திவ்யா திருமணம்…!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2019
பார்வையிட்டோர்: 4,974 
 

சந்தியாவதனம் முடித்து சாமி கும்பிட்டு சாப்பாடெல்லாம் முடித்து சாவகாசமாக வந்து அமர்ந்த பரமசிவம் எதிரில் பவ்வியமாக வந்து அமர்ந்தாள் திவ்யா.

வயசு 27. பொறியியல் படிப்பு. அயல்நாட்டு இந்திய கம்பெனி ஒன்றில் அரை லட்சத்திற்கு மேல் சம்பளம்.

நடு நெற்றியில் வட்ட அகலப் பொட்டு. நெற்றி உச்சியில் உள்ள வகிட்டின் ஓரம் கொஞ்சமாய்க் குங்குமம். மடிசார் புடவையில் மங்களகரமாக அவள் அம்மா காயத்ரி அடுப்படி வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு கணவன் அருகில் வந்து அமர்ந்தாள்.

ஆச்சாரமான குடும்பம். ஞாயிற்றுக்கிழமை விடுப்பு. அம்மா, அப்பாவை இப்படிச் சேர்ந்து பார்ப்பதற்குச் சந்தோசமாக இருந்தது திவ்யாவிற்கு.

பரமசிவம்…எதிரில் டீபாயில் இருந்த அன்றைய தினசரியை எடுத்து படிக்க விரித்தார்.

” அப்பா…! ” திவ்யா மெல்ல அழைத்தாள்.

” என்னம்மா…? ” விரித்த தினசரியை விரித்தப்படி கேட்டார்.

” நான் உங்ககிட்டேயும், அம்மாக்கிட்டேயும் கொஞ்சம் பேசனும்…. ”

” பேசு…” தினசரியை இறக்கினார். மடித்தார்.

” நா….நான் ஒருத்தரைக் காதலிக்கிறேன்….” அவள் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விசயத்திற்கு வந்தாள்.

பெற்றவர்கள் இருவரும் துணுக்குற்று நம்ப முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

திவ்யா அதைப் பற்றிக் கவலைப்படாமல்…..

” என்னோட வேலை செய்யிறவர். பேர் கிள்ளிவளவன்…” என்றாள்.

” என்ன வளவன்….? ” – பரசிவம் நிமிர்ந்து அமர்ந்தார். தினசரியை பழையபடி டீபாயில் வைத்தார்.

” கிள்ளிவளவன் ! ”

” நல்ல அருமையான பேர். கடையேழு வள்ளல்களில் ஒருத்தன். குறுநில மன்னன். பையன் அப்பா தமிழ் ஆசிரியரா…? ” இவர் திருப்பிக் கேட்டார்.

” இல்லே. அவர் பேர் தமிழ்ச்செல்வன்.”

” அவர் அப்பா தமிழ்பற்றாளரா…? ”

” தெரியாது…”

” பையன் அம்மா தமிழ் ஆசிரியையா..? ”

” இல்லே…”

” அப்புறம் எப்படி…. இந்தகாலத்துல இப்படி ஒரு பேர்…..? ” இழுத்தார்.

” சும்மா இருங்க. அம்மா, அப்பா ரெண்டு பேருமே தமிழ்பற்றாளராய் இருப்பாங்க. இப்படி பேர் வைச்சிருப்பாங்க. அதை விடுங்க. நீ சொல்லும்மா….? ” – காயத்ரி கணவனை அடக்கி மகளைப் பார்த்தாள்.

‘ தாயும் மகளும் கூட்டுக் களவாணியோ…!? ‘ பரசிவத்திற்குள் திடீர் உறுத்தல், சந்தேகம்.

” காயத்ரி ! உனக்கு முன்னாடியே விசயம் தெரியுமா…? சொல்லும்மா சொல்றே…?! ” கேட்டே விட்டார்.

” ஐயோ….! இல்லீங்க. இப்போ உங்க முன்னாலதான் அவ சொல்றதைக் கேட்கிறேன்.” அவள் குரலில் கொஞ்சமாய் பதற்றம்.

