தீண்டும் இன்பம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 17,337 
 

முதலிரவு அறை.

பால் சொம்பேந்திய திருவாரூர் தேரை தோழி பொக்லைன்கள் நெட்டி அறைக்குள் தள்ளி விட்டு கதவை வெளிப்பக்கம் சாத்துகின்றன.

பால் சொம்பை கையில் கொடுத்துவிட்டு கால் தொட்டு வணங்குதல் இல்லை.சற்று தள்ளியே அமர்ந்து கை வீணையை மீட்டக்கொடுத்துவிட்டு உச்சி சிலிர்க்க காலால் தரையில் கோலமிடும் தார்மீக வெட்கமில்லை.

இப்படி இன்னும் அனேக இல்லைகளை எல்லை கடந்து சூழ்ந்து கொண்டு சூறாவளியாக அவனை வதைக்கத் தொடங்கியது அந்த இரவு.

“சாரி…கண்ணன்.!..இந்த கல்யாணத்தை இப்போ வச்சிக்க வேணாம்…ஆறுமாசம் போகட்டும்னு எங்கப்பாகிட்ட பிடிவாதமா சொல்லிப்பார்த்தேன்..அவரு தான் ‘தங்கையும் மச்சானும் இல்லாத வீட்டுல தங்கச்சிமவன் தனியாளாக திண்டாட றான்’னு உடனே முடிச்சு வச்சுட்டார்.”

“அதனால.?”

“அதனால…ம்..நீங்க கூட கல்யாணத்துக்கு பிறகு என் படிப்பை தொடரலாம்னு வாக்கு கொடுத்தீங்களே..”

“கொடுத்தேன் தான்…அதுக்கு இப்ப என்னா..?”

“இல்ல..என் படிப்பு முடிய இன்னும் மூனுமாசம் ஆகும்.’என்ட் செமஸ்டர்’முடியட்டும்…பிறகுதான் மத்ததெல்லாம்….பரீட்சை நேரத்துல மசக்கை அப்படி இப்படின்னு அல்லாடக்கூடாதே…அதான்”..அப்பாவியாய் கைபிசைந்து நின்றவளை சுட்டெரிக்கும் பார்வையோடு திரும்பிப் படுத்துக்கொண்டான்.

இதோ மூன்று மாத ‘விரகவிடுப்பு’இன்றோடு முடிவுக்கு வருகிறது.இருட்டுக்கடை அல்வாவும்,மதுரை மல்லியுமாக வாங்கிக்கொண்டு உற்சாகமாக வீடு திரும்பினான் கண்ணன்.

“செல்லமே..!..செண்பகம் ஓடி வா..ஓடி வந்து ஆ…காட்டு ,அல்வா ஊட்டி விடறேன்.!”

“என்னங்க..இத்தனை நாள் பொறுத்த நீங்க..இன்னிக்கும் பொறுக்கனும்..ஏன்னா..நான் நல்லபடியாக செமஸ்டர் பரீட்சையை எழுதி முடிச்சிட்டா…விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தறதாக வேண்டிகிட்டேன்”என்றாள்.

“இன்னும் என்னடி பொறுக்கனும்..என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சிட்டியா..?..எவனையோ மனசுல நினைச்சிகிட்டு..என் சொத்துக்கு ஆசைப்பட்டு …கொப்பனும் நீயும் நாடகமாடி என்னை கழுத்தறுத்துட்டீங்க இல்ல…எவனுக்கோ தேன்…எனக்கு பூச்சுக்கடியா.?..இதோ பாருடி ..துணி துவைக்க…சமைக்க காசை வீசி ஆயிரம் பேரை கொண்டுவர என்னால முடியும்…மத்த எல்லாத்துக்கும் தான்..”..இருட்டுக்கடை அல்வா எங்கேயோ அசூரவேகத்தில் ஓடி ஒரு இருட்டு மூலையில் விழுந்தது.

அவன் ஆடிய ஆவேசமான ஆட்டத்தில் மதுரை மல்லிகை உதிர்ந்து நார் மட்டும் மிஞ்சியிருந்தது.அதையும் ஆத்திரத்தோடு அவள் முகத்தில் வீசிவிட்டு வெளியேறினான்.

அவளுக்கு சிரிப்புதான் வந்தது.ஒருவேளை ‘குரங்குக் கையில் பூமாலை’உவமை ஞாபகத்திற்கு வந்திருக்கலாம்.!.

‘ச்சே,..சும்மா ஒரு சீண்டல் பண்ணிப் பார்ப்போமேன்னு விரதம்னு கதைவிட்டா…இவர் இப்படி சிடுசிடுத்துட்டு போறாரே..எனக்கு மட்டும் ஆசையில்லையா என்ன..’சமாதானப்படுத்தும் நோக்கத்தோடு செல்போனில் தொடர்பு கொண்டாள்.

எண்களை கண்டதுமே எரிச்சலோடு அணைத்துவிட்டான்.

கட்டிலும் கன்னியும் எதிர்பார்ப்போடு காத்திருக்க…காலம் மட்டும் கரைந்து கொண்டே இருந்தது…காத்திருந்த கண்கள் உறக்கத்தில் ஆழ்ந்தன.

‘எங்கே நிம்மதி’ என்று தேடி ஓடியவனை …பச்சை போர்ட்டு தாங்கிய கடை ‘இங்கே…இங்கே’…என இருகரம் நீட்டி அழைத்தது…அணைத்தது..புஸ்டியான பர்ஸ் இளைத்து தலை கனக்க ஆரம்பித்தவுடன் தள்ளாடிய கால்கள் வீட்டை நோக்கி நகர்ந்தன.

கதவை தட்டக்கூட கைகளுக்கு வலுவுமில்லை…தட்டி அவள் திறந்தாலும் நடக்கப்போவது எதுவுமில்லை…அப்படியே தாழ்வாரத்திலியே சரிந்தான்.

சற்று நேரத்திற்கெல்லாம் ‘அவள் ‘வந்தாள்.அவள் இந்த வீட்டை கட்ட ஆரம்பித்ததிலிருந்தே வருகிறாள்..ஒருநாளும் தன் இடத்தில் யாரும் படுத்துறங்கியோ…இடையூறு செய்தோ…அவள் கண்டதில்லை…இன்று ஏன் இவன் நம் இடத்தில் உறங்குகிறான்.?..யோசனை அவளுக்கு.!..’போகட்டும் நல்ல மனிதன்..இங்கு குடியேறிய நான்கு மாதத்தில் ஒரு அதட்டல் இல்லை…அடி இல்லை…ஏனோ இன்று கொஞ்சம் நிலைமாறிவிட்டான்…படுத்து உறங்கட்டும்..’என்ற ‘மிருக’அபிமானத்தோடு சற்று தள்ளிப்படுத்துக்கொண்டாள்.

சன்னமாக புரண்டு படுத்தவனுக்கு வெந்நீரில் முங்கிய தேங்காய் பூ டவலால் ஒத்தடம் கொடுத்தது போல ஒரு குறுகுறுப்பு..

அவனது மூளை தூண்டப்பட்டு ,அசூர வேகத்தில் கட்டளை பிறப்பித்தது.

‘விடாதே கண்ணா..விடாதே..உன் ஆண்மையை ஏளனம் செய்து போக்கு காட்டி வரும் உன் மனைவிதான்..’மலரினும் மெல்லிய மயிலிறகே.’ன்னு கவிதை பாடிக்கொண்டிருந்தால் நீ காலத்திற்கும் பிரம்மச்சாரி தான்.முரட்டுக்காளைன்னு காட்டுடா மகனே காட்டு’

‘அடச்சே..இது ஒரு ஆணுக்கு அழகா.?..சுழலும் சிறு மூளைக்குள்ளும் சிறு சமாதானப் பொறி.

மெல்ல கையைத்தூக்கிப் போட்டான் .சிறிய சிலிர்ப்பு… வெற்றி தான்..!…வெடுக்கென ‘ஷாக்’அடிக்கவில்லையே…அடுத்த முன்னேற்றம்…’செண்பூபூபூ…’என்றபடியே இறுக்கத்தை அதிகரிக்க……

“வ்வேவோஉவ்வ்..உஊ”

திடீரென உண்மை உறைத்து கையை எடுக்க மூளை கட்டளையிட்டாலும்….முரண்டுபிடித்த கை மேலும் இறுக்கி ….அவனும்’அய்யய்யோ.’என்று அலறினான்.

அக்கம் பக்கத்து வீடுகளில் வாசல் விளக்குகள் உயிர்பெற்று ஆளுக்கொரு தடியோடு ஓடி வருவதற்குள்…நூறுகிராம் சதை…முந்நூறு மில்லி இரத்த இழப்போடு அந்தப்போர் முடிவுக்கு வந்திருந்தது.

வியர்த்த வியர்வையில் ஆல்கஹாலின் வீரியம் முற்றிலும் இறங்கியிருக்க..வீரத்தழும்பாக முப்பதுக்கும் மேற்பட்ட பல் தடங்களை தனது உடம்பில் கண்டுகொண்ட அவன்..பின் மயங்கி சரிந்தான்.

‘அவளுக்கும்’இந்த அனுபவம் புதிது தான்..இருக்காதா என்ன.?.மனிதர்களிடமிருந்து அடிவாங்கியே அனேக தழும்புகளை சுமந்து திரியும் இனத்தில்…மனிதனிடம் கடிவாங்கியவள் அவள் மட்டும்தானே…இனம் கண்டு இகழுமோ.?..யோசனை அவளுக்கு.!.

“ஏனப்பா..குடிச்சுட்டு வந்து நாய்க்கு பக்கத்துலயா படுப்பாங்க..?'”யாரோ ஒருவன் கடுப்பை கிளப்பும் வார்த்தைகளை வீசியபோதும் அதிலும் ஒரு ஆறுதல் இருப்பதை நினைத்து அமைதி காத்தான்.’நல்ல வேளை குடிச்சிட்டா…பொண்டாட்டிக்கும்..தெருநாய்க்கும் கூடவா வித்தியாசம் தெரியாது.?’ன்னு கேட்கவில்லை.!.

நீண்ட நேரத்திற்கு பின் வாசலில் கூச்சலும் கூட்டமுமாக இருப்பதை உணர்ந்து கதவை திறந்த செண்பகம் மேலெல்லாம் இரத்தம் வழிய கணவன் நிற்பதைக் கண்டு அலறினாள்.

அதற்குள் ஆட்டோவோடு வந்த எதிர்வீட்டுக்காரர் உதவியோடு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்கள்.

இதோ…ஏகப்பட்ட தையல்களோடு திராணியற்று படுத்திருக்கிறான் கண்ணன் .

“சாரிங்க..நேற்று என்ன நடந்ததுன்னா..உங்களை உதாசீனப்படுத்தனும்னு நான் அப்படி நடந்துக்கல…சும்மா உசுப்பேத்தி பார்க்கலாம்னு விரதம்னா..நீங்க அதைப்போய் சீரியஸா எடுத்துகிட்டு..”

“எடுத்துகிட்டு…சீரியஸாக படுத்துகிடக்கேன்..இல்லியா”என்றான் விரக்தியோடு..

“எப்படிய்யா இருக்க ‘டாக் பைட்டர்'”என்றபடி வந்தார் டாக்டர்.

“மிஸஸ்..கண்ணன்.!..அந்த நாயையும் தேடிபிடிச்சு…வெட்னரி டாக்டரை வச்சு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க..சார்கிட்ட பயங்கறமா அதுவும் கடிபட்டிருக்கே..இவர் உடம்புல காயம் ஆறுகிற வரைக்கும் அந்த நாயும் உயிரோட இருந்தாகனும்…”

“ம்…இன்னொரு முக்கியமான விசயத்தை மறந்துட்டேனே…இன்னும் ஆறுமாசத்துக்கு கட்டில் தனித்தனியா போட்டுக்கனும்…புரியுதுல்ல..”நகர்ந்துவிட்டார் டாக்டர்.

எங்கோ நிலைகுத்திய பார்வையோடு படுத்திருந்தான் கண்ணன்.’ஏதாவது ஒரு ஆறுமாச கம்யூட்டர் கோர்ஸில் சேர்ந்துடட்டுமா.?’என்று கேட்க நினைத்த செண்பகம் ஏனோ கேட்கவில்லை.

– மார்ச்20-26,2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *