கயல்விழி. கூட்டத்தினர் பார்த்தால் தவறாக நினைக்க கூடும் என்று அஞ்சி சாதுர்யமாக பார்த்தவன், அவளும் அவ்வாறே பார்ப்பதை உணர்ந்தான். பாரம் இறக்கிய ஓடமாக மனம் அசைந்து ஆடியது. உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே., விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே என்ற பாடலின் வரிகள் அன்று அனுபவங்களாக உருவெடுத்தன. பார்வைகள் நேர் கொண்டு மோதும் போது அவள் உதடுகளை சுழித்து புன்னகையாக மலர்த்திய போது மனம் றெக்கைக்கட்டி பறந்தது. இன்ப உணர்வுகள் கடலலைகளாய் ஆர்ப்பரித்தன.
எங்கே போய் தொலைந்தான் இந்த அறிவழகன். மாசி மகத்துக்கு, கிள்ளைக்கு வாடா என்று கூப்பிட்டு விட்டு இவன் என்ன ஆனான்.?மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள நண்பனை தேடினான்.
கூட்டத்திற்குள் புகுந்து கயல்விழி செல்லுமிடமெல்லாம் இவனும் பின் தொடர்ந்தான். ஓரு கட்டத்தில் துணிந்து அவளின் கையை பிடிக்க அவள் பதட்டத்துடன் வெடுக்கென்று இழுத்துக் கொண்டு உதறினாள். அவளின் செயல் ‘வெட்கம் வேண்டாம் எனவும் விருப்பம் வேண்டும் எனவும்’ உணர்த்துவது போல இருந்தது. கை தொட்ட ஸ்பரிசம் தேவாமிர்தத்தை பருகியது போல இன்ப சாகரத்தில் மிதந்தான்.
பார்வையின் போதை குறையுமுன் அவளிடம் பேச எத்தணித்த கமலக்கண்ணன் அடுத்த சிறிது நேர சந்தர்ப்பத்தில் எதிர்முகமாக சென்று அவளை திடுக்கிட செய்தான்.
பயம் பார்வையில் தெரிய, இதயம் பட படக்க, இங்க பாருங்க வெறிக்க வெறிக்க பார்க்கிறதும், இப்படி வழி மறித்து நிற்கிறதும் ஒழுங்கில்லை, என் வீட்டார்கள் பார்த்தார்களேயானால் கட்டி வைத்து விடுவார்கள் என்றாள். அவளின் மருண்ட விழிகள் ரெண்டும் துள்ளி விளையாடும் கெண்டை மீன்களாக தெரிந்தன.
உன்னைப் பற்றி என் வீட்டில் சொன்னால் கூட உன்னையும் தான் கட்டி வைப்பார்கள் என்றான்.
அவள் விழித்தாள். நா..நான், எ… எ.ன்.ன., பண்ணினேன் என்னை கட்டி வைக்க.,? நெஞ்சை நிமிர்த்தி, பார்வையை உயர்த்தி கேட்ட போது அவளின் வெகுளித்தனம் உச்சத்தில் நின்றது.
என் உள்ளத்தை கொள்ளை கொண்ட குற்றத்திற்காக உன்னை எனக்கு கட்டி வைத்து விடுவார்கள் என்ற கண்ணன் மாங்கல்யம் சூட்டுவது போல சைகை காட்டினான்.
ரொம்ப அழகாத்தான் பேசுறீங்க..
ம்.. நீ அழகா இருக்கே அதனாலே பேச்சும் அழகா வருது.
வரும், வரும் வழியை விடுங்கள் நான் போகனும், பூஜைக்கு தேடுவார்கள் என்ற பேச்சின் கொஞ்சல் அவனுக்கு, அவள் தன் காதலை பூடகமாக உணர்த்துவதாக தோன்றியது.
புன்னகைத்தவன், வாய் வழி கேட்குது, ஆனால் கால்கள் நகரலையே., உன் பேர் என்ன.? என்று கேட்டான்.
ஏய். . புள்ள கயல்விழி., அங்க என்ன பராக்கு பார்த்திட்டு நிக்கிறே, வா புள்ள இங்கிட்டு என்ற குரல் உரக்க கூவவும், அதான் என் பேரு என்று சொல்லி வந்த தடம் திரும்பி நடந்து விரைந்தாள்.
கயல்விழி அற்புதமான பேரு, அவளின் அலை பாயும் கண்ணுக்கு பொருத்தமாக அமைந்த பேரு, இந்த கமலக்கண்ணனுக்கும் பொருத்தமான பேரும்கூட. . என்று நினைத்து அகமகிழ்ந்தான்.
நாதஸ்வரம் மேள தாளங்கள் ஒலிக்க கடலாடும் சந்தோஷத்தில் உற்சாகம் கொண்ட அனைத்து மூர்த்தங்களும் ஆனந்தமாக காட்சி அளித்தது. உற்சவ சிலையை அப்படியே அச்சு பிறழாமல் வார்த்தெடுத்த சிறிய அளவிலான மூர்த்தத்தை அஸ்த்தராஜர் என்பர். இதை தனி ஆளாக கையிலும் தோளிலுமாக எடுத்துச் செல்லலாம். தீர்த்தவாரியின் போது அதற்கு சகல திரவியங்களாலும் திருமஞ்சனம் செய்து, நீர் நிலைகளில் மூழ்கச்செய்வார்கள். அப்படி செய்யும் அந்த தருணத்தில் குழுமியிருக்கும் பக்தர்கள் நீராடி கர்மபலன்களை அடைவதுண்டு.
கடலின் இடுப்பளவு ஆழத்தில் நின்று கொண்டு அலைகளின் தள்ளுதலை சமாளித்து நிற்கும் பெண்களின் கூட்டத்தில் தனித்துவமாக கண்கூசும் சூரிய ஒளியை தமது புருவத்தால் எதிர்கொண்டு, சமாளிக்க முடியாமல் முகத்தை சுளித்து கயல்விழி நிற்பதை பார்க்க, கண்ணனுக்கு வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருந்தது. மீனவ குடும்பத்தில் இப்படி ஒரு அழகு தேவதையா.?
பலத்த பக்தி கோஷங்களுக்கிடையில் கும்பலோடு ஒருத்தியாய் கயல்விழியும் சட்டென்று தலை மூழ்கி எழுந்தாள். இறுக மூடிய உள்ளங்கையை திறந்து நனைந்த மஞ்சள் பொடியை இருகைக் கொண்டு குழைத்து உதட்டால் வாய்மூடி முகத்தில் பூசிக்கொண்டு திரும்பவும் குனிந்து தலை மூழ்கி எழுந்தாள்.
அவசரகதியில் கரைஏறி நனைந்த பாவாடை தாவணியை போட்டிருந்த நிலையில் பிழிந்தாள். அந்நிலையில் பார்ப்பது நாகரீகமில்லையாயினும் தவிர்க்க முடியாத தாக்கத்தில் அவளை பார்த்தான். ஈரத்துணி உடலோடு உடலாக ஒட்டி மார்பும், வயிறும், இடையும், தொடையும், இருதொடைகளுக்கு இடையிலான பகுதியும் வடிவமைப்புக்களுடன் எடுப்பாக பளிச்சிட்டது. அவள் சங்கடமாக அவனை ஏறிட்டுப் பார்க்க, சட்டென தலைகுனிந்தான். குற்ற உணர்வு நீங்கி, நிமிர்ந்த போது கயல்விழி ஓட்டமும் நடையுமாக சிட்டாய் பறந்து கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் அவனது தோளை தொட்ட அறிவழகன் டேய் கண்ணா..! வாட் எ சர்ப்ரைஸ்..! நீ எப்படிடா இங்கே, ஆச்சரியமாக இருக்கு, எப்ப வந்தே என்று கேட்டான்.
நண்பனை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டாலும், பறந்து போன பச்சைக்கிளி இச்சை கொண்டு திரும்ப வருவாளா.? வரமாட்டாளா? எப்போ வருவாள்.? என கேள்விக் கனைகளால் அவன் முகம் கவலை அடைந்தது.
மண்டகப்படி பூஜையில், கோயில் சார்பாக மரியாதை செய்யும் போது, அறிவழகன், நண்பனை அழைத்து அவனுக்கு, தனக்கான மரியாதையை செய்யச் சொன்னதும் பூரித்துப் போனான் கமலக்கண்ணன். கேள்விக்குறியுடன் வியந்து விழித்தாள் கயல்விழி.
கிள்ளை சென்று திரும்பி வந்த கமலக்கண்ணன் உண்ண மறந்தான். உறக்கம் இழந்தான். எதிலும் ஈடுபாடு இல்லாமல் பிரக்ஜை இன்றி தவித்தான். இதயதுடிப்பு கயல், கயல் என்று உச்சரித்தது. கல்லூரி விடுமுறை ஆதலால் அறிவழகனை சந்தித்து அவளைப் பற்றிய விபரம் கூட அறிய முடியவில்லை. ஒரு வாரமாக அவஸ்தைப் பட்டவன் நேரில் பார்த்து பேச கிள்ளைக்கு சென்றான்.
கூட்டத்தின் சலசலப்பில் குதூகலமாக இருந்த காதல் தனித்து தேடும் போது காணாமல் போயிருந்தது. யாரை விசாரிப்பது.? எப்படி விசாரிப்பது.? எங்க வீட்டு ஆளுங்க பார்த்தால் கட்டிவைத்து விடுவார்கள். கயல்விழியின் எச்சரிக்கை உள்ளுக்குள் அள்ளு வாங்கியது. வெறிச்சோடிக் கிடந்த கடற்கரை வேதனை தந்தது. கல் வீடும் குடிசையாகவுமாக கலந்திருந்த தெருக்களில் ஆர்வத்துடன் இருமருங்கிலும் தேடிய கண்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
இனம் புரியா உணர்வுடன் மனம் உந்தும் எதிர்ப்பார்ப்புடன் வெளியில் வந்து ஆவலாக எட்டிப் பார்த்த கயல்விழிக்கு கண்ணனின் உருவம் சற்று தொலைவில் தெரிந்து மறைந்தது. கூப்பிட துணிந்தவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி தவித்தது.
மேலும் ஒரு வாரம் கழித்து கண்ணனை சந்தித்த அறிவழகன், முக வாட்டத்துக்கான காரணம் அறிந்ததும், மாட்டினியா.? உன்னை கைது பண்ணிய அந்த மஹாராணி யாரோ.? என்று கேட்டான்.
உன்னோட ஊர் தான். மகத்துக்கு போயிருந்த போது வலையில் விழுந்து விட்டேன். அழகான தேவதையடா அவள். பளிச்சென்று பாவாடை தாவணியில் வளைய வந்தவள் அந்த வெய்யலிலும் நிலவாய் குளிர்ந்தாள். கடல் அலையாய் நெளியும் கார்வண்ணக் கூந்தலின் ரெட்டை ஜடையும், காதோரம் சிறுகற்றை சிகை காற்றுவாக்கில் நெற்றியை வருடும் அழகும், பட படக்கும் கண் இமைகளும், மினுமினுக்கும் கன்னக்கதுப்புக்களும், முத்துப்பல் வரிசை நேர்த்தியும், நேச்சுரல் ரோஸ் வண்ண அதரங்களும், சங்கு கழுத்தும், வழுவழுப்பான வாளை மீன் உடலும், மூச்சுவிடும் போது ஏற்றம் இறக்கம் கொள்ளும் திரட்சியான நெஞ்சுக்கோளங்களும் என் இதயத்தை சுண்டி இழுத்தன.
அடப்பாவி இவ்வளவு பேசத்தெரியுமா உனக்கு.! எங்கேயடா கற்றாய் காதல் மொழியை. .! . .?
அவள் விழியில் கற்றுக் கொண்ட பாடம். அவள் எனக்கு ஏற்றவளா இல்லையா என்று நான் சிந்திக்கவில்லை, அவளுக்கு நான் பொருத்தமானவனா இல்லையா என்று யோசிக்க வில்லை, மனதை பறி கொடுத்து விட்டேன், நீ ., என் காதலை அவளிடம் எடுத்துச் சொல்லு.
அவள் யாரோ, எவளோ என்று எனக்குத் தெரியாது, இருந்தாலும் சொல்றேன், உனக்கு இருக்கிற வசதி வாய்ப்புக்கு மீன்வாசமெல்லாம் சரிப்பட்டு வராது. காதல் உன் கண்ணை மறைக்குது, உன்னை நீயே வருத்திக் கொள்ளாமல் அவளை மறந்து விடு.
மறக்கக் கூடியவளல்ல அவள், மணக்கக் கூடிய மகரந்தம் அவள், நீந்த தெரியாத நான் காதல் கடலில் தத்தளிக்கிறேன் கை கொடுடா தோஷா.,
சரிடா. . சொன்னால் கேட்க மாட்டாய், நான் கேட்டுத் தொலைக்கிறேன் அவள் பெயராவது தெரியுமா..?
ம். . தெரியும். கயல்விழி. என்னை கவர்ந்த காந்தக் கண்ணழகி.
துணுக்குற்ற அறிவழகன், அவள் உன்னை விரும்புறாளா.? ..?..! உனக்கு நன்றாக தெரியுமா.? அவளுக்கு முறைப்பையன் யாராவது இருந்து, அவனுக்காக அவள் இருந்தால், எல்லாம் உல்டாவா மாறிடும் என்றான்.
அப்படி எல்லாம் இருக்காது, இருந்தால் அவள் காதல் கனையை தொடுத்திருக்க மாட்டாள், கனிந்த வார்த்தையை பேசிருக்க மாட்டாள். ஒருவனையே நினைத்து அந்த ஒருவனையே ஏற்கும் குணமுடைய நங்கை அவள்.
இவ்வளவு தெளிவா பேசற நீ, நீயே அவளிடம் நேரிடையாக விருப்பதை கேட்டிருக்கலாமே, இடையில் நான் எதற்கு.?
போனேன்டா. . போய் அவளை பார்க்க முடியாமல், அவள் கிட்ட பேசமுடியாமல் வெ(து)ம்பிய உள்ளத்தில் வேதனை கொள்ள திரும்ப வந்து விட்டேன். நீ என் நண்பன், உள்ளூர்காரன், உதவி செய்வாய் என்ற நம்பிக்கையில் தான் உன்னிடம் கேட்கிறேன்.
அறிவழகனால் மறுத்து பேசமுடிய வில்லை. என் காதலி, அவனை காதலிக்கிறாளா என்று அறிய என்னையே தூது அனுப்புகிறான் நண்பன். விரக்தியுடன் சிரித்துக் கொண்டான்.
கயல்விழியிடம் பேசிய போது, நீ எனக்கு முறை மாமன் தான், ஆனால் நான் உன்னை கல்யாணம் கட்டிக்க ஆசைப் பட்டதில்லை மாமா, கமலக்கண்ணனைத்தான் கட்டிக்க ஆசைப்படறேன் என்றாள்.
இங்க பாரு கயல் அவன் ஒன்றும் நல்லவன் கிடையாது, செல்வ செழிப்பில் இருப்பவன், உன்னை ஏமாற்றி விடுவான், அவனை நம்பி மோசம் போகாதே. .
போ..மாமா நீ பொய் சொல்றே.. நீ நல்லவன் என்றால் உன் நண்பரும் நல்லவர் தானே, அப்படி இருப்பதால் தானே நீ கோயில் மரியாதையை கொடுக்கச் சொன்னாய்.? இல்லேன்னா விட்டுக் கொடுப்பியா.?
வாஸ்த்தவம் தாம், ஆனா அது வேறு. . இது வேறு. .
இரண்டு மனசும் ஒன்றாயிடுச்சு மாமா, கண்களால் பார்த்த போதும், அவர் எனது கைகளை பற்றிய போதும், மறைந்து நின்று நான் பார்க்கையில், காணாமல் பரிதவித்த அவரது தவிப்பிலும், என் மீதான அவர் காதலை என்னால் உணர முடிந்தது. காதல் உண்மை என்றால் அவர் என்னை நேசிப்பதும் நிஜம். நீ தான் மாமா, வீட்டில பேசி எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க சொல்லனும் என்றாள் கயல்விழி.
அதிர்ச்சியாக இருந்தது அறிவழகனுக்கு. எனக்காக பிறந்த ஒருத்தி, நான் உயிராக நேசிக்கும் ஒருத்தி, இன்னொருவனுடன் வாழ ஆசைப்படுகிறாள். அதுவும் நானே முந்நின்று நடத்த வேண்டுமாம். வேதனையுடன் சிரித்துக் கொண்டான்.