பரமசிவத்திற்குச் சந்தேகம் தீர்ந்தது.

” சரி சொல்லு…? ” மகளைப் பார்த்தார்.

” அப்பா ! கிள்ளிவளவன் அம்மா அப்பா தத்துப்பிள்ளை ! ” என்றாள்.

” அப்படியா…! அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி ….யார் பையன்..? ”

” யார் பையனும் இல்லே. அனாதை ஆசிரமத்திலேர்ந்து எடுத்து வளர்த்த குழந்தை ! ”

” ஓ….கோ…….! ”

” அம்மா அப்பாவுக்குக் குழந்தை பாக்கியம் இல்லியா..? ”

” இல்லே. பெத்துக்க முடியாது. ”

” ஏன்ன்…..? ”

காயத்ரியும் அவள் முகத்தை ஆவலாய்ப் பார்த்தாள்.

” ரெண்டு பேரும் மூன்றாம் பாலினத்தவர்..! ”

” புரியலை….?! ”

இருவர் முகங்களிலுமே குழப்பம்.

” திருநங்கைகள் ! ”

” திவ்யா ! ! ” கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே அதிர்ந்தார்கள்.

” அந்த ரெண்டு பேருமே… காதலிச்சு கலியாணம் முடிச்சவங்க….” திவ்யா அடுத்த வெடியையும் வீசினாள்.

” இவுங்க ரெண்டு பேருமா….?!! ” பரமசிவம் நம்ப முடியாமல் கேட்டார்.

” ஆமா…அதனாலதான் நாம ஏன் வாரிசில்லாமல் வெறுமையாய் வாழ்ந்து சாகனும். அனாதைப் புள்ளை ஒன்னுக்கு வாழ்க்கைக் கொடுக்கலாம் என்கிற எண்ணத்துல அனாதை ஆசிரமம் போய் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வந்து கிள்ளிவளவனை வளர்த்தாங்க.”

பரமசிவத்திற்கு விசயம் விளங்க….சுவாரஸ்யம் தட்டிற்று.

” அப்படிப் போடு..! அப்புறம்….? ” ஆர்வமாய்க் கேட்;டார்.

” அந்த அம்மா, அப்பா ரெண்டு பேருமே ஒரே சாதி, மதம் கிடையாது. அப்பா கிருஸ்டின், அம்மா முஸ்லீம்…! ”

” அடடே…! கதை நல்லா இருக்கு. மேலே சொல்லு..?…” இன்னும் ஆர்வமானார்.

” அப்பா..! கதை இல்லே. இது நிஜம்….! ” திவ்யா அதட்டினாள்.

” விளையாடாதே…..! ” இப்போது பரமசிவம் முகம் மாறி குரல் கடுமையானது.

” விளையாடலைப்பா. கிள்ளிவளவனும் நானும் ரெண்டு வருசமா உயிருக்குயிராய்க் காதலிக்கிறோம்.! ”

இதுவரை பொறுமையாக இருந்த காயத்ரிக்கு இப்போது கோபம் வந்தது.

” ஏய்ய்;ய்…… ! ” அதட்டினாள்.

அருகில் அமர்ந்திருந்த பரமசிவம்….மனைவி கையை மெல்ல பிடித்து…அழுத்தி அடக்கினார்.

திவ்யா முகத்தை…..சிறிது நேரம் ஆழமாகப் பார்த்து….

” இப்போ…. உங்க கலியாணத்துக்கு நாங்க சம்மதிக்கனும். சரியா..? ” கேட்டார்.

” ஆமாப்பா…! ” – அப்பா இவ்வளவு சீக்கிரம் விசயத்தைக் கிரகித்துக் கொள்வார் என்று திவ்யா எதிர்பார்க்கவில்லை.

” எந்த வகையில நாங்க இதுக்கு சம்மதம் சொல்லனும்ன்னு நீ எதிர்பார்க்கிறே….?” மெல்ல கேட்டு மகளைக் கூர்ந்து பார்த்தார்.

