கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 23,532 
 
 

”என்னம்மா, குழந்தை! ஏன் அப்படிப் பார்க்கிறே?”

செம்பட்டை மாறாத தலையில் எண்ணெய் தடவிய கோலம். ஆறு வயதுதான் மதிக்கலாம். கவுனில் ஈர மண் படிந்த அழுக்கு. கருவிழிகள் குறுகுறுக்க, செப்புவாய் வியப்பிலே சற்றே அகன்றிருக்க, குழந்தை அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமலே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

”என்னம்மா? இங்கே யாரேனும் உன்னைப் போல் விளையாட இருக்கிறார்களா என்று பார்க்கிறாயா? ஒருவரும் இல்லையே?”

”நீங்க மட்டும்தான் இருக்கிறேளா, மாமி?”

”எங்க வீட்டு மாமா ஆபீஸ் போய் விட்டார். சாயங்காலம் வருவார்…”

”வேற ஒருத்தரும் இல்லையா மாமி?”

”ஊஹ¨ம்! ஒரு அக்கா இருக்கிறாள். அவள் இன்னொரு வீட்டுக்குப் போய் விட்டாள். அது சரி, ஸ்கூல் லீவா உனக்கு?”

”ஆமாம், மாமி” என்று சொல்லும் சிறுமி, பின்புறம் கைகளைக் கோத்தபடி அவ்வளவு ஆச்சர்யத்துடன் நோக்க, அவள் முகத்தில் அப்படி என்ன இருக்கிறது?

”உள்ளே வாம்மா, இங்கே வெயில்…”

தயங்கிப் தயங்கிப் படியேறி, வாசல் வராந்தா பெஞ்சில் உட்கார்ந்தாள் குழந்தை.

”உன் பேரென்னம்மா?”

”பேபி, மாமி! அப்பா மட்டும் ‘சுந்தரா’னு கூப்பிடுவார்.”

”ஓகோ..?”

”இதோ, சந்து தெரியறது பாருங்கோ, அதற் குள்தான் எங்க வீடு!” – அவள் காட்டிய சந்துக்கு நேராக இருந்த குழாயடி காய்ந்து கிடந்தது. குடங்கள் மட்டும் ஒன்றிரண்டு வந்து காத்துக் கிடந்தன.

”மாமி…”

”என்னம்மா?”

”நீங்க என்னைக் கோபிச்சுக்க மாட்டேளே? பெரியவாளை எல்லாம் அப்படிக் கேக்கக்கூடாதுன்னு அப்பா சொல்வார். இருந்தாலும் கேக்கறேன், உங்க பேர் சுந்தராம்பாதானே?”

இந்தக் கேள்வி அவளுக்கு எதிர் பாராததாக இருந்தாலும், சமாளித்துக் கொண்டாள்.

”அப்படியென்று யாரம்மா சொன் னது பேபி?”

”எங்க வீட்டிலே உங்களை மாதி ரியே அச்சா ஒரு பொம்மை பண்ணி வெச்சிருக்கார் எங்க அப்பா. நான், மைதிலி எல்லாம் பிறக்கறதுக்கு முன்னேயே… அந்த பொம்மை பேரு கூட சுந்தராம்பானு அப்பா சொல்லு வார்…”

”நீ சொல்றது ஒண்ணும் எனக்குப் புரியலையே குழந்தை?”

”மாமி! எங்கப்பா எல்லார் போலயும் இல்லை. நிஜ மனுஷா மாதிரியே பொம்மை பண் ணுவார். பெரிய பெரிய பொம்மை… நீங்க அங்கே பார்க்கிலே வெச்சிருக்கிற காந்தி சிலை பார்த்திருக் கேளா?”

”இல்லையேம்மா!”

”அது எங்கப்பா செஞ்சதுதான். நான் ஒண்ணாம் கிளாஸ் படிக்கும்போது பண் ணினார். ‘பாஸ்கர் பாரீஸ்’ தெரி யுமா மாமி?”

”தெரியாதேம்மா..?”

”நைஸா இருக்கும். அதாலே மேலே பூசி, அழகா பண்ணு வார். அது மாதிரி, உங்களை மாதிரியே அச்சா பண்ணி வச்சிருக்கார். உங்க பேர் சுந்தரம்பாதானே?”

”உங்கப்பாவை நான் பார்த் ததே இல்லையே? நீ யாரையோ சொல்கிறாய். உனக்கு அக்கா, அண்ணா எல்லாம் உண்டா?”

”மைதிலி இந்த வழியாதான் ஹிந்தி கிளாஸ§க்குப் போவா. அவ ஒம்பதாவது படிக்கிறா. அப்புறம் ராஜா அண்ணா; அவன் பெயிலாயிட்டான். அப்புறம்… மூக்குக் கண்ணாடி போட் டுண்டு சேப்பா தினம் வருவாரே டாக்டர், அவர் எங்கப்பாக்கு ரொம்ப ஃப்ரெண்ட். அவர்-கிட்டே ராஜா மருந்-தெல்லாம் கலக்கிக் குடுப்-பான்…”

”ஓகோ! தம்பி இல்லையா உனக்கு?”

”இல்லை. கோபுவும் என்னை விடக் கொஞ்சம் பெரியவன். அவன் அஞ்சாவது போகப் போறான். நான் நாலாவது! எங்கப்பா இப்ப பெரீசா ஒரு பொம்மை பண்ணியிருக்கார். எங்க ஸ்கூல் கட்டியிருக்காரே, ராஜா பகதூர்… அவரைப் பண்றார். மீசை வச்சுண்டு, பிரம்பு பிடிச்சுண்டு ஜம்முனு…” பேபி விறைப்பாக நின்று காட்டினாள்.

”எல்லாம் இங்கே சந்துக்குள் இருக்-கும் வீட்டிலா பேபி?”

”ஆமாம், மாமி! ராத்திரி மழை வந்தா, நாங்க மூணு பேரும் உள்ளே படுத்துப்போம். அப்பாக் கும் ராஜுக்கும்தான் மழை பெஞ்சா இடமிருக்காது. டாக்டர் மாமா வீட்டுக்குப் போவா!”

”ஓகோ!”

சிறிது யோசனை செய்துவிட்டு, ”மாமி! என்னிக்கானும் இனிமே மழை பெஞ்சால், ராஜுக்கானும் அப்பாக்கானும் இங்கே படுத்துக்க இடம் தருவேளா? டாக்டர் மாமா வீடு தூரக்க இருக்கு மாமி!” என்று கேட்டாள் பேபி.

”இரம்மா குழந்தை, கண்ணிலே தூசி விழுந்துவிட்டாற்போல் இருக்கிறது. அலம்பிக்கொண்டு வருகிறேன்!”

மாலை, இடி இடித்து ஆர்ப்பாட்டத்துடன் மழை கொட்டியது. அவர் வீடு திரும்பிய பின் வெளியே செல்லவில்லை. ஆஸ்துமா தொந்தரவினால், இரவுச் சாப்பாடு அவருக்கு இல்லை; மாலை ஆகாரத்தோடு சரி. காய்க்கத் தொடங்காத கனி மரத்துக்குரிய வாளிப்பும் துடிப்பு மான கனவு சுமக்கும் தனிமைப் பருவமா இது? கனிகள் நிறைந்து பருவத்திலே உதிர்ந்த பின் நிழலாடும் வெறுமையில் நீளும் தனிமையல்லவா?

அவர் செய்தித்தாளுடன் உள்ளே இளைப்பாறுகையில், அவள் மாடி வராந்தாவில் நின்று பார்த்தாள். தெருத் திண்ணை ஓரங்களில் மாடுகளும் நாய்களும் மனிதர்களும் ஒதுங்கியிருந்தனர். முனிசிபல் விளக்கின் வெளிச் சத்தில், காற்றிலே மழைத்துளிகள் உலக வாழ்விலே ஈடு கொடுக்க முடியாத கலைஞனைப் போல் பறந்தன. சந்துக்குள் யார் யாரோ நனைந்தும் நனையாமலும் போனார்கள்… வந்தார்கள்..!

‘மாமி! எங்க ராஜுவுக்கும் அப்பாவுக்கும் கொஞ்சம் இடம் தருவேளா?’ என்று கதவை யாரோ தட்டினாற்போல் பிரமையாக இருந்தது. வராந்தாவில் நின்று பார்க்கையில் வெறித்த குழாயடி யும், ஓசையடங்கிய தெருவும், பூச்சிகள் மொய்க்கும் விளக்கும் தான் தெரிந்தன.

மறு நாள்… அவர் ஆபீசுக்குச் சென்ற பின், அவள் சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வருகையிலே, வாயிற்படியில் நிழலாடியது.

பேபி நின்றிருந்தாள்.

”சாப்பிட வாம்மா பேபி!”

”இல்லை மாமி, இப்பத்தான் சாப்பிட்டேன். பாருங்கள் எப்படி மணக்கிறது!” என்று தன் பிஞ்சுக் கரத்தை மூக்கருகில் கொண்டு வந்தாள் பேபி.

”மாமி! நான் அப்பாவிடம் சொன்னேன். ‘போடி பைத்தியம்! அந்தச் சுந்தராம்பா அப்போதே செத்துப்போயிட்டா! இது வேற யாரோவா இருக்கும்’னார். இங்கே படுத்துக்க இடம் கேட்டதைச் சொன்னேன் மாமி. அப்படியெல் லாம் கேட்கக்கூடாதுன்னார் அப்பா..!”

”ராஜா பகதூரை எப்ப ஸ்கூலில் வைக்கப்போகிறார்கள் பேபி?”

”ராஜா பகதூர் ஸ்கூலுக்குப் போயிட்டா டாக்டர் மாமா வீட்-டுக்குப் படுத்துக்கப் போக வேண்டாம், மழை பெஞ்சாலும்! ஆனா…”

”ஆனால் என்ன பேபி?”

”அப்பாக்கு மாசம் இருநூறு ரூபாதான் வரது மாமி! நேத்திக்கு அந்த வீட்டுக்காரப் பல்லிப் பாட்டி வந்து சத்தம் போட்டா..!”

– சொல்லும்போதே பேபிக்கு அழுகை துருத்திக்கொண்டு வந்தது.

”ஆனா, எங்கப்பா ரொம்பக் கெட்டிக்காரர், மாமி! எங்க ஸ்கூலிலே இத்தனை குட்டிங்கள் இருக்கே… ஒருத்தருடைய அப்பா வுக்காவது நிஜ மனுஷா மாதிரி பொம்மை பண்ணத் தெரியுமா? எல்லாரும் ஆபீசுக்குத்தான் போவா. இல்லாட்டா கடை வெச்சிருப்பா. உங்க மாமா கூட ஆபீசுக்குதானே மாமி போறார்?”

”ஆமாண்டி கண்ணு..!”

”மாமி எங்கப்பாக்கு எம்மேல ரொம்ப ஆசை!” – கர்வம் ஒளியி டும் கண்களுடன் குரல் தழையக் குழைந்து கூறினாள் பேபி.

”சுந்தராக் கண்ணுனு அப்பா கூப்பிடுவார். அந்த பொம்மையில் இருக்காளே, அவ பேருதான் எனக்கு. அவ ரொம்ப நல்லவளாம். அப்பா கூட ஒரே கிளாஸிலே படிச்சாளாம். அப்புறம்… அப்பா ஜெயிலுக்குப் போயிட்டாராம்!”

அவள் ‘உம்’ கொட்டக்கூட இல்லை.

”ஜெயில்னா திருடிட்டார்னு நினைச்சேளா, மாமி? இல்லை! முன்னே நம்ம ஊரிலே வெள்ளைக் காராள்லாம் இருந்தாளாம். அவாளை எல்லாம் போகச் சொல்லி, அப்பாவும் இன்னும் சில பேரும் தினம் ஆபீசுக்கெல் லாம் போய்க் கொடி புடிச்சிண்டு கத்துவாளாம். அதுக்காக அப்பா வைப் புடிச்சு ஜெயில்லே போட் டாளாம். அப்பா எப்படியோ தப்பிச்சுண்டு வந்துட்டாராம். அப்ப அந்த சுந்தராம்பா இல்லே, ரகசியமா வந்து அப்பாக்கு சாத மெல்லாம் போடுவாளாம். அவ சாதம் போடாதபோயிருந்தா அப்பா செத்துப் போனாலும் போயிருப்பாராம். ஒருநாள் எங் கப்பா வீட்டுக்கே வந்து, அவரோ டயே இருக்கேன்னு சொன்னா ளாம். ஆனா, அவ அப்பா வந்து அவளை அடிச்சுக் கூட்டிண்டு போயிட்டாராம். பாவம், அப்புறம் அவ செத்துப் போயிட்டானு அப்பா சொன்னா மாமி, நேத்-திக்கு!”

தூசி விழுந்துவிட்டதென்று சொல்லாமலே, அவள் எழுந்து சென்றாள்.

”என்ன மாமி?” என்று பேபி எழுந்து நின்று, கண்கள் குறு குறுக்க நோக்கினாள்.

”ஒண்ணுமில்லே பேபி, கண் வலிக்கிறது. உறுத்துகிறது. தண்ணீர் விட்டுத் துடைத்துக் கொண்டேன்” என்று அவள் திரும்பி வந்தாள்.

”நான் ரெண்டாவது படிக்க றச்சே எனக்கும் கண் வலி வந்தது. டாக்டர் மாமா எரிய எரிய மருந்து போடுவார். எங்கம்மாக்கும் கூட கண் வலி வந்தது. அம்மா டாக்டர் மாமா வீட்டுக்கு வர மாட்டேன்னுட்டா. எங்கம்மா எங்கியுமே வரமாட்டா மாமி. முன்னே பார்க்கிலே காந்தி சிலை வைக்கிறபோதுகூட, நாங்கள்லாம் போனோம். ஐஸ்கிரீமெல்லாம் தின்னோம். அப்பாக்கு ஜரிகைப் போர்வையெல்லாம் போட்டா. அப்ப கூட அம்மா வரலே. ஏன் தெரியுமா மாமி?”

”ஏன்?”

”எங்கம்மாக்குக் காது கேட்காது. ஆனா, ரொம்ப அழகா இருப்பா மாமி! இந்தப் பல்லிப் பாட்டி இல்லே… அது எங்கம்மாவை எப் பவும் மக்கு, அசடுன்னு சொல்லும். எங்கம்மா ஒண்ணும் அசடு இல்லே. எங்கம்மா வத்தக் குழம்பு வச்சா எப்படி மணக்கும் தெரி யுமா! என் கையை இப்பக் கூட மோந்து பாருங்கோ!”

”கம்முனு மணக்கிறது பேபி!”

”இது போல பெரிய வீட்டுக்குப் போக எங்க கிட்ட பணமில்லை. நாங்கள்லாம் ஏழைங்க மாமி!”

”போடி அசடு! நீங்களன்றும் ஏழையில்லை.”

”பின்னே, ஏழையில்லாட்டா பல்லிப் பாட்டி வந்து குடக்கூலி குடுக்கலேனு கத்துமா? அப்பா எப்பவாவதுதான் பொம்மை பண்ணுவார். டாக்டர் மாமா வந்து பொம்மை பண்ணுன்னு சத்தம் போடுவார். அப்பவும் அப்பா பேசாமயே இருப்பார்…”

”ஏன்..?”

”நல்லவாளை… இல்லாட்டா சாமியைப் பண்ணினாத்தான் அழகா இருக்குமாம்! ராஜா பகதூரை ஸ்கூல்ல வைக்கும் போது எங்கப்பாவுக்கு ஜரிகை ஜரிகையா போர்வை தரப் போறாளாம். மைதிலிக்கும் எனக்-கும் பாவாடை தச்சுக்கலாம்னு அம்மா சொன்னா!” என்றாள் பேபி குதித்துக் கொண்டு.

”அப்படியா?”

”ஆமாம் மாமி! நீங்க எங்க வீட்டுக்கு வந்து பாருங்கோ மாமி… வர மாட்டேளா?”

”வரேன் பேபி!”

”வாருங்கள். பேபி வந்து தினமும் சொல்லும். உங்கள் வீட்டிலேயே தினம் பழமும் பட்சணமும் தின்று, ஸ்கூல் லீவில் வெயிலிலும் அலையாமல் குண்-டாகி விட்டது!” – சொன்னது பேபியின் அம்மாதான். சிரிக்கும் இதழ்கள். கேளாச் செவிகளின் கிலேசமில்லாத பார்வை.

நுழைந்ததும் ஒரு நாலடி சதுரம். ஒட்டி ஓர் இருட்டறை இருக்கும் வாயில் தெரிந்தது. பிறகு, நீளவாட்டில் இரண்டடி அகலமுள்ள திறந்த முற்றம். அதை அடுத்து ஓட்டுத் தாழ்வாரச் சமையலறை. அதற்குப் பின் உள்ள சுமாரான கூடம். அங்கே கம்பீர-மாக எழும்பியிருந்த ஓர் உயிர்ச் சிற்பம், அதை வடித்தவனின் பெருமைக்குச் சான்று கூறிக்-கொண்டிருந்தது. அதே கூடத்தின் ஒரு மூலையில் கழுத்தளவோடு ஒரு பீடத்-திலிருந்த சிறிய அளவுச் சிற்பமொன்றும் அவள் கண் களில் படாமல் இல்லை.

”பத்தாம் தேதி வாக்கில் வார்ப்படத்துக்குப் போய்-விடும். ரொம்ப அழகாய் அமைந்துபோச்சுன்னு எல்லாரும் சொல்கிறார்கள். இவருக்கு என்னமோ பொன்னாடை போர்த்தி கௌரவிப்பார்களாம். இதற்கு முன்னேயும்தான் இப்படி வந்தது. எங்கே… அலை உயரும் வேகத்திலே இறங்கவும் இறங்குகிறது..!”

ஒளிக்கவும் மறைக்கவும் தெரியாத கலைஞனுக்கு ஏற்ற மனைவி.

”மாமி, இதப் பாருங்கோ! உங்களைப் போலவே இது அச்சா இல்லே?!”

பேபி அந்தச் சிறிய சிற்பத்தை அவளுக்குக் காட்டுகையில், அந்தத் தாய் முன்பு அந்தத் தந்தை செய்த கை வண்ணங்கள் குறித்துப் பேசினாள்.

புதிய செய்தி ஏதுமில்லை. அலை உயரும்; தாழும்! பொன்னாடையும் புகழ் மாலையும் உச்சிக்கு ஏற்றும்; கஞ்சிக்குப் போராடும் வறுமையும் கூடவே தொடரும். கலை வாழ்வாகிய சத்திய வேட்கைக்கும், அன்றாட உலகில் பேர் சொல்லும் பண வாழ்வா கிய பொய் வேட்கைக்கும் எப்போதும் உண்டாகும் மோதல்கள்…

துளிர் வெற்றிலைப் பாக்கு கைகளில் கசங்க, அவள் வீடு திரும்பி உள்ளே சென்ற உடனேயே, வாசலில் கார் வந்துவிட்டது.

கணவர் இறங்கி மாடிக்குச் சென்றதைக் கூட உணராமல், அவள் கண்ணாடியின் முன் நின்றிருந்தாள்.

‘ஆமாம், அந்தச் சுந்தராம்பாள் இல்லை இவள். அங்கு உயிர்ச் சின்னம் போல் வாழ்பவளின் மூலமான சுந்தராம்பாள், அன்றே இல்லாதவளாகி-விட்டாள்…’

உடை மாற்றிக்கொண்டு வந்த அவர் கேட்டார்… ”என்ன சுந்தரா, கண்கள் கலங்கி இருக்கிறதே? பெண்ணை நினைத்துக் கொண்டாயா?”

”ஒன்றுமில்லை, தூசி!”

– 07-07-1963

Print Friendly, PDF & Email

1 thought on “தூசி

  1. கதை உயிரோட்டத்துடன் இருந்தது. இறுதியில் இதை எழுதியது 1963 ஆம் ஆண்டு என்று படித்ததும் ஆசிரியர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் மீது தனி அபிமானமே வந்து விட்டது. காலத்தை வென்ற சிந்தனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *