அந்தமான் எக்ஸ்பிரஸ் ஜம்மு காஷ்மீர் கட்ராவை நோக்கி சென்னையிலிருந்து மூன்று நாள் பயணத்தில் ஒரு நாள் பயண தூரமான மூன்றில் ஒரு பங்கைக் கடந்து கொண்டிருந்தது.
எஸ். 7 ல் பயணம் செய்யும் நான், பூவரசன், அழகேசன், குசேலனைத் தவிரஅமர்நாத்திற்குப் பயணம் செய்யும் எங்களில் சிலர் மனைவி மக்கள், சில பெருசுகளோடு ரயில் பெட்டி எஸ். 11ல் பயணம். இந்த வில்லங்கம்…..மனைவி ஜானகியோடு பயணம் செய்யும் கார்த்திக்கின் வேலை.
பதினைந்து பேர்களுக்கு டிக்கெட் முன் பதிவு செய்யப் போனவன் குடும்பத்தோடு வருபவர்கள், சில வயதானவர்களை மட்டும் ஒரு பெட்டியில் பயணம் செய்யுமாறு தன்னோடு இறுத்திக் கொண்டு…. மனைவி மக்களின்றி மொட்டையாய் வரும் எங்களைத் தனியாக ஒதுக்கி…. நான்கு பெட்டிகள் தள்ளிப் பயணம் செய்ய வைத்து விட்டான்.
நாங்கள் நால்வரும் ஓரளவிற்கு அரட்டைகள், அராத்துகள்….என்பதால் இப்படி செய்துவிட்டான் என்று எங்களுக்குப் புரிந்தாலும்…
” ஏன்டா! இப்படி செய்தாய்…? ” என்று கேட்டதிற்கு,” இங்கேதான் இடம் கிடைத்தது! ” என்று ஒரே வார்த்தையாய்ச் சொல்லி எல்லார் வாய்களையும் அடைத்து விட்டான்.
அவன்…. எங்கள் நால்வரையும் இப்படி பிரித்து விட்டதும் ஒரு வகையில் நல்லது, வசதி. காரணம்…..எல்லோரும் ஒரே பெட்டியில் பயணம் செய்தால்….இஷ்டத்திற்குப் பேசி, சிரித்து, பழகி வர முடியாமல்….கூட வந்திருக்கும்….பெண்;டு, பெரிசுகளுக்குப் பயந்து…வாலைச் சுருட்டி வாயை மூடிக்கொண்டு வரவேண்டும் என்று அப்போது மனம் சமாதானமானாலும்….பயண நாளில் பெட்டியில் ஏறியபிறகுதான் அவன் மீது எங்களுக்குப் பன்மடங்கு கோபம் அதிகமாகியது.
காரணம்….எங்கள் கண்கள், கருத்துக்களுக்குத் தீனி போடும் அளவிற்கு அவன் பெட்டியில் கலர்கலராய்….புடவை, சுடிதார், ஜீன்ஸ், லெக்கின்;ஸ் அது இது வென்று ஏகத்துக்குமாகப் பெண்கள்.
எங்கள் பெட்டியில் அப்படி இல்லை. குறைவு. குறைவிலும் நிறைவில்லாமல்….ஓரளவிற்கு எல்லாம் வயதான கிழம் கட்டைகள். அதிலும் எங்கள் இருக்கையில் எதிரும் புதிருமாக எல்லாருமே ஆண்கள். ஒற்றையாய் இருக்கும் இரு ஜன்னலோர இருக்கைகளில் மட்டும் நாற்பது வயதில் இரண்டு வயது பையனுடன் சுடிதார் போட்ட பெண்மணி. பார்க்க அழகாய் இருந்தாலும் என்ன செய்ய…? தாய் ! எதிரில் அவளுக்கு ஜோடியாய் ஒரு கிழவி.
அதே சமயம்…. அத்திப் பூத்தாற் போல் எங்களுக்கு முதுகு பக்கம் இருக்கும்….அடுத்த இருக்கை மட்டும் கொஞ்சம் அமர்க்களம். மூவர் இருக்கையில் என் முதுகிற்கு நேர் பின் பக்கம் ஜன்னலோரம்…பனியன், ஜீன்ஸ் போட்ட இந்தி பேசும் 18. குனிந்தால்… நிமிர்ந்தால் அமர்க்களம். அதிலும் அவள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் லேப்டாப் கையுமாக அதிலேயே குனிந்து கவனமாக இருப்பதால்…எதிரிலிருப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் அந்த வழியாக போவோர் வருவர்களுக்கெல்லாம் நல்ல விருந்து, கும்மாளம். அவளுக்குப் பக்கத்தில் வேறு இரு மராத்தி குஜராத்தி பெண்மணிகள்.
ஆனால்…. இதையெல்லாம் அனுபவிக்க கொடுத்து வைக்க முடியாதவராய் அவளெதிரில் நேர்மாறாய் ஒரு ஆள்.
காவியில்…… இடையில் வேட்டி, மேலே ஜிப்பாவில் ஒரு சாமி..!
நல்ல சிவந்த நிறம். ஏறக்குறைய நாற்பது வயது தோற்றத்தில் நல்ல வாட்டசாட்டமான உடல்வாகு, பொலிவான முகம். கொஞ்சமாய் சடை விழுந்த ஜடா முடி. தலையில் உச்சிக் கொண்டை. தாடி மீசையில் சுத்தமாய் நரை இல்லை.
சாமி… நேருக்கு நேர் அந்தப் பெண்ணுருவைப் பார்க்கப் பிடித்தமில்லாமல் வெளியே வேடிக்கைப் பார்த்து தன் அவஸ்தையைக் வெளிக்குக் காட்டிக்கொள்ளமல் வந்தார்.
அதே சமயம்…. அவருக்கு அருகில் அமர்ந்து வரும் அறுபதுக்கு ரொம்ப கொண்டாட்டம், கும்மாளம். ஆள் ரொம்ப அழகில்லாமல் கொஞ்சம் கிறுக்கு மாதிரி இருந்தாலும்….தனக்குக் கொஞ்சமாய்த் தெரிந்த ஓட்டை இந்தியில் அந்தப் பெண்ணோடு கடலைப்போட்டு, வழிந்து…. ரயில் நிற்கும் இடத்திலெல்லாம் அவளுக்கு வேண்டியது வாங்கிக் கொடுத்து….அவளுக்கு உதவி செய்பவராக இல்லாமல் ஏவல் எடுபிடியாக வந்தார். மேலும்… தன்னை ஒரு ஹீரோவாக நினைத்து…மற்ற ஆண்களையெல்லாம் துச்சமாகப் பார்த்து அவ்வப்போது சாமியாரோடும் கொஞ்சமாய்ப் பேசி ஒட்டிக் கொண்டு வந்தார்.
அல்பம் ! எல்லாருக்குமே அவர் செய்கை தெரிந்துதானிருந்தது. இருந்து என்ன செய்ய…? அவர் சுபாவம்.
நாங்கள் திட்டமிட்ட யாத்திரைப் பயணமென்பதால்…வழியில் கண்டதை வாங்கித் தின்று வயிற்றைக் கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும், செலவைக் கட்டுப் படுத்தவும்….எல்லாருக்கும் தேவையான புளி, தயிர், எலுமிச்சை சாதங்கள், பூரி, சப்பாத்திகளை கட்டி எடுத்துக் கொண்டு வந்தோம். அதில்லாமல்…. வாய்க்குத் தேவையான மிச்சர், நிலக்கடலை, பொட்டுக்கடலை, பிஸ்கட், ரொட்டி, நொறுக்குத் தீனிகளையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தோம்.
தங்கள் மனைவி மக்கள் பக்கம் எங்கள் மூச்சுக் காற்று படக்கூடாது என்கிற எண்ணத்தில் எங்களை நான்கு பெட்டிகள் தள்ளி பயணிக்க வைத்த…..கார்த்தி…..நாங்கள் அவர்கள் பக்கம் தலைகளையும் காட்;டக் கூடாது என்பதற்காக மூன்று வேளையும் எங்கள் வயிற்றிற்குத் தேவையான உணவு, நொறுக்குத் தீனி பங்குகளை குப்புசாமி, பழனி என்று மற்ற ஆண்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு எடுத்து வந்து கொடுத்துப் போனான். ;
அவன்; அப்படி என்றால் நாங்கள் என்ன இளப்பமா…? அவனை வெறியேற்ற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் பயணம் செய்யும் பெட்டிக்கு ஒரே நாளில் நான்கு தடவைகள் போய் உட்கார்ந்து பேசி வந்தோம். அந்த சாக்கில் .பெட்டிப் பெட்டியாய்ப் போய் அலைந்து திரிந்து எங்கள் ஆசைகளை தீர்த்து வந்தோம்.
சாமியாருக்கு மேல் பெர்த்தில்தான் படுக்கை. தலைக்கு… தான் உடமையாய்க் கொண்டு வந்திருக்கும் ஒரு தோளில் மாட்டும் துணிப்பை. அதுவும் சின்ன மூட்டை மாதிரி காவி பை. ஆள் நீட்டி படுத்தாரென்றால்….அந்த படுக்கை நீட்டத்திற்கு அவர் உடல் நீளம் சரியாய் இருக்கும்.
சாமியார்….உணவு வகைகளை எதிரிலுள்ளவர்கள் கொடுப்பவைகளைத்தான் ஏற்றுக் கொள்வார் என்பது கிடையாது. எவர் இஷ்டப்பட்டுக் கொடுத்தாலும் எடுத்துக்கொள்வார். நாசூக்காகத் தொட்டுத் திருப்பும் வேலையெல்லாம் கிடையாது. தேவையானவைகளை எடுத்துக் கொள்வார். அதிகமானவைத் திருப்பி விடுவார். அல்லது மறுத்துவிடுவார்.
அந்த வடநாட்டு பெண்ணைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே…பூவரசன் சாமியாரிடம் முதலில் பேச்சுக் கொடுத்தான். அடுத்து நான், அழகேசன் என்று அவர் இடத்திற்குப் போய் மொய்க்க ஆரம்பித்ததும்….அவர் எங்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அந்த இடத்தைவிட்டு எழுந்து எங்கள் இடத்திற்கே வந்து விட்டார். அதாவது அவர் தன் அவஸ்தைகளிலிருந்தும் ஒரு வழியாக தப்பி வந்து விட்டார் என்றும் சொல்லலாம்.
சாமி; ஆன்மீகம் மட்டுமில்லாமல் நாட்டு நடப்பு, அரசியல், உலக செய்திகள் புதுசு, பழசு எல்லாம் பேசினார். இது அந்த பெட்டியில் உள்ளோருக்கு மட்டுமில்லாமல்…அவர் இடத்தைக் கடந்து செல்பவர்களுக்கும் பிடித்தமாக இருந்தது. ஒரு இளம் துறவி ஜனரஞ்சமாக இப்படியெல்லாம் பேசுவார் என்று யாரும் எதர்;பார்க்கவில்லை. எல்லாரும் அவர் பேசுவதை சில விநாடிகள் நின்று கேட்டு விட்டு செல்வார்கள். எங்களுக்கு உணவுகள் எடுத்து வரும் கார்த்தி, சுப்பு, குப்புவெல்லாமே….அவர் பேச்சில் லயித்தார்கள், கலந்து கொண்டு எல்லாம் பேசினார்கள்.
சாமியின் கைபேசிக்கு அடிக்கடி அழைப்பு வரும். அவர் தன் ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஸ்மார்ட் போன் எடுத்து… தமிழ், இந்தி, மலையாளம்… என்று பல மொழிகள் பேசுவார். இவரும் யாருக்காவது தொடர்பு கொண்டு பேசுவார்.
பேச்சினூடே… சாமி;…தன்னை வணங்கிச் செல்பவர்களுக்குக் கை தூக்கி ஆசீர்வாதம் செய்வார்.
நான்தான் அவரைப் பற்றி விபரம் தெரிந்து கொள்ள…..
” சாமி ! நீங்க எந்த ஊர் ? ” கேட்டேன்.
” நாகப்பட்டினம் ! ” சொன்னார்.
” நாங்க காரைக்கால். நீங்க நாகப்பட்டினத்துல எங்கே.. ? ” அழகேசன் ஆர்வமாய் விசாரித்தான்.
” பொய்கைநல்லூர். ! ”
” பொய்கைநல்லூர்ன்னா…..?? ”
” கோரக்கர் சித்தர் ஜீவசமாதி ! ”
எனக்கு அந்த இடம் ரொம்ப பரிச்சயம். பவுர்ணமி காலங்களில் கூட்டம் கூடும். மற்ற நேரம், காலங்களில்…. உண்பது உறங்குவதற்கென்று அங்கே ஒரு சோம்பேறிக் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். சமயத்தில் அந்த சாதுக்கள், பிச்சைக்காரர்கள்… படுப்பதற்குக் கூட துணியைத் திண்ணையில், தரையில் விரித்துப் போட்டு சண்டை போடுவார்கள்.
” அந்த கோரக்கர்தான் என் ஆசான், குரு ! ” என்றார் இவர்.
” சாமி ! உங்க பேர் ? ” கேட்டேன்.
” தியாகராசன். தியாகு பாபா…! ” என்றார்.
” பாபா..! இப்போ நீங்க அமர்நாத் யாத்திரை போறீங்களா ? ” கேட்டேன்.
” இல்லே. கட்ராவுல எனக்கு குடில் இருக்கு. அங்கே போறேன்.” சொன்னார்.
‘ பிரசித்திப் பெற்ற வைஷ்ணவி தேவி கோயில் அடிவாரத்தில் குடிலா…? ‘ கேட்ட எங்களுக்கு அதிர்ச்சி, ஆச்சரியமாக இருந்தது.
” ஒரு பக்தர் உபகாரம்.! ” – எங்கள் முக பிரமிப்புகளைப் பார்த்;து விட்டு அவரே பதில் சொன்னார்.
” எப்படி ? ” கேட்டேன்.
” என் வாக்கு பலிச்சதாய்…சொல்லி…..காணிக்கையாய்…அங்கே…..ஒரு கிரவுண்ட் நிலத்துல சின்னதாய் ஒரு கான்கிரீட் குடில் அமைச்சு தந்தார். ”; என்றார்.
எங்களுக்குள் இன்னும் வியப்பு கூடியது.
” இமயமலை….அங்கே குளிர் அதிகம் என்கிறதுனால அறையில் ஏ.சியைத் தவிர…. எல்லாம் வசதியும் இருக்கு. குளிச்சு முடிச்சு சமைச்சு… என் ஆசானுக்கு நெய்வேத்தியம் செய்து… சாப்பிடுவேன்.” என்று சொன்னதோடு நிறுத்தாமல்….
” இதுதான் என் குடில்….! ” .சொல்லி தன் கைபேசியை உயிர்ப்பித்து….அவர் வசிக்கும் இடத்தைக் காட்டினார். உள்ளே மின்விசிறி, கட்டில், கொடியில் காவி வேட்டி, ஜிப்பா, துண்டுகள், சின்ன பீரோ, சமையல் பாத்திர்ங்கள், கியாஸ் அடுப்பு….குங்குமப்பொட்டு, பூக்கள் அலங்காரத்தில் பெரிய கோரக்கர் படம், அதனடியில்…. அதே அலங்காரத்தில் சின்ன சிவலிங்கம் எல்லாம் இருந்தது.
” பர்ணசாலை அமர்க்களமாய் இருக்கு ! ” சொன்னேன்.
தியாகு பாபா புன்னகைத்து கைபேசி அணைத்து பாக்கெட்டில் வைத்தார்.
” இப்போ சென்னையிலிருந்துதானே வர்றீங்க…? ” விசாரணையைத் தொடர்ந்தேன்.
” இல்லே…ஒரு பத்து நாள் என் ஆசான் சமாதியில இருந்து வர்றேன். ”
போன் அடித்தது. அதில் தியாகு பாபா என்றே பெயர் தமிழில் இருந்தது.
எடுத்து காதில் வைத்து…. ” என்ன பழனி பாபா ! இப்போ பழனியில இருக்கீங்களா, பழமுதிர்ச்சோலையில் இருக்கீங்களா ? ” விசாரித்தார்.
”…………………………..”
” நான் இப்போ அங்கிருந்துதான் வர்றேன். பணத்தை வழக்கமா என் வங்கி கணக்குல சேர்த்துடுங்க. ”
” …………………………….. ”
” இல்லே. இல்லே. நான் கட்ராப் போறேன். அங்கே…. என் கூட இருக்கிற சாதுவும் இருக்கார். எங்கேயும் போகலை. அடுத்த மாசம்தான் நான் கேதார்நாத் பயணம். ! ” என்றார்.
கோயில் கோயிலாகப் பயணம் ! – நான் அவரைப் பார்த்தேன்.
” இந்தத் துறவறத்தில்….. ஊதாசீனம், அவமதிப்பு, மதிப்பு, மரியதைன்னு ரொம்ப கஷ்டங்கள் இருக்கு. இந்த வாழ்க்கையில் ஆண்டவன் நெனைப்பு, பக்தியைத் தவிர… வேற ஆசை, குறிக்கோள் எதுவும் கிடையாது என்பதால் யாரும் அதை லட்சியம் பண்றது இல்லே. அப்புறம் ஆண்டவன் நெனப்புலேயே மூழ்கி இருக்கனும் என்கிறதுக்காக…….என்னை மாதிரி…துறவற சாமிகள், சாதுக்களில் பலபேர் கஞ்சா போதைக்கு அடிமையாகிறாங்க. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு கதையாய்….கையில காசு இல்லாத போது என்னை மாதிரி சுத்தமான சாது, சாமியார்களிடம் கடனுக்குக் காசோ, வட்டிக்குப் பணமோ வாங்குறாங்க. அதைத்தான் நான் என் வங்கிக் கணக்கில் போடச் சொன்னேன்.” தன் அடுத்தக் கதையைச் சொன்னார்.
‘ இந்த வாழ்க்கையில் வட்டி வியாபாரமா..? ! ‘ எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.
” என்ன சாமி சொல்றீங்க..? !! ” நம்ப முடியாமல் கேட்டேன்.
” நிஜம் ! ” அழுத்தமாகச் சொல்லி தலையசைத்தார்.
எனக்கு ஜீரணிப்பதற்குக் கஷ்டமாக இருந்தாலும் வழி…?!
” பிச்சைக்காரர்களும் சாதுக்களும் ஒன்னா பாபா ? ” எனக்குள் எழுந்த அடுத்த சந்தேகத்தைக் கேட்டேன்.
” இல்லே. அவர்கள் ஆதரவற்றவர்கள், அனாதைகள், வயசாலிகள்…. வயித்துப் பாட்டுக்காகப் காவியில் பட்டை, கொட்டை கட்டி பிழைப்பு. துறவிகள் அப்படி இல்லே. கடவுளை நினைச்சி எல்லாம் துறந்து வந்தவர்கள். அமைதியாய் இருப்பார்கள். அந்த முகங்களில் ஒரு சாந்தம் தெரியும். பசின்னு யார்கிட்டேயும் கையேந்த மாட்டார்கள். இறைவன் நினைப்பு, பக்தியைத் தவிர்த்து வேற எதிலும் நாட்டம் இல்லாதவர். நாங்க பசியோடும் பத்து நாட்;கள் இருப்போம். ” சொன்னார்.
” இந்த வட்டிக்கு வியாபாரம்…..?…..” இழுத்தேன்.
” நான் விரும்பலை. அவுங்களா கொடுக்குறாங்க. விருப்பப்பட்டு கொடுக்கிறதை வேணாம்ன்னு சொல்ல எனக்கு விருப்பமில்லே. எனக்குப் பிற்காலம்… என்கிட்ட இருக்கிறது எல்லாம் என் ஆசான் பொய்கை கோரக்கருக்குப் போய்ச் சேரனும்ன்னு உயி;ல் எழுதி அலமாரியில் வைச்சிருக்கேன். ”
” நீங்க ஐயாயிரம், பத்தாயிரம் வட்டிக்கு விட்டிருப்பீங்களா…? ” கேட்டேன்.
” அஞ்சு லட்சம்..! ” சொல்லி அசத்தினார்.
” என்ன சாமி சொல்றீங்க..? ” கேட்ட….நான், குசேலன், அழகேசன், பூவரசன்…எல்லாருமே வாயைப் பிளந்து துணுக்குற்றார்கள்.
அதே சமயம், ‘ எவரையும் இளப்பமாய் இடை போடக் கூடாது ! இவர்களெல்லாம் பிச்சைக்காரார்கள், அன்றாம்காய்ச்சிகள் என்று நினைத்தது எவ்வளவு பெரிய தவறு !’ என்பது எனக்குள் ஓடி மறைந்தது.
எங்கள் பேச்சின் இடை இடையே… சாப்பாடு கொடுக்க… கார்த்தி, கணேஷ், குப்புசாமிகள் வந்து போனார்கள். என்னோடு இருந்த அழகேசன், பூவரசன் எழுந்து போய் சுற்றி வந்தார்கள்.
” வங்கி கணக்கிலும் அஞ்சு லட்சம் இருக்கு ! ” அடுத்து சொல்லியும் அசத்தினார் தியாகு பாபா.
” எப்படி சாமி இவ்வளவு பணம்….? ! ” வியப்பு மாறாமலேயேக் கேட்டேன்.
” பக்தர்கள் கொடுக்கிறாங்க. நான் கையேந்தலை. கேட்கலை. என்கிட்ட வந்து குறைகளை சொல்றாங்க. இதுவும் கடந்து போகும். எல்லாம் சரியாகும்ன்னு நான் பொதுவா சொல்றேன். அது அவர்களுக்கு நல்லதாய்ப் படுது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாய்…அப்போ அவர்கள் நெனைச்சது நடக்குது. பத்துப் பதினைஞ்சு நாள் கழிச்சு திரும்பி வர்றாங்க. உங்க அருள்வாக்கு பலிச்சு நாங்க கஷ்டங்களிலிருந்து விடுதலைன்னு சொல்லி…..பணத்தை தாம்பாளத்தில் வைச்சு பவ்வியமாய்க் காணிக்கையாய்ச் செலுத்தி கை கட்டி நிக்கிறாங்க. எனக்கு ஆசை இல்லே எடுத்துப் போன்னு சொல்றது அவுங்களுக்கு அவமரியாதை. கொடுக்கிறதை பக்தர்களுக்கு விநியோகம் பண்ணினால் சிக்கல். அதான் போதை சாதுக்களுக்கு விநியோகம், வட்டி எல்லாம். ” சொன்னார்.
” உங்களை மாதிரி பணம் இப்படி எல்லா சாதுக்களுக்கும் கிடைக்குமா ? ” கேட்டேன்.
” கிடைக்கிறவங்களும் இருக்காங்க. கிடைக்காதவங்களும் இருக்காங்க. இதை அருள்ன்னு சொல்ல முடியாது. ஆதிர்ஷ்டம்ன்னு சொல்லலாம். ”
‘ தியாகு பாபா ஒளிமறைவின்றி எவ்வளவு துல்லியமாக சொல்கிறார் ! ‘ எனக்குள் தோன்றியது.
” சாமி ! உங்க அருள் வாக்கு பலிக்குதா..? உங்ககிட்ட சக்தி இருக்கா…? ” கேட்டேன்
” தெரியலை. அதான் உண்மை.! சாமிகிட்ட சக்தி இருக்கா இல்லையா என்கிறது தெரியாதது மாதிரி என்கிட்டேயும் அது இருக்கா இல்லையா தெரியாது. பலிக்குதுன்னு சொல்லி வர்றவங்களை நான் பெரிசாவும் எடுக்கிறதில்லே. ” சொன்னார்.
” சாமி ! உங்களுக்கு குடும்பம் இருக்கா..? ”
” தற்போது இல்லே…ஆனா இருந்துது.”
” குடும்பம்ன்னா…..? ”
” அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, மனைவி… எல்லாம். ”
” நீங்க எப்போ சன்னியாசம் வாங்குனீங்க…? ”
” முதல் குழந்தை பிறந்ததும்…”
” ஏன்….குடும்பத்துல குழப்பம், கணவன் மனைவிக்குள்ளே சண்டை, சச்சரவு, மனக்கசப்பு, பிடிக்கலே, வெறுப்பு, இப்படி ஏதாவதா….? ”
” அப்படி ஏதும் இல்லே. என் அப்பா பக்தி பிரசங்கம் பண்றவர். கோயில் கோயிலாய்ப் பேசுவார். மார்கழியில அவர் ரொம்ப பிசியாய் இருப்பார். பெரும்பாலும் அவர் கூடவே போய் வந்ததால எனக்கு அவரைத் தாண்டி ஆன்மீகத்துல நாட்டம் ஏற்பட்டு மனம் பக்தி பக்கம் திரும்பிடுச்சு. மனம் படிப்பில் கூட அதிகமா ஈடுபடாமல்…எட்டாம் வகுப்பிற்குப் பிறகு…கோயில் கோயிலாய்ப் போய் ஒரு ஓரமா உட்கார்ந்து இறைவனை நினைச்சு தியானம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். திருமணம் கூட என் விருப்பத்திற்கு மாறாய் வற்புருத்திதான் அம்மா அப்பா செய்து வைச்சாங்க. பெரிசா அதிலும் நாட்டம் இல்லாமல் ஒரு குழந்தை பிறந்தபிறகு….ஒரு நாள் ராத்திரி….. ” நான் இறைப்பணி செய்யப் போறேன். தயவு செய்து என்னை யாரும் தேட வேணாம் ! ” ன்னு…ஒரு வரி கடிதம் எழுதி என் மனைவி தலைமாட்டில் வைச்சுட்டு ராத்திரியோட ராத்திரியா கட்டின துணியோடு கையில் நூறு ரூபாய் காசோடு புறப்பட்டேன். புறப்பட்டுட்டேனேயொழிய…எங்கே போறது… என்ன செய்யிறது முன் யோசனை இல்லாமல் திக்கு திசை தெரியாமல் நடந்தேன். ஒரு வழியாய் ரயில் ஏறி காசி வந்து இறங்கினேன். காவி கட்டி கங்கைக் கரையில் உட்கார்ந்தேன். அப்புறம் அங்கே உள்ள சாதுக்கள் என்னை அரவணைச்சாங்க. பத்து வருச காலம் பஞ்சாய்ப் பறந்துது. அப்புறம் பொய்கை கோரக்கர் சமாதியில் அஞ்சு ஆறு வருசம் தஞ்சம். அங்கே அவரை ஆசானாய் ஏத்துக்கிட்டு வடக்கே இமயமலை வந்தேன். குடில் குடிசைன்னு செட்டிலாகி….அங்கிருந்து நெனைச்ச இடங்களுக்குப் போய் வர்றேன். ” சொன்னார்.
” இப்போ உங்க வயசு என்ன…? ” கேட்டேன்.
” நாப்பத்தஞ்சு…! ”
” நீங்க குடும்பத்தை விட்டுப் பிரியும்போது குழந்தைக்கு அஞ்சு வயசு இருக்குமா ?…….” கேட்டேன்.
” இல்லே….அது பொறந்து பூமியில விழுந்த ஒரு மாசக் குழந்தை..! ”
” அந்தக் குழந்தையை விட்டுப் பிரிய உங்களுக்கு எப்படி மனசு வந்துது….? ”
” அப்பன் முகம் தெரிஞ்சா பின்னால அது வாடும், வருத்தப்படும்ன்னு நெனைச்சிதான் அப்படி பிரிஞ்சேன். அப்புறம்….குழந்தை வளர வளர நாமும் அது மழலை, வளர்ச்சியில் மயங்கி பிரிய மனசு வராது என்கிற பயத்தில் உடனே பிரிஞ்சேன். ”
” நீங்க பிரிஞ்ச பிறகு மனைவி, குழந்தையைப் பிறகு அப்புறம் எப்போதாவது வீட்டுக்குப் போய் குடும்பத்தைப் பார்த்தீங்களா…? ”
” இல்லே. ”
” உங்க அம்மா அப்பா, அண்ணன் தங்கை, குடும்;பம், சொந்தம் பந்தம் யார் கண்ணிலாவது பட்டிருக்கீங்களா ? ”
” இல்லேன்னு சொல்றதை விட நான் எவரையும் கவனிக்கலை, பார்க்கலை என்கிறதுதான் உண்மை. ”
தியாகுபாபா… மறந்தும் அவர் இடத்திற்குப் போகவில்லை. என் மனமும்….அவர் இருக்கையின் எதிரில் அமர்ந்திருக்கும் பெண்ணை நினைக்க வில்லை.
சாமி இரவு படுக்கைக்குத்தான் தன் இருப்பிடம் சென்றார். மேல் பெர்த்தில் படுத்தார். காலை கண்விழித்து எங்களுடன் கலந்தார்.
” ஐயா..! துறவறம் பூண்டுதான் சாமிக்குத் தொண்டு செய்யயுனுமா..? ” காலை உணவு வகைகளையெல்லாம் முடித்துக்கொண்டு பத்து மணிக்கு மேல் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தேன்.
” இறை தொண்டிற்கு எதுவும் இடைஞ்சலாய் இருக்கக் கூடாது என்பதே துறவறம்.! ” .
” ஐயா! சாமி இருக்கா…? ”
” இது என்னை மாதிரி சாதுக்களிடம் கேட்க வேண்டிய கேள்வி கிடையாது. இருந்தாலும் சொல்றேன். இருக்கிறவங்களுக்கு இருக்கு. இல்லதவங்களுக்கு இல்லே.”
” நீங்க கடவுளைப் பாத்த்திருக்கீங்களா..? ”
” இல்லே.”
” கண்ணால், காதால் ஒலி ஒளியிலாவது கேட்டிருக்கீங்களா, பார்த்திருக்கீங்களா..? ”
” இல்லே.”
” உணராவது செய்திருக்கீங்களா…? ”
கொஞ்சமாக யோசித்து தியாகு பாபா அதற்கும்….
” இல்லே…” பதில் சொன்னார்.
” அப்புறம் ஏன் பக்தி, துறவறம்…? ” நான் திருப்பி அடித்தேன்.
அவர் அசரவில்லை.
” கடவுளோடு பேசிப் பழகவோ, ஐக்கியமாவதற்கோ ஆன்மீகம் கிடையாது. இல்லறம் போல துறவறமும் ஒரு வாழ்க்கை…! ” தெளிவாய்ச் சொன்னார்.
” பாரம் இல்லாத வாழ்க்கை ! ” நான் மடக்கினேன்.
பாபா பதில் சொல்லவில்லை.
” சிக்கலில் சிக்காமல் இருப்பதே துறவறம் ! சரியா…? ” அவரைப் பார்த்தேன்.
” இல்லறத்தில் மனைவி மக்கள், சொந்தபந்தங்கள், சிக்கல்கள் உண்டு. துறவறத்தில் அந்த சிக்கல் இல்லாததால் எந்த சிக்கல், ஆசையும் கிடையாது. நிராசை மனசு. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது மாதிரி பக்தியைச் செலுத்தி..பலனை எதிர்பார்க்காததுதான் சாதுக்கள் வாழ்க்கை ! ” என்றார் பாபா.
” சாமி! மனித மாமிசம் தின்னும் அகோரிகள்…? ”
” இருக்காங்க. மாமிசம் தின்னும் போது அது எதுவாய் இருந்தாலென்ன என்கிற எண்ணம். அவர்கள் முற்றும் துறந்தவர்கள் அதானல்தான் நிர்வாணம்.”
” அது ஆதிவாசிகள் வாழ்க்கை இல்லையா சாமி ? ”
இந்தக் கேள்விக்கு அவர் உடனே பதில் சொல்ல வில்லை.
கொஞ்சமாய் யோசித்து…
” நீங்க சாமி கும்பிடாதவரா ? ” கேட்டு என்னை ஆழமாகப் பார்த்தார்.
நானும் உண்மையை மறைக்காமல்…., ” ஆமாம் ! ” சொல்லி தலையசைத்தேன்.
அவர் அதிரவில்லை. மாறாக…
” உங்க பேச்சிலேயே அந்த வாடை வருது. எனக்கு அதைப் பத்தி கவலை இல்லே. நாம ரெண்டு பேரும் எதிர் எதிர் துருவங்கள். ஆனாலும்….நாம இப்படி கலந்து பேசி உறவாடிப் போறோம். இதுதான் வாழ்க்கை. எதார்த்தம் ! ” என்றார்.
” ஆமாம். ” என்றேன்.
இப்போது….கார்த்தியும் அவன் மனைவி ஜானகியும் எங்கள் முன் வந்தார்கள். அவன் இங்கு இப்படி ஒரு சாமி இருப்பதைச் சொல்லி காட்ட அழைத்து வந்திருப்பான் போல.
சாமியைக் கண்டதும் அவள் முகத்தில் பளீர் வெளிச்சம்.
கைகூப்பினாள்.
” சாமி ! இவர் என் ரெண்டாவது கணவர். என் மூத்தவர் குழந்தை பாட்டன் பாட்டியோட நல்லா இருக்கான். எங்களுக்கும் ஒன்னாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்காள். எங்களுக்குக் திருமணம் ஆன நாள்லேர்ந்து சாமியைச் சந்திச்சு என் இப்போதைய வாழ்க்கையை சொல்லி ஆசீர்வாதம் வாங்கனும்ன்னு ஆசை. அதனால… கோயில் குளம்ன்னு நான் எங்கு போனாலும் சாமியைத் தேடுவேன். பிச்சைக்காரங்கதான் கண்ணில் படுவாங்களேத் தவிர சாமிகள் பட மாட்டீங்க. இன்னைக்கு அதிர்ஷ்டம்… எதிர்பாராதவிதமா நான் விருப்பப்பட்டுத் தேடிய சாமியே என் கண்ணுக்கு நிறைவாய் காட்சி தர்றீங்க. நாங்க நல்லா இருந்து, நல்லா வாழ…. நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்க ! ” வணங்கினாள்.
கார்த்தியும் அவளோடு சேர்ந்து கைகூப்பினான்.
தியாகு பாபா கண்களை மூடி….. உதடுகள் முணுமுணுத்தார். ஒரு சில வினாடிக்களுக்குப் பிறகு கண் திறந்து…. தன் ஜிப்பா பாக்கெட்டிலிருந்து சுருக்குப்பையை எடுத்து..அதிலிருந்து விபூதி எடுத்தார்.
கணவன் மனைவி இருவரும் பயபக்தியுடன் இடது கைமேல் வலது கைவைத்து நீட்டினார்கள்.
பாபா, ” நீங்க நல்லா இருக்கனும், வாழனும்.! ” என்று ஆசீர்வதித்து இருவருக்கும் விபூதி வழங்கினார்.
இருவரும் அதை எடுத்து நெற்றியில் பூசி திருப்தியாய் இடத்தை விட்டு அகன்றார்கள்.
அப்போது… ரயில் மெதுவாக ஊர்ந்து ஏதோ ஒரு ஸ்டேசனில் நின்றது.
பெட்டிகளில் அடைந்திருந்த மக்கள்…..தண்ணி பிடிக்க, சம்சா வாங்க, டீ குடிக்க… பழம் வாங்க, வேடிக்கைப் பார்க்க….என்று அவரவர் பெட்டிகளிலிருந்து ஆளாளுக்கு அவசர அவசரமாக இறங்கினார்கள்.
என்னோடு அமர்ந்திருந்த பூவரசன், அழகேசன், குசேலன் தண்ணி பிடிக்க பாட்டில்களை எடுத்துக் கொண்டு இறங்கினார்கள். பாபாவோடு அமர்ந்திருந்த நானும் நண்பர்களோடு இறங்கினேன்.
சரியாய் ஐந்து நிமிடத்தில் வண்டி புறப்பட்டது. ஆளாளுக்கு ஓடி வந்து ஏறினார்கள். நாங்களும் ஓடி வந்து ஏறினோம்.
எங்கள் இருக்கையில் இருக்க வேண்டிய சாமி இல்லை.
‘ அவர் இடத்தில் அமர்ந்திருக்கிறாரோ…? ‘ என்று எட்டிப் பார்த்தேன்.
அவர் பழைய இடத்தில் ஆள் இல்லை. அந்தப் பெண் இருந்தாள். மற்றவர்கள் இருந்தார்கள்.
” சாமி எங்கே…? ” அவருக்குப் பக்கத்து இருக்கைக்காரான அந்த எடுபிடியைக் கேட்டேன்.
” ரயில் நின்ன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அவரும் பையை எடுத்துக்கிட்டு உங்க பின்னாலதான் இறங்கினார். காணலையா ? ” அவர் என்னைத் திருப்பிக் கேட்டார்.
” அ….ஆமாம்..”
” சாமி வண்டியைத் தவறவிட்டிருப்பாரா…? ” அவர் எனக்கு மட்டுமில்லாமல் என் நண்பர்களுக்கும் பீதியைக் கிளப்பினார்.
” இருக்காது. சுதாரிப்பான சாமி. இந்தப் பக்கம் அடிக்கடி பயணம் செய்பவர். அடுத்தப் பெட்டியில் ஏறி இருப்பார். ” அழகேசன் சொன்னான்.
” அதுவும் சரிதான். வாங்க பார்க்கலாம் ! ” சொல்லி….விரைவாய் நடந்தேன்.
அழகேசன், பூவரசன், குசேலனும் என்னைத் தொடர்ந்தார்கள்.
ரயில் நெடுக்கிற்கும் ஏ.சி பெட்டியிலிருந்து எல்லா பெட்டிகளிலும் ஒரு தடவைக்கு இரண்டு தடவை நடந்து சுத்தமாக அலசினோம். ஆள் இல்லை.
களைப்பாய் வந்து எஸ்.11 பெட்டிக்கு வந்து கார்த்தி, மனைவி இருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தோம்.
” யாரைத்தேடி இப்படி அலையுறீங்க..? ” ஜானகி கேட்டாள்.
” சாமியாரைக் காணோம்! ” சொன்னேன்.
” ஏன் என்னாச்சு…? ” என்றான் கார்த்தி.
” ஸ்டேசன்ல் இறங்கினார். ஆள் ஏறலை.” என்றான் பூவரசன்.
” நல்லாத் தேடினீங்களா ? ” கார்த்தியே திருப்பிக் கேட்டான்.
” தேடியாச்சு. இல்லே. ” என்றான் அழகேசன்.
” அவர் கண்டிப்பா இந்த ரயில்ல இருக்கமாட்டார். ! ” ஜானகி ஆணித்தரமாகச் சொன்னாள்.
” எதை வைச்சு இப்படி சொல்றீங்க..? ” நான் அவளைப் பார்த்தேன்.
” அவர் என் முன்னால் கணவர் ! ” – என்றாள்.
கார்த்தி உட்பட எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.