‘ அப்பா வழிக்கு வரவில்லை. விவகாரத்திற்கு வருகிறார் ! ‘ திவ்யாவிற்குப் புரிந்து விட்டது. மௌனமாய் இருந்தாள்.

” பையன் அனாதை பொறப்பு. அம்மா அப்பா, சாதி, மதம் தெரியாது, கிடையாது. அடுத்து…எடுத்து வளர்த்த அப்பா அம்மாக்களும் சாதாரண நல்ல மனுசங்க இல்லே. மூன்றாம் பாலித்தனவர்……திருநங்கைகள். அவர்களும் ஒரே மதம், சாதி….இல்லே. வேற வேற நமக்குச் சம்பந்தமில்லாதது. இதுக்கு… எப்படி, எந்த வகையில நாங்க சம்மதம் சொல்ல முடியும்…? ” நிறுத்தி, நிதானமாகக் கேட்டார்.

காயத்ரிக்கும் பொறுக்கவில்லை.

” திவ்யா! நம்ம குடும்பம் ஆச்சாரமானது. அப்பா தினம் காயத்ரி மந்திரம் சொல்லி, சந்தியாவதனம் பண்ணாம ஒரு பருக்கை வாயில வைக்க மாட்டார். அதே மாதிரி நானும்…. எல்லா விரதம், விழாவும் கொண்டாடி வெள்ளி செவ்வாய் தவறாமல் கோயிலுக்குப் போய் மடியாய் இருக்கிறவள். நம்ம குடும்பம் ஆச்சாரம், பக்தியில் அடி பிசகாதது. இதனால… இந்த ஊர்ல மட்டுமில்லாம நம்ம சாதி சனத்து மத்தியிலும் நமக்கு ரொம்ப மதிப்பு மரியாதை அதிகம். இந்த நிலையில இப்போ இந்த திருமணத்திற்குச் சம்மதித்தால்….நாளைக்கு எப்படி நாம எல்லாருக்கும் முன்னாலும் தலை நிமிர்ந்து நடக்க முடியும்..? ” – காயத்ரி எல்லாவற்றையும் ரொம்ப பொறுப்பாய் பொறுமையாக சொல்லி கேட்டாள்.

” ஓஓஓ…..! மத்தவங்க மதிப்பு மரியாதைக்காகத்தான் நாம வாழறோமா…? ” திவ்யா தாயைத் திருப்பிக் கேட்டாள்.

காயத்ரி கோபப்படவில்லை. கோபம் வரவில்லை. பெற்ற வயிறு பொறுப்பு அதிகம்.

” அப்படி இல்லேம்மா. நாங்க சரி சொல்றதுக்கு எதுவும் சரி இல்லாமல் இருக்கே. எப்படிச் சொல்றது…? ” முன்னைவிட பொறுமையாக சொன்னாள்.

” வாயால சொல்லுங்க… ” திவ்யா வெடுக்கென்று திருப்பித் தாக்கினாள்.

” திவ்யா….ஆ…! ” காயத்ரி முகம் மாறினாள், கடுமையானாள். அதட்டினாள்.

இவள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.

” உங்களுக்கு நான் காதலிக்கிறது ஓ.கேயா..? ” பயமில்லாமல் ரொம்ப சர்வ சாதாரணமாகக் கேட்டு இருவரையும் பார்த்தாள்.

கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

சிறிது நேரம் கழித்து…

” சம்மதம் இல்லே. இருந்தாலும்…. ஒரே பொண்ணு. ஆசைப்படுறேன்னு சம்மதம் சொல்லலாம். ” – என்றார் பரமசிவம்.

” தத்துப்பிள்ளைன்னா… இளப்பம், கேவலமாப்பா…? ” திவ்யா பரமசிவத்தை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள்.

” இல்லே…! நாம சொன்னாத்தான் விசயம் தெரியும். ஆனா…. இந்த வியத்துல பொறுத்தவரை…..சொல்லாமலேயே ஆள்; அனாதை, தத்துப்பிள்ளைன்னு தெரியுமே…?! ” என்றார்.

” ஆமாம்மா…! அது மட்டுமில்லாமல்… பையன் அப்பா அம்மா வேற… கொஞ்சம் ஒதுக்கப்பட்டவர்கள். எப்படி சாதி சனம், உறவு முறைக்கெல்லாம் சொல்லி சபையைக் கூட்டி கலியாணம் பண்ண முடியும் ? ” காயத்ரி கணவனுக்கு ஆதரவாகவும் மகளுக்குப் புரியும்படியும் சொன்னாள்.

” அப்படியெல்லாம் பண்ண வேணாம். யாருக்கும் சொல்லாம சிம்பிளா…. பதிவுத் திருமணம் செய்யலாம்….”

” செய்யலாம். பின்னால தெரியுமே..! நாலு பேர்… பொண்ணு எங்கே, என்னாச்சுன்னு கேட்டா எதை பதிலா சொல்லி தலை நிமிர்ந்து நடக்கிறது..? ” என்றாள்.

” அப்பா ! நீங்க எதை மான,அவமானம்ன்னு நினைக்கிறீங்க ? ”திவ்யா தகப்பன் முகத்தைப் பார்த்தாள்.

” இந்த விசயத்துல மொத்தமும் அவமானம்தான். ! ” என்றார் அவர்.

” அப்போ… அந்த அவமானத்தோட… பொண்ணு ஓடிப் போயிட்டாள் என்கிற அவமானத்தையும் சேர்த்துக்கோங்க…” என்றாள் திவ்யா. குரல் கறாராக வந்தது.

கேட்ட பரமசிவம், காயத்ரிக்கு சட்டென்று மனமும.;, உடலும் சேர்ந்து நடுங்கியது.

” திவ்யா….! ” ஆள் அதட்டினாலும்…பரமசிவம் குரலிலும் அந்த நடுக்கம் தெரிந்தது.

கணவனும், மனைவியும்….மகளைத் தீர்க்கமாகப் பார்த்தார்கள்.

” பின்னே… என்ன பண்ணச் சொல்றீங்க.? வேற வழி ? ” இவளும் கேட்டு அவர்களைப் பார்த்தாள்.

காயத்ரி, பரமசிவத்திடமிருந்து பதில் வரவில்லை.

” அப்பா ! அம்மா ! வாழப்போறது நாங்க. எல்லாம் தெரிஞ்சு மனமொத்துதான் நாங்க காதலிக்கிறோம். கலியாணம் செதுக்க விருப்பப்படுறோம். இதுல எந்த விசயமும் எங்களுக்குக் கசக்கலை.” என்றாள் திவ்யா.

” காதலுக்கு கண்ணில்லே……” பரசிவம் முணுமுணுத்தார்.

” சரி.! காதலுக்குக் கண்ணில்லே. எதுவும் தெரியாமல் குருடாவே காதலிச்சுட்டோம் காதலிக்கிறோம், கலியாணம் பண்ணப் போறோம். கலியாணத்துக்குப் பிறகு நாங்க வாழறோம், சாகறோம், பிரியறோம். அது எங்களோட பிரச்சனை. வாழ்க்கை.! எல்லாம் சரியாய்ப் பார்த்து, சிறப்பா முடிக்கிற திருமண வாழ்க்கையில மட்டும் இந்த குறை நிறை இல்லியா.? ” கேட்டாள்.

” இருக்கு…” என்றாள் காயத்ரி.

” அப்படி என்கிற போது… இந்த திருமணத்தில் உங்களுக்கு ஏன் தயக்கம் ? ”

” ………………………………”

” மான அவமானம் மட்டும் காரணம்ன்னா…. எனக்கு அதில் உடன்பாடில்லே ! ”

” அப்படி உள்ள நீ எங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியமே இல்லே. ” – காயத்ரி.

” பெத்து வளர்த்ததுக்காக உங்ககிட்ட சொல்றேன். சம்மதம் கேட்கிறேன்.! ”

” அநியாயத்துக்கு ஆடாதே திவ்யா. பெத்தவயிறு எரிஞ்சா புள்ளைங்க நல்லா இருக்க இருக்க முடியாது…”

” முட்டாள்தனமாய் சாபம் விடாதே. யார் சாபமும் யாருக்கும் பலிக்காது. வாழ்க்கை…கஷ்டம், நஷ்டம் என்பது சம்பந்தப்பட்டவங்க புத்தி, தலைவிதி.! பெத்தவங்க வயிறெரிந்தால் பிள்ளைகள் நல்லா இருக்க முடியாது என்கிறதெல்லாம் பொய் ! ” திவ்யா தாயைத் திருப்பித் தாக்கினாள்.

” திவ்யா…! முடிவா நீ என்ன சொல்றே…? ” பரமசிவம் பேச்சை வளர்த்த விரும்பாமல் முடிக்க நினைத்தார்.

” உங்க சம்மதத்தோட எங்களுக்குத் திருமணம் நடக்கனும்ப்பா.” என்றாள்.

” மாப்பிள்ள வீட்ல சம்மதமா ? ” இவர் கேட்டார்.

” சம்மதம்.! ”

” எல்லாம் முடிச்சு கடைசியாத்தான் இங்கே வந்திருக்கியா ? ” தாய் சீறினாள்.

” அங்கே சிக்கல் கிடையாது முடிஞ்சுது. விடு ! ” என்று மனைவியை அடக்கிய பரமசிவம்…கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் யோசனையில் இறங்கினார்.

சிறிது நேர யோசனைக்கு பின் ஒரு முடிவிற்கு வந்தவராய்….

” உங்க கலியாணத்தை எப்படி முடிக்க…? ” மகளை ஏறிட்டார்.

இவளும் அவரைப் பார்த்தாள்.

” சாதி சனம், ஊர் சொல்லி அமர்க்களம் ஏக தடபுடலாய் செய்யனுமா..? இல்லே… யாருக்கும் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்யனுமா ? ” கேட்டார்.

” அது உங்க விருப்பம். ! ”

” கவலையை விடு. பத்திரிக்கை அடிச்சு, சாதி சனம், ஊரைக் கூட்டி, நாலு பெரிய மனுசன்களை வரவழைச்சு…கொஞ்சம் தடபுடலாவே எல்லாரும் மூக்கு மேல விரல் வைக்கிறாப்போல கோலாகலமா முடிக்கலாம்.! ”

” அப்பா…!! ” திவ்யா அவரை அதிர்ச்சியாய்ப் பார்த்தாள்.

” திவ்யா ! ஊர், சாதி சனம், மான அவமானமெல்லாம் யோசிச்சு பயந்து காதும் காதும் வைச்சாப் போல ஒரு காரியத்தை முடிச்சா கேவலம். அவமானம். அதே காரியத்தை எதுக்கும் பயப்படாம….அமர்க்களம், ஆர்ப்பாட்டமாய் செய்தால்…மானஅவமானமெல்லாம் காணாமல் போய்.. எல்லாரும்….மூக்கின் மேல் விரலை வைச்சி பெருமையாப் பேசுவாங்க. இது நடைமுறை. பெரிய இடத்துப் பாணி. நான் அப்படியே முடிக்கிறேன். ” சொன்னார்.

” அப்பா…! ! ” திவ்யாவால் நம்ப முடியவில்லை.

காயத்ரிக்கும் வியப்பு.

” அம்மா ! வாழப்போறது நீங்க. வாழ்ந்து முடிச்சவங்க நாங்க. வாழப்போறவங்களை வாழ விடுறதுதான் நியாயம். மதிப்பு, மரியாதை, அவமானமெல்லாம் அவுங்க அவுங்க மனசைப் பொறுத்த விசயம். நாங்க தெளிஞ்சாச்சு. உங்க திருணமத்துக்கு நாங்க சம்மதம்.! ” என்ற பரமசிவம் அருகிலிருந்த மனைவி கையையும் சேர்த்து தூக்கினார்.

” அப்பா…!! அம்மா…!! ” திவ்யா சட்டென்று எழுந்த அவர்களைத் தாவி அணைத்து நெகிழ்